MAIL OF ISLAM

Knowledge & Wisdom​குத்பு நாயகத்தின் கராமத்துக்கள் 

​ 

எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.

♦முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கராமத் (எட்டு பகுதிகள் உள்ளன)

1.  ஆரம்பத்தில் கல்வியை தம் சொந்த ஊரான ஜீலான் நகரிலேயே கற்றார்கள். பதினெட்டு வயதை அடைந்த பொழுது உயர்கல்வி கற்பதற்காக பகுதாது நகர் செல்ல முடிவு செய்தார்கள்.


​​அதற்காக தம் அன்னையிடம் அனுமதி கோரினார்கள். அவரின் இந்த முடிவைக் கேட்டு மனம் மகிழ்ந்து, உடனே அனுமதி அளித்தார்கள் அன்னாரின் தாயார் அவர்கள். தந்தையார் அபூசாலிஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தம் குடும்பத்தினருக்காக விட்டுச் சென்ற 80 பொற்காசுகளில் 40 பொற்காசுகளை நாயகம் அவர்களின் சட்டைப் பையில் வைத்து தைத்து கல்வி கற்க அனுப்பி வைத்தார்கள் தாயார் அவர்கள்.அச்சமயம் தம் மைந்தரை நோக்கி, எப்போதும் உண்மையே பேச வேண்டும் என்று உபதேசித்து அனுப்பி வைத்தார்கள்.

♦ பகுதாதிற்காக பயணமாகிச் செல்லும் வியாபாரிகளுடன் சேர்ந்து கொண்டார்கள் நாயகமவர்கள். இவ்வியாபாரிகள் ஹமதான் எனும் நகரைக் கடந்து செல்லும் போது வழிப்பறித் திருடர்கள் அறுபது பேர் இவர்களை வளைத்துக் கொண்டார்கள். நாயகமவர்களை கொள்ளையர்கள் சோதித்து கேட்டபோது, தம்மிடம் நாற்பது பொற்காசுகள் இருப்பதாக உண்மையை சொன்னார்கள். ஆனால் திருடர்கள் நம்பவில்லை. இறுதியாக திருடர்கள் தலைவரிடம் கொண்டு சென்றனர். அங்கும் அவர்கள் உண்மையே பேசினார்கள். நாயகமவர்களை சோதித்துப் பார்த்த போது, அவர்கள் சொன்னது உண்மை என்று தெரியவந்தது. வியப்புற்ற கள்வர்கள், காரணம் கேட்டபோது, தாயாரிடம் கொடுத்த வாக்குறுதி படி நான் உண்மையையே பேசினேன் என்றுரைத்தார்கள். இதைக் கேட்டு கள்வர்கள் திருந்தி, இனிமேல் பாவச் செயல்களில் ஈடுபட போவதில்லை என்று நாயகமவர்களிடம் சத்தியம் செய்து கொடுத்தனர். இறைவனிடமும் பாவமன்னிப்புத் தேடினர். பிற்காலத்தில் இவர்கள் அனைவரும் வலிமார்களாக திகழ்ந்தனர் என சரித்திரம் கூறுகிறது.

நூல்: கலாயிதுல் ஜவாஹிர்

2. ஒரு தினம் கௌதுல் அஃலம் முஹ்யதீன் அப்துல் காதிர் ஜீலானி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது கடும் காற்று வீசிக்கொண்டிருந்தது. அது வேளை ஒரு பருந்து கீச்சிட்டவாறு பறந்து சென்றது. இது சபையோருக்கு ஒரு வித சலனத்தை ஏற்படுத்தியது. உடனே கௌதுல் அஃழம் அவர்கள்,காற்றே! பருந்தின் தலையைப் பிடி! என்றார்கள். உடனே பருந்தின் தலை ஒரு பக்கமும் அதன் உடல் வேறு பக்கமுமாக கிடந்தது.கௌதுல் அஃழமவர்கள் ஆசனத்தை விட்டுமிறங்கி வந்து பருந்தை கையால் எடுத்தார்கள். மறு கையால் அதைத் தடவிக் கொண்டு‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்’ என்று கூறினார்கள். உடனே உயிர் பெற்று,மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அது பறந்து சென்றது.

