MAIL OF ISLAM

Knowledge & Wisdom



​கப்ரின் மீது பூ போடுவது, செடிகள் நாட்டுவது,

​தண்ணீர் ஊற்றுவது கூடுமா?

​ 

எழுதியவர்: மௌலவி S.L . அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.


"மய்யித்தை அடக்கி முடிந்தவுடன் கப்ரின் மீது பூப்போடுவது, செடிகள் நாட்டுவது, தண்ணீர் ஊற்றுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதா?


♣ மய்யித்தை அடக்கி முடிந்தவுடன் கப்ரின் மீது செடிகள் நாட்டுதற்கு ஆதாரம் உண்டா?

♦ ஹழ்ரத் இப்னு அப்பாஸ்(ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள்:


​​இரு கப்ருகளைக் கடந்து நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சென்றபோது, “இவ்விரு வரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஆனால் மிகப் பெரும் பாவத்திற்காக வேதனை செய்யப்படவில்லை. ஒருவர் கோள் சொல்லித் திரிந்தவர். மற்றொருவர் சிறுநீர் கழிக்கும்போது மறைத்துக் கொள்ளாதவர். எனக் கூறிவிட்டு, ஈரமான ஒரு மட்டையை இரண்டாகப் பிளந்து இரண்டு கப்ருகளிலும் ஒவ்வொன்றாக நட்டார்கள் “இவ்விரண்டின் ஈரம் காய்ந்த வரை இவர்களின் வேதனை குறைக்கப்படக் கூடும்” எனக் கூறினார்கள். ஷஹீஹ் புகாரி 1378


♦ ஹழ்ரத் இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்கள். அல்லாஹ் மக்காவைப் புனிதமாக்கியுள்ளான். எனக்கு முன்புள்ள யாருக்கும் (இங்கு போர் புரிதல்) அனுமதிக்கப்படவில்லை; எனக்குப் பின்பும் யாருக்கும் அனுமதிக்கப்பட மாட்டாது. எனக்கு மட்டும் பகலில் சற்று நேரம் (மக்கா வெற்றிக்காக) அனுமதிக்கப்பட்டது. எனவே, இனி மக்காவிலுள்ள புற்கள் களையப்படக் கூடாது. மரங்கள் வெட்டப்படக் கூடாது. வேட்டைப் பிராணிகள் விரட்டியடிக்கப்படக் கூடாது. அறிவிப்புச் செய்பவர்களைத் தவிர வேறு யாரும் இங்கு கீழே விழுந்து கிடக்கும் பொருட்களைப் பொறுக்கக் கூடாது“ என்று இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.


​​அப்போது (என் தந்தை) அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) இத்கிர் என்ற (பூச்செடியையும் தவிரவா? அது நம்முடைய கப்ருகளுக்கும் பொற் கொல்லர்களுக்கும் தேவைப்படுகிறதே“ என்றதும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், “இத்கிர் என்ற (பூச்செடியினை) தவிர” என்றனர். அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு), “நம்முடைய கப்ருகளுக்கும் வீடுகளுக்கும் (இத்கிர் பூச்செடியினை) பயன்படுத்தலாம்“ என்று இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள் என கூறினார். ஸஃபிய்யா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களும் இதைப் போன்றே அறிவித்தார்கள். அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு), “நம்முடைய உலோகத் தொழிலாளர்களுக்கும் வீடுகளுக்கும் பயன்படுத்தலாம்“ என்று கூறினார்கள் என தாவூஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்தார்கள். ஷஹீஹ் புகாரி 1349


♣ மய்யித்தை அடக்கி முடிந்தவுடன் கப்ரின் மீது தண்ணீர் ஊற்றுவதற்கு ஆதாரம் உண்டா?

♦ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் மகனார் இப்றாஹீம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கப்ரின் மீது தண்ணீர் தெளித்தார்கள். மேலும் அதன் மீது பொடிக்கற்களை வைத்தார்கள்.


​​ஹழ்ரத் ஜஃபர் இப்னு முஹம்மத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

மிஷ்காத் பக்கம் 148 ஹதீது எண் 1708 பாபு தப்னில் மைய்யித்தி, ஷரஹுஸ்ஸுன்னா பாகம் 5 பக்கம் 401 ஹதீது எண் 1515

♦ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஃது ரலியல்லாஹு அன்ஹு அவர்களை (அடக்கம் செய்வதற்காக கொண்டு வரப்படும் பலகையிலிருந்து) மெதுவாக எடுத்தார்கள். மேலும் அவர்களின் கப்ரின் மேல் தண்ணீரைத் தெளித்தார்கள்.


ஹழ்ரத் ​​அபூராபிஃ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

இப்னுமாஜா ஹதீது எண் 1551 பாபு மா ஜாஅ பீ இத்காலில் மய்யித்தி அல் கப்ர கிதாபுல் ஜனாயிஸ், மிஷ்காத் ஹதீது எண் 1719 பாபு தப்னில் மய்யித்தி கிதாபுல் ஜனாயிஸ்

♦ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ருக்கு தண்ணீர் ஊற்றப்பட்டது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ருக்கு தோல் துருத்தியின் மூலம் தண்ணீர் ஊற்றியவர்கள் பிலால் பின் ரபாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களாகும். தலைமாட்டிலிருந்து துவங்கி கால்மாடு முடியும்வரை ஊற்றினார்கள்.

பைஹக்கி, மிஷ்காத் ஹதீது எண் 1710 பக்கம் 149 பாபுல் புக்காஜ் அலல் மய்யித்தி


​​

♣ மய்யித்தை அடக்கி முடிந்தவுடன் கப்ரின் மீது செடிகள், தண்ணீர் ஊற்றுவதால் என்ன பயன்?

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ருக்கு தண்ணீர் ஊற்றப்பட்டது ஸஹாபாக்கள் யாவரும் அதை நன்மை என்று கருதிய காரணத்தினாலாகும். மற்றவர்களின் கப்ருக்கு தண்ணீர் ஊற்றுவதற்கு காரணம் என்னவென்றால் ரஹ்மத் இறங்க வேண்டும், குற்றங்கள் கழுவப்பட வேண்டும், பாவங்கள் பொறுக்கப்பட வேண்டும் என்று ஆதரவு வைத்தலாகும். அத்துடன் கப்ரின் மேலுள்ள மண் பரந்து செல்லாமல் தடுக்கப்பட வேண்டும் என்று நாடுவதுமாகும் என்று மிஷ்காத் பக்கம் 149 ல் உள்ள இரண்டாவது ஓரக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே கப்ரின் மீது தண்ணீர் ஊற்றுவதால் மேற்கூறப்பட்ட நன்மைகள் கிடைப்பதுடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மற்றும் ஸஹாபாக்களின் சுன்னத்தைப் பேணிய நன்மையும் கிடைக்கும் என்பதையும் அறிந்து செயல்படுவோமாக! எல்லாம் வல்ல நாயன் எம் அனைவருக்கும் நேரான பாதையை காட்டியருள்வானாக! ஆமீன்.