MAIL OF ISLAM

Knowledge & Wisdom



கூட்டு துஆ

***************

எழுதியவர்: மௌலவி  S.L. அப்துர்ரஹ்மான்  (கௌஸி)  கல்முனை.


இஸ்லாத்தின் பார்வையில் பர்ளான தொழுகைகளுக்குப் பின் கூட்டுத் துஆ ஓதுவது பற்றி ஓர் ஆய்வு:

♦ துஆ என்பது மார்க்கத்தில் பிரதானமான ஒரு வணக்கமாகும். கூட்டுத் துஆ என்றால் என்ன? என்று பார்க்கும் போது "ஒருவர் சப்தமாக துஆ கேட்க மற்றவர்கள் சப்தமிட்டு ஆமீன் சொல்லும் ஒரு செயலை தான் கூட்டு துஆ" எனக் கூறப்படுகிறது. சுருக்கமாக சொல்லப்போனால் கூட்டாக சேர்ந்து கொண்டு அல்லாஹ்விடம் துஆ கேட்பதே கூட்டு துஆவினை குறிக்கும். அந்த அடிப்படையில் கூட்டு துஆ என்பது ஜனாஸா நல் அடக்கத்தின் போதும், ஹஜ் பயணம் செல்லும் போதும்,ஜவேளைத் தொழுகைகள் மற்றும் ஜும்ஆ, பெருநாள் தொழுகைகளின் பின்பும் குறிப்பாக சமூக, சமய விவகாரங்கள் போன்ற நேரத்திலும் கூட்டாக துஆ கேட்கப்படுகிறது.

♦ வஹ்ஹாபிகள் கூட்டுத் துஆ இல்லையென்று சொல்லி அதன் பயன்களையெல்லாம் இழந்து கொண்டிருக்கிறார்கள் அல்லவா! இன்று நவீன புதுமை விரும்பிகள் கூட்டுத் துஆ இல்லையென்று கோசம் எழுப்புபவார்கள். ஆனால் வஹ்ஹாபிகள் எல்லோரும் தொழுகையில் சப்தமிட்டுதான் ஆமீன் சொல்கிறார்கள். இதுதான் கூட்டுத் துஆ. இமாம் "வலழ்ழாள்ளீன்" என்று துஆ செய்து முடிக்கிறார். இறைவா! எங்களுக்கு நேர்வழி காட்டுவாயாக! என்று உடனே நாம் அனைவரும் ஆமீன் என்று சப்தமிட்டு சொல்கிறோம். இதுதான் கூட்டுத் துஆ ஒருவர் துஆ செய்ய மற்றவர்கள் ஆமீன் கூறுவதாகும். வஹ்ஹாபிகளே! தொழுகையில் கூட்டுத் துஆ செய்துவிட்டு தொழுகையினை முடித்தபின் வெளியே வந்து கூட்டுத் துஆ இல்லையென்று கூறினால் என்ன அர்த்தம்?

♦ 'ஆமீன்' சொல்வது இறைவன் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உம்மத்தினர்களுக்கு கொடுத்த ஒரு சிறந்த வெகுமதி ஏனெனில் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் "எந்த உம்மத்தினர்களுக்கும் கொடுத்துவிடாத மூன்று வெகுமதிகளை இறைவன் எனது உம்மதினர்களுக்கு கொடுத்துள்ளான். ஒன்று தொழுகையில் அணிவகுத்து நிற்பது இரண்டாவது அஸ்ஸலாமு அலைக்கும் என்ற காணிக்கை மூன்றாவது துஆவிற்கு ஆமீன் சொல்வதாகும்".  ஆதாரம் : இப்னு ஹுஸைமா

♦ மேலே கூறப்பட்ட இந்த ஹதீஸில் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு விதிவிலக்கு கொடுக்கிறார்கள். எனக்கு முன்பு ஒரே ஒரு நபிக்கு மட்டும் இறைவன் கொடுத்தான் அந்த நபிதான் ஹாரூன் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் நபி மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் செய்த துஆவிற்கு ஹாரூன் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் ஆமீன் சொன்னார்கள். அப்படிப்பட்ட வெகுமதியினை வஹ்ஹாபிகள் வீணாக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

இன்னும்: “எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ ஃபிர்அவ்னுக்கும் அவனுடைய பிரமுகர்களுக்கும் அலங்காரத்தையும், இவ்வுலக வாழ்க்கையின் செல்வங்களையும் கொடுத்திருக்கிறாய்; எங்கள் இறைவனே! (அவற்றைக் கொண்டு) அவர்கள் உன் பாதையை விட்டு வழி கெடுக்கிறார்கள்; எங்கள் இறைவனே! அவர்களுடைய செல்வங்களை அழித்து, அவர்களுடைய நெஞ்சங்களையும் கடினமாக்கி விடுவாயாக! நோவினை தரும் வேதனையை அவர்கள் பார்க்காதவரையில், அவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள்” என்று மூஸா கூறினார்.

