MAIL OF ISLAM

Knowledge & Wisdom



கத்தம், பாத்திஹா ஓதலாமா ?

எழுதியவர்: மௌலவி  S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.


இறந்தவர்களுக்கு கத்தம் - பாதிஹா ஓதி அவர்களின் பெயரால் உணவு வழங்குவதற்கு ஆதாரம் உண்டா? என்பது பற்றி இஸ்லாம் மார்க்கம் கூறும் தீர்வு என்ன?

♣ கத்தம் என்றால் என்ன?

கத்தம் என்பது கத்மு என்ற அரபி வார்த்தையிலிருந்து மருவி வந்த சொல்லாகும். கத்மு என்பதன் பொருளாகிறது முடித்தல் என்பதாகும். என்றாலும், இஸ்லாமிய பாரம்பரிய நடைமுறை அந்த கத்மு என்ற வார்த்தையை குர்ஆன் ஓதிமுடித்தலுக்கு பயன்படுத்தி வருகின்றது.


​​மேலும் தமாம் என்ற வார்த்தைக்கு நிறைவு, சம்பூரணம் என்று பொருளாகும். எனவேதான் குர்ஆன் ஷரீபு ஓதி முடிக்கப்பட்டு மார்க்கத்தில் சொல்லப்பட்ட பிரகாரம் அதை நிறைவு செய்வதற்கு கத்தம் தமாம் செய்தல் (அதாவது ஓதி முடிக்கப்பட்ட குர்ஆனை நிறைவு செய்தல்) என்று கூறப்படுகிறது.


​​

♣ இறந்தவர்களுக்காக குர்ஆன் ஓதுவதற்கு மார்க்கத்தில் ஆதாரம் இருக்கிறதா?

கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: உங்களில் மௌத்தானவர்களுக்கு சூரத்துல் யாசீனை ஓதுங்கள்.


​​நூல்கள்: அபூதாவூத், இப்னு மாஜா, பைஹகி, மிஷ்காத் - 141

♦ கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: உங்களில் யாரேனும் மரணம் ஆகிவிட்டால் அவரை அடக்குவதில் தாமதம் செய்யாதீர்கள். அவரது தலை மாட்டில் சூரத்துல் பகராவின் ஆரம்பத்தையும், அவரது கால்மாட்டில் பகராவின் கடைசி ஆயத்தையும் ஓதுங்கள்.


ஹழ்ரத் ​​உமர் (ரலியல்லாஹு அன்ஹு)

​நூல்கள்: மிஷ்காத் - 149, பைஹகி, ஷுஹ்புல் ஈமான்

♦ கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: எவராவது கப்ர்ஸ்தானங்களுக்கு சென்று யாசீன் சூராவை ஓதினால் கப்ராளிகளை தொட்டும், வேதனை லேசாக்கப்படுகிறது. மேலும் அவருக்கு அந்த கப்ராளிகளின் எண்ணிக்கை அளவுக்கு நன்மைகள் கிடைக்கின்றன.


​​நூல்: மிர்காத் 4 - 382

♦ எவர் கப்ருகளுக்குச் சென்று குல்ஹுவல்லாஹு அஹது என்ற சூராவை 11 தடவை ஓதி அதன் நன்மையை கப்ராளிக்கு சேர்த்தாரோ அவருக்கு இறந்தவர்களின் எண்ணிக்கையின் அளவு நன்மை கிடைக்கும் என்று திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என்று அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.


​​நூல்: உம்தத்துல் காரீ பாகம் 3 பக்கம் 176- புஹாரி ஹதீது எண் 218ன் விளக்கவுரை பாபுன் மினல் கபாயிரி அன் லா யஸ்த்தத்திர மின் பவ்லிஹி கிதாபுல் வுழுஇ

♦ யார் கப்ருஸ்தானுக்குச் சென்று யாஸீன் சூரா ஓதுவாரோ அந்நாளில் அல்லாஹுதஆலா அவர்களின் (வேதனைகளை) இலேசாக்குவான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.


​​நூல்: உம்தத்துல் காரீ பாகம் 3 பக்கம் 176 – புஹாரி ஹதீது எண் 218ன் விளக்கவுரை பாபுன் மினல் கபாயிரி அன் லா யஸ்த்தத்திர மின் பவ்லிஹி கிதாபுல் வுழுஇ

♦ யார் தனது தாய் தந்தையர்களில் இருவரையோ அல்லது அவர்களில் ஒருவரையோ ஸியாரத் செய்து அவ்விடத்தில் யாஸீன் ஓதுகிறாரோ அவரின் பாவங்கள் பொறுக்கப்படுகிறது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.


