MAIL OF ISLAM

Knowledge & Wisdomமத்ஹப்களை பின்பற்றலாமா?

​எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.


இஸ்லாத்தின் பார்வையில் இமாம்கள், மத்ஹப் சட்டங்கள் மற்றும் குர்ஆன் - ஹதீஸ் அறிந்த தனி மனிதரை பின்பற்றலாமா?


​​

♣ இது பற்றி வழிகெட்ட வஹ்ஹாபிகளின் நிலைப்பாடு 

ஷாஃபியீ, ஹனஃபீ, மாலிகீ, ஹம்பலீ ஆகிய நான்கு மத்ஹபுகள் உலகம் முழுவதும் பின்பற்றப்படுவது யாவரும் அறிந்ததே!


​​எனினும் இன்று மத்ஹபுகள் தேவையில்லை. இமாம்களை பின்பற்றப்படுவதை தடுக்க வேண்டும் என்பதற்காக மத்ஹபுகள் குப்பைகள், இமாம்களை பின்பற்றக்கூடாது, குர்ஆன் - ஹதீஸ்களை யாரிடமும் கேட்டுத் தெரிந்து கொள்ளத் தேவையில்லை, சுயமாக புரிந்து கொள்ளலாம் என்று வழிகெட்ட வஹ்ஹாபி ஹவாரிஜீயாக்கள் கோசம் எழுப்புகிறார்கள்.


​​மேலும் குர்ஆன் ஹதீஸைக்களை மாத்திரம் தான் பின்பற்ற வேண்டும் என்ற வாசகத்தைக் கூறி மக்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்கினறனர். மத்ஹபுகள் என்றால் என்ன? இமாம்களைப் பின்பற்றுவது என்றால் என்ன? என்பதை நாம் அறியாமல் இருப்பதால் தான் இது போன்ற குழப்பவாதிகள் மக்களை மிக எளிதாக வழிகெடுத்து விடுகின்றனர்.அவர்கள் மத்ஹபுகளைப் பற்றி மக்களிடம் செய்யும் பிரச்சாரம் முற்றிலும் தவறானதாகும்.


​​

♣ இமாம்கள் என்றால் யார்?

பொதுவாக இமாம் என்னும் வார்த்தைக்கு தலைவர் என்று பொருள். இஸ்லாமிய வரலாற்றிலே பல்வேறு இஸ்லாமிய கல்வி துறை சார்ந்த நிபுணர்களுக்கு, அறிஞர்களுக்கு இமாம்கள் என்று சொல்லப்படுகிறது. அந்த அடிப்படையில் இஸ்லாமிய சட்ட நிபுணர்களான மத்ஹபுகளுடைய இமாம்கள் காணப்படுகின்றனர். இவர்கள் அனைவரையும் முஸ்லிம்கள் பொதுவாக இமாம்கள் என கௌரவமாக அழைக்கின்றனர்.


​​இந்த இமாம்கள் அனைவரும் இஸ்லாமிய நேர்வழி கொள்கையான சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையில் வாழ்ந்து மரணித்தவர்கள்.இந்த கொள்கைக்கு மாற்றமான வழிகெட்ட கொள்கையில் வந்தவர்களை முஸ்லிம்கள் இமாம்கள் என்று ஏற்பதில்லை. அந்தந்த வழிகெட்ட கூட்டத்தினரே அவர்களை இமாம்கள் என தமக்கு தாமே புகழ்ந்து கொள்ளுவார்கள்.


​​

♣ மத்ஹப் என்றால் என்ன?

மத்ஹப் என்பது அல் குர்ஆன், அல் ஹதீஸ் ஆகியவைகளை அடிப்படையாக கொண்டு இஸ்லாமிய சட்ட பிரச்சினைகளுக்கு இஸ்லாமிய மார்க்க மேதைகளால் எழுதப்பட்ட மார்க்க சட்ட திட்டங்களை குறிக்கும்.


