MAIL OF ISLAM

Knowledge & Wisdom



அவ்லியாக்களை இவ்வுலகில் கண்டு பிடிக்க முடியுமா?

​எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.


அல்லாஹ்வின் இறைநேசர்களாகிய (வலிமார்கள்) அவ்லியாக்களை இவ்வுலகில் கண்டுபிடிக்க முடியுமா?


​​

♣  இது பற்றி வழிகெட்ட வஹ்ஹாபிகளின் நிலைப்பாடு

அல்லாஹ்வின் இறைநேசர்களாகிய வலிமார்களை இவ்வுலகில் கண்டுபிடிக்க முடியாது. அவர்கள் நல்லவர்கள்தான்! ஆனால் நல்லவர் கெட்டவர் என்பது உள்ளம் சம்மந்தப்பட்டது, அது அல்லாஹ்வுக்கு மட்டுதான் தெரியும் என்று கூறி வலிமார்களை இவ்வுலகில் கண்டுபிடிக்க முடியாது என வாதிடுகிறார்கள்.

இவ்வுலகில் வாழும் அல்லாஹ்வின் இறைநேசர்களாகிய வலிமார்களை, நல்லடியார்களை மக்களால் கண்டுபிடித்துக் கொள்ள முடியாது அல்லாஹ்வுக்கு மட்டுமே அது பற்றி தெரியும் என்று வஹ்ஹாபிகள் கூறி வருவதைக் காணலாம். உண்மையில் அல்லாஹ்வுக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்பது தான் யதார்தத்தில் உண்மையாகும். இங்கே வஹ்ஹாபிகள் இந்த விடயத்தை பேசுவதற்கான பிரதான காரணம் நபிமார்கள், வலிமார்களுக்கு மறைவான அறிவு கிடையாது என்பதை கூறி அந்த வாதங்களை நியாயப்படுத்தவே இத்தனைக்கும் காரணமாகும். வஹ்ஹாபிகளே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்.


​​

♣ வலிமார்கள் என்பவர்கள் யார்?

அவ்லியாக்கள் என்றால் அல்லாஹ்வின் நேசர்கள் என்று பொருள். வலி என்றால் ஒரு இறைநேசரை குறிக்கும். வலிமார்கள் என்றால் ஒன்றுக்கு மேற்பட்ட பல இறைநேசர்களை குறிக்கும். இறை அச்சமுள்ள எல்லா முஃமின்களும் அவ்லியாக்களே! "இறை தக்வாவுடையவர்களையே தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அவ்லியாக்களாக இருக்கமுடியாது. எனினும், அவர்களில் பெரும் பாலானவர்கள் (இதனை) புரியாமல் இருக்கிறார்கள்". (அல்குர்ஆன் 8:34)

மேலும் அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையும், கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் ஸுன்னத்துகளையும் ஒன்று விடாமல் பின்பற்றி, இஸ்லாம் என்னும் மார்க்கத்தில் முறையாக நடந்து ஷரீஅத், தரீகத், ஹகீகத் என்ற மன்ஸில்களை அதாவது படித்தரங்களை கடந்து இறுதியில் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை பெற்றுக் கொண்டவர்களே அல்லாஹ்வின் அவ்லியாக்கள், வலிமார்கள் எனப்படுவார்கள். உலகத்திலுள்ள எந்தவொரு அவ்லியாவையும் எங்களோடு ஒப்பிட்டுப்பார்த்து எங்களைப்போன்ற சாதாரண மனிதர்கள்தான் என்று கூறக்கூடாது.


​​

♣  ஒரு மனிதரை நல்லவர் கெட்டவர்கள் என மக்களால் முடிவு செய்ய முடியுமா?

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிவிட்டார்கள்: வலிமார்கள் யார் என்பதை இவ்வுலகில் கண்டுபிடிக்கலாம் என்றும், ஒரு மனிதரை நல்லவர் கெட்டவர்கள் என மக்களால் முடிவு செய்யலாம் என்பதையும் பார்ப்போம்.உண்மையில் உறவுகள் ஆரம்பிப்பது திருமண வாழ்விலாகும் இந்த திருமணத்தில் நல்ல கணவன்மார்களை தேடுவதும், நல்ல மனைவியை தேடும் வழமையும் நம் சமூகத்தில் காணப்படுகிறது. அல்லாஹ்வுக்கு மட்டுமே அதை தீர்மானம் செய்யலாம் என்று இருந்தால் எப்படி இருஜோடிகளை திருமணம் முடித்து வைப்பது.

