MAIL OF ISLAM

Knowledge & Wisdom



ஆன்மீக அறிஞர்கள்  VS  மார்க்க அறிஞர்கள்

​எழுதியவர்: மெயில் ஒப் இஸ்லாம்


வெறும் புத்தகத்தை மட்டும் கற்ற மார்க்க அறிஞர்களிடம் இஸ்லாத்தின் ஆன்மீக கல்வியான இறைஞான கல்வியை கற்கவோ, கேட்கவோ போகாதீர்கள்.


ஒருவர் இறைஞான கல்வியை கற்ற மார்க்க அறிஞராக இருந்தால் அவர் உங்களுக்கு விளங்கப்படுத்தி, தெளிவுப்படுத்தி தருவார். அப்படி இல்லாவிட்டால் அவரும் குழம்பி உங்களையும் குழப்பி விடுவார்.


அவர் எவ்வளவு பெரிய அல்லாமாவாக இருந்தாலும் சரி, பேராசிரியராக இருந்தாலும் சரி, ஆயிரம் கலாநிதி பட்டத்தை பெற்றவராக இருந்தாலும் சரி, அவரிடம் நாம் கற்க வேண்டியது ஷரீஅத்துடைய கல்வி மற்றும் அகீதாவுடைய கல்வி இவைகளை மட்டும்தான்.


இறைஞான கல்வியை கற்றுத்தரத்தான் இறைநேசர்களான ஆன்மீக அறிஞர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம்தான் இறைஞான கல்வியை நாம் கேட்க வேண்டும், கற்க வேண்டும்.


ஆன்மீக அறிஞர்களிடம் கேட்க வேண்டியதை மார்க்க அறிஞரிடம் போய் நாம் கேட்பது எதைப்போல் என்றால், ஒருவன் நோய்க்கு மருந்து வைத்தியரிடம்தான் கேட்க வேண்டும். வைத்தியரை விட்டு விட்டு விஞ்ஞானியிடம் போய் கேட்பதை போன்றதாகும்.


அதாவது ஆன்மீக அறிஞர்களிடம் நாம் கற்க வேண்டிய இல்மை மார்க்க அறிஞர்களிடம் கேட்பது, பட்டுக்கோட்டைக்கு போவதற்கு வழி எது என்று கேட்டால் துட்டுக்கு ரெண்டு கொட்டை பாக்கு என்று பதில் வந்ததை போல் இருக்கும்.


இறுதியில் அவர்களும் குழம்பி உங்களையும் குழப்பி விடுவார்கள். இறுதியில் நமது நோய் சுகமாகாது அதற்கு பதிலாக சந்தேகம், வஸ்வாஸ் போன்ற மனநோய்கள்தான் அதிகரிக்கும்.


கௌதுல் அஃலம் முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்:

இதய நோய் கொண்டவனே, உன் நோய் அகல மருந்து தேடு! அந்த மகத்தான மருந்து மெய்யடியார்களான மகான்களிடத்தில் அல்லாமல் வேறெங்கும் கிடைக்காது. அப்பெரியார்களை அணுகி சிகிச்சை பெற்று அமர வாழ்வு பெறு!


ஆன்மீக அறிஞர் ஹழ்ரத் கவ்வாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மார்க்க அறிஞர் ஒருவரை பார்த்து கூறினார்கள்:

நீங்களோ நாவை மட்டும் தூய்மைப்படுத்துகிறீர்கள். நாங்களோ உள்ளத்தை தூய்மைப்படுத்தி அதனை இறையச்சத்தில் நிரப்பி வைத்துள்ளோம்.