MAIL OF ISLAM

Knowledge & Wisdom



அல்லாஹ் எங்கே இருக்கிறான்?


எழுதியவர்: மௌலவி  S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.


அல்லாஹ் “அர்ஷ்” என்ற (சிம்மாசனத்தில், கதிரையில்) அமர்ந்துள்ளானா? அல்லது அல்லாஹ்" தூண் துரும்பு" உள்ளிட்ட எல்லாப் படைப்புக்களிலும் இருக்கின்றானா?

♣ இது பற்றி வழிகெட்ட வஹ்ஹாபிகளின் நிலைப்பாடு :-

اَلرَّحْمٰنُ عَلَى الْعَرْشِ اسْتَوٰى  அர்ரஹ்மான் அர்ஷின் மீது அமைந்தான்.

(அல்குர்ஆன்:20:5) இந்த குர்ஆன் வசனத்திற்கு வழிகேடர்களான யஹுதிய அடிவருடிகள் நேரடி பொருள் கொடுத்து நாம் கதிரையில் உட்காருவதைப் போன்று "அல்லாஹ் அர்ஷில் இருக்கின்றான்" என்று அல்லாஹ்வுக்கு ஒரு இருப்பிடத்தையும் படைப்புகளுடன் ஒப்பீட்டையும் கொடுக்கின்றார்கள். அல்லாஹ் எம்மை பாதுகாக்க வேண்டும்.


​​​அல்லாஹ் தனது படைப்புகளுக்கு எவ்விதத்திலும் எப்போதும் எதற்கும் ஒப்பாகக்கூடியவன் அல்ல மேலும் தனது படைப்புகளின் பக்கம் எவ்விதத்திலும் தேவை காணுபவனும் அல்ல.

"அர்ஷ்" என்பது அல்லாஹ்வின் ஒரு பிரமாண்டமான படைப்புக்களில் ஒன்று. ஆகவே தன்னால் படைக்கப்பட்ட ஒன்றினளவில் எவ்வித தேவையுமற்ற வல்லவன் அல்லாஹ் எவ்வாறு தேவையுருவான். அவ்வாறு அவன் படைப்பின் பக்கம் தேவையுற்றால் அவன் குறையுள்ளவனாக, பலஹீனமானவனாக ஆகிவிடுவான். எனவே குறையுள்ள,பலஹீனமான பிறரின் பக்கம் தேவையுரும் ஒருவன் எவ்வாறு இறைவனாக இருந்து அனைத்தையும் அடக்கியாள முடியும். ஆகவே யாரொருவர் அல்லாஹ் அர்ஷில் இருக்கிறான் என்று உறுதி கொள்கிறாரோ அவர் அக்கணமே இஸ்லாத்தைவிட்டு வெளியேறிடுவார்.

மேலும் அல்லாஹ் அர்ஷில் அமர்ந்துள்ளான் என்று சொல்வோர் அவனுக்கு இடம், திசை உண்டு என்று நம்புகின்றார்கள். இதன் மூலம் அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்தவர்களாகி விடுகின்றார்கள். சிம்மாசனத்திலோ, கதிரையிலோ இருக்கும் ஒருவனுக்கு “ஜிஸ்ம்” சடம் இருக்க வேண்டும். சடமில்லாத ஒன்று ஓர் இடத்தில் இருக்கின்றதென்பது புத்திக்குப் புலப்படாத ஒன்றாகும். ஆகையால் சடமற்ற அல்லாஹ் குறித்த ஓர் இடத்தில் இருக்கின்றான் என்று சொல்வோர் அல்லாஹ்வுக்கு சடம் உண்டு என்று நம்புகின்றார்கள். இந்த நம்பிக்கை கொண்டு அவர்கள் இணை வைத்தவர்களாகி விடுகின்றார்கள்.

♦ ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு (படைப்புகளின் தன்மைகளைக் கொண்ட) உவமானம் கூற வேண்டாம், நிச்சயமாக அல்லாஹ்தான் (யாவற்றையும் நன்கு) அறிபவன், ஆனால் நீங்கள் அறிய மாட்டீர்கள். (அல்குர்ஆன் : 16:74)

எனவே அல்லாஹ் தனது படைப்புகளுக்கு எவ்விதத்திலும் ஒப்பாகாமல் எவ்வித இடமும் திசையும் இன்றி உள்ளான். இதன் அடிப்படையில் ஒரு மனிதன் மரணிப்பானேயானால் அவன் சுவனம் செல்லும் தகுதி பெறுவான் இல்லையேல் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும் அவன் ஒதுங்குமிடம் நரகமே. அல்லாஹ் நம் அனைவரையும் காத்தருள்வானாக!


​​ஆக அல்லாஹ் ஒருவன் அவன் யாருக்கும் எவ்விதத்திலும் ஒரு போதும் நிகராக மாட்டானென்றும், அவன் தன் அளப்பரிய வல்லமையைக் கொண்டு இடம், பொருள்,நேரம், காலம், திசை,படைப்பிணங்களுக்கு ஒப்பாகுதல் ஆகிய அனைத்தை விட்டும் தூய்மையானவனாக நிலைத்திருக்கிறான் என்று உறுதி கொள்வதே ஈமான் ஆகும்.