3.  ஒரு பெண்மணி கௌதுல் அஃழம் கத்தஸல்லாஹு ஸிர்றஹுல் அஸீஸ் அவர்களது சமுகத்திற்கு வந்து, எனது மகனின் மனம் தங்கள் மீது அபார பற்றைக் கொண்டிருப்பதாகக் காண்கின்றேன். அதனால் அல்லாஹ்வுக்காகவும்,தங்களுக்காகவும் தனது பொறுப்பிலிருந்து அவரை விடுவித்து தங்களிடம் ஒப்படைக்கின்றேன். என்று கூறி மகனை கௌதுல் அஃழமிடம் ஒப்படைத்தார். அவரைப் பொறுப்பேற்ற கௌதுல் அஃழம் அவர்கள் தீவிர பயிற்சியிலும், ஆத்மீக வழியிலான இறைவணக்க முறைகளையும் கற்றுக் கொடுத்து அதன்படி செயல்படுமாறு கட்டளையிட்டார்கள்.


​​ஒரு தினம் அவரின் தாய் மகனை பார்ப்பதற்கு அங்கு வந்தார். மகன் மெலிந்தும் பசியின் கொடுமையால் வெளிறி மஞ்சணித்தும், மேலும்,வெறும் தொலிக் கோதுமை ரொட்டி மாத்திரம் உண்பதையும் கண்டார். மறுபுறம் கௌதுல் அஃழமவர்கள் பக்கம் சென்று பார்த்த போது சாப்பிட்ட கோழியின் எலும்புகள் ஒரு பாத்திரத்திலிருப்பதைக் கண்டார்.

♦ யா செய்யிதி! நாயகமே! நீங்கள் கோழி சாப்பிடுகிறீர்கள்! எனது மகனோ வெறும் தொலிக் கோதுமையையே சாப்பிடுகின்றாரே என்று அத்தாய் கூறியதும்,சாபிட்டு எச்சமாக பாத்திரத்திலிருந்த கோழி எலும்பில் கையை வைத்து, இத்து இறந்த எலும்புகளை உயிப்பிக்கும் அல்லாஹ்வின் உத்தரவுடன் எழும்பு என்றார்கள். கோழி உயிர்பெற்றெழுந்து நேரே நின்று கூவியது. உன் மகன் இந்த நிலைக்கு வந்தபின் அவர் விரும்பியதைச் சாப்பிடட்டும் என்று கூறினார்கள் கௌதுல் அஃழமவர்கள்.


ஆதாரம் : பஹ்ஜதுல் அஸ்றார், பக்கம் - 128

4.  அஷ்ஷெய்கு அபுல் அப்பாஸ் கூறுகின்றார் எங்கள் குருநாதர் முஹ்யத்தீன் அப்துல் காதிர் ஜீலானி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்களோடு பக்தாதிலுள்ள அவர்களின் மத்தரஸாவில் ஓர் இரவு தங்கியிருந்தோம். அப்போது கலீபா அல் முஸ்தன்ஜித் பில்லாஹ் அபுல் முழப்பர் யூஸுப் அங்கு வந்தார். கௌது நாயகமவர்களுக்கு ஸலாம் கூறிவிட்டு, உபதேசம் புரியுமாறு வேண்டினார். அத்தோடு பத்து பொதிகளையும் அவர்கள் முன் வைத்தார். இதனை பத்து அடிமைகள் சுமந்து வந்தனர். இது எனக்குத் தேவையில்லை என்று கூறி அதனை ஏற்க மறுத்தனர், கௌதுல் அஃழம் அவர்கள் கலீபா அதனை ஏற்குமாறு கெஞ்சினார். மன்றாடினார். கௌதுல் அஃழம் அவர்கள் அதனை ஏற்கவில்லை. பின் அப் பொதிகளில் ஒன்றை வலக் கையாலும், மற்றையதை இடது கையாலும் எடுத்து நசுக்கினார்கள். அதிலிருந்து குருதி வடிந்தது. கலீபாவைப் பார்த்து, அபூ முழப்பர்! நீர் அல்லாஹ்வை அஞ்ச வேண்டாமா? மக்களின் குருதியை என்முன் கொண்டு வந்துள்ளீர், என்றதும் கலீபா மூர்ச்சையானார்.

