MAIL OF ISLAM

Knowledge & Wisdomபாங்கிற்கு முன் ஸலவாத் சொல்லலாமா?


எழுதியவர்: மௌலவி  S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.


இஸ்லாத்தின் பார்வையில் அதான் (பாங்கு), இகாமத்திற்கு முன், பின் கண்மணி நாயகம் முஸ்தபா  ﷺ  அவர்களின் மீது ஸலவாத் சொல்வது கூடுமா?


​​

♣ இது பற்றி வழிகெட்ட வஹ்ஹாபிகளின் நிலைப்பாடு :-

ஐங்காலத் தொழுகை நேரத்தை அறிவிப்பதற்காக பாங்கு செல்லுமுன் நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீது ஸலவாத் சொல்லும் வழக்கம் இலங்கை, இந்தியா போன்ற நாட்டிலுள்ள எல்லாப் பள்ளிவாயல்களிலும் பல்லாண்டுகளாக இருந்து வந்துள்ளது. ஸலவாத் மட்டுமன்றி பாங்கு சொல்லும் முஅத்தின் முதலில் அஸ்தஃபிருல்லாஹல் அளீம் என்று மூன்று தரமும், ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் வலாஹவ்ல வலாகுவ்வத இல்லாபில்லாஹல் அலிய்யில் அளீம் என்று ஒரு தரமும் சொல்லும் வழக்கமும் இருந்து வந்தது.


​​இவ்வழக்கம் இருந்த காலத்தில் இலங்கை, இந்தியாவில் தலைசிறந்த மௌலவீமார்களும், அறபுக்கலாபீட அதிபர்களும், மார்க்க அறிஞர்களும் இருந்தும் கூட அவர்களில் எவரும் இவ்வழக்கம் பித்அத் என்றோ ஆதாரமற்ற செயலென்றோ சொன்னதுமில்லை. அவ்வாறு பத்வா வழங்கியதுமில்லை. தடுத்து நிறுத்தியதுமில்லை. மாறாக அவர்கள் அனைவரும் அதைச் சரிகண்டும், அனுமதித்துமே வந்துள்ளனர்.

அக்காலகட்டத்தில் இது சர்ச்சைக்குரிய விடயமாகவே கருதப்படவில்லை. எனினும் வஹ்ஹாபிஸம் என்ற எயிட்ஸ் நோய் இலங்கை, இந்தியாவுக்கு வந்த பிறகுதான் இவ்வழக்கம் வஹ்ஹாபிகளால் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தப்பட்டது. இன்று அந்த நோயை இறக்குமதி செய்வோர் மலிந்துவிட்டப்படியால் அவர்களின் ஆட்சி அ​திகாரத்திலுள்ள பள்ளிவாயல்களில் மட்டும் இச்சிறப்பான வழக்கம் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது.


​​பாங்கு சொல்லுமுன் ஒன்றுமே சொல்லாமல் அல்லாஹு அக்பர் என்றே அது ஆரம்பிக்கப்பட வேண்டுமென்றும், அதற்கு முன் ஸலவாத் சொல்லுதல் நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் காலத்தில் இருக்காத பித்அத் என்றும், அதற்கு திர்குர்ஆனிலும் நபீமொழியிலும் ஓர் ஆதாரம் கூட இல்லை என்றும் வஹ்ஹாபிகள் பிரச்சாரம் செய்து வருகின்றார்கள்.

அதோடு மட்டும் அவர்கள் நின்று விடவில்லை. ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை வழி செல்லும் ஏழைகளைத் தேடி இனங்கண்டு அவர்களுக்கு வீடு, கிணறு, மலசலகூடம் போன்றவற்றைக் கட்டிக்கொடுத்தும், றமழான் மாதம் அரிசி, ஈத்தம்பழம், பணம் முதலானவற்றை அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கியும் அவர்களைத் தமது வழிகேட்டின் ஈர்த்துக் கொண்டுமிருக்கின்றார்கள்.


