MAIL OF ISLAM

Knowledge & Wisdomகுத்பியா ஓதலாமா?

​எழுதியவர்: மௌலவி  S.L. அப்துர்ரஹ்மான்  (கௌஸி)  கல்முனை.


யா ஷைகுனா முஹ்யித்தீன் என ஆயிரம் தடவை அழைக்கும் (குத்பிய்யா) கூடுமா?

♣ வழிகெட்ட வஹ்ஹாபிகளின் நிலைப்பாடு :-

உண்மை முஃமின்களால், முத்தகீன்களால், இறைநேசச் செல்வர்களால் இறையருள்  ஞானமேதைகளால் செயல்படுத்தப்பட்டு வந்ததும் நமது சுன்னத் வல் ஜமாஅத் இமாம்களாலும் உலமாக்களாலும் அங்கீகரிக்கப்பட்ட ‘வசீலாவின்’ பாற்பட்டதுமான ‘குத்பிய்யா குறித்து சமீபகாலமாக வஹ்ஹாபிகளும், மௌதூதிகளும் தீவிர எதிர்ப்பு பிரச்சாரம் மேற்கொண்டு வருவதையும் 'இருட்டு திக்ரு’ என்று ஏளனம் செய்து வருவதையும் ஷிர்க் என்றும் கூட கூறி வருவதையும் நாம் அறிவோம்.

♦ வஹ்ஹாபிய்யத்தினுடையவும் அதன் சார்பு இயக்கமான மௌதூதிய்யத்தினுடையவும் அடிப்படைக் கோட்பாடுகளை தெரிந்து கொள்ளாத சுன்னத் வல் ஜமாஅத்தின் அகீதாக்களில் தெளிவு இல்லாத பொது மக்களில் சிலர் இவ்வஹ்ஹாபிய  மௌதூதிய்யப் பிரச்சாரங்களினால் ‘மயக்கம்’ கொள்ளும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. இந் நிலையில் குத்பிய்யத்தைப் பற்றி பொதுமக்கள் உண்மை நிலையைத் தெரிந்து, காமிலான முஃமின்களான நமது முன்னோர்கள் நடைமுறைப்படுத்திய ‘குத்பிய்யத்’ ஸுன்னத் வல் ஜமாஅத்தின் அடிப்படைகளுக்கு முற்றிலும் உடன்பாடானதும் அங்கீகரிக்கப்பட்டதுமாகும் என்பதைத் தெளிந்து செயல்பட வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறோம்.

♦ யாஷைகுனா முஹ்யித்தீன் என ஆயிரம் தடவை அழைக்கும் (குத்பிய்யத்) கூடுமா? கூடாதா? குத்பிய்யத் என்பது முதலில் ஹாஜத் நபில் 12 ரகாஅத்துக்கள் தொழுது ஹழரத் ஸதக்கத்துல்லாஹ் அப்பா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கோர்வை செய்த கஸிதாவை ஓதி, ஹழரத் கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் ஆண்டகை ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் திருநாமத்தைச் சொல்லி 1000 தடவை அழைத்து உதவி கோருதல் மற்றும் அவர்கள் அவ்விடத்தில் சமூகம் அளிப்பார்கள் என்ற விடயங்களை உள்ளடக்கியதாகும்.

♦ இந்த குத்பிய்யத் ஜாயிஸ் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. குறை மதியாளர்கள்தான் இதை ஷிர்க் என்பர். அறிவாளர்கள் அவ்வாறு எண்ணமாட்டார்கள். இந்தக் குத்பிய்யத்தைச் செயல்படுத்துபவர் இஸ்லாமிய புனித ஷரீஅத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல. நபிமார்களைக் கொண்டும் வலிமார்களைக் கொண்டும் ஸாலிஹீனுகளைக் கொண்டும், அவர்களின் ஹயாத்திலும் வபாத்திற்குப் பின்னரும் வசீலா தேடுவதும் ஆகும் என்பதை மறுப்பவர் ‘பித்அத்’ காரராவார். அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தை விட்டும் அப்பாற்பட்டவரும் ஆவார்.