♦ அல்லாஹ் மீது ஆணையாக! றஸூலே கரீம்ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடனான தொடர்பு இல்லாதிருந்தால், இக்குருதியை அவர் மாளிகை வரை ஓடச் செய்திருப்பேன். அஷ்ஷெய்கு அபுல் அப்பாஸ் மீண்டும் மீட்டுகின்றார்.


​​ஒரு தினம் கலீபா அபுல் முழப்பர் கௌதுல் அஃழம் அவர்களின் அவைக்கு வந்து, தங்களிடமிருந்து ஒரு கறாமத்தை நேரில் பார்க்க ஆசைப்படுகின்றேன். அதனால் என் மனம் சாந்தி அடையும் என்று கூறினார். நீர் விரும்பும் கறாமத் எது? என்று கௌதுல் அஃழம் அவர்கள் கேட்டார்கள். மறைவான புறத்திலிருந்து அப்பிள் வருவதை விரும்புகின்றேன் என்றார். அப்போது ஈராக்கில் அப்பிள் இல்லாத காலமாகும்.


​​கௌதுல் அஃழம் அவர்கள் ஆகாயத்தை நோக்கி கையை உயர்த்தினார்கள். இரு அப்பிள்கள் அவர்கள் கைக்குள் வந்தன. ஒன்றை கௌதுல் அஃழம் அவர்கள் வெட்டினார்கள். அது வெண்மையாகவும், கஸ்தூரி மனமும் கமழ்ந்தது. மற்றையதை கலீபா அவர்கள் வெட்டினார்கள். அதற்குள் புழுக்கள் நிறைந்திருந்தன. இது என்ன ஆச்சரியம்! நீங்கள் வெட்டியது வெண்மையாகவும், கஸ்தூரி கமழக் கூடியதாகவும் உள்ளது. நான் வெட்டியது இப்படி இருக்கின்றதே, என்றதும், அபூ முழப்பரே! அநியாயக்காரர்களின் கை பட்டதனால் உமது பழத்தில் புழுக்கள் நிறைந்துள்ளன என்று கௌதுல் அஃலம் அவர்கள் இடித்துச் சொன்னார்கள்.

ஆதாரம்:பஹ்ஜத்துல் அஸ்றார், பக்கம் - 120,121

5.  அஷ்ஷெய்கு அபூ அம்று உதுமான் அஸ்ஸரீபின் அஷ்ஷெய்கு அபூ முஹம்மது,அப்துல் ஹக் அல் ஹரிமி ஆகிய இருவரும் பின்வரும் விடயத்தைக் கூறுகின்றனர். நாங்கள் ஷெய்கு முஹ்யத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் திருச்சபையில், ஹிஜ்ரி 555, ஸபா - 3 ஞாயிறு அன்று இருந்தோம். ஷைய்கவர்கள் எழுந்து சென்று அவர்களின் மிதியடியிலிருந்து கொண்டு வுழுச் செய்தார்கள். பின் இரண்டு ரக்அத் தொழுதார்கள். தொழுது முடித்து ஸலாம் கூறியபின் பயங்கரமாக சப்தமிட்டார்கள். பின் மிதியடிகளில் ஒன்றை எடுத்து ஆகாயத்தில் வீசினார்கள். எமது பார்வை விட்டும் அது பறந்து சென்றது. பின் மீண்டும் கூச்சலிட்டார்கள். மற்றைய மிதியடியை எடுத்து எறிந்தார்கள். அதுவும் எமது பார்வையை விட்டும் மறைந்தது. அதன் பின் இருக்கையில் வந்து அமர்ந்தார்கள். இது பற்றி அவர்களிடம் கேட்பதற்கு யாருக்கும் துணிவு இருக்கவில்லை.

♦ இது நடந்து இருபத்து மூன்று நாட்களுக்கு பின் அஜமி பிரதேசத்திலிருந்து ஒரு கூட்டம் வந்தது. எங்களிடம் ஷைய்கவர்களுக்கான நேர்ச்சைப் பொருட்கள் இருக்கின்றன என்று அவ்வர்த்தக கூட்டம் கூறியதும், ஷைய்கவர்களிடம் இது பற்றி அனுமதி கேட்டோம். அனுமதி வழங்கினார்கள். ஹரீர் பட்டும், பட்டுப் புடைவைகள், தங்கம் அந்த நாள் ஷெய்கவர்கள் வீசிய மிதியடி உட்பட இவற்றை எம்மிடம் கையளித்தனர்.