எனவே வெளிப்படையான சில அம்சங்களை வைத்து அவ்விருவரும் வாழும் சூழலில் இருப்பவர்களை விசாரித்து அவர் அல்லது அவள் நல்லவளா கெட்டவளா என்பதை தீர்மானிக்க முடிகிறது. இது எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் விடயமும் கூட அல்லாஹ் வெளித்தோற்றத்தை பார்ப்பது கிடையாது அவன் உள்ளங்களில் இருப்பவற்றையே நோட்டமிடுவதாக குறிப்பிடுகிறான். இந்த விடயத்தை வைத்துக்கொண்டு அவ்லியாக்களை மனிதர்களுக்கு அடையாளம் காணமுடியாது என்று வஹ்ஹாபிகள் கூறுவது வேடிக்கையான விடயமாகும்.

அப்படியானால் அல்குர்ஆனில் பிரிதொரு இடத்தில் இந்த குர்ஆன் யாருக்கு வழிகாட்டுகிறது என்ற தொடரில் ஈமான் கொண்ட மறைவான விடயங்களை நம்புகின்றவர்களுக்கு இது நேர்வழி காட்டும் என்பதாக குறிப்பிடுகின்றது அப்படியானால் மறைவான அறிவு என்பதை மக்கள் தெரிந்திருக்க வேண்டும் அதை நம்ப வேண்டும் அப்போது தான் அல்குர்ஆன் நேர்வழி காட்டும் என்றிருந்தால் ஈமான் கொள்ள வேண்டிய விடயங்களை பூரணமாக ஏற்றுக்கொண்டவர்களுக்கே இத்தகைய சந்தர்ப்பம் கிடைக்கும் என்பதை அல்லாஹ் தெளிவாக சுட்டிக்காட்டுகின்றான். ஈமான் கொள்ள வேண்டிய விடயங்களில் சிலதை ஏற்று பலதை விடும் வஹ்ஹாபிகளுக்கு எப்படி இந்த குர்ஆன் நேர்வழி காட்டப்போகின்றது?


​​

♣ வலிமார்களை இவ்வுலகில் கண்டுபிடிக்க முடியும் என்பதற்காக ஆதாரங்கள்

அவ்லியாக்களைப் பற்றி எல்லாம் வல்ல அல்லாஹ் அஸ்ஸவஜல் புனித அல்குர்ஆனில் கூறும்போது: "அல்லாஹ்வுடைய அவ்லியாக்களுக்கு எந்த பயமும் இல்லை. எந்த கவலையும் இல்லை, அவர்கள் (இறைவனை) உண்மையாகவே நம்பிக்கை கொண்டு (அவனுக்குப்) பயந்தும் நடந்து கொள்கின்றனர், வாழ்விலும், மறுமையிலும் (அந்த அவ்லியாகலான) அவர்களுக்கு நற்செய்தி உண்டு. (மேலான பதவிகளை அவர்களுக்கு அளிப்பதாகக் கூறியிருக்கும்) அல்லாஹ்வுடைய வாக்குறுதிகளில் எவ்வித மாறுதலும் இருக்காது. இதுதான் மகத்தான வெற்றியாகும்". (அல்குர்ஆன் 10: 62, 63, 64)

அவர்கள் விரும்பாத ஒன்று நடந்து விட்டதே என்று கவலைப்படவும் மாட்டார்கள். அவர்கள் விரும்பாத ஒன்று எதிர்க்காலத்தில் நடக்குமோ என்று பயப்படவும் மாட்டார்கள். இதுதான் இதன் பொருள். ஆனால் கியாமத்து நாளைப்பற்றிய கவலை மற்றவர்களைவிட இந்த அவ்லியாக்களுக்குத்தான் அதிகமாக இருக்கும். அதேபோன்று அல்லாஹ்வுடைய அச்சம், பயம் மற்றவர்களைவிட இந்த அவ்லியாக்களுக்குத்தான் மிக அதிகமாக இருக்கும். அதேநேரம் இந்த உலக சம்பந்தப்பட்ட விஷயங்களில் அவர்கள் எந்த கவலையும், பயமும் அடையமாட்டார்கள்.