​​இது வியப்பான விடயமில்லை. ஆனால் வியப்பான விடயம் என்னவெனில் ஸுன்னத்வல் ஜமாஅத் கொள்கையை முழுமையாக ஏற்றுக்கொண்டு அக்கொள்கை வழி சென்று கொண்டிருந்த மௌலவீமார்களிற் சிலர் வஹ்ஹாபிகளால் அவர்களுக்கு வழங்கப்படுகின்ற ரியால் என்ற மதுவை அருந்தி அதனாலேற்றப்படும் மயக்கத்தில் அவர்களுடன் சேர்ந்துகொண்டு பாங்கு சொல்லுமுன் ஸலவாத் சொல்லுதல் பித்அத் என்று கூச்சலிடுவதும் அவர்களின் பாட்டுக்குத் தாளம் போடுவதுமேயாகும். பாங்கு சொல்லுமுன் ஸலவாத் சொல்லக்கூடாதென்று கூறும் வஹ்ஹாபிகள் தமது வாதத்துக்கு குர்ஆன், ஹதீஸ்களில் இருந்து எவ்வித ஆதாரங்களும் கூறவில்லை.


​​

♣ குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் (பாங்கு), இகாமத்திற்கு முன், பின் சலவாத்து சொல்வதற்கான ஆதாரங்கள்

அல்லாஹ்வும், அவனின் மலக்குகளும் நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீது “ஸலவாத்” சொல்கிறார்கள். விசுவாசிகளே! நீங்களும் அந்த நபீ மீது ஸலவாத் சொல்லுங்கள். இன்னும் ஸலாமும் சொல்லுங்கள். (அல்-குர்ஆன் 33-56)

மேற்கொண்ட திருவசனத்தில் வந்துள்ள “ ஸல்லூ” என்ற சொல்லும், “ஸல்லிமூ” என்ற சொல்லும் “ அம்றுன் முத்லகுன்” பொதுவான ஏவல் வினைச் சொற்களாகும். இச்சொற்கள் நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவரகள் மீது எந்த நேரம் வேண்டுமாயினும் ஸலவாத், ஸலாம் சொல்லலாம் என்ற கருத்தைத் தரும் சொற்களேயன்றி ஒருநேரம் குறிப்பிட்டு இந்தநேரம் சொல்லுங்கள் இந்த நேரம் சொல்லாதீர்கள் என்ற கருத்தை ஒருபோதும் தரமாட்டாது.

நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீது ஸலவாத் ஸலாம் சொல்லுதல் தொடர்பாக திருக்குர்ஆன் வசனங்களும், நபீமொழிகளும் பொதுவாக வந்துள்ளனவேயன்றி ஒருநேரம் குறிப்பிட்டு இந்நேரம் சொல்லுங்கள் இந்நேரம் சொல்லாதீர்கள் என்று வரவில்லை. எனவே நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீது ஸலவாத், ஸலாம் சொல்லவிரும்பும் ஒரு முஸ்லிம் எந்நேரம் சொல்லவிரும்பினாலும் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் மலசலகூடம் போன்ற அசுத்தமான இடங்களில் மட்டும் சொல்வது தடுக்கப்பட்டுள்ளது.

ஒரு முஸ்லிம் எந்நேரமும் ஸலவாத், ஸலாம் சொல்லலாம் என்பதற்கும், பாங்கு சொல்லு முன்னும் அதன் பின்னும் சொல்லலாம் என்பதற்கு மேற்கண்ட திருவசனம் மறுக்க முடியாத ஆதரமாகும். ஒருவன் தனது வீட்டில் நுழையும் போது ஸலவாத் சொல்ல விரும்பினால் அவன் சொல்லிக் கொள்ளலாம். ஒருவன் சாப்பிடு முன் ஸலவாத் சொல்ல விரும்பினால் சொல்லிக் கொள்ளலாம். ஒருவன் உறங்குமுன் ஸலவாத் சொல்ல விரும்பினால் அவன் சொல்லிக் கொள்ளலாம். இதற்காக உலமாசபையிடம் பத்வா கேட்க வேண்டிய அவசியம் இல்லை.


