MAIL OF ISLAM

Knowledge & Wisdomஇஸ்லாத்தின் கண்ணோட்டத்தில்           APRIL FOOL  பற்றிய விழிப்புணர்வு


எழுதியவர்: மௌலவி  M. ஜப்ரான்  (கௌஸி) 


April Fool என்ற பெயரில் நமது சமுதாயம் மார்க்க விழுமியங்களை வீழ்த்தி அழிவை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது.

விளையாட்டு (நகைச்சுவை) க்காக கூட பொய் பேசக்கூடாது என்று இஸ்லாம் வன்மையாக தடுத்திருக்கும் போது.

மனித இனத்தால் மிக மிகச் சாதாரணமாக செய்யப்படும் ஒரு செயலாகவும் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாகவும் பொய் சொல்வது மாறிவிட்டது.

வியாபாரத்தில், அமானிதத்தைப் பேணுவதில், வாக்குறுதியை காப்பாற்றுவதில், தன்னை மிகைப்படுத்திக் கொள்வதில், ஆற்ற வேண்டிய காரியத்தில் பொய்கள் தாராளமாக பேசப்பட்டு வருகின்றன.

அது மாத்திரமின்றி பொய் சொல்வதற்கென்றே பிரத்யேகமாக ஒரு நாளை அறிமுகப்படுத்தி அத்தினத்தில் பொய் சொல்லுவதனையே தங்களது குறிக்கோளாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றனர் ஒரு கூட்டம்.

இதில் கவலைக்குறிய விடயம் என்னவென்றால் இவைகள் மேற்க்கத்திய யூதர்களால் விறிக்கப்பட்ட வலை என்பதனை உணராமல் எமது இஸ்லாமிய சகோதரர்களும் அதில் மூழ்கி மார்க்கத்தின் வரம்பினை மீறி வாழ்கின்றனர்.

இதுபற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதை பார்க்கும்போது, அல்குர்னிலும், ஹதீதுகளிலும் ஏராளமான ஆதாரங்கள் பொய் பேசுவது பாவமான செயல் என வந்துள்ளது.

அவற்றிலிருந்து:

*~* பொய் பற்றி அல்குர்ஆன்:

وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ ۚ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقً

1. சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது- நிச்சயமாக அசத்தியம் அழிந்தே போகும்.(17:81)

2. يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ

நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் இன்னும் நீங்கள் உண்மை பேசக் கூடியவர்களாக ஆகிவிடுங்கள்.(அல்குர்ஆன் 9:119)

وَلَا تَلْبِسُوا الْحَقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُوا الْحَقَّ وَأَنتُمْ تَعْلَمُونَ

3. நீங்கள் உண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள். உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்.(2:42)

4. قُلْ إِنَّ الَّذِينَ يَفْتَرُونَ عَلَى اللَّهِ الْكَذِبَ لَا يُفْلِحُونَ

'அல்லாஹ்வின் மீது (இவ்வாறு) பொய்யை இட்டுக் கட்டுபவர்கள் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள்' என்று (நபியே!) கூறிவிடும். (அல்-குர்ஆன் 10:69)

فَوَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ

5. அன்றைய தினம் (மறுமையில்) பொய்யர்களுக்கு கேடுதான்(52:11)

பொய் பற்றி ஹதீதுகள்:

1. நெருப்பு விறகைத் திண்பது போல பொய் ஈமானை தின்று விடும் என்று நபிகளார் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

2. 'ஒரு முஃமினிடம் எல்லா தீமைகளும் இருக்கலாம். ஆனால் அவனிடம் பொய்யும், நேர்மையின்மையையும் இருக்கக் கூடாது.


​​நூல்: அஹ்மத்

4. இறைத் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்' 'விற்பவரும் வாங்குபவரும் பிரியாமலிருக்கும் வரை வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு! அவ்விருவரும் உண்மை பேசிக் குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் பரக்கத் (அருள் வளம்) அளிக்கப்படும்! குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள பரக்கத் நீக்கப்படும்!'.


​​நூல் : புஹாரி

5. ஒரு நாள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஒரு வீட்டிற்கு விருந்துக்குச் சென்றிருந்தார்கள். அந்த வீட்டு அம்மையார் வெளியில் உள்ள தனது குழந்தையை வா உனக்கு ஒன்று தருகிறேன் என்று அழைத்தார்கள். அப்பொழுது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அவரிடம் உமது குழந்தைக்கு என்ன கொடுக்கப் போகின்றீர் என்று வினவ, அவர் பேரித்தம் பழம் கொடுக்கப் போகிறேன் என்றார். அதற்கு நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அப்படி செய்யாவிட்டால் உம்மீது ஒரு பொய் பதிவு செய்யப்படும் என்றார்கள்.


