MAIL OF ISLAM

Knowledge & Wisdom​அல்லாஹ்வின் முதல் படைப்பு எது?

​ 

​ எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.


"அல்லாஹ்வின் முதல் படைப்பு முத்து நபி ﷺ அவர்களின் பேரொளியேதான். அவ்வொளியில் இருந்துதான் வையகமே பிறந்தது"


​​

♣ இது பற்றி வழிகெட்ட வஹ்ஹாபிகளின் நிலைப்பாடு :-

மனத்தூய்மையும், மார்க்க ஞானமும் இல்லாத வழிகெட்ட வஹ்ஹாபிகள் “அல்லாஹ்வின் முதல் படைப்பு கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேரொளி” என்பதை மறுத்துக் கொண்டு, அல்லாஹ்வின் முதல் படைப்பு தண்ணீர்தான் முதன் முதலில் படைக்கப்பட்டது" என்று கூறுகிறார்கள்.


அதேபோன்று ஒரு சில ​​போலிகள் சுன்னத் வல் ஜமாஅத் என்ற பெயரிலும், வெளிநாட்டில் இருந்து வரும் பணத்திற்காக  இறைவனின் முதல் படைப்பு "காற்று" என்றும் "அர்ஷ்" என்றும், "கலம் எனும் எழுது கோல்" என்றும் கூறி  உண்மை சுன்னத் வல் ஜமாஅத் முஸ்லிம்கள் மத்தியில் ஊடுருவி வஹ்ஹாபிஸத்தை பரப்பி கொண்டு திரிகிறார்கள். இவ்வாறு இவர்கள் கூறுவது குர்ஆன் ஷரீப், ஹதீஸ்கள், இமாம்களின் கருத்துகளுக்கு முரணானதாகும். 


​​ஆகவே இஸ்லாத்துக்கு முரணான கருத்துக்களைக் கூறி பொது மக்களுக்கிடையில் குழப்பத்தையும் மனக் கசப்பையும் ஏற்படுத்தி வருகின்றார்கள். அந்த அடிப்படையில் விரல் விட்டெண்ணக்கூடிய ஒரு சில போலிகள் அல்லாஹ்வின் முதல் படைப்பு தண்ணீர் என்று கூச்சிலிட்டாலும் அக்கூச்சல் பொதுமக்கள் செவியினுட் புகவில்லை.

ஆயினும் இன்று அவ்வாறு கூச்சலிடுவோர் தமது வழிகேட்டை வேரூன்றச் செய்வதற்காக நாய்க்கு மலத்தைக் காட்டி அதை வசப்படுத்துவது போலும் பேய்க்கு சாம்பிராணி போட்டு அதை ஆட வைப்பது போலும் காடையர்களுக்கு ரூபாய்களைக் காட்டித் தமக்கு ஆதரவைத் தேடி வருகின்றார்கள். இவர்கள் காசால் காடயர்களை வசப்படுத்தி கைக்குள் வைத்துக்கொண்டிருப்பதால் அப்பாவி ஏழைகளும், நல்லவர்களும், இளைஞர்கள் சிலரும், சுன்னத் வல் ஜமாஅத் என்ற பெயரில் உள்ள சில மத குருமார்களும் அவர்களின் வழிகேட்டுக்கு ஆமாசாமி போட வேண்டியதாயுள்ளது.

இவ்வாறு கூச்சலிடுவோர் சத்தியத்தை நிலை நாட்ட வேண்டுமென்பதற்காக அவ்வாறு கூச்சலிடவில்லை. மாறாக தாம் அவ்வாறு கூச்சலிடாவிட்டால். தமது தலைவர்களான ஷாத்தான்களிடமிருந்து தமக்கு மாதாந்தம் வந்து சேரும் வருமானம் தடைபட்டு விடுமென்பதற்காகவும் தாம் தொடர்ந்தும் சொகுசான வாழ்வை அனுபவித்து வரவேண்டுமென்பதற்காகவுமே அவ்வாறு கூச்சலிடுகின்றார்கள். இதுவே உண்மை.


​​எனவே கூலிக்கும் மாரடிக்கும் கூட்டத்தவர்கள் பற்றி எச்சரிக்கையாக இருந்து கொள்ளுமாறு பொது மக்களை கேட்டுக் கொள்கின்றோம்.


​​சத்தியத்தில் நிலைத்திருந்தால் ரியாலும், தீனாரும், திர்ஹமும் காலடிக்குத் தானாக வரும். அல்லாஹ் எல்லா வல்லமையும் உள்ளவனே.


​வையகக் காரணி, அகிலத்தின் அருட்பிளம்பு நபிகள் கோமான் ஈருலக இரட்சகர் ஏந்தல் நபி முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நூராகவும், பஷராகவும் இருக்கின்றார்கள். அத்துடன் இறைவனின் முதல் படைப்பு என்றும், அல்லாஹுத்தஆலா அவர்களின் ஒளியையே முதலில் படைத்தான், இந்த ஒளியிலிருந்தே அனைத்துப் படைப்பினங்களையும் வெளியாக்கினான் என்றும், அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் நம்பிக்கையாகும்.


​​இந்த நம்பிக்கை அல் குர்ஆன், ஹதீஸ் மற்றும் சத்திய இமாம்களின் இஜ்மாவின் அடிப்படையில் அமைந்த ஒன்று. மேலும் ஸஹாபாக்கள் காலம் முதல் இன்று வரை இக்கருத்து அறிஞர்களால் உரைக்கப்பட்டும், எழுதப்பட்டும் வந்துள்ளது. நபிகள் நாயகத்தின் வரலாற்று நூற்களிலும், ஹதீதுப் பெரு நூற்களிலும் திருமறை விரிவுரைகளிலும், மௌலிது நூற்களிலும் இக்கருத்து முக்கியத்துவம் கொடுத்து கூறப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரங்களை நிறுவியுள்ளோம். எனவே வழிகெட்ட வஹாபிகள் தவரான வாதங்களுக்கு தக்க பதில்களோடு அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் இந்நம்பிக்கைக்கான ஆதாரங்களையும் பார்ப்போம். கவனமாகப் படியுங்கள்! உண்மையை தெளிவீர்கள்!


​​

♣ வஹ்ஹாபிகளின் தவரான வாதங்களுக்கு தக்க பதில்கள்

1) உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா? (அல்குர்ஆன் : 21:30)

2) மேலும், எல்லா உயிர்ப் பிராணிகளையும் அல்லாஹ் நீரிலிருந்து படைத்துள்ளான் (அல்குர்ஆன் 24 : 45)

விளக்கம் :-

இவ்விரு வசனத்தையும் வைத்துக் கொண்டு அல்லாஹ்வின் முதல் படைப்பு தண்ணீர்தான் ஏனெனில் உயிர் உள்ள அனைத்தும் என்று வரும் போது கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் இவ்வசனம் உள்வாங்கும். எனவே நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை படைக்க முன்பே இறைவன் தண்ணீரை படைத்து விட்டான் என்று வாதிடுவது குர்ஆன், ஹதீஸ்களை சரியான முறையில் ஆய்வு செய்யாததே அடிப்படை காரணமாகும்.