​​நூல்: உம்தத்துல் காரீ பாகம் 3 பக்கம் 176 –புஹாரி ஹதீது எண் 218ன் விளக்கவுரை பாபுன் மினல் கபாயிரி அன் லா யஸ்த்தத்திர மின் பவ்லிஹி கிதாபுல் வுழுஇ

♦ எவராவது கபுருஸ்தானத்திற்கு சென்று ஸூரத்து யாஸீன் ஓதினால் அல்லாஹுதஆலா அந்த கபுருவாசிகளைத் தொட்டும் வேதனையை இலேசாக்குவான். மேலும் அந்த கப்ருஸ்தானில் அடங்கி இருக்கக் கூடியவர்களின் எண்ணிக்கையளவுக்கு அவருக்கு நன்மைகள் இருக்கின்றது என்று நிச்சயமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.


ஹழ்ரத் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு

​நூல்: ஷரஹுல் ஸுதூர் பக்கம் 418 பாபுன் பீ கிராஅத்தில் குர்ஆனி லில் மைய்யித்தி

♦ உங்களில் ஒருவர் இறந்துவிட்டால் அவரை தடுத்து வைத்துக் கொண்டிருக்காமல் உடனடியாக நல்லடக்கம் செய்துவிடுங்கள். மேலும் அவரின் தலைமாட்டில் சூரத்துல் பகராவின் ஆரம்பப்பகுதியையும், அவரின் கால்மாட்டில் பகரா சூராவின் கடைசிப் பகுதியையும் ஓதுங்கள் என்று திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்.


ஹழ்ரத் அப்துல்லாஹ்​​ இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு

​நூல்: மிஷ்காத் ஹதீது எண்: 1717 பக்கம் 149 பாபு தப்னில் மய்யித்தி கிதாபுல் ஜனாயிஸ்) பைஹகி பாகம் 7 பக்கம் 16 ஹதீது எண் 9294

♦ உங்களில் இறந்தவர்கள் மீது யாஸீன் ஓதுங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.


ஹழ்ரத் மஃகில் இப்னு யஸார் ரலியல்லாஹு அன்ஹு

​​நூல்கள்: இப்னுமாஜா பாகம் 1 பக்கம் 466 ஹதீஸ் எண் 1448 பாபு மா ஜாஅ பீ மாயுக்காலு இந்தல் மரீழி கிதாபுல் ஜனாயிஸ், அபூதாவூத் பாகம் 3 பக்கம் 191 ஹதீது எண் 3121 பாபுல் கிராஅத்தி இந்தல் மய்யித்தி கிதாபு ஜனாயிஸ், அஹ்மது பாகம் 5 பக்கம் 26, மிஷ்காத் பக்கம் 141 ஹதீது எண் 1622 பாபு மா யுகாலு இந்த மன் ஹழரஹுல் மௌத்து கிதாபுல் ஜனாயிஸ்

♦ யார் அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி யாஸீன் ஓதுகிறாரோ அவரின் முன்சென்ற பாவங்கள் மன்னிக்கப்படுகிறது. ஆகவே அதை உங்களில் இறந்தவர்களின் சமூகத்தில் ஓதுங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.


ஹழ்ரத் மஃகில் ரலியல்லாஹு அன்ஹு

​நூல்கள்: முஸ்னத் அஹ்மத் பக்கம் 26, பைஹக்கி அபுல் ஈமான் பாகம் 2 பக்கம் 479 ஹதீது எண் 2458, மிஷ்காத் பக்கம் 189 ஹதீது எண் 2178 கிதாபு பலாஇலில் குர்ஆன்

♦ அன்ஸாரி ஸஹாபிகளில் ஒருவர் மரணித்து விட்டால் அவரின் கப்ருக்கு அந்த ஸஹாபாக்கள் பலவாறாக பிரிந்து சென்று அவ்விடத்தில் குர்ஆன் ஓதுபவர்களாக இருந்து கொண்டிருப்பார்கள்.