ஹழ்ரத் ​​அப்துல்லாஹ் பின் ஆமிர ரழியல்லாஹு அன்ஹு

​அபூதாவூத், பைஹகீ

6. அப்துல்லாஹ் இப்னு ஆமிர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்:- ஒருநாள் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எங்கள் வீட்டில் அமர்திருக்கும் போது என் அன்னை இங்கே வா' நான் உனக்கு ஒன்று தருகிறேன், என்று என்னை அழைத்தார்கள். அப்போது நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள், அவருக்கு என்ன தரப்போகிறாய் என்று (என் தாயிடம்) வினவினார்கள். (அதற்கு என் தாய்) நான் அவருக்கு ஒரு பேரிச்சம் பழம் கொடுப்பேன், என்று கூறினார்கள். (அதற்கு) நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நீங்கள் அவருக்கு ஒன்றும் தராமல் இருந்தால் நீங்கள் பொய் கூறியவராகியிருப்பீர்கள், என்று கூறினார்கள்.

7. அபூஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்: யாரேனும் ஒரு குழந்தையிடம் இங்கே வந்து இதை எடுத்துக்கொள் என்று கூறிவிட்டு அந்தக் குழந்தைக்கு ஒன்றும் தராவிட்டால், அது பொய் பேசியதாக கணக்கிடப்படும், என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.


​​ஆதாரம்: அபூதாவூத், மற்றும் ஸஹீஹ் அல் ஜாமிவு

சம்பிரதாயத்திற்காக பொய் சொல்வதும், சம்பிரதாயத்திற்காக ஒருவரை விருந்துக்கு அழைப்பதும் , சம்பிரதாயத்திற்காக அழைக்கப்பட்டவர் மறுப்பதும் பொய் தான்.

8. ஒரு முறை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு பால் கொண்டு வரப்பட்டது. அப்போது அவர்கள் எங்களிடம் சாப்பிடும்படி கூறினார்கள். அதற்கு நாங்கள் எங்களுக்கு விருப்பமில்லை என்றோம்.அதற்கு அவர்கள் நீங்கள் பசியையும், பொய்யையும் சேர்த்துக் கூறாதீர்கள் என்றார்கள்.


ஹழ்ரத் ​​அஸ்மா பின்து யஜீத் (ரழியல்லாஹு அன்ஹு)

​இப்னு மாஜா

9. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் கூறினார்கள்: 'நான் நகைச்சுவையாக பேசுகிறேன், ஆனால் உண்மையைத் தவிர வேறென்றும் பேசுவதில்லை' என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.


​​அறிவிப்பவர்: உமர் (ரழியல்லாஹு அன்ஹு)

​ஆதாரம்: தபரானி அவர்களின் அல்-முஜம் அல் கபீர்

10. அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் 'அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நீங்கள் எங்களுடன் நகைச்சுவையாக பேசுகிறீர்களே' (என்று கூறினார்கள்) அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் 'ஆனால் நான் உண்மையை மட்டும் தான் பேசுகிறேன்' என்று கூறினார்கள்.


​​ஆதாரம்: திர்மிதி

11. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: மக்களை சிரிக்க வைப்பதற்காக பேசி, பொய் சொல்பவனுக்கு கேடு உண்டாகட்டும், கேடு உண்டாகட்டும், கேடு உண்டாகட்டும், என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் முஆவியா ரழியல்லாஹு அன்ஹு

​ஆதாரம் - திர்மிதி, அபூதாவூத்

12. அடுத்தவனை மகிழ்விப்பதற்காக பொய் சொல்பவன் அழிந்து போகட்டும் என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்.


திர்மிதீ, அபூதாவூத், அஹ்மத்

13. உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள், விளையாட்டுக்காக பொய் பேசுவதை நிறுத்தும் வரையில் உண்மையான ஈமான் (இறை நம்மிக்கை) ஏற்படாது.


​​ஆதாரம்: முஸன்னஃப் இப்னு அபீஷைபா.


