MAIL OF ISLAM

Knowledge & Wisdom



பில்லி சூனியம் உண்டா?


எழுதியவர்: மௌலவி S.L அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.


இஸ்லாத்தின் பார்வையில் பில்லி - சூனியம் உண்டா?, அதன் மூலம் பாதிப்புகள் ஏற்படுமா?

♣ சூனியம் பற்றி வழிகெட்ட வஹ்ஹாபிகளின் நிலைப்பாடு :-

சூனியம் என்பது மெஜிக்கைக் குறிக்கும். மேலும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக வரும் ஆதாரபூர்வமான ஹதீஸே முதலில் இந்த வஹ்ஹாபிகளால் மறுக்கப்பட்டது.


​​பின்னர் அதற்கு விமர்சனம் எழுந்ததால் அதை நியாயப்படுத்த இன்னும் பல ஹதீஸ்கள் மறுக்கப்பட்டன. பின்னர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதாக வரும் ஹதீஸை பல்வேறு வாதங்களை முன்வைத்து மறுத்து வருகின்றார்கள். அதேவேளை சூனியம் என்று ஒன்றில்லை. சூனியத்திற்கு எந்தத் தாக்கமுமில்லை என்று நேரடியாக குர்ஆனுக்கு முரணாகவே எழுதியும் பேசியும் வருகின்றார்கள். ​​சிலர் அவர்கள் பார்வையில் ஹதீஸ்கள் கூட குர்ஆனுக்கு முரண் என்பதற்காகவும் சிலர் தனது பகுத்தறிவிற்கு முரண்படுகிறது என்பதற்காகவும் சூனியத்தை மறுக்கின்றார்கள்.

எனவே இஸ்லாத்தில் சூனியம் என்றதொன்று இருக்கின்றது. அல்லாஹ் நாடினால் அதன் மூலம் பாதிப்பு - தாக்கம் ஏற்படும் என்பதையும் குர்ஆன், ஹதீஸ் கூறும் சூனியம் வெறும் மெஜிக் அல்ல என்பது குறித்து நாம் தெளிவு பெறவேண்டியுள்ளது. அதன் பின்னர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்ட ஹதீஸ் சம்பந்தப்பட்ட வாதங்களையும் நோக்கலாம்.

♣ குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் (பில்லி - சூனியம் உண்டா?), அதன் மூலம் பாதிப்பு ஏற்படுமா? என்பதற்குறிய ஆதாரங்கள் பின்வருமாறு :

♦ அல்குர்ஆனில் சூனியம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட பல பதங்களைக் காணலாம் “ஸிஹ்ரு” என்ற பதம் சுமார் 12 இடங்களிலும் “அஸ்ஸிஹ்ரு” 6 இடங்களிலும் “அஸ்ஸஹரது” என்பது 8 இடங்களிலும் “ஸாஹிர்” (சூனியக்காரன்) என்பது 7 இடங்களிலும் “அஸ்ஸாஹிர்” என்பது 2 இடங்களிலும் “அஸ்ஸாஹிரூன்” என்பது 1 இடத்திலும் “மஸ்ஹூரா” என்பது 3 இடங்களிலும் “அல்முஸஹ்ஹரீன்” என்பது 2 இடங்களிலும் இடம்பெற்றுள்ளன . எனவே இல்லாத ஒன்றைத்தான் அல்குர்ஆனில் இத்தனை இடங்களில் அல்லாஹ் குறிப்பிட்டுள்ளானா?

♦ சூனியம் பற்றி (அல்குர்ஆன் 2:102) வசனம் மிக விரிவாகப் பேசுகின்றது. அந்த வசனத்தின் அடிப்படையான சில அம்சங்களை இங்கே நோக்குவோம்:

