MAIL OF ISLAM

Knowledge & Wisdom
பாங்கு (அதான்) என்றால் என்ன?


தொழுகை நேரங்கள் வந்ததும் மக்களை தொழுகைக்காக அழைக்கும் அழைப்பை, அரபு மொழியில் ‘அதான்’ என்றும் பாரசீக மொழியில் ‘பாங்கு’ என்றும் கூறப்படும். தமிழிலும் பாங்கு என்றே சொல்லப்படுகிறது. தொழுகைக்கு முன்னால் பாங்கும், இகாமத்தும் சொல்வது சுன்னத்து, பர்ளுத் தொழுகைக்கும், விடுப்பட்ட (கழா) தொழுகைக்கும் தனியாகவோ, கூட்டாகவோ தோலும் போது பாங்கும், இகாமத்தும் சொல்வது நன்று.தொழுகையின் ஷர்த்துக்கள் என்ன?


தொழுகையின் நிபந்தனைகள் 10 அவையாவன:


1. முஸ்லிமாக இருத்தல்.


2. தம்யீஸ் எனப்படும் அறிவைப் பெறுதல்.


3. ஜனாபத் என்னும் பெருந்தொடக்கு மாதாந்த ருது, பிரசவருது, வுழு முறித்தல் ஆகியன இல்லாதிருத்தல்.


4. உடல், உடை, இடம் ஆகிய மூன்றிலும் நஜீசை விட்டும் துப்பரவாயிருத்தல்.


5. ஆண் பிள்ளைகளும், அடிமையும், அடிமைப் பெண்ணும் தொப்புள் தொடக்கம் முட்டுக்கால் வரை மறைத்தல் (இதற்கு அவ்றத்தை மறைத்தல் என்று கூறப்படும்)


6. கிப்லா என்னும் கஃபாவின் திசையை இயன்றளவு சரிநோக்கிக் கொள்ளுதல்.


7. தொழுகை, தன் மீது தவிர்க்க முடியாத கட்டாய கடமை என்பதை உணர்ந்திருத்தல்.


8. அந்தத் தொழுகைகளின் உரிய நேரங்களை அறிதல்.


9. தொழும் விதத்தை அறிதல்.


10. பர்ளை பர்ளு என்றும் சுன்னத்தை  சுன்னத் என்றும் விபரமாக அறிந்திருத்தல்.
தொழுகையின் பர்ளுகள் என்ன?


தொழுகையின் கடமைகள் 19 அவையாவன:


1. நிய்யத்துச் செய்தல் (மனதில் நினைத்தல்)


2. அந்த நிய்யத்துடன் அல்லாஹு அக்பர் என்ற தக்பீரைச் சொல்லுதல்.


3. பர்ளுத் தொழுகைகளில் இயன்வர்கள் நின்று தொழுதல்.


4. பிஸ்மில்லாஹ்வுடன் அல்ஹம்து சூரத்தி ஓதுதல்.


5. ருக்கூஃ செய்தல்.


6. அந்த ருக்கூவில் தாமதித்தல்.


7. இஃதிதால் என்னும் சிறு நிலைக்கு உயருதல்.


8. அந்தச் சிறு நிலையில் தாமதித்திருத்தல்.


9. முதலாவது ஸஜ்தா செய்தல்.


10. அந்த ஸுஜூதில் தாமதித்திருத்தல்.


11. முதலாம் ஸஜ்தாவிலிருந்து சிறு இருப்புக்கு வருதல்.


12. அந்தச் சிறு இருப்பில் தாமதித்திருத்தல்.


13. இரண்டாம் ஸஜ்தா செய்தல்.


14. அந்த ஸுஜூதில் தாமதித்திருத்தல்.


15. பிந்திய அத்தஹிய்யாத் ஓதுவதற்காக இருத்தல்.


16. அந்த இருப்பில் அத்தஹிய்யாத் ஓதுதல்.


17. பிந்திய அத்தஹிய்யாத்தில்

நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)

அன்னவர்கள் மீது ஸலவாத்து ஓதுதல்.


18. வலது பக்கம் முதலாம் ஸலாம் சொல்லுதல்.


19. இப்போது இங்கு விபரிக்கப்பட்ட 18 பர்ளுகளையும் சொல்லப்பட்ட ஒழுங்கு முறைப்படி கிராமமாய்ச் செய்தல்.தொழுகையை முறிக்கும் காரியங்கள் எவை?


தொழுகையை முறிக்கும் காரியங்கள் 9 அவையாவன:


1. தொழுகையை விட்டுவிடலாம், என்று எண்ணினாலும் தொழுது முடிப்போமா? அல்லது விடுவோமா? என இருமனம் கொண்டாலும் தொழுகை முறியும்.


