MAIL OF ISLAM

Knowledge & Wisdomகப்ரில் போர்வை போடலாமா?

​எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.


இஸ்லாத்தின் பார்வையில் நபிமார்கள், ஷூஹதாக்கள், வலிமார்களின் கப்ருகளின் மேல் போர்வை போர்த்துவதும், விரிப்புக்கள் போடுவதும், தலைப்பாகை சூடுவதும் கூடுமா?

♣ இது பற்றி வழிகெட்ட வஹ்ஹாபிகளின் நிலைப்பாடு 

இக்காலத்தில் வஹ்ஹாபிகள் உண்மைக்கு மாறாக விஷமப் பிரசாரஞ் செய்வது வருந்தத்தக்கது. அத்தகைய விஷமப் பிரசாரங்களுளில் நபிமார்கள், ஷூஹதாக்கள், அவுலியாக்கள், குத்புமார்களின் கப்ரு ஜியாரத் செய்வதை பித்அத் - ஷிர்க் என்றும் 'கப்ரு வணக்கம்' எனவும் அத்தகைய நல்லடியார்களின் கப்றுகளுக்கு போர்வை போர்த்தினால் 'அவுலியாப் பூஜை' எனவும் இழிவாக இழித்துக் கூறுவதும், கறாமாத்துக்களைக் கேலி செய்து பழிப்பதும் ஒன்றாகும்.


​​உண்மையை அறியாதவர்கள்தான் அவ்வாறு பிதற்றித் திரிகிறார்களென்றால், அறிந்தவர்கள் கூட உண்மையைக் கூறாது வாய்மூடி இருப்பது தான் விந்தையாக இருக்கின்றது. பஸாது குழப்பத்திற்கு அஞ்சி மௌனமாக இருப்பவர்கள் சுயமாகத் தங்கள் அபிப்பிராயங்களைக் கூறாவிட்டாலும் அக்கூற்றை மறுத்து முன்னோர்கள் கொடுத்திருக்கும் பத்வா எனும் மார்க்கத் தீர்ப்பையாகிலும் எடுத்துக் காண்பிக்கலாமே. அதன் காரணமாக அவர்கள் உண்மையை உணர்ந்து நேரான பாதையில் நடக்க அனுகூலமாயிருக்கும்.

அவர்களது விஷமப் பிரசாரத்தில் கற்றோர்கள் தங்கள் கவனத்தைச் செலுத்தாது கண்மூடித்தனமாயிருப்பது நேர்மையன்று, பேயன் எறியும் கல்லும் அபாயத்தை விளைவிக்குமாகையால் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும். அவ்வாறே விஷமத்தனமான பிரசாரத்தைத் தடுத்து நிறுத்தி மெய் இன்னதென மக்களுக்கு எடுத்துரைத்துக் காட்ட வேண்டியது கடமையாகும்.


​​வலி என்பவர் யார்? அன்னாரது மகத்துவம் யாது? வலியின் ஆரம்பமென்ன? மவுத்துக்குப் பின்னும் அவர்களுக்கு ஹயாத்துண்டா? கறாமத் எனும் அற்புதங்கள் காண்பிக்க அவர்களுக்கு வல்லமையுண்டா? அவர்கள் பால் வஸீலா எனும் உதவி தேடலாமா? கபுறுகளையோ அவற்றின் வாசற்படிகளையோ முத்தமிடலாமா? அவர்களின் கப்ரின் மீது போர்வை, பூ, சந்தனம் போடலாமா? என்பன தற்போது விவாதத்திற்கு உரியவையாயிருக்கின்றன.


​​இவை போன்ற விடயங்களை தெளிந்து தெரிய குர்ஆன், ஹதீது, இஜ்மாஉ, கியாஸ் கொண்டும், சரித்திர ஆதாரங் கொண்டும் அத்தாட்சிகள் தருகின்றோம். அறிவுடையோர் அறிந்துணர்க! விளங்க சக்தியற்றோர் ளாஹிர், பாத்தின் இவ்விரண்டும் ஒருங்கேயமைந்த அறிஞர் பெருமக்களான உண்மை உலமாக்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்க. நீங்கள அறியாதவர்களாயிருப்பின் (முஷாஹதாவுடைய) அறிவு பெற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என்பது திருமறை (அல்குர்ஆன் 16:43) போதனையாகும்.