(யூதர்களான) அவர்கள் ஸுலைமானின் ஆட்சிக்கு எதிராக ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள்; ஆனால் ஸுலைமான் ஒருபோதும் நிராகரித்தவர் அல்லர்; ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள்; அவர்கள்தாம் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக்கொடுத்தார்கள்; இன்னும், பாபில் (பாபிலோன் என்னும் ஊரில்) ஹாரூத், மாரூத் என்ற இரண்டு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதையும் (தவறான வழியில் பிரயோகிக்கக் கற்றுக்கொடுத்தார்கள்). ஆனால் அவர்கள் (மலக்குகள்) இருவரும் “நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம் (இதைக் கற்று) நீங்கள் நிராகரிக்கும் காஃபிர்கள் ஆகிவிடாதீர்கள்” என்று சொல்லி எச்சரிக்காத வரையில், எவருக்கும் இ(ந்த சூனியத்)தைக் கற்றுக் கொடுக்கவில்லை; அப்படியிருந்தும் கணவன் - மனைவியிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டார்கள். எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது; தங்களுக்குத் தீங்கிழைப்பதையும், எந்த வித நன்மையும் தராததையுமே - கற்றுக் கொண்டார்கள். (சூனியத்தை) விலை கொடுத்து வாங்கிக் கொண்டவர்களுக்கு, மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதை அவர்கள் நன்கறிந்துள்ளார்கள். அவர்கள் தங்கள் ஆத்மாக்களை விற்றுப்பெற்றுக்கொண்டது கெட்டதாகும். இதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?  அல்குர்ஆன் : 2:102

♣  மேலே குறிப்பிடப்பட்ட ( 2:102) குர்ஆன் வசனத்திலிருந்து சில விளக்கங்கள் பின்வருமாறு :

1) சூனியத்தைக் கற்றுக்கொடுப்பது நிராகரிப்பை எற்படுத்தும். ஏனெனில் ஷைத்தான் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக் கொடுத்ததினால் காபிர்களானதாக இந்த வசனம் கூறுகின்றது.

2) சூனியத்தைக் கற்பதும் குப்ராகும். ஏனெனில், ஹாரூத், மாரூத் என்ற இரு மலக்குகளும் தம்மிடம் சூனியத்தைக் கற்க வருபவர்களிடம் நாங்களே சோதனையாக இருக்கின்றோம் நீங்கள் நிராகரித்து விடாதீர்கள் என்று கூறியுள்ளனர்.

3)  அல்லாஹ் நாடினால் அதன் மூலம் கணவன்-மனைவிக்கிடையே பிரிவினை உண்டுபண்ண முடியும்.

4) அதில் தீங்கு உண்டு. ஆனால் அல்லாஹ்வின் அனுமதியின்றி அவர்களால் யாருக்கும் எந்தத் தீங்கையும் சூனியத்தின் மூலம் செய்ய முடியாது.

5)  சூனியத்தைக் கற்பது நன்மையளிக்காது. தீங்குதான் விளைவிக்கும்.

6)  தங்களை விற்று சூனியத்தை வாங்கிக் கொண்டவர்களுக்கு மறுமையில் அழிவே.

இத்தகைய அடிப்படை அம்சங்களை இந்த வசனம் கூறுகின்றது. சூனியத்தின் மூலம் கணவன்-மனைவிக்கிடையே பிரிவினை உண்டுபண்ண முடியும் அல்லாஹ் நாடியால் அதன் மூலம் தீங்கு உண்டாகும் என்று தெளிவாகக் குர்ஆன் கூறும்போது பகுத்தறிவு வாதத்திற்கு குர்ஆனைவிட கூடுதல் முக்கியத்துவமளித்து சூனியத்தை மறுக்கலாமா?

♦ ஏழு பெரும் பாவங்களைத் தவிர்ந்து கொள்ளுமாறு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியுள்ளார்களே! அதில் இரண்டாவதாக சூனியத்தைக் குறிப்பிட்டுள்ளார்கள்.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு

நூல்கள்: புகாரி, முஸ்லிம்

ஹதீஸ் விளக்கம்: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தவிர்ந்து விலகிக் கொள்ளுமாறு சொன்ன பெரும் பாவத்தை (சூனியத்தை) நீங்கள் மறுகின்றீர்களா? இவ்வாறெல்லாம் கேள்வி எழுப்பும்போது ஸிஹ்ரு – சூனியத்திற்கு மெஜிக் என புதிய மாற்று விளக்கம் கொடுப்பது ஏற்க முடியாதது என்பது தெளிவாகப் புலனாகும். குர்ஆன், ஹதீஸ் மிகத் தெளிவாக சூனியம் இருப்பதையும் அல்லாஹ் நாடினால் அதற்குத் தாக்கம் உண்டு என்பதையும் வெளிப்படையாகவே கூறுகின்றது. இதில் குர்ஆனையும் ஏற்றுக் கொள்பவர்களுக்கு இரண்டாம் கருத்துக்கு எள்ளளவும் இடமில்லை. மனோ இச்சையையும் பகுத்தறிவையும் வழிப்பட்ட முஃதஸிலாக்கள் போன்றவர்களே சூனியத்தை மறுத்திருக்கின்றனர்.

♦ மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கும், சூனியக்காரர் களுக்குமிடையில் பிர்அவ்ன் போட்டி வைக்கின்றான். அந்தப் போட்டி நிகழ்ச்சி சூனியம் என்று ஒரு கலை இருக்கின்றது அதன் மூலம் சில பாதிப்புக்களை அல்லாஹ் நாடினால் ஏற்படுத்த முடியும் என்பதை மிகத் தெளிவாகவே பின்வரும் குர்ஆன் வசனம் எடுத்துக் காட்டுகின்றது."அதற்கு (மூஸா), “நீங்கள் (முதலில்) எறியுங்கள்” என்று கூறினார். அவ்வாறே அவர்கள் (தம் கைத்தடிகளை) எறிந்தார்கள்; மக்களின் கண்களை மருட்டி அவர்கள் திடுக்கிடும்படியான மகத்தான சூனியத்தை செய்தனர்"  அல்குர்ஆன் : 7:116

அதற்கவர்: “அவ்வாறன்று! நீங்களே (முதலில்) எறியுங்கள்” என்று (மூஸா) கூறினார். (அவர்கள் எறியவே) அவர்களுடைய கயிறுகளும் அவர்களுடைய தடிகளும் அவர்கள் சூனியத்தால் (பாம்புகளாக) நிச்சயமாக நெளிந்தோடுவது போல் அவருக்குத் தோன்றியது. அல்குர்ஆன் : 20:66

இந்த நிகழ்ச்சி சூனியத்திற்கு ஒரு தாக்கம் உள்ளது என்பதை மிகத் தெளிவாகவே கூறுகின்றது! குர்ஆனை நம்பும் யாரும் சூனியத்தை இல்லை என்று கூறமுடியாது. அல்லாஹ் நாடினால் சூனியத்தின் மூலம் இல்லாததை இருப்பது போன்ற போலி தோற்றத்தை ஏற்படுத்தலாம்.கணவன்-மனைவிக்கிடையே பிளவை உண்டுபண்ணலாம்.அல்லாஹ் நாடினால் அதன் மூலம் சூனியக்காரர்கள் பிறருக்குச் சில தீங்குகளை ஏற்படுத்தலாம் எனக் குர்ஆன் மிகத் தெளிவாகவே கூறுகின்றது.

♦  இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்“ தினந்தோறும் காலையில் (வெறும் வயிற்றில்) ஏழு “அஜ்வா“ (ரகப்) பேரீச்சம் பழங்களைச் சாப்பிடுகிறவருக்கு, அந்த நாள் எந்த விஷமும் இடரளிக்காது; எந்தச் சூனியமும் அவருக்கு இடையூறு செய்யாது.


அறிவிப்பாளர்: ஹழ்ரத் ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலியல்லாஹு அன்ஹு) 

ஷஹீஹ் புகாரி 5445


♦இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார் (மதீனாவிற்கு) கிழக்கிலிருந்து இரண்டு மனிதர்கள் வந்து (எங்களிடையே சொற்பொழிவும்,
கருத்துச் செறிவும் மிகதோர்) சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்,
“நிச்சயமாகப் பேச்சில் சிஹ்ர் - சூனியம் (கவர்ச்சி) உள்ளது” என்று சொன்னார்கள்.