2. தொடராக மூன்று செயலைச் செய்தல். ஆனால் சொறி, சிரங்கு, நடுக்கம் முதலியவற்றால் அவதிப்படுபவர்கள் பலமுறை சொரிந்தாலும், நடுங்கினாலும் தொழுகை முறியாது.

குறிப்பு: மூன்று செயல் என்பது, ஒரு இடத்தில் தன் கை உசும்பாமலிருக்க, அதன் விரலால் எத்தனை முறை சொறிந்தாலும் தொழுகை முறியாது.


3. குர்ஆன், துஆ, திக்ரு அல்லாத இரு எழுத்துக்களைக் கொண்ட சொல்லை மொழிவதாலும், கனைப்பதாலும் தொழுகை முறியும். ஆனால் நோயாளர் இவ்வாறு செய்தால் தொழுகை முறியாது. இதேபோன்று, தொழுகைக்கு பர்ளான அளவுக்கு ஓத வேண்டிய ஓதலை ஓத முடியாதிருக்கும் நிலைமையில் கணித்து அதனால் இரு எழுத்துக்கள் வெளியானாலும், நோன்பாளி காரலை உட்கொள்ளாமல் இருப்பதற்காக கனைத்து, அதனால் இரு எழுத்துக்கள் வெளிப்பட்டாலும் தொழுகை முறியாது.


4. நோன்பை முறிக்கும் வஸ்த்துக்களை விழுங்குதல், தொண்டைக்கு வெளியே வந்த கார்லை விழுங்குதல் ஆகியவைகள் தொழுகையை முறிக்கும்.


5. கிப்லா திசையை விட்டும் நெஞ்சைத் திருப்புதல்.


6. செயலாலுள்ள பர்ளுகள் ஞபகத்துடன் அதிகப்படுத்தல்.


7. காற்றடிக்கும்போது புடவை உயர்வதனால் அவ்ரத் (மறைக்க வேண்டிய உறுப்பு) வெளியாகினால் அதை உடனே தன்கையால் மறைக்காவிட்டால் தொழுகை முறியும்.


8. சப்தமாய்ச் சிரிப்பது, அழுவது, முனங்குவது ஆகியவையும் தொழுகையை முறிக்கும்.


9. ஒரு பர்ளை அல்லது ஷர்த்தை விட்டால் தொழுகை முறிந்து விடும்.
ஜும்ஆ தொழுகை என்றால் என்ன?


வெள்ளிக்கிழமை லுஹருடைய நேரத்தில் லுஹருடைய நாலு ரக்அத்துக்களைத் தொழாமல், இமாம் குத்பா ஓதி, இரண்டு ரக்அத்துக்கள் இமாமுடன் சேர்ந்து தோழா வேண்டும். குறைந்தபட்சம் நாற்பது பேர்களாவது (ஊரில் நிரந்தரமாய் வசிப்பவர்கள்) சமுகமளித்திருக்க வேண்டும்.
ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றுவதற்குரிய நிபந்தனைகள் எவை?


1. பாங்கு சப்தம் கேட்கும் எல்லைக்குட்பட்ட இடத்தில் ஜும்ஆ தொழுகை நிகழ வேண்டும்.


2. ஜும்ஆ தொழுது ஸலாம் கொடுக்கும்வரை லுஹருடைய நேரம் இருக்க வேண்டும்.


3. ஓர் ஊரில் ஒரு ஜும்ஆதான் தொழவேண்டும்.


4. இமாமைச் சேர்த்து நட்பது பேருக்கும் குறைவில்லாமல் தொழுகை நிகழ வேண்டும்.


5. முந்தின ரக்அத்து முழுவதிலும் இமாமைப் பின்பற்றி இருத்தல். ஒருவர் இரண்டாம் ருகூஉக்குப் பிறகு வந்து இமாமுடன் சேர்ந்தால் ஜும்ஆ நிய்யத்துடன் நான்கு ரக்அத்துகள் தோழா வேண்டும்.


6. இரண்டு குத்பாவிற்குப் பிறகு தொழுகை நடைபெற வேண்டும்.


                                ஜனாஸா தொழுகை என்றால் என்ன?


ஒரு முஸ்லிமான ஆணோ, பெண்ணோ

மரணித்து விட்டால் அதற்குச் செய்ய வேண்டிய கடமைகள் 4.


1. அம்மையித்தைக் குளிப்பாட்டல்.


2. கபனிடல்.


3. தொழுவித்தல்.


4. மார்க்கச் சட்டப்படி நல்லடக்கம் செய்தல்.

     ஜும்மாவுக்கு இரண்டு பாங்குகள் உண்டா? 

       ஆம் உண்டு


ஜனாஸா தொழுகையின் விதிகள் என்ன?


1. ஜனாஸா தொழுவதாக நிய்யத்து வைத்தல்.


