MAIL OF ISLAM

Knowledge & Wisdom



துல்ஹஜ்  மாதத்தின்  முதல்  பத்து  நாட்களின்  சிறப்புகள்

​எழுதியவர்: மௌலவி  S.L. அப்துர்ரஹ்மான்  (கௌஸி)  கல்முனை.


இஸ்லாத்தின் பார்வையில் புனிதமான துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் சிறப்புக்களும், இந்த நாட்களில் செய்ய வேண்டிய அமல்களும்.


​​

♣ இஸ்லாம் கூறும் துல்ஹஜ் மாதம்

இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே! நல்லமல்கள் செய்து அதிகமான நன்மைகளை அடைந்து கொள்வதற்காக அல்லாஹ் பெறுமதி வாய்ந்த சில காலங்களை நமக்கு தந்திருக்கின்றான். அக்காலங்களில் நாம் அதிக நல்லமல்களைச் செய்து அதிக நன்மைகளைத் தேடிக் கொள்கின்றோம்.

அந்த அடிப்படையில் கால நேரங்களையும் மனிதர்களையும் படைத்த அல்லாஹ், அவற்றில் தான் விரும்பியதை சிறப்பாக்கியும் வைத்திருக்கிறான். அந்த வகையில் மனித இனத்தில் நபிமார்களை அவர்களில் சிறப்பாக்கி வைத்திருப்பதுடன் 'உலுல் அஸ்ம்' என்று அந்த றசூல்மார்களில் குறிப்பிடத்தக்க ஒரு சிலரைத் தெரிவு செய்து அவர்களில் மிக மிகச் சிறப்பான நபியாக றசூலாக அடியானாக அண்ணலார் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அல்லாஹ் தேர்வு செய்தான்.


​​இவ்வாறே இடங்களைப் படைத்த அல்லாஹ் மக்கா முகர்ரமா. மதீனா முனவ்வரா, பைத்துல் முகத்திஸ் ஆகிய இடங்களை ஏனைய சகல இடங்களைவிடவும் கண்ணியப்படுத்தி வைத்தான். இது போல கால நேரங்களைப் படைத்த அல்லாஹ் வெள்ளிக்கிழமையை நாட்களின் தலைவனாகவும் மாதங்களில் முஹர்ரம், துல் கஃதா, துல் ஹிஜ்ஜா, ரஜப், ஆகிய நான்கு மாதங்களை அல்லாஹ் சிறப்பாக்கியும் வைத்திருக்கிறான்.

♦நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும், அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை இது தான் நேரான மார்க்கமாகும், ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள், இணை வைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.(அல்குர்ஆன் : 9:36)

♦ காலம் அதன் சுழற்சிக்கேற்ப சுழன்றுகொண்டே இருக்கிறது. வானங்கள் பூமி படைக்கப்பட்ட நாள் முதலே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். அதில் நான்கு மாதங்கள் புனிதமானதாகும். மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக வருபவை: துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரமாகும். ரஜப் முழர் என்பது ஜுமாதா (ஜமாதுஸ்ஸானி), ஷஃபான் ஆகிய இரண்டுக்கும் மத்தியிலுள்ளதாகும்' என நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.


​​நூல் புகாரி - 3197, 4406, 4662, 5550, முஸ்லிம்

வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளிலிருந்து இந்த நான்கு மாதங்களும் கண்ணியமாக்கப்பட்டிருந்த காரணத்தினால்தான் நபிகள் நாயகம் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பிற்கு முன்பிருந்த காலத்து மக்களிடத்திலும் இந்த மாதங்கள் சிறப்பானதாகக் கருதப்பட்டு வந்திருக்கிறது.

