MAIL OF ISLAM

Knowledge & Wisdom



​ஈமான் கொண்டவர்களே!  ஈமான் கொள்ளுங்கள்! 

​ 

எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.

இஸ்லாத்தின் பார்வையில் "ஈமான் கொண்டவர்களே ஈமான் கொள்ளுங்கள்" என்ற அல்குர்ஆன் வசனம் போதிக்கும் வஹ்ததுல் வுஜூத், அத்வைதம், தவ்ஹீத் ஏகத்துவம்.


​​

♣ ஈமான் என்றால் என்ன?

ஈமான் என்பது “அம்னு“ என்ற சொல்லிலிருந்து பிறந்ததாகும். பாதுகாப்பு என்பது இதன் அகராதிப் பொருள். ஷரீஅத்தில் நம்பிக்கை சார்ந்த குறிப்பிட்ட சில கோட்பாட்டு விடயங்களை விசுவாசிப்பதை நம்பிக்கை கொள்வதைக் குறிக்கின்றது.


​​இக்கோட்பாட்டை ஏற்கும் ஒருவர் நரகத்தின் கொடிய தண்டனையிலிருந்து பாதுகாப்பாக இருப்பார். கீழே குறிப்பிட்ட ஹதீஸில் கூறப்பட்டுள்ள ஆறு விடயங்களையும் மனதால் ஏற்று நாவினால் விண்ணப்பிப்பதை ஈமான் என்று கூறப்படும்.

♦ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஒரு நாள் மக்களுக்கிடையில் இருந்த போது ஒருவர் அவர்களிடம் வந்து “ஈமான் என்றால் என்ன?“ என்று கேட்டதற்கு “ஈமான் என்பது அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய சந்திப்பையும் அவனுடைய தூதர்களையும் நீர் நம்புவது. மேலும், (மரணத்திற்குப் பின்) இறுதியாக (அனைவரும்) உயிருடன் எழுப்பப்படுவதை நம்புவதும், நன்மை தீமைகள் யாவும் அல்லாஹ்வின் (நாட்டமாகிய) விதியின்படியே நடக்கின்றன என்றும் நீங்கள் நம்பிக்கை கொள்வதாகும்" என்று பதிலளித்தார்கள் எனக் கூறினார்கள்.

அடுத்து “இஸ்லாம் என்றால் என்ன?“ என்று கேட்டதற்குவர்கள் கூறினார்கள். “இஸ்லாம் என்பது அல்லாஹ்வுக்கு (எதனையும்) நீர் இணையாகக் கருதாத நிலையில் அவனை நீர் வணங்குவதும் தொழுகையை நிலை நிறுத்தி வருவதும் கடமையாக்கப்பட்ட ஸகாத்தை நீர் வழங்கி வருவதும் ரமலான் மாதம் நீர் நோன்பு நோற்பதுமாகும்“ என்று கூறினார்கள்.

அடுத்து “இஹ்ஸான் என்றால் என்ன?“ என்று அவர் கேட்டதற்குவர்கள் கூறினார்கள்: “(இஹ்ஸான் என்பது) அல்லாஹ்வை (நேரில்) காண்பதைப் போன்று நீர் வணங்குவதாகும். நீர் அவனைப் பார்க்காவிட்டாலும் நிச்சயமாக அவன் உம்மைப் பார்த்துக் கொண்டே இருக்கிறான் என்றார்கள்“

அடுத்து “மறுமை நாள் எப்போது?“ என்று அம்மனிதர் கேட்டதற்கு இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: “அதைப் பற்றிக் கேட்கப்பட்டவர் (நான்) அதைப் பற்றிக் கேட்கிற உம்மை விட மிக்க அறிந்தவரல்லர். (வேண்டுமானார்) அதன் (சில) அடையாளங்களைப் பற்றி உமக்குச் சொல்கிறேன். அவை, ஓர் அடிமைப் பெண் தனக்கு எஜமானாகப் போகிறவனை ஈன்றெடுத்தல்; மேலும் கறுப்பு நிற ஒட்டகங்களை மேய்த்துக் கொண்டிருந்த மக்கள் உயர்ந்த கட்டிடங்கள் கட்டித் தமக்குள் பெருமையடித்துக் கொள்ளல். ஐந்து விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறியமாட்டார்“ என்று கூறிவிட்டு, பின்வரும் வசனத்தை ஓதிக் காட்டினார்கள். “மறுமை நாளைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது.“ (திருக்குர்ஆன் 31:34)

பின்னர் அம்மனிதர் திரும்பிச் சென்றார். “அவரை அழைத்து வாருங்கள்“ என்றார்கள். சென்று பார்த்தபோது அவரைக் காணவில்லை. அப்போது, “இவர்தான் ஜிப்ரீல். மக்களுக்கு அவர்களின் மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்க வந்திருக்கிறார்“ என்று இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள்.