♣ வஹ்ஹாபிகளின் தவரான வாதங்களுக்கு தக்க பதில்கள்

அர்ஷ் சம்பந்தமான திருவசனங்கள் திருக்குர்ஆனின் ஏழு இடங்களில் வந்துள்ளன.

1) அஃறாப் - 54

2) யூனுஸ் - 03

3) றஃது - 02

4) புர்கான் - 59

5) ஸஜதா - 04

6) ஹதீத் - 04

7) தாஹா - 05

இவற்றில் “தாஹா” அத்தியாயத்தில் மட்டுமே (الرحمن على العرش استوى) என்று “றஹ்மான்” என்ற சொல்லுடனும், ஏனைய அத்தியாயங்களில் (ثم استوى على العرش) என்று “றஹ்மான்” என்ற சொல் இல்லாமலும் வந்துள்ளது.

அல்லாஹ் "அர்ஷ்" என்ற இடத்தில் - சிம்மாசனத்தில் அல்லது கதிரையில் அமர்ந்துள்ளான். இவ்வாறு வாதிடுவோர் வழிகெட்ட இப்னு தைமிய்யா, இப்னு அப்தில் வஹ்ஹாப் ஆகியோரை “அகீதா” கொள்கையில் பின்பற்றினவர்களேயாவர். உலகில் வாழும் சுன்னத் வல் ஜமாஅத்தினர்கள் இவர்களை வஹ்ஹாபிகள் என்று அழைப்பர். அதோடு இவர்களைச் சரிகாணவும் மாட்டார்கள்.


​​இவ்விருவரின் கொள்கைவழி வந்த அனைவரும், மற்றும் இவர்களிடம் வளர்ந்தவர்களும் “அல்லாஹ் அர்ஷில் அமர்ந்துள்ளான்” என்ற கொள்கையுடையவர்களேயாவர்.இவர்கள் தலை நீட்டிய பிறகுதான் பொது மக்களிற் பலரினதும், உலமாஉகளிற் சிலரினதும் “ஈமான்” விசுவாசம் கெட்டுப் போனதென்று கூறலாம்.

அல்லாஹ் அர்ஷில் இருக்கின்றான் என்று இது காலவரை அடித்துச் சொல்லி வந்த வழிகெட்ட வஹ்ஹாபிகள் அண்மைக் காலம் முதல் “அல்லாஹ் அர்ஷுக்கு அப்பால் உள்ளான்” என்று சொல்லி வருகின்றார்கள். சொல்லத் துடங்கியுள்ளார்கள். இதற்கான காரணம் எதுவென்று நான் கூறாமலேயே வாசகர்கள் விளங்கிக் கொள்வார்கள். இந்த வழிகெட்ட வஹ்ஹாபிகள் அல்லாஹ் அர்ஷில் இருக்கின்றான் என்ற தமது வாதத்தை சரியென்று நிறுவ பல ஆதாரங்கள் கூறுகின்றார்கள். அவற்றில் மிகப் பிரதான ஆதாரத்தை மட்டும் இங்கு கூறி அதற்கான ஆட்சேபனைகளையும், விளக்கங்களையும் தருகின்றேன்.


​​

♣ அர்ஷ் என்றால் என்ன?

"அர்ஷ்" என்பது அல்லாஹ்வின் ஒரு பிரமாண்டமான படைப்பாகும். மேலும் அர்ஷ் என்பதை ஒரு விதபசுமையான இரத்தினத்திலிருந்து இறைவன் படைத்தான். அதன் ஒளி நிறம் அழகிய தோற்றம் போன்ற விபரம் தெரிந்தவன் வல்லவன் வலிமையுள்ளவன் அல்லாஹ் ஒருவனே அறிந்து வைத்துள்ளான்! எழுபதாயிரம் நாக்குகள் அதற்கு இருக்கும் எழுபதாயிரம் மொழியில் அது தினமும் தஸ்பீஹ் செய்த வண்ணம்தன் இறைவனைத் துதிக்கும் ஞாபகப்படுத்தும்!

தண்ணீருக்கு மேலே இருந்து தலை வணங்கியது தினமும் ஓயாமல் தஸ்பீஹ் செய்வதனால் அதன் நாக்குகள் வரண்டு போகும். ஆனாலும் கூட இறைவனின் திருநாமம் ஓவ்வொரு நொடியும் ஓதும் அது இன்றியமையாத காரியம். தினமும் தஸ்பீஹ் ஓதும் அதனை இதுவரை எவரும் கண்டது கிடையாது. அதனை வானம் பூமி இரண்டுக்கும் முன்னாலேயே இறைவன் படைத்து விட்டான் எனும் தகவல் உலகில் அனைவரையும் சிந்திக்க வைக்கிறது!


