MAIL OF ISLAM

Knowledge & Wisdom



எமது உள்ளத்தின் நிலை என்ன?


எழுதியவர்: மெயில் ஒப் இஸ்லாம்

​அல்லாஹ்வினால் மனிதனுக்கு வழங்கப்பட்ட நூர், இல்மு, அறிவு ஒவ்வொரு மனிதனிடமும் இருக்கிறது. அதன் முழு வெளிப்பாட்டை அல்லது அதன் முழு பிரயோஜனத்தை ஒரு மனிதன் எப்படி பெற்றுக்கொள்ள முடியும் என்றால், மனிதன் தனது உள்ளத்தை (நப்ஸை) தூய்மையாக்கினால் பெற்றுக்கொள்ள முடியும்.


இதனை அல்லாஹ் அல்குர்ஆனில் கூறும்போது:

"மேலும், (பொருட்களின்) பெயர்களை அனைத்தையும் ஆதமுக்கு அவன் கற்றுக்கொடுத்தான். (2: 31)


மேலே உள்ள படம் இதனைதான் சுட்டிக்காட்டுகின்றது. இறைவனின் நூர் (இல்மு, அறிவு) ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் இருக்கிறது. ஆனால் அதன் ஒளிப்பிரகாசம் அந்த மனிதனிடம் வெளிப்படாதற்கு காரணம் அந்த மனிதனின் உள்ளத்திலுள்ள அழுக்கு அல்லது திரை தான். அந்த திரை எந்தளவுக்கு நீங்குதோ அந்தளவுக்கு அந்த மனிதன் முஃமினாக, ஸாலிஹீனாக மாறுகிறான்.


இதனை அல்லாஹ் அல்குர்ஆனில் கூறும்போது : உள்ளத்தை தூய்மைப்படுத்தியவர் திட்டமாக வெற்றி அடைந்து விட்டார். (87: 14)



A


​மேலே உள்ள படத்தில் அடையாளமிடப்பட்டுள்ள A என்ற மனிதர், 75% -- 100% உளத்தூய்மை உடையவராக இருப்பதால், அந்த மனிதரின் உள்ளம் ஒளிப் பிரகாசமுள்ள ஸாலிஹீனாக, இறைநேசராக இருப்பார். இந்த மனிதரின் சிந்தனை தெளிவானதாகவும், அறிவில் சிறந்தவராகவும், உளத்தூய்மை உள்ளவராகவும் இருப்பார். மேலும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை உயிரை விடவும் மேலாக நேசிப்பார், நபிமார்கள், வலிமார்கள் மற்றும் ஸாலிஹீன்களை நேசிப்பார்.


அல்லாஹ்வும், ரஸுலும் விரும்பக்கூடிய அன்பு, அறிவு, ஞானம், கருணை, பொறுமை, பணிவு, உண்மை போன்ற அனைத்து நற்குணங்களையும் உடையவராக இருப்பார். இப்படிப்பட்ட மனிதன் எந்தவொரு வேலையை செய்தாலும் அல்லாஹ்வுக்காகவும், ரஸுலுக்காகவும் அவர்களின் திருப்பொருத்தத்தை பெற்றுக்கொள்வதற்காக வேண்டியே செய்வார். இப்படிப்பட்ட மனிதர்களுக்கு, தங்களுக்கென்று சுய விருப்பு, வெறுப்பு இருக்காது. அல்லாஹ்வும், ரஸுலும் எதை விரும்புவார்களோ அதையே இம்மனிதன் விரும்புவார்.


"நான் இல்லை எல்லாம் அவனே" என்ற நிலையில் வாழ்வார். இந்த மனிதனின் வாழ்க்கையை வழி நடத்தி செல்வது அல்லாஹ்வும், ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மாத்திரமே.



B


B என்ற மனிதன் 50% -- 75% உளத்தூய்மை உடையவனாக இருப்பதனால் முஸ்லிமாக இருப்பான். சிறிது மார்க்க அறிவு உள்ளவனாக இருப்பான். ஆனால் கொஞ்சம் சிந்தனை தெளிவு அற்றவனாக இருப்பான். இந்த மனிதனிடத்தில் கோபம், பொறாமை, பெருமை, கர்வம், ஆணவம் போன்ற தீய குணங்கள் இருக்கும்.


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அன்னவர்களை நேசிப்பான். வலிமார்களை நேசிப்பான். ஆனால் அல்லாஹ்வும், ரஸுலும் விரும்பக்கூடிய அறிவு, ஞானம், கருணை, பொறுமை, பணிவு, போன்ற குணங்கள் இருக்காது. இந்த மனிதன் ஏதாவது ஒரு வேலையை செய்தால் பெயருக்காகவும், புகழுக்காகவும் பட்டம், பதவிக்காகவும் செய்வான்.