​​நூல்: புகாரி, முஸ்லிம்


​​

♣ ஈமானின் வகைகள்

ஈமான் இரு வகைப்படும். ஈமான் முஜ்மல், ஈமான் முபஸ்ஸல்

1) மேற்கண்ட ஹதீஸில் ஈமானிய ஆறு விடயங்களையும் சுருக்கமாக விளங்கி நம்புவதும், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய அனைத்திலும் அன்னாரை உண்மைப்படுத்தி வைப்பதையும் ஈமான் முஜ்மலை குறிக்கும்.

2) ஈமான் முபஸ்ஸல் என்பது, மேற்கண்டவைகளை ஆதாரத்துடன் விரிவாக விளக்கமாக அறிந்து கொள்வதாகும்.


​​

♣ ஈமான் கொண்டவர்களே ஈமான் கொள்ளுங்கள் என்பதன் யதார்த்த உண்மை நிலை என்ன?

ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வைக் கொண்டும், அவனுடைய தூதரைக் கொண்டும், அவன் தன்னுடைய (இத்) தூதர் மீது அருளிய இவ்வேதத்தைக் கொண்டும், இதற்கு முன்னர் அவன் அருளிய வேதங்களைக் கொண்டும், ஈமான் கொள்ளுங்கள். (அல்குர்ஆன் : 4:136)

கலிமா தய்யிபாவாகிய ('لا إله إلا الله محمد رسول الله ﷺ') லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) என்பதில் உள்ள (لا إله إلا الله) எனும் வசனத்தில் நான்கு சொற்கள் உள்ளது, அந்த நான்கு சொற்களிலும் பன்னிரண்டு எழுத்துக்கள் உள்ளது, அந்த பன்னிரண்டு எழுத்துக்களையும் சுருக்கினால் (ا، ل، ه) ஆகிய மூன்று எழுத்துகள் மாத்திரமே மாறி மாறி இடம்பெற்றுள்ளது, அத்தகைய மூன்று எழுத்துகளையும் ஒன்றினைத்தால் الله என்று ஆகிவிடும்.

மேலே உள்ள குர்ஆன் வசனத்தின் பிரகாரம் லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ('لا إله إلا الله محمد رسول الله ﷺ') என்று ஈமான் கொண்டோரைப் பார்த்து ஈமான் கொள்ளுங்கள் என்று அல்லாஹ் கூறியதன் எதார்த்தமான உண்மை நிலை என்ன என்பதை கீழே உள்ள உதாரணங்கள் மூலம் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

தரையில் உட்கார்ந்து கொண்டு இருக்கும் ஒருவரைப் பார்த்து நீ உட்காரு என்றும், நின்று கொண்டு இருப்பவரைப் பார்த்து நீ நில் என்றும், சாப்பிட்டுக் கொண்டு இருப்பவரைப் பார்த்து நீ சாப்பிடு என்று கூறுவது போன்றே (لا إله إلا الله) லா இலாஹ இல்லல்லாஹ் என்று ஈமான் கொண்டோரைப் பார்த்து நீங்கள் ஈமான் கொள்ளுங்கள் என்று இறைவன் கூறியது நமது பார்வையில் இலக்கணம், இலக்கியம், நடைமுறைக்கு மாற்றமான வசனமாக அமைந்திருப்பது போன்று தென்படலாம் ஆனால் விசயம் அப்படி அல்ல இந்த குர்ஆன் வசனத்தின் எதார்த்தமான உண்மை நிலை என்ன என்பதை பின்வருமாறு தெளிவாக விளங்கியுள்ளோம்.

அந்த அடிப்படையில் தரையில் உட்கார்ந்து கொண்டு இருக்கும் ஒருவரைப் பார்த்து நீ எழுந்து நில் என்றும், நின்று கொண்டு இருப்பவரைப் பார்த்து நீ உட்காரு என்றும், சாப்பிட்டுக் கொண்டு இருப்பவரைப் பார்த்து நீ சாப்பிடாதே என்று கூறுவது பொருத்தமான இலக்கணம் இலக்கியம் பிரகாரம் உள்ள வாக்கியமாக ஆகிவிடும்.