​​

♣ அர்ஷ் பற்றிய சில நபிமொழிகள்

ஹழ்ரத் அபூதர் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சூரியன் மறைந்த நேரத்தில் என்னிடம், ”அது (சூரியன்) எங்கு செல்கிறது என்று உனக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். நான், ”அல்லாஹ்வும், அவனது தூதருமே அறிவார்கள் என்று கூறினேன். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், ”அது அர்ஷுக்கு (இறை சிம்மாசனத்திற்குக்) கீழே ஸஜ்தா (வணக்கம்) செய்வதற்காகச் செல்கிறது. அங்கு அது (கிழக்கிலிருந்து உதயமாகுவதற்கு இறைவனிடம்) அனுமதி கேட்கிறது. உடனே அதற்கு அனுமதியளிக்கப்படுகிறது. (இறுதியாக ஒரு நாள்) அது ஸஜ்தா செய்ய, அந்த ஸஜ்தா ஏற்கப்படாமல் போகவிருக்கிறது. அப்போது அது (வழக்கம் போன்று) கிழக்கிலிருந்து உதயமாகுவதற்கு அனுமதி கேட்கும், அதற்கு அனுமதியளிக்கப்படாது. மாறாக, ”வந்த வழியே திரும்பி விடு” என்று அதற்கு உத்தரவிடப்படும். அதன்படி அது மேற்கிலிருந்து உதயமாகும்” என்றார்கள். இதைத் தான், ”சூரியன், தான் நிலை கொள்ளம் ஓர் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அது பேரறிவாளனான வல்லமை மிக்க (இறை)வனின் நிர்ணயமாகும்” என்னும் (திருக்குர்ஆன் 36:38) இறைவசனம் குறிக்கிறது” என்றார்கள். (நூல் ஷஹீஹ் புகாரி 3199)

♦ இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் ) அவர்கள் கூறினார்கள்” அல்லாஹ்வின் நிழலைத்தவிர வேறு எந்த நிழலுமே இல்லாத நாளில் அல்லாஹ் ஏழு கூட்டத்தாருக்கு மட்டும் அர்ஷின் நிழலில் நிழல் கொடுப்பான்.

1. நீதிமிக்க ஆட்சியாளர்.

2. இறை வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன்.

3. தனிமையில் அல்லாஹ்வை நினைத்து (அவனுடைய அச்சத்தில்) கண்ணீர் சிந்திய மனிதன்.

4. பள்ளிவாசலுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக்கொள்ளும் இதயமுடையவர்.

5. இறைவழியில் நட்புகொண்ட இருவர்.

6. அந்தஸ்தும் அழகும் உடைய ஒரு பெண் தம்மை தவறு செய்ய அழைத்தபோது ”நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்” என்று கூறியவர்.

7. தம் இடக் கரம் செய்த தர்மத்தை வலக் கரம் கூட அறியாத வகையில் இரகசியமாக தர்மம் செய்தவர்.

என அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள்

​நூல்: ஸஹூஹூல் புகாரி 6806, முஸ்லிம்

♦அல்லாஹ்வின் அர்ஷை கரீபிய்யூன் எனும் எட்டு மலக்குமார்கள் சுமந்துகொண்டிருக்கின்றார்கள். "இன்னும் மலக்குகள் அதன் கோடியிலிருப்பார்கள், அன்றியும், அந்நாளில் உம்முடைய இறைவனின் அர்ஷை (வானவர்) எட்டுப்பேர் தம் மேல் சுமந்திருப்பார்கள்".(அல்குர்ஆன் : 69:17)

அவர்களில் ஒரு மலக்கின் ஒரு காது சோணையிலிருந்து தோள் புஜம் வரை உள்ள தூரம் எழுநூறு ஆண்டுகள் பயணிக்கும் தூரமாகும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.


​​அறிவிப்பவர்: ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு

​நூல் அபூதாவூத்: 4102

♦  சஅத் பின் முஆத் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் ஜனாஸா மக்கள் முன்னிலையில் வைக்கப்பட்டிருந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ''சஅத் பின் முஆத் அவர்களின் இறப்புக்காக அர்ரஹ்மானின் அர்ஷ் - அரியணை அசைந்தது'' என்று கூறினார்கள்.


​​அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலியல்லாஹு அன்ஹு)

​நூல்கள் - புகாரி 3803, முஸ்லிம் 4869, திர்மிதீ, இப்னுமாஜா, அஹ்மத்

சஅத் பின் முஆத் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கஸ்ரஜ் குலத்தைச் சார்ந்த அன்ஸாரி ஆவார்கள். இவர்கள் 30-ஆம் வயதில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள். 37-ஆம் வயதில் மரணித்தார்கள். மதீனா முஸ்லிம்களுக்கு மார்க்கத்தைப் போதிப்பதற்காகத் தோழர் முஸ்அப் பின் உமைர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.


​​அவர் மூலம் இஸ்லாத்தில் இணைந்த சஅத் பின் முஆத் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் தமது குடும்பமான பனூ அப்தில் அஷ்ஹலைச் சேர்ந்த மக்கள் அதிக எண்ணிக்கையில் இஸ்லாத்தில் இணைய தூண்டுகோலாக இருந்தார்கள். பத்ர், உஹுத் உள்பட பல அறப்போர்களில் கலந்துகொண்ட சஆத் பின் முஆத் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அகழ் போரின்போது காயமுற்றார்கள். ஒரு மாதத்திற்குப் பிறகு இதே காயத்தால் மரணமடைந்தார்கள். அவர்களுடைய தாயாரும் முஸ்லிம் ஆவார்கள். பெயர்: கப்ஷா பின்த் ரஃபிவு ரலியல்லாஹு அன்ஹா


​​நூல்: உம்தத்துல் காரீ


​​

♣  அல்லாஹ் அர்ஷில் இருக்கின்றானா?

