MAIL OF ISLAM

Knowledge & Wisdom



குன்பயகூன்

எழுதியவர்: மௌலவி  S.L. அப்துர்ரஹ்மான்  (கௌஸி)  கல்முனை.


இஸ்லாத்தின் பார்வையில் குன்பயகூன் كُنْ فَيَكُوْنُ)‏) என்ற அல்குர்ஆன் வசனம் போதிக்கும் வஹ்ததுல் வுஜூத், அத்வைதம், தவ்ஹீத், ஏகத்துவம்.


♣ ஆதியில் அல்லாஹ் ம‌ட்டும் இருக்கும் போது அவ‌ன் எத‌னிட‌ம் “குன்(كُنْ‏) நீ ஆகுக” என்று கூறினான்.

குன்பயகூன் كُنْ فَيَكُوْنُ)‏) என்ற இந்த வார்த்தையை இறைவன் குர்ஆனில் பல இடங்களில் பயன்படுத்துகிறான். இறைவன் كُنْ)'‏‏‏ - நீ ஆகுக)' என்று சொன்னால் உடன் ஆகிவிடும்.


​​ஆகவே ஆதியில் அல்லாஹ் ம‌ட்டும் இருக்கும் போது அவ‌ன் எத‌னிட‌ம் “குன்(كُنْ‏) நீ ஆகுக” என்று கூறினான் என்பது பற்றி குர்ஆனில் இருந்தும், ஹதீதிலிருந்தும் நேரடியான ஆதாரம் இல்லாமல் இருந்தாலும் குர்ஆன் ஹதீஸை அடிப்படையாக வைத்து இமாம்கள், வலிமார்கள், சூபியாக்கள், காமிலான ஷைகுமார்கள் இந்த வசனத்திற்கு என்ன விளக்கம் கொடுக்கின்றார்கள் என்று பார்ப்போம்.


​​அந்த அடிப்படையில் குன்பயகூன் (كُنْ فَيَكُوْنُ‏) என்றால் என்ன என்பது மிகவும் ஆழமான விஷயமாகும், இதற்காக விளக்கங்களை சூபியாக்கள் காமிலான ஷெய்குமார்களிடம் இருந்துதான் மிகத் தெளிவாக பார்த்து விடலாம். குன்பயகூன் (كُنْ فَيَكُوْنُ‏) என்ற அல்குர்ஆன் வசனத்தை மைய்யமாக வைத்து சூபி பாடல்களையும் தற்போதுள்ள இஸ்லாமிய பாடகர்கள் பாடியுள்ளார்கள் என்பது இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.

♦ (அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி, தானே உண்டாக்கினான்; அதனிடம் “குன்” - நீ ஆகுக- என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது. (அல்குர்ஆன் : 2:117), மேலும் பார்க்க (அல்குர்ஆன் : 3: 47, 3: 59, 6: 73, 16: 40, 19: 35, 36: 82, 40: 68)

அல்லாஹ் ஸூப்ஹானஹூ தஆலா எவ்வாறு சிருஷ்டிகளை படைத்தான் என இவ்வசனம் மிக அழகாக விவரிக்கிறது. ஆதியில் அல்லாஹ் ம‌ட்டும் இருக்கும் போது அவ‌ன் எத‌னிட‌ம் "குன் (كُنْ‏)"  “நீ ஆகுக” என்று சொல்கின்றான்? படைப்பை நோக்கியா...? அதுதான் இருக்கவில்லையே. அல்லது தன் ஞானத்தை (அறிவை) அதாவது எவ்வாறு சிருஷ்டிகளை படைக்க வேண்டும் என்று அல்லாஹ் தன் அறிவில் வைத்திருந்தானோ அதனை நோக்கியா...? அல்லது தன் சக்தியை நோக்கியா…? இல்லவே இல்லை. பண்புகளில் (ஸிபத்துகளில்) இருந்து எவ்வாறு ஷிருஷ்டி உண்டாகும்…? ஏனெனில் அவனை விட்டும் பிரியாத பண்பான ஞானம், சக்தி (போன்ற ஸிபத்துக்கள்) எவ்வாறு இன்னொன்றாக உருவாகும்…? உதாரணமாக கற்கண்டில் இருக்கும் இனிப்பு எனும் பண்பு எவ்வாறு கற்கண்டை விட்டும் பிரிந்து இன்னொரு வடிவமெடுக்கும்...?

