MAIL OF ISLAM

Knowledge & Wisdom



ஆண்கள் தங்கம், வெள்ளி, இரும்பு ஆபரணங்கள் அணியலாமா?


எழுதியவர்: மௌலவி  S.L. அப்துர்ரஹ்மான்  (கௌஸி)  கல்முனை.


இஸ்லாத்தின் பார்வையில் தங்கம் வெள்ளி  இரும்பு போன்ற மோதிரங்கள், வெள்ளி மாலைகள், கை செயின்கள் - காப்புகளை ஆண்கள் அணிவது பற்றிய தீர்வு என்ன?

​​

♣ ஆண்கள் தங்கம், வெள்ளி மோதிரம் அணிவது கூடுமா?

ஆண்கள் வெள்ளி மோதிரம் அணிவது நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறை சுன்னத்தாகும். தங்க மோதிரம் அணிவது ஹராமாகும், பொதுவாக ஆண்கள் தங்க ஆபரணங்கள் அணிவதே ஹராமாகும்.

♦ அனஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மோதிரம் வெள்ளியால் ஆனதாக இருந்தது. அதன் (கல் பதிக்கும்) குமிழும் வெள்ளியில் ஆனதாகவே இருந்தது.


​​நூல்: புகாரி 5870

♦  நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஒரு மடல் எழுதிடும்படிக் கூறினார்கள். அல்லது எழுதிட நாடினார்கள். அப்போது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் ”அவர்கள் எந்த மடலையும் முத்திரையிடப்படாமல் படிக்கமாட்டார்கள்” என்றும் சொல்லப்பட்டது. உடனே வெள்ளியில் ஒரு மோதிரம் செய்தார்கள். அதில் பொறிக்கப்பட்டிருந்த வாக்கியம் ”முஹம்மத்ர் ரஸுலுல்லாஹ்” என்பதாகும். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் கையில் அம்மோதிரம் இருக்கும் நிலையில் அதன் (பளிச்சிடும்) வெண்மையை (இப்போதும் நேரில்) நான் பார்த்துக் கொண்டிருப்பது போலிருக்கிறது” என அனஸ் இப்னு மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள்.


​​(இந்த ஹதீஸ் அறிவிப்பவர்களில் ஒருவரான ஷுஅபா கூறுகிறார்கள்: எனக்கு இதனை அறிவித்த) கத்தாதா அவர்களிடம், ”அதில் பொறிக்கப்பட்டிருந்த வாக்கியம் ”முஹம்மத்ர் ரசூலுல்லாஹ்” என்றிருந்தது என்று உங்களிடம் யார் கூறியது? எனக் கேட்டேன். அதற்கவர் ”அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு) தாம் கூறினார்கள்” என்றார்.


​​நூல்கள்:  புகாரி  65, 2938, 5872, 5875,7162, முஸ்லிம் 4247-4249, திர்மிதீ, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்

♦ அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மோதிரம் ஒன்றை தயார் செய்து, ”நாம் மோதிரம் ஒன்றை தயார் செய்துள்ளோம். அதில் (”முஹம்மதுர் ரசூலுல்லாஹ்” என்ற) இலச்சினை ஒன்றைப் பொறித்துள்ளோம். எனவே, அதைப் போன்று வேறெவரும் இலச்சினை பொறிக்க வேண்டாம்” என்றார்கள். நபி (ஸல்லலாஹு அலைஹி வசல்லம்) அவர்களின் சுண்டுவிரலில் அது மின்னியதை இப்போதும் நான் (என் மனத்திரையில்) பார்க்கிறேன்.


​​நூல்கள்: புகாரி5874, 5877, முஸ்லிம் 4246, திர்மிதீ

♦ இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள். இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் வெள்ளி மோதிரம் ஒன்றைத் தயாரித்து (அணிந்து) கொண்டார்கள். அது (அவர்களின் வாழ்நாளில்) அவர்களின் கையில் இருந்தது. பிறகு, அபூ பக்ர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் கையில் இருந்தது. பிறகு, உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் கையில் இருந்தது. பிறகு, உஸ்மான் (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்களின் கையில் இருந்தது. இறுதியில் அது ”அரீஸ்” எனும் கிணற்றில் (தவறி) விழுந்துவிட்டது. அதில் பொறிக்கப்பட்டிருந்த இலச்சினை ”முஹம்மதுர் ரசூலுல்லாஹ்” (இறைத்தூதர் முஹம்மது) என்றிருந்தது.


​​நூல்கள்: புகாரி 5873, 5866, முஸ்லிம் 4245, அபூதாவூத், அஹ்மத்


​​

♣ இரும்பு மோதிரம் அணிவது குறித்து அறிஞர்களிடம் மூன்று வகையான கருத்துக்கள் காணப்படுகின்றன.