​​மிக நுணுக்கமான மற்றும் புதிய பிரச்சினைகளுக்குரிய மார்க்க சட்ட திட்டங்களை ஒவ்வொரு பாமர முஸ்லிமாலும் அல் குர்ஆனை மற்றும் அல் ஹதீஸை ஆய்வு செய்து பெற முடியாது. காரணம் ஒவ்வொருவரும் அத்தகைய அறிவையும் நிபுணத்துவத்தையும் பெற்றிருப்பதில்லை. எனவே, அத்தகைய சட்ட திட்டங்களை மார்க்க மேதைகள் அல் குர்ஆன், அல் ஹதீஸ் அடிப்படையில் ஆய்வு செய்து தொகுத்து சட்டங்களாக இயற்றி பாமர மக்களுக்கு இலகுவாக விளங்கி கொள்ளக்கூடிய விதத்தில் அமைத்து கொடுத்துள்ளார்கள். அவையே மத்ஹப்கள் எனப்படுகிறது.

முழு உலகில் உள்ள உண்மை முஸ்லிம்களாலும் நான்கு மத்ஹப்கள் பின்பற்றப்படுகின்றன. மத்ஹப் சட்டங்களுக்கிடையே சிறிது வித்தியாசங்கள் காணப்பட்டாலும் அனைத்துமே அல் குர்ஆன் மற்றும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் வழிமுறை ஆகியவைகளை கொண்டு பெறப்பட்ட சட்டங்கள் என்பதால் அவற்றில் ஏதேனும் ஒரு மத்ஹபை தாராளமாக பின்பற்றலாம்.


​​

♣ மத்ஹப் ஏன் தோன்றியது ?

நபிபெருமானார் காலத்தில் ஷரீஅத்தின் ஏவல் விலக்கல்களுக்கு ஃபர்ளு, வாஜிபு, சுன்னத்து என்ற பல வகையான பெயர்கள் வைக்கப்படவில்லை. நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒளுச் செய்ததைப் பார்த்து ஸஹாபாக்களும் ஒளுச் செய்து கொண்டனர். தொழுகையிலும் இவ்வாறுதான் நடந்தது. எப்பொழுதாவது ஏதேனும் ஒரு சம்பவம் நிகழ்ந்தால் மட்டும் அது சம்பந்தமாக ஸஹாபாக்கள் நபி பெருமானாரிடம் விளக்கம் கேட்டு பெற்றுள்ளனர். வேறு சில சமயங்களில் மக்களே ஏதேனும் ஒரு காரியத்தை செய்யும்போது அது சரியாயின் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அதை ஆமோதித்தும், அவசியமில்லாததாயின் அதிருப்தியை வெளிப்படுத்தியும் வந்துள்ளனர். இத்தகைய தீர்ப்புகள் பெரும்பாலும் கூட்டமாக இருந்த இடங்களில் கொடுக்கப்பட்டுள்ளன.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மறைவுக்கு பின் இஸ்லாத்துக்கு வெற்றிமேல் வெற்றி கிட்டி வந்ததால் முஸ்லிம்களின் ஆதிக்கத்திற்குள்ளான நிலப்பரப்பும் அதிகமாகி விட்டது. இந்நிலையில் புதிது புதிதான பல நிகழ்ச்சிகள் நடக்கலாயின. அவற்றைப் பற்றித் தீர்ப்பளிக்க ‘இஜ்திஹாத்‘ (திருக்குர்ஆன், ஹதீதிலிருந்து மஸ்அலாக்களைக் பிரித்தெடுத்தல்) தேவைப்பட்டது.


​​அத்துடன் மறைமுகமாக கூறப்பட்டுள்ள ஏவல், விலக்கல்களுக்கு விளக்கம் காண வேண்டியிருந்தது. இந்நிலையில் எத்தனையோ விஷயங்களில் சஹாபாக்களின் ஒருமுக முடிவு என்று எதுவுமில்லாமல் இருந்தது. தீர்ப்புகளில் பல அபிப்பிராயங்கள் வெளியாயின. சிற்சில விசயங்களில்தான் ஒருமுகமான முடிவு உண்டாயிருந்தது. பெருமானாரின் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலத்தில் உண்டாயிராத பின்னர் உண்டான நிகழ்ச்சிகள் பலவற்றை எடைபோட திருக்குர்ஆன், ஹதீது அடிப்படையில் சுயமுடிவும், அனுமானமும் தேவைப்பட்டன. இதனால் மஸ்அலாக்களையும், அஹ்காம் என்னும் மார்க்க சட்டங்களையும் உருவாக்குவதற்கான தனி வழிமுறைகள் ஸஹாபாக்களின் காலத்திலேயே ஏற்பட்டு விட்டன.