மேலும் இறைநேசர்களுக்கு விரும்பியதை கேட்கும்போது அதை வழங்க இறைவன் காத்திருக்கிறான் என்பதாக குர்ஆனில் குறிப்பிடுகின்றான். ஆகவே அல்லாஹ்விடத்தில் ஒரு நரகவாதிக்குதான் இப்படியான பாக்கியத்தை கொடுப்பானா? என்பதை வஹ்ஹாபிகளிடம் கேட்க விரும்புகிறேன். அப்படியானால் பயமும் கவலையும் இல்லாத இந்த அவ்லியாக்களை யார்? என்று இனம் காண்பதற்கு அவசியமில்லையா? அப்படியானால் ஏன் அவர்களைப்பற்றி அல்குர்ஆனில் கூற வேண்டும்? இந்த வசனம் பற்றி ஆராய்ச்சி செய்யக்கூடாதா? நல்லவர்கள் யார் என்று தேடக்கூடாதா?

♦ அல்குர்ஆனில் ஈமான்கொண்ட விசவாசிகளே நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள் இன்னும் உண்மையாளர்களோடு சேர்ந்து நீங்களும் ஆகிவிடுங்கள் (அல்குர்ஆன் 9:119)

இந்த உலகத்தில் யார் உண்மையாளர்கள் யார் பொய்யர்கள் என்று தெரியாது. இதுவெல்லாம் உள்ளம் சம்மந்தப்பட்டது என்று இருந்தால் உண்மையாளர்களுடன் நீங்களும் இருந்து கொள்ளுங்கள் என்று எப்படி இறைவன் கூறுவான். யார் நல்லவர்கள்? யார் கெட்டவர்கள்? என்று கண்டுபிடிக்க முடியும் அதனால்தான் அல்லாஹ் சட்டம் போடுகிறான்.

மேலும் நல்லவர்கள் யார்? உண்மையாளர்கள் யார்? என்று தெரிந்தால்தான் நாம் அவர்களுடன் சேர்ந்து சகவாசம் வைத்துக் கொள்ளலாம் அல்லவா? ஆகவே நல்லவர்கள் யார் என்பதை தேடுவது மிக அத்தியாவசியமான ஒன்றாக காணப்படுகிறது. எனவே நல்லவர்களுடன் சகவாசம் கொள்ளச்சொன்ன இஸ்லாம் நல்லவர்களுடன் சேர்ந்திருப்பதால் நன்மைகள் கிடைக்கும் என்று சொன்ன இஸ்லாம் நல்லவர்கள் யார் என்பதை தேடவேண்டாம் அது அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும் அல்லாஹ் வஹியை கொண்டு தான் இப்பூமியிலுள்ளவர்களுக்கு நபிமார்கள் மூலம் அறிவிப்பான் என்றால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் வபாத்திற்கு பிறகு உலகில் தோன்றும் நல்லடியார்களை அறிந்து கொள்ள முடியாதா?


​​நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் வபாத்திற்கு பிறகு உலகில் நல்லடியார்கள் தோன்ற மாட்டார்களா? அல்லது இஸ்லாம் நல்லடியார்களை அறிந்து கொள்ள அல் குர்ஆனிலோ ஹதீஸிலோ தீர்வு வைக்கவில்லையா? இது போன்ற கேள்விகளுக்கு வஹ்ஹாபிகள் பதில் தரவேண்டும்?

♦ கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கூறினான்: எவன் என் நேசரை பகைத்துக் கொண்டானோ, அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்துகொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நான் நேசிப்பேன். அவ்வாறு நான் அவனை நேசித்துவிடும்போது அவன் கேட்கின்ற செவியாக, அவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பற்றுகின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக நான் ஆகிவிடுவேன். அவன்என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறைநம்பிக்கை யாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எந்தச் செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன்.


