MAIL OF ISLAM

Knowledge & Wisdom



புகழுக்கு புகழ் சேர்த்த புனிதர்


கஸீதத்துல் புர்தாவை இயற்றிய, ஷெய்கு ஷரபுத்தீன் முஹம்மத் பூசிரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஹிஜ்ரி 608 ஆம் ஆண்டு, எகிப்திலுள்ள அழ பூசிற் என்ற ஊரில், சயீத் இப்னு ஹம்மாத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின், அருமை திருமகனாக பிறந்தனர்!


​​சிறுவயதிலேயே குரான் முழுவதையும் ஓதி மனனம் செய்த பின்னர், `ஜாமிஉல் அஸ்ஹர்' பல்கலைகழகத்தில் சேர்ந்து பயின்று பட்டம் பெற்று வெளி வந்த அவர்கள், அபுல் அப்பாஸ் முர்ஸி ரஹ்மத்துல்லாஹி அலைஹ் அவர்களிடம், ஷாதுலிய்யா தரிக்காவில் தீட்சை பெற்றனர். பின், அரசாங்க அலுவலகத்தில் சேர்ந்து, பணியாற்றி ஓய்வு பெற்று வாழ்ந்து வந்தனர்!

அவர்களைக் காண வந்த நல்லார் ஒருவர் ,"தாங்கள் அண்ணல் நபி ﷺ அவர்களை கனவில் தரிசித்துள்ளீர்களா?" என்று வினவினர். அக்கேள்வி அவர்களுக்கு, அளவற்ற வெட்க்கத்தையும், வருத்தத்தையும் அளித்தது! "இல்லை, நான் அத்தகு பேற்றினை இதுவரை அடையவில்லை!" என்று வருத்தத்துடன் கூறினார்கள்.

பின், மனம் தளராமல், பெருமானாரின் ஆசி வேண்டி, `அல் கசீதத்துள் முளரியா, அல் கசீதத்துள் முஹம்மதிய்யா, அல் கசீதத்துள் ஹம்சிய்யா,' என்னும் பெயருடன் மூன்று புகழ் பாடல்களை இயற்றினார்கள்! எனினும், அண்ணல் நபி அவர்களின் திருக்காட்சியை கனவில் பெறும் பேற்றினை இவர்கள் பெறவில்லை!


இதனால் இவர்களுக்கு சொல்லொணா வருத்தம் ஏற்ப்பட்டது! இச்சமயத்தில், இவர்கள் பக்கவாத நோயால் பீடிக்கப்பட்டனர்! எவ்வளவோ, மருந்துண்டும் பலனில்லை! யாது செய்வதென, அறியாது, திகைத்த அவர்கள், அண்ணல் நபி ﷺ அவர்களிடம், தம்மை ஒப்படைத்து, ஒரு பனுவலை, கண்ணீரை, காணிக்கையாக வைத்து, பாடி முடித்தனர்.

அன்றிரவு, அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம், அவர்கள் கனவில் தோன்றி, "கவிஞரே! நீர் பாடிய பனுவலை பாடும்" எனப்பனித்தார்கள்.

அது கேட்டு உள்ளமும் உடலும் சேர்ந்து பூரிக்க, பூசிரி இமாம் அவர்கள், அதனைப் பாட, அண்ணல் நபி ﷺ அவர்கள் அசைந்து, அசைந்து கேட்டு, ரசித்துக் கொண்டிருந்தார்கள்.

அதில் தங்கள் பெயரின் முதல் எழுத்தான இரண்டு "மீம்களோடு, முடியும் கண்ணிகளை கேட்டதும், அண்ணல் நபி அவர்கள் புன்முறுவல் பூத்தார்கள்! அதனை இமாம் அவர்கள் ஓதி வரும்போது, 51ஆவது கண்ணியின் முதல் அடியாகிய, "ப மப்ழல் இல்மி பீஹி அன்னஹு பஷருண்" ! (அறிவின் முடிவாகும் எல்லை; அவர் மனிதரே எனினும்) என்பதனைப் பாடியதும், அடுத்த அடி நினைவுக்கு வராது, திணறிய பொழுது, "வ அன்னஹு க்ஹைறு க்ஹல்கில்லாஹி குல்லிஹிமி" (இறை சிருஷ்ட்டி யாவையினும் எற்றமுள்ளார் என்பதுவே!) என்ற அடுத்த அடியை, அண்ணல் நபி ﷺ அவர்கள் எடுத்து கொடுத்தார்கள்.

