MAIL OF ISLAM

Knowledge & Wisdom



விதி 

கௌஸுல் அஃலம் முஹியத்தீன் அப்துல் காதர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு​ கூறியது:

                     

* விதிப்பயன் மீது நம்பிக்கை வைப்பது பற்றி சிலர் விதண்டாவாதமான கேள்விகளை கேட்கின்றனர். இறைவனின் நாட்டத்தைப் பற்றி விதண்டாவாதம் செய்வது ஆகாத காரியமாகும். அவன் நாட்டத்தை பற்றி கேள்வி கேட்க கூடியவர்கள் எவருமில்லை என்பதையும், நாமே கேள்வி கேட்கப்பட இருக்கிறோம் என்பதையும் நாம் நன்கு உணரவேண்டும்.



* என் விதிப்பின் மீது திருப்திபடாதவனும், என் சோதனைக்குப் பொறுமை காட்டாதவனும் என்னை விட்டு வேறு இறைவனை தேடிக்கொள்ளட்டும். என்ற ரப்பின் எச்சரிக்கையை சிந்தனையில் வை!



* இறை விருப்பத்துக்கும், உத்தரவுகளுக்கும் இணங்கியவர்களாகி விடுமாறு மீண்டும் உங்களுக்கு உபதேசிக்கிறேன். தக்தீருக்கு (விதிக்கு) முரண்பட முயன்றால் தக்தீரின் சக்தி உங்களின் கழுத்தை உடைத்து விடும். என்பதை உணருங்கள். ஆண்டவனின் நாட்டத்துக்கு இணங்கியவர்களாகி விடும் வழியைதேடுங்கள்.



* சமூகத்தவர்களே, அதிகமாகவும் தேடாதீர்கள். குறைவாகவும் தேடாதீர்கள். முன் செல்லவும் நினைக்காதீர்கள், பின்னேரவும் நினைக்காதீர்கள். ஏனெனில் உங்களின் ஒவ்வொருவரின் தக்தீரும் (விதி) வெவ்வேறாக சூழ்ந்து நிற்கிறது. தலையெழுத்து நிர்ணயமாகாதவர்கள் உங்களில் எவரும் இல்லை. ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறியிருக்கிறார்கள். அல்லாஹ் படைப்பு, உணவு, ஆயுள் ஆகியவற்றை முடித்து ஒய்வெடுத்து கொண்டான். எது, எது நிகழ வேண்டுமோ அது அதை எழுதிய எழுதுகோல் காய்ந்து போய் விட்டது. சுருக்கமாக சொன்னால், ஒவ்வொன்றின் தலை எழுத்தையும் எழுதி முடித்துக்கொண்டான்.



* அல்லாஹ்வின் நாட்டத்துக்கு இணங்கியவர்களாகி விடும் வழி தேடுங்கள். நடக்கப் போவது உங்களின் நாட்டம் அல்ல. அவனுடைய நாட்டமேயாகும். அவனது நாட்டம் நடைபெறுவதற்கு எதிராக உங்களின் நாட்டம் என்ன செய்ய முடியும்? அவனது நாட்டம் நடைபெறுவதில் குறுக்கிடும் ஆத்மாக்கள் அழிவுக்குள் ஆகும் என்பதில் சந்தேகம் உண்டா? 'அவனது நாட்டம் நடைபெறட்டும்’ என்றவர்களாக தக்தீருக்கு (விதிக்கு) அடிப்பணிந்தவர்களாகி விடுங்கள்.



* 'தக்தீர்’ (விதி) இல் உள்ளது நடக்கும் போது படைத்தவனை குறைகாண்பது மதத்தின் மரணமாகும். தௌஹீதின் சாவாகும். தவக்கலினதும், உண்மையினதும் அழிவாகும். முஃமினான அடியானின் மனமோ, நிகழ்ச்சிகள் ஏன், எப்படி நடக்கின்றன என்ற சந்தேகம் கொள்ளாமல் ‘சிரம் சாய்க்கிறேன்’ என்று கொள்ளும்.