MAIL OF ISLAM

Knowledge & Wisdomமணமகன் மலர் மாலை அணிவது கூடுமா?

எழுதியவர்: மௌலவி  S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.


திருமணத்தின் போது மணமகன் மலர் மாலை அணிவதைப்பற்றி இஸ்லாம் மார்க்கம் கூறும் தீர்வு என்ன?


♣ இது பற்றி வழிகெட்ட வஹ்ஹாபிகளின் நிலைப்பாடு 


இன்று வழிகெட்ட வஹ்ஹாபிகள் திருமணத்தின் போது மணமகன் கழுத்தில் மலர் மாலை போடுவதை காண விரும்புவதில்லை. பார்த்தால் கோபப்படுகிறார்கள். ஆனால் ஹஜ்ஜிலிருந்து திரும்பும் ஹாஜிகள் மந்திரிகள், அரசியல் தலைவர்கள் மற்றும் சிறப்புக்குரிய அதிதிகளுக்கு தங்களது புனித கரத்தினால் பூ மாலை போட்டு வரவேற்பார்கள்.


​​ஆயினும் மணமகன் கழுத்தில் காணுவதை மட்டும் அவர்களால் சகித்து கொள்ள முடிவதில்லை. இது ஏனென்று தெரியவில்லை. ஏதாவது நிக்காஹ் மேடையில் மணமகன் கழுத்தில் மலர் மாலை இருப்பதை பார்த்தால் அது ஒரு பாவமான செயல், ஷிர்க் பித்அத் என்பதை போல் முதலில் அதை கழற்ற முயல்வார்கள்.


​​முடியாத போது மேடையை விட்டு வெளியேறிவிடுவார்கள். ஆகவே வழிகெட்ட வஹாபிகள் இந்த மலர் மாலை போடுவது மார்க்கத்திற்கு முரணானதன்று. இது திருமண அழைப்பை ஏற்க மறுக்கும் காரணங்களில் உள்ளதல்ல. எனவே இதன் காரணமாக சுன்னத்தான அல்லது முஸ்தஹப்பான விருந்தழைப்பை ஏற்பதை விட்டு விடுவதோ அல்லது அங்கு அழைப்பை ஏற்று சென்ற பின் மாலையை அகற்ற முயன்று முடியாவிட்டால் மணவிழாவை விட்டும் வெளியேறிவிடுவதோ முறையான காரியமன்று. முறையற்றதாகும்.


♦ திருமணம் என்பது ஒரு விசேஷ தினமாகும். அன் நாளில் திருமண பந்தத்தில் இணையவிருக்கும் மணமகனையும், மணமகளையும் பல வகையான விடயங்களின் மூலம் அலங்கரித்து மக்களுக்கு மத்தியில் அவர்களை அடையாளப்படுத்தப்படும்.

இவ்வாறான அலங்காரங்களில் ஒன்றாகவே மலர் மாலை அணிவதனையும் கருதப்படுமே தவிர இது நன்மை தரக்கூடிய செயலோ, இபாத்தோ மாற்று மதச்சடங்கு ஷரீஆவுக்கு முறனானது என்று கூறிவிட முடியாது. எனவே மார்க்கம், வணக்கம் என்று செய்யும் போது தான் கூடாது என்று அவர்களை தடுக்க வேண்டும். அப்படி யாரும் செய்வதும் கிடையாது. அந்த அடிப்படையில் மணமகனை திருமணத்தின் போது அடையாளம் காட்டுவதற்காக அடையாள சின்னங்கள் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திலும் காணப்பட்டுள்ளது.


♦ அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சென்றபோது நபிகள் நாயகம் (ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களைப் பார்த்து உங்கள் ஆடையில் மஞ்சல் நிறம் காணப்படுகின்றதே உங்களுக்கு திருமணம் நடத்துவிட்டதோ என்று கேட்டார்கள். ஆமாம் திருமணமாகிவிட்டது என்று கூறினார்கள். ஆகவே மணமகன் ஆடையில் மஞ்சல் நிறம் காணப்பட்டால் அவர் மணமகன் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் காலத்தில் அடையாளம் காண்பிக்கப்பட்டுள்ளது.


