MAIL OF ISLAM

Knowledge & Wisdomஇஸ்லாமிய சிந்தனையின் புனர்நிர்மாணமும்

​இமாம் அப்துல் காதிர் ஜீலானியும் (ரலியல்லாஹு அன்ஹு)  

எழுதியவர்:  பஸ்ஹான் நவாஸ்  (செய்தி ஆசிரியர் - இலங்கை வானொலி தமிழ் சேவை)

ஒரு சமூகத்தில் ஆன்மீகம் விலகிச் சொல்லும் போது அங்கு அறியாமையும், சடவாதமும் தலைதூக்கும். ஹிஜ்ரி 5ம் நூற்றாண்டு காலப்பகுதியில் அப்பாஸிய கிலாபத்தின் ஆட்சி நடந்துகொண்டிருந்தது. இஸ்லாமிய வரலாற்றில் மாபெரும் சமூக ஆன்மீகப் புரட்சியை ஏற்படுத்திய குதுபுல் அக்தாப், கௌதுல் அஃலம் முஹியத்தீன் அப்துல் காதிர் ஜிலானி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள். ரபீஉனில் ஆகிர் மாதம் வந்தால் முஸ்லிம் உலகம் அவர்களை நன்றியுடன் நினைவுபடுத்துகிறது. இதனால் தான் இமாம் தஹபி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூட அப்துல் காதிர் ஜிலானி ரலியல்லாஹு அன்ஹு வை 'பூரணத்துவம் வாய்ந்த முன் உதாரணம்" என்று கூறுகிறார்கள்.


அவர்கள் இளைஞராக இருந்த போது அப்பாஸியரின் ஒடுக்குமுறை தலைவிரித்தாடியது. சமூகத்தில் ஊழல் நிறைந்து இருந்தது, அரசியல் ஸ்திரத்தன்மை நிலவவில்லை. 21ம் நூற்றாண்டில் வாழும் இன்றைய முஸ்லிம் உம்மா முகங்கொடுக்கும் சமூக, பொருளாதார ரீதியிலான நெருக்கடிகளால் அவர்கள் பாதிக்கப்பட்டார்கள்.

19ம் வயதில் கல்வி தேடி பக்தாத் சென்ற போது சிரியா, ஜெரூஸலம் போன்ற இடங்களில் நாளாந்தம் மக்கள் கொலைசெய்யப்பட்டுக் கொண்டிருந்தார்கள். பக்தாத் நகர அப்பாஸி கலீபா பலமிழந்து காணப்பட்டார். சிற்றரசுகளை நிர்மாணிப்பதற்காக போட்டி போட்டுக்கொண்டிருந்தார்கள். நயவஞ்சகத்தன்மை ஆட்சியில் இருந்து. உலமாக்கள் தமது செல்வங்களில் கூடுதல் ஆர்வம் காட்டிக்கொண்டிருந்தார்கள்.

இந்தக் காலபகுதிக்கு உதாரணமாக '2009ம் ஆண்டின் பின்னர் ஏற்பட்ட அரேபிய வசந்தத்தின் பெறுபேறுகளோடு ஒப்பிட முடியும்". இந்த நிலைகளால் மனந்தளர்ந்து போன இமாம் அப்துல் காதிர் ஜிலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் 32 வருடங்களாக ஆன்மீக மற்றும் கல்வித்துறையில் தன்னை தயார்படுத்திக் கொள்கிறார்கள். 50 வயதில் தனது பிரசாரப்பணிகளை ஆரம்பிக்கிறார்கள். இதனைத் தான் அவர்கள் ' அப்துல் காதிர் ஜிலானி ரலியல்லாஹு அன்ஹு மக்களின் முழுமையான அங்கீகாரத்தை வென்றெடுத்தார்கள்.


மன்னர்களை விட அந்த ஆத்மீக ஆசானுக்கு அதிகாரம் இருந்தது என இப்னு ரஜப் அவர்கள் எழுதுகிறார்கள். அப்துல் காதிர் ஜிலானி ரலியல்லாஹு அன்ஹு வின் செல்வாக்கு அதிகரித்த காலப்பகுதியில் தான் பக்தாத் நகரின் மேயராக அபூஅல் முழப்பர் அல் முஸ்தன்ஜித் பில்லலாஹ் பதிவியேற்கிறார். மேயராக இருந்த கலீபாவிற்கு செல்வாக்கோ, வெளிநாட்டு உதவிகளோ இருக்கவில்லை. இதனால் அப்துல் காதிர் ஜிலானி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் மீது பக்தாத் நகர மேயருக்கு பொறாமை ஏற்படுகிறது.

