MAIL OF ISLAM

Knowledge & Wisdom



​fபனா  fபில்லாஹ் 

​ 

எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.


('fபனாஃ fபில்லாஹ்') எனும் இறை நினைவால் மூழ்கிக் கொள்ளுதல் என்பதன் யதார்த்த உண்மை நிலை என்ன?


​​

(fபனாஃ fபில்லாஹ்) இறை நினைவால் மூழ்கிக் கொள்ளல் என்றால் என்ன?

ஸூபிஸத்தில் “fபனா” என்று ஓர் ஆன்மிக நிலை உண்டு. இறை ஞானிகளான ஸுபியாக்கள் “fபனா” என்ற சொல்லை தமது ஸூபிஸ ஞானக் கலைச்சொல்லாகப் பயன்படுத்தி வருகிறார்கள்.


​​

இச் சொல்லுக்கு அறபு மொழி அகராதியில் “அழிதல்” என்று பொருள் கூறப்பட்டுள்ளது. எனினும் இறை ஞானிகள், மகான்கள், காமிலான ஷெய்குமார்கள் இச்சொல்லுக்கு ஒரு வரைவிலக்கணம் கூறுவார்கள். அதாவது இச்சொல்லை அழிதல் என்ற பொருளுக்குப் பயன்படுத்தாமல் இதற்கு வேறொரு கருத்தைக் கூறுகிறார்கள்.

அதாவது மனிதன் உலகில் வாழ்வதற்காக ரூஹ் எனும் பரிசுத்த ஆவி மனிதனின் சரீரத்தோடு சேர்ந்த போது வெளிப்படும் உணர்ச்சி அல்லது உணர்வுகளான ஏழு “ஸிபாத்” தன்மைகளை அல்லாஹ் இரவலாக வழங்கியுள்ளான். அப்படி இறைவனால் தன்னிடமுள்ள – தனக்கு இரவலாக வழங்கப்பட்ட – ஏழு தன்மைகளையும் ஒவ்வொன்றாக வழங்கியவனிடம் ஒப்படைத்து விடுவதாகும்.

“திக்ர்”கள் மூலம் (لا قدير إلا الله) “சக்தியுள்ளவன் அல்லாஹ் தவிர யாருமில்லை” என்ற இது போன்ற ஏனைய திக்ரையும் எண்ணிக்கையின்றி கருத்து மனதில் உருதியாகும் வரை செய்ய வேண்டும், சொல்ல வேண்டும்.

அல்லாஹ்வைப் பற்றிய சிந்தனையில் திக்ர் பிக்ர் தியானங்கள் மூலம் இறைவனால் இரவலாக வழங்கப்பட்ட அந்த ஏழு தன்மைகளையும் அடக்கி ஆழுவது கொண்டு கல்பு எந்தளவுக்கு உயிரோட்டத்துடன் செயல்படுகிறதோ அதற்குத்தக்க உயிர்ப்புடன் நிலையுள்ள கல்பாக மூமீன்களான (ஸஹாபாக்கள், இமாம்கள், வலிமார்கள், சூபியாக்கள்) மாறி அல்லாஹ்வுக்கு விருப்பமான செயல்களில் அவன் கடமையாக்கிய ஒன்றை விட வேறு கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் இறைவன் பக்கம் நெருங்கி விடுவார்கள்.

இறைவனின் நினைவில் அல்லாஹ்வுக்கு விருப்பமான அவனுக்கு அதிகம் அஞ்சி நடந்து இபாதத், வணக்கம் உட்பட அனைத்து விடயங்களிலும் சூபியாக்கள், காமிலான ஷைகுமார்கள் அல்லாஹ்வின் சிந்தனையில் மூழ்குவது கொண்டு மனிதனை விட்டும் அஸ்ஸிபாதுல் பஷரிய்யஹ் எனும் மனித இயல்புகள் – சுபாவங்கள் – நீங்கி அவனில் இறை இயல்புகளும், சுபாவங்களும் வெளியாகுவதே “fபனாஃ fபில்லாஹ்” எனும் நிலை ஏற்படும். இதற்கு இறை நினைவால் மூழ்கிக் கொள்ளல் என சொல்லப்படும். இந்த நிலையை அடைந்தவர்களுக்கு ஆரிபீன்கள் என்று ஸுபியாக்கள் மேற்கண்டவாறு வரைவிலக்கணம் கூறியுள்ளார்கள்.



♣ அஸ்ஸிபாதுல் பஷரிய்யஹ் என்றால் என்ன?


