MAIL OF ISLAM

Knowledge & Wisdom



மௌலித் ஓதலாமா? 

​ 

எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.

இஸ்லாத்தின் பார்வையில் 'நபிகள் நாயகம் புகழ்' கவி மூலம் (மௌலித்) பாடலாமா? அதுவும் விஷேசமாக பள்ளி வாசலில் ஓதலாமா?

​​

♣  இது பற்றி வழிகெட்ட வஹ்ஹாபிகளின் நிலைப்பாடு 

நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பெயரால் ஸுப்ஹான மவ்லிது - புர்தா ஷரீப் போன்ற கவிகள், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேரர்கள் ஹஸன், ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோர் பெயரால் மவ்லிதுகள், ஷெய்க் அப்துல் காதிர் ஜிலானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் பெயரால் முஹ்யித்தீன் மவ்லிது - யாகுத்பா கவிகள், நாகூர் ஷாகுல் ஹமீது பாதுஷா நாயகம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் பெயரால் ஷாகுல் ஹமீத் மவ்லித் எனவும், இது போன்ற ஏனைய மவ்லிதுகள் அனைத்தும் பொய்யும் புரட்டும் நிறைந்ததாகவும், இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்கக் கூடியதாகவும் அவற்றுள் முதலிடத்தைப் பெற்றுள்ள ஸுப்ஹான மவ்லிது என்பதாகவும், மவ்லித் வரிகள் திருக்குர்ஆனுக்கும், நபிமொழிகளுக்கும் முரணாக அமைந்துள்ளதாகவும் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மற்றும் உத்தம ஸஹாபாக்கள் யாருமே (மௌலித்) கவி வரிகள் பாடியதில்லை எனவும் மவ்லித் ஓதுவது கூடாது (ஷிர்க் - பித்அத்) எனவும் குர்ஆன், ஹதீஸ்களை சரியான முறையில் ஆய்வு செய்யாமலும் மௌலித் என்பது (பித்அத் - ஷிர்க்) என்பதற்கு எந்த ஒரு ஆதாரங்களையும் முன்வைக்காமலும் வாயால் மாத்திரம் வட்டியோட்டிக் கொண்டு அசத்தியத்தை நிறுவ முயன்றுள்ளனர்.


​​எனவே இவர்கள் மேலே முன்வைத்துள்ள அனைத்து விமர்சனங்களுக்கும் கீழ்காணும் ஆதாரங்கள் மூலம் உடைத்தெரியப்படுகின்றன. வழிகெட்ட வஹ்ஹாபிகளே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்.


​​

♣ மௌலித் என்றால் என்ன?

பள்ளிவாசலில், மத்ரஸாக்கள், பாடசாலை, வீடு, கடை போன்ற இடங்களில் மனிதர்கள் ஒன்று கூடி திர்குர்ஆன் வசனங்களிற் சிலதை ஓதி, ஒரு நபீ அல்லது ஒரு வலீ அல்லது ஒரு நல்ல மனிதனைப் புகழ்ந்து அவரின் பிறப்பு இறப்பு பற்றிக் கூறி அவரின் வாழ்விலும், அவர் மறைந்த பின்னும் அவரால் வெளியான அற்புதங்களைக் கூறி, அவரின் உயர் குணங்களையும் விஷேட தன்மைகளையும் எடுத்தோதி, அவர் சொன்ன பேச்சுகள் தத்துவங்களைப் பேசி, அல்லது பாடி, அங்கு கூடும் மக்களுக்கு சாப்பாடு பழவகை விநியோகம் செய்து, சிறுவர்களுக்கும் மேலும் மார்க்க அறிஞர்களுக்கும் அன்பளிப்புகள் வழங்கி அவர்களை கௌரவித்தல் இவ்வாறு செய்தலே முஸ்லிம்களிடம் மௌலித் ஓதுதல் என்று சுருக்கமாக சொல்லப்படுகிறது.


​​

♣ அவைகளை ஐந்து அம்சங்களாகச் சுருக்கி ஆராய்ந்து பார்க்கலாம்.

1) முதலாவது அம்சம்

மனிதர்கள் ஓர் இடத்தில் ஒன்று கூடுதல்

மனிதர்கள் ஓர் இடத்தில் ஒன்று கூடுவதால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. அவற்றில் ஒருவருக்கொருவர் சந்தித்து ஸலாம் சொல்லிக் கொள்ளுதல், சுகம் விசாரித்தல் இப்படி பல நன்மைகள் உள்ளன இதனை மார்க்கம் தடுக்கின்றதா?

2) இரண்டாவது அம்சம்

திர்குர்ஆன் ஓதுதல்.

சில திருவசனங்களை ஓதிய பின் மௌலித் ஆரம்பிக்கப்படும்.

திருக்குர்ஆன் ஓதுவது ஷரீஅத்துக்கு முரணானதென்று எந்த ஒரு பைத்தியக்காரன் கூடச் சொல்லமாட்டார்கள்.

3) மூன்றாவது அம்சம்

நபிமார்கள், ஷூஹதாக்கள், வலிமார்கள், நல்லடியார்கள் அவர்களின் வாழ்க்கை வரலாற்றுச் செய்திகளை கவி மூலம் மக்கள் மத்தியில் கூறி புகழ்வதாகும். இவைகளை ஆதாரங்கள் கூறி விரிவாக விளக்கம் கூறத் தேவையில்லை.