​​நூல்: கிதாபுர் ரூஹ் பக்கம் 14 அகீதத்துஸ்ஸுன்னா பக்கம் 304 ஷரஹுல் ஸுதுர் பக்கம் 417 பாபுன் பீ கிராஅத்தில் குர்ஆனிலில் மய்யித்தி

♦ அன்ஸாரி ஸஹாபாக்கள் இறந்தவர்களுக்காக பகரா சூரா ஓதுபவர்களாக இருந்தார்கள். (நூல் முஸன்னப் இப்னி ஷைபா பாகம் 3 பக்கம் 121)


​​

♣ மய்யித்தை அடக்கிய அன்று ஓதப்படுகின்ற முதலாம் கத்தத்திற்கும் அதைத் தொடர்ந்துள்ள 3,5,7,15,20,30,40 ஆகிய தினங்களில் ஓதப்படுகின்ற கத்தங்களுக்கும் மற்றும் வருஷக் கத்தம் ஓதுவதற்கும் ஏதேனும் ஆதாரம் உண்டா?

♦ 1ம் நாள் கத்தம்

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஒரு ஜனாஸாவில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டுச் சென்றோம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கப்ரின் மேல் நின்று கொண்டு கப்று தோன்றுபவரைப் பார்த்து மய்யித்தின் கால்மாட்டிலும், தலைமாட்டிலும் குழியை விசாலப்படுத்துமாறு யோசனை சொல்லிக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்து திரும்பியபோது இறந்தவரின் மனைவி அனுப்பி வைத்த அழைப்பாளர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை (உணவு உண்பதற்காக) அழைத்தார்கள். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த அழைப்பை ஏற்று சென்றார்கள். நாங்களும் அவர்களுடன் சென்றோம். உணவு கொண்டு வரப்பட்டது. உடனே உணவில் கையை வைத்தார்கள். கூட்டத்தில் உள்ள அனைவரும் கையை வைத்தனர். பிறகு எல்லோரும் சாப்பிட்டார்கள்.


ஹழ்ரத் ஆஸிம் ரலியல்லாஹு அன்ஹு

​நூல்கள்: அபூதாவூத் ஹதீது எண் 3332 பாபுன் பீ இஜ்தினாபிஷ் ஷுப்ஹாத்தி கிதாபுல் புயூஇ, மிஷ்காத் பக்கம் 544 ஹதீஸ் எண்: 5942 பாபுன் பில் முஃஜிஸாத்தி

​​

♦ 3ம் நாள் கத்தம்:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருமை மகனார் இப்றாஹீம் ரலியல்'லாஹு அன்ஹு அவர்கள் வபாத்தாகி மூன்றாம் நாள் அன்று அபூதர்ரு ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் உலர்ந்த பேரீச்சம் பழம், பால், தொலிக் கோதுமையால் ஆன ரொட்டி ஆகியவற்றைக் கொண்டு வந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சமூகத்தில் வைத்தார்கள். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்ஹம்து சூராவை ஒருவிடுத்தம் குல்ஹுவல்லாஹு அஹது சூரா 3 விடுத்தம் ஓதி கையை உயர்த்தி பிரார்த்தித்து விட்டு கையை முகத்தில் தடவினார்கள். பிறகு அபூதர்ரு ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பார்த்து இதை மக்களுக்கு மத்தியில் பகிர்ந்து கொடுங்கள்' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.


​​நூல்: பதாவா அர்வஹன்தி தஸ்ஹீஹுல் அகாயித் பக்கம் 128

♦ 5ம் நாள் கத்தம்:​

உடம்பை விட்டும் உயிர் பிரிந்து மூன்று நாட்கள் கழிந்தும விட்டால் அந்த ஆன்மா அல்லாஹ்வின் சமூகத்தில் நாயனே! நான் இருந்து வந்த உடம்பை பார்த்து வருவதற்கு எனக்கு அனுமதி அளிப்பாயாக என்று கேட்கின்றது. உடனே அல்லாஹு தஆலா அது சென்று வருவதற்கு அனுமதி அளிப்பான். அப்போது அந்த ஆன்மா தனது கப்ருக்கு சற்று தூரத்தில் இருந்து கொண்டு தனது உடம்பைப் பார்க்கும். அப்போது இரு மூக்கு துவாரத்திலிருந்தும் வாயிலிருந்தும் தண்ணீர் வடிந்து கொண்டிருக்கும். இதைக் கண்ணுற்ற அந்த ஆத்மா தனது உடம்பின் நிலையை நினைத்து நீண்ட நேரம் அழுதுவிட்டு பிறகு திரும்பிச் சென்று விடும்.