​​இவ்வாறு செய்வதை மார்க்கத்தைச் சரியா புரிந்த, நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைத் தனது உயிரினும் மேலாக மதித்த எந்த ஓர் ஆலிமும் மறுக்கமாட்டார். நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் அன்பை இழந்த வஹ்ஹாபிகள் தவிர.

​​

♦ பனுன் நஜ்ஜார் குடும்பத்தைச் சேர்நத ஒரு பெண் கூறுகின்றார் “மஸ்ஜிதுன் நபவி” மதீனஹ் பள்ளிவாயலின் பக்கத்தில் இருந்த வீடுகளின் எனது வீடு மிக உயர்ந்த வீடாக இருந்தது. பிலால் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அந்த வீட்டில் நின்று கொண்டே “ஸுபஹ்” தொழுகைக்கான பாங்கு சொல்வார். அதற்காக அவர் “ஸஹர்” நேரம் வந்து “ஸுப்ஹ்” நேரம் வரும்வரை அந்த வீட்டில் இருப்பார். “ஸுப்ஹ்” நேரம் வந்து விட்டால் கையை அசைத்தவண்ணம் விரைவாக நடந்து பாங்கு சொல்லுமுன் ‘ அல்லாஹும்ம இன்னீ அஹ்மதுக வஅஸ்தயீனுக அலா குறைஷின் அன்யுகீமூ தீனக” என்ற வசனங்களைக் கூறுவார். அதன் பிறகுதான் பாங்கு சொல்வார். ஓர் இரவேனும் இந்த வசனங்களை அவர் சொல்லாமல் பாங்கு சொன்னதேயில்லை.


​​நூல்: அபூதாஊத், பாகம்– 01, பக்கம் – 143  இலக்கம் - 519

மேற்கொண்ட “ஹதீது” நபீமொழி ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆறு கிரந்தங்களில் ஒன்றான அபூதாஊத் என்ற நூலில் வந்துள்ளது. பிலால் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் விஷேட“ முஅத்தின்” பாங்கு சொல்லும் ஒருவரார்கள். அவர் பாங்கு சொல்லுமுன் மேற்கொண்ட வசனங்களைச் சொன்ன பிறகுதான் பாங்கு சொல்வார்கள்.


​​அவர்கள் இவ்வாறு செய்ததை நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவரகள் தடுக்கவுமில்லை. ஸஹாபாக்களில் எவரும் தடுக்கவும்மில்லை. பாங்கு சொல்லுமுன் மேற்கண்ட வசனங்கள் சொல்வது இஸ்லாமில் அனுமதிக்கப்படாதவையாயிருந்தால் பிலால் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஒரு போதும் சொல்லியிருக்கமாட்டார்கள். ஒரு சமயம் அவர் தெரியாமல் சொல்லியிருந்தால் கூட ஏனைய ஸஹாபாக்களாவது அவரைத் தடுத்திருப்பார்கள்.

♦ எனது தோழர்கள் நட்சத்திருங்கள் போன்றவர்கள். அவர்களின் எவரை நீங்கள் பின்பற்றினாலும் வெற்றி பெறுவீர்கள் (நூல் மிஷ்காத் 6018) என்ற ஹதீஸின்படி பிலால் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் “பித்அத்” செய்த வழிகேடராகயிருக்க முடியாது . அவர்களின் இச்செயலை முன்மாதிரியாகக் கொண்டு பாங்கு சொல்லும் முன் அவர்கள் சொன்ன அதே வசனங்களைச் சொல்வதும் பிழையாகாது.


​​பாங்கு சொல்லும்முன் ஸலவாத் சொல்லவும் கூடாது. வேறொன்றும் சொல்லவும் கூடாதென்று கூறும் வஹ்ஹாபிகள் மேற்கொண்ட இந்த நபீமொழிக்கு பதில் தருவார்களா? அல்லது பிலால் (றழியல்லாஹு அன்ஹு) அவரகளையும் “பித்அத்” செய்த வழிகேடன் என்றும், நரகவாதி என்றும் சொல்வார்களா?

