MAIL OF ISLAM

Knowledge & Wisdomஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா?


​எழுதியவர்: மௌலவி S.L அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.


இஸ்லாத்தின் பார்வையில் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்ஆன் பகுத்தறிவு , மனசாட்சி, விஞ்ஞானத்திற்கு முரண்படுமா? என்பது பற்றி ஓர் ஆய்வு


♣ ஹதீஸ் என்றால் என்ன?

ஹதீஸ் என்பது ஹதஸ் என்ற வேர்ச் சொல்லிலிருந்து பெறப்பட்ட சொல்லாகும். உரை உரையாடல் புதிய செய்தி எனப்பொருள்படும்.


​​​​இஸ்லாமிய உலகில் ஹதீஸ் என்றால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவற்றை குறிக்கும். அதாவது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் செய்யும்படி கூறியவை, அன்னவர்கள் செய்தவை, அன்னவர்களின் சமூகத்தில் பிறர் செய்யும்போது மௌனமாக இருந்து அதனை அங்கீகரித்தவை ஆகியவற்றை குறிக்கும்.


​​

♣ ஹதீஸ் மறுப்புக் கொள்கை வாதிகளின் தவரான வாதங்கள்

புதுமை விரும்பிகளாகிய வழிகெட்ட வஹ்ஹாபிகள் நல்லமல்களை நாசப்படுத்துவதில் முன்னிலை வகிக்கின்றார்கள். இவர்களது நாச கருத்துகளை அப்பாவி பாமர மக்களிடம் கூறி அவர்களை நம்பவைத்து வழிகேட்டுக்கு அடித்தளம் இட்டுக் கொள்கின்றார்கள். அந்த வரிசையில் அவர்களின் வழிகெட்ட கொள்கைகளுக்கு சார்பாக ஹதீஸ்கள் அமைய வில்லையென்றால் அந்த ஸஹீஹான சில ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுகின்றது என நிராகரிக்கிறார்கள்..


​​தனது பகுத்தறிவிற்கு முரண்படுகிறது ஆகவே குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்ட வகையுடன் சேர்ந்தவை என்றெல்லாம் ஹதீஸ்களை அறிவித்த அறிவிப்பாளர்களில் நிச்சயம் ஒரு பொய்யர் இருப்பார், அவர் யார் என்று கண்டுபிடிக்க முடியாது என்று ஸஹீஹான ஹதீஸ்களை இருட்டடிப்பு செய்து இலகுவாக ஒதுக்கிவிட்டு கிருக்கு பிடித்தவர்களாக வழிகேட்டில் சென்று கொண்டு இருக்கிறார்கள். இதற்கு அடிப்படை காரணம் 'சரியான முறையில் ஹதீஸ்களை ஆய்வு செய்யாமலும் சில ஹதீஸ்களை மறைத்து இருட்டடிப்பு செய்து, ஹதீஸ்கலை வல்லுனர்களுடையவும் சட்ட அறிஞர்களுடையவும், இமாம்களையும் பின்பற்றாததாகும்'. வஹ்ஹாபிகளே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்.


​​

♣ ஹதீஸ் மறுப்புக் கொள்கை வாதிகள் எப்போது தோன்றினார்கள்?

இஸ்லாமிய வரலாற்றில் ஹதீஸ்களை மறுப்போர் ஆரம்ப காலந்தொட்டே உருவாகி விட்டனர். சிலர் ஹதீஸ்களை முழுமையாக மறுக்கின்றனர். இவர்கள் இன்றுவரை “அஹ்லுல் குர்ஆன்” என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருக்கின்றனர். மற்றும் சிலர் குர்ஆனில் இல்லாத புதிய சட்டங்களைத் தரும் ஹதீஸ்களை மறுத்தனர். மற்றும் சிலர் “ஆஹாத்” எனும் வகை சார்ந்த ஹதீஸ்களில் ஹலால், ஹராம், அகீதா பற்றிப் பேசும் ஹதீஸ்களை மறுத்தனர். மற்றும் சிலர் அல்குர்ஆனுக்கு ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் சிலது முரண்படுகின்றது என்று ஹவாரிஜ்கள், முஃதஸிலாக்கள் போன்றோர் இந்த வகையில் பல்வேறு ஹதீஸ்களை மறுத்து வந்தனர். நவீனகால வழிகெட்ட வஹ்ஹாபி மத குருமார்களும் பலரும் இந்தத் தவறில் வீழ்ந்துள்ளனர்.