​​இவர்களின் வாதத்தின் படி மேலே கூறப்பட்ட இவ்விரு (21: 30, 24: 45) வசனத்தில் அதாவது அனைத்து உயிர் உள்ளவைகளையும் இறைவன் தண்ணீரைக் கொண்டுதான் படைத்தான் ஆகவே தண்ணீர் தான் அல்லாஹ்வின் முதல் படைப்பு என்ற தவரான வாதம் பின்வறும் பல வசனங்கள் மூலம் முறியடிக்கப் படுகின்றது.

1) (அதற்கு) முன்னர் ஜான்னை (ஜின்களின் மூல பிதாவை) கடிய சூடுள்ள நெருப்பிலிருந்து நாம் படைத்தோம். (அல்குர்ஆன் : 15:27)

2) ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களைப் பற்றி அல்குர்ஆனில் "இன்னும் நீர் களிமண்ணினால் என் உத்தரவைக் கொண்டு பறவை வடிவத்தைப் போலுண்டாக்கி அதில் நீர் ஊதியபோது அது என் உத்தரவைக் கொண்டு பறவையாகியதையும், இன்னும் என் உத்தரவைக் கொண்டு பிறவிக் குருடனையும், வெண் குஷ்டக்காரனையும் சுகப்படுத்தியதையும், (நினைத்துப் பாரும்); இறந்தோரை என் உத்தரவைக் கொண்டு (உயிர்ப்பித்துக் கல்லறைகளிலிருந்து) வெளிப்படுத்தியதையும் (நினைத்துப் பாரும்) (அல்குர்ஆன் 5: 110)

3) அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே, அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப் பின் “குன்” (ஆகுக) எனக் கூறினான், அவர் (மனிதர்) ஆகிவிட்டார். (அல்குர்ஆன் : 3:59)

4) “நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?” என்று அல்லாஹ் கேட்டான், “நான் அவரை (ஆதமை)விட மேலானவன் - என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்” என்று (இப்லீஸ் பதில்) கூறினான். (அல்குர்ஆன் : 7:12)

மேலே கூறப்பட்ட நான்கு திருவசனங்களிலும் அதாவது நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்), நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்), இப்லீஸ் ஆகிய அனைவரும் உயிர் உள்ள படைப்புகளாகும். அந்த அடிப்படையில் வழிகெட்ட வஹ்ஹாபிகள் கூறுவது போன்று இவர்கள் அனைவரையும் இறைவன் தண்ணீரைக் கொண்டு படைத்தானா? இல்லை,, மாறாக நபி ஆதம் அலைஹி ஸலாம், நபி ஈஸா அலைஹி வஸல்லம் அவர்களை இறைவன் மண்ணால் படைத்தான். இப்லீஸை நெருப்பால் படைத்தான் ஆகவே உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் (அல்குர்ஆன் : 21:30) மேலும், எல்லா உயிர்ப் பிராணிகளையும் அல்லாஹ் நீரிலிருந்து படைத்துள்ளான் (அல்குர்ஆன் 24 : 45)


​​இவ்வசனத்தின் எதார்த்தம், விளக்கங்களை வஹ்ஹாபிகள் புரிந்து கொள்ளவில்லை, இவ்வசனத்தில் வந்துள்ள "தண்ணீர்" என்பது 'நுத்பாf எனும் இந்திரிய துளியைக்' குறிக்கின்றது. அதாவது அனைத்து உயிர் உள்ளவைகளையும் இந்திரிய துளியிலிருந்து இறைவன் படைத்தான் என்றுதான் பொருள் அர்த்தம் வைக்க வேண்டும் என்பதை இமாம்கள் பல தப்ஸீர் நூல்களில் குறிப்பிட்டுள்ளார்கள். (பார்க்க,, நூல்: தப்ஸீர் இப்னு அப்பாஸ், தப்ஸீர் அர்ராஸி)


​​

♦ மேலும், அவன்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் அவனுடைய அர்ஷு நீரின் மேல் இருந்தது.

​(அல்குர்ஆன் : 11:7)

இவ்வசனத்தில் அர்ஷ் தான் முதன் முதலில் படைக்கப்பட்டது என்று வாதிடுபவர்கள் அதாவது நீரின் மேலே அர்ஷ் இருப்பதாக இருந்தால் நீருக்கு முதல அர்ஷ்தான் முதலில் படைக்கப்பட்டது என ஆதாரம் எடுக்கின்றனர், ஆகவே இவ்வசனத்திற்க்கு இமாம் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது, அப்படியானால் அந்த நீர் எதன் மீது இருந்தது? அதற்கு அவர்கள் காற்றின் மீது நீர் இருந்தது என பதிலளித்தார்கள். எனவே நீரின் முன்பே காற்று படைக்கப்பட்டது என இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் (பார்க்க,, நூல்: தப்ஸீர் இப்னு அப்பாஸ், இமாம் பைஹகீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் 'அல்அஸ்மாஉ வஸ்ஸிபாதி' என்ற நூலிலும் காற்றின் மீது நீர் இருந்தது என்று எழுதியுள்ளார்கள்)

♦ அல்லாஹ் படைத்த படைப்பினங்களில் முதலாவதாகிறது "கலம் எனும் எழுது கோலாகும்". என நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல் திர்மிதி)

விளக்கம் :-

சுருக்கமாக கூறுகிறேன் அந்த அந்த வஸ்துக்களை ஜின்ஸ் எனும் இணத்தை கவனித்து கலமை படைக்க முன்னே அர்ஷ் படைக்கப்பட்டது, அர்ஷ் படைக்கப்பட்ட முன்பே தண்ணீர் படைக்கப்பட்டது, தண்ணீர் படைக்கப்பட்ட முன்பே காற்று படைக்கப்பட்டது, காற்று படைக்கப்பட்ட முன்பே முதன் முதலில் அல்லாஹ்வின் தூதர் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஒளி படைக்கப்பட்டதே எதார்த்தமாகும்.