"அர்ரஹ்மான் அர்ஷின் மீது அமைந்தான்" என்ற திருக்குர்ஆன் வசனத்தில் اسْتَوٰى)) என்பதன் அர்த்தம், விளக்கம் தந்த விரிவுரையாளர்கள் :அல்லாஹுதஆலா அர்ஷின் மீது ஆதிக்கம் செலுத்தினான், அர்ஷை அதிகாரத்திற்கு உட்படுத்தினான், அல்லாஹ் அர்ஷை பாதுகாத்தான், அதை தரிபடுத்தினான் என்று கூறியுள்ளார்கள். அந்த அடிப்படையில் அல்லாஹ்வின் படைப்புகளில் மிகப்பெரியதும் இதர படைப்புகளை தன்னுள்ளடக்கியதுமான ஒரு படைப்பே அர்ஷ் என்பதாகும்.

அந்த அர்ஷின் மீது அல்லாஹ்வின் ஆதிக்கம் நிலை பெற்று விடும் போது அதனுள் அடக்கமாகிய குர்ஸ், லவ்ஹுல் மஹ்பூல், கலம், ஏழு வானம், ஏழு பூமி இன்னும் அனைத்து படைப்புகள் மீதும் அவன் ஆதிக்கம் பெற்றுள்ளான் என்பதையே இவ்வசனம் சுட்டிக் காட்டுகிறது. உதாரணத்திற்கு "உலகை ஆண்ட மன்னர்" என்ற வார்த்தைக்குள் உலகின் எல்லா பகுதிகளும் அடங்கி அதுவெல்லாம் அந்த மன்னரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. என்பதை போல இங்கும் விளங்க வேண்டும்.

மேலும் எதனளவிலும் தேவையற்ற அல்லாஹ் அவன் அமர்வதற்கு அர்ஷ் (அரியாசனம்) மீது தேவையாகுவது எவ்வாறு சாத்தியமாகாதோ

என்ற அல்லாஹ்வின் பேச்சுக்குரிய பொருள் என்னவெனில் “அர்ஷ்” என்ற படைப்போடு அல்லாஹ் படைத்தலை நிறைவு செய்து விட்டான் என்பதாகும்.

“இஸ்தவா” என்ற சொல்லுக்கு (إستتم)“இஸ்ததம்ம” பூரணப்படுத்தினான்- நிறைவு செய்தான் என்றும் பொருள் கொள்ள வேண்டும்.


​​

♣  இஸ்தவா என்ற சொல்லுக்கு “இஸ்ததம்ம” பூரணப்படுத்தினான் என்பதற்கு ஆதாரங்கள்

♦ இஸ்தவா என்ற சொல்லுக்கு பூரணப்படுத்தினான் என்று கருத்துக் கொள்ளுதல் வேண்டும் அதாவது (الشيئ كمل أجزائه) ஒரு வஸ்த்தின் பகுதிகளைப் பூரணப்படுத்தினான் என்று கருத்துக் கொள்ளுதல் வேண்டும். அர்ஷுக்கு வெளியே அவன் எதையும் படைக்கவில்லை. அவன் உலகில் படைத்த, படைக்கப்போகின்ற அனைத்தும் இன்னும் மறு உலகில் அவன் படைக்கவுள்ள யாவும் “அர்ஷ்” என்ற வட்டத்திற்குட்பட்டதேயன்றி அதற்குப் புறம்பானதல்ல. “அர்ஷ்” என்பது சர்வ படைப்புக்களையும் உள்ளடக்கிய ஒன்றாகும். உண்மை இவ்வாறிருக்க “அர்ஷ்” என்ற இடத்தில் அல்லாஹ் இருப்பதென்பது எங்ஙனம் சாத்தியம்?

♦ وَلَمَّا بَلَغَ اَشُدَّهٗ وَاسْتَوٰٓى اٰتَيْنٰهُ حُكْمًا وَّعِلْمًا‌ وَكَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَ

இன்னும், அவர் வாலிபமடைந்து, (பக்குவ) நிலை பெற்றபோது, நாம் அவருக்கு ஞானத்தையும் கல்வியையும் அளித்தோம் - இவ்வாறே நல்லோருக்கு நாம் (நற்) கூலி வழங்குகிறோம். (அல்குர்ஆன் : 28:14)

இங்கு இஸ்தவா என்ற சொல் கையாளப்பட்டுள்ளது. அவர் வாலிப்தை அடைந்து வாலிபம் பூரணமானபோது – அவர் நிறைவு நிலைபெற்றபோது. ஆகவே இவ்வசனத்தில் வந்துள்ள “இஸ்தவா” என்ற சொல்லுக்கு அவர் நிறைவு நிலையைப் பெற்றபோது- அவரின் வாலிபம் பூரணமான போது என்பது பொருள். இந்த இடத்தில் அதற்கு "இருந்தான், அமர்ந்தான், தரிபட்டான்" என்று பொருள் கொள்ள முடியாது. அவ்வாறு பொருள் கொண்டால் திருவசனத்தில் கருத்து அமையாது, பொருந்தாது. இச்சொல்லுக்கு இருந்தான்- அமர்ந்தான் தரிபட்டான் என்று பொருள் கூறமுடியாது. 