​​இந்த மிதியடி உங்களுக்கு எப்படி கிடைத்தது? என்று அவர்களிடம் வினவினோம். அவர்கள் தங்கள் கதையை விபரித்தனர்.ஸபர் மூன்றாம் நாள் நாங்கள் பயணித்துக் கொண்டிருந்தோம். அறபு நாட்டு முன்னணிக் கொள்ளைக் கூட்டம் திடீரென எம்மைத் தாக்கி எமது பொருட்களை சூறையாடியும்,எங்களில் சிலரை கொன்றும் வெறியாட்டம் ஆடின. பின் ஒரு ஓடையருகே உட்கார்ந்து கொண்டு சூறையாடி எமது பொருட்களை பங்கீடு செய்து கொண்டிருந்தனர். நாங்கள் ஓடையின் மறு கரையில் ஒதுங்கி நின்றோம்.

♦  இச்சந்தர்ப்பத்தில் ஷைய்கவர்களை நாம் நினைத்துக் கொண்டு இதில் நாம் பாதுகாக்கப்பட்டால் அவர்களுக்கு நமது உடமைகளில் சிலதை நேர்ந்து கொள்வோம் என்று கூறினோம். இப்படி நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது பாரிய இரு சப்தத்தைக் கேட்டோம். இச்சத்தம் ஓடையை நிறைத்து நின்றது. கொள்ளையர்கள் பதற்றப்பட்டவர்களாக நின்றதை நாங்கள் கண்டோம். மற்றுமொரு அறபுக் கொள்ளையர் கூட்டம் வந்துவிட்டதோ என்று நாம் அஞ்சினோம். அப்போது கொள்ளையர்களில் சிலர் எம்மிடம் வந்து, உங்கள் உடமைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்! எங்களுக்கு நேர்ந்த கதியை வந்து பாருங்கள் என்றனர். பின், எங்களை அழைத்துச் சென்று அவர்களின் இரு தலைவர்களையும் காட்டினர். அவ்விருவரும் இறந்து கிடக்கக் காணப்பட்டனர். அவர்கள் ஒவ்வொருவரிடமும் நனைந்த மிதியடிகள் இரண்டு காணப்பட்டன. பின் எங்களின் அனைத்து சாமான்களையும் திருப்பித் தந்துவிட்டு, இது ஒரு பாரதூரமான விடயம் என்று கூறிவிட்டு நகர்ந்தனர்.


​​ஆதாரம் : பஹ்ஜத்துல் அஸ்றார், பக்கம் - 132

6. பக்தாத்தில் ஒரு சமயம் கடும் பஞ்சம் ஏர்ப்பட்டப்போது அபுல் அப்பாஸ் என்ற ஒருவர் ஷெய்கு ஜீலானி {ரஹ்மதுல்லாஹி அலைஹி} அன்னவர்களிடம் வந்து பசி பட்டினியிலிருந்து எங்களுக்கு நிரந்தர தீர்ப்பு ஏற்பட தாங்கள் அல்லாஹ்விடம் துஆ செய்ய வேண்டும் எனக்கேட்டார். அவ்வாறே ஷெய்குனா ஜீலானி அன்னவர்கள் துஆ செய்து சிறிது கோதுமையை தங்களின் பொற் கரத்தால் அள்ளி அவரிடம் கொடுத்து இதனை ஒரு பாத்திரத்திலிட்டு அதன் வாய் பகுதியை துணியால் கட்டிவிடுங்கள். அதன் நடுவே ஒரு ஓட்டைப்போட்டு வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு உணவு தேவைப் படும்போது அந்த ஓட்டைவழியாக எடுத்துக்கொள்ளுங்கள். துணியை கழற்றி விடாதீர்கள் எனக்கூறினார்கள். அவரும் குடும்பத்தினரும் ஐந்து வருடங்கள் அந்த பாத்திரம் மூலம் கிடைக்கும் உணவை சாப்பிட்டனர். ஒருமுறை அவரது மனைவி அந்த துணியை அவிழ்த்துவிட்டார். அன்றிலிருந்து ஏழாம் நாள் தானியம் வருவது தடைபட்டு பாத்திரம் காலியாகி விட்டது.