இன்னும் கொஞ்சம் விரிவான சொல்வதாக இருந்தால் இமாம் கஸ்தலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள், இமாம் முல்லா அலிகாரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்: அல்லாஹ்வின் முதல் படைப்பு சம்பந்தமான பதிவு செய்யப்பட்ட சகல ஹதீஸ்களையும் உள்வாங்கி அழகிய ஒரு விளக்கத்தை எழுதியுள்ளார்கள்: அல்லாஹ்வை தவிர எந்த படைப்பும் இருக்கவில்லை, அவன் மாத்திரம் தான் தனித்திருந்தான். அதன் பிறகு அவனின் (அல்லாஹ்வின்) நூரிலிருந்து நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நூரை தான் பொதுவாக ஹகீகத் எனும் எதார்த்தத்தில் முதல் முதலில் படைத்தான், அதற்கு பிறகுதான் இறைவன் தண்ணீரை படைத்தான் அதுவும் ஆரம்ப படைப்புதான் அர்ஷ்க்கு முதல் தண்ணீர் படைக்கப்பட்டது என்பதை கவணித்து, அர்ஷும் முதன்மையான படைப்புதான் கலமுக்கு முதல் படைக்கப்பட்டது என்பதை கவணித்து, கலமும் முதன்மையான படைப்புதான் ஏனைய படைப்புகளை கவனித்து என்று கூறியுள்ளார்கள்.


​​

♣  அல்லாஹ்வின் முதல் படைப்பு பெருமானார் ﷺ அவர்களின் பேரொளியேதான் என்பதற்கு குர்ஆனிலிருந்து ஆதாரங்கள்

“அவனுக்கே யாதோர் இணையுமில்லை - இதைக் கொண்டே நான் ஏவப்பட்டுள்ளேன் - (அவனுக்கு) வழிப்பட்டவர்களில் - முஸ்லிம்களில் - நான் முதன்மையானவன் (என்றும் கூறும்). (அல்குர்ஆன் : 6:163)


♦ “அன்றியும் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களில்) முஸ்லிம்களில் முதலாவதாக இருக்குமாறும் நான் ஏவப்பட்டுள்ளேன்” (என்றும் நீர் கூறுவீராக). (அல்குர்ஆன் : 39:12)

♦(நபியே!) நீர் கூறும்: “அர் ரஹ்மானுக்கு ஒரு சந்ததி இருந்திருக்குமானால், (அதை) வணங்குவோரில் நானே முதன்மையானவனாக இருந்திருப்பேன்!”  (அல்குர்ஆன் : 43:81)

விளக்கம் :-

வணங்குவோரில் நானே முதன்மையானவன் என்று மேலே உள்ள வசனத்தின் மூலமாக கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள். ஆகவே வணக்கம் என்று கூறும் போது தஸ்பீஹ், திக்ர் அனைத்தும் வணக்கம் என்பதில் உள்வாங்கப்படும். அந்த அடிப்படையில் வானம் பூமியில் உள்ள அனைத்து படைப்பினங்களும் அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்கின்றது "வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வைத் தஸ்பீஹு (துதி) செய்துகொண்டிருக்கின்றன, (அவன்தான்) மெய்யான பேரரசன், பரிசுத்தமானவன், யாவரையும் மிகைத்தவன், ஞானம் மிக்கவன்."  (அல்குர்ஆன் : 62:1)

ஆகவே (தண்ணீர்) நீரும் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு அடிபணிகின்றது ஆகவே வழிப்பட்டவர்களில் நான் முதன்மையானவன் என்பதும், வானத்தில் உள்ள அர்ஷும் பூமியில் உள்ள நீர் அடக்கமுள்ள எல்லா படைப்பினங்களும் அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்து வணக்கம் செய்கின்றது எனவே இந்த வணக்கம் செய்யக் கூடிய எல்லா படைப்புகளுக்கும் முன்னால் ஆரம்பமாக வணக்கத்தில் ஈடுபட்டவன் நானே (கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்) என்பதை அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

♦ வேதமுடையவர்களே! உங்களிடம் நிச்சயமாக நம்முடைய ஒரு தூதர் வந்திருக்கிறார். வேதத்தில் நீங்கள் மறைத்துக் கொண்ட பல விஷயங்களை அவர் உங்களுக்குத் தெளிவாக எடுத்துக் காண்பிக்கின்றார். மற்றும் பல விஷயங்களை (அவர் அறிந்திருந்தும் உங்களுக்கு கேவலம் உண்டாகக்கூடாது என்பதற்காக அவைகளைக் கூறாது) விட்டுவிடுகின்றார். நிச்சயமாக, அல்லாஹ்விடமிருந்து ஒளியும் தெளிவுமுள்ள ஒரு வேதம் (இப்போது) உங்களிடம் வந்திருக்கின்றது. (அல்குர்ஆன் 5:15)

விளக்கம் :-

மிகப் பெரும் முபஸ்ஸிரான அல்லாமா அலூஸி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) இந்த ஆயத்திற்கு தப்ஸீர் எழுதுகின்றார்கள்: அண்ணல் ஒளிகளின் பேரொளியாக உள்ளார்கள் (நூருல் அன்வார் ) மேலும் நபியுல் முக்தார் ஆகவும் உள்ளார்கள். (நூல்: ரூஹல் மாஃனி, அல்லாமா அலூஸி ரஹ்மதுல்லாஹி அலைஹி)

இதே போன்று இமாம் ஜலாலுத்தீன் அல் மஹல்லி ரஹ்மதுல்லாஹி அலைஹி, இமாம் ஜலாலுத்தீன் அல் சுயூத்தி ரஹ்மதுல்லாஹி அலைஹி ஆகியோர் தமது 'தப்ஸீர் அல் ஜலாலைனிலும்', இமாம் இப்னு ஜவ்சீ தமது 'ஜாத் அல் மசீர் பில் இல்ம் அத் தப்ஸீர்' நூலிலும், இமாம் அல் ஷிர்பினி ரஹ்மதுல்லாஹி அலைஹி தமது 'தப்ஸீர் சிராஜுல் முனீரிலும்', இமாம் பக்ரூத்தீன் ராஸி ரஹ்மதுல்லாஹி அலைஹி தமது 'தப்ஸீர் அல் கபீரிலும்' இதே கருத்தை முன் மொழிந்துள்ளனர். மேலும் 'அஹ்காம் அல் குர்ஆன்' (பாகம் 6, பக்கம் 118) நூலில் இமாம் குர்தூபி மற்றும் மவர்தி (ரஹ்மதுல்லாஹி அலைஹிமா) ஆகியோர் அரபு இலக்கணத்தின் இமாம் இப்ராஹீம் இப்னு முஹம்மது அல் ஸஜ்ஜாஜ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் இதே கருத்தை உடைய நிலையவர்களாக இருந்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

♦ அவனே முதன்மையானவனும் இறுதியானவனும், அவனே வெளிப்படையானவனும் (மேலானவும்) அவனே அந்தரங்கமானவனும் (ஆவான்) மேலும் அவன் ஒவ்வொன்றையும் (பொருளையும்) நன்கரிந்தவனாவன்" (அல் குர்ஆன் 57 : 3 )