ஹழ்ரத் ​​அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு

​நூல் புகாரி 6502

எனவே இவ்வாறான மாற்றம் குறித்த அடியாரில் ஏற்படும்போது அவர் சாதாரண மக்களுடைய ஆற்றல்கள் சக்தியில் இருந்து வேறுபடுகின்றார்கள். சாதாரண நபருக்கு நீர் மேல் நடக்க முடியாத வேலையை இந்த இறைநேசர்கள் நடந்து காட்டுவார்கள். சாதாரணமாக நடக்க முடியாத தூரத்தை அசாதாரணமாக நடந்து காட்டுவார்கள். இதைத்தான் கராமத் விசேட ஆற்றல்கள் அல்லது அற்புதங்கள் என்கிறோம். இவ்வாறான அற்புதங்கள் இந்த அடியார் மூலம் நிகழும் போது குறித்த அந்த மனிதர் அவ்லியாவாக இறைநேசச்செல்வராக இருப்பதை அவர்களுடன் சேர்ந்து வாழ்பவர்கள் அறிந்து கொள்வார்கள்.

♦ கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் நபிமார்களும் அல்ல. இறைவனின் பாதையில் உயிர் நீத்தவர்களும் அல்ல. இவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் கிடைக்கும் அந்தஸ்த்தைப் பார்த்து நபிமார்களும் தியாகிகளும் பொறாமைப்படுவார்கள் என்று நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். மக்கள் அவர்கள் யார் என எங்களுக்குக் கூறுங்கள் அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் தங்களுக்கிடையே இரத்த உறவிற்காகவோ, கொடுத்து வாங்கிக் கொள்ளும் செல்வங்களுக்காகவோ அல்லாமல் அல்லாஹ்விற்காக ஒருவரையொருவர் நேசித்துக் கொண்டவர்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக நிச்சயமாக அவர்களுடைய முகங்கள் ஒளியாக இருக்கும். அவர்கள் ஒளியின் மீது இருப்பார்கள். மக்கள் அஞ்சும் போது அவர்கள் அஞ்சமாட்டார்கள். மக்கள் கவலைப்படும் போது அவர்கள் கவலைப்பட மாட்டார்கள் என்று கூறி விட்டு அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்த பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள் என்ற வசனத்தை ஓதிக்காட்டினார்கள்.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் உமர் பின் அல் ஹத்தாப் ரலியல்லாஹு அன்ஹு

​நூல்: அபூதாவூத் 3060

♦ ஒரு முறை ஸஹாபாக்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கேட்டார்கள் அல்லாஹ்வின் தூதரே அவ்லியாக்கள் என்பவர்கள் யார்? அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "யாரை நீங்கள் பார்க்கும் போது இறைவனின் ஞாபகம் வருகின்றதோ அவர்கள்தான் அல்லாஹ்வின் இறைநேசர்கள் ஆவார்கள்" என பதிலளித்தார்கள்.


​​நூல்: பஸ்சார்

எனவே வலிமார்களை இவ்வுலகில் கண்டுபிடிக்க முடியாது என்றால் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அப்பவே அதாவது வலிமார்களைப் பற்றி ஸஹாபாக்கள் கேட்ட பொழுதே சொல்லிருப்பார்கள். அது உள்ளம் சம்மந்தப்பட்டது உங்களால் கண்டுபிடிக்க முடியாது என்று சொல்லிருக்கனும் ஆனால் அப்படி சொல்லவில்லை மாறாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள் இறைநேசர்களை கண்டுபிடிக்க முடியும் என்று இந்த வஹ்ஹாபிகள் கண்டுபிக்க முடியாது என்று கூறுகிறார்கள் எனவே நீங்கள் யார் சொல்வதை கேட்டு நடந்து கொள்ளப்போகின்றீர்கள்?

♦ அல்லாஹ்வின் நினைவை திறந்து விடும் திறவுகோளாக மனிதர்களில் சிலர் உள்ளனர். அவர்களை நீங்கள் கண்டால் அல்லாஹ்வின் நினைவு உங்களுக்கு வரும் என நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.


​​நூல்: தப்றானி 10325

♦  அனஸ் இப்னு மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், ”அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு (எதையேனும் கூறி) விடுவார்களாயின் அதை அல்லாஹ் நிறைவேற்றி விடுகிறான்” கூறினார்கள்.