இன்னும் சிலர் இப்படியும் சொல்கின்றனர். அல்லாஹ் தன் ஞானத்தை நோக்கிதான் “குன் (كُنْ‏)” என்றான். உதாரணமாக மனிதன் ஒரு மரத்தை நினைக்கிறான். அவன் மனதில் அது மரமாக உருவாகி விட்டது. இது போலவே படைப்புக்கள் அல்லாஹ்வில் உண்டாகின என்று. அதாவது மனிதனின் நினைவில் அவன் நினைத்த மரம் உள்ளது போல அல்லாஹ்வினால் படைப்புக்கள் உருவாகியுள்ளன என்று. இந்தக் கருத்து முற்றிலும் பிழையானதாகும். எவ்வாறெனில், அல்லாஹ் ஒரு படைப்பை படைக்கநாடி “குன்(كُنْ‏)” “நீ ஆகுக” என்ற சொல் கொண்டு அல்லாஹ் உத்தரவிட வேண்டிய அவசியமில்லையே…!

திருக்குர்ஆனில் “நீங்கள் எங்கு நோக்கிடினும் அவன் முகமே உண்டு (அல்குர்ஆன் 2:115)” என்ற திருமறை வசனத்துடன் மேற்படி கருத்து முரண்படுகிறதே… இந்த வசனத்துக்கு விரிவுரை பண்ணிய றயீஸுல் முபஸ்ஸிரீன் இப்னு அப்பாஸ் (றழியல்லாஹு அன்ஹு) அவர்களும் ஷெய்ஹுல் அக்பர் இப்னு அறபி (ரஹ்மதுல்லஹி அலைஹி) அவர்களும் “வஜ்ஹு-முகம்” என்பது அல்லாஹ்வின் வுஜூத்-உள்ளமையைக் குறிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஆதலால், எங்கு நோக்கிடினும் அவனின் வுஜூத் இருக்கிறது என்ற திருமறை வசனத்தின்படி மேற்படி கருத்து முறண்படுகிறது.

♦ நபியே! காபிர்கள் மீது மண்ணை) நீங்கள் வீசியபோது(வெளியில் உங்களில் நின்றும் வீசும் கோலம் உண்டானாலும்) நீங்கள் வீசவில்லை. எனினும் (உள்ளாகவும், அந்தரங்கமாகவும் இருக்கிற) அல்லாஹ் வீசினான். (அல்குர்ஆன் 8:17)

♦ (நபியே!) என்னைப் பற்றி என்னுடைய அடியார்கள் உங்களிடம் கேட்டால் நான் (ஹகீகத்தை - எதார்த்தத்தைக் கொண்டு) சமீபமாக இருக்கிறேன் (என்று சொல்வீராக!). (அல்குர்ஆன் 2:186)

♦ அல்லாஹூத் தஆலா (ஒரு அணுவும் கூட விடாது சகலத்திலும் ஊடுறுவிருக்கிற விதத்தில்) சகல பொருள்களையும் சூழ்ந்தவனாகி விட்டான். (அல்குர்ஆன் 4:126)

♦ அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அவர்கள் தமது (றப்பு) இரட்சகனைக் காண்பதில் சந்தேகமுள்ளவர்களாக உள்ளனர்.(நபியே! நீங்கள்) அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அவன் சகல வஸ்துக்களையும் சூழ்ந்தவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 41:54)

மேற்படி வசனங்கள் அல்லாஹ் சகல வஸ்துக்களையும் சூழ்ந்தவனாக இருக்கின்றான் (அல்லாஹ் எல்லாமாயும் உள்ளான்) “அல்லாஹ் எல்லா வஸ்த்துக்களாயும் “தஜல்லீ” வெளியாகியுள்ளான்” என்ற கொள்கை “தவ்ஹீத்” ஏகத்துவம் என்றும், “வஹ்ததுல் வுஜூத்” மெய்ப் பொருள் ஒன்று என்பதாகும்.


​​ஒரு கயிற்றின் தொங்கலைப் பிடித்துக்கொண்டு மறுதொங்கலை கிணற்றுக்குள் விட்டால் அது அல்லாஹ்வில் போய்விழும் என்று நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுடைய சொல்ல வேண்டியதில்லையே….அவர்களுக்குத் தெரியாததா... அல்லாஹ்வில் விழும் என்று சொன்னால் என்ன கருத்து என்று.! இவ்வாறு அதிகமதிகமான திருவசனங்களுடன் மேற்படி கருத்து முரண்படும்.