♦ பிலால் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் பாங்கு சொல்லும் முன் சொன்ன வசனங்களின் பொருள் பின்வருமாறு. (இறைவா! நான் உன்னைப் புகழ்கின்றேன். குறைஷிகள் உனது மார்கத்தை நிலைநாட்டுவதற்காக உன்னிடம் உதவிதேடுகின்றேன். (பிலால் (றழியல்லாஹு அன்ஹு) அவர்களின் இந்தச் செயலின் மூலம் பாங்கு சொல்லுமுன் வேறு வசனங்கள் சொல்லலாம் என்பது தெளிவாகிறது. வேறு வசனங்களில் ஸலவாத், ஸலாம் போன்று மிகச் சிறந்த வசனம் வேறொன்றும் இல்லை.

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம். இன்னல்லாஹ வமலாயிகத்தஹு யுஸல்லூன அலன்னபிய்யி யா அய்யுஹல்லதீன ஆமனூ ஸல்லூ அலைஹி வ ஸல்லிமூ தஸ்லீமா. நிச்சயமாக அல்லாஹு(தஆலாவு)ம், அவனது மலக்கு(அமரர்)களும் இந்த நபியின் மீது சலவாத்து சொல்கிறார்கள். ஈமான் கொண்டவர்களே! நீங்களும் அவர்கள் மீது சலவாத்தும் சலாமும் சொல்லுங்கள். (அல்-குர்ஆன் 33-56) .

♦ என் மீது ஒரு தடைவ சலவாத்து சொன்னால் அவன் மீது அல்லாஹ் பத்து தடைவ சலவாத்து சொல்வான். பத்து தவறுகளை அவனை விட்டும் இறக்குவான்(மன்னிப்பான்) பத்து படித்தரங்களை உயர்த்துவான் என நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல் மிஷ்காத் 922)

சலவாத் சொல்வதற்கு அல்லாஹுதஆலாவோ, நபிகள் நாயகமோ எதையும் மட்டுப்படுத்தவில்லை. விரும்பிய நேரத்தில் விரும்பிய அளவு சொல்லலாம். மாஷிஃத – நீ விரும்பிய அளவு அதிகப்படுத்தி சலவாத்து சொல் என்று ஏவியும் இருக்கிறார்கள். அல்லாஹுதஆலாவும் மலக்குகளும், மனிதர்களும் ஒன்றுபோல் செய்யும் அமல் இந்த சலவாத்து மட்டும்தான். இதை அங்கே ஓதக்கூடாது, இங்கே ஓதக்கூடாது என்று என்னமோ ஹராமான பெரிய பாவத்தைப் போன்று வரிந்து கட்டிக் கொண்டு தடுப்பது, நிறுத்துவது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேரில் பொறாமை கொள்வதுதான்.

♦ நல்ல காரியங்களுக்கு முன்னும் பின்னும் துஆவானாலும் கூட சலவாத்து ஓதுவதினால் அவைகள் அல்லாஹுத்தஆலா இடத்தில் அங்கீகாரம் பெறுகிறது. நிச்சயமாக துஆ வானத்திற்கும், பூமிக்குமிடையில் நிறுத்தப்பட்டுள்ளது. உனது நபியின் மீது சலவாத்து சொல்லும் வரை அதில் நின்றும் எதுவும் உயராது என்று உமர் இப்னு கத்தாப் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் சொன்னார்கள்.