​​நூல்: புகாரி 2703

♦ யாரைப்பார்த்தால் இறைவனின் ஞாபகம் வருமோ அவர்கள் தான் இறை நேசச் செல்வர்கள். "உங்களில் உன்னதமானவர்கள் யார் என சொல்லட்டுமா என நபி (ஸல்லல்லாஹுன்ன அலைஹி வஸல்லம்) கேட்டார்கள். ஆம் சொல்லுங்களே என சஹாபாக்கள் சொன்னார்கள் . உங்களில் உன்னதமானவர் யாரெனில் எவர்களை பார்த்தால் மட்டுமே அல்லாஹ்(ஆகிரத்)நினைவு வருமோ அவர் தான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்"


ஹழ்ரத் ​​அஸ்மா (ரலியல்லாஹு அன்ஹா)

​நூல்: அஹ்மத் 27601, இப்னு மாஜஹ் 4109

♦  யார் எனது வலியை பகைத்துக்கொள்கிறார்களோ அவனுடன் நான் யுத்தப் பிரகடனம் செய்கிறேன் என்று அல்லாஹ் குறிப்பிட்டதாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்.

ஹதீஸ் குத்ஸி புகாரி 6502

இதிலிருந்து அல்லாஹ் சொல்கிறான் எனது இறைநேசர்களை பகித்து கொள்ள வேண்டாம், அப்படி பகித்து கொண்டால் என்னுடன் யுத்தம் செய்வதற்கு வருகிறார் இறைவனுடன் யாராவது யுத்தம் செய்ய முடியுமா? அவ்வாறு யுத்தம் செய்துதான் வெற்றிகொள்ள முடியுமா? இறைநேசர்களுடன் ஒருவர் பகித்து கொண்டால் நிச்சயமாக தோல்வி உண்டு என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.


​​அல்லாஹ் ஒரு சட்டம் போடுவதாக இருந்தால் இறைநேசர்களை இவ்வுலகில் கண்டுபிடிக்க முடியும் என்பதனால் தான் சட்டம் போடுகிறான் அல்லாஹ்வின் இறைநேசர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்க முடியாது அது உள்ளம் சம்மந்தப்பட்டது என்று இருந்தால் இறைவன் சட்டம் போடுவானா?

எனவே அவ்லியாக்கள் யார் என்று அறியாமல் இருந்தால் எப்படி அவர்களுடன் பகைத்துக்கொள்ளாமல் இருக்க முடியும்? இதில் இருந்து விளங்குகிறது அவ்லியாக்கள் யார் என்பதை அறிந்து வைத்தால்தான் அல்லாஹ்வுடன் யுத்தம் செய்வதில் இருந்து தப்பிக்க முடியும் இல்லையேல் இது விடயத்தில் வஹ்ஹாபிகள் தமக்கு தெரியாமலே அல்லாஹ்வின் கோப பார்வையில் சதாவும் இருப்பதைதவிர வேறு வழி இல்லாத நஷ்டவாளிகளாகவே இருக்கிறார்கள் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

♦ நீ நட்பு வைத்து கொள்வதாக இருந்தால் முஃமினுடன் வைத்துகொள் நீ உணவு கொடுப்பதாக இருந்தால் தக்வா எனும் இறையச்சமுள்ளவர்களுக்கு கொடுங்கள் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.


​​நூல்: அபூதாவூத், திர்மிதீ

தக்வா உள்ளவருக்கு உணவு அலியுங்கள் என்று சொல்லும் பொழுதே தக்வா உள்ளவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க முடியும் என்பதனால் தான் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், ஆகவே தக்வா என்பது உள்ளம் சம்மந்தப்பட்டது எனவே நம்மலால் கண்டுபிடிக்க முடியாது என்று இருந்தால் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்படி சொல்லித்தருவார்கள்.

♦ அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்கள். ஒரு முறை, மக்கள் ஒரு ஜனாஸாவைக் கடந்து சென்றபோது, இறந்தவரின் நற்பண்புகளைப் பற்றிப் புகழ்ந்து பேசினார்கள். அப்போது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், “உறுதியாகிவிட்டது” என்றார்கள். மற்றொரு முறை வேறொரு (ஜனாஸாவைக்) கடந்து சென்றபோது மக்கள் அதன் தீய பண்புகளைப் பற்றி இகழ்ந்து பேசலாயினர். அப்போதும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், “உறுதியாகிவிட்டது“ எனக் கூறினார்கள்.