ஐந்து நாட்கள் கழிந்து விட்டால் மீண்டும் அல்லாஹ்விடம் அனுமதி பெற்று தனது உடம்பைப் பார்ப்பதற்காக வரும். அப்போது அதன் வாயிலிருந்து இரத்தமும் அதனடைய ஒரு காதுகளிலிருந்து சீலும் ஊனமும் வடிந்துக் கொண்டிருப்பதைப் பார்த்து மீண்டும் அழுது விட்டு சென்று விடும். பிறகு ஏழாவது நாளில் மீண்டும் வந்து தனது உடம்பைப் பார்க்கும். அப்போது தனது உடம்பை புழுக்கள் கடித்துக் கொண்டிருப்பதைக் கண்டு மீண்டும் அழ ஆரம்பித்துவிடும்.


​​மேலும் தான் இப்பூவுலகில் வாழ்ந்த சொகுசான வாழ்க்கையைத் தற்போதுள்ள கபுருடைய கஷ்டமான வாழ்க்கையோடு ஒவ்வொரு வகையிலும் ஒப்பிட்டு பார்த்தவண்ணம் தன் நிலையை நினைத்து நினைத்து நீண்ட நேரம் அழுது விட்டு மீண்டும் சென்று விடும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஹதீஸ் வந்துள்ளது.


​​நூல்: தக்காயிகுல் அக்பார் 16வது பக்கம் 9வது பாபு அத்துரருல் ஹிஸாப் பக்கம் 16

இப்போது கூறப்பட்ட இந்த ஹதீஸில் வந்துள்ளது போன்று தனது உடம்பு நாதியற்று கிடக்கும் நிலையையும் தனது குடும்பத்தாரோ உறவினர்களோ கைகொடுத்து காப்பாற்றாமல் தான் மட்டும் தன்னந்தனியே தவித்துக் கொண்டிருக்கிறோமே என்றும் நினைத்து கவலைப்படுகின்ற நேரத்தில் அந்த மய்யித்தை நினைத்து ஓதப்படுகின்ற கத்தத்தின் நன்மை அதற்கு போய்ச் சேருவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகின்றது என்ற காரணத்தினால் மேற்கூறப்பட்ட தினங்களில் அதாவது 3,5,7 ஆகிய தினங்களில் கத்தம் ஓதப்படுகின்றது.

♦ 7ம் நாள் கத்தம்:

மரணித்தவர்கள் நிச்சயமாக தாங்களின் கபுருகளில் 7 நாட்கள் குழப்பத்தில் உட்படுத்தப்பட்டவர்களாக இருப்பார்கள் அந்த ஏழு நாட்களில் தாங்கள் பெயரால் உணவு கொடுக்கப்படுவதை விரும்பக் கூடியவர்களாக இருக்கிறார்கள் என்று தாவூஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் இமாம் அஹ்மது ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களின் ஸுஹ்து என்ற நூலிலும் அபூநயீம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களின் ஹில்யா என்ற நூலிலும் கூறுகிறார்கள். என்று ஷரஹுஸ்ஸுதூர் என்ற நூலின் 139 வது பக்கத்திலும் பிக்ஹுஸுன்னா 369வது பக்கத்திலும் ஹாவி பாகம் 2 பக்கம் 178 வது பக்கத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஹதீதை இமாம் இப்னு ஹஜர்  ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஸஹீஹ் ஆனது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.(நூல் அல்மிர்ஆத் பாகம் 4 பக்கம் 584 மற்றும் பாகம் 3 பக்கம் 514)

மேலும் நிச்சயமாக கபுராளிகளைத் தொட்டும் செய்யப்படும் தான தருமங்கள் அவர்களுடைய கபுருகளில் உள்ள சூட்டை (உஷ்ணத்தை) அமர்த்தி விடும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.  


ஹழ்ரத் ​​உக்பா ரலியல்லாஹு அன்ஹு அவர்களால் அறிவிக்கப்பட்டு தபரானியில் பதிவாகியுள்ள ஹதீது (நூல் பிக்ஹு ஸுன்னா பக்கம் 368 – அல் மிஆத் பாகம் 3 பக்கம் 514) இங்கு சிந்தனைக்குரியதாகும்.