இன்னும் இந்த மாதங்களில் உங்களுக்கு நீங்களே அநியாயம் செய்து கொள்ளாதீர்கள் என்றும் அல்லாஹ் உத்தரவிட்டிருக்கிறான். அதனால்தான் கண்ணியமிக்க இந்த மாதங்களில் புரியப்படும் நல்லமல்களுக்கு அதிகபட்ச நற்கூலியும், பாவச் செயல்களில் ஈடுபடுவோர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும். கடும் குற்றச் செயல்களாகக் கருதப்படும் என ஸெய்யிதுனா இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அறிவித்திருக்கிறார்கள். ஆகையால் துல்ஹஜ் மாத்ததின் முதல் பத்து நாட்களும் பெறுமதியான காலங்களில் உள்ளவையாகும். எனவே துல்ஹஜ் பத்து நாட்களின் சிறப்புகளை பின்வருமாறு அறிந்து கொள்வோம்.


​​

♣ துல்ஹஜ் பத்து நாட்களின் சிறப்புகள்

துல்ஹஜ் பத்து நாட்களைக் கொண்டு அல்லாஹ் சத்தியம் செய்துள்ளான். அல்லாஹ் ஏதாவதொன்றைக் கொண்டு சத்தியம் செய்தால் அவ்விஷயம் மிகவும் சிறந்தது. உயர்வானது என்பதைத்தான் அது அறிவிக்கின்றது. மகத்துவமிக்க அல்லாஹ் மகத்துவமான ஒன்றை கொண்டே தவிர சத்தியம் செய்ய மாட்டான். அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்.

விடியற்காலையின் மீது சத்தியமாக. பத்து இரவுகளின் மீதும் சத்தியமாக (சூரத் :அல்பஜ்ர் 1,2)

இவ்வசனத்தில் கூறப்பட்ட பத்து இரவுகள் என்பது துல்ஹஜ் மாதத்தின் பத்து நாட்களாகும். இக்கருத்தைத் தான் எல்லா குர்ஆன் விரிவுரை இமாம்களும் உலமாக்களும் ஏகோபித்துக் கூறியுள்ளனர். இக்கருத்துத் தான் சரியானது என இமாம் இப்னு கஸீர் (ரஹ்மதுல்லஹி அலைஹி) அவர்களும் கூறியுள்ளார்கள்.

♦  அடியார்கள் தன்னை நினைவு கூறுவதற்காக அல்லாஹ் ஏற்படுத்திய குறிப்பிட்ட சில நாட்களும் இந்த பத்து நாட்களில் உள்ளது. அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான் தங்களுக்குரிய பலன்களை அடைவதற்காகவும்; குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ் அவர்களுக்கு அளித்துள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) நாற்கால் பிராணிகள் மீது அவன் பெயரைச் சொல்(லி குர்பான் கொடுப்)பவர்களாகவும் (வருவார்கள்); எனவே அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; கஷ்டப்படும் ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள். (அல்குர்ஆன் : 22:28)

இவ்வசனத்தில் குறிப்பிட்ட நாட்களில் என்பது துல்ஹஜ் மாதத்தின் பத்து நாட்களாகும் என உலமாக்கள் அனைவரும் ஏகோபித்து கூறியுள்ளனர். இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு), இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) ஆகியோரும் இக்கருத்தைத் தான் கூறியுள்ளனர்.

♦ துல்ஹஜ் பத்து நாட்களும் உலக நாட்களில் மிகவும் சிறந்த நாட்களாகும் என நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்: உலக நாட்களில் மிகவும் சிறந்தது துல்ஹஜ் பத்து நாட்களாகும். அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதை விடவும் இது சிறந்ததா? என நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, ஆம் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதை விடவும் இது சிறந்தது. ஆனால் ஒருவன் அல்லாஹ்வுக்காக அவனுடைய பாதையில் தனது உயிர், பொருள் ஆகியவற்றைக் கொண்டு சென்று போர் புரிந்து, மீண்டும் திரும்பி வராமல்,(காபிர்களால் ஷஹீதாக்கப்பட்டு) இருக்கின்றவனைத் தவிர எனக் கூறினார்கள்.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு

​நூல்: புகாரி 969


​​

♣ சிறப்பான இந்த நாட்களில் செய்யும் அமல்கள்

1)  ஹஜ் உம்ரா செய்தல் :-

ஒரு உம்ரா மற்ற உம்ராவுக்கு இடைப்பட்ட பாவங்களுக்கு பரிகாரமாகும் மேலும் ஏற்றுக்கொள்ப்பட்ட ஹஜ்ஜுக்குரிய கூலி சுவர்க்கத்தைத்தவிர வேறு எதுவும் இல்லை என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.