விளக்கம் :-

ஷைக் அப்துல் ஹக் முஹத்திஸ் தஹ்லவி அலைஹி ரஹ்மதுல்லில் ரித்வான் அவர்கள் மதாரிஜுன் நுபுவத் என்ற நூலின் குத்பாவில் குறிப்பிடுகிறார்கள். இந்த இறைவசனம் அல்லாஹ்வினுடைய புகழையும் அத்துடன் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் புகழ் கீதத்தையும் பாடுகின்றதாக அமைந்துள்ளது. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முதன்மையானவராகவும், இறுதியானவராகவும் இருக்கின்றார்கள். எல்லோருக்கும் வெளிப்படையாகவும், அந்தரங்கமாகவும் எல்லாவற்றையும் அறியக்கூடியவராகவும் இருக்கின்றார்கள். இந்த துனியாவிலும், ஆகிரதிலும் ஒவ்வோரிடத்திலும் நபிகளார் முதன்மைபெற்று முன்னோடியாக திகழ்கின்றார்கள்.

முதன்முதலாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் நூர் படைக்கப்பட்டது. "அவ்வலு மா கலக்கல்லாஹு நூரி " உடல் ரீதியாக நம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் தந்தை ஹஸ்ரத் ஆதம் அலைஹி வஸலாம் அவர்கள். "ஹகிகதில்" ஹஸ்ரத் ஆதம் அலைஹி வஸலாம் அவர்களின் தந்தையாக நம் கண்மணி நாயகமாவர்கள்.


​​வெளிப்படையில் செடிகளிலிருந்து பூக்கள் இருந்தாலும். "ஹகிகதில்" பூக்களுக்காக தான் அந்த செடிகள் போன்றதாகும். வெளிப்படையில் என்னை போன்றவரே, "ஹகிகதில்" என்னுடைய அசலே ! உங்கள் புன்சிரிப்பின் நினைவில் என்டேன்றும் இந்த "பஷரே". (அடிமையே) இந்த உலகின் பூந்தோட்டத்தில் நம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "பூ" ஆவர்கள், ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். முதன்முதலாக நம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அனனவருக்கே "நுபுவத்" அருளப்பட்டது.


​​நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள் : "ஆதம் (அலைஹி ஸலாம்) அவர்கள் மண்ணுக்கும் தண்ணீருக்கும் மத்தியில் இருந்த போதே நான் நபியாக இருந்தேன்."ஆதம் அலைஹி ஸலாம் அவர்கள் மண்ணுக்கும், தண்ணீருக்கும் மத்தியில் இருந்துகொண்டிருக்கும் போது, "மீசாக்" உடைய நாளில் "அளஸ்து பி ரப்பிகும்" என்பதன் பதிலில் எல்லாவற்றுக்கும் முதலாக "பலா" கூறியவர்கள் நம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி  வ ஸல்லம் அவர்கள் ஆவார்கள்.

கியாமதுடைய நாளின் போது நம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் "கப்ர்" என்ற அடக்கஸ்தலம் திறக்கப்படும், கியாமதுடைய நாளின் போது நம் நாயகத்திற்கு தான் "சஜ்தா" செய்ய உத்தரவு கிடைக்கும், முதல் நபராக நம் நாயகமே "ஷபா'அத்" என்ற சிபாரிசு செய்வார்கள். "ஷபா'அத்" உடைய கதவு நம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் திருக்கரங்களில் தான் திறக்கப்படும், நம்முடைய நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தான் சொர்கத்தின் கதவையும் திறந்து வைப்பார்கள், நம்முடைய நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தான் சொர்க்கத்தில் முதல் நபராக உள்ளே நுழைவார்கள் பின்னர் எல்லா நபிமார்களும் உள்ளே நுழைவார்கள். பிறகு முதன்மையாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லத்தின் உம்மத் சொர்க்கத்தில் நுழையும் பிறகு மற்ற உம்மதார்கள் சொர்க்கத்தில் நுழைவிக்க படுவார்கள்.

இவ்வாறு ஒவ்வொன்றிலும் முதன்மைதனத்தின் முத்திரை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லத்தின் கிரீடத்தில் உள்ளது. முதன்மை நாள் அதாவது "ஜும்மா" உடைய நாள் நம் நபிகளாருக்கு தான் அருளப்பெற்றது. இவ்வாறு முதன்மையின் வேகத்திற்கும் நாயகமே முன்னிறுத்த படுகின்றார்கள்.

அதுமட்டும் இன்றி இருதியானதிலும் கூட நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முன்னிறுத்த படுகின்றார்கள். "காதமுன் நபியீன்" இறுதி நபி என்ற பட்டமும் நம் நாயகத்திற்கே அருளப்பட்டது. எல்லாவற்றிலும் இறுதியாக நம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லத்திற்கே இறுதி புத்தகம் (குரான் ஷரிப்) அருளப்பட்டது. இறுதிகட்ட "தீன்" முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் "தீன்" ஆனது. கடைசி நாள் அதாவது கியாமத் நாள் வரையிலும் நம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லத்தின் "தீன்" நிலைநிறுத்தபடும்.

♦ நிச்சயமாக அல்லாஹ்விடம் இருந்து பேரொளியும்,தெளிவும் உள்ள ஒரு வேதம் (இப்போது) உங்களிடம் வந்திருக்கிறது. (அல்குர்ஆன் - 5: 15)


​இத்திரு வசனம் “நூர்“ என்ற சொல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையே குறிக்கும். வெளிச்சமில்லாமல் புத்தகத்தை படிக்க முடியாதது போன்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டுதல் இன்றி திருக்குர்ஆனை விளங்க முடியாது.

நூர்“ என்பது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைக் குறிக்கும் என்று தப்ஸீர் ஜலாலைன் விளக்கம் சொல்கிறது. “தப்ஸீர் ஜலாலைன்“ இன் விரிவுரைத் தப்ஸீரான தப்ஸீர் ஸாவியில் “நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை நூர் - ஒளி என்று குறிப்பிடக் காரணம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பார்வைகளை ஒளி பெற செய்கிறார்கள்.


​​மேலும், வெற்றியின் பக்கம் அவற்றுக்கு வழிகாட்டுகிறார்கள். மேலும், புறப்புலன்களால் பார்க்கப்படும் காட்சிக்கும், அகப்புலன்களால் அறியப்படும் அறிவுக்கும், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அஸலாக - மூலமாக விளங்குகின்றார்கள் என்றும் வரைந்துள்ளார்கள்." இதே கருத்தையே தப்ஸீர் பைழாவி, தப்ஸீர் மதாரிக், தப்ஸீர் காஸின் உள்ளிட்ட அநேக தப்ஸீர்கள் கூறுகின்றன. இவற்றுள் தப்ஸீர் ஜலாலைன், தப்ஸீர் ஸாவி, தப்ஸீர் பைழாவி, தப்ஸீர் மதாரிக் ஆகிய தப்ஸீர்கள் அறபு மத்ரஸாக்களின் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருப்பது கூர்ந்து கவனிக்கத்தக்கது.