ஆகவே “இஸ்தவா” என்ற சொல்லுக்கு அமர்ந்தான் என்ற அர்த்தம் கொண்டு மேற்கண்ட திருவசனத்திற்கு அல்லாஹ் அர்ஷில் அமர்ந்தான் என்று பொருள் கூறும் வஹ்ஹாபிகள் இந்த இடத்தில் அதே சொல்லுக்கு இவ்வாறு பொருள் எழுதியிருப்பது வியப்பான ஒன்றாகும். இந்த இடத்தில் அந்தச் சொல்லுக்கு அமர்ந்தான் என்று பொருள் கொள்வது பிழையென்பது அவர்களுக்குத் தெரிந்ததே இங்கு இவ்வாறு பொருள் கொள்ளும் வஹ்ஹாபிகள் (அல்குர்ஆன் 20: 5) என்ற வசனத்தில் வந்துள்ள “இஸ்தவா” என்ற சொல்லுக்கு மட்டும் அமர்ந்தான் என்று பொருள் வைத்துக்கொண்டு அல்லாஹ் அர்ஷில் அமர்ந்துள்ளான் என்று குரங்குப்பிடி பிடிப்பதேனோ!

♦ قد اســـتــوى بشـر على العراق

கவிதை : “பிஷ்ர்” என்பவர் இறாக் நாட்டின் மீது ஆட்சி அதிகாரம் பெற்றார்.என்றுதான் அர்த்தம் கொள்ள வேண்டுமே அன்றி “அவர் இறாக் நாட்டில் அமர்ந்தார்” என்று விளக்கம் கொள்ளக் கூடாது. மேற்கண்டவாறு அஷ்ஷெய்கு ஸபிய்யுத்தீன் இப்னு அபில் மன்ஸூர் றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் நூலில் கூறியுள்ளார்கள். (அல்யவாகீத் வல் ஜவாஹிர் பாகம் -01 பக்கம் - 89)

♦ كَزَرْعٍ اَخْرَجَ شَطْئَـهٗ فَاٰزَرَهٗ فَاسْتَغْلَظَ فَاسْتَوٰى عَلٰى سُوْقِه

“ஒரு பயிரைப் போன்றதாகும். அது தன் முளையை வெளிப்படுத்திப் பின்னர் அதைப் பலப்படுத்துகின்றது. பின்னர் அது கனமாகின்றது. பின்னர் அது தன் தண்டின் மீது பூரணமாகின்றது.” (அல்குர்ஆன் 48: 29) இவ்வசனத்தில் வந்துள்ள “இஸ்தவா” என்ற சொல்லுக்கு பூரணமாகின்றது என்று பொருள் கொள்ள வேண்டும். இச்சொல்லுக்கு அமர்ந்தான் என்று பொருள் கொண்டு அல்லாஹ் அர்ஷில் இருக்கின்றான் என்று கருத்துக்கூறும் வஹ்ஹாபிகள் கூட தமது திருகுர்ஆன் மொழிபெயர்ப்பில் நிமிர்ந்து நிற்கின்றது என்றே மொழிபெயர்ப்புச் செய்துள்ளார்கள். ஓர் இடத்தில் இச்சொல்லுக்கு அமர்ந்தான் என்றும், இன்னோர் இடத்தில் நிமிர்ந்து நின்றது என்றும் பொருள் கூறும் வஹ்ஹாபிகளையா! நீங்கள் பின்பற்ற தேர்ந்தெடுத்துள்ளீர்கள்? ஒரு கனம் சிந்தியுங்கள் தெளிவு கிடைக்கும்.

ஆகவே சடவாதிகளோ உண்மை புரியாமல் மேற்கண்ட (அல்லாஹ் அர்ஷில் அமர்ந்துள்ளான்) என்ற வசனத்தை ஆதாரமாகக் கொண்டு அல்லாவுக்கு சடமிருப்பதாகக் கூறி அவனை சடத்தில் கட்டுப்படுத்தி வழி தவறிவிட்டார்கள். இது தொடர்பாக ஒருவர் மற்றவரை “காபிர்” என்றும், வழிகேடன் என்றும் சொல்லத் தொடங்கிவிட்டார்கள்.

♦ اِنَّ رَبَّكُمُ اللّٰهُ الَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَ الْاَرْضَ فِىْ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِ

நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான். (அல்குர்ஆன் 7: 54)

♦ اِنَّ رَبَّكُمُ اللّٰهُ الَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ فِىْ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِ‌

நிச்சயமாக உங்கள் இறைவன் அல்லாஹ்வே, அவன் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் - பின்னர் தன் ஆட்சியை அர்ஷின் மீது அமைத்தான். (அல்குர்ஆன் 10:3)

ஆகவே நிச்சயமாக உங்களின் “றப்பு” இரட்சகன் அல்லாஹ் ஆவான். அவனே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்து பின்னர் அர்ஷின் மீது பூரணப்படுத்தினான்- ஆட்சி அதிகாரமுள்ளவனாவான் என்றுதான் பொருள் கூறவேண்டும்.