"அஸ்ஸிபாதுல் பஷரிய்யஹ்” என்றால் மனிதனின் தன்மைகள், இயல்புகள் (மனித இயல்புகள்) என்று விளக்கம் வரும். அதாவது கண் கொண்டு பார்த்தல், காது கொண்டு கேட்டல், கை கொண்டு பிடித்தல், கால் கொண்டு நடத்தல், வாய் கொண்டு பேசுதல் என்பன போன்று. இவை போல் கண்ணுக்கு எதிரில் உள்ளதைப் பார்த்தல், குறிப்பிட்ட தூரத்திலுள்ளதைப் பார்த்தல், கை கொண்டு தூக்க முடிந்ததை தூக்குதல், கால் கொண்டு நடக்க முடிந்த அளவு நடத்தல், காது கொண்டு சமீபத்திலுள்ள சத்தத்தை கேட்டல் என்பன போன்று.

ஒரு மனிதனிலுள்ள “அஸ்ஸிபாதுல் பஷரிய்யஹ்” மனித இயல்புகள், தன்மைகள் அழிந்து போனால் அவன் கண் கொண்டு மட்டும் பார்க்காமல் உடல் முழுவதைக் கொண்டும் பார்ப்பான். காது கொண்டு மட்டும் கேட்காமல் உடல் முழுவதைக் கொண்டும் கேட்பான். காலைக் கொண்டு மட்டும் நடக்காமல் உடல் முழுவதைக் கொண்டும் தான் நாடிய இடத்திற்குச் செல்வான்.

இவ்வாறு கண்ணுக்கு எதிரில் உள்ளதையும் பார்ப்பான். அதற்கு மறைவானதையும் பார்ப்பான். தூரத்தில் உள்ளதையும் பார்ப்பான். பக்கத்தில் உள்ளதையும் பார்ப்பான். கை கொண்டு எதையும் தூக்குவான். மலையையும் தூக்குவான். மாளிகையையும் தூக்குவான். இவ்வாறுதான் ஏனைய விடயங்களுமாகும். ​​மனித இயல்பு – சுவாபம் – அழிந்து இறை இயல்புகள்– சுவாபங்கள் – செய்லபடும் ஒருவன் எதையும் செய்வான்.


​சுருங்கக் கூறுவதாக இருந்தால் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் இறைவன் பக்கம் நெருங்கி அல்லாஹ்வில் fபனாஃ ஆகிவிட்டால் அல்லாஹ்வால் எதையெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் அவர்களுக்கும் செய்ய கூடிய ஆற்றலை இறைவன் வழங்குகிறான் என்பதை பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது. ஏனெனில் அவர்கள் பெயரிலும், பார்வையிலும் மட்டுமே மனிதர்களாக இருப்பார்கள். ஆனால் அவர்கள் “ஹகீகத்” எனும் எதார்த்தத்தில் மனித இயல்புகள் – சுவாபங்கள் – அழிந்து அவனில் இறை இயல்புகளும், தன்மைகளும், சுபாவங்களும் வெளியாவதாகும்.

♦ கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கூறினான்: எவன் என் நேசரை பகைத்துக் கொண்டானோ, அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்துகொண்டேயிருப்பான்.

இறுதியில் அவனை நான் நேசிப்பேன். அவ்வாறு நான் அவனை நேசித்துவிடும்போது அவன் கேட்கின்ற செவியாக, அவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பற்றுகின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக நான் ஆகிவிடுவேன். அவன்என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறைநம்பிக்கை யாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எந்தச் செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன்.


ஹழ்ரத் ​​அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு

​நூல்: புகாரி 6502


​​

♣ நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் இறை நினைவால் மூழ்கிக் கொண்ட நிலை

நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்களின் தூக்கம் பற்றி (மேலும்) “இறைத்தூதர் அவர்களே! வித்ருத் தொழுவதற்கு முன் நீங்கள் உறங்குவீர்களா? என்று ஆயிஷா ரலியல்லாஹுஅன்ஹா அன்னவர்கள் கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் “ஆயிஷாவே! என் கண்கள் தாம் உறங்குகின்றன. என் உள்ளம் உறங்குவதில்லை“ என்று விடையளித்தார்கள்“


​​அறிப்பவர்: ஹழ்ரத் அபூ ஸலமா ரலியல்லாஹு அன்ஹு

​நூல்: புகாரீ 1147, 2013, 3569, திர்மிதீ

♦ அபூ கதாதஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்தார்கள், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பல அற்புதங்களை உள்ளடக்கிய நீண்ட ஹதீதில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்:


​​​நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பயணம் செய்தார்கள். நான் அவர்களுக்குப் பக்கத்தில் இருந்தேன். நள்ளிரவு வரை பயணம் தொடர்ந்தது. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிறிது தூங்கி ஒட்டகத்திலிருந்து சாய்ந்தார்கள். அப்போது நான் அவர்களிடம் சென்று அவர்களின் தூக்கம் கலைந்து விடாமல் அவர்களை ஒட்டகத்தில் நிமிர்த்தி சாய்த்து வைத்தேன்.