♦ அல்லாஹ் வானங்கள் பூமியின் பிரகாசமாக இருக்கின்றான். அவனது பிரகாசத்திற்கு உதாரணம் விளக்கு இருக்கும் ஒரு மாடத்திற்கு ஒப்பாகும். அவ்விளக்கு ஒரு பளிங்குக் கிண்ணத்தில் இருக்கின்றது. அந்தக் கிண்ணமோ முத்தாலாகிய ஒரு நட்சத்திரத்தைப்போல் (பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. (அல்குர்ஆன் 24: 35)

இத்திரு வசனத்தில் “நூர்“ என்று சுட்டிக்காட்டப்படும் வாக்கியமும், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையே குறிக்கும். காரணம் அல்லாஹ் ஒப்பு உவமைகளை விட்டும் பரிசுத்தமானவன். ஆனால், இத்திருவசனத்தில் அல்லாஹ்வின் “நூர்“ (ஒளி)க்கு உவமை கூறப்பட்டுள்ளது. அதனால் இங்கு குறிக்கப்படும் நூர் - ஒளி றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையே குறிக்கும்.

♦ நபியே! நிச்சயமாக நாம் உம்மை (மனிதர்களுக்கு) சாட்சியாகவும்,நட்செய்தி கூறுபவராகவும்,அச்சமூட்டி எச்சரிக்கைசெய்பவராகவும் அனுப்பி வைத்திருக்கின்றோம். மேலும் அல்லாஹ்வின் அனுமதியின்படி (ஜனங்களை நீர்) அவன்பால் அழைப்பவராகவும் ஒளி வீசும் (மணி) விளக்காகவும் (இருக்கின்றீர்கள்). (அல்குர்ஆன் - 33 : 45,46)

இத்திரு வசனத்தில் "சிறாஜுன் முனீர்" பிரகாசிக்கும் தீபம் என்று நாயகமவர்களை அல்லாஹ் குறிப்பிடுகின்றான். திருக்குர்ஆனின் மற்றுமொரு இடத்தில் சூரியனையும் “சிறாஜுன் முனீர்“ என்று குறிப்பிட்டுள்ளான். ஒளி என்பது தானும் வெளியாகி ஏனையவற்றையும் வெளியாக்குவதற்கு கூறப்படும். சூரியன் தானும் பிரகாசித்து சந்திரன், நட்சத்திரங்கள், உள்ளிட்ட பல்வேறு கிரகங்களையும், தாரகைகளையும் பிரகாசிக்கச் செய்கின்றது. இவ்வாறு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிரகாசிக்கும் பேரொளியாக இருப்பதுடன், நபிமார்கள் ஸஹாபாக்கள், வலிமார்கள் உள்ளிட்டோரை பிரகாசிக்கச் செய்பவர்களாகவும் விளங்குகின்றார்கள்.

♦அல்லாஹ்வுடைய ஒளியை தம் வாய்களால் (ஊதி) அணைத்து விடலாம் என்று இவர்கள் கருதுகின்றனர். அந்நிராகரிப்போர் வெறுத்தபோதிலும் அல்லாஹ் தன்னுடைய பிரகாசத்தை (உலகமெங்கும் ஒளி வீசும்படி) பூர்த்தியாகவே ஆக்கி வைப்பான். (அல்குர்ஆன் 61: 8)

♦இவர்கள் தங்கள் வாய்களைக்கொண்டே (ஊதி) அல்லாஹ்வுடைய பிரகாசத்தை அணைத்துவிட விரும்புகின்றனர். எனினும், இந்நிராகரிப்போர் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன்னுடைய பிரகாசத்தை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்கப்போவதில்லை.  (அல்குர்ஆன் - 9 : 32)

இவ்விரு வசனத்தில் (61:8, 9:32) “நூர்“ ஒளி என்பது றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையே குறிக்கும். காபிர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அழித்து விட பகீரதப்பிரயத்தனம் செய்தனர். ஆனால் அல்லாஹுத்தஆலா பெருமானாரின் அனைத்துப் பணிகளையும் தடையின்றி பூர்த்தியாக்கினான்.


​​

♣  அல்லாஹ்வின் முதல் படைப்பு பெருமானார் ﷺ அவர்களின் பேரொளியேதான் என்பதற்காக ஹதீஸ்

இனி இது விஷயமாக மிகவும் பிரபலமான ஓர் ஹதீத் ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹூ அவர்களைக் கொண்டு அறிவிக்கப்படுகின்ற அல்லாஹ் முதன் முதலில் எதைப் படைத்தான் என்னும் ஹதீஸ். ஹழ்ரத் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் அன்சாரி ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: என் தாயும் என் தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்!

அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் படைப்பதற்கு முன்னர் முதலில் படைத்தது எது என்று எனக்கு அறிவியுங்கள் என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், ஜாபிரே! அல்லாஹ் அனைத்து பொருட்களையும் படைப்பதற்கு முன்னர் உம்முடைய நபியுன் ஒளியை அவனுடைய ஒளியிலிருந்து படைத்தான். இந்த ஒளியானது அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்கி பயணித்தது, அந்நேரத்தில் சொர்க்கம், நரகம், எழுதுகோள், லவ்ஹு, வானம், பூமி, சூரியன், சந்திரன், ஜின், மனித இனம் என எதுவும் படைக்கப்படவில்லை.


​​ அல்லாஹ் படைப்பினங்களை படைக்க நாடிய போது, அந்த ஒளியை நான்கு பாகங்களாக பிரித்து, முதல் பாகத்திலிருந்து எழுதுகோலையும், இரண்டாவதிலிருந்து லவ்ஹையும், மூன்றாவதிலிருந்து அர்ஷையும் படைத்தான். நான்காவது பாகத்தை மீண்டும் நான்கு பாகங்களாக ஆக்கி, முதலாவதிலிருந்து அர்ஷை சுமக்கும் மலக்குமார்களையும், இரண்டாவதிலிருந்து குர்ஸியையும், மூன்றாவதிலிருந்து மலக்குமார்களையும் படைத்தான். மீதமுள்ள ஒரு பாகத்தை மீண்டும் நான்காக பிரித்து, முதலாவதிலிருந்து வானங்களையும், இரண்டாவதிலிருந்து கோளங்களையும், மூன்றாவதிலிருந்து சுவனத்தையும், பூமியையும் படைத்தான். ரப்புல் ஆலமீன் அல்லாஹ் மீண்டும் நான்காவதை நான்கு பாகங்களாக பிரித்து, அவற்றில் முதலாவதிலிருந்து மூஃமின்கள் காணக்கூடிய ஒளியையும், இரண்டாவதிலிருந்து மூஃமின்களின் ஒளி பொருந்திய இதயங்களையும், மூன்றாவதிலிருந்து கலிமாவை மொழியக்கூடிய மூஃமின்களின் நாவுகளையும் படைத்தான்.