♦ அஷ்ஷெய்கு அபூதாஹிர் அல்கஸ்வீனீ (றஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களின் “ஸிறாஜுல்உகூல்” என்ற நூல் மூன்றாம் பாடத்தில் “இஸ்திவாஉ” தொடர்பாக எழுப்பட்டுள்ள கருத்துக்களை இங்கே எழுதுகின்றேன். அல்லாஹ் பூமியிலிருந்து பூமியில் எங்களைப் படைத்தான். எங்களுக்கு மேல் ஆகாயத்தைப் படைத்தான் ஆகாயத்துக்கு மேல் தட்டை தட்டையாக ஆகாயங்களைப் படைத்தான். வானங்களுக்கு மேல் “குர்ஸி” என்ற இடத்தைப் படைத்தான் அதற்கு மேல் படைப்புக்களில் மிகவும் வலுப்பமான “அர்ஷ்” என்ற இடத்தைப் படைத்தான். அதற்கு மேல் எதையும் படைத்தாக திருக்குர்ஆனிலோ, நபீ மொழிகளிலோ காணப்படவில்லை.

♦  இமாம் அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியுள்ளார்கள்.

(إنَّ اللّٰه خَلَقَ الْعَرْشَ إظْهَارًا لِقُدْرَتِهِ وَلَمْ يَتَّخِذْهُ مَكَانًا لِذَاتِهِ)

நிச்சயமாக அல்லாஹ் அர்ஷை தனது வல்லமையை வெளிப்படுத்துவதற்காகவே படைத்துள்ளான். அவனுக்கு அதனை இடமாக அதாவது இருப்பதற்கு இடமாக எடுத்துக் கொள்வதற்கு அல்ல.

♣  தினமும் இரவின் பிற்பகுதியில் இறைவன் முன்வானத்திற்கு இறங்குகின்றானா?

ஒவ்வொரு இரவும் பிந்தின மூன்றாம் பகுதியில் எங்களுடைய “றப்பு” - அல்லாஹ் - முன்வானத்திற்கு இறங்கி எவர் என்னை அழைக்கின்றாரோ அவருக்கு நான் பதில் சொல்வேன். எவர் என்னிடம் கேட்கின்றாரோ அவருக்கு நான் கொடுப்பேன். எவர் என்னிடம் பாவ மன்னிப்புக் கேட்கின்றாரோ அவரின் பாவத்தை மன்னிப்பேன் என்று கூறுவதாக நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்.


​​அறிவிப்பு: அபூஹுறைறா றழியல்லாஹு அன்ஹு அவர்கள்.

​நூல்கள்: புகாரீ - 1145 - 7494, முஸ்லிம் - 168 - 758, ஸுனன் இப்னுமாஜா - 1366, ஸுனன் அபீ தாவூத் - 1315, ஸுனனுத் திர்மிதி -4045

இந்த நபீமொழியில் ஆய்வு செய்யப்பட வேண்டிய பல விடயங்கள் உள்ளன. அவற்றில் இத்தலைப்புக்குப் பொருத்தமான விடயத்தை மட்டும் இங்கு எழுதுகின்றேன்.(ينزل ربنا إلى السماء الدنيا) “எங்களுடைய “றப்பு” இரட்சகன் முன்வானத்திற்கு இறங்குகின்றான்” இந்த வசனத்தில் (ينزر) “யன்ஸிலு” என்று ஒரு சொல் வந்துள்ளது. இதற்கு இறங்குகின்றான் என்று பொருள் கொண்டு ஒருவன் மேல் மாடியில் இருந்து கீழ் மாடிக்கு இறங்குவது போலும், மலையில் இருந்து பூமிக்கு இறங்குவது போலும் அல்லாஹ் “அர்ஷில்” இருந்து முன்வானத்திற்கு இறங்குகின்றான் என்று வழிகெட்ட வஹாபிகள் விளக்கம் கூறுகின்றார்கள்.

இறங்குதல் என்றால் என்ன? என்பதற்கு வழிகெட்ட வஹ்ஹாபிகள் சொல்வது போன்ற இறங்குதலா? அல்லது வேறு வகை இறங்குதலா? என்று ஆய்வு செய்வோம். வஹ்ஹாபிகள் சொல்வது போன்ற இறங்குதல் என்றுதான் இவர்களின் குருமார்களும் சொல்லியுள்ளார்கள். ஒரு சமயம் சிரியா நாட்டுப் பள்ளிவாயல் ஒன்றில் வெள்ளிக்கிழமை மிம்பரில் இந்த நபீமொழிக்கு விளக்கம் நிகழ்த்திக் கொண்டிருந்த வழிகெட்ட இப்னுத் தைமிய்யஹ் இவ்வாறுதான் அல்லாஹ் இறங்குகிறான் என்று சொன்னவராக தான் நின்றிருந்த மிம்பர் படிகளில் இறங்கியும் காட்டினார். பள்ளிவாயலில் கூச்சல் எழும்பியது. இறுதியில் இப்னுத் தைமிய்யஹ் சிறையில் அடைக்கப்பட்டார். நமது நாட்டைப் பொறுத்தவரை வஹ்ஹாபிகள் எவரும் மிம்பரில் இருந்து இதுவரை இறங்கிக் காட்டவில்லை.