இப்படிப்பட்ட மனிதனிடத்தில் போட்டி, பொறாமை இருக்கும் முஸ்லிம் சமுதாயத்திற்குள்ளேயே கருத்து வேற்றுமைக்கொண்டு இருப்பான். இஸ்லாமிய அகீதாவில் இருந்துக்கொண்டே தனி போக்கை கடைப்பிடிப்பான். நான் செய்வதுதான் சரி என்று பிடிவாதம் கொள்வான். மார்க்கத் தெளிவு அற்றவனாக இருப்பான். தங்களுக்கு பிடித்த ஸாலிஹீன்களை, உலமாக்களை மாத்திரம் நேசிப்பதும், தங்களின் கூட்டத்தை மாத்திரம் மதிப்பதுமாக இருப்பான். தங்களுக்கு பிடிக்காத நல்லடியார்களை குறை கூறி, அவர்களை இழிவுபடுத்தும் வேலையையும் செய்வான்.


இப்படிப்பட்டவர்கள் எமது முஸ்லிம் சமுதாயத்துக்குள் ஏராளமாக இருக்கிறார்கள். முஸ்லிம் சமுதாயம் பிளவுபடவும், ஒற்றுமை இல்லாமல் போனதற்கும் இவர்கள் ஒரு முக்கிய காரணம்.



C


இந்த Cஎன்ற பிரிவினர்கள் 25% உளத்தூய்மை உடையவர்களாக இருப்பதனால் இவர்களை பாவிகள் என்று அல்லது பாமரர்கள் என்று அழைக்கலாம். இவர்களுக்கு மார்க்கம் என்றால் என்னவென்று தெரியாது. சிந்தனா சக்தி இவர்களுக்கு இல்லை. ஹராம், ஹலால், நேர்வழி, வழிக்கேடு போன்றவற்றை பிரித்தறிய கூடிய அறிவு இல்லை. பெருமை கோபம், பொறாமை, கர்வம், ஆணவம் போன்ற தீய குணங்கள் இருக்கும்.


அல்லாஹ்வை, அல்லது ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை கூட நினைத்துப் பார்க்க நேரமில்லை. உலகுக்காகவே வாழ்வார்கள். உலகம் தான் இவர்களின் குறிக்கோள். எந்தவொரு காரியத்தை செய்தாலும் உலக ஆதாயத்திற்காகவே செய்வார்கள் பட்டம், பதவிக்காக எதையும் செய்வார்கள். காபிர்களின் வாழ்க்கை வழிமுறையை ஒட்டியே இவர்களின் வாழ்க்கையும் இருக்கும். இவர்களை இன்று ஏராளமாக நாம் காணலாம்.



D


இந்த D என்ற பிரிவினர்களை முனாபிக் அல்லது காபிர் என்று அழைக்கலாம். இவர்களின் உள்ளம் ஷைத்தான் வாழும் இல்லம் என்று கூறலாம். இவர்களின் உள்ளம் முழுவதும் இருள் என்ற திரையினால் மூடப்பட்டுள்ளது. இவர்கள் பேசினால் பொய் பேசுவார்கள், மோசடிசெய்வார்கள். இந்த கூட்டத்தினரிடம் எல்லா வகையான கெட்ட குணங்களும் இருக்கும்.


ஷைத்தான் இவர்களின் ரூபத்தில் வந்து மக்களை வழிகெடுக்கிறான். இவர்கள் அல்லாஹ்வை நேசிப்பதும் இல்லை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை நேசிப்பதும் இல்லை ஸாலிஹீன்களை நேசிப்பதும் இல்லை. இவர்கள் நேசிப்பதெல்லாம் ஷைத்தானையும் ஷைத்தானின் வாரிசுகளை மட்டும்.


​​இந்தக் கூட்டத்தினர்கள் முஸ்லிம்களைப் போன்று வேடம் ​அணிந்து முஸ்லிம்களை வழிக்கெடுப்பார்கள். இவர்கள் பல பெயர்களில், இஸ்லாத்திற்குள்ளும் இஸ்லாதிற்கு வெளியிலும் இருந்துக்கொண்டு முஸ்லிம்களை வழிக்கெடுக்கும் வேளையில் ஈடுபட்டுக்கொண்டு இருப்பார்கள். இவர்களுக்கு அல்லாஹுதஆலா உள்ளத்திற்கு முத்திரை இட்டு விட்டான்.


இவர்களைப் பற்றி மிக விளக்கமாக எழுத தேவையில்லை. ஏனெனில் இந்தக் கூட்டத்தினர்களைப் பற்றி முழு உலகமும் அறிந்து வைத்திருக்கின்றது. உதாரணதிற்கு இவர்களைப் பற்றி சொல்லப்போனால் கவாரிஜியாக்கள், காதியானிகள், வஹாபிகள் இன்னும் பல பெயர்களில் இருக்கிறார்கள். இவர்களை வழி நடத்திச் செல்வது ஷைத்தான். இவர்களின் சூழ்ச்சிகளில் இருந்து அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!


முஸ்லிம் சகோதர! சகோதரிகளே! நாம் உள்ளத்தை தூயமைப்படுத்தினால் தான் நாளை மறுமையில் வெற்றியடைய முடியும்.