இரவின்பெரும் பகுதி செல்லும் வரை பயணித்தார்கள். அப்போதும் ஒட்டகத்திலிருந்து சாய்ந்தார்கள். அவர்களின் தூக்கம் கலைந்து விடாத வகையில் அவர்களை நிமிர்த்தி வைத்தேன். அவர்கள் இரவின் கடைசி (விடியும்) வரை பயணத்தைத் தொடர்ந்தார்கள். அப்போதும் முதல் இரு தரம் சாய்ந்ததை விட அதிகமாகச் சாய்ந்தார்கள். அதாவது தரையில் விழுமளவு சாய்ந்தார்கள். முன்னர் செய்தது போல் நான் அவர்களை நிமிர்த்தி வைத்தேன்.

அப்போது தலையை உயர்த்திய நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹிவசல்லம் அவர்கள், இது யார்? (நீ யார்?) என்று கேட்டார்கள். நான் அபூ கதாதஹ் என்றேன். நீங்கள் எப்போதிருந்து என்னுடன் பயணிக்கின்றாய்? என்று கேட்டார்கள். நான் இரவெல்லாம் உங்களுடனேயே இருக்கின்றேன் என்றேன். எது கொண்டு அல்லாஹ்வின் நபியை நீங்கள் பாதுகாத்தாயோ அது கொண்டு உங்களையும் அல்லாஹ் பாதுகாப்பானாக! என்று கூறினார்கள்.


​​நூல்கள்: முஸ்லிம், அத்காருன் நவவீ பக்கம்- 252

♦ ஷரீத் பின் சுவைத் அஸ்ஸகஃபீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது: ஒரு நாள் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களது வாகனத்தில்) அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள், ”உமய்யா பின் அபிஸ்ஸல்த்தின் கவிதைகளில் ஏதேனும் உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். நான் ”ஆம் (தெரியும்)” என்றேன். ”பாடு” என்றார்கள். உடனே நான் ஒரு பாடலைப் பாடினேன். ”இன்னும் பாடு” என்றார்கள். பிறகு இன்னொரு பாடலைப் பாடினேன். ”இன்னும் பாடு”என்றார்கள். இவ்வாறே அல்லாஹ்வின் தூதருக்காக நூறு பாடல்களைப் பாடிக்காட்டினேன்.

(மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன) மேலும் ”உமய்யா பின் அபிஸ்ஸல்த் இஸ்லாத்தைத் தழுவும் அளவுக்கு வந்துவிட்டார்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறியதாகக் கூடுதலாக இடம் பெற்றுள்ளது. அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ (ரஹ்மதுல்லஹி அலைஹி) அவர்களது அறிவிப்பில், ”அவர் தமது கவிதையி(ன் கருத்துகளா)ல் இஸ்லாத்தைத் தழுவும் அளவுக்கு வந்துவிட்டார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாகக் காணப்படுகிறது.


​​நூல்கள்: முஸ்லிம் 4540, 2255, இப்னு மாஜா 3758, மிஷ்காத் 4787

அந்த அடிப்படையில் மேலே கூறப்பட்ட ஹதீஸ்களை தஸவ்வுப்” என்ற ஸூபிஸ ஞானம் ஒன்றைக் கொண்டு மட்டுமே விளங்கிக் கொள்ள முடியும். இதன் விபரங்கள் ஆழமானது என்பதால் காமிலான ஷெய்குமார்களை தேடிப்பிடித்து அவர்களிடம் பைஅத் செய்து அவர்கள் மூலம் இந்த யதார்த்த நிலைகளை அறிந்து கொள்ளுங்கள்.

ஆகவே நபிமார்கள் இறைநேசர்கள், காமிலான ஷெய்குமார்கள் "fபனாஃ fபில்லாஹ்" எனும் இறை நினைவால் மூழ்கி கொள்ளல் மூலமாக அவர்களை விட்டும் அஸ்ஸிபாதுல் பஷரிய்யஹ் எனும் மனித இயல்புகள் – சுபாவங்கள் – நீங்கி அவர்களில் இறை இயல்புகளும், சுபாவங்களும் போன்ற அனைத்து தன்மைகளிலும் விடயங்களிலும் அல்லாஹ்வையென்றி தாமாக - சுயமாக சக்தி கொண்டவர்கள் என்றோ, அவர்களுக்கு அல்லாஹ்வின் அனுமதியோ, உதவியோ அவசியமற்றது என்றோ நம்பிக்கை கொண்டு விடக் கூடாது. இது, மன்னிக்க முடியாத பாவச் செயலான இணைவைத்தலுக்கு இழுத்துக் கொண்டு சேர்க்கும்.


​​இறைநேசர்களாயினும் அவர்களும் அல்லாஹ்வின் அடியார்களாகவும், அவனது உதவியின்றி எவ்வித காரியமாற்றுவதற்கும் சக்தியற்றவர்களாகவுமே இருக்கின்றார்கள், அல்லாஹ்தான் அவர்களுக்கு அந்த ஆற்றல்களை வழங்கியுள்ளான் என்பதை புரிந்து கொள்ள எல்லாம் வல்ல கிருபையாளன் நல்லுதவி புரிவானாக! ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.