அந்த அடிப்படையில் உதாரணமாக கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் சண்டை. காழீ நீதிமன்றத்தில் வழக்கு. காழீ - நீதிவானின் - நீதிமன்றம் அவரின் வீட்டு மாடியில் இருந்தது. நீதிபதி முன்னிலையில் கணவனும் மனைவியும் நிறுத்தப்பட்டு விசாரணை நடைபெறுகின்றது. நீதிபதி இருவரையும் இணைத்து வைக்க கடும் முயற்சி செய்தார். அவ்விருவரில் ஒவ்வொருவரும் தனது பிடியிலிருந்து மாறவில்லை. நீதிவான் “நீங்கள் கொஞ்சம் இறங்குங்கள் என்று கணவனுக்கும், அதேபோல் நீங்களும் கொஞ்சம் இறங்குங்கள் என்று மனைவிக்கும் சொன்னார். அக்கணமே அவ்விருவரும் மாடியில் இருந்து கீழே இறங்கிவிட்டார்கள்.

சலம் கழிக்கப் போய் விட்டார்கள் போலும் என்றெண்ணி சற்று நேரம் பொறுமை செய்து எதிர் பார்த்திருந்தார் நீதிவான். எவரும் வரவில்லை. ஆத்திரமடைந்த நீதிவான் இருவரையும் கூட்டுக்குள் தள்ளி கம்பி எண்ணச் சொன்னார். நீதிவான் அவ்விருவருக்கும் இறங்குமாறு சொன்னது அவர்கள் தமது பிடியிலேயே நிற்காமல் ஒவ்வொருவரும் சற்று விட்டுக் கொடுக்க வேண்டும் என்பதைக் கருத்திற் கொண்டேயாகும். நீதிவானின் இறங்குதல் என்ற சொல்லுக்கான உரிய பொருளை உரிய முறைப்படி விளங்கத் தவறியதால் இருவரும் சிறை வாசம் செய்ய நேரிட்டது. இவ்வாறுதான் இறங்குதல் என்ற சொல்லுக்குரிய சரியான பொருளை விளங்காமல் தடுமாறும் வழிகெட்ட வஹ்ஹாபிகளுமாவார்கள்.

அல்லாஹ் ஒருவனின் “தவ்பா” பாவமன்னிப்புக் கோருவதை ஏற்றுக் கொள்வதாயின் அதற்குப் பல நிபந்தனைகள் உள்ளன. அவற்றில் சில,அவன் “ஹலால்” உணவு உட்கொள்ள வேண்டும். செய்த பாவத்தை நினைத்து வருந்த வேண்டும். அந்தப் பாவத்தை மீண்டும் செய்வதில்லை என்று உறுதி கொள்ள வேண்டும். இவை பொதுவான விதிகளாகும். அல்லாஹ் குறித்த விதிகள் எதுவுமின்றி பொது மன்னிப்பு வழங்கும் போது அவன் இறங்கிவிட்டு ரஹ்மத் செய்கின்றான் என்று சொல்லும் பாணியில் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் (ينزل ربنا) எங்கள் “றப்பு” இறங்குகின்றான் என்ற வசனம் அமைந்துள்ளதை அறியாத வஹ்ஹாபிகள் அல்லாஹ்வுக்கு கால் உண்டு என்றும், மனிதன் படிகளில் இறங்குவதுபோல் அவனும் இறங்குகிறான் என்றும் கற்பனை செய்து கொண்டார்கள்.

இதனால் இவர்கள் நரகம் என்ற சிறையில் கம்பி எண்ணுவதற்கு தம்மை தயார் செய்து கொண்டார்கள். கணவனும், மனைவியும் தமது பிடியில் இருந்து இறங்கி சமாதானமாக வேண்டும் என்பதை கருத்திற் கொண்டே இறங்குங்கள் என்று இருவருக்கும் நீதிவான் சொன்னார். இது கருத்தில் இறங்குவதையே குறிக்கும்.


​​

♣  அல்லாஹ் எங்கே இருக்கின்றான்?

இன்னும் வானங்களிலும் பூமியிலும் அவனே (ஏக நாயகனாகிய) அல்லாஹ் இருக்கிறான். (அல்குர்ஆன் : 6:3)

♦ (யாவற்றுக்கும்) முந்தியவனும் அவனே, பிந்தியவனும் அவனே, பகிரங்கமானவனும் அவனே, அந்தரங்கமானவனும் அவனே, மேலும், அவன் அனைத்துப் பொருள்களையும் நன்கறிந்தவன். (அல்குர்ஆன் : 57:3)

♦ குகையில் இருவரில் ஒருவராக இருந்த போது, (நம் தூதர்) தம் தோழரிடம், “கவலைப்படாதீர்கள், நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்” என்று கூறினார். (அல்குர்ஆன் : 9:40)

♦  (நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால், “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன் என்று கூறுவீராக.