​​எனவே அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் அப்போது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் “ஓர் ஆட்டையாவது (அறுத்து) வலீமா - மணவிருந்து அளியுங்கள்" என்று கூறினார்கள்.(ஷஹீஹ் புகாரி) ஆகவே நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் மணமகனை மஞ்சல் கலரைக்கொண்டு அடையாளம் காண்பிக்கப்பட்டது இன்று மணமகனை மலர் மாலை மூலம் அடையாளம் காண்பிக்கப்படுகின்றது.


♦ பொதுவாக இஸ்லாம் மார்க்கத்தில் பித்அத் (கெட்ட பித்அத்) கூடாது. அது என்ன பித்அத் என்றால் மார்க்க ரீதியான கெட்ட பித்அத்தான் கூடாது. உலக ரீதியான பித்அத் அல்ல. ஆகவே உலக ரீதியான பித்அத்தும் கூட கூடாது என்றால் மைக்கில் பேசுவது கூடாது ஏனெனில் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் மைக் இல்லை இதுபோன்று லைட் அலங்காரங்கள் , தொலைபேசி, பஸ், வாகனங்கள், கம்பூடர், ஏசி, மாடி வீடு இதுவெல்லாம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் இல்லை. எனவே இதிலிருந்து என்ன விளங்குகின்றது, பித்அத் இரண்டு வகை மார்க்க சம்பந்தப்பட்டது, உலகம் சம்பந்தப்பட்டது. அந்த அடிப்படையில் மார்க்கம் சம்பந்தப்பட்ட (தீய- கெட்ட) பித்அத்துதான் கூடாது, உலகம் சம்பந்தப்பட்ட பித்அத் கூடும்.


​​என்பதை இப்படி தெளிவாக நாம் புரிந்து கொண்டால் கருசமணி அணிவது அதுவும் கூட மார்க்கம் சம்பந்தப்பட்டது அல்ல. இஸ்லாத்தில் கூடுமா? கூடாதா? என்று பார்க்கும் போது கூடும் ஆனால் அதன் மூலம் நன்மை கிடைக்குமோ, வணக்கமோ கிடையாது இப்படி நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். மார்க்கம் சம்பந்தப்பட்டது என்றால் ஒன்றை செய்தால் அதற்கு அல்லாஹ் கூலி நன்மை தருவான். ஆகவே யாராவது கருசமணி அணிவது சுன்னத் நன்மை கிடைக்கும் என்று கூறினால் அதுதான் பித்அத். அப்படி யாரும் சொல்லமாட்டார்கள்.


இப்படி நிறைய உலகம் சம்பந்தப்பட்ட பித்அத்துகளை பார்க்கலாம் பாடலசாலைக்கு செல்லும் மாணவர்கள் 'வெள்ளை ஆடைகள்தான் அணிய வேண்டும்' என்று குர்ஆனில் இருக்கின்றதா? ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் இருந்ததா? ஆகவே வெள்ளை ஆடை அணிவது பாடசாலையில் அவர் படிக்கிறார் என்பதற்குறிய ஒரு அடையாள சின்னமாகும்.


​​இது போன்றுதான் மணமகன் மலர் மாலை அணிவது ஒரு அடையாள சின்னமாகும். விரும்புபவர்கள் மலர் மாலை அணிந்து கொள்ளலாம். அவ்வாறு அணிவது நன்மையோ, வணக்கமோ கிடையாது. விரும்பாதவர்கள் மலர் மாலை அணியாமல் இருந்தால் சரி, ஆனால் மணமகன் மலர் மாலை அணிவது கூடாது பித்அத் என்று கூறுவது அவர்களின் அறியாமையின் வெளிப்பாடு என்பதுதான் எதார்த்தமான உண்மையாகும்.