TNTJ, SLTJ அமைப்பைச் சேர்ந்தவர்கள், வழிகெட்ட ஏனைய வஹ்ஹாபிகள் குறிப்பாக காபிர் பி.ஜே போன்ற மதகுருமார்கள் இவ்வகையில் பல ஹதீஸ்களைப் பகுத்தறிவு ரீதியில் ஆய்வு செய்து மறுத்துள்ளார்கள். இவர்களது ஹதீஸ் துறை சார்ந்த இத்தகைய விமர்சனங்கள் பாமர மக்களிடம் எந்தத்தாக்கத்தையும் எற்படுத்தவில்லை.


​​இவர்களை நேசிக்கும் சகோதரர்களும் இவர்களது இத்தகைய கருத்துக்களை மக்கள் மன்றத்திற்குக் கொண்டுவரவில்லை. இவர்கள் சார்ந்த அமைப்பைச் சேர்ந்த பலரும் இவர்களின் இத்தகைய கருத்துக்களின் தாக்கத்திற்குக் கூட உட்படவில்லை. ஆயினும், இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் இத்தகைய கருத்துக்கள் பரவலாக பாமரர்கள் மத்தியிலும் கூட இடம் பிடித்ததற்கு இந்தக் கருத்தை முன்வைத்த மதகுரு பி.ஜெய்னுலாப்தீன் மற்றும் அவரைச் சார்ந்த மதகுருமார்களுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் லட்சக்கணக்கான பண செல்வாக்கே காரணமாகும்.

அந்த அடிப்படையில் : சூனியம் என்பது மெஜிக்கைக் குறிக்கும். மேலும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக வரும் ஆதாரபூர்வமான ஹதீஸே முதலில் இந்த வஹ்ஹாபிகளால் மறுக்கப்பட்டது. பின்னர் அதற்கு விமர்சனம் எழுந்ததால் அதை நியாயப்படுத்த இன்னும் பல ஹதீஸ்கள் மறுக்கப்பட்டன. பின்னர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதாக வரும் ஹதீஸை பல்வேறு வாதங்களை முன்வைத்து மறுத்து வருகின்றார்கள்.


​​அதேவேளை சூனியம் என்று ஒன்றில்லை. சூனியத்திற்கு எந்தத் தாக்கமுமில்லை என்று நேரடியாக குர்ஆனுக்கு முரணாகவே எழுதியும் பேசியும் வருகின்றார்கள். சிலர் அவர்கள் பார்வையில் ஹதீஸ்கள் கூட குர்ஆனுக்கு முரண் என்பதற்காகவும் சிலர் தனது பகுத்தறிவிற்கு முரண்படுகிறது என்பதற்காகவும் சூனியத்தை மறுப்பதாக நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழிகளை மறுக்கின்றார்கள்.

ஆனாலும் இது சம்மந்தமாக சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்களால் அடுத்தடுத்த கேள்விகளை கேட்க பதில் தெரியாமல் இன்று போலித் தவ்ஹீத்வாதிகளின் சில மதகுருமார்கள் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படாது, எங்கள் ஆய்வில்தான் தவறு என்று ஏற்றுக் கொண்டு சூனியம் உண்டு அதன் மூலம் அல்லாஹ் நாடினால் பாதிப்பு ஏற்படும் என்றும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படாது என்றும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள் (அல்ஹம்துலில்லாஹ்) என்பதை இவ்விடயத்தில் குறிப்பிடத்தக்கது.


​​

♣ ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் ஒருபோதும் குர்ஆனுக்கு முரண்படாது என்பதற்காக ஆதாரங்கள்

மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.

(அல்குர்ஆன் : 33/ 36, 4/65)

♦ தெளிவான அத்தாட்சிகளையும் வேதங்களையும் (அத்தூதர்களுக்கும் கொடுத்தனுப்பினோம்; நபியே!) மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம்.

(அல்குர்ஆன் : 16:44)

வேதத்தை மக்களுக்கு விளக்குவதற்காக போதனையை அதாவது ஹதீஸை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்குக் கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். ஹதீஸிற்கும் குர்ஆனிற்கும் உள்ள நெருக்கமான தொடர்பை மேலே உள்ள வசனங்கள் எடுத்துரைக்கிறது. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் சொல் செயல் அங்கீகாரம் ஆகிய அனைத்தும் குர்ஆனிற்கு விளக்கமாக இருக்குமே தவிர ஒரு போதும் குர்ஆனுக்கு முரண்படாது.