​​திருக்குர்ஆன், ஹதீது மூலங்களிலிருந்து இஜ்திஹாத் செய்யக்கூடிய திறமையும் பண்பும் பெற்றிருந்த சிறந்த மகான்களான ஸஹாபாக்கள், தாபிஈன்கள், தபஅத்தாபிஈன்கள், இமாம்கள் ஆகியோர் காணப்பட்டார்கள். அந்த அடிப்படையில் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் காலத்திற்கு ஏறத்தாள 90 ஆண்டுகளுக்கு பிறகு மத்ஹப் தோன்றியது. மத்ஹப் உருவாகியதன் முக்கிய நோக்கம் குழப்பம் இல்லாமல் சிறந்த வழியில் அமல்களை ஒரு மனிதன் நிறைவேற்றுவதற்கே!


​​

♣ நான்கு மத்ஹப்களின் பெயர்களும் அதனை உருவாக்கிய இமாம்களும்

மத்ஹபில் நான்கு வழிகள் உள்ளது. அந்த நான்கு வழிகளும் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் காட்டிதந்ததே. அதில் பிரிவுகள் இல்லை. மனநோய் உள்ளவர்களுக்கு மட்டுமே மத்ஹப் பிரிவாக தெரியும். மேலும் மத்ஹப்பை தொகுத்த இமாம்களின் வாழ்ந்த காலம் அனைத்தும் ஒரே காலங்கள்தான், மத்ஹப்பில் பிரிவினை இருந்தது என்று வைத்துக்கொண்டால் இவர்கள் நான்கு இமாம்களிடமும் "நீ பெரியவனா? அல்லது நான் பெரியவனா?" என்ற தர்க்கம் அன்றைக்கே நான்கு நாற்பதாக மாறியிருக்கும்! ஆனால் மத்ஹப் தோன்றி 1300 வருடங்கள் ஆகியும் அதே நான்கு வழிகள்தான் இன்று வரைக்கும் இருக்கிறது. புதிதாக ஒன்று கூட இதுவரைக்கும் தோன்றவில்லை.


​​இதுவே தக்க சான்று மத்ஹப்பில் பிரிவினை இல்லை என்பதற்கு.(ஆனால் இன்றோ மத்ஹப்பில் பிரிவினை என்று வந்த ஒரு கூட்டத்தை அல்லாஹுதஆலா வேர் வேறாக பிரித்து அவர்களுக்குள்ளேயே அடித்துக்கொள்ளும் சூழலை உருவாக்கி மக்களுக்கு அந்த கூட்டத்தை பிரித்து காட்டியுள்ளான், கிட்டத்தட்ட வெறும் முப்பது வருடங்களுக்குள்.) ஆகவே கீழ் பின்வருமாறு ஆண்டுகள் அனைத்தும் கணக்கிடப்பட்டுள்ளது.

1)  இமாம் அபூ ஹனீஃபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி, இயற்பெயர் - அபு ஹனிபா நுஃமான் இப்னு தாபித் இப்ன் ஜுப இப்ன் மர்ழுபான், பிறப்பு - ஹிஜ்ரி 80இல் கூஃபா நகரில் பிறந்தார்கள், இறப்பு - ஹிஜ்ரி 150இல் பகுதாதில் காலமானார்கள், சேவை - தமது 70 வருட ஜீவிய காலத்தில் குர்ஆன்,ஹதீதுகளை கற்று ஆராய்ந்து அவற்றிலிருந்து அடிப்படை கருத்துக்களை எடுத்து தமது அன்றாட வாழ்வில் அனுசரித்து பயன்படுத்தும் விதத்தில் மார்க்க சம்பந்தமான பிக்ஹ் சட்டங்களை இயற்றினார்கள்.

இமாம் அபூ ஹனிபா ரலியல்லாஹு அன்ஹு பற்றி - நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் "ஸல்மான் அல் பாரிசி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மீது தங்கள் கரத்தை வைத்து கூறினார்கள், “எவன் கைவசம் என் ஆத்மா உள்ளதோ அவன் மீது சத்தியமாக இறை நம்பிக்கை சுரைய்யா நட்சத்திரத்தில் இருந்தாலும் இவர்களில் சில மனிதர்கள் அல்லது ஒருவர் அதனை பெற்றுக்கொள்வர்."