இந்த ஹதீஸ் பின்வரும் ஹதீஸ் நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது, (முசன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்: பக்கம் 99 ஹதீத் எண் 18, புகாரி ஷரீபுக்கு விரிவுரை எழுதிய அல்லாமா கஸ்தலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி தமது மவாகிபுல் லதுனியா: பாகம் 1 பக்கம் 71, இமாம் இப்னு ஹஜர் மக்கி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்: அப்ழலுல் குறா - பதாவா ஹதீஸியா என்ற நூற்களிலும், அல்லாமா பாஸி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்:மதாலி உல் மஸர்ராத் என்ற நூலிலும், அல்லாமா முஹம்மது அல் ஸுர்கானி ரஹ்மதுல்லாஹி அலைஹி தமது ஷரஹ் மவாகிபுல் லதுனியா: பாகம் 1 பக்கம் 89-91, அல்லாமா அஜ்லுனி ரஹ்மதுல்லாஹி அலைஹி தமது கஷ்ப் அல் கபா: பாகம் 1 பக்கம் 311 ஹதீத் எண் 827, இமாம் பைஹகீ ரஹ்மதுல்லாஹி அலைஹி தமது தலாயினுன் நுபுவ்வத் என்ற நூலிலும்,ஷைய்கு முஹக்கிக் அப்துல் ஹக் முஹத்திது திஹ்லவி றஹ்மத்துல்லாஹி அலைஹிம் அவர்கள்: மதாரிஜுன் நுபுவ்வத்திலும், இன்னும் ஏராளமான இமாம்களும் முஹத்திஸ்களும் இந்த ஹதீதின் ஸனதை - உறுதி செய்து இது சஹீஹான ஹதீதுதான் என்று கட்டியம் கூறியுள்ளார்கள்.)


​​மேலும் இவ்விஷயத்தில் தேவ்பந்தி தப்லீக் ஜமாஅத் வஹாபிகளின் 'ஹக்கீமுல் உம்மத் ' என்று கூப்பாடு போடும் அஷ்ரப் அலி தானவி தமது நூலான 'நஷறுத் தீப்'ல் இதே கருத்தை பதிவு செய்துள்ளார்கள்.


​​

♣  அல்லாஹ்வின் முதல் படைப்பு பெருமானார் ﷺ அவர்களின் பேரொளியேதான் என்பதற்காக இமாம்களின் கருத்துக்கள்

இமாம் முல்லா அலிகாரி றஹ்மத்துல்லாஹி அலைஹி “மிஷ்காத்“ என்ற ஹதீதுத் தொகுப்பு நூலுக்கு பிரசித்தி பெற்ற “மிர்காத்“ என்ற ஒரு விரிவுரையை எழுதிய அறிஞர் ஆவார்கள். இவர்கள் இட்டுக்கட்டப்பட்ட ஹதீதுகளைத் தொகுத்து “மௌலுஆத்துல் கபீர்“ என்ற ஒரு நூலை எழுதியுள்ளார்கள். இந்த நூலில் “அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேரொளி கிழக்கிலும், மேற்கிலும் மிகத் தெளிவாக படர்ந்திருந்தது. அல்லாஹுத்தஆலா முதன்முதலில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஒளியைத்தான் படைத்தான். அவன் (அல்லாஹ்) தனது திருமறையில் அவர்களுக்கு நூர் - ஒளி என்ற திருநாமத்தை சூட்டியுள்ளான் என்று எழுதியுள்ளார்கள்.

♦ புகாரி ஷரீபுக்கு விளக்கம் எழுதிய இமாம் அஹ்மது கஸ்தலானி றஹ்மத்துல்லாஹி அலைஹி கூறினார்கள். “அல்லாஹுத்தஆலா சிருஷ்டிகளை வெளியாக்க நாடியதும்” “அஹதிய்யத்“ என்ற நிலையில் ஸமதிய்யத் என்ற பேரொளியிலிருந்து ஹகீகத்தே முஹம்மதிய்யாவை வெளிப்படுத்தினான். இதில் (ஹகீகத்தே முஹம்மதிய்யாவில்) இந்த மேலுலகம்,கீழுலகம் உள்ளிட்ட அனைத்து உலகங்களையும் வெளிப்படுத்தினான்.


​​நூல்: மவாஹிபுல்லதுன்னியா பாகம் - 01, பக்கம் - 55

♦அல்லாமா ஸர்க்கானி றஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மவாஹிபுல் லதுன்னியாவின் விரிவுரையில் பின்வருமாறு கூறுகின்றார்கள். “அஹதிய்யத்“ என்ற நிலை அல்லாஹ்வின் தாத்தின் முதற் குறிப்பாகும். அதன் வெளிப்பாட்டில் முதல் நிலையாகும். இந்த நிலையில் அல்லாஹ்வின் தாத்திற்கு வேறானது எதுவுமில்லை. “அல்லாஹ் தனியாக இருந்தான், அவனுடன் எவரும் இருக்கவில்லை“ என்ற நபிகள் நாயகத்தின் பொன்மொழி இந்த நிலையையே சுட்டிக் காட்டுகின்றது. இதனை “அல்காஷானி“ றஹ்மத்துல்லாஹி அலைஹி குறிப்பிட்டுள்ளார்கள்.


நூல்: ஷரஹு ஷர்க்கானி பாகம் - 1 பக்கம் - 27

♦ “மிஷகாத்“ என்ற ஹதீதுப் பெரு நூலுக்கு அறபியிலும், பாரசீகத்திலும் “லம்ஆத்“ “அஷிஃஅத்துல்லம் ஆத் - என்று விரிவுரை எழுதிய உலகப் புகழ்பெற்ற ஹதீதுத்துறை பேரறிஞர் ஷெய்கு முஹக்கிக் அப்துல் ஹக் முஹத்திதுத் திஹ்லவி றஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள். “நபிமார்கள் அல்லாஹ்வின் தாத்தின் திருநாமங்களிலிருந்து படைக்கப்பட்டுள்ளனர். வலிமார்கள் ஸிபத்துக்களின் திருநாமங்களிலிருந்து படைக்கப்பட்டுள்ளனர். ஏனைய படைப்புக்கள் ஸிபத்தின் செயற்பாடுகளினால் படைக்கப்பட்டுள்ளனர். றஸுல்மார்களின் நாயகரான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாத்தே ஹக்கிலிருந்து படைக்கப்பட்டுள்ளார்கள். நபிகள் நாயகத்தின் ஹக்கின் வெளிப்பாடு (ழுஹுர்) தாத்திலிருந்தாகும்.