அல்குர்ஆன் : 10:88

இறைவன் கூறினான்: “உங்கள் இருவரின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டது; எனவே நீங்கள் உறுதியாக இருங்கள். அறியாதவர்களாக இருக்கிறார்களே அவர்களின் வழியை நீங்கள் இருவரும் (ஒருபோதும்) பின் பற்றாதீர்கள்” என்று.  அல்குர்ஆன் : 10:89

எனவே மேலே கூறப்பட்ட குர்ஆன் வசனத்தின் பிரகாரம் கூட்டுத் துஆ என்பது மார்க்கத்தில் உண்டு என்பது தெளிவான விளங்குகின்றது. அந்த அடிப்படையில்தான் மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் துஆவிற்கு ஹாரூன் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் ஆமீன் கூறினார்கள்.

♣  பர்ளான ஜவேளைத் தொழுகைகளின் பின் சப்தமிட்டு கூட்டுத்து துஆ ஓதுவதற்கான ஆதாரங்கள்:

துஆ என்பது மார்க்கத்தில் பிரதானமான ஒரு வணக்கமாகும். துஆவை தனியாக செய்வதற்கு ஆதாரங்கள் இருப்பது போன்று கூட்டாக செய்வதற்கும் ஆதாரங்கள் உள்ளன.இன்று வழமையில் ஜங்காலத் தொழுகைகளுக்குப் பின் கூட்டு துஆ ஓதப்பட்டு வருகின்றன. அதே வேளை தொழுகைக்குப் பின் கேட்கப்படுகின்ற பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படுகின்றது, கூட்டாகக் கேட்கப்படும் துஆ மறுக்கப்படுவதில்லை என்பன போன்ற கருத்துகள் உள்ளடக்கிய ஹதீஸ்களை அடிப்படையாகக் கொண்டு இம்முறையினை கூடுமென்று இமாம்கள் கூறுகிறார்கள்.

♦எந்த துஆ மிகவும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியது என்று கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டகப்பட்ட பொழுது, 'இரவின் நடுநிசியிலும், பர்ளான தொழுகைகளுக்குப்பின்னரும் கேட்கப்படும் துஆவாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதிலுறுத்தார்கள்.  


​​அறிவிப்பாளர்: ஹழ்ரத் அபூஉமாமா ரலியல்லாஹு அன்ஹு

நூல்: திர்மிதி

♦ பின்வரும் துஆவை ஒவ்வொரு தொழுகைக்குப்பின்னரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதுபவர்களாக இருந்தார்கள். 'நாயனே! உன்னிடம் கோழைத்தனத்தை விட்டும், முதுமையின்பால் தள்ளப்படுவதை விட்டும், உலக சோதனைகளை விட்டும், கப்றின் வேதனையை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன்'.


​​அறிவிப்பவர்: ஸஃதுப்னு அபீ வக்காஸ் ரலியல்லாஹு அன்ஹு

நூல்: புகாரி

♦ அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் ஸல்லலாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் எனது வீட்டிற்கு வந்தார்கள் எனது தாயார் என்னுடைய ஹாலா உம்மு ஹராம் ரலியல்லாஹு அன்ஹா நாங்கள் மூன்று பேரும் இருந்தோம் ஸல்லலாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் வந்தவுடனே தொழுகைக்கு தயாராகுங்கள் என்று கூறினார்கள். (நப்லான தொழுகை) நாங்கள் அனைவரும் மஃமூம்களாக நின்றோம். நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் இமாமாக நின்று தொழுகை நடாத்தினார்கள். ஸலாம் கொடுத்த பிறகு எங்கள் மூன்றுபேருக்காகவும் எல்லா விடயங்களுக்காகவும் இந்த உலக நன்மை மறுமை உலக நன்மை அனைத்திற்க்கும் துஆ செய்தார்கள்.

ஆதாரம் : முஸ்லிம்

♦ கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஆத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டு முஆதே! இறை மீதாணை! உம்மை நான் நேசிக்கிறேன். ஒவ்வொருதொழுகைக்குப் பின்னரும் (பின்வரும்) துஆவை ஓதும்படி உமக்கு வஸியத் செய்கிறேன்.'நாயனே! உன்னை திக்று செய்வதற்கும் உனக்கு ஹுக்று-நன்றி பாராட்டுவதற்கும் நன்முறையில் உன்னை வணங்குவதற்கும் எனக்கு உதவி புரிவாயாக!'அறிவிப்பவர்: முஆத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். 