​​அதே போன்று தான் லா இலாஹ இல்லல்லாஹ் என்று ஈமான் கொல்லாதவர்களைப் பார்த்து நீங்கள் ஈமான் கொள்ளுங்கள் என்று இறைவன் கூறியிருந்தால் பொருத்தமான வசனமாக அமைந்திருக்கும் என்று நாம் நினைத்துக் கொள்ளலாம் ஆனால் விசயம் இப்படி அல்ல எது எப்படி இருந்தாலும் இறைவன் அப்படி கூறியதில்தான் ஆழமான கருத்துக்கள் இலக்கணம் இலக்கியம் பிரகாரம் அமைந்துள்ளது. இதன் விளக்கங்களை சூபியாக்கள் காமிலான ஷெய்குமார்களிடம் இருந்துதான் நான் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஆகவே மேலே உள்ள வசனத்தின் பிரகாரம் வெறுமனே (لا إله إلا الله) லா இலாஹ இல்லல்லாஹ் என்கின்ற திருக்கலிமாவிற்க்கு வணக்கத்துக்குரிய நாயகன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று தமிழில் மொழிபெயர்ப்பு செய்து அர்த்தம் வைத்து ஈமான் கொண்டது பிழை என்ற காரணத்தினால் தான் ஈமான் கொண்டோரே ஈமான் கொள்ளுங்கள் என்று இறைவன் கூறுகிறான்.

லா இலாஹ இல்லல்லாஹ் (لا إله إلا الله) எனும் கலிமாவுக்கு சூபியாக்கள், காமிலான ஷெகுமார்கள் அது தரும் தெளிவான நேரடி அர்த்தத்தை “தவ்ஹீத்” ஏகத்துவம் எனும் “வஹ்ததுல் வுஜூத்” மெய்ப் பொருள் ஒன்று என்ற அர்த்தத்தை எடுத்துக் கொள்ளாமல் அதற்கு வலிந்துரைகள் வைத்து வேறு சொற்களைப் புகுத்தி அர்த்தம் எடுத்து அதாவது "(لا إله إلا الله) லா இலாஹ இல்லல்லாஹ்வுக்கு" அதன் அர்த்தம் அல்லாத வேறு ஒன்றை அர்த்தமாக நம்பிக் கொண்டிருப்பதால் முஃமின் என்ற வட்டத்துக்குள்ளேயே வரமுடியாதல்லவா? இதனடிப்படையில் தான் இறைவன் குர்ஆனில் பின்வருமாறு ஈமான் கொண்டோரே! ஈமான் கொள்ளுங்கள் என்று கூறுகிறான்.

உதாரணமாக "I went to shop" - இவ் ஆங்கில வசனத்தின் அர்த்தம்,'நான் கடைக்குப்போனேன் என்பதாகும். ஆனால் மேற்படி வசனத்துக்கு "நான் வாழைப்பழம் வாங்க கடைக்கு போனேன்" என்று மொழி பெயர்ப்பது சரியான மொழிப் பெயர்ப்பாகுமா? அதை நீங்களும் ஏற்றுக் கொள்வீர்களா! அதுபோன்றுதான் இருக்கிறது (لا إله إلا الله ) லா இலாஹ இல்லல்லாஹ்வுக்கு இன்றைய நவீன கால அறிவீனர்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள், சிறுவர்கள், பெரியவர்கள், இளைஞர்களின் மொழிபெயர்ப்பு செய்யும் விதம்.

♦ லா இலாஹ இல்லல்லாஹ் (لا إله إلا الله ) என்று அரபி மொழியில் உள்ள வசனத்தில்

'லா - لا' (ஹர்புன் நபிஃ) மறுதலிக்கும் உருபு - இல்லை / கிடையாது

'இலாஹ - إله' (இஸ்ம்-முப்ததா) எழுவாய் – தெய்வம் / கடவுள் / நாயகன்

'இல்லா - إلا' (இஸ்தித்னா) பயனிலை (ஹபர்), தவிர / அல்லாத / வேறான

'அல்லாஹ் - الله (நீக்கம் செய்யப்பட்ட செயப்படு பொருள் (முஸ்தித்னா)

இச்சொற்களுக்கிடையே "வணக்கத்துக்குரிய" (முஸ்தஹிக்குன் லில் இபாதத்தி) என்ற பெயர் உரிச்சொல் எங்கே இருக்கிறது? இல்லாத சொல்லை என்ன ஆதாரத்தின் அடிப்படையில் இடைப் புகுத்திச் சொல்கின்றீர்கள்.


​​எனவேதான் அது (لا إله إلا الله) லா இலாஹ இல்லல்லாஹ் எனும் கலிமாவின் அர்த்தமல்ல என்பதன் காரணத்தினால் தான் இறைவன் குர்ஆனில் பின்வருமாறு ஈமான் கொண்டோரே! ஈமான் கொள்ளுங்கள் என்று கூறுகிறான்.