​​நூல்கள்: புகாரி 4897, முஸ்லிம், திர்மிதி 3321, அஹ்மத் 9410

2) இமாம் மாலிக் இப்ன் அனஸ் இப்ன் மாலிக் இப்ன் அமீர் அழ அச்பஹி (ரஹ்மத்துல்லாஹி அலைஹிம்), பிறப்பு - ஹிஜ்ரி 93இல் மதீனாவில் பிறந்து 86 வருடங்கள் வாழ்ந்தார்கள், இறப்பு -ஹிஜ்ரி 176இல் மதீனாவிலேயே வபாத்தானார்கள். சேவை - இவர்கள் இமாம் அபூஹனீபா ரஹ்மதுல்லாஹி அலைஹியை விட 13 வயது இளையவர்கள், அவர்களுடன் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள் இவர்களுடைய சேவை. அன்றாட தேவைக்கு ஏற்றபடி குர்ஆன்,ஹதீதிலிருந்து ஆதாரக் கருத்துக்களை எடுத்து சட்டங்களாக எழுதிக் கொடுத்துள்ளார்கள்.

இமாம் மாலிக் ரலியல்லாஹு அன்ஹு பற்றி - கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்: “கல்வி அறிவினைத் தேடி ஒட்டகப் பயணங்கள் (அதிகரிக்க) நெருங்கிவிடும். அப்போது மதீனாவின் ஓர் அறிஞரைவிட சிறந்த அறிஞரை அவர்கள் பெற்றுக் கொள்ள மாட்டார்கள்.”


​​நூல்கள்: திர்மிதி 2680, முஸ்னத் அஹ்மத் 2 -229, மிஷ்காத் – 246

3) இமாம் அபு அப்தில்லாஹ் முஹம்மது இப்ன் இத்ரிஸ் அல் ஷாபிஈ (ரஹ்மத்துல்லாஹி அலைஹிம்), பிறப்பு -ஹிஜ்ரி 150ஆம் வருடம் ஸிரியாவில் பைத்துல் முகத்தாஸுக்கும் பக்கத்திலுள்ள அஸ்கலானில் பிறந்தார்கள், இறப்பு - 54 வருடங்கள் வாழ்ந்து ஹிஜ்ரி 204ஆம் வருடத்தில் எகிப்து நாட்டில் காலமானார்கள், சேவை - இவர்களும் இமாம் அபூஹனிஃபா அவர்களைப்போல் குர்ஆன் ஹதீதுகளை ஆராய்ந்து தேறியபின் இஸ்லாமிய மார்க்க சட்டங்களை அன்றாட வாழ்விற்கு பயன்படும் விதத்தில் எழுதி தந்துள்ளார்கள்.

இமாம் ஷாபியீ ரலியல்லாஹு அன்ஹு பற்றி - கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்: “குறைஷிய அறிஞர் ஒருவர் பூமியின் தட்டுக்களை கல்வியினால் நிரப்புவார்.”


​​நூல்கள்: மஆரிஃபுஸ் ஸுனன் வல் ஆதார் லில் பைஹகீ, கிதாபுஸ் ஸுன்னத் லி இப்னி அபில் ஆஸ், கஷ்ஃபுஸ் ஃகஃபா

4) இமாம் அஹ்மத் பின் முஹம்மது பின் ஹன்பல் அபு அப்துல்லாஹ் அல் ஷய்பானி (ரஹ்மத்துல்லாஹி அலைஹிம்) , பிறப்பு -ஹிஜ்ரி 164இல் பகுதாதில் பிறந்தார்கள்,.இறப்பு - ஹிஜ்ரி 241ஆம் வருடத்தில் பகுதாதிலேயே வபாத்தானார்கள், சேவை - நான்கு பெரும் இமாம்களிலேயே மிகவும் வயதில் இளையவர். ஆனால் 78ஆம் வயதில் சத்திய இஸ்லாமிய கோட்பாட்டினை விட்டுக்கொடுக்க மறுத்து விட்டதால் அக்கால மன்னரால் கசையடி தண்டனை கொடுக்கப்பட்டு மரணமடைந்தார்கள். இவர்களும் குர்ஆன் ஹதீத் அடிப்படையில் சட்டங்களை எழுதி தந்தவர்கள்.

அந்த அடிப்படையில் வட இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பெரும்பாலான மக்கள் ஹனபி மத்ஹபை பின்பற்றுகின்றனர். அதேபோல் இலங்கை, தென் இந்தியா போன்ற நாடுகளில் ஷாபியீ மத்ஹப் பெரும்பாலும் பின்பற்றப்படுகிறது. எனவே, தத்தம் பிரதேசங்களில் மக்களால் பெரும்பாலும் பின்பற்றப்படும் மத்ஹபை பின்பற்றுவது சாலச் சிறந்ததாகும்.