​​நூல் – புகாரி, முஸ்லிம்

2)  நோன்பு நோற்றல்:-

துல்ஹஜ் மாதத்தில் முதல் பத்து தினங்களிலும் புரியப்படும் நல்லமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களிலும் செய்யும் நல்லமல்கள் அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானதாக இல்லை. (நூல் புகாரி) என்ற நபி மொழியின் அடிப்படையில் துல்ஹஜ் பிறை 1 இலிருந்து இந்நாட்களில் ஸுன்னத்தான நோன்புகளை நோற்கவேண்டும். நோன்பும் நல்லமல்களில் உள்ளதாகும். எனினும் துல்ஹஜ் பிறை பத்து, பெருநாள் தினமாகையால் அத்தினத்தில் நோன்பு நோற்க கூடாது.

3)  அரஃபா தினம் நோன்பு நோற்றல்:-​

அரபா தினம்’ என்பது ஹிஜ்ரி ஆண்டின் பனிரெண்டாம் மாதமான துல்ஹஜ் பிறை ஒன்பதாம் நாளன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

அது வரலாற்று சிறப்பு மிக்க தினம். அன்றைய தினத்தில் தான் எல்லாம் வல்ல அல்லாஹ் அண்ணல் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் எனும் வாழ்வியல் நெறியை முழுமைப்படுத்தினான்.

‘இன்று உங்களது மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கி விட்டேன். எனது அருட்கொடையையும் உங்கள் மீது நான் நிறைவு செய்துவிட்டேன். இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை உங்களது மார்க்கமாக ஏற்றுக் கொண்டுவிட்டேன்’ (திருக்குர்ஆன் 5:3)

இந்த வசனம் ஹிஜ்ரி 10–ம் ஆண்டு நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மேற்கொண்ட ஹஜ்ஜின் போதும், துல்ஹஜ் பிறை 9–ம் நாளான அரபாதினத்தின் போதும் தான் இறங்கியது. இந்த வசனம் குறித்து அப்போதைய யூதர்கள் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் கூறும் போது, ‘நீங்கள் ஓர் இறை வசனத்தை ஓதுகிறீர்கள். அந்த வசனம் மட்டும் எங்களிடையே இறங்கியிருந்தால், அந்நாளை நாங்கள் பண்டிகை நாளாக ஆக்கிக் கொண்டிருப்போம்’ என்றார்கள். அதற்கு உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ‘அது எப்போது இறங்கியது? எங்கே இறங்கியது? அது இறங்கிய வேளையில் அரபா (துல்ஹஜ் 9–ம்) நாளில் அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் எங்கே இருந்தார்கள் என்பதையெல்லாம் நான் அறிவேன். அல்லாஹ்வின் மீது ஆணை!

நாங்கள் அப்போது அரபாவில் இருந்தோம்’ என்று கூறினார்கள்.


​​அறிவிப்பாளர்: ஹழ்ரத் தாரிக்பின் ஷிஹாப் ரலியல்லாஹு அன்ஹு

​நூல்: புகாரி: 4606

நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் துல்ஹஜ் ஒன்பதாவது தினத்திலும், ஆஷீரா தினத்திலும், ஒவ்வொரு மாதமும் மூன்று தினங்களிலும் நோன்பு நோற்கக் கூடியவராக இருந்தார்கள்.