மேலும் 7 நாட்கள் உணவு கொடுக்கும் பழக்கம் ஸஹாபாக்கள் காலம் தொட்டு இதுகாலம் வரை மக்கா, மதீனாவில் நடந்து வருகிறது என்று ஹாவியில் (பாகம் 2 பக்கம் 194) ஸுயூத்தி இமாம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இதுபோன்றே அல்மிர்ஆத் பாகம் 4 பக்கம் 585லிலும் வந்துள்ளது.

♦ 30 ம் நாள் பாத்திஹா:

ஒரு முஃமினான மனிதன் இறந்து விட்டால் அவனுடைய ஆன்மா தனது சொத்துக்களை தனது வாரிசுகள் எப்படி பங்கு வைக்கிறார்கள், தனது கடன்களை எப்படி நிறைவேற்றுகிறார்கள் என்பதைக் கவனித்த வண்ணம் ஒருமாத காலம் (30 நாட்கள்) அவனது வீட்டைச் சுற்றி வந்து கொண்டிருக்கின்றது. மேலும் ஒரு மாதம் நிறைவாகி விட்டால் அவனது கப்ருக்குச் சென்று தனது வாரிசுகளில் தன்னை நினைத்து கவலைப்படுபவர்கள் யார் தனக்காக துஆ செய்பவர்கள் யார் என்பதை கவனித்த வண்ணம் ஒரு வருடம் வரை அவனது கப்ரைச் சுற்றிக் கொண்டு இருக்கின்றது. ஒரு வருடம் நிறைவாகிவிட்டால் கியாமத் நாள்வரை அவனது ஆன்மா (வானத்தளவில்) உயர்த்தப்பட்டு விடுகின்றது என்று அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் அறிவிக்கபபட்டுள்ள செய்தி வந்துள்ளதால் 30 ம் நாள் பாத்திஹா அனுஷ்டிக்கப்படுகிறது.(நூல் அத்துரருல் ஹிஸான் பக்கம் 12, தக்காயிருல் அக்பர் பக்கம் 17-19வது பாபு, ஷரஹுஸ்ஸுதூர் பக்கம் 358 பாபு தலாக்கி அர்வாஹில் மவ்தா…)

♦ 40 ம் நாள் பாத்திஹா:

மேற்கூறப்பட்ட ஹதீஸைப் போன்றே இறந்தவர்கள் 40 நாட்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும் அதனால் அந்த நாட்களில் அவர்களுக்காக உணவு கொடுக்கப்படுவதை அவர்கள் விரும்புவதாகவும் இதன் நிமித்தம் ஸஹாபாக்கள் காலத்திலும் இந்த முறை இருந்து வந்ததாகவும் பிக்ஸுன்னா 369ம் பக்கத்திலும் அல் மிர்ஆத் 584வது பக்கத்திலும் வந்துள்ளது. எனவேதான் அந்த 40 நாட்களுக்கும் உணவு கொடுப்பது சிரமமாகும் என்பதால் ஒவ்வொரு பகுதியிலும் சில குறிப்பிட்ட நாட்களை அதாவது 1, 3, 5, 7, 10, 20, 30, 40 என்றோ அல்லது 1, 3, 5, 7, 10, 15, 25, 40 என்றோ இமாம்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வோமாக.

♦ வருட பாத்திஹா:

இறந்த மய்யித்தின் ஆன்மா வருடா வருடம் தன் இல்லத்திற்கு வருகை தருகிறது என்று 'தகாயிகுல் அக்பார்' போன்ற கிரந்தங்களில் (நாம் சற்று முன்பு குறிப்பிட்டுள்ளது போல) வந்துள்ளதாலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வருடந்தோறும் ஷுஹதாக்களின் கப்ருகளுக்கு சென்று துஆ செய்து விட்டு வருதாக தப்ரானி இமாம் அவர்களுக்குரிய அவ்ஸத் என்ற ஹீது கிதாபில் (பாகம் 3 பக்கம் 241) வந்துள்ளதாலும் வருடாவருடம் மய்யித்தின் பேரில் ஸதக்காவாக செய்யப்படுகின்ற விருந்துபச்சார வைபவம்(கத்தம்) முற்காலம் தொட்டு செய்யப்பட்டு வருகின்ற காரியமாகவும் அதன் நோக்கம் மார்க்க அறிஞர்களையும் மற்றவர்களையும் அழைத்து மய்யித்தின் பேரில் கிருபை கொண்டு பிரார்த்திக் வைப்பதாகவும் இருப்பதால் இது ஒரு நல்ல காரியம் என்று மகான்களாகிய நமது முன்னோர்களின் தெளிவான மார்க்கத் தீர்ப்பு இருப்பதாலும் (அல்மிஆத் பாகம் 4 பக்கம் 585) வருடபாத்திஹா அனுஷ்டிக்கப்படுகிறது.