​​

♣ ஸஹீஹான ஹதீஸ் கிரந்தங்களை கோர்வை செய்த ஆறு இமாம்களும் மத்ஹபையே பின்பற்றியவர்கள்

அல்ஹம்துலில்லாஹ் ஆறு மிகப்பெரிய ஹதீத் கிரதங்களை தொகுத்த ஆறு இமாம்களும் மத்ஹப்பை பின்பற்றியவர்களே! அந்த ஆறு இமாம்களும் ஹதீதுகளை தொகுப்பதற்கு முன் வரைவிலக்கணம் வகுத்து அதன் படியே கிதாபில் ஹதீதினை பதிய தொடங்கினார்கள்.

1) சஹிஹ் அல் புகாரி - அபு அப்துல்லாஹ் முஹம்மது பின் இஸ்மாயில் இப்ன் இப்ராகிம் இப்ன் அல் முக்ஹிற இப்ன் பர்டிழ்பாஹ் அல் ஜுபிஅல் புகாரி (ரஹ்மதுல்லஹி அலைஹிம்). வாழ்ந்த காலம் (194-256) இவர்கள் பின்பற்றிய மத்ஹப் ஷாபிஈ, தொகுத்த ஹதீத்கள் 7275.

2) சஹிஹ் முஸ்லிம் - அபு அல் ஹசன் அஸ்கர் அத்தீன் முஸ்லிம் இப்ன் அல் அஜ்ஜாஜ் இப்ன் முஸ்லிம் இப்ன் வர்த் இப்ன் கவ்ஷாத் அல் குஷய்ரி அன் நய்சபுரி (ரஹ்மதுல்லஹி அலைஹிம்) வாழ்ந்த காலம் (204-261) இவர்கள் பின்பற்றிய மத்ஹப் ஷாபிஈ, தொகுத்த ஹதீத்கள் 2200.

3) அபு தாவூத் - அபு தாவூத் சுலய்மான் இப்ன் அல் அசாத் அல் அழ்டி அல் சிஜிச்தனி (ரஹ்மதுல்லஹி அலைஹிம்), வாழ்ந்த காலம் (202-275) இவர்கள் பின்பற்றிய மத்ஹப் ஹன்பல், தொகுத்த ஹதீத்கள் 4800.

4) அல் திர்மிதி - அபு இசா முஹம்மது இப்ன் இசா அஸ் சுலமியாத் தரிர் அல் புகி அட் திர்மிதி (ரஹ்மதுல்லஹி அலைஹிம்), வாழ்ந்த காலம் (209-279) இவர்கள் பின்பற்றிய மத்ஹப் ஷாபிஈ, தொகுத்த ஹதீத்கள் 3956.

5) அல் நாசாஈ - அஹ்மத் இப்ன் சுஹைப் இப்ன் அலி இப்ன் சினன் அபு அபு அர் ரஹ்மான் அல் நாசாஈ (ரஹ்மதுல்லஹி அலைஹிம்), வாழ்ந்த காலம் (215-300) இவர்கள் பின்பற்றிய மத்ஹப் ஹன்பல், தொகுத்த ஹதீத்கள் 5270.

6) இப்ன் மாஜா - அபு அப்தில்லாஹ் முஹம்மது இப்ன் யாஜித் இப்ன் மாஜா அல் ராபி அல் கஜ்வனி (ரஹ்மதுல்லஹி அலைஹிம்), வாழ்ந்த காலம் (209-273) இவர்கள் பின்பற்றிய மத்ஹப் ஷாபிஈ, தொகுத்த ஹதீத்கள் 4000 கும் மேற்பட்டவைகள்.

ஆகவே மத்ஹப் குப்பை, இமாம்களை பின்பற்றக்கூடாது, இமாம்களின் கருத்துகளை ஏற்கக்கூடாது , குர்ஆன் மற்றும் ஹதீத் மட்டுமே மார்க்கம் என்று கூறும் கூட்டத்தார்க்கு பகிரங்க சவால்! ஹதீத்களை தொகுக்கும் முன் அனைத்து இமாம்களும் அவர்களுக்கு என்று வரைவிலக்கணத்தை (இமாம்களின் சொந்த கூற்று) வடிவமைத்துக்கொண்டு அதன் படியே ஹதீத்களை தொகுத்தார்கள்.