மேலும் குர்ஆன் மட்டும் அல்லாஹ்விடமிருந்து வரவில்லை. மாறாக நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் உபதேசித்த கருத்துக்கள், செயல்பாடுகள், அங்கீகாரம் ஆகிய அனைத்தும் அல்லாஹ்விடமிருந்து வந்தவையே. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஸுன்னா இஸ்லாமிய சட்டவாக்கத்தின் இரண்டாவது மூலாதாரமாகும். அல்குர்ஆனைப் பொன்றே அதுவும் வஹீயாகும். இதைப் பின்வரும் வசனம் உணர்த்துகிறது.

♦ “அவர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மனோ இச்சைப்படி பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து வஹீயே அன்றி வேறில்லை”. (அல்குர்ஆன் 53:3 – 4)

குர்ஆனும், நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அறிவித்த செய்திகளும் அல்லாஹ்வின் கருத்துக்கள் என்பதால் இந்த இரண்டுக்கும் மத்தியில் முரண்பாடு வருவதற்கு எள்ளளவும் சாத்தியமில்லை. அல்லாஹ் அல்லாதவர்களின் கருத்துக்களில் முரண்பாட்டைக் காணலாம். ஆனால் அவனுடைய கருத்துக்களில் முரண்பாடே வராது என்று பின்வரும் வசனங்கள் கூறுகின்றன.

♦ அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (அல்குர்ஆன் : 4:82)

♦ அதனிடம், அதற்கு முன்னிருந்தோ அதற்குப் பின்னிருந்தோ உண்மைக்குப் புறம்பான எதுவும் நெருங்காது; (இது) புகழுக்குரிய ஞானம் மிக்கவன் - (அல்லாஹ்)விடமிருந்து இறங்கியுள்ளது. (அல்குர்ஆன் : 41:42)

அல் குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஆதாராபூர்வமான ஹதீஸ்களை நிராகரிக்கும் ஆபத்தான போக்கு குறிப்பாக இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் வழிகெட்ட வஹ்ஹாபிகள் மூலம் அதிகரித்து வருகின்றது. ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படாது! அவை முரண்படுவது போல் உங்கள் தவரான ஆய்வின் குருட்டுப் பார்வையில் தோன்றினாலும் அவதானமாக நோக்கினால் முரண்பாடு இருக்காது.


​​இத்தகைய ஹதீஸ்களைக் கண்டால் ஹதீஸின் வெளிப்படையான கருத்தைக் கவனத்திற் கொண்டு குர்ஆனின் கருத்தை மறுத்து விடவும் கூடாது. குர்ஆனை ஏற்பதாகக் கூறி ஹதீஸ்களை மறுத்துவிடவும் கூடாது. இரண்டையும் இணைத்து இமாம்கள் நாதாக்கள் கூறிய விளக்கங்கள் மூலம் பொருள் கொண்டு இரண்டையுமே அங்கீகரிக்க வேண்டும் இருப்பினும் இந்த சரியான கருத்திலிருந்து சிலர் தடம் புரண்டதால் ஹதீஸ்களை அவரவர் தமது விருப்பு, வெறுப்புகளுக்கு ஏற்ப மறுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அல்குர்ஆனில் “அல்லாஹ்வைப் பின்பற்றுங்கள், அவனது தூதரையும் பின்பற்றுங்கள்” என அனேக ஆயத்துக்கள் கூறுகின்றன. அவனது தூதரை ஹபீப் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பின்பற்றுங்கள் என்ற கட்டளையைத்தான் ஹதீஸைப் பின்பற்றுதல் என இமாம்கள் மூலம் நாம் புரிந்து செயற்பட்டு வருகின்றோம். இந்த வகையில் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை நம்புவதும் அவற்றை ஏற்று நடப்பதும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களது நபித்துவத்தை நம்புவதையும் அதை ஏற்றுக் கொள்வதையும் வெளிப்படையாகக் காட்டும் முக்கிய அம்சங்களாகும். இந்த அடிப்படையில் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை ஏற்க மறுப்பது நபித்துவத்தின் ஒருபகுதியை மறுப்பது போன்ற முக்கிய பிரச்சினையாக நோக்கப்பட வேண்டிய பாரதூரமான ஒரு விடயமாகும்.


