MAIL OF ISLAM

Knowledge & Wisdom



இல்ஹாம் என்றால் என்ன?

எழுதியவர்: மௌலவி  S.L. அப்துர்ரஹ்மான்  (கௌஸி)  கல்முனை.


அல்லாஹ்வின் புறத்திலிருந்து இல்ஹாம் எனும் உதிப்பின் ஊடாக பெறப்படும் இல்முல் வஹ்பீ (இல்முல் கஷ்பீ - இல்முல் லதுன்னி) மற்றும் இல்முல் கஸ்பீ என்றால் என்ன?


​​

♣ மஃரிபா என்றால் என்ன?

மஃரிபத் எனும் (இறைவனை அறியும் தத்துவம்) இதை அறிந்தவர்கள்தான் (ஞானி – ஆரிப்) என இவர்கள் அழைக்கப்படுவார்கள்.


​​இறைவனின் நினைவில் அல்லாஹ்வுக்கு விருப்பமான அவனுக்கு அதிகம் அஞ்சி நடந்து இபாதத், வணக்கம் உட்பட அனைத்து விடயங்களிலும் சூபியாக்கள், காமிலான ஷைகுமார்கள் அல்லாஹ்வின் சிந்தனையில் மூழ்குவதால் 'பனாஃ' எனும் நிலை ஏற்படும். இதற்கு இறை நினைவால் மூழ்கி கொள்ளல் என சொல்லப்படும்.


​​இந்த நிலையை அடைந்தவர்களுக்கு ஆரிபீன்கள் என்று சொல்லப்படும். அந்த அடிப்படையில் மஃரிஃபா என்ற ஞானம் இரண்டு படித்தரங்களை உள்ளடக்கியதாகும் .




♣ மஃரிபா எனும் ஞானத்திற்க்கு இரண்டு படித்தரங்கள் உள்ளன

1) கஸ்பீ - என்ற ஞானம் படித்து தெரிந்து கொள்வதால் கிடைக்கும் இல்மு ஆகும் .கஸ்பீ என்ற இல்முக்கு வரம்பு உண்டு.

2) வஹ்பீ - என்ற ஞானம் அல்லாஹ்வின் புறத்திலிருந்து பெறப்படும் இல்ஹாம் ஆகும்.


​​இந்த வஹ்பீ என்ற ஞானத்திற்கு " (علم الدني - இல்முல் லதுன்னி), (علم الكشفي- இல்முல் கஷ்பீ)" என்று இரு வகையான பெயர் கூறப்படும் இந்த வஹ்பீ என்ற ஞான கல்விக்கு வரம்பு என்பது இல்லை.


​​

♣ இல்முல் லதுன்னி (علم الدني) என்றால் என்ன?

ஸூபிஸத்தில் "இல்முல் லதுன்னி " என்று ஓர் ஆன்மிக சொற்றொடர் உண்டு. தஸவ்வுப் எனும் ஸூபிஸ ஞானம் பேசும் இறை ஞானிகள் காமிலான ஷெய்குமார்கள் “இல்முல் லதுன்னி” என்ற சொல்லை தமது ஸூபிஸ ஞானக் கலைச்சொல்லாகப் பயன்படுத்தி வருகிறார்கள். இச் சொல்லுக்கு அறபு மொழி அகராதியில் "இறை ஞான உள் உதிப்பு" என்றெல்லாம் பொருள் கூறப்பட்டுள்ளது. இதற்கு குர்ஆன், ஹதீஸ்களில் ஆதாரங்கள் உள்ளன.

அல்லாஹ் தான் நாடிய இறையச்சமுள்ள, ஈமான் பரிபூரணமான ஸாலிஹான தனது அடியார்களுக்கு அவன் புரத்தில் இருந்து ஹிபதாக (இறை நன்கொடை- வெகுமதி) இறைவனால் மனிதனின் எந்த முயற்சியும் இல்லாமல் முழுக்க, முழுக்க இறை நன்கொடையாகவே வழங்கப்படும்.