அதுகண்டு, அளவற்ற மகிழ்ச்சியடைந்த இமாம் அவர்கள், இதன் பின் தாம் இயற்றிய, ஒவ்வொரு கண்ணியை, பாடியதும், "மௌளாய ஸல்லி வசல்லிம் தாயி மன் அபதா! அலா ஹபீபிக்க க்ஹைரில் க்ஹல்கி குல்லிஹிமி" என்ற கண்ணிகளை பாடலாயினர்.

மொத்தம் 165 கண்ணிகளையும் கேட்டு, புளகாங்கிதமுற்று அண்ணல் நபி ﷺ அவர்கள், தங்கள் திரு மேனியில் இருந்த போர்வையை எடுத்து, இமாம் அவர்களின் உடலில் போர்த்தி, தங்கள் திருக்கரங்களால், அவர்களின் உடலை தடவி விட்டார்கள்.

திடுக்குற்று விழித்தெழுந்த இமாம், தாம் முழு நலம் பெற்று இருப்பதை உணர்ந்தனர்! தாம் படுத்திருந்த அறை முழுவதும், கஸ்தூரி மனம் கமழ் வதையும் நுகர்ந்தனர்! பன்னெடுங்காலமாக, படுத்த படுக்கையாய் கிடந்த அவர்கள், புத்தாடை புனைந்து, சுபுஹு தொழுவதற்காக பள்ளி சென்ற பொழுது, ஒரு பக்கீர் அண்ணல் நபி ﷺ மீது பாடியபனுவலை தமக்கு தருமாறு வேண்டிக்கொண்டார்.

இமாம், "நான் அவர்களை புகழ்ந்து, ​பல பனுவல்கள் பாடியுள்ளேனே, எந்த பனுவலை தாங்கள் விரும்புகின்றீர்கள்?"என்று வினவ,

"அமின் ததக்குறு ஜீரானின் பீ தீசலமி"என்று தொடங்கும் பாடலைத்தான்" என்று கூற,

"அதனை நான், எவரிடமும் இதுவரை காட்டவில்லையே!" அதைப்பற்றி தாங்களுக்கு எப்படித் தெரியும்?" என்று இமாம் வியப்புடன் வினவினர்.

அதற்க்கு அவர், "தாங்கள், அண்ணல் நபியிடம் பாடிக்காட்டும் பொழுது, நபி ﷺ அவர்கள் ஒரு செடிபோல், அசைந்து அசைந்து கேடடு ரசித்து,கொண்டிருந்ததை நான் பார்த்தேன்!" என்றார்கள்.

இச்செய்தி, நாடெங்கும் பரவவே, அமைச்சர் பஹாவுதீன் இமாம் அவர்களை தம் மாளிகைக்கு அழைத்து, அதனை படிக்குமாறு கூறி, வெறும் காலுடனும், வெருந்தலையுடனும், நின்று அதனை மரியாதையுடன்,கேட்டு மகிழ்ந்தார்! பின், அதனை பிரதி செய்து, அனுதினமும், வழக்கமாக ஓதி வந்தார்.

இச்சமயத்தில், சஅதுத்தீன், பாரக்கி என்பவருக்கு, தீராத கண்நோய் ஏற்ப்பட்டது!  அப்பொழுது, ஒருவர் அவர் கனவில் தோன்றி, அமைச்சர் பஹாவுத்தீன் இடமிருந்து, "புர்தா"வை வாங்கி கண்களில் ஒற்றிக்கொள்ளுமாறு பணித்தார்! அவ்விதமே, அவர் அமைச்சரிடம் சென்று, தாம் கண்ட கனவை கூறினார்.

அதற்கு அவர், "என்னிடம் புர்தா என்று ஒன்று இல்லை! அண்ணல் நபி ஸல்லல்லாஹுஅலைஹிவசல்லம் அவர்கள் மீது, பாடப்பட்ட புகழ்ப்பாக்கள் அடங்கிய பனுவல் ஒன்றுள்ளது! அதை வேண்டுமானால் தருகிறேன்!" என்று கூறி அதனை எடுத்து வந்து கொடுத்தார்.


​அதனைப்பெற்று, சஅதுத்தீன், தம் கண்ணில் ஒற்றிக்கொண்டதும், அவரின் கண்நோய், அக்கணமே நீங்கியது!  இந்நிகழ்ச்சிக்குப்பின் இப்பனுவளுக்கு, "புர்தா" எனப்பெயர் ஏற்ப்பட்டது.

இத்தகு, மான்பார்ந்த, பனுவலை ஆக்கித் தந்த, இமாம் பூசிரி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) ஹிஜ்ரி 69ஆம் ஆண்டில், தம்முடைய 88வது வயதில், இறையடி சேர்ந்தார்கள்.


By: Shafiyath Qadiriyah