​நூல் : அஹ்மத், அபுதாவுத்

கண்மணி நாயகம் சல்லலாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: அரஃபா நோன்பானது கடந்து போன வருடத்தினதும் பிறக்கவுள்ள வருடத்தினதும் பாவங்களுக்கான பிராயச் சித்தமாக அமைந்து விடுகின்றது.


​​நூல்கள்: புகாரி, முஸ்லிம் 2151, அபூதாவூத், திர்மிதி, நஸாஈ, இப்னுமாஜா

அரபா தினத்தை விட சிறந்த நாள் வேறெதுவும் கிடையாது. மற்ற தினங்களைவிட அன்றைய தினத்தில் அதிகமான நரக கைதிகளுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் விடுதலை அளிக்கிறான். அன்று அல்லாஹ் அடியார்களிடம் நெருங்கி வந்து, அவர்களின் மாண்பு குறித்து வானவர்களிடம் பெருமை பாராட்டுகிறான் என நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்.


​​அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா ரலியல்லாஹுஅன்ஹா

​நூல்: முஸ்லிம்

குறிப்பு:- அரஃபா தினத்தில் நோன்பு நோற்பது ஹஜ்ஜுக்குச் செல்லாதவர்களுக்குரிய ஸுன்னத்தாகும். புனித ஹஜ்ஜிக்கு செல்பவர்கள் அரபா தினத்தில் அதிகமதிகம் நன்மைகள் பலவற்றை புரிவதற்கும், உத்வேகத்துடனும், விவேகத்துடனும், புத்துணர்ச்சியுடனும் செயல்படுவதற்கும் ஹாஜிகள் இந்நோன்பை நோற்க முடியாது.

4)  தக்பீர் கூறுவது:-

கடமையான தொழுகைகளுக்குப் பின்னரும் பள்ளிவாசல் வீடு கடைவீதி போன்ற எல்லா இடங்களிலும் தக்பீர் கூறுவது துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப் பிரியமானவைகளாக இல்லை. ஆகவே லாஇலாஹா இல்லல்லாஹ் அல்லாஹூ அக்பர், அல்ஹம்து லில்லாஹ் போன்ற திக்ருகளை அதிகமாக செய்யுங்கள் என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். பெருநாளைக்காக கூறக்கூடிய விசேட தக்பீரை அரஃபா நாளின் ஸுப்ஹு தொழுகையிலிருந்து துல்ஹஜ் பிறை 13ம் நாள் அஸ்ர் தொழுகை வரைக்கும் கூறுவதல் வேண்டும்.

5)  ஹஜ் பெருநாள் தொழுகையிலும் குத்பா பிரசங்கத்திலும் கலந்து கொள்வது

நோன்புப் பெருநாள் தொழுகையில் முஸ்லிம்கள் பிரார்த்தனைகளிலும் நல்ல அமல்களிலும் கலந்து கொள்ள வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்.

6) உல்ஹியா (குர்பானி) கொடுத்தல்:-

துல்ஹஜ் பத்தாவது தினத்திலும் அய்யாமுத் தஷ்ரீக்குடைய தினங்களிலும் குர்பானி கொடுப்பது ஸுன்னத்தாகும். நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இத்தினத்தில் தனது கையாலேயே இரண்டு ஆடுகளை அறுத்து குர்பானி கொடுத்துள்ளார்கள். (பிறை 13 மஃரிப் வரை குர்பானி கொடுக்கலாம்)


​​

♣ உழ்ஹிய்யா சட்டங்கள் சம்மந்தமான வீடியோ பயான் கேட்ட கீழே உள்ள லிங்கை அலுத்தவும்

உரை : தமிழ் நாடு சுன்னத் வல் ஜமாஅத் தலைவர், பேராசிரியர், அல் ஹாபிழ், அப்லளுல் உலமா, அபுதலாயில், ஷெய்க் அப்துல்லாஹ் ஜமாலி MA ஹழ்ரத் அவர்கள்

1- பிராணியை அறுப்பதற்குண்டான விதிமுறைகள் என்ன?