நூல்: அபூதாவூத்

♦ நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுப்ஹுத் தொழுதால், 'நாயனே! உன்னிடம் பயன்தரும் ஞானத்தையும், ஒப்புக்கொள்ளப்பட்ட அமலையும், ஹலாலான, மணமான இரணத்தையும் வேண்டுகிறேன்' என்று கேட்பவர்களாக இருந்தார்கள்.


​​அறிவிப்பவர்: உம்மு ஸல்மா ரலியல்லாஹு அன்ஹா

​நூல் : முஸ்னத் அஹ்மத், இப்னு மாஜா

♦ தொழுகைக்குப் பின்னர் துஆ

ஓதுவது குறித்து பிக்ஹ் நூற்களான

ஷhமி பாகம் 1 பக்கம் 356,

பத்ஹுல் கதீர் பாகம் 1 பக்கம்191,

ஷரஹுன் நிஹாயா பாகம் 1 பக்கம்106,

அல்முஃனில் முஹ்தாஜ் பாகம் 1 பக்கம் 182,183,

பக்ஹுல் முயீன் பாகம் 1 பக்கம் 184,185,

இஆனா பாகம் 1 பக்கம் 184,185, மற்றும் நூற்களிலும் வந்திருக்கிறது.

♣ கூட்டுப் பிரார்த்தனை (ஒருவர் துஆ ஓத மற்றவர் ஆமீன் கூறுவதற்கான) ஆதாரங்கள்:

♦ சுப்ஹுத் தொழுகைக்குப் பின் நாயனே! உன்னைக் கொண்டே காலையில் விழித்தெழுந்தோம். உன்னைக் கொண்டே மாலையில் ஆனோம். உன்னைக் கொண்டே உயிர் வாழ்கிறோம். உன்னைக் கொண்டே மரணிக்கச் செய்கிறோம். மீளுவதும் உன் பக்கமே! என்று பிரார்த்திப்பவர்களாக அண்ணல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருந்தார்கள்.


​​அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்

நூல்: அபூதாவூது, திர்மிதி

♦ஹபீப் இப்னு ஸல்மதுல் பிஹ்ரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலமாக அறிவிக்கப்படுகிறது (பிரார்த்தனை ஒப்புக் கொள்ளப்படுபவராக (முஜாபுத்துஆ) இவர்கள் இருந்தார்கள்) 'ஒரு கூட்டத்தில் சிலர் பிரார்த்தித்து, மற்றவர்கள் ஆமீன் கூறினால் அவர்களது துஆவிற்கு அல்லாஹ் பதில் கூறியே அல்லாது என் கூட்டமும் ஒன்று சேருவதில்லை'.

​ 

பத்ஹுல் பாரி பகாம் 13, பக்கம் 456

♦ ஒருவர் துஆ ஓத மற்றவரை ஆமீன் கூறும்படி அண்ணல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பணித்திருப்பதைக் குறித்து மேலும் தெளிவு வேண்டுமானால் ஸுனன் அபீதாவூது பாகம் 1 பக்கம் 215, பத்ஹுல் பாரி பாகம் 2 பக்கம் 209,பாகம் 13 பக்கம் 456 லும் பார்த்துக் கொள்ளுங்கள்.

♦ நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: இமாம் 'வலழ்ழாளீன்' என்று ஓதி முடித்து 'ஆமீன்' கூறும்போது நீங்களும் ஆமீன் கூறுங்கள்.;. யாருடைய சொல் மலக்குகளின் கூற்றுக்கு ஒன்றுபட்டு விடுகிறதோ அவருடைய முன்பாவங்களனைத்தும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன.


​​அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்

நூல்: புகாரி-762, நஸயீ-928

♦ நீங்கள் நோயாளிகளை உடல் நலம் விசாரிக்கச் சென்றால் அல்லது மய்யித்தைப் பார்க்கச் சென்றால் நல்லதையே கூறுங்கள். ஏனென்றால், உங்களுடைய கூற்றுக்கு மலக்குகள் ஆமீன் கூறுகிறார்கள்.


​​அறிவிப்பாளர்: உம்மு ஸல்மா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள்.

நூல்: முஸ்லிம்-919, அபூதாவூத்-3115, திர்மிதி-977

♦ ஒரு முஸ்லிம் மறைவாக உள்ள தனது சகோதரருக்கு துஆ செய்தால் (இறைவனிடம்) அது ஒப்புக் கொள்ளப்படுகிறது. ஒரு மலக்கு சாட்டப்படுகிறார். அந்த மலக்கு அவருக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டு அமீன் என்று கூறி அதுபோன்று உனக்கும் கிடைக்கட்டும் என்கிறார்.


​​அறிவிப்பாளர்: சஃப்வான் இப்னு அப்தில்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.