1) முதலாவது கருத்து:

இரும்பு மோதிரம் அணிவது கூடும். இக்கருத்தை இமாம் நவவி ரஹ்மதுல்லாஹி அலைஹி, ஷாபிஈ மத்ஹபைச் சார்ந்த அறிஞர்கள் கூறுகின்றனர். இவர்களுடைய ஆதாரம்: நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு மனிதரைப் பார்த்து ‘இரும்பாலான மோதிரமாக இருந்தாலும் சரி நீ மஹர் கொடுத்து விடு!” என்று கூறினார்கள்.


​​நூல்: புகாரி 5871, முஸ்லிம்

ஆகையால் இரும்பு மோதிரம் அணிவது ஹராம் என்றிருந்தால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அம்மனிதருக்கு அதை மஹராக எடுத்துக் கொள்ளுமாறு கூறியிருக்க மாட்டார்கள் என்று இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு இரும்பு மோதிரம் அணிவது கூடும் என்று அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.


​​

2) இரண்டாவது கருத்து:

இரும்பு மோதிரம் அணிவது ஹராமாகும். இக்கருத்தை ஹனபி மத்ஹபைச் சார்ந்த அறிஞர்கள்  கூறுகின்றனர்.


​​

3) மூன்றாவது கருத்து:

இரும்பு மோதிரம் அணிவது மக்ரூஹ் வெறுக்கத்தக்கது. மூன்றாவது சாரார் மேலே கூறப்பட்ட அறிஞர்களின் இரு வகையான கருத்துக்களை ஒன்று சேர்த்து இந்த முடிவை வழங்கியுள்ளனர். இக்கருத்தை மாலிகி, ஹன்பலி மத்ஹபைச் சார்ந்த அறிஞர்களும் கூறியிருக்கின்றார்கள்.


​​

♦ ஏகோபித்த சரியான கருத்து:

ஆண்கள் தங்க மோதிரம் அணிவது ஹராமாகும். பொதுவாக ஆண்கள் தங்க ஆவரணங்கள் அணிவதே ஹராமாகும். வெள்ளி மோதிரம் அணிவது நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறை சுன்னத்தாகும். இரும்பு போன்ற மோதிரங்களை அணிவது பற்றி அதாவது பேணுதல் என்ற அடிப்படையில் இரும்பு மோதிரத்தைத் தவிர்ந்து கொள்வது மிகச் சிறந்தது.

இக்கருத்தையே அஷ்ஷெய்ஹ் முக்பில் ரஹிமஹுல்லாஹ் அவர்களும் கூறியிருக்கின்றார்கள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெள்ளி மோதிரத்தையே அணிந்திருக்கின்றார்கள். எனவே இரும்பு மோதிரங்களைத் தவிர்த்து வெள்ளி மோதிரங்களை அணிந்து கொள்வது மிகவும் சிறந்ததாகும்.


​​

♣ இஸ்லாம் மார்க்கம் தங்கத்தை ஆண்களுக்குத் தடை செய்ததன் காரணம் என்ன?

♦ அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள். ஆண்கள் (தங்களின் மேனியில்) குங்குமப் பூச் சாயமிட்டுக் கொள்வதை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தடை செய்தார்கள்.


​​நூல்: புகாரி 5846

♦ பராஉ இப்னு ஆஸிப் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள். ”தங்க மோதிரம்” அல்லது ”தங்க வளையம்”, சாதாரணப் பட்டு, தடித்தப்பட்டு அலங்காரப்பட்டு, சிவப்பு மென்பட்டுத் திண்டு (மீஸரா), பட்டு கலந்த (எம்ப்திய) பஞ்சாடை, வெள்ளிப் பாத்திரம் ஆகிய ஏழு பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்தார்கள். மேலும், நோயாளிகளை நலம் விசாரிப்பது, ”ஜனாஸா”வைப் பின்தொடர்ந்து செல்வது, தும்மியவ(ர் அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என்று கூறுகையில் அவ)ருக்கு (யர்ஹமுகல்லாஹ் அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக என்று) பதில் சொல்வது, சலாமுக்கு பதிலுரைப்பது, விருந்து அழைப்பை ஏற்பது, சத்தியம் செய்தவர் (அதை) நிறைவேற்ற உதவிடுவது மற்றும் அநீதியிழைக்கப்பட்டவருக்கு உதவிபுரிவது ஆகிய ஏழு (நற்)செயல்களைக் கடைப்பிடிக்கும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.


​​நூல்: புகாரி 5863

♦ அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தங்க மோதிரத்தை அணியவேண்டாமென்று (ஆண்களுக்குத்) தடைவிதித்தார்கள்.


