MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
நேர்ச்சை என்றால் என்ன?
நம்முடைய பெண்களின் பலர் நேர்ச்சை வைக்கும் முறையே தீனுக்கு மாறுபட்டதாக உள்ளது. நினைக்கும் பொழுது வேடிக்கையாக இருக்கிறது. நேர்ச்சை செய்யும் முறையையும், அதை நிறைவேற்றும் முறையையும் நம்முடைய மார்க்க பெரியார்கள் நமக்கு நல்லவிதமாக விளக்கித் தந்துள்ளார்கள். ஆனால் நாம், நம்முடைய மனம் போல் நேர்ச்சை வைத்து பாவத்தை சம்பாதித்துக் கொள்கிறோம். இதற்கு காரணம் மார்க்க அறிவைப் பெண்களுக்கு கற்றுக் கொடுக்காத காரணம் தான் என்று நிச்சயமாக கூற முடியும். ஏதேனும் நமக்கு நிறைவேற நேர்ச்சை செய்வதாக இருந்தால், அந்தக் காரியம் முடிந்துவிட்டால் அதை நிறைவேற்றுவேன் என்று நிய்யத்து வைக்க வேண்டும்.
1. குர்பானி கொடுப்பதாக
2. நபில் நோன்பு நோற்பதாக
3. குர்ஆன் ஓதுவதாக
4. ஏழைகளுக்கு உணவளிப்பதாக
5. தான தர்மம் செய்வதாக
6. ஸலவாத்துகள் ஓதுவதாக
7. நபில் தொழுவதாக
8.இன்ன பெரியார்களுக்கு (வலிமார்களுக்கு) நன்மையை சேர்க்கும் பொருட்டு குர்ஆன் ஓதி ஏழைகளுக்கு உணவளிப்பதாக.
9. ஏழைகளுக்கு இன்ன இன்ன உதவி செய்வதாக உதாரணமாக நிக்காஹ் செலவுகள், வீடு கட்டிக் கொடுத்தல், ஆடைகள் வாங்கிக் கொடுத்தல் இன்னும் இவை போன்றவை.
10. மத்ரஸாவில் ஓதக் கூடிய மாணவ, மாணவிகளுக்கு உதவி செய்வதாக
11. மதரஸாவில் ஓதக் கூடிய மாணவ மாணவிகளுக்கு உணவளிப்பதாக
12. இஃதிகாப் இருப்பதாக
இவைப் போன்ற நல்ல விஷயங்களைக் குறித்து தம்முடைய சக்திக்கு தக்கப்படி நேர்ச்சை (நிய்யத்து) வைக்கலாம். ஆனால், தர்காவில் படுப்பதாக, தர்காவில் போய் பிள்ளைக்கு மொட்டை அடிப்பதாக, கபுரில் போய் தோப்புக்கரணம் போடுவேன், கையை போன்று ரொட்டி சுட்டுக் கொடுப்பேன். இது போன்ற நேர்ச்சைகள் செய்வதும் அதை நிறைவேற்றுவதும் கூடாது. ஆனால் மேலே குறிப்பிட்டப்படி நம் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட விஷயங்களைக் குறித்து நிய்யத்து வைத்து அந்தக் காரியம் முடிந்துவிட்டால் அதை உடனே நிறைவேற்ற வேண்டும். இதை நிறைவேற்ற அச்சமயம் சக்தி இல்லாவிட்டால் சக்தி வந்ததும் நிறைவேற்ற வேண்டும்.
By: Katheeja Nasik