நூல் : மதாரிஜுன் நுபுவ்வத் பாகம் - 2, பக்கம் - 609

♦ “தலாயிலுல் கைறாத்“ என்ற பிரபலமான ஸலவாத் தொகுப்பு நூலுக்கு அல்லாமா அஷ்ஷெய்கு பாஸி றஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் எழுதிய “மதாலி உல் மஸர்ராத்“ என்ற நூலில் எழுதுகின்றார்கள். “இமாம் அஷ்அரி (சுன்னத் வல் ஜமாஅத்தின் அகீதாவுக்குரிய இமாம்) கூறகின்றார்கள். அல்லாஹ் பேரொளியானவன். ஏனைய ஒளிகளைப் போன்று அல்ல. நபிகள் நாயகத்தின் பரிசுத்த றூஹுடைய பிரகாசமானது அல்லாஹ்வின் பேரொளியிலிருந்து உள்ளதாகும். மலக்குகள் அந்தப் பேரொளியின் சிதறல்களாகும். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள். அல்லாஹுத்தஆலா முதன் முதலில் எனது றூஹைப் படைத்தான். எனது றூஹிலிருந்துதான் ஏனைய படைப்பினங்களை வெளிப்படுத்தினான்.


​​நூல் : மதாலிஉல் மஸர்ராத் பக்கம் - 265

♦  உலகப் புகழ்பெற்ற பேரறிஞர் ஷாஹ் வலியுல்லாஹ் றஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் தந்தை ஷாஹ் அப்துர் ரஹீம் முஹத்தித் திஹ்லவி றஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் “அன்பாஸே ரஹீமிய்யா“ என்ற நூலில் எழுதுகின்றார்கள். “பர்ஷ்” என்ற பூமியின் ஆழ்நிலத்திலிருந்து அர்ஷ் வரை உயர் மலக்கிலிருந்து தாழ்ந்த இனம் வரை அனைத்தும் “ஹகீகத்தே“ முஹம்மதிய்யாவிலிருந்து வெளியாயின. நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள். “முதன் முதலில் அல்லாஹுத்தஆலா என்னுடைய ஒளியையே படைத்தான். நீங்கள் இல்லாவிட்டால் நான் வானங்களைப் படைத்திருக்க மாட்டேன் நான் எனது றுபூபிய்யத்தையும் வெளியாக்கியிருக்க மாட்டேன் என அல்லாஹ் திருவுளமானான்.

♦ தேவ்பந்திகளாலும், தப்லீக் ஜமாஅத்தினராலும் “ஹகீமுல் உம்மத்“ என்று சிறப்புப்பெயரால் அழைக்கப்படுபவர். மௌலவி அஷ்ரப் அலி தானவி ஆவார். இவர் தனது “நஷ்ரூத்திப்ஃபிதிக்ரின் நபிய்யில் ஹபீப்“ என்ற நூலில் முதல் அத்தியாயமான நூரே முஹம்மதிய்யா என்ற தலைப்பில் எழுதுகின்றார். முதன் முதலில் எனது நூரைத்தான் அல்லாஹுத்தஆலா படைத்தான். என்ற ஹதீதிலிருந்து முதல் படைப்பு நூரே முஹம்மதிய்யா என்பது நிரூபணம் ஆகின்றது. ஏனெனில், அறிவிப்புக்களில் எப்பொருளைப்பற்றி முதற்படைப்பு எனக் குறிப்பிடப்பட்டுள்ளதோ, அவை நூரே முஹம்மதை விட பிந்தியவையே என்பது இந்த ஹதீதிலிருந்து தெளிவாக்கப்பட்டுள்ளது.

தேவ்பந்து உலமாக்களில் மிக முக்கியமானவராக கருதப்படும் மௌலவி ஹுசைன் அஹ்மது மதனி என்பவர் “அஷ்ஷிஹாபுத்தாகிப்“ என்ற நூல் பக்கம் 50 இல் பின்வருமாறு எழுதுகின்றார். நம்முடைய முன்னோர்களான நமக்கு வழிகாட்டியாகச்சென்ற பெரியார்களின் கொள்கைகளையும், கூற்றுக்களையும் சற்று கவனத்தில் எடுத்துக்கொண்டு பாருங்கள்! இவர்கள் அனைவருமே பேரொளி சிந்தும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தூய உள்ளமைப்பை பொருட்டாக்கி இறைவனின் அருட்கொடைகளையும், அவனது எல்லையற்ற பேருதவியையும் தொடர்ந்து பெற்று வந்திருக்கிறார்கள். இதையே தங்களது ஈடேற்றத்திற்குரிய சாதனமாகவும் நம்பியிருந்தனர். இவர்கள் அனைவரின் கொள்கையும் மிகத்தெளிவாக இருந்தது. ஆதியிலிருந்து இந்த அண்ட கோளங்களில் அருல்மாரி பொழிந்து கொண்டிருந்த, இனியும் பொழியப்போகின்ற இறைவனின் பெரும் கருணை அது.

அது இவ்வுலகத்தையே உண்டாக்குவதாக இருந்தாலும் சரி! அல்லது வேறுவிதமான கருணையாக இருந்தாலும் சரி! இவை அனைத்திலுமே எம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பரிசுத்த “தாத்“ என்னும் உள்ளமை அமைந்திருக்கிறது. அது சூரியனின் பேரொளி முதலில் சந்திரனுக்கு வருகிறது. தொடர்ந்து சந்திரனிலிருந்து எண்ணில் அடங்கா கண்ணாடிகளில் பிரதிபலிக்கிறது. அதாவது,“ஹகீகத்தே“ முஹம்மதிய்யா அண்ட கோளங்கள் மற்றும், அதில் வாழும் படைப்பினங்கள் அனைத்திலிருந்தும் வெளியாகின்ற ஆற்றல்களுக்கு மூலமாக இருக்கின்றது.இந்தப் பொருளிலேயே “நபியே! நீங்கள் இல்லாவிட்டால் இந்த அண்ட கோளங்களை நான் படைத்திருக்க மாட்டேன்“ என அல்லாஹ்வும்,“முதன்முதல் அல்லாஹ் படைத்தது என் நூரைத்தான் என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள்.