​​ஆகையால் இமாம்களின் கூற்றினை ஏற்கக்கூடாது என சொல்பவர்கள் முதலில் அவர்கள் வகுத்த வரைவிலக்கணத்தை தூக்கியெறிய வேண்டும். பின்பு மத்ஹப் வாதிகளின் தொகுப்பினை ஏற்கக்கூடாது எனில் ஹதீத்களை தொகுத்த அனைத்து இமாம்களும் மத்ஹப்பிற்க்கு உட்பட்டிருக்கிறார்கள். ஆகையால் அவர்கள் பதிந்த அனைத்து ஹதீத்களையும் கட்டுக்கதைகள் என தூக்கியெறிய வேண்டும்! வழிகெட்ட வஹ்ஹாபிகள் இதனை செய்வார்களா.?


​​

♣ மத்ஹப் - இமாம்களை பின்பற்ற வேண்டும் என்பதற்க்காக ஆதாரங்கள்.

பொதுவாக மார்க்கத்தில் தெரிந்தவர்களிடம் சென்று தெரியாதவர்கள் கேட்கவேண்டும் அப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை இறைவன் சட்டம் பிறப்பிக்கின்றான். நீங்களே சுயமாக குர்ஆன், ஹதீஸ்களை மாத்திரம் வைத்துக் கொண்டு தெளிவு பெற்றுக்கொள்ளலாம் இவை தவிர வேறு யாரிடமும் சென்று மார்க்கத்தை கற்றுக் கொள்ள தேவையில்லை, இமாம்களை பின்பற்றக்கூடாது என்று நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் எங்கேயாவது கூறியுள்ளார்களா?


​​அந்த அடிப்படையில் இறைவன் குர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான் "நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் தெரிந்தவர்களிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள்”என்று கூறுவீராக. (அல்குர்ஆன் : 16:43)

எனவே அறிந்தவர்கள் அறியாதவர்கள் என்று மக்களிடையில் இரண்டு கூட்டம் இருப்பார்கள் என்பது இறைவனின் திட்டம். அந்த அடிப்படையில் தெரியாதவர்கள் தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது இறைவனின் சட்டம். ஆனால் வழிகெட்ட வஹ்ஹாபிகள் கூற்றுப்படி உலகத்தில் ஒரே ஒரு கூட்டம் தான் இருக்க வேண்டும். அவர்கள் அனைவர்களும் மார்க்கத்தை முழுமையாக அறிந்தவர்களாக இருக்க வேண்டும். இதிலிருந்து உங்களுக்கு புரிந்திருக்கும் வஹ்ஹாபிகள் அல்லாஹ்வின் கூற்றுக்கே மாறு செய்கிறார்கள். அல்லாஹ் கூறுகிறான் இரண்டு கூட்டம் என்று வஹ்ஹாபிகள் கூறுகிறார்கள் இல்ல இல்ல ஒரு கூட்டம் என்று எனவே குர்ஆனை பின்பற்றுவதன் லட்சினம் இதுவா?

♦ எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமின்கள் (ஸஹாபாக்கள், இமாம்கள்) செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும் (தவறான) வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம்; அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும். (அல்குர்ஆன் : 4:115)

♦ இன்னும் முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக்கொண்டவர்களும், அவர்களை(எல்லா) நற்கருமங்களிலும் பின் தொடர்ந்தவர்களும் இருக்கின்றார்களே அவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறான், அவர்களும் அவனிடம் திருப்தியடைகின்றார்கள், அன்றியும் அவர்களுக்காக, சுவனபதிகளைச் சித்தப்படுத்தியிருக்கின்றான், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும். (அல்குர்ஆன் : 9:100)

♦ அல்லாஹ் (தன்னுடைய சட்டங்களை) உங்களுக்குத் தெளிவாக விளக்கவும், உங்களுக்கு முன் இருந்த (நல்ல)வர்கள் சென்ற (நேரான) வழிகளில் உங்களைச் செலுத்தவும், உங்களுக்கு பாவமன்னிப்பு அருளவுமே விரும்புகிறான். இன்னும் அல்லாஹ் நன்கு அறிந்தோனாகவும், ஞானமுடையோனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 4:26)