​​

♣ ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படாது என்பது பற்றி இமாம்களின் கருத்துக்கள்

ஆதாரபூர்வமான செய்திகள் குர் ஆனுக்கு முரண்படாது என்ற கருத்தையே மத்ஹபுடைய இமாம்கள் குறிப்பாக இமாம் ஷாஃபி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கொண்டிருந்தார்கள் என்பது வரலாற்றில் மிகப்பிரபல்யமான விடையமாகும். ஆதாரபூர்வமான செய்தி என்று வந்து விட்டால் அதன் இயல்பே குர் ஆனுக்கு முரண்படாது, அது எவ்வழியிலும் குர் ஆனுடன் ஒத்துதான் காணப்படும் , ஒரு போதும் வித்தியாசப்படாது என்பதுதான் இமாம் ஷாஃபி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் நிலைப்பாடாகும்.

♦ ஒரு ஹதீஸ் சரியாவதற்கான நிபந்தனைகள் முழுமையாகி விட்டால் அதை குர்ஆனுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது கட்டாயமா? இது குறித்து இமாம் ஷாஃபி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கட்டாயமில்லை, ஏனனில் அது குர்ஆனுக்கு முரண்படாத நிலையிலேயே தான் அதன் நிபந்தனைகள் பூரணம் பெறும். என்று கூறியுள்ளார்கள்.


​​நூல்: அல்மஹ்சூல் பாகம் : 4 பக்கம் : 438

அதாவது நிபந்தனைகள் அறிவிப்பாளர் ரீதியாக குறைகாண முடியாத வகையில் அமைந்து விட்டாலேயே அது குர் ஆனுக்கு முரண் பாடில்லாத வகையில் தான் அமைந்திருக்கும் அறிவிப்பாளர் வரிசை சரியாக இருந்தாலும் குர்ஆனுடன் உரசியே அதை ஏற்க வேண்டும் என்பது கட்டாயமாக இருந்திருந்தால் இமாம் ஷாஃபி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் பதில் " கட்டாயம்" என்றே அமைந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு குர் ஆனோடு உரசிப்பார்க்க வேண்டிய தேவையே கிடையாது என்றுதான் கூறுகின்றார்கள்.


​​குறை காண முடியாத அறிவிப்பாளர் வரிசையுடன் கூடிய செய்தி குர்ஆனுடன் முரண்படவே செய்யாது என்பதே அடிப்படையாகும். இவ்வாறு இருக்கும் போது குர் ஆனுடன் ஹதீஸை உரச வேண்டிய தேவை கிடையாது அதன் காரணமாகவே அவசியம் இல்லை என இமாம் ஷா`ஃபி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் பதிலளித்துள்ளார்கள்.

♦ அல்லாஹ்வின் தூதர் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஸுன்னா ஒரு போதும் அல்லாஹ்வின் வேதத்திற்கு முரண்படவே செய்யாது.


​​நூல்: அர்ரிஸாலா, பாபுல் இஸ்திஹ்ஸான், பாகம் 1,பக்கம் 546

♦ அல்லாஹ்வின் சட்டமும் , நபிகளாரின் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சட்டமும் முரண்படாது , மாறாக எல்லா நிலைகளிலும் ( நடை முறைப்படுத்துவது) கட்டாயமாகும்.


​​நூல்: அர்ரிஸாலா, பக்கம் 105

♦ஒரு முனாபிக்கான ராபிழி, (ஆதாரபூர்வமாக) அறிவிக்கப்படும் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் செய்திகளையும் தனியான ஆதாரமாகக் கொள்ளத் தேவையிலை, குர்ஆனிலேயே விசேடமாக ஆதாரம் கொள்ள வேண்டும், எனக்கூறி அதற்கு சான்றாக "என்னிடம் இருந்து ஒரு செய்தி வந்தால் அதைக் குர்ஆனுடன் ஒப்பிடுங்கள், அதற்கான அடிப்படை குர்ஆனில் இருந்தால் எடுங்கள், இல்லை என்றால் தட்டி விடுங்கள்" இக்கூற்றின் அடிப்படையையும், அதன் பாத்திலான நிலையையும், அது மிகப்பெரிய அழிவுகளில் உள்ளது என்பதையும், விளக்க விரும்புகின்றேன்.