​​

♣ இறந்தவர்கள் வீட்டில் உணவு தயார் செய்வது அவர்களின் பெயரால் உணவு வழங்குவதற்கு ஆதாரம் உண்டா?

மய்யித்து வீட்டினர் தமது குடும்பத்தில் உள்ள ஒருவர் தங்களை விட்டுப் பிரிந்து விட்டாரே என்ற கவலையில் இருந்து கொண்டு உணவு விஷயத்தில் கவனம் செலுத்தாமல் இருப்பார்கள் என்ற காரணத்தினால் மைய்யித் வீட்டினருக்காக பக்கத்து வீட்டினர் உணவு தயாரித்து கொடுப்பது ஸுன்னத் என்று இமாம்கள் நாதாக்கள் கூறியுள்ளார்கள்.

♦ ஸய்யிதினா ஜஃபர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மூத்தா போரில் ஷஹீதாக்கப்பட்டு விட்டார்கள் என்ற செய்தி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து சேர்ந்த போது ஜஃபர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் குடும்பத்தாருக்கு உணவு தயாரித்து கொடுங்கள். ஏனெனில், நிச்சயமாக அவர்களுக்கு கவலைத் தரக்கூடியது வந்து விட்டது என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.


​​நூல்கள்: திர்மிதி ஹதீது எண் 998 பாபு மா ஜாஅ பித்தஆமி யுஸ்னவு லி அஹ்லில் மய்யித்தி கிதாபுல் ஜனாயிஸ், அபூதாவூத் ஹதீது எண் 3132 பாபு ஸுன்அத்தித் தஆமி லி அஹ்லில் மய்யித்தி கிதாபுல் ஜனாயிஸ், இப்னுமாஜா ஹதீது எண் 1610 பாபு மா ஜாஅ பித் தஆமி…. கிதாபுல் ஜனாயிஸ், மிஷ்காத் ஹதீது எண் 1739 பாபு பகாஇ அலல் மய்யித்தி)என்ற ஹதீஸ் தெளிவுபடுத்தக் கூடியதாக இருக்கின்றது.

♦ திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது துணைவியார் கதீஜா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் வபாத்தாகி விட்டபோது அதிகம் அதிகம் அவர்களை ஞாபகம் செய்பவர்களாக இருந்தார்கள். சில சமயங்களில் ஆட்டை அறுத்து தனித்தனி உறுப்புகளாக வெட்டி கதீஜா நாயகி அவர்களின் தோழிமார்களுக்கு அன்பளிப்பாக அனுப்பி வைப்பார்கள் என்று ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்.


​​நூல்கள்: புகாரி ஹதீது எண் 3818 பாபு தஸ்வீஜின் நபி கதீஜத்த ரலியல்லாஹு அன்ஹா கிதாபு பழாஇலி அஸ்ஹாபின் நபிய்யி, புஹாரி ஹதீது எண் 6004 பாபு ஹுஸ்னில் அஹ்தி மினல் ஈமானி கிதாபுல் அதப், முஸ்லிம் ஹதீது எண் 2435 பாபு பழாஇலி கதீஜா கிதாபு பழாயிலிஸ் ஸஹாபத்தி, திர்மிதி ஹதீது எண் 3875 கிதாபுல் மனாக்கிப் பாபு பழ்லி கதீஜத்த ரலியல்லாஹு அன்ஹா, தி;மிதி ஹதீது எண் 2017 பாபு மா ஜாஅ பீ ஹுஸ்னில் அஹ்தி கிதாபுல் பிர்ரி வஸ்ஸிலத்தி, மிஷ்காத் பக்கம் 573 ஹதீது எண் 6186 கிதாபுல் மனாகிப்)