♦ கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்: மக்களில் சிறந்தவர்கள் என் தலை முறையினர் (ஸஹாபாக்கள்). அவர்களுக்குப் பிறகு (சிறந்தவர்கள்) அவர்களையடுத்து வருபவர்கள் (தாபிஈன்கள்). அவர்களுக்கும் பிறகு (சிறந்தவர்கள்) அவர்களையடுத்து வருபவர்கள் (தப அத்தாபிஈன்கள்). பின்னர் ஒரு சமுதாயத்தார் வருவார்கள். அவர்களுடைய சாட்சியம் அவர்களுடைய சத்தியத்தை முந்திக் கொள்ளும். அவர்களுடைய சத்தியம் அவர்களுடைய சாட்சியத்தை முந்திக் கொள்ளும்.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலியல்லாஹு அன்ஹு)

நூல்: புகாரி - 3651


​​

♣ குர்ஆன், ஹதீஸ்களை அறிந்த தனி மனிதரை பின்பற்றலாமா?

தனி மனிதரை பின்பற்றலாம் அதாவது அவருக்கு குர்ஆன் ஹதீஸ் தெரிந்திருந்தால் அவரை பின்பற்றலாம் என்பதைப் குர்ஆன், ஹதீஸ் மூலம் பின்வருமாறு பார்க்கலாம்.

♦ நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள், இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள், உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும். (அல்குர்ஆன் : 4:59)

♦ கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் (செய்த) தாங்களுடைய ஹஜ்ஜின் போது அரஃபாவின் தினத்தில் தாங்களின் கஸ்வா என்ற ஒட்டகத்தில் அமர்ந்த வண்ணம் (ஒரு) பிரசங்கம் செய்தார்கள். (அந்தப் பிரசங்கத்தில்) மனிதர்களே! நீங்கள் எவைகளை பின்பற்றி நடந்தால் வழிதவற மாட்டீர்களோ அப்படிப்பட்டவைகளை உங்களுக்கு மத்தியில் விட்டுச் செல்கிறேன் அதாவது அல்லாஹ்வின் வேதமாகிய குர்ஆனையும் என்னுடைய அஹ்லுல்பைத் என்ற என்னுடைய குடும்பத்தார்களையும் விட்டுச் செல்கிறேன் என்று கூறியதை நான் செவியுற்றேன்.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் ஸைய்யதுனா ஜாபிர் (ரலியல்லாஹு அன்ஹு)

​​நூல்கள்: திர்மிதி -3789, முஸ்னத் அஹ்மத் - 3:14 மிஷ்காத் - 569, 6152

♦ அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) அவர்கள் கூறினார்கள்: மனிதர்களே அறிந்து கொள்ளுங்கள்! எம்மிடம் மரண தூதுவர் வரும் நேரம் நெருங்கி விட்டது. நான் அவருக்கு விடையளிக்கப் போகிறேன். மேலும் நான் உங்களிடையே பொறுப்பான இரண்டு விசயங்களை விட்டுச் செல்கிறேன். அவ்விரண்டில் முதலாவது அல்லஹ்வின் வேதம். அதில் நேர்வழியும் பேரொளியும் இருக்கிறது. ஆகவே அதைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். இரண்டாவது அஹ்லுல் பைத்துக்கள் என்ற என் குடும்பத்தார்களாகும். ஆகவே அவர்கள் விசயத்தில் கவனமாக நடந்து கொள்ள வேண்டுமென்று அல்லாஹ்வை முன் வைத்து உங்களுக்கு எச்சரிக்கை செய்து கொள்கிறேன்.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் யசீத் இப்னு யய்யான் (ரலியல்லாஹு அன்ஹு)

​நூல்: முஸ்லிம் – 5920, மிஷ்காத்- 567

♦ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் ஒரு பெண்மணி தேவை ஒன்றை முறையிடுவதற்காக (மார்க்க விடயம் பற்றி ) வந்தார். நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அந்தப் பெண்மணியைத் திரும்பவும் வரும்படிக் கட்டளையிட்டார்கள். அந்தப் பெண்மணி,‘ நான் வந்து தங்களைக் காண முடிய வில்லையென்றால்...?’ என்று, - நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இறந்துவிட்டால் (என்ன செய்வது?) என்பது போல் கேட்டாள்.