​​அறிவே இல்முல் வஹ்பீ எனும் இல்முல் லதுன்னி ஆகும். இது இறைவன் புறத்தில் இருந்து கிடைக்கும் கல்வியாகும். இதை இறை அருள், ஞானம் என்று கூறலாம். ஒரு செய்தி ஒரு கருத்து ஓர் உண்மை உள்ளத்தில் படித்தல் கற்றல் என்ற இயல்பான வழியில்லாமல் உள்ளத்தில் போடப்படல் இல்ஹாம் ஆன்மீக பயிற்ச்சின் விளைவாக வரலாம். அது அல்லாஹ்வால் கொடுக்கப்படும் ஒன்றே தவிர தேடிப் படிக்கும் அறிவு அல்ல.


​​இந்த அறிவினை குறிப்பிட நபர் ஆன்மீக பயிற்ச்சியின் ஊடாக தமது நப்ஸூடன் மாபெரும் யுத்தம் செய்து கல்பை பரிசுத்தப்படுத்தியும் தன்னை தானே சுயவிசாரணை செய்தும் இதற்காக உழைத்து அல்லது அல்லாஹ் விஷேடமான இந்த அறிவை அவர்களுக்கு கொடுத்திற்க்கலாம்.


♦ ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்வீர்களானால் அவன் உங்களுக்கு (நன்மை தீமையைப்) பிரித்தறிந்து நடக்கக்கூடிய நேர்வழி காட்டுவான்; இன்னும் உங்களை விட்டும் உங்கள் பாவங்களைப் போக்கி உங்களை மன்னிப்பான்; ஏனெனில் அல்லாஹ் மகத்தான அருட்கொடையுடையவன். (அல்குர்ஆன் : 8:29)

♦ எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கின்றாரோ, அவருக்கு அவன் (தக்க ஒரு) வழியை உண்டாக்குவான். (அல்குர்ஆன் : 65:2)

♦ மேலும் எவர்கள் நம்முடைய வழியில் முயல்கின்றார்களோ நிச்சயமாக அவர்களை நம்முடைய நேரான வழிகளில் நாம் செலுத்துவோம்; நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோருடனேயே இருக்கின்றான். (அல்குர்ஆன் : 29:69)

அதாவது வழிகேடர்களின் வழியில் சென்று வழிகெட்டு பாவிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் அப்பாவி மனிதர்களே! , மார்க்க விளக்கம் பெற நேர்வழி பெற்ற சூபியாக்களை, காமிலான ஷைகுமார்களை நாடும் போது முதலில் ஷரீஅத் சட்டங்களை முடிந்தளவு கடைப்பிடித்து நம்மை தரீக்கத் எனும் நேர்வழியில் செல்ல வேண்டும் எனவும், மேலும் அவர்களிடம் (பைஅத் - ஞான தீட்சை) பெற்ற பின்னர் நமக்கு சூபியாக்கள், காமிலான ஷைகுமார்கள் குர்ஆன், ஹதீஸ்களில் உள்ள யதார்த்த உண்மைகளை விளக்கங்களை கற்றுக் கொடுக்கும் ஒவ்வொரு விடயங்கலும் இரகசியம்தான், இதுதான் ஹகீக்கத் எனும் (இரகசியம், யதார்த்தம்)மான விடயங்கள். இது ஒரு ரகசியம் இது தான் உண்மை – யதார்த்த நிலை. ஆனால் இவ்வுண்மை அனைவருக்கும் தெரிவதில்லை. இதை அறிந்தவர்கள்தான் (ஞானி – ஆரிப்) என இவர்கள் அழைக்கப்படுவார்கள்.