நூல்: புகாரி 5146, 5767


♦ அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: குர்ஆனை ஓதிவாருங்கள். ஏனெனில், குர்ஆன் ஓதிவருபவர்களுக்கு அது மறுமையில் வந்து (இறைவனிடம்) பரிந்துரை செய்யும். இரு ஒளிச்சுடர்களான ”அல்பகரா” மற்றும் ”ஆலு இம்ரான்” ஆகிய இரு அத்தியாயங்களையும் ஓதிவாருங்கள். ஏனெனில், அவை மறுமை நாளில் நிழல்தரும் மேகங்களைப் போன்றோ அல்லது அணி அணியாகப் பறக்கும் பறவைக் கூட்டங்களைப் போன்றோ வந்து தம்மோடு தொடர்புள்ளவர்களுக்காக (இறைவனிடம்) வாதாடும். ”அல்பகரா” அத்தியாயத்தை ஓதிவாருங்கள். அதைக் கையாள்வது வளம் சேர்க்கும். அதைக் கைவிடுவது இழப்பைத் தரும். இவ்வத்தியாயத்திற்கு முன் சூனியக்காரர்கள் செயலிழந்துபோவார்கள்.


அறிவிப்பவர்: ஹழ்ரத் அபூஉமாமா அல்பாஹிலீ ரலியல்லாஹு அன்ஹு

நூல்: முஸ்லிம் 1470, 1471


♣ நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக வரும் ஆதாரபூர்வமான ஹதீஸின் விளக்கம் பின்வருமாறு

​:

♦ லஃபீத் இப்னுல் அஃஸம் என்ற பனூ ஸுரைக் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு மனிதன் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்குச் சூனியம் செய்தான். ஒன்றைச் செய்யாமலேயே செய்ததாக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு மாயத் தோற்றம் இதனால் ஏற்பட்டது. ஒரு நாள் அல்லது ஒரு இரவு அவர்கள் என்னிடம் இருக்கும் போது பிரார்த்திக் கொண்டே இருந்தார்கள். பின்னர்,’ஆயிஷாவே! நான் தீர்வு கேட்டுக்கொண்டிருந்த விடயத்தில் அல்லாஹ் எனக்குத் தீர்வு சொல்லி விட்டான். இரண்டு மனிதர்கள் என்னிடம் வந்து ஒருவர் என் தலையருகிலும், மற்றவர் என் காலுக்கு அருகிலும் அமர்ந்தனர். அவர்களில் ஒருவர் மற்றவரிடம் ‘இவருக்கு என்ன?’ என்று கேட்க, மற்றவர் ‘இவர் சூனியம் செய்யப்பட்டுள்ளார்’ என்றார். ‘யார் செய்தது?’ எனக் கேட்ட போது, ‘லபீதிப்னுல் அஃஸம்’ எனக் கூறினார். ‘எதில் சூனியம் செய்யப்பட்டுள்ளது?’ எனக் கேட்ட போது ஆண் ஈத்தமரப் பாளையிலே சீப்பு, முடி என்பவற்றில்’ என மற்றவர் பதில் கூறினார். ‘எங்கே?’ எனக் கேட்ட போது, ‘தஃலான் கோத்திரக் கிணற்றில்’ என்று கூறினார். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தனது தோழர்கள் சிலருடன் அங்கே வந்தார்கள்.பின்னர், (என்னிடம்) வந்த போது ‘ஆயிஷாவே! அந்தக் கிணற்றின் நீர் மருதோண்டி கலந்தது போன்று அல்லது அந்தக் கிணற்றருகில் இருந்த ஈத்த மரங்களின் கிளைகள் ஷைத்தானின் தலைபோன்று இருந்தது’ என்றார்கள். ‘அல்லாஹ்வின் தூதரே! அதை நீங்கள் வெளிப்படுத்திருக்கக் கூடாதா?’ என நான் கேட்டேன். அதற்கவர்கள், ‘அல்லாஹ் எனக்கு சுகமளித்துவிட்டான். இதன் மூலம் மக்கள் மத்தியில் தீமை பரவுவதை நான் வெறுத்தேன்’ எனக் கூறினார்கள். அந்தக் கிணற்றை மூடி விடுமாறு ஏவினார்கள் அது மூடப்பட்டது’