2. தொழ சக்தியுள்ளவர்கள் நின்று தொழுதல்.


3. முதல் தக்பீர் உட்பட நான்கு தக்பீர்கள் சொல்லல்.


4. முதலாம் தக்பீருக்குப் பின் ஸூரத்துல் ஃபாதிஹா ஓதுதல்.


5. இரண்டாம் தக்பீருக்குப் பின் ஸலவாத்து ஓதுதல்.


6. மூன்றாம் தக்பீருக்குப் பின் மையித்தின் மறுமையின்

     காரியத்திற்காக  பிழை பொறுக்கத் தேடுதல்.


7. நான்காவது தக்பீருக்குப் பின் ஸலாம் சொல்லுதல்.
வித்ரு தொழுகை என்றால் என்ன?


இது ஒரு பிரதான ஸுன்னத்தான தொழுகை. வித்ரு என்பதின் அர்த்தம் ஒற்றை. இஷா தொழுத பின்னரில் இருந்து தஹஜ்ஜத் வரை வித்ரு தொழுகையை நிறைவேற்றலாம். குறைந்தது ஒரு ரக்அத். கூடியது பதினொரு ரக்அத்துகள். இரண்டு ரக்அத்துகளாக தொழுது ஸலாம் கொடுத்த பின்னர் ஒரு ரக்அத்து தொழுது முடிக்க வேண்டும்.
தஹஜ்ஜுத் தொழுகை என்றால் என்ன?


இது இரவில் சிறிது நேரமாகிலும் நித்திரை செய்து விழித்தபின் தொழும் தொழுகையாகும். ஸுப்ஹு நேரம் வரை இத்தொளுகையை நிறைவேற்றலாம். இதில் கூடுதலாக எத்தனை ரக்அத்துகளும் தொழுது கொள்ளலாம். குறைந்தது இரண்டு ரக்அத்துக்களாகும். இந்த தஹஜ்ஜுத் தொழுகையின் பின் வித்ரு தொழுது கொள்வது ஆகச் சிறந்தது.
இஸ்திகாரா தொழுகை என்றால் என்ன?


இஸ்திகாரா என்பது நலவைத் தேடுதல் என்பதாகும். வியாபாரம், விவாகம், விவசாயம், வீடு கட்டுதல், பிரயாணம் போன்ற வாழ்க்கையில் ஏற்படும் எல்லா நற்காரியங்களைத் தொடங்கும் போது, தொடங்கும் காரியம் நலமாக முடிய வேண்டும் என இரண்டு ரக்அத்து ஸுன்னத் தொழுவதாகும்.
தஹிய்யத்துல் மஸ்ஜித் தொழுகை என்றால் என்ன?


“தஹிய்யத்துல் மஸ்ஜித்” என்றால் பள்ளிவாசல் காணிக்கை என்பதாகும். பள்ளிவாசலுக்குள் புகுந்தவுடன் உட்காருவதற்கு முன் இரண்டு ரக்அத்து ஸுன்னத்துத் தொழ வேண்டும்.
தஹிய்யத்துல் வுழு தொழுகை என்றால் என்ன?


தஹிய்யத்துல் வுழு என்றால், வுழுவின் காணிக்கையாகும். இத்தொழுகை வுளுசெய்து நீர் உலர முன் இரண்டு ரக்அத்தக்கள் ஸுன்னத் தொழுவதாகும்.
இஷ்ராக் தொழுகை என்றால் என்ன?


இஷ்ராக் தொழுகை சூரியன் உதித்தபிறகு தொழும் தொழுகையாகும். சூரியன் உதித்து சுமார் 7 முழு அளவுக்கு உயர்ந்த பிறகு இரண்டு ரக்அத் ஸுன்னத்து தொழவேண்டும்.
லுஹா தொழுகை என்றால் என்ன?


இது ஸுன்னத்து இதன் நேரம் சூரியன் 7 முழத்தின் அளவு உயர்ந்தது முதல் லுஹர் நேரம் வருமளவாகும். இது குறைந்தது இரண்டு ரக்அத்துகளாகும். நிரப்பமானது எட்டு ரக்அத்துகள். அதிகமானது பன்னிரண்டு ரக்அத்துகளாகும். இரண்டு இரண்டு ரக்அத்துகளாக தொழலாம்.
அவ்வாபீன் தொழுகை என்றால் என்ன?


இது மக்ரிபுக்கும், இஷாவுக்கும் இடையில் தொழும் ஸுன்னத்தான தொழுகையாகும். இது இருபது ரக்அத்துகள் கொண்டது. இதை ஆறு, நான்கு, இரண்டு ரக்அத்துகளாகவும் தொழலாம்.      ஜும்மாவுக்கு முன் சுன்னத் உண்டா?

       ஆம் உண்டு