(அல்குர்ஆன் : 2:186)

♦ நீங்கள் எங்கிருந்து போதிலும் அவன் உங்களுடனே இருக்கிறான் - அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்வதை உற்று நோக்கியவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் : 57:4)

♦(முஃமின்களே! போரில்) நீங்கள் தளர்ச்சியடைந்து, தைரியமிழந்து சமாதானத்தைக் கோராதீர்கள், (ஏனென்றால்) நீங்கள் தாம் மேலோங்குபவர்கள், அல்லாஹ் உங்களுடனேயே இருக்கின்றான் - மேலும், அவன் உங்கள் (நற்) செய்கைகளை உங்களுக்கு (ஒரு போதும்) குறைத்து விடமாட்டான்.  (அல்குர்ஆன் : 47:35)

♦கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே (சொந்தம்). நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன், எல்லாம் அறிந்தவன். (அல்குர்ஆன் : 2:115)

♦ மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம், அன்றியும், (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம். (அல்குர்ஆன் : 50:16)

♦ (பத்ரு போரில்) எதிரிகளை வெட்டியவர்கள் நீங்கள் அல்ல - அல்லாஹ் தான் அவர்களை வெட்டினான், (பகைவர்கள் மீது மண்ணை) நீர் எறிந்தபோது அதனை நீர் எறியவில்லை, அல்லாஹ்தான் எறிந்தான், முஃமின்களை அழகான முறையில் சோதிப்பதற்காகவே அல்லாஹ் இவ்வாறு செய்தான், நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவி ஏற்பவனாகவும், (எல்லாம்) அறிபவனாகவும் இருக்கின்றான்.

(அல்குர்ஆன் : 8:17)

♦ அன்றியும், எவர்கள் காஃபிராக இருக்கிறார்களோ, அவர்களுடைய செயல்கள் பாலைவனத்தில் (தோற்றமளிக்கும்) கானல் நீரைப் போலாகும், தாகித்தவன் அதைத் தண்ணீரென்றே எண்ணுகிறான் - (எது வரையெனில்) அதற்கு (அருகில்) அவன் வரும் பொழுது ஒரு பொருளையும் (அங்கே) காணமாட்டானே (அது வரை), ஆனால், அங்கு அவன் அல்லாஹ் (அவனுக்கு விதித்திருக்கும் முடி)வை(யே) காண்கின்றான், (அதன் படி அல்லாஹ்) அவன் கணக்கைத் தீர்க்கிறான், மேலும், அல்லாஹ் கணக்குத் தீர்ப்பதில் துரிதமானவன்.

(அல்குர்ஆன் : 24:39)

எனவே (அல்லாஹ் எல்லாமாயும் உள்ளான்) “அல்லாஹ் எல்லா வஸ்த்துக்களாயும் “தஜல்லீ” வெளியாகியுள்ளான்” என்ற கொள்கை “தவ்ஹீத்” ஏகத்துவம் என்றும், “வஹ்ததுல் வுஜூத்” மெய்ப் பொருள் ஒன்று என்றும் சொல்லப்படுகின்றது. இக்கொள்கை எந்த வகையிலும் திருக்குர்ஆனுக்கோ, திரு நபியின் நிறைமொழிகளுக்கோ ஒரு மண்ணளவும் முரணானதல்ல. அதேபோல் “ஸுன்னத் வல் ஜமாஅத்" கொள்கையில் பின்பற்றுகின்ற இமாம் அபுல் ஹஸன் அல் அஷ்அரீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் “அகீதா” கொள்கைக்கும் முரணானதல்ல.

இக்கொள்கையே (روح الإسلام) இஸ்லாமின் உயிர் என்று அறிஞர்களால் சொல்லப்படுகிறது. இக்கொள்கையே றஸூல்மார், நபீமார், வலீமார், மஷாயிகுமார் சொன்ன கொள்கை. இக்கொள்கையே சரியான கொள்கை என்பதற்கு திருக்குர்ஆனிலும், நபீமொழிகளிலும் இறை ஞானிகளான ஆரிபீன்களின் நூல்களிலும் பரந்து விரிந்த ஆதாரங்கள் உள்ளன.


​​இப்பிரசுரத்தின் மூலம் எனது நோக்கம் என்னவெனில் அல்லாஹ் அர்ஷில் இருக்கின்றான், அவன் தினமும் இரவின் பிற்பகுதியில் முன்வானத்திற்கு இறங்குகின்றான் என்ற வழிகெட்ட வஹ்ஹாபிகளின் கொள்கையை மறுப்பதும், மற்றும் “ஹுலூல் - இத்திஹாத்” கொள்கையை மறுப்பதுமேயாகும்.

அல்லாஹ் எங்கே உள்ளான் என்று சரியான கொள்கை என்று நான் இப்பிரசுரத்தில் குறிப்பிடும் “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் (அல்லாஹ் எல்லாமாயும் உள்ளான்) அல்லாஹ் எல்லா வஸ்த்துக்களாயும் “தஜல்லீ” வெளியாகியுள்ளான்” என்ற கொள்கை “தவ்ஹீத்” இஸ்லாமிய, வடித்தெடுக்கப்பட்ட இறைஞானம்தான் என்பதை புரிந்து கொள்ள எல்லாம் வல்ல கிருபையாளன் நல்லுதவி புரிவானாக! ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.