♦ அல்லாஹ் தஆலா அல்குர்ஆனில் “யார் அல்லாஹ்வின் சின்னங்களை கண்ணியம் செய்கின்றானோ அது இறையச்சத்தில் நின்றுமுள்ளது” (ஹஜ்-32) என கூறுகின்றான்.இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள அல்லாஹ்வின் சின்னம் என்பது அல்லாஹ்வை நினைவுபடுத்தக் கூடியதை குறிக்கின்றது. எந்த வஸ்து அல்லாஹ்வை நினைவுபடுத்துகிறதோ அது அல்லாஹ்வின் சின்னம் ஆகும். இந்த அடிப்படையில், ஸபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்களில் நின்றுமுள்வையாகும்.( அல் பகரா-158) மேலும் உழ்ஹிய்யஹ்வுக்காக எடுத்துச்செல்லப்படும் பிரதிகள் நாம் அல்லாஹ்வின் சின்னங்களில் நின்றுமுள்வையாக ஆக்கியுள்ளோம். (ஹஜ்-36)

மேற்குறிப்பிடப்பட்ட திருவசனங்களில் ஸபாவும் மர்வாவும் உழ்ஹிய்யஹ்வுக்காக எடுத்துச்செல்லப்படும் பிராணிகளும் அல்லாஹ்வின் சின்னங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே இவை கண்ணியம் செய்யப்பட்ட வேண்டிவையாகும். கஃபதுல்லாஹ், ஹஜறுல் அஸ்வத், ஸபா, மர்வா, மினா, அறபஹ் போன்ற புனித தலங்கள் அல்லாஹ்வின் சின்னங்கள் ஆகும். இவை கண்ணியம் செய்யப்பட வேண்டிவையுமாகும். ஆயினும் இவையாவும் கல்லினாலும் மண்ணினாலும் படைக்கப்பட்டவையாகும். இருப்பினும் அல்லாஹ்வின் சின்னங்கள் என்ற அடிப்படையில் அவை கண்ணியம் செய்யப்படுகின்றன.


​​உதாரணமாக கஃபதுல்லாஹ்வுக்கு போர்வை போர்த்துதல், ஹஜறுல் அஸ்வத் கல்லை முத்தமிடுதல் போன்று. அவ்வாறாயின் அல்லாஹ்வின் பெரிய சின்னங்களான அவனது தூதை கொண்டுவந்த நபிமார்கள், அவர்களின் வாரிசுகளான வலிமார்கள் எந்த அளவு கண்ணியம் செய்யப்பட வேண்டியவர்கள் என்பதை நாம் இங்கு சிந்திக்கவேண்டும்.

அதேபோல் உழ்ஹிய்யஹ்வுக்காக எடுத்துச் செல்லப்படும் பிராணி என்ற காரணத்தினால் குறித்த பிராணி அல்லாஹ்வின் சின்னம் என்றாகிறது. அதன் காரணமாக கண்ணியம் செய்யப்படுகின்றது. அவ்வாறாயின் நபிமார்கள், வலிமார்கள் எந்த அளவு கண்ணியம் செய்யப்பட வேண்டியவர்கள் என்பதையும் நாம் இங்கு சிந்திக்கவேண்டும்.


​​இந்த அடிப்டையில் நாம் பார்க்கும்போது நபிமார்கள், ஷூஹதாக்கள், வலிமார்கள் வாழும் கப்றுகளை அழகாக கட்டுவதும், அவர்களின் கப்றுகளுக்கு போர்வை போர்த்துதல், அவற்றை சுத்தமாக வைத்திருத்தல், போன்றவைகள்தான் அவர்களுக்கு செய்யும் கண்ணியமே தவிர அவர்களின் கப்றுகளை உடைப்பதும், கப்ருகள் மீது உள்ள போர்வைகளை அசுத்தப்படுத்துவதும் அவர்களுக்கு செய்யும் கண்ணியம் அல்ல. இவ்வாறு கூறுபவர்கள் ஹதீஸ்களை அவர்கள் தவறாக புரிந்து கொண்டமையாகும்.