எனவே அல்லாஹ் தனது வுஜூத்-உள்ளமை ஐ நோக்கியே “ குன்- நீ ஆகுக (كُنْ‏)” என்று கூறினான். அடுத்த கணம் அவனுடைய வுஜூதே சகல பிரபஞ்சமுமாக ஆகிவிட்டது. பெரும் சமுத்திரத்தில் கோடிக்கணக்காண நுரைகளும், அலைகளும், குமிழிகளும்,பனிக்கட்டிகளும் ஒருகணம் உருவாகலாம், மறுகணம் அழியலாம்.ஆனால் எவ்வித விகாரமுமில்லாமல் முன்னர் இருந்தபடியே பின்னரும் நீர் மட்டும் இருந்து கொண்டிருக்கும் அவ்வாறே அல்லாஹ்வின் வுஜூதும் அவனில் நின்றும் உருவாகும் படைப்புக்களுமாகும்.

ஆகவே அல்லாஹ் யாருக்கு அறிவையும், தெளிவையும், ஞானத்தையும் கொடுக்க நாடுகிறானோ, அவர்கள் காட்டுக்குள் இருந்தாலும் சரி, மலை அடிவாரத்தில் இருந்தாலும் சரி, மண்ணுக்குள் இருந்தாலும் சரி, அவர்கள் எங்கு இருந்தாலும் சரி அவர்களுக்கு இல்ஹாம் எனும் உள் உதிப்பின் மூலம் அறிவு, ஞானத்தை கொடுப்பான். ​​அல்லாஹ் யாருக்கு கொடுக்க நாடவில்லையோ அவர்கள் பள்ளிக்குள் இருந்தாலும் சரி, பல்கலைக்கழத்தில் இருந்தாலும் சரி, நூலகத்தில் இருந்தாலும் சரி, அவர்களுக்கு ஒரு இல்மும் கிடைக்காது.


​​அந்த வகையில் நூற்களை கொண்டு அலுமாரியை நிரப்புபவர்கள் அல்ல ஸுபியாக்கள் நூரைக்கொண்டு உள்ளத்தை நிரப்புபவர்களே ஸுபியாக்கள். புத்தகத்திலுள்ளதை மனனம் செய்பவர்கள் அல்ல அறிஞர்கள் அதை அவர்கள் மறந்து விட்டால் அவர்கள் முட்டாளாகி விடுவார்கள். ஆனால் நினைத்த நேரத்தில் இறைவனிடமிருந்து இல்ஹாம் ஊடாக இல்முல் லதுன்னி எனும் அறிவு பெறுகிறவர்களே உண்மையான அறிஞர்கள்.

சகோதரர்களே...! அல்லாஹ் எவ்வாறு உருவாகினான் என்ப‌து ப‌ற்றித்தான் சிந்திக்க‌ முடியாது. சிந்திக்க‌வும் கூடாது ஆனால் அவ‌னுடைய ப‌டைப்பு எவ்வாறு வ‌ந்த‌து? எதில் இருந்து வ‌ந்த‌து? எத‌ற்காக‌ வ‌ந்த‌து? என்று க‌ட்டாய‌ம் அறிய‌ வேண்டும். இல்லாவிடில் அல்லாஹ்வை அறிய‌ முடியாது. தந்தையை பற்றி அறியாத மகன் போல் ஆகிவிடுவோம் "ம‌ண் அற‌ப‌ ந‌ப்ஸஹூ ப‌க‌த் அற‌ப‌ ற‌ப்ப‌ஹ்" த‌ன்னை அறிந்தவ‌ன் த‌ன் இறைவ‌னை அறிந்து விட்டான் என்று க‌ண்ம‌னி நாய‌க‌ம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவ‌ர்க‌ள் கூறியுள்ளார்க‌ள். மேற்படி ஹதீஸ்படி நீங்க‌ள் உங்க‌ளைப் ப‌ற்றி சிந்திக்க வேண்டாமா…! உங்களைப் பற்றி நீங்கள் சிந்தித்தால் இறைவனைப் பற்றி அறிய முடியும் என்றல்லவா ஹதீஸ் சொல்கிற‌து.