​​அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும் தெரிந்து கொள்ளுங்கள், நபியின் சொல்லோ, செயலோ, ஹதீஸ் கலையின் உஸூலில் அறியப்படும் நிபந்தனைகளுடன் வரும் செய்தி ஹதீஸ் என்பதையும், அது ஆதாரம் என்பதையும் யார் மறுக்கின்றானோ அவன் காபிராகும். அவன் இஸ்லாமிய வரையறையை விட்டும் வெளியேறிவிட்டான், யஹூதி, நஸாராக்களுடனேயே எழுப்பப்படுவான்.


​​இமாம் சுயூத்தி ரஹ்மதுல்லாஹி அலைஹி

​​நூல்: மிப்தாஹுல் ஜன்னா 1/27

ஆகவே ஒரு ஹதீஸ் ஸஹீஹானது என நிரூபணமானதன் பின்னர் அந்த ஹதீஸை மனிதனது அறிவைக் கொண்டு “அது குர்ஆனுக்கு முரண்படுகின்றது” எனக்கூறி மறுக்கின்ற ஒரு வழிமுறை ஹதீஸ் கலையில் கிடையாது. அப்படி இருக்குமானால் அதனைக் குறிக்கவென ஒரு தனிப்பெயர் ஹதீஸ் கலையில் இமாம்கள் வைத்திருக்க வேண்டும். ஏனெனில் மறுக்கப்படுகின்ற ஒவ்வொரு வகையான ஹதீஸிற்கும் ஒவ்வொரு பெயர் ஹதீஸ் கலையில் உள்ளது.எனவே ரஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்படும் செய்தி அவர்கள் கூறியதுதான் என நம்பகமான வழிகளில் உறுதியாகிவிட்டால் அதனை சுய அறிவைக்கொண்டு மறுப்பது தெளிவான வழிகேடேயாகும்.

இன்று வழிகெட்ட வஹ்ஹாபிகள் குர்ஆனுக்கு முரண்படுவதாக கூறி ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மறுக்க முனைந்து கொஞ்சம் கொஞ்சமாக அந்த நிலையில் இருந்து இறங்கி வந்து அறிவுக்குப் பொருந்தவில்லை. விஞ்ஞானத்திற்கு முரண்படுகின்றது. மனசாட்சி ஏற்கிறதில்லை என பல காரணங்கள் கூறி ஹதீஸ்களை மறுக்கும் நிலை தோன்றிவிடுகின்றது. எனவே, குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மறுப்பது ஆபத்தானது அதே வேளை வழிகேடர்களின் கொள்கையாகத் திகழ்ந்துள்ளது.

எனவே, அன்பான! வஹ்ஹாபி கொள்கையில் உள்ளவர்களே! உங்கள் மதகுரு தலைவர் பீ, ஜே (TNTJ, SLTJ) இவர் மீதுள்ள பற்றை ஒரு பக்கம் வைத்து விட்டு, நாம் குறிப்பிட்ட அம்சங்களை நிதானமாகச் சிந்தித்துப் பார்த்து, அவர்களது இந்த வழிகேட்டிலிருந்து உங்களை விடுவித்துக்கொள்ள முயற்சியுங்கள்.


​​அவர்கள் செய்த சேவைகள், தியாகங்களால் அவர் சொல்லும் அசத்தியம் சத்தியமாகி விடாது! அவர், தனது கருத்தை நிலைநிறுத்தக் கடைப்பிடிக்கும் ஸஹீஹான ஹதீஸ் குர்ஆனுக்கு முறணாகின்றது, அறிவுக்குப் பொருந்தவில்லை. விஞ்ஞானத்திற்கு முரண்படுகின்றது. மனசாட்சி ஏற்கிறதில்லை என்ற வழிமுறையும் சரியாகி விடாது! தியாகம், சேவை வேறு, சரி-பிழை வேறு. சரி-பிழையைக் குர்ஆன்-ஹதீஸ், இமாம்களின் கருத்துக்கள் தீர்மானிக்கும்.


​​எனவே அவர்களது இந்த வழிகேட்டிலிருந்து மீண்டு சத்திய கொள்கை அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத் பக்கம் வருமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.