​​இஸ்லாத்தின் மலர் மாலை அணிவது கூடுமா? கூடாதா? அல்லது அனுமதி உள்ளதா? இல்லையா? என்றுதான் பார்க்க வேண்டும். உதாரணமாக நூறு பேர் உள்ள சபையில் யார் மணமகன் என்று மக்கள் மத்தியில் அடையாளம் காட்டுவதற்காக மேலும் மணமகனை அழகுபடுத்துவதற்காக மாத்திரம் அணியப்படும் அடையாளமே மலர் மாலையாகும். இந்த காலத்தில் மலர் மாலை அணிவது மூலம் மணமகனை அடையாளமிடுகிறார்கள். இது ஷரீஅத் அல்ல. ( பித்அத் அல்ல) ஆகவே உலகம் சம்பந்தப்பட்டதேயாகும்.


♦  அவ்வாறு மலர் மாலை அணிவது மாற்று மதச்சடங்கு என்றால் திருமண வீட்டில் எம்மால் பெரும் விருந்துபசாரம் அளிக்க முடியாது, திருமண வீடுகளுக்கு நிறம் புசுவதன் மூலமாகவும், பந்தல்கள் போடுவதன் மூலமாகவும், அலங்கார விளக்குகளை ஒழிர விடுவதன் மூலமாகவும் அலங்கரிக்க முடியாது. ஏன் புத்தாடையும் கூட அணிய முடியாது. ஏனெனில் இவ்வாறான விடயங்கள் அத்தனையும் மாற்று மதத்தினரும் செய்கின்றனர். இல்லை.... மலர் மாலை அணிவதுதான் மாற்று மதச்சடங்கு என்றால்... நாம் எந்தவொரு சிறப்பதிதியையும் கௌரவப்படுத்தும் விதமாக பொன்னாடை போர்த்த முடியாது. ஏனெனில் இவ்விரண்டுமே ஒன்றுதான்... ஒருவரை கௌரவப்படுத்தும் விதமாகவும்,அடையாளப்படுத்தும் விதமாகவும் செய்யப்படுகின்றவையாகும்.

பொன்னாடை போர்த்தும் விடயத்தில் எவ்வாறு ஷரீஆவில் எவ்வித தடையும் இல்லையோ அதேபோன்று மலர் மாலை அணிவதிலும் ஷரீஆவில் எவ்வித தடையும் இல்லை.


♣ திருமணத்தின் போது பூமாலை கழுத்தில் போடுவது கூடும். ஏனெனில் பூ மாலையில் இரண்டு கண்ணோட்டம் இருக்கிறது.


1) அது ஒரு பூ. அது அலங்கார நறுமண வகையைச் சார்ந்ததும், பலனளிக்கும் ஒரு பொருளாகவும் இருக்கிறது. மேலும் அலங்காரம் ஆகுமான பயன்பாடு. நறுமணம் இதுவெல்லாம் அகிலத்தின் இரட்சகனாம் அல்லாஹ்விற்கும் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கும் பிடித்தமானவையாகும்.


♦(நபியே!) நீர் கேட்பீராக: “அல்லாஹ் தன் அடியார்களுக்காக வெளிப்படுத்தியுள்ள(ஆடை) அழகையும், உணவு வகைகளில் தூய்மையானவற்றையும் தடுத்தது யார்? இன்னும் கூறும்: “அவை இவ்வுலக வாழ்க்கையில் நம்பிக்கையாளர்களுக்கு (அனுமதிக்கப்பட்டவையே, எனினும் மறுமையில்) அவர்களுக்கு மட்டுமே சொந்தமானவையாகவும் இருக்கும்” இவ்வாறு நாம் நம் வசனங்களை அறியக்கூடிய மக்களுக்கு விவரிக்கின்றோம்.  (அல்குர்ஆன் : 7:32)


♦ அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். துன்யாவில் உள்ள மூன்று எனக்கு பிரியமானதாக ஆக்கப்பட்டுள்ளது. 1) பெண்கள். 2) நறுமணம். 3) எனது கண் குளிர்ச்சி தொழுகையில்.  ஆதாரம்: நசாயீ 3939, ஹாகிம் 2/174 


​​ஆகவே பூமாலை என்ற மனமான பொருள் இரண்டாவது வகையினை சேர்ந்தது நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் விரும்பிய நறுமணத்தில் அடங்கியுள்ளது.