ஹழ்ரத் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா)

(நூல்கள் : புகாரி 3268, முஸ்னத் அஹ்மத் 23211

ஹதீஸ் விளக்கம் : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது என்ற ஆதாரபூர்வமான ஹதீஸை மறுப்போர் பின்வருமாறு வாதம் செய்கின்றனர். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஹதீஸ் பல குர்ஆன் வசனங்களுக்கு முரண்படுகின்றது."தூதரே! உமது இரட்சகனிடமிருந்து உமக்கு இறக்கிவைக்கப்பட்டதை எடுத்துரைப்பீராக! (அவ்வாறு) நீர் செய்யாவிட்டால் அவனது தூதுத்துவத்தை நீர் எடுத்துரைத்தவராகமாட்டீர். அல்லாஹ் உம்மை மனிதர்களிலிருந்து பாதுகாப்பான். நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பாளர்களான கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான்". (அல்குர்ஆன் 5:67) இந்த வசனம் மனிதர்களிடமிருந்து நபியை அல்லாஹ் பாதுகாப்பான் என்று உத்தரவாதப் படுத்துகின்றது. எனவே நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது என்றால் நபிக்கு அல்லாஹ் கொடுத்த பாதுகாப்பு எங்கே? அல்லாஹ் பாதுகாப்பான் எனும் போது நபிக்கு சூனியம் செய்ய முடியுமா? என்ற அடிப்படையில் வாதத்தினை வழிகெட்ட வஹ்ஹாபிகள் கூறுகிறார்கள்.

♦ மேலே கூறப்பட்ட (அல்குர்ஆன் 5:67) வசனத்திற்கு இந்த ஹதீஸ் (புகாரி 3268) எங்கே முரண்படுகின்றது? இந்த வாதத்திற்கு ஒரு வரியில் விடை கூறலாம்! அல்லாஹ் கூறியது போன்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சூனியத்திலிருந்து பாதுகாக்கப்பட்டார்கள் என்றுதானே இந்த ஹதீஸ் கூறுகின்றது? இந்த வசனமும், ஹதீஸும் முரண்படவில்லையே! என்று கூறி விடலாம். உஹதுப் போரில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தாக்கப்படவில்லையா? அவரது முகத்தில் இரத்தம் தோயவில்லையா? கைபரில் யூதப் பெண், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு விஷம் கலந்த ஆட்டிறைச்சியை வழங்கினாள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அதில் சிறிது சாப்பிட்டு விட்டார்கள். விஷம் கலக்கப்பட்ட செய்தியினை நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டது, பின்னர் அல்லாஹ் அவர்களைக் காத்தான்.

மேலும் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் தனது மரண வேளையில்,(நான் கைபரில் சாப்பிட்ட (விஷம் கலந்த) உணவின் வேதனையை இப்போது உணர்கிறேன். (ஷஹீஹ் புகாரி) என்றார்களே! அப்படியாயின் இந்த ஹதீஸ் (அல்குர்ஆன் 5:67) வசனத்திற்கு முரண்படுகின்றதா? உண்மையில் (அல்குர்ஆன் 5:67) வசனத்தில் நபியைப் பாதுகாப்பதாக அல்லாஹ் உத்தரவாதம் அளிக்கின்றான். அந்த உத்தரவாதத்தின் அர்த்தம் என்னவென்றால் நபியை யாரும் கொல்ல முடியாது என்பதுதான். எனவே, கொல்ல முடியாது எனக் கூறும் குர்ஆன் வசனத்திற்குச் சூனியம் செய்யப்பட்டுப் பின்னர் பாதுகாக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் எந்த வகையில் முரண்படுகின்றது? என்று சிந்தித்துப் பாருங்கள்.கொல்ல முடியாது என்பதுதான் (அல்குர்ஆன் 5:67) வசனத்தின் விளக்கமாகும்.

