MAIL OF ISLAM

Knowledge & Wisdom



படிப்பினை ஊட்டும் மீலாது விழா


* உம் இதயத்தைத் திடப்படுத்துவதற்காகவே ரஸுல்மார்களின் சரித்திரங்களில் இருந்து ஒவ்வொன்றாக நாம் உமக்குக் கூறுகிறோம். இவைகளில் உண்மையும், நல்லுபதேசமும் விசுவாசிகளுக்கு நினைவூட்டலும் இருக்கின்றன. (ஸுரத்துல் ஹுத் 121)


* மேலும் திட்டமாக நபிமார்களின் சரித்திரங்களில் அறிவுடையோருக்கு படிப்பினைகள் இருக்கின்றன. (ஸுரத்துல் யூஸுப் 111)


* நபிமார்களை நினைவு கூர்வது வணக்கமாகும், ஸாலிஹீன்களை நினைவு கூர்தல் பாவப்பரிகாரமாகும். என்று கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (அல்ஜாமிவுஸ்ஸகீர் 4331)


இப்போது கூறப்பட்ட இம்மூன்று ஆதாரங்களையும் ஒன்று சேர்த்துப் பார்த்தால் நபிமார்களின் வாழ்க்கை வரலாறுகளை எடுத்துக் கூறுவதும் அதைக் கேட்டுக் கொண்டிருப்பதும் அதை ஞாபகம் பண்ணுவதும் மன தைரியத்தையும், படிப்பினையையும், மறுமையைப் பற்றிய நினைவையும் ஏற்படுத்தக் கூறியதாக இருக்கின்றது என்று மிகத் தெளிவாக விளங்க முடிகிறது. அப்படியானால் நபிமார்கள் யாவரிலும் எல்லா வகையிலும் ஏற்றம் பெற்றவர்களும்  (திர்மிதி 3616, தாரமி 47, மிஷ்காத் 5762)


மேலும் நபிமார்கள் யாவரிலும் தொந்தரவு அடைந்ததிலும் தெளிவடைந்ததிலும் தன்னிகரற்றவர்களாகவும் இருக்கின்ற நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் (திர்மிதி 2472, இப்னுமாஜா 151, மிஸ்காத் 5253)


வாழ்க்கை வரலாறுகளை எடுத்துக் கூறுவதில் முஃமின்களுக்கு எந்த அளவு உபதேசமும், நினைவூட்டுதலும், படிப்பினையும் இருக்க வேண்டும்? எனவேதான் நாம் கொண்டாடி வருகின்ற மீலாது விழாவில் நமது கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் வாழ்க்கை வரலாறுகளை அடிப்படையாக வைத்தும் ஏனைய நபிமார்களின் வாழ்க்கை வரலாறுகளை சம்பந்தப்படுத்தியும் உலமா பெருமக்கள் உரை நிகழ்த்தி வருகிறார்கள். ஆகவே நபிமார்களின் சரித்திரங்களை அறிஞர்கள் கூறுவதற்கும் பொதுமக்கள் கேட்பதற்கும் அதன் மூலம் நமது பாவங்கள் பொறுக்கப்படுவதற்கும் மீலாது விழாக்கள் மிகப் பெரிய வரப்பிரசாதமாக இருப்பதால் மீலாது விழா கண்டிப்பாக வரவேற்கப்படக் கூடிய ஒன்றாகும்.


எவர்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை ஈமான் கொண்டு மேலும் அன்னவர்களை உகப்பு கொண்டு மகிமைப்படுத்தி மேலும் அன்னவர்களுக்கு (பல வகையிலும்) ஒத்தாசையாக இருந்து அன்னவர்களுடன் இறக்கிவைக்கப்பட்ட பேரொளியையும் பின்பற்றி நடக்கிறார்களோ அவர்கள் தான் உண்மையான வெற்றியாலர்களாகும். (அல் அஃராப் -157) என்று அல்லாஹ் தஆலா குறிப்பிடுகிறான். இப்போது கூறப்பட்ட இத்திருவசனத்தின் கூற்றிற்கிணங்க கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை மகிமைப்படுத்தி அதன்மூலம் சத்தியடைந்தவர்களுடன் சேருவதற்கு மீலாது விழா ஒரு நல்ல சந்தர்ப்பம் என்பதை அறிவுடையோர் யாவரும் நன்கறிவர். மேலும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பிறந்த நாள்தான் மார்க்கத்திற்கு மகிழ்ச்சியும், பெருமையும் ஏற்பட்ட நாளாகும். ஆகவே மீலாது பெருவிழா கொண்டாட்டம் அல்லாஹ் நமக்கு அருள்புரிந்த நன்னாளாகும்.