​​நூல்: புகாரி 5864

அந்த அடிப்படையில் இஸ்லாம் தங்கம் விஷயத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இரு விதமான தீர்ப்புகளை சொல்கின்றது.பெண்களுக்கு தங்கம் அணிவதை இஸ்லாம் தாராளமாக அனுமதிக்கின்றது. இதே நேரம் ஆண்களுக்கு தங்கம் அணிவதை முழுமையாக இஸ்லாம் தடை செய்துள்ளது இதற்கு என்ன காரணம் என்பது பற்றி மேலே குறிப்பிடப்பட்ட ஹதீஸ்களை அடிப்படையாக வைத்து சில அறிஞர்கள் அனுபவ ரீதியிலான தங்கள் கருத்துக்களை தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

ஆண்களின் உடம்பு இயற்கையிலே சூடாக இருக்கும் அதே வேலை பெண்களின் உடம்பு குளிராக இருக்கும் தங்க ஆவரணங்கள் சூட்டினை அவசரமாக வெளியேற்றும் தன்மைகொண்டது, அந்த அடிப்படையில் தங்கம் எனும் உலோகம் வெப்பத்தை விரைவில் வெளியேற்றக் கூடியது என்று சோதனைகள் மூலம் நிரூபணமாகியுள்ளது. உலகில் உள்ள உலோகங்களை நெருப்பில் பழுக்கக் காய்ச்சி தண்ணீரில் போட்டு உடனே வெளியே எடுத்தால் அதில் உள்ள வெப்பம் முழுமையாக வெளியேறாமல் அது சிறிது நேரம் சூடாகவே இருக்கும். அதிக நேரம் சென்ற பிறகு தான் அதன் வெப்பம் தணியும்.

ஆனால் தங்கத்தைச் சூடேற்றி அதைத் தண்ணீரில் போட்டு உடனே வெளியே எடுத்தால் அதன் வெப்பம் முழுமையாக வெளியேறி இருக்கும். இந்தச் சோதனை அடிப்படையில் ஆண்கள் தங்கம் அணியும் போது அவர்களின் உடலில் உள்ள வெப்பம் வேகமாக வெளியேற்றப்படும். ஓரளவு சூடாக இருக்க வேண்டிய ஆண்களின் உடல் சூட்டை அதிகம் இழக்க வேண்டிய நிலை ஏற்படும். இது தாம்பத்தியத்தையும் பாதிக்கும்.தாம்பத்திய உறவுக்கு ஆண்களின் உடல் ஓரளவுக்கேனும் சூடாக இருக்க வேண்டும். அப்போதுதான் அதன் சரியான இன்பத்தை அடைந்து கொள்ள முடியும்.ஆனால் பெண்களின் உடல் ஆண்களின் உடலை விடக் குளிர்ச்சியாக இருந்தால் தான் அவர்களிடம் அழகு மிளிரும். அவர்கள் தங்கம் அணிவதால் அது அவர்களுக்கு நன்மை பயக்கும்.


​​

♣ ஆண்கள் வெள்ளி மோதிரம் தவிர்ந்த வேறு மாலைகள், கை செயின்கள், காப்புகள் போன்ற ஆபரணங்களை அணியலாமா?


நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வெள்ளி மோதிரம் ஒன்றைத் தாயாரித்து அதில், 'முஹம்மது ரஸுலல்லாஹ் - அல்லாஹ்வின் தூதர் முஹம்மது'  (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)என்ற இலச்சினை ஒன்றைப் பொறித்துள்ள மோதிரம் அணிந்துள்ளார்கள். எனவே வெள்ளி மோதிரம் அணியலாம். விரும்பினால் இஸ்லாமியப் பார்வையில் அனுமதிக்கப்பட்ட வேறு எழுத்துக்கள் நமது பெயரின் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட வெள்ளி மோதிரத்தை ஆண்கள் அணிவது கூடும் என விளங்குகிறோம்.

வசிக்கும் நாடு, பிரதேசம் எதுவென்றாலும் முஸ்லிம்களுக்கென்று கண்ணியமான புறத் தோற்றமுள்ளது. ஸ்டைலுக்காகக் கையில் கயிறு கட்டிக்கொள்வது, காப்புகளை அணிவது, சங்கிலிகள் - செயின்கள் போன்ற வெள்ளி ஆபரணங்கள் மற்றும் பாசி, பவளம் போன்ற மாலைகளாக இருந்தாலும் அவற்றை பேணுதல் என்ற அடிப்படையில் ஆண்கள் அணிவதைத் தவிர்த்திட வேண்டும்.


​​பிறர் அணிந்துள்ளனர் அதுபோல் நாமும் அணியலாமே என்ற முன்னுதாரணத்திற்க்கு இஸ்லாத்திற்கும் துளியும் தொடர்பில்லை என்பதையும் கவனத்தில் கொள்வோமாக!