♦ வருடந்தோறும் துல் ஹஜ் பிறை 9 ம் நாள் ஹஜ்ஜோடு சேர்த்து கஃபாவிற்க்கு போர்வை மாற்றம் வைபவம் என்றே ஆரம்பித்து இன்று வரை தொடர்கிறது ஒவ்வொரு வருடமும் இவ்வாறு போர்வை மாற்றப்படும். இதற்காக ஆகும் செலவு சுமார் சவுதி ரியால் -1கோடியே 70-லட்சம் என்று சொல்லப்படுகிறது. ​​போர்வை நெய்யப்பட்ட பிறகு திருக் குர்ஆன் வசனங்கள் ஜரிகை இழைகளால் கலை நயமிக்க எழுத்துக்களால் அதில் பின்னப்படுகின்றன.


​​ஆகவே இப்படி கோடிக்கணக்கான பணங்களை செலவு செய்வதன் நோக்கமே அல்லாஹ்வின் அடையாள சின்னமாகிய 'இல்லம்' கஃபதுல்லாஹ்வின் கண்ணியம் காக்ககப்பட வேண்டும் அதன் மூலம் நாம் அருள் எனும் பரக்கத் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதேயாகும். அந்த அடிப்படையில் தான் அல்லாஹ்வின் இறைநேசர்களாகிய வலிமார்களை, அவர்களின் கப்றுகளை கண்ணியப்படுத்துவதற்க்காகவே அதன் மூலம் நாம் பரக்கத் பெற வேண்டும் என்பதற்காகதான் நல்லடியார்களின் கப்றுகள் மீது போர்வை போர்த்தப்படுகின்றது.


​​மாறாக கப்ரின் மீது போர்வை போர்த்துவது வாஜிபோ, பர்ளோ அல்லது (இபாதத் - வணக்கம்) என்றோ சுன்னத் வல் ஜமாஅத்தினர்கள் யாரும் சொல்லவுமில்லை, அவ்வாறு செய்யவும் இல்லை, செய்யவும் மாட்டார்கள். மேலும் கட்டாயம் கப்ரின் மீது போர்வை போர்த்துங்கள் என்று சொல்லவும் மாட்டார்கள். ஆகவே இறைநேசர்களாகிய வலிமார்கள் மீது அன்பு கொண்டவர்கள் மாத்திரம் பரக்கத்திற்க்காக, கண்ணியம் காக்ககப்பட வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் அவர்களின் கப்ரின் மீது போர்வை போர்த்துகின்றார்கள்.அவ்வளவுதான்.

♦ காசிம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள் அன்னை ஆயிஷா (றழியல்லாஹு அன்ஹா) அவர்களிடம் சென்று அன்னையே எனக்கு றஸூல் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மற்றும் ஸஹாபாக்களின் கப்றை ஸியாறத் செய்வதற்காகத் திறந்து காட்டுங்கள் என்று கேட்க, அன்னையவர்கள் மூன்று கப்றுகளின் (மீதும் போர்த்தப்பட்டிருந்த போர்வையை) அகற்றினார்கள்.


​​அப்போது அம்மூன்று கப்றுகளும் பூமியை விட்டும் மிகவும் உயரமாகவோ, அல்லது பூமியோடு பூமியாகவோ, இல்லாது நடுத்தரமான உயரத்தில் இருந்தன. மேலும் அபூஅலீ (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகின்றார்கள். நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் கப்று முன்னால் இருந்தது அபூபக்கர் (றழியல்லாஹு அன்ஹு) அவர்களின் கப்று நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் தலைக்குப் பக்கத்தில் இருந்தது. இவ்வாறே உமர் (றழியல்லாஹு அன்ஹு) அவர்களின் கப்று அபூபக்கர் (றழியல்லாஹு அன்ஹு) அவர்களின் தலைக்குப் பக்கத்தில் இருந்தது.