2) இன்னொரு கண்ணோட்டம்.

அது காபிர்களுக்கு ஒப்பானது என்பது. இது இங்கு இருக்கவில்லை. ஏனெனில் கூடா ஒப்பு எதிலென்றால் இழிவான காரியத்தில் தான். மேலும் அவர்களுக்கு ஒப்பாவது நோக்கமாகவும் இருக்க வேண்டும். இங்கு இந்த இரண்டும் இல்லை. இழிவான காரியம் என்பது அந்த சமூகத்தை அடையாளப்படுத்தும். - அவர்களை இனம் பிரித்து காட்டும் அடையாளச் சின்னங்களே தானே தவிர பல்வேறு சமூகங்களுக்கு மத்தியில் இருந்து வரும் கூட்டு பழக்க வழக்கங்கள் அல்ல. ஒரு நாட்டின் அல்லது ஒரு ஊரில் வசிக்கும் அதிகமானோர் தங்களுக்கிடையில் பல கூட்டு வழக்கங்களை பழக்கப்படுத்தி கொண்டிருப்பர். அது அவர்கள் உண்ணும் உணவிலும் உடுத்தும் உடையிலும் அவர்கல் வசிக்குமிடத்தில் கூட இருக்கலாம் (இதுவெல்லாம் அந்த நாட்டு அல்லது ஊர் கலாச்சாரம் என்று சொல்லலாமே ஒழிய ஒரு குறிப்பிட்ட இனத்தின் கலாச்சாரம் என்று சொல்ல முடியாது.)


♦ இந்த வகையில் பூமாலை போடுவது காபிர்களை அடையாளப்படுத்தும் இந்துத்துவ சின்னங்களல்ல. இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் பொதுவான கூட்டுக் கலாச்சாரமாகும். இஸ்லாமியர்களும் காபிர்களும் தங்களது திருமணங்கள் விருந்து உபச்சார விழாக்கள் போன்றதில் காலங்காலமாக பயன்படுத்துகிறார்கள். இது ஒரு மதத்தவர்களின் குறிப்பிட்ட கலாசாரம் கிடையாது. மேலும் காபிர்களுக்கு ஒப்பாக வேண்டும் என்ற நோக்கமும் இங்கு எந்த ஒரு முஸ்லிம் சகோதரர்களும் திருமணத்தின் போது மலர் மாலை போடும் (என்னம்-நோக்கம்) யாருக்கும் இருக்க முடியாது. ஏனெனில் ஒரு விசுவாசி தனது சமூக மக்களின் பழக்கமாகவும் இருந்து வருகிற இந்த மாலை போடுதலை ஷரீஅத்தில் சுன்னத்தான தனது நிக்காஹில் சுயமாக செய்கிற போது அதில் மாற்று மதத்தவர்களைப் போல் இருக்க வேண்டும் என்று எப்படி நாடுவார்.


இப்போது எந்த முஸ்லிம்கள்தான் அறியாமலிருப்பார். அத்தர், பூ, நறுமணம் பயன்படுத்துவது பரிசுத்த ஷரீஅத்தில் மனமாக பொருள் பாவிப்பது சுன்னத் என்று மேற்படி கூறப்பட்ட நபி மொழியும் இதற்கு தெளிவான அதாவது மலர் மாலை அணிவது கூடும் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டது என்பதற்கு ஆதாரமாகும். இவ்வளவு ஆதாரங்கள் இருந்தும் பூமாலை விசயத்தில் இன்னும் யாராவது புரியாமலிருந்தால் நாம் அந்த சகோதரர்களின் நன்மைக்காக துஆ செய்வோம்.