இறைவனின் நினைவில் அல்லாஹ்வுக்கு விருப்பமான அவனுக்கு அதிகம் அஞ்சி நடந்து இபாதத், வணக்கம் உட்பட அனைத்து விடயங்களிலும் சூபியாக்கள், காமிலான ஷைகுமார்கள் அல்லாஹ்வின் சிந்தனையில் மூழ்கிக்கொள்வதால் 'பனாஃ' எனும் நிலை ஏற்படும். இதற்கு இறை நினைவால் மூழ்கி கொள்ளல் என சொல்லப்படும். இந்த நிலையை அடைந்தவர்களுக்கு ஆரிபீன்கள் என்று சொல்லப்படும். இப்படியான நிலையை அடையும் போது அல்லாஹ்வின் புறத்தில் இருந்து இல்ஹாம் ஊடாக உதிப்பாக்கி வழங்கப்படும் அறிவே இல்முல் வஹ்பீ - இல்முல் லதுன்னி என்று சொல்லப்படுகிறது.

ஆகவே அல்லாஹ் யாருக்கு அறிவையும், தெளிவையும், ஞானத்தையும் கொடுக்க நாடுகிறானோ, அவர்கள் காட்டுக்குள் இருந்தாலும் சரி, மலை அடிவாரத்தில் இருந்தாலும் சரி, மண்ணுக்குள் இருந்தாலும் சரி, அவர்கள் எங்கு இருந்தாலும் சரி அவர்களுக்கு இல்ஹாம் எனும் உள் உதிப்பின் மூலம் அறிவு, ஞானத்தை கொடுப்பான். அல்லாஹ் யாருக்கு கொடுக்க நாடவில்லையோ அவர்கள் பள்ளிக்குள் இருந்தாலும் சரி, பல்கலைக்கழத்தில் இருந்தாலும் சரி, நூலகத்தில் இருந்தாலும் சரி, அவர்களுக்கு ஒரு இல்மும் கிடைக்காது.


​​அந்த வகையில் நூற்களை கொண்டு அலுமாரியை நிரப்புபவர்கள் அல்ல ஸுபியாக்கள். நூரை கொண்டு உள்ளத்தை நிரப்புபவர்களே ஸுபியாக்கள். புத்தகத்திலுள்ளதை மனனம் செய்பவர்கள் அல்ல அறிஞர்கள். அதை அவர்கள் மறந்து விட்டால் அவர்கள் முட்டாளாகி விடுவார்கள். ஆனால் நினைத்த நேரத்தில் இறைவனிடமிருந்து இல்ஹாம் ஊடாக இல்முல் லதுன்னி எனும் அறிவு பெறுகிறவர்களே உண்மையான அறிஞர்கள் என  அறிவுலக மேதை "ஹுஜ்ஜதுல் இஸ்லாம்" இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்.



​​♣ இல்முல் கஸ்பீ (علم الكسفي) என்றால் என்ன?


​அரபிக்கல்லூரிகளில் (மௌலவி, ஆலிம்) கோர்ஸ்களில் பாடத்திட்டங்களில் உள்ள தப்ஸீர், ஹதீஸ், பிக்ஹ் கிதாபுகளை மனனம் செய்து அல்லது ஷெய்குமார்கள் உலமாக்களிடம் மார்க்க அறிவு அறிவுரைகளை கற்று தேர்ச்சி பெற்றவர்களின் இந்த அறிவுக்கு "இல்முல் கஸ்பீ - علم الكسبي" என சொல்லப்படும்.


​​ஆனால் அல்லாஹ் தனது சில நல்லடியார்களுக்கு தனது வெகுமதியாக அறிவு ஞானத்தை அளிக்கிறான். அதனை மேலே கூறியது போன்று "இல்முல் லதுன்னி" என அறியப்படும். அதாவது இறைவனால் மனிதனின் எந்த முயற்சியும் இல்லாமல் முழுக்க, முழுக்க இறை நன்கொடையாகவே வழங்கப்படும்.

​​

♣ அல்லாஹ்வின் புறத்திலிருந்து இல்ஹாம் ஊடாக 'இல்முல் லதுன்னி' சில நல்லடியார்களுக்கு வழங்கப்படும் என்பதற்கான ஆதாரங்கள்.