நூல்: முஸ்லிம்-2732, அபூதாவூத்-1534

♦ ஒரு கூட்டத்தினர் ஒன்றிணைந்து அவர்களில் சிலர் பிரார்த்தனை செய்ய மற்றவர்கள் ஆமீன் கூறினால் அவர்களின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதில்லை'' என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.


​​அறிவிப்பவர்: ஹபீப் பின் மஸ்லமா ரலியல்லாஹு அன்ஹு

​நூல்: ஹாகிம் 3456

♦ ஒரு முஸ்லிம் தனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வது போல் தன் கண்ணெதிரே இல்லாத முஸ்லிம் சகோதரர்களின் நலனுக்காகவும் துஆச் செய்தால் ''ஆமீன்" - அதுபோல் உனக்கும் கிடைக்கட்டும். என்று வானவர் கூறுகிறார். சமூக பொது நலனில் தம் நலனையும் இஸ்லாம் உள்ளடக்கியுள்ளது.''ஒரு முஸ்லிமான அடியார், கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காக பிரார்த்திக்கும்போது வானவர் ''உனக்கும் அதைப் போன்றே கிடைக்கட்டும்'' என்று கூறாமல் இருப்பதில்லை'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.


​​அறிவிப்பவர் அபூதர்தா (ரலியல்லாஹு அன்ஹு)

நூல் - முஸ்லிம் 5272

♦ ஸைத் இப்னு ஸாபித் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுடன் நானும் எனது தோழர் ஒருவரும் அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) மூன்று பேரும் இருந்தோம். ஸல்லலாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் எங்களைப் பார்த்து சொன்னார்கள்.

துஆ செய்யுங்கள் என்று 'நான் முதலில் துஆ செய்தேன்' ஆமீன் என்றார்கள் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் 'எனது தோழர் அடுத்ததாக துஆ செய்தார்கள்' ஆமீன் என்றார்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'அடுத்ததாக அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் துஆ செய்தார்கள்: அதற்கும் ஆமீன் என்றார்கள் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹிவஸல்லம் அன்னவர்கள்.

​ 

ஆதாரம் : ஹாகிம்

எனவே ஒருத்தர் துஆ செய்ய மற்றவர்கள் ஆமீன் கூறுவதுதான் கூட்டுத் துஆ இதனை தொழுகைக்கு வெளியிலும் நபிகள் நாயகம் நாயகம் ஸல்லலாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் நடைமுறையில் காட்டித்தந்துள்ளார்கள் அந்த அடிப்படையில் கூட்டுத் துஆ மார்க்கத்தில் இருக்கா? இல்லையா? என்பதை ஒவ்வொருவரும் சிந்தித்து பாருங்கள்.

♦ நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் "நான் துஆ செய்தால் நீங்கள் ஆமீன் சொல்லுங்கள்" இந்த ஹதீஸினை இமாம் பைஹகீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தலாயிலுந் நுபுவ்வா என்ற கிதாபில் பதிவு செய்துள்ளார்கள்.

எனவே தொழுகைக்கு வெளியிலும் கூட்டுத் துஆ உண்டு என்பதை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித்தந்துள்ளார்கள். ஆனால் வஹ்ஹாபிகள் கூட்டுத் துஆ இல்லையென்று சொல்கிறார்கள் அன்புக்குரியவர்களே! நீங்கள் யார் சொல்வதை மார்க்கம் என்று ஏற்றுக்கொள்றீர்கள் ?

அண்ணல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அடுத்தவருக்கு கேட்காத அளவு சப்தமின்றிதுஆ ஓதியிருந்தால் அதனை சஹாபாக்கள் எப்படி மனனம் செய்திருக்க முடியும்? எப்படி அறிவிப்புகள் செய்திருக்க முடியும்?அதோடு ஒருவர் துஆ ஓத மற்றவர் ஆமீன் கூறும்படி அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பணித்திருக்கிறார்கள். ஒருவர் ஓதுவதை கேட்டால்தானே மற்றவர்கள் ஆமீன் சொல்ல முடியும்? தேவைக்கு மீறி உரத்து சப்தமிடுவதைத்தான் தடுக்கப்பட்டுள்ளது.


​​எனவே அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தின் நடைமுறைகளிலிருந்து திசைமாறிச் சொல்வோர் இலக்கோ, நோக்கமோ இன்றி மனம்போன போக்கில் செல்கின்றனர். அவர்கள் எந்த 'அமைப்பை ' சார்ந்தவராயினும் அவர்களைப் பின்பற்றாமல் குர்ஆன், ஹதீஸ், ஸஹாபாக்கள், இமாம்கள், வலிமார்கள் காட்டிய நேர்வழியில் செல்லுங்கள் அல்லாஹ் நம் அனைவருக்கும் உதவி புரிவானாக! ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்