♦ (பெற்றோரை) நோவினை செய்பவன், சூனியத்தை நம்பிக்கைக் கொண்டவன், தொடர்ந்து மது அருந்துபவன், விதியை மறுப்பவன் ஆகியோர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்கள் என இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.


​​அறிவிப்பாளர்: ஹழ்ரத் அபூ தர்தா (ரலியல்லாஹு அன்ஹு)

நூல் : அஹ்மத் 26212


ஹதீஸ் விளக்கம் :

1) சூனியத்தை நம்பியவன் சொர்க்கம் செல்ல முடியாது, எனவே சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என்ற நம்பிக்கை தவறானது என்று இந்த ஹதீஸை வைத்து வழிகெட்ட வஹ்ஹாபிகள் கூறுவார்கள். எனவே நாம் தெளிவாக புரிந்துக்கொள்ள வேண்டும் இந்த ஹதீஸில் சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என நம்பக் கூடாது என்று சொல்லப்படவில்லை. மாறாக குர்ஆன் மேலும் ஆதாரப்பூர்வமான பல நபிமொழிகளும் சூனியத்தால் அல்லாஹ் நாடினால்தான் பாதிப்பு ஏற்படும் என்றே கூறுகின்றன. இதற்கு முரணில்லாமல் இந்த ஹதீஸை புரிந்துகொள்ள வேண்டும். அந்த அடிப்படையில் சூனியத்தால் சுயமாகவே பாதிப்பு ஏற்படும் என்று நம்பிக்கை கொள்ளக் கூடாது, அவ்வாறு சுயமாகவே அல்லாஹ்வின் நாட்டமின்றி சூனியத்தால் பாதிப்பு தயக்கம் ஏற்படும் என்று நம்பிக்கை கொள்ளும் போதுதான் (சூனியத்தை நம்பியவன் சொர்க்கம் செல்ல முடியாது) என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். மாறாக அல்லாஹ் நாடினால்தான் அந்த சூனியத்தால் பாதிப்பு தாக்கம் ஏற்படும் என்பதே விளக்கம் ஆகும்.

ஹதீஸ் விளக்கம் :

2)  இச்செய்தியில் சுலைமான் இப்னு உத்பா என்ற அறிவிப்பாளர் இடம்பெற்றுள்ளார். இவர் பெரிய அளவில் நினைவாற்றல் உள்ளவரோ பரவலாக அனைவராலும் அறியப்பட்டவரோ அல்ல. இவரை சில அறிஞர்கள் நம்பகமானவர் என்று சொன்னாலும் வேறு சிலர் இவரை குறை கூறியும் உள்ளனர். (நூல்கள் : தஹ்தீபுத் தஹ்தீப் 4:184, முஸ்னது அஹ்மது பாகம் 6 பக்கம் 441)அந்த அடிப்படையில் இந்த ஹதீஸ் (அஹ்மத் 26212) பலவீனமானதாகும்.

♦ எனவே, அன்பான! வஹ்ஹாபி கொள்கையில் உள்ளவர்களே! உங்கள் தலைவர் பீ, ஜே (TNTJ, SLTJ) இவர் மீதுள்ள பற்றை ஒரு பக்கம் வைத்து விட்டு, நாம் குறிப்பிட்ட அம்சங்களை நிதானமாகச் சிந்தித்துப் பார்த்து, அவர்களது இந்த வழிகேட்டிலிருந்து உங்களை விடுவித்துக்கொள்ள முயற்சியுங்கள்.


அவர்கள் செய்த சேவைகள், தியாகங்களால் அவர் சொல்லும் அசத்தியம் சத்தியமாகி விடாது! அவர், தனது கருத்தை நிலைநிறுத்தக் கடைப்பிடிக்கும் மோசமான வழிமுறையும் சரியாகி விடாது! தியாகம், சேவை வேறு, சரி-பிழை வேறு. சரி-பிழையைக் குர்ஆன்-ஹதீஸ், இமாம்களின் கருத்துக்கள் தீர்மானிக்கும். எனவே அவர்களது இந்த வழிகேட்டிலிருந்து மீண்டு சத்திய கொள்கை அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத் பக்கம் வருமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.