on YouTube - https://youtu.be/pmeSkFpMxUg

2- பிராணிகளில் எவை உழ்ஹிய்யா கொடுப்பதற்குத் தகுதியானவை

on YouTube - https://youtu.be/Dj4izQWCMNY

3-குர்பானி தோலின் சட்டம் என்ன அதை மத்ரஸா மற்றும் பள்ளிவாசல்களுக்கு வழங்கலாமா

on YouTube - https://youtu.be/B9a6BBQqedg

4- குர்பானி உழ்ஹிய்யா என்றால் என்ன ஹஜ்ஜுப்பெருநாளில் அதைக்கொடுப்பதற்கான காரணம் என்ன?

on YouTube - https://youtu.be/yai594IPHLE

5- உழ்ஹிய்யாவை யார் கொடுக்கவேண்டும்

on YouTube - https://youtu.be/ZjE3n6DEa1Y

6- உழ்ஹிய்யாவின் சிறப்புகளைக்கூற முடியுமா?

on YouTube - https://youtu.be/UQ_9Dc1o9GQ

7- உழ்ஹிய்யா கொடுப்பவருக்கு ஏதாவது நடைமுறைகள் உண்டா?

on YouTube - https://youtu.be/WjZVpMZ4XyU

8- உழ்ஹிய்யா கொடுப்பதின் நேரம் எது?

on YouTube - https://youtu.be/S3NVeSHbNWI

9- உழ்ஹிய்யா கொடுக்கப்படும் பிராணிகள் எத்தனை வயதுடையதாக இருக்க வேண்டும்

on YouTube - https://youtu.be/VG-Ynb2ZJag

10- உழ்ஹிய்யா கொடுக்க தகுதியில்லாதவை எவை?

on YouTube - https://youtu.be/4oBM8TDs9_g

11- உழ்ஹிய்யா கறியை யார் யாருக்கு கொடுக்க வேண்டும் எவ்வளவு கொடுக்க வேண்டும்

on YouTube - https://youtu.be/hffAKo4WwKQ

12- உழ்ஹிய்யா கறியை எத்தனை நாள் வரை வைத்துக்கொள்ளலாம்

on YouTube - https://youtu.be/47biOfgxxGU

13- இறந்து போனவர்களுக்கு உழ்ஹிய்யா கொடுக்கலாமா?

on YouTube - https://youtu.be/3VBcS4_eOu0

14- அரஃபா நாளில் நோன்பு வைப்பது சுன்னத்தா ?

on YouTube - https://youtu.be/EBeHFx8u1Qk


​​

ஆகவே நன்மைகளைத் தேடிக்கொள்வதற்காக இறைவன் வழங்கியுள்ள இந்த புனிதமான துல்ஹஜ் மாதத்தின் பத்து தினங்களை அதிகமான வணக்க வழிபாடுகளைக் கொண்டு உயிர்ப்பிப்போம்.


​​இதுபோன்ற காலகட்டங்களில் தவ்பா செய்து அல்லாஹ்வின் பக்கம் திரும்புவதே ஒரு முஸ்லிமுக்கு அழகாகும். சொந்தபந்தங்களுக்கு உபகாரம் செய்தல்,நெருங்கிய உறவினர்களை சந்தித்தல் போன்ற நல்ல காரியங்களில் ஆர்வம் காட்ட மறந்து விடக்கூடாது. குறிப்பாக ஏழைகள், தேவையுள்ளோர், அனாதைகள் ஆகியோர் மீது கருணை காட்டி அவர்களுக்கு உபகாரம் செய்து இந்த நாட்களில் அவர்களின் மனதில் மகிழ்ச்சியும் குதூகலமும் நிலவச் செய்ய வேண்டும். நாம் அனைவரும் வாய்மையுடனும் தூய்மையுடனும் இறைவனை வணங்கி வழிபட்டு அவனது அன்பையும், அருளையும் பெற முயல்வோமாக.


​​எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக! ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.