​​

பொய் பேசுவதினால் அடையும் கேடுகள்

1. 'யாரசூலல்லாஹ் ஒரு முஃமின் விபச்சாரம் செய்வானா? என்று ஸஹாபாக்களில் ஒருவர் கேட்ட போது, 'செய்ய மாட்டான்' என்று சொல்லிய நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், 'ஒருவேளை ஷைத்தானுடைய கலைப்பினால் செய்து விடுவான்' என்று கூறினார்கள். பின்பு ஒரு முஃமின் மது அருந்துவானா? என்று கேட்ட போது, 'அருந்த மாட்டான்' என்று சொல்லி விட்டு, ஷைத்தானுடைய ஊசாட்டத்தினால் அருந்திடுவான் என்றார்கள். பின்பு ஒரு முஃமின் திருடுவானா? என்று கேட்டதற்கும் அவ்விதமே பதில் சொன்னார்கள். அதன் பிறகு ஒரு முஃமின் பொய் சொல்வானா? என்று கேட்டபோது, சொல்ல மாட்டான், சொல்ல மாட்டான், சொல்ல மாட்டான் என்று கூறி,

إِنَّمَا يَفْتَرِي الْكَذِبَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِآيَاتِ اللَّهِ ۖ وَأُولَٰئِكَ هُمُ الْكَاذِبُونَ

'நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் (உண்மையில்)அவர்கள் தாம் பொய்யர்கள்(நபியே! நீர் பொய்யரல்ல).' (அல்-குர்ஆன் 16:105) என்ற ஆயத்தை ஓதிக் காட்டினார்கள்.

2. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: -முனாபிஃக்கின் அடையாளம் மூன்று:

பேசினால் பொய் பேசுவான், வாக்குறுதியளித்தால் நிறைவேற்ற மாட்டான். நம்பினால் மோசம் செய்வான்.


​அறிவிப்பவர்: ஹழ்ரத் அபூஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு)

​ஆதாரம்: புகாரி,முஸ்லிம்

3. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: -'என் மீது பொய் கூறாதீர்கள்! யாராவது என் மீது பொய்கூறினால் அவர் நரகத்தில் நுழையட்டும்'


​​அறிவிப்பவர் : ஹழ்ரத் அலி (ரழியல்லாஹு அன்ஹு)

​ஆதாரம்: புகாரி

4. 'என்மீது யாராவது பொய் கூறினால்,அவர் நரகத்தை தனது இருப்பிடமாக ஆக்கிக் கொள்ளட்டும்'.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் அபுஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு)

​ஆதாரம்: புகாரி, முஸ்லிம்

5. 'மறுமையில் அல்லாஹ் மூவரை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்; அவர்களை கண்ணியப்படுத்தவும் மாட்டான்;. அவர்களுக்கு வேதனை மிக்க தண்டனையுண்டு' நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இதனை மூன்று முறை திருப்பிக் கூறினார்கள். அபூதர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள்: 'அவர்கள் அழிந்து நாசமாகட்டும்! யாரஸுல்லுல்லாஹ்' யார் அவர்கள்? நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: 'தனது கனுக்காலுக்கு கிழே தனது ஆடையை தொங்க விடுபவனும், செய்த உபகாரத்தை பிறருக்கு சொல்லிக் காட்டுபவனும், பொய் சத்தியம் செய்து தனது பொருள்களை விற்பனை செய்பவனும் ஆவான்' என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக அபூதர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


​​ஆதாரம்: முஸ்லிம்.

6. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: 'ஒருவர் தாம் காணாத கனவைக் கண்டதாக திட்டமிட்டு சொன்னால், அவர் (மறுமையில்) இரண்டு வாற் கோதுமைகளை (ஒன்றுடன் ஒன்றைச் சேர்த்து) முடிச்சுப் போடும் படி நிர்ப்பந்திக்கப்படுவார். ஆனால், அவரால் ஒருபோதும் (அப்படிச்) செய்ய முடியாது. (அவருக்கு அளிக்கப்படும் வேதனையும் நிற்காது.) 'தாம் கேட்பதை மக்கள் விரும்பாத நிலையில்' அல்லது 'தம்மைக் கண்டு மக்கள் வெருண்டோடும் நிலையில் 'அவர்களின் உரையாடைலைக் காது தாழ்த்தி (ஒட்டு)க் கேட்கிறவரின் காதில் மறுமை நாளில் ஈயம் உருக்கி ஊற்றப்படும். (உயிரினத்தின்) உருவப் படத்தை வரைகிறவர் அதற்கு உயிர் கொடுக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டு வேதனை செய்யப்படுவார். ஆனால், அவரால் உயிர் கொடுக்க முடியாது' என்று இறைத்தூதர்( ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்' என இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள்.

அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ள மற்றோர் அறிவிப்பில் 'தம் கனவு குறித்து பொய் சொல்கிறவர்…' என்று வந்துள்ளது.

7. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் கூறினார்கள் 'கேட்பதையெல்லாம் பேசுவதே ஒருவன் பொய் பேசுவதற்கு போதுமானதாகும்'.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் ஹாஃபிஸ் இப்னு ஆஸிம் (ரழியல்லாஹு அன்ஹு)

​ஆதாரம்: முஸ்லிம்

8.  ஹழ்ரத் சமுரா இப்னு ஜுன்தப் (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்கள்:-

இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பெரும்பாலும் தம் தோழர்களிடம் 'உங்களில் யாரும் (இன்றிரவு) கனவு கண்டீர்களா?' என்று கேட்பது வழக்கம். அப்போதெல்லாம், அல்லாஹ் யாரை நாடினானோ அவர் (தாம் கண்ட கனவை) அல்லாஹ்வின் தூதரிடம் எடுத்துரைப்பார். (அதற்கு அல்லாஹ்வின் தூதரும் விளக்கமளிப்பார்கள். ஒரு(நாள்) அதிகாலை நேரம் (ஃபஜ்ருத் தொழுகைக்குப் பின்) நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம) அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்:

இன்றிரவு (கனவில்) இரண்டு (வான)வர் என்னிடம் வந்து என்னை எழுப்பி, 'நடங்கள்' என்றனர். நான் அவர்கள் இருவருடன் நடக்கலானேன். நாங்கள் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டிருந்த ஒரு மனிதரிடம் சென்றோம். அங்கு அவரின் தலைமாட்டில் இரும்பாலான கொக்கியுடன் ஒருவர் நின்றிருந்தார். அவர் (படுத்திருந்தவருடைய) முகத்தின் ஒருபக்கமாகச் சென்று கொக்கியால் அவரின் முகவாயைப் பிடரி வரை கிழித்தார்; (அவ்வாறே) அவரின் மூக்குத் துவராத்தையும் கண்ணையும் பிடரி வரை கிழித்தார். – அல்லது பிளந்தார் – பிறகு அவர் (படுத்திருந்தவரின்) மற்றொரு பக்கம் சென்று முதல் பக்கத்தில் செய்ததைப் போன்றே செய்தார். இந்தப் பக்கத்தில் செய்து முடிப்பதற்குள் அந்தப் பக்கம் பழையபடி ஒழுங்காக ஆம்விடுகிறது. பிறகு அந்தப் பக்கத்திற்குச் செல்கிறார். ஆரம்பத்தில் செய்ததைப் போன்றே (திரும்பத் திரும்பச்) செய்கிறார். நான், 'அல்லாஹ் தூயவன்! இவர்கள் இருவரும் யார்?' என்று கேட்டேன். அவ்விரு(வான)வரும் என்னிடம், செல்லுங்கள், செல்லுங்கள்' என்றனர்.

நான் அவ்விருவரிடமும், 'நேற்றிரவு முதல் நான் பல விந்தைகளைக் கண்டுள்ளேன். நான் கண்ட இவைதாம் என்ன?' என்றேன். அதற்கு அவர்கள் என்னிடம், '(நீங்கள் கண்ட காட்சிகளின் விவரங்களை) உங்களுக்கு நாங்கள் தெரிவிக்கிறோம்.

தன்னுடைய முகவாய், மூக்குத் துவாரம், கண் ஆகியவற்றை பிடரிவரை கிழிக்கப்பட்டுக்கொண்டிருந்த மனிதனுக்கு அருகில் நீங்கள் சென்றீர்களே! அந்த மனிதன் அதிகாலையில் தம் வீட்டிலிருந்து புறப்பட்டு ஒரு பொய்யைச் சொல்ல அது (பல்வேறு வழிகளில்) உலகம் முழுவதும் போய்ச் சேரும்.

அறிவிப்பவர் : ஹழ்ரத் சமுரா இப்னு ஜுன்தப் (ரழியல்லாஹு அன்ஹு)

​ஆதாரம் : புகாரி (நீண்ட ஹதீஸின் சுருக்கம்)

9.  அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்: -

'முனாபிஃக்கை நீங்கள் மூன்று வழிகளில் அறியலாம், அவன் பேசினால் பொய் பேசுவான், அவன் வாக்குறுதி அளித்தால், அதை நிறைவேற்ற மாட்டான், அவனை நம்மினால் மோசம் செய்வான், மேலும் அவர்கள் (பின்வரும்) இந்த ஆயத்தை ஓதுங்கள், என்று கூறினார்கள்.