நூல்: அபூதாவூத் 3222

மேற்கன்ட ஹதீதிலிருந்து கப்றுகளுக்குப் போர்வை போர்த்துதல் என்பது ஸஹாபாக்களின் காலத்திருந்து வந்தது. என்பதைப் புரிந்து கொண்டோம். ஆகவே, நபிமார்கள், வலீமார்களின் கப்றுகளை உயரமாகக் கட்டி அவற்றின் மேல்போர்வை போர்த்துதல் அவற்றைத் தரிசிக்க செல்லல் போன்றவை இஸ்லாத்தில் ஆகுமான முஸ்தஹப்பான (விரும்பப்பட்ட) ஒன்றாகும்.

♦இமாம் ராஸி ர‌ஹ்ம‌த்துல்லாஹி அலைஹி கூறுகின்றார்க‌ள்:“ஷுஹதாக்க‌ளின் க‌ப்ருக‌ளை ஜியார‌த் செய்வ‌துட‌ன் அவ‌ர்க‌ளின் க‌ப்ருக‌ளையும் க‌ண்ணிய‌ப்ப‌டுத்தும் வ‌ழ‌க்க‌த்தை நிச்ச‌ய‌மாக‌ ம‌க்க‌ள் செய்துக் கொண்டிருந்த‌ன‌ர். ஷுஹ‌தாக்க‌ள் க‌ப்றில் உயிருட‌ன் உள்ள‌ன‌ர் என்ப‌த‌ற்கு இது த‌க்க‌ சான்றாக‌ உள்ள‌து”.


​​ஆதார‌ம்: த‌ப்ஸீர் ராஸி (க‌பீர்), பாக‌ம் 04, ப‌க்க‌ம் 147

♦மிஷ்காத்தின் விரிவுரையான‌ “ல‌ம்ஆத்” என்ற‌ நூலில் இமாம் அப்துல் ஹ‌க் முஹ‌த்திக் திஹ்ல‌வி ர‌ஹ்ம‌த்துல்லாஹி அலைஹி எழுதுகின்றார்க‌ள்.“ஜியார‌த் செய்யும் போது முடிந்த‌ள‌வு மையித்தை க‌ண்ணிய‌ப்ப‌டுத்துவ‌து அவ‌சிய‌மாகும். குறிப்பாக‌ சாலிஹான‌ ந‌ல்ல‌டியார்க‌ளை ஜியார‌த் செய்யும் போது உள்ளும், புற‌மும் ஒழுக்க‌மும், வெட்க‌மும் க‌லந்த‌ நிலையில் ந‌ட‌ந்து கொள்ள‌ வேண்டும். ஜியார‌த்து செய்ப‌வ‌ரின் ஒழுக்க‌ம், ப‌க்தி அடக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் தான் கபுறாளிகளின் உதவிகள் கிட்டும்.


​​ஆதாரம்: லம்ஆத், மிஷ்காத் பக்கம் 154

♦ ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள். கஃபாவின் தூண்களை முத்தமிடுவதை ஷரீஅத் அனுமதித்துள்ளது. இதிலிருந்து கப்றுகளையும் முத்தமிடலாம் என்று அறிஞர்கள் சட்டம் எடுத்துள்ளனர். கண்ணியத்திற்குரியவர்களையும் கண்ணியத்திற்குரிய பொருட்களையும் முத்தமிடுவது ஆகும். இந்த வகையில் பெரியவர்களின் கைகளை முத்தமிடுவதும் ஆகும் என “கிதாபுல் அதப்” என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.


​​நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மின்பரையும், அன்னாரின் புனித ரெளலாவையும் முத்தமிடுவது கூடுமா? என்று இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி இடத்தில் கேட்ட போது அதில் எதுவித குறையும் இல்லை என்று விடை பகர்ந்தார்கள். ஷாபி மத்ஹபைச் சேர்ந்த அறிஞர்களுள் ஒருவரான அபுஸ்ஸைப் அல்யமானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி மூலம் இவ்வாறு கூறப்படுகின்றது. திருக்குர்ஆன் முஸ்ஹபுக்களையும், ஹதீஸ் கிரந்தங்களையும் முத்தமிடுவது ஆகுமானதாகும்.