நூல்:தாரிக் அல் பாக்தாத், நூருல் அப்சார்

7.  ஒருசமயம் அபூ ஹப்ஸ் உமரி ஹத்தாதி என்பவர் ஷெய்குனா ஜீலானி {ரஹ்மதுல்லாஹி அலைஹி} அன்னவர்களிடம் சென்று '' நான் ஹஜ் செல்கிறேன் காலம் குறைவாக உள்ளது என்னிடம் ஒட்டகமோ மெலிந்து கிழடாக உள்ளது வேகமாகவும் செல்லமுடியவில்லை. தாங்கள் துஆ செய்து தரும்படி வேண்டுகிறேன்'' என தனது ஒட்டகையை ஷெய்குனா அன்னவர்களின் அருகிலே நிறுத்தினார்.


​​ஷெய்குனா அப்துல் காதிர் ஜீலானி அன்னவர்கள் துஆ செய்து அவ் ஒட்டகத்தை தம் பொற்கரத்தால் தடவி விட்டார்கள். நான் ஹஜ்ஜுக்கு செல்லும்போது அந்த ஒட்டகம் மற்ற ஒட்டகங்களைவிட வேகமாகவும் வலிமை மிக்கதாகவும் ஆகிவிட்டதை நான் அறிந்தேன் என அன்னவரே குறிப்பிட்டுள்ளார்.


​​நூல்:கலாயிதுல் ஜவாஹிர்,தாரிக் அல்பக்தாத்

8. அஷ்ஷெய்கு அல் இம்றான் அல் கீமாதி, அஷ்ஷெய்கு பஸ்ஸார் ஆகிய இருவரும் பக்தாதில் வைத்து ஹிஜ்ரி 571இல் பின்வரும் விடயத்தைக் கூறியதாக அபுல் ஹஸன் என்பவர் உரைக்கின்றார். தங்களுக்கு ‘முஹ்யத்தீன்’ என்று புனைப் பெயர் வரக் காரணம் என்ன? என்று கேட்கப்பட்டதற்கு.


​​ஹிஜ்ரி 511இல் வெள்ளிக்கிழமையன்று எனது சில துறவு நிலையிலிருந்து மீண்டு, நான் வெறுங் காலுடன் பக்தாதுக்கு வந்தேன். நிறம் மாறிய, மெலிந்த ஒரு நோயாளி அருகே நான் சென்றேன். அவர் அப்துல் காதிரே! என்று விளித்து எனக்குச் ஸலாம் கூறினார். நானும் அவருக்கு பதில் கூறினேன். என்னை அருகில் வருமாறு அழைத்தார். நெருங்கினேன். என்னை இருப்பாட்டும் என்றார். இருப்பாட்டினேன். உடனே அவரின் தேகம் வளர்ந்தது. கோலமும் பொலிவுற்றது. நிறமும் தெளிந்தது. நான் சற்று அஞ்சினேன்.

♦ அப்போது அவர் என்னைத் தெரியுமா? என்று கேட்டார். தெரியாது என்றேன். அதற்கு அவர் நான் தான் ‘தீன்’ சன்மார்க்கம்! நீர் பார்த்தது போன்று பங்கறையாக இருந்தேன். உம்மால் அல்லாஹ் என்னைச் உயிராக்கினான். நீர் ‘முஹ்யத்தீன்’ மார்க்கத்தை உயிர்ப்பித்தவர். என்றார்.


​​நான் அவரை விட்டுப் பிரிந்து ஜாமிஆ மஸ்ஜித்துக்குச் சென்றேன். ஒருவர் என்னை சந்தித்தார். ஒரு செருப்பை எனக்கு முன் வைத்தார் பின் யா செய்யிதி! நாயகமே! முஹ்யத்தீன் என்றார். தொழுது முடிந்த பின், மக்கள் திரண்டு என்னிடம் வந்து, எனது இரு கரத்தையும் முத்தமிட்டனர். பின் யா முஹ்யத்தீன் என்று கோஷமிட்டனர். இது நாளிலிருந்து இப்பெயரால் அழைக்கப்படுகின்றேன். என்று கௌதுல் அஃழமவர்கள் கூறினார்கள்.


​ஆதாரம்:பஹ்ஜத்துல் அஸ்ரார் பக்கம் - 109