♦ ‘குத்பிய்யத்’ என்று சொல்வது எதார்த்தத்தில் ‘இஸ்திகாதா’ என்று கூறப்படும் வசீலாவின் வகைகளில் ஒன்றாகும். நபிமார்கள், வலிமார்கள் ஆகியோரைக் கொண்டு அவர்கள் உலகத்தில் வாழும் காலத்திலும், அவர்களின் வபாத்திற்குப் பின்னரும் ‘வசீலா’ என்னும் உதவி தேடுதல் நமது மார்க்கத்தில் ஆகுமாக்கப்பட்ட ஒன்றாகும்.சிக்கலில் மாட்டிக் கொண்ட ஒருவர் ‘யா நபி’ அல்லது ‘யா வலி’ எனக்கு உதவுங்கள் என விளித்து வேண்டுவதும் வசீலாவின் பாற்பட்டதே! இது எதார்த்தத்தில் அல்லாஹ்விடம் வேண்டுதல் செய்வதுதான் குறிப்பிட்ட அவர்களை அழைத்து வேண்டுதல் ‘ஹகீகத்’ என்னும் யதார்த்தத்தின் நேர் எதிரிடையான ‘மஜாஸ்’ என்னும் உருவகமாகும்.

இந்நிலையில் வசீலா இஸ்திகாதா போன்றவை கூடாது ஷிர்க் என்றெல்லாம் கூறும் குறைமதியாளர்கள் கருத்துப்படி அந்த வசீலா ஆகுமானது என்னும் அறிவித்துச் சென்ற இந்த மகான்கள் எல்லாம் காபிர்கள் என்றால் இந்த ‘ஷரீஅத்’ எப்போதோ இல்லாமலாகியிருக்குமே! குத்பிய்யத்தின் ஓர் அங்கமாக முதலில் நிறைவேற்றப்படும் 12 ரக்அத் ஹாஜத்து நபில் தொழுகையைப் பற்றி குறிப்பிடும் போது இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லஹி அலைஹி அவர்கள் ‘யாருக்காவது நெருக்கடி ஏற்பட்டு மார்க்க சம்பந்தமான மற்றும் உலக சம்பந்தமான தேவை ஏற்பட்டால்ள இதே 12 ரக்அத் நபில் தொழுகையை நிறைவேற்றிக் கொள்ளவும் என்று தனது ‘இஹ்யா உலூமுத்தீனில் குறிப்பிட்டுள்ளார்கள்.

(பாகம் 1 பக்கம் 206)

♦ ரசூல்மார்களுக்கும், நபிமார்களுக்கும் அவ்லியாக்களுக்கும் அவர்களுடைய மரணத்திற்குப் பின்னரும் அபயம் அளிக்கக் கூடிய ஆற்றல் இறைவன் அருளால் உண்டு. ஏனெனில் நபிமார்களின் முஃஜிஸாவும் வலிமார்களின் கராமத்தும் அவர்களுடைய வபாத்திற்குப் பின்னரும் நின்று விடாது தொடரும். ஏனென்றால் நபிமார்கள் தங்களுடைய கப்றுகளிலே ஜீவனுடன் இருக்கிறார்கள். தொழுகிறார்கள். ஹஜ்ஜும் செய்கிறார்கள் என்று ஹதீதுகள் வந்துள்ளன. எனவே நபிமார்களின் மூலம் ஏற்படும் இந்த இரட்சிப்பு அவர்களைப் பொறுத்தவரை ‘முஃஜிஸா’ என்று ஆகும். அவ்லியாக்களுக்கு இது ‘கராமத்’ என்று ஆகும் என்று இமாம் ரமலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் பதிலளித்துள்ளார்கள். எனவே ‘குத்பிய்யா எனும் இஸ்திகாதா ஆகுமாகும் என்பதில் எவ்வித மாறுபட்ட கருத்துக்களுக்கு இடமில்லை.