MAIL OF ISLAM

Knowledge & Wisdomமௌலானா ஷெய்க் ஹஸன் முஹியத்தீன் ​ரஹ்மதுல்லாஹி அலைஹி


எழுதியவர் - அப்துர் ரஹீம் முஹம்மத் ஜௌபர் (ஓய்வு பெற்ற பாடசாலை அதிபர்)  


இலங்கை   தீவில்  தீனுல்  இஸ்லாத்தை   நிலைநிறுத்திய   நாதாக்களுள்  ஒருவர்

ஸையுதுனா அஷ்ஷைகு ஹஸன் முஹ்யித்தீன் ஸாஹிபுல் காதிரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்.


​இவர்கள் திருநெல்வேலி ஏர்வாடி திருநகரிலிருந்து 1945ம் ஆண்டிலிருந்து 1974ம் ஆண்டு வரை இலங்கை தீவுக்கு வருகை தந்து, இங்கு தீனுல் இஸ்லாம் தலைத்தோங்க மாபெரும் சேவை ஆற்றியவர்கள்.


இவர்களின் மூதாதையர்கள் மகான் ஏர்வாடி ஸதக்கதுல்லாஹ் அப்பா, அவரது மகனார் அலி ஸலாஹுத்தீன் அப்பா (மெயில் ஒப் இஸ்லாமின் மூதாதையர் இவர்களிடம் பைஅத் செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது) மகான் முஹம்மத் அப்துல் காதிர் நாயகம் ஆவார்கள். இவர்களைத் தொடர்ந்தே ஷைகு அவர்கள் இலங்கைக்கு வருகை தர தொடங்கினார்கள். மக்கள் இவர்களின் குணநலன்கள் இயல்புகளைப் பார்த்து 'பெரிய வாப்பா' என்ற அடைமொழியால் அன்போடு அழைத்தார்கள்.


அப்போது இலங்கையின் மலைநாட்டு முஸ்லிம்கள் ஏழைகளாகவும் தீனுல் இஸ்லாத்தின் அறிவு குன்றியவர்களாகவும் இருந்தார்கள். இதனால் தான் அடிக்கடி வந்துபோகும் இடமாக ஹட்டன் நகரை ஆக்கிக்கொண்டார்கள். தன் தள்ளாடும் வயதுவரை மாபெரும் சேவை ஆற்றினார்கள்.


​​ஷரீஆ, தரீக்கா, ஹகீக்கா, மஃரிபா என எல்லா வகைகளிலும் போதனை செய்தார்கள். மக்கள் ஓதி பரவசமடையக்கூடிய ஏராளமான அரபு, தமிழ் பாக்களை இயற்றினார்கள். 'ஷைகனா யா அப்தல்காதிர் வfப்பிகன்bபி ரிfப்கி ஹாழிர் ...' என்ற இவர்களின் அரபு கஸீதா வரிகள் இன்றும் பரவலாக யாவரும் மஜ்லிஸுகளில் ஓதி மகிழ்வதைக் காணலாம். இதே போல் இவர்களின் 'அலி சலாஹ் என் பீரே..' என்ற ஆத்மீகப் பாடல் மஜ்லிஸ்களில் ஓதப்படும் தமிழ் கஸீதாவாகும். 'தன்னை தான் அறியாதவன் தான் ஆனோனை அறிவானோ அன்பா..' , 'ஏன் எழுந்தாய் மகிபா...(மகிமை பெற்ற மனிதனே நீ ஏன் இந்த பூ உலகில் பிறந்தாய்), 'சூஸ்திரமே பெரிதே..' , 'அருளே நம் மார்க்கம் இல்லையா....' போன்ற பாடல்களால் மக்களிடையே ஆத்மீக தாகத்தையும் தாக்கத்தையும் ஊட்டினார்கள்.


இதனால் இலங்கை எங்கனும் இவர்கள் புகழ் பரவி ஆயிரக்கணக்கானவர்கள் இவர்களின் கரம்பற்றி இவர்களின் முரீதீன்களாகினார்கள். சொல்லால் சொல்லி முடிக்க முடியாத ஏராளமான அற்புதங்களை காட்டினார்கள். அவர்கள் ஓதிக்கொடுத்த நீரால் தீராத நோய்கள் தீர்ந்தன.


​​கிட்னியில் தொல்லை கொடுத்த கல் தானாக வெளியேறியது. இதயத்தில் பிறப்பில் ஏற்பட்ட ஓட்டை Hole in the Heart குணமாகியது, பலவருடமாக நடக்க இயலாமல் இருந்த குழந்தை நடந்தது. ஸுப்ஹானல்லாஹ் ஏராளம்..ஏராளம்.


அவர்களால் உருவாக்கப்பட்ட ராத்தீப் அவர்களின் பிரதான சீடரான முகத்தம் ஜனாப் fபாரூக் ஹாஜியார் அவர்களால் கடந்த சுமார் 50 வருடங்களாக கொழும்பு தெவட்டகஹா பள்ளியில் தலைமைதாங்கி ஓதப்பட்டு வருகிறது. தெஹிவலை ஜும்மா பள்ளியில் ஜனாப் சுலைமான் ஹாஜியார் அவர்களால் நடாத்தப்பட்டு வருகிறது. ஹட்டனில் ஷைகு அவர்களின் மூத்த சீடர் ஜனாப் ஆத்தூம் லாஹிர் அவர்களின் அனுசரனையோடு முகத்தம் ஜனாப் fபாயிஸ் அவர்களால் நடாத்தப்பட்டு வருகிறது.


இன்று ஷைகு அவர்களின் உரூஸ் தினமாகும். ஜனாப் ஆத்தூம் லாஹிர் அவர்களும் அவர்களின் அருமை மருமகனார் ஜனாப் ஆரிfபீன் சbப்ரீன் அவர்களும் ராத்தீப் விருந்துபசார வைபவம் ஒன்றை, இலங்கை ஹட்டன் மாநகரில் அவர்களின் இல்லத்தில், கோலாகலமாக ஏற்பாடு செய்துள்ளார்கள்.


என்னுடைய ஆத்மீக பயணத்துக்கு இன்றும் மறைந்து வாழ்ந்து வழிகாட்டிக் கொண்டிருப்பவர்கள் எனது ஷைகு அவர்களே. அவர்களால் அத்தனை பேருக்கும் துஆ செய்து 'கானல்லாஹு லஹுல் ஹாதி' என தன்கைப்பட எழுதிய துஆவோடு கூடிய படத்தையே இங்கு பதிவில் இடப்பட்டுள்ளது.


அவர்களுக்குப் பின் அவர்களின் பாரம்பரியத்தில் சரியான வழிகாட்டிகள் வாராது விட்டமை எமது துர் அதிர்ஷ்டமே.