தனது புகழை அதிகரித்துக் கொள்வதற்காக அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு வை சந்திப்பதற்காக செல்கிறார். கலீபாவோடு பத்து ஊழியர்களும் செல்கிறார்கள். ஒவ்வொருவரும் தங்க மூட்டைகளை சுமந்திருந்தார்கள். அப்துல் காதிர் ஜீலானி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அவர்கள் தங்கமூட்டைகளை பரிசாக ஏற்க மறுக்கிறார்கள். கலீபாவின் வற்புறுத்தலால் அவர்கள் தங்கத்தை கைகளால் அள்ளி எடுத்து பிழிகிறார்கள். தங்கத்தில் இருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. அப்பாவி மக்களின் இரத்தத்தை எனக்கு பரிசாக தருகிறீர்? உமக்கு வெட்கமாக இல்லை? எனக்கேட்கிறார்கள். இதனால் ஆச்சரியத்தில் ஆழ்ந்துபோகிறார் பக்தாத் நகர மேயர். இந்த சம்பவத்தை இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி ரலியல்லாஹு அன்ஹு பதிவு செய்துள்ளார்கள்.


போலி நயகவஞ்சகத்தனமான அறிஞர்கள் மீதும் அப்துல் காதிர் ஜீலானி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் எதிர்ப்பு வெளியிட்டார்கள். கி.பி 1151-1155 காலப்பகுதியில் பெரும்பாலான அறிஞர்களும், மக்களும் அவர்களின் தலைமைத்துவத்தின் கிழ் ஒன்றுபடுகிறார்கள். உலகின் பல இடங்களில் இருந்தும் ஈராக் தலைநகர் பக்தாதில் அமைந்திருந்த அப்துல் காதிர் ஜீலானி (ரலியல்லாஹு அன்ஹு) கல்லூரியில் சேர்ந்துகொண்டார்கள். ஆன்மீக பயிற்சிகளை வழங்கும் மத்திய தளமாக விளங்கியது. ஜிஹாத், தஃவா போன்ற பணிகளுக்காகவும் அவர்கள் ஆட்களை பயிற்றுவித்தார்கள். சிரியா, பலஸ்தீன் போன்ற இடங்களில் அவர்களின் மாணவர்கள் ஊக்கத்தோடு செயற்பட்டார்கள்.


இமாம் அப்துல் காதிர் ஜிலானி ரலியல்லாஹு அன்ஹு வினால் கவரப்பட்டவர்கள் அவருடைய மாணவர்களாகவும் இருந்தார்கள். சிலுவை விரர்களிடம் இருந்தது பலஸ்தீனை பாதுகாத்த நூருத்தீன் ஸங்கி, சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி போன்றவர்கள் முக்கியத்துவம் பெறுகிறார்கள். அப்தல் காதிர் ஜீலானி (ரலியல்லாஹு அன்ஹு) முரீதான ஸலாஹ்தின் அய்யூபி அவர்கள் அல்- அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் அஸ்அரி அகீதாவை முதலில் அறிமுகப்படுத்துகிறார். சிலுவைப் போராட்டத்தின் ஒவ்வொரு தளபதியும் காதிரியா தரீக்காவை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.


சிரியாவில் 1263-1328 வரை வாழ்ந்த இப்னு தைமியா கூட அப்துல் காதிர் ஜிலானி (ரலியல்லாஹு அன்ஹு) யை தனது ஷெய்கு ஆக ஏற்றிருந்தார். பலஸ்தீன விடுதலைப் போராட்டத்தின் முக்கிய புள்ளியாக கருதப்படும் இஸ்ஸதீன் கஸ்ஸாம் (ரலியல்லாஹு அன்ஹு) கூட காதிரிய்யா தரீக்காவை சேர்ந்தவர்கள். பாகிஸ்தான் என்ற நாடு உருவாகும் என்று கனவு கண்ட பாகிஸ்தானின் முன்னோடியும், நவீன சிந்தனையாளருமான அல்லாமா இக்பால் அவர்களும் காதிரிய்யா தரீக்காவை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இந்திய துணைக்கண்டம், இலங்கை, தூர கிழக்காசிய நாடுகளிலும் காதிரிய்யா தரீக்கா செல்வாக்குடன் உள்ளது.


தான் வாழ்ந்த காலத்தில் 15 இலட்சம் பேரை இஸ்லாத்திற்குள் எடுத்தபெருமை அவர்களை சாரும். ஆத்மீகத்துறையில் ஏற்படுத்திய மாபெரும் சீர்த்திருத்தம் 'முஹியத்தீன்" என்று அழைக்கப்பட காரணமாக அமைந்தது. இவர்களை போன்ற மாபெரும் சீர்த்திருத்தவாதியை காண்பது அரிது. நேர்மையும், உன்மையும் நிறைந்த தலைவரின் வழிகாட்டல் 21ம் நூற்றாண்டின் சமூக சீர்த்திருத்தில் மகத்தான பங்களிப்பை செய்யும் என்பதல் ஐயம் இல்லை.