♦ முதல் மனிதர் நபிகள் நாதர் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களைப் பற்றி ஹதீதின் வெளிச்சத்தில் ஆதாரபூர்வமாக எழுதப்பட்ட நூற்களுள் இமாம் காழி இயாழ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் “அஷ்ஷிபா” என்ற நூலுக்கு முதலிடமுண்டு. ஹதீது, சட்டம், வரலாறு, மொழி இலக்கணம், இலக்கியம் உள்ளிட்ட பல துறைகளில் துறைபோகக்கற்ற மேதை இமாம் காழி இயாழ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள், இமாம் நவவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் இவர்கள் மீது அபார நம்பிக்கையும், மதிப்பும் வைத்திருந்தார்கள்.


​​இதனை அவர்களின் புகழ்பூத்த நூலான ‘ஷறஹு முஸ்லிமில்’ காண முடியும். ஷிபா என்ற நூலில் பின்வரும் ஹதீது இடம்பெறுகின்றது. “படைப்பில் நபிமார்களில் நான் முதலானவர். (இவ்வுலகில்) நபியாக அனுப்பப்பட்டதில் அவர்களில் இறுதியானவர்” இதனை பின்வரும் திருவசனம் சுட்டிக் காட்டுகின்றது. “நபிமார்களிலிருந்து அவர்களின் உறுதிப்பிரமாணத்தை நாம் எடுத்ததை நினைவு கூறுவீராக! இன்னும் உங்களிலிருந்தும், நூஹ், இப்றாஹீம், மூஸா, மர்யமின் மகன் ஈஸாவிடமிருந்தும்.” (அல்குர்ஆன் 33:7) ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் இறுதியானவராக இருந்தும் நபிமார்களுக்கு முன் கூறப்பட்டிருப்பது தகுதியில் முதன்மையாக இருப்பதும் அர்வாஹுடைய (ஆன்ம) உலகில் நபித்துவத்தில் முதன்மையாக இருப்பதிலுமாகும். திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

​ 

♦ “முதன் முதலில் அல்லாஹ் எனது ஒளியைத்தான் படைத்தான். மேலும் வந்துள்ளது ஆன்ம உலகில் உறுதிப் பிரமாணம் எடுக்கும்போது விடை கூறியவர்களும் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தான்.


​​நூல்: ஷறஹுஷ் ஷிபா பாகம் - 1, பக்கம் - 509

♦ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் படைப்பாலும் நுபுவத்தாலும் முதலானவர்கள் என்பதை "நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்: நபி ஆதம் அலைஹி ஸலாம் அவர்கள் களிமண்ணுக்கும், தண்ணீருக்கும் இடையிலிருந்த போது நான் நபியாக இருந்தேன்."


​​நூல்: திர்மிதி, மிஷ்காத் - 513) என்ற ஹதீதும் தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றது.

♦ நபி ஆதம் அலைஹிவசல்லமவர்கள் தவறு செய்து பூமிக்கு இறக்கப்பட்ட பின் அதற்காக பல நூறு ஆண்டுகள் அழுது அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டார்கள்.இறுதியாக, நபிகள் நாயகம் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் பொருட்டால் அல்லாஹ்விடம் கேட்டதும் அவரை எப்படி அறிந்தீர் என்று அல்லாஹ் கேட்டான். அதற்கு நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம், உன் திருக்கரத்தால் என்னைப் படைத்து உன் றூஹிலிருந்து என்னுள் றூஹை ஊதினாய். அப்போது தலையுயர்த்தி அர்ஷின் தூண்களில் லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்ல்லாஹ் என்று எழுதப்பட்டிருந்ததைக் கண்டேன். படைப்பில் உனக்கு விரும்பானவரைத்தான் உன் பெயரோடு சேர்த்திருப்பாய் என்று அறிந்து கொண்டேன். என்றதும் உண்மைதான் உரைத்தீர். முஹம்மத் இல்லாவிட்டால் உம்மைப் படைத்திருக்க மாட்டேன்.அவரின் பொருட்டால் கேட்டதனால் உமது குற்றம் மன்னித்தேன் என்று அல்லாஹ் கூறினான்.


​​நூல்: முஸ்தத்றக் பாகம் - 2 பக்கம் - 615

மற்றுமொரு அறிவிப்பில், முஹம்மதை படைத்திருக்காவிட்டால் ஆதத்தைப் படைத்திருக்கமாட்டேன். சொர்க்கம் நரகம் எதனையும் படைத்திருக்க மாட்டேன். அர்ஷை நீரில் படைத்தேன். அது துழும்பியது. அதில் லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்று அதில் எழுதினேன் அது அடங்கிவிட்டது.


​​நூல் : முஸ்தத்றக், பாகம் - 2, பக்கம் - 615

இந்த இரு ஹதீதுகளையும், இமாம் ஸுப்கி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ஷிபா உஷ் ஸகமாமிலும், இமாம் கஸ்தலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் மவாஹி புல்லதுன்னியாவிலும், இமாம் சம்ஹுதி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் வபாஉல் வபாவிலும், இமாம் முல்லா அலிகாரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ஷறஹுஷ் ஷிபாவிலும் இமாம் இப்னு ஹஜர் மக்கி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அப்ழலுல் குறாவிலும் மற்றும் ஏராளமான இமாம்களும் எழுதியுள்ளனர்.

♦ கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் ) அன்னவர்கள் கூறினார்கள்: "நானே முன்னோர் பின்னோர் யாவரிலும் மிக சங்கைகுரியவனாக இருக்கின்றேன்.


​​நூல்கள்: திர்மிதி 3131, தாரமி 47, முஸ்னத் அஹமத் 3 - 164, மிஷ்காத் 5762, 5920

♦ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: எனது தாயார் என்னை ஈன்றெடுக்கும் போது அவர்களிலிருந்து ஒரு பேரொளி புறப்பட்டு அதன் மூலம் சிரியா நகர கோட்டைகள் எல்லாம் பிரகாசித்தன. 


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் அபூ உமாமா (ரலியல்லாஹூ அன்ஹூ)

​​நூல்கள்: முஸ்னத் அஹ்மத் 5-262, ஹாகிம் 2-600, மிஷ்காத் 5759

ஆகவே இறைவன் அனைத்து படைப்பினங்களையும் படைக்க முன்னே முதல் முதலில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஒளியையே தான் படைத்தான் என்பதை நன்கு விளங்கி இஸ்லாத்தின் விரோதிகளின் ஏஜென்டுகளின் துர்ப்பிரசாரத்தின் அபாயத்தை விளங்கி எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அனைத்து முஸ்லிம்களின் இன்றியமையாத கடமையாகும்.


​​கருணையுள்ள ரஹ்மான் றஹ்மதுன் லில்ஆலமீன் ஆகிய உயிரிலும் மேலான கண்மனி நாயகத்தின் பேரொளியில் எங்களது கல்புகளை வெளிச்சமாக்கி வைப்பானாக! ஆமீன் ஆமீன் யாரப்பல்