ஆகவே "குன் (كُنْ‏)" என்ற சொல் கொண்டு தனது பரிசுத்த "தாத்" வுஜூதிலிருந்து சர்வ சிருஷ்டிகளையும் வெளியாக்கி அவற்றின் மூலமாயும், கோலமாயுமிருப்பவனும், நல்லமல்களிலும், "முறாகபா" "முஷாஹதா" முதலிய இறைதியானங்களிலும் இராப்பகலாய் லயித்துப் போயிருந்து தம்மை மறந்தவர்களினதும், "முகாலபத்" மாறு செய்தல் எனும் வாள் கொண்டு தமது "நப்ஸு" எனும் மிருகத்தை கொன்றொழித்து அதை வென்றவர்களினதும் உள்ளத்தில் இறைஞானத் தாரகையைப் பிரகாசிக்கச் செய்தவனும், மனிதனுக்கு அவனின் பிடரி நரம்பைவிட நெருங்கினவனும், உன்னை அழித்தால் என்னை காண்பாய் என்றும் சூபியாக்கள், காமிலான ஷைகுமார்கள் விளக்கம் கூறியுள்ளார்கள்.

அறிஞர்களிலும் மிக அறிஞரும், றஷூல்மார்களில் மிகச்சிறந்தவர்களும், வுஜூத் எனும் பொக்கிஷத்தின் களஞ்சியமும், கொடை எனும் களஞ்சியத்தின் திறவுகோலும், சிருஷ்டியினதும் சிருஷ்டிகர்த்தாவினதும் கிப்லாவும், "லிவா உல் ஹம்து" எனும் கொடிக்கும், "மகாமே மஹ்மூதா" எனும் அந்தஸ்திற்குரியவர்களும், "மலகூத்" மண்டலங்களின் மாடப்புறாவும், "ஜபரூத்" சமூகத்தின் மயிலும், "லாஹூத்" பள்ளிவாயலின் தலைவரும், அல்லாஹ்வின் அன்புக்குரியவர்களுமான நபிகட்கரசர் எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், அவர்களின் தோழர்கள், அன்னாரின் உற்றார் உறவினர் அனைவர்கள் பொருட்டினாலும் இந்த கட்டுரையூடாக வஹ்ததுல் வுஜூத் ஞானம், தவ்ஹீத் ஏகத்துவம், அத்வைதம் பற்றி தெளிவாக விளங்கிக்கொள்ள எல்லாம் வல்ல கிருபையாளன் நல்லுதவி புரிவானாக! 

ஆகவே நாம் மேலே கூறிய கருத்துக்களின் அடிப்படையில் குன்பயகூன் كُنْ فَيَكُوْنُ)‏) என்பதன் விளக்கம் (அல்லாஹ் எல்லாமாயும் உள்ளான்) “அல்லாஹ் எல்லா வஸ்த்துக்களாயும் “தஜல்லீ” வெளியாகியுள்ளான்” என்ற கொள்கை “தவ்ஹீத்” ஏகத்துவம் என்றும், “வஹ்ததுல் வுஜூத்” மெய்ப் பொருள் ஒன்று என்றும் இது இஸ்லாமிய மார்க்கத்தில் வடித்தெடுக்கப்பட்ட இறைஞானம் என சொல்லப்படுகின்றது.


​​இக்கொள்கை எந்த வகையிலும் திருக்குர்ஆனுக்கோ, திரு நபியின் நிறைமொழிகளுக்கோ ஒரு மண்ணளவும் முரணானதல்ல. அதேபோல் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையை பின்பற்றுகின்ற அல் இமாம் அபுல் ஹஸன் அல் அஷ்அரீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் “அகீதா” கொள்கைக்கும் முரணானதல்ல.

இக்கொள்கையே (روح الإسلام) இஸ்லாமின் உயிர் என்று அறிஞர்களால் சொல்லப்படுகிறது. இக்கொள்கையே றஸூல்மார், நபீமார், வலீமார், மஷாயிகுமார் சொன்ன கொள்கை. இக்கொள்கையே சரியான கொள்கை என்பதற்கு திருக்குர்ஆனிலும், நபீமொழிகளிலும் இறை ஞானிகளான ஆரிபீன்களின் நூல்களிலும் பரந்து விரிந்த ஆதாரங்கள் உள்ளன, எனவே அவனைத் தவிர எதுவும் இல்லை அவன் மாத்திரமே இருக்கின்றான் என்ற தௌஹீதை குன்பயகூன் (كُنْ فَيَكُوْنُ‏) என்கின்ற திருவசனங்களின் விளக்கங்களை புரிந்து கொள்ள எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லுதவி புரிவானாக! ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.