ஹழ்ரத் ​​உமர் (ரலியல்லாஹு அன்ஹு) “எது உறுதியாகிவிட்டது?“ எனக் கேட்டதும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், “இவர் விஷயத்தில் நல்லதைக் கூறிப் புகழ்ந்தீர்கள், எனவே அவருக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது. இவர் விஷயத்தில் தீயதைக் கூறினீர்கள். எனவே இவருக்கு நரகம் உறுதியாகிவிட்டது. ஆக நீங்களே பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகளாகவீர்கள்” எனக் கூறினார்கள். (இன்னுமொரு அறிவிப்பில் முஃமீன்கள் பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகளாகவீர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது),


​​நூல்: புகாரி 1367, முஸ்லிம்

♦  அபுல் அஸ்வத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் . நான் மதீனாவில் (கொள்ளை) நோய் பரவியிருந்தபோது மதீனாவுக்கு வந்து உமர் (ரலியல்லாஹு அன்ஹு) உடன் அமர்ந்திருந்தேன். அப்போது ஒரு ஜனாஸா அவர்களைக் கடந்து சென்றது. மக்கள் அவரின் நற்பண்புகளைக் கூறிப் புகழ்ந்ததும் உமர் (ரலியல்லாஹு அன்ஹு), “உறுதியாகிவிட்டது“ என்றார்கள்.


​​பிறகு இன்னொரு ஜனாஸ கடந்து சென்றது. அப்போதும் மக்கள் அவரின் நற்பண்புகளைக் கூறிப் புகழ்ந்து பேசினர். உடனே உமர் (ரலியல்லாஹு அன்ஹு), “உறுதியாகிவிட்டது“ என்றார்கள்.


​​பிறகு மூன்றாவது ஜனாஸா கடந்து சென்றது. மக்கள் அவரின் தீய பண்புகளைக் கூறி இகழ்ந்து பேசலாயினர். அப்போதும் உமர் (ரலியல்லாஹு அன்ஹு), “உறுதியாகிவிட்டது“ எனக் கூறினார்கள்.

நான் “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! எது உறுதியாகிவிட்டது?“ எனக் கேட்டதும். “எந்த முஸ்லிமுக்காவது அவர் நல்லவர் என நான்கு பேர் சாட்சி கூறினால் அவரை அல்லாஹ் சுவர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வான்“ என்று இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.


​​நாங்கள் “மூவர் சாட்சியாயிருந்தால்..?“ என்று கேட்டோம். அதற்கவர்கள் “மூன்று பேர் சாட்சி கூறினாலும் தான்” என்றனர். மீண்டும் “இருவர் சாட்சியாக இருந்தால்...” என நாங்கள் கேட்தற்கு இரண்டு பேர் சாட்சி கூறினாலும் தான்” என்றார்கள். பிறகு நாங்கள் ஒரு நபர் பற்றிக் கேட்கவில்லை. எனவே, நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதன் அடிப்படையிலேயே நான் இவ்வாறு கூறினேன்” என்று உமர் (ரலியல்லாஹு அன்ஹு) கூறினார்கள்.


​நூல்: ஷஹீஹ் புகாரி 1368

♦ ஆகவே வலிமார்களோடு நேசம் கொள்ள கூடாது வலிமார்கள் யாரென்று அறிய முடியாது என்று கூறி தரீக்காக்கள் மற்றும் வலிமார்களை கண்டபடி திட்டி, நினைக்கும் நேரமெல்லாம் பெண்களை தூண்டி பாதை வழியே பெண்களை சீரழிக்கும் இந்த வஹ்ஹாபிகளுக்கும் வஹ்ஹாபி மெளலவி மார்களுக்கும் வலிமார்களை விமர்சிக்கும் எவ்வித அதிகாரமும் கிடையாது என்பதை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.


​​ஆகவே அவ்லியாக்கள் என்பவர்களை நாமும் அறிந்து அவர்கள் ஏற்படுத்திய தரீக்காக்கள் வழியில் நாமும் வாழ்ந்து மரணிக்க வல்லவன் அல்லாஹ் துணைபுரிவானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.