நீங்கள் சொல்லும் கலிமாவின் அர்த்தப்படி "வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லை" என்று வைத்துக் கொண்டால், வணக்கத்துக் குரியவன் என்ற விடயத்தில்தான் அல்லாஹுவுடன் கூட்டு இல்லை. வேறு விடயங்களில் கூட்டு இருக்கலாம் என்ற இணைகற்பிக்கும் கருத்து உங்கள் கலிமாவின் அர்த்தத்தில் தொக்கி நிற்கும் விபரீதத்தை உணரவில்லையா? அந்த அடிப்படையில் வணக்கத்துக்குரியவன் மட்டும்தான் இல்லை அல்லாஹ்வைத் தவிர என்று மொழிபெயர்ப்புச் செய்யலாமா? செய்தால் அது சரியான மொழிபெயர்ப்பு ஆகுமா?

இன்னும் வணக்கத்துக்குத் தகுதியான நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லை என்றால் வணக்கத்துக்கு தகுதியில்லாத நாயன் அல்லாஹ்வைத் தவிர இருக்கின்றது என்ற கருத்து அதற்குள் இருப்பதை அவதானித்தீரா! இப்படி சொல்வது எங்கணம் பூரண தவ்ஹீத் ஆகும்?


​​இரண்டு உண்டு என்னும் "கூட்டு / இணை" எங்கணம் தவ்ஹீத் ஆகும்! இதை பூரண தவ்ஹீத் (ஒருமைப்படுத்தல்) என்று எவ்வாறு சொல்ல முடியும்! ஆனால் நீங்கள் சொல்லும் கலிமாவின் கருத்து அப்படித்தானே இருக்கிறது. இது எவ்வளவு பிழையான அர்த்தம்! இது குர்ஆனிய மொழியியலில் இல்லாத விடயமாகிவிட்ட காரணத்தினால் தான் இறைவன் குர்ஆனில் பின்வருமாறு ஈமான் கொண்டோரே! ஈமான் கொள்ளுங்கள் என்று கூறுகிறான்.

ஆகவே நாம் மேலே கூறிய கருத்துக்களின் அடிப்படையில் (لا إله إلا الله) லா இலாஹ இல்லல்லாஹ் என்பதன் பொருள் அல்லாஹ்வுக்கு வேறான கடவுள் / தெய்வம் இல்லை என்பதாகும். அதாவது (அல்லாஹ் எல்லாமாயும் உள்ளான்) “அல்லாஹ் எல்லா வஸ்த்துக்களாயும் “தஜல்லீ” வெளியாகியுள்ளான்” என்ற கொள்கை “தவ்ஹீத்” ஏகத்துவம் என்றும், “வஹ்ததுல் வுஜூத்” மெய்ப் பொருள் ஒன்று என்றும் இது இஸ்லாமிய மார்க்கத்தில் வடித்தெடுக்கப்பட்ட இறைஞானம் என சொல்லப்படுகின்றது.


​​இக்கொள்கை எந்த வகையிலும் திருக்குர்ஆனுக்கோ, திரு நபியின் ﷺ நிறைமொழிகளுக்கோ ஒரு மண்ணளவும் முரணானதல்ல. அதேபோல் “ஸுன்னீ”கள் கொள்கையில் பின்பற்றுகின்ற அல் இமாம் அபுல் ஹஸன் அல் அஷ்அரீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் “அகீதா” கொள்கைக்கும் முரணானதல்ல.

இக்கொள்கையே (روح الإسلام) இஸ்லாமின் உயிர் என்று அறிஞர்களால் சொல்லப்படுகிறது. இக்கொள்கையே றஸூல்மார்கள், நபீமார்கள், வலீமார்கள், மஷாயிகுமார் சொன்ன கொள்கை. இக்கொள்கையே சரியான கொள்கை என்பதற்கு திருக்குர்ஆனிலும், நபீமொழிகளிலும் இறை ஞானிகளான ஆரிபீன்களின் நூல்களிலும் பரந்து விரிந்த ஆதாரங்கள் உள்ளன.


​​எனவே அவனைத் தவிர எதுவும் இல்லை அவன் மாத்திரமே இருக்கின்றான் என்ற தௌஹீதை லா இலாஹ இல்லல்லாஹ் (لا إله إلا الله ) என்கின்ற திருக்கலிமாவில் இருந்து புரிந்து கொள்ள எல்லாம் வல்ல கிருபையாளன் நல்லுதவி புரிவானாக! ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.