​​ஆதாரம்: பத்ஹுல்பாரி, பாகம் 03, பக்கம் 475

♦ ஆகவே வலிமார்களின் கப்ருகளுக்கு போர்வை போர்த்துதல், அந்த போர்வையை முத்தமிடல் வலிமார்களை கண்ணியப்படுத்துவதில் உள்ளதாகும். “இன்னமா யஃமுறு மஸாஜிதல்லாஹ்” என்ற திருமறை வசனத்திற்கு தப்ஸீர் றூஹுல் பயான் ஆசிரியரான அல்லாமா இஸ்மாயில் ஹக்கி ரஹ்மத்துல்லாஹி அலைஹி பின்வருமாறு விளக்கம் எழுதும் போது இவ்வாறு எழுதுகின்றார்கள்:


​​“கஷ்புன் நூர் அன் அஸ்ஹாபில் குபூர்” என்ற நூலில் அஷ்ஷெய்கு அப்துல்ஙனி நாபிலிஸி ரஹ்மத்துல்லாஹி அலைஹி பின்வருமாறு எழுதுகின்றார்கள்.(இந்த நூலின் தமிழ் மொழி பெயர்ப்பு “கஷ்பின் வெளிச்சத்தில் கபுறுவாசிகள்” (“உலமாக்கள் மற்றும் வலிமார்கள் சாலிஹீன்களுடைய கப்றுகள் மேல் குப்பாக்கள் கட்டுவதும், போர்வை போடுவதும், விரிப்புக்கள் போடுவதும், தலைப்பாகை சூடுவதும் ஆகுமான செயலாகும்.


​​பொதுமக்கள் பார்வையில் இவர்களை கேவலமாக நோக்காமல் கண்ணியத்தை வெளிப்படுத்துவதாகும். இது போன்றுதான் வலிமார்களின் கபுறுகளில் விளக்கேற்றுவதும், மெழுகுவர்த்தி எரியவைப்பதும் அவர்களைக் கண்ணியப்படுத்துவதை நோக்காகக் கொண்டதாகும். இதன் நோக்கம் உயர்வானதாகும். வலிமார்களைக் கண்ணியப்படுத்தும் நோக்கிலும் அவர்கள் மீது அன்புவைத்தும் எண்ணெய், மெழுகுபத்தி உள்ளவற்றை நேர்ச்சை செய்வதும் ஆகுமானவையாகும். இதனைத் தடை செய்வது ஒருபோதும் கூடாது.


​​ஆதாரம்: தப்ஸீர் றூஹுல் பயான், பாகம் 03, பக்கம் 400

ஆகவே திருக்குர்ஆனையும், நபீமொழிகளையும் தூய மனதுடன் ஆழமாக ஆராய்ந்தால் வஹ்ஹாபிகள் அனாச்சாரங்கள் என்று கூறுகின்ற எல்லாமே நல்ல விடயங்கள் என்பதும், அவற்றுக்கு ஆதாரங்கள் உண்டு என்பதும் தெளிவாகும். அவ்வாதாரங்களை இந்த இடத்தில் விபரமாக மேலே நான் எழுதியுள்ளேன்.


​​ஆயினும் ஒரேயொரு திருக்குர்ஆன் வசனத்தை மட்டும் இங்கு மறுபடியும் எழுதுகிறேன். இவ்வசனம் ஒன்றே வஹ்ஹாபிகளின் வாயை அடைப்பதற்குப் போதுமென்று நம்புகிறேன். 'எவன் அல்லாஹ்வின் சின்னங்களைக் கண்ணியப்படுத்துகிறானோ அது அவனுள்ளத்தின் “தக்வா” இறையச்சமாகும்' (திருக்குர்ஆன்) எந்தவொரு படைப்பு அல்லாஹ்வை நினைவூட்டுகிறதோ அது அல்லாஹ்வின் சின்னம் எனப்படும். இது “அவாமுன்னாஸ்” என்னும் சாமானிய மனிதர்களுக்குப் பொருத்தமான கருத்து. ஆனால் இறைஞானிகளிடம் படைப்பு எதுவாயினும் அது அல்லாஹ்வை நினைவுபடுத்தும் சின்னமேயாகும்.