وَمِنْهُم مَّنْ عَاهَدَ اللَّهَ لَئِنْ آتَانَا مِن فَضْلِهِ لَنَصَّدَّقَنَّ وَلَنَكُونَنَّ مِنَ الصَّالِحِينَ

அவர்களில் சிலர், 'அல்லாஹ் தன் அருட்கொடையிலிருந்து நமக்கு(ச் செல்வத்தை) அளித்ததால் மெய்யாகவே நாம் (தாராளமான தான) தர்மங்கள் செய்து, நல்லடியார்களாகவும் ஆகிவிடுவோம்' என்று அல்லாஹ்விடம் வாக்குறுதி செய்தார்கள். (அல்-குர்ஆன் 9:75)

فَأَعْقَبَهُمْ نِفَاقًا فِي قُلُوبِهِمْ إِلَىٰ يَوْمِ يَلْقَوْنَهُ بِمَا أَخْلَفُوا اللَّهَ مَا وَعَدُوهُ وَبِمَا كَانُوا يَكْذِبُونَ

எனவே, அவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்ததாலும் அவர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருந்ததினாலும் அல்லாஹ், அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள் வரையில் நயவஞ்சகத்தைப் போட்டுவிட்டான். (அல்-குர்ஆன் 9:77)

ஆதாரம்: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா

10. மூவரிடம் கியாமத் நாளையில் அல்லாஹ் பேசமாட்டான் அவர்களின் பக்கம் கிருபையோடு பார்க்கவும் மாட்டான். அவர்களை பரிசுத்தப் படுத்தவும் மாட்டான். மேலும் அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையுமுண்டு என்று நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூதர் (ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் (அப்படியாயின்) நாசமடைந்து மோசம் போய் விடுவார்கள் என்று கூறிவிட்டு, அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் யாவர்? என்று கேட்டார்கள்.


​​1. இடுப்பில் அணியும் வேஷ்டி, கால்சட்டை முதலியவற்றை பெருமை என்ற அடிப்படையில் கரண்டை மொழிக்கும் கீழ் பூமியில் இழுபடும் வகையில் அணிந்து கொண்டிருப்பவர். 2. தாம் கொடுத்த தானத்தைப் பிறரிடம்சொல்லிக் காட்டுவர், 3. பொய் சத்தியம் செய்து தமது வியாபாரப் பொருள்களை விநியோகிப்பவர் என்று கூறினார்கள்.


ஹழ்ரத் ​​அபூதர் ரழியல்லாஹு அன்ஹு

​முஸ்லிம்

11.  இப்னு மஸ்ஊத் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்: -

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அருளினார்கள்: நிச்சயமாக உண்மை என்பது புண்ணியச் செயலுக்கு வழி காட்டுகிறது. புண்ணியச் செயல் சுவனம் செல்ல வழிகாட்டுகிறது. திண்ணமாக ஒரு மனிதன் உண்மையே பேசிக்கொண்டிருகிறான்., இறுதியில் அல்லாஹ்விடத்தில் உண்மையாளன் என்று எழுதப்படுகிறான்!

12. மேலும் திண்ணமாக பொய் என்பது தீமை செய்ய வழிகாட்டுகிறது. தீமை செய்வது நரகத்திற்கு வழிகாட்டுகிறது. திண்ணமாக ஒருமனிதன் பொய் பேசிக்கொண்டிருக்கிறான்., இறுதியில் அல்லாஹ்விடத்தில் மகாப் பொய்யன் என்று எழுதப்படுகிறான்!


​​ஆதாரம் : புகாரி, முஸ்லிம்

13.

وَيَوْمَ الْقِيَامَةِ تَرَى الَّذِينَ كَذَبُوا عَلَى اللَّهِ وُجُوهُهُم مُّسْوَدَّةٌ ۚ أَلَيْسَ فِي جَهَنَّمَ مَثْوًى لِّلْمُتَكَبِّرِينَ

அன்றியும் அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்தார்களே (அவர்களுடைய) முகங்கள் கியாம நாளில் கறுத்துப் போயிருப்பதை நீர் காண்பீர். பெருமையடித்துக் கொண்டிருந்த இவர்களின் தங்குமிடம் நரகத்தில் இருக்கிறதல்லவா? (அல்-குர்ஆன் 39:60)

எனவே அல்லாஹ்வும் அவனது ரசூலும் தடுத்துள்ள மறுமையில் வெற்றியைத் தராத பொய்யை விட்டும் நாம் தவிர்த்திருப்போம். அல்லாஹ் தௌபீக் செய்வானாக! ஆமீன்.