இன்னும் நாம் அவருக்கு நம்மிடமிருந்து (இல்முல் லதுன்னி - பிரத்தியேகமான இல்மை) கல்வி ஞானத்தைகற்றுக் கொடுத்திருந்தோம்.(அல்குர்ஆன் : 18:65)

♦ ஆத்மாவின் மீதும், அதை ஒழுங்குபடுத்தியவன் மீதும் சத்தியமாக, அப்பால், அவன் (அல்லாஹ்) அதற்கு அதன் தீமையையும், அதன் நன்மையையும் (இல்ஹாம் ஊடாக) உணர்த்தினான். (அல்குர்ஆன் : 91:7,8)

♦ அதுவே அல்லாஹ்வின் பேரருளாகும். தான் விரும்பியவர்களுக்கு அதை கொடுக்கின்ரான். மேலும் அல்லாஹ் மகத்தான பேரருளுடையவன். (அல்குர்ஆன் : 62:4)

♦ அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தின்பால் விரிவாக்குகிறான். (அல் குர்ஆன் 6:125)

♦ அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; ஏனெனில் அல்லாஹ் தான் உங்களுக்கு (கல்வி ஞானத்தை)கற்றுக் கொடுக்கின்றான். அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் பற்றி நன்கறிபவன். (அல்குர்ஆன் : 2:282)

♦ (அவர்களின் நிலை) ஆழ்கடலில் (ஏற்படும்) பல இருள்களைப் போன்றதாகும்; அதனை ஓர் அலை மூடுகிறது. அதற்கு மேல் மற்றோர் அலை; அதற்கும் மேல் மேகம். (இப்படி) பல இருள்கள். சில சிலவற்றுக்கு மேல் இருக்கின்றன. (அப்பொழுது) அவன் தன் கையை வெளியே நீட்டினால் அவனால் அதைப் பார்க்க முடியாது; எவனுக்கு அல்லாஹ் ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியுமில்லை. (அல் குர்ஆன் 24:40)

எனவே வலிமார்களுக்கு சூபியாக்களுக்கு, காமிலான ஷைகுமார்களுக்கு இல்ஹாம் எனும் உதிப்பின் ஊடாக - இல்முல் லதுன்னி எனும் ஞானம் கிடையாது என்று கண்டதெற்கெல்லாம் குர்ஆனில் இருந்தும், ஹதீதிலிருந்தும் நேரடியான தெளிவான ஆதாரம் கேட்டு ஒற்றைக்காலில் நிற்போர்களே! “இல்முல் லதுன்னி” என்று ஒரு வகை அறிவுண்டு என்பதை சிந்தனையில் கொள்ள வேண்டும்.


​​இப்படி ஒரு அறிவுண்டு என்பது திருகுர்ஆனின் ஆதாரம் கொண்டும், ஸஹீஹான ஹதீதுகளின் ஆதராரம் கொண்டும் நிறுவப்பட்ட விடயம் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். நபீமார்களுக்கு “வஹீயும்” இருந்தது “இல்ஹாம்” என்ற அறிவும் இருந்தது ஆனால் நபீமார் அல்லாத வலிமார்கள், சூபியாக்கள், நல்லடியார்களுக்கு இல்ஹாம் மட்டும் இருந்தது இதை யாரும் மறுக்க முடியாத உண்மையாகும்.

சூபியாக்கள், காமிலான ஷெய்குமார்கள் ஒரு விடயத்தைச் சொல்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம் அவர்களிடம் நீங்கள் சொல்வதற்கு திருகுர்ஆனிலும், ஹதீதிலும் ஆதாரம் உண்டா? என்று கேட்கும் போது இதை எனது இல்ஹாம் என்ற அறிவின் மூலம் சொன்னேன் என்று அவர்கள் சொல்வார்களாயின் அவர்களை ஏற்றுக் கொள்வதா? அல்லது இல்ஹாமும் கத்தரிக்காயும் என்று கூறி அவர்களை தூக்கி எறிவதா? அவர்களை தூக்கியறிந்தால் திரு குர்ஆனும், நபீ மொழிகளும் கூறுகின்ற இல்ஹாம் என்ற அறிவை தூக்கியெறிந்ததாகிவிடும்.