​​அதற்கு நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், ‘நீ என்னைக் காணவில்லையென்றால், அபூ பக்ரிடம் செல்' என்று பதில் கூறினார்கள்.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் ஜுபைர் இப்னு முத்யிம் ரலியல்லாஹு அன்ஹு)

​நூல்: புகாரி 3659

♦ மேலும் நான் உங்களுடன் வாழும் நாட்களை அறிய மாட்டேன். எனக்குப் பின் இவ்விருவரையும் நீங்கள் பின்பற்றி நடங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறி அபூபக்கரையும் உமரையும் சுட்டிக் காட்டினார்கள்.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் ஹுதைபா பின் யமான் (ரலியல்லாஹு அன்ஹு)

​நூல்கள் : இப்னு மாஜா 97, அபூதாவூத்,திர்மிதி

♦ கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்: மேலும் எனக்குப் பின்னால் உங்களில் ஜீவித்து இருப்பவர்கள் அதிகப்படியான குழப்பங்களை காண்பீர்கள். அந்நேரத்தில் என் ஸுன்னத்தையும் நேர்வழி பெற்ற வழிக்காட்டிகளான என் கலீபாக்களின் ஸுன்னத்தையும் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். மேலும் அவற்றின் மீது உங்களின் கடைவாய் பற்களை வைத்து கடித்து பிடித்துக் கொள்ளுங்கள்.


நூல்கள்: திர்மிதி: 2676, இப்னு மாஜா: 42, அபூதாவுத்: 4607

♦கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்: எனது தோழர்கள் நட்சத்திரங்களை போன்றவர்களாவார்கள். எனவே அவர்களில் நீங்கள் யாரை பின்பற்றினாலும் நேர்வழி அடைவீர்கள்.

நூல்: மிஷ்காத்: 6018

எனவே மத்ஹப் சட்டங்களை, இமாம்களை, குர்ஆன் - ஹதீஸை அறிந்த தனி மனிதர்களை பின்பற்றலாம் என்பதற்கு அல் குர்ஆன், அல் ஹதீஸில் தெளிவான நிறைய ஆதாரங்கள் உள்ளதால் இமாம்களை தாராளமாக பின்பற்றலாம். இவ்வளவு தெளிவாக இஸ்லாத்தில் சொல்லப்பட்ட பின்பும் இமாம்களை பின்பற்றக்கூடாது என்று ஒருவன் சொன்னால் நிச்சயமாக அவர் ஒரு வழிகேடன் ஆவான்.


​​எனவே அப்படிப்பட்ட வழிகெட்டவர்களை விட்டும் நாம் ஒதுங்கி கொள்ள வேண்டும்.


​​கடைசியாக ஒன்று: இந்த உலகத்தில் ஸஹாபாக்களை பின்பற்றியவர்கள் தாபியீன்கள், தபஅத்தாபியீன்கள், இமாம்கள், உலமாக்கள், ஸாலிஹீன்கள், மூமினான முஸ்லிம்கள். ஆனால் ஸஹாபாக்களை பின்பற்றாதவர்கள் முஹ்தஸிலாக்கள், கவாரிஜியாக்கள்,ஷியாக்கள், காதியானிகள், வஹாபிகள் அதாவது இன்று தௌஹீத் ஜமாஅத் என்ற பெயரில் இருக்கும் வழிகேடர்கள். இவர்கள் அனைவரையும் விட்டு அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!

மறுமையில் ஈடேற்றம் பெருபவர்களாக குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் சுன்னத் வல் ஜமாஅத்தினர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மத்ஹபுகள் ஹனபி, மாலிகி, ஷாபிஈ, ஹன்பலி ஆகியவைகளாகும். இதில் ஒரு மத்ஹபை முழுமையாகப் பின்பற்றியே தீர வேண்டும். இந்த நான்கு மத்ஹபும் திருக்குர்ஆன், ஹதீதுகள் அடிப்படையிலேயே அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே நேர்வழி இந்த மத்ஹபில்தான் இருக்கிறது. இதில் ஒன்றைப் பின்பற்றாதவன் வழிதவறியவன் ஆவான்.


​​இதற்காக இதை உருவாக்கியவர்கள் கடும் தியாகம் செய்திருக்கிறார்கள் என்பதை நீங்கள் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பார்த்து தெரிந்து கொண்டிருப்பீர்கள். ஆகவே அவர்களின் அடியொற்றி நடக்கும் பாக்கியத்தை நம் அனைவருக்கும் வல்ல இறைவன் நஸீபாக்கி வைப்பானாக! ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.