​​நூல்: திர்மிதி, மிஷ்காத் 938

♦ முஅத்தின் ” பாங்கு சொல்வதை நீங்கள் கேட்டால் அவர் சொல்வதுபோல் நீங்களும் சொல்லுங்கள். பின்னர் என்மீது “ஸலவாத் ” சொல்லுங்கள். (ஹதீஸை கடைசிவரை பார்க்கவும்.), (நூல் – ஷர்ஹு முஸ்லிம், பாகம் – 04, பக்கம் – 85 அறிவிப்பு – அம்றுப்னுல் ஆஸ் றழியல்லாஹு அன்ஹு, அபூதாஊத்,பாகம் – 01, பக்கம் – 144 அறிவிப்பு – அம்றுப்னுல் ஆஸ் (றழியல்லாஹு அன்ஹு)

“முஅத்தின்” பாங்கு சொல்லும் போது அதைகேட்பார் அவர் சொல்வது போல் சொல்லவேண்டும். பின்னர் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது “ஸலவாத்” சொல்ல வேண்டும். இந்த ஹதீஸில் வந்துள்ள “ஸல்லூ” ஸலவாத் சொல்லுங்கள் என்ற ஏவல் வினைச்சொல் பாங்கு சொன்ன முஅத்தினையும், அதைக் கேட்டோரையும் எடுத்துக் கொள்ளக்கூடிய பொதுவான சொல்லாயிருப்பதால் பாங்கு சத்தத்தை கேட்டவர்கள் ஸலவாத் சொல்லி பாங்கு ‘துஆ’ஓதுவது ஸுன்னத்”ஆக இருப்பது போல் முஅத்தின் – பாங்கு சொன்னவனும் ஸலவாத் சொல்லி ‘ துஆ’ ஓதுவது ‘ஸுன்னத்’ ஆனதே”. “முஅத்தின்” பாங்கு சொன்னதோடு அவனும் அதைக் கேட்டவனேயாவான். ஸலவாத் சொல்வது அவனுக்கும் ஸுன்னத் ஆனதே.


​​

♣ பாங்கு, இகாமத்திற்கு முன், பின் சலவாத்து சொல்வது பற்றி இமாம்களின் கருத்துக்கள்

பாங்கு, இகாமத்திற்கு முன், பின் சலவாத்து ஓதுவது 'ஷரஹுல் வஸீத்தில்' இமாம் நவவி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் சொன்ன பிரகாரம் இகாமத்திற்கு முன் சலவாத்து சொல்வது சுன்னத்தாகும்.


​​இதையே ஷெய்குனா இப்னு ஸியாத் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ஊண்டுதல் பிடித்துள்ளார்கள். இமாம் ஷெய்குல் கபீருல் பக்றி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் பாங்கிற்கும், இகாமத்திற்கும் முன்னால் நிச்சயம் சலவாத்து சொல்வது சுன்னத்தாகும் என்று சொல்லி இருக்கிறார்கள்.'


​​நூல்: பத்ஹுல் முயீன் 1/280, நிஹாயதுல் முஹ்தாஜ் 1/432, பஸ்லுன் பில்அதானி வல்இகாமதி


​​

ஆகவே இமாம்கள் பாங்கு, இகாமத்திற்கு முன் பின் ஸலவாத் ஓதுவது சுன்னத் என்று தெளிவாக சொல்லி இருக்கிறார்கள். இதுவே செயல்படுத்துவதற்கு போதுமாகும். இதையே அடிப்படையாக வைத்துதான் நம் முன்னோர்களான நாதாக்கள் முற்காலத்திலிருந்தே பாங்கிற்கு முன்னும் சலவாத்தை ஓதி வந்துள்ளார்கள்.


​​சுன்னத் என்று சொல்லும் இமாம் ஷெய்குல் கபீருல் பக்றி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களுக்கு என்ன அந்த பொதுச் சட்டம் தெரியாமாலா ஆதாரம் இல்லாமலா, முட்டாள்தனமாகவா சுன்னத் என்று சொல்லியிருக்கிறார்கள்? அல்லாஹுதஆலா அப்படிப்பட்ட எண்ணத்தை விட்டும் நம்மை காப்பாற்றுவானாக! அவர்களது பதவி, அந்தஸ்தை உயர்த்துவானாக! ஆமீன்.எவ்வளவு சலவாத்தை எவ்விடத்திலும் அதிகப்படுத்தினாலும் நன்மை கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.