ஆகையால் அவர்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு தற்பொழுது உள்ள ஷெய்குமார்களையும் ஏற்றுக் கொள்வதாயினும் கண்னை மூடிக் கொண்டு ஏற்றுக் கொள்ள கூடாது, அவர்களை “ஷரீஅத்” என்ற தராசில் நிறுத்துப் பார்க்க வேண்டும் அவர்கள் கொள்கையும் நடவடிக்கைகளும் ஷரீஅத்திற்கு முரணில்லாதிருந்தால், அவர்கள் ஒரு நல்லடியார்கள் என்று பரவலாக அறியப்பட்டவர்கலாக இருந்தால், அவர்கள் சொன்ன விடயம் ஷரீஅத்திற்கு முரணில்லாதிருந்தால் அவர்களின் பேச்சை ஏற்றுக் கொள்ள வேண்டுமேயன்றி அவர்களை தூக்கியெறிந்துவிடலாகாது.

அவ்வலுத் தீனி மஃரிபத்துல்லாஹ் – மார்க்கத்தில் முதன்மையானது அல்லாஹுத்தஆலாவை அறிவது' என்ற திருவாக்கின்படி முதல் கடமை அல்லாஹுதஆலாவை அறிவதாகும். இதுவே எல்லா விதி விலக்குகளுக்கும் அடிப்படையாகும். இது இன்றி எதுவும் சரியாக அமையாது. ஆதலால் ஆரிபீன்களான மெஞ்ஞானிகள் இக்கலைக்கு அத்தஸவ்வுபு-ஸூபிஸம் என்றும், இது உடையோர்களுக்கு ஸூபிகள் என்றும் பெயர் வைத்துள்ளார்கள். இதற்காக முழு ஊக்கத்தை செலவளித்து மக்களுக்கு அதிலும் முரீதீன்கள், முஹிப்பீன்களுக்கு இதன் எதார்த்தமான மெஞ்ஞான வஹ்தத்துல் வுஜூது –உள்ளது ஒன்று என்பதை வாய் மூலமாகவும், செயல் மூலமாகவும், நூற்கள் மூலமாகவும் வெளிப்படுத்தியுள்ளார்கள்.

அவர்கள் தம் தமக்கு தவ்கு – அனுபவ அறிவினாலும் லதுன்னி – உதிப்பு வெளிப்பாடு அறிவினாலும் ஏற்பட்டதை அடிப்படையாக வைத்து குர்ஆன் ஹதீதுகளின் வெளிச்சத்தில் நூற்கள் பல எழுதி நிலையான அழியா பொக்கிஷமாக விட்டுச் சென்றுள்ளார்கள். அல்லாஹு தஆலா அவர்களுக்கு நற்கூலியை பெரிதாக்குவானாக.

எனவே மறைவான விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர சுயமாக வேறு யாரும் அறிய முடியாது. எனினும் நபிமார்களுக்கு வஹீயின் மூலமாகவும், இறை நேசர்களுக்கு (இல்ஹாம் எனும்) உதிப்பின் மூலமாகவும் மறைவான விஷயங்களை அல்லாஹ் அவர்களுக்கு அறிவித்துக் கொடுக்கின்றான்.


​​ஆகவே இவைகள்தான் மஃரிபா எனும் ஞானத்தின் படிமுறைகள் என்பதாகும். இதுவே, அவைகளின் சுருக்கமான அறிமுகமாகும். இதை விரிவாக ஆராயும் போது இன்னும் பல தத்துவங்கள் வெளிப்படும் அவைகளை சூபியாக்கள், காமிலான ஷெய்குமார்களிடம் விலாவாரியாக தெரிந்து கொள்ள எல்லாம் வல்ல கிருபையாளன் நல்லுதவி புரிவானாக! ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.