♦ ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்களின் குடும்பத்தவர்களில் எவரேனும் மரணித்து விட்டால் அதற்காக பெண்கள் ஒன்று கூடுவார்கள். பிறகு அந்த மையித்தின் வீட்டவர்கள், அவர்களின் உறவினர் தவிர மற்றவர்கள் போய் விடுவார்கள். அப்போது ஒரு சட்டியில் பாயாசம் தயார் செய்யுமாறு கூறுவார்கள். பின்னர் ரொட்டி சமைக்கப்பட்டு அதன் மீது அந்தப் பாயாசம் ஊற்றி அந்தப் பெண்களைப் பார்த்து சாப்பிடுங்கள் என்று கூறுவார்கள். இந்த உணவுக்கு “தல்பீனிய்யஹ்” என்று பெயர். ஏனெனில் இந்த உணவு நோயாளிகளின் இதயத்திற்கு வலுவூட்டும் என்றும், கவலையைப் போக்கும் என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன் என்றும் கூறுவார்கள்.


​​நூல்: புகாரி ஹதீஸ் இலக்கம் –5417, பாடம்–கிதாபுல்அதஇமஹ்

♦ மய்யித்தின் நிமித்தம் கிராமங்களிலிருந்தும் தூரமான இடங்களிலிருந்தும் வந்திருப்பவர்கள் வாகன வசதியில்லாத காரணத்தினால் திரும்பிச் செல்வதற்கு முடியாமல் மய்யித்தின் வீட்டில் இரவு தங்கிவிடக் கூடும். இது போன்ற சூழ்நிலையில் வந்தவர்களை உபசரிப்பதற்காக உணவு தயார் செய்வது மைய்யித்தின் வீட்டினருக்கு கடமையாக ஆகிவிடுகின்றது.


​​நூல்: அல் முங்னி லி இப்னி குதாமா பாகம் 2 பக்கம் 215 மஸ்அலா எண் 1660

♦ ஸஹாபாக்கள் காலத்திலேயும் இறந்தவர்களின் வீட்டில் ஒன்று கூடி உணவருந்தும் அமைப்பு இருந்து வந்தது என்று ஸய்யிதினா அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அருமை மகனார் அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் ஸய்யிதினா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் குறிப்பிடும் செய்தி இப்னு குதாமா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எழுதிய முங்னி என்ற கிரந்தத்தில் (பாகம் 2 பக்கம் அ215) காணக் கிடைக்கின்றது.

♦ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஸஹாபாக்களும் ஒரு ஜனாஸாவை அடக்கம் செய்து விட்டு அந்த மய்யித்தின் வீட்டிற்கு சென்று உணவருந்தினார்கள் என்று ஏற்கனவே கூறப்பட்ட ஹதீஸின் (மிஷ்காத் ஹதீது எண் 5942, அபூதாவூத் ஹதீது எண் 3332) மூலம் மய்யித்தின் வீட்டில் உணவருந்துவது கூடாது என்று நமது காலத்தில் வாழ்கின்ற மக்களின் நாவுகளில் பிரபல்யமாக இருக்கின்ற சொல்லுக்கு மறுப்பு இருக்கின்றது என்பதை தெளிவாக விளங்க முடிகின்றது என்று மேற்கூறப்பட்ட ஹதீஸின் விளக்கவுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. (அல்மிர்ஆத் பாகம் 4 பக்கம் 585)

♦ இறந்தவர்கள் வீட்டில் உணவு தயார் செய்வது அறவே கூடாது என்று கூறுவதற்கும் அதைக்காரணமாக காட்டி மய்யித்தின் பேரில் கொடுக்கப்படும் உணவைத் தடுப்பதற்கும் எவ்வித முகாந்திரமும் இல்லை. ஏனெனில் மய்யித்தின் வீட்டில் உணவு தயார் செய்ய முடியாவிட்டாலும் அவர்கள் சம்பந்தப்பட்ட சொந்தக்காரர்களின் வீடுகளில் உணவு தயார் செய்து கொடுப்பதும் போதுமானதாகவே இருக்கின்றது என்று (அல் மிர்ஆத் பாகம் 3 பக்கம் 514 ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே மேற்கண்ட ஹதீஸ்கள் மூலம் மரணித்தோருக்கு கத்தம் பாத்திஹா ஓதி அன்னவர்களின் பெயரால் உணவு வழங்கலாம் என்பது தெளிவாகின்றது.