♦  (நிச்சயமாக) நபிமார்களின் சரித்திரங்களில் அறிவுடையோருக்கு (நல்ல) படிப்பினை இருக்கிறது. (அல்குர்ஆன் : 12:111)

♦ நிச்சயமாக அல்லாஹுதஆலா உம் இதயத்தைத் திடப்படுத்துவதற்காகவே ரஸுல்மார்களின் சரித்திரங்களில் இருந்து ஒவ்வொன்றாக நாம் உமக்குக் கூறுகிறோம். இவைகளில் உண்மையும், நல்லுபதேசமும் விசுவாசிகளுக்கு நினைவூட்டலும் இருக்கின்றன. (ஸுரத்து ஹுத் 121)

♦நபிமார்களை நினைவு கூர்வது வணக்கமாகும், ஸாலிஹீன்களை நினைவு கூர்தல் பாவப்பரிகாரமாகும். என்று கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

நூல்: அல்ஜாமிவுஸ்ஸகீர் 4331

♦ உங்களில் இறந்தவர்களின் நல்ல அம்சங்களை எடுத்துக் கூறுங்கள்.

​ 

நூல்கள் : அபூதாவூத் 4900, திர்மிதீ 1019, மிஷ்காத் 1678

♦அல்லாஹ் குர்ஆனில் நபிமார்கள், வலிமார்கள், ஷுஹதாக்களைப் புகழவில்லையா? குர்ஆனில் பல இடங்களில் 25 நபிமார்களின் வாழ்க்கை வரலாறுகளை கூறி இறைவன் புகழவில்லையா? குகை வாசிகள் என்று சொல்லப்படும் இறைநேசர்களைப் பற்றி குர்ஆனில் கூறவில்லையா? எனவே ஒருவரை புகழலாம், அவரின் வாழ்க்கை வரலாறுகளை குணங்களை எடுத்துரைக்கலாம் என்று குர்ஆன், ஹதீஸ் விளக்குகின்றது.

♦ அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அல்லாஹ் புகழ்கிறான் 'மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்'. (அல்குர்ஆன்: 68:4) நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம். (அல்குர்ஆன் : 94:4) மேலும் பார்க்க(சூரத்துல் லுஹா 4, அல் அஹ்ஸாப் 56, இன்னும் பல வசனங்கள் உள்ளன)


​​

♣ கண்மணி நாயகம் ﷺ அவர்கள் பாடிய (மௌலித்) கவி வரிகள்

♦ அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள்: இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் (அகழ்ப்போரின் போது) அகழ் (வெட்டும் பணி நடக்கும் இடத்தை) நோக்கிப் புறப்பட்டார்கள். அப்போது முஹாஜிர்களும் அன்சாரிகளும் (கடும்) குளிரான காலை நேரத்தில் (அகழ்) தோண்டிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பணியை அவர்களுக்காகச் செய்திட அவர்களிடம் அடிமை (ஊழியர்)கள் இல்லை. அவர்களுக்கு ஏற்பட்டிருந்த களைப்பையும் பசியையும் கண்டபோது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், “இறைவா! (நிலையான) வாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கை தான். எனவே, அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் நீ மன்னிப்பளி” என்று (பாடிய வண்ணம்) கூறினார்கள். இதைக் கேட்ட நபித் தோழர்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு பதிலளித்தவண்ணம், “நாங்கள் வாழும் காலமெல்லாம் இறைவழியில் அறப்போர் புரிந்து கொண்டிருப்போம்” என்று முஹம்மத்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் உறுதிமொழி தந்துள்ளோம்” என்று (பாடியபடி) கூறினார்கள்.


​​நூல்: புகாரி 2834

♦ ஜுன்தப் இப்னு சுப்ஹான (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள் : இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் போர் ஒன்றில் பங்கு கொண்டபோது அவர்களின் விரலில் (காயம் ஏற்பட்டு) ரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது. அப்போது அவர்கள், “நீ இரத்தம் சொட்டுகிற ஒரு விரல் தானே? நீ அடைந்த (பழு)தெல்லாம் இறைவழியில் தானே!” என்று (ஈரடிச் சீர் பாடல் (கவி) போன்ற வடிவில்) கூறினார்கள்.

நூல்: புகாரி 2802

♦அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்:திடமாக எனக்கு பல பெயர்கள் உள்ளன, நான் "முஹம்மத்" (புகழபடுபவன்) , நான் "அஹ்மத்" (அல்லாஹ்வினால் அதிகம் புகழபட்டவன்), நான் "மாஹி" (குப்'ரை அழிப்பவன்). நான் "ஹாஷிர்" (எனக்கு பின்னால் என் வழி தொடரும் சமுதாயம் கொண்ட இருப்பவன்), நான் "ஆகிப்" (எனக்கு பின்னால் எந்த நபியும் இல்லாது இருப்பவன்).


​​ஹழ்ரத் ஜுபைர் பின் முத்'இம் ரழியல்லாஹு அன்ஹு

​நூல்கள்: புகாரி, முஸ்லிம் - 2849, திர்மிதி, அஹ்மத்

♦ மேலும் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் (மௌலித்) பாடிய கவி வரிகளை பார்க்க.


​​புகாரி 3906, 4104, 4100, 2835, 2802, 6146 முஸ்லிம் 1803, 1805, 1796 மிஷ்காத் 4792, 4793, 4788


​​

♣  நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களைப் புகழ்து ஸஹாபாக்கள் (மௌலித்) கவி பாடியத்திக்குறிய ஆதாரங்கள். ஹழ்ரத் ஹஸ்ஸான் இப்னு ஃதாபித் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் பாடிய (மௌலித்) கவி வரிகள்.

♦இறைமறுப்பாளர்களே! முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை குறைவுபடுத்தி நீங்கள் கவிபாடுகிறீர்கள். அதற்கு பதிலாக அவர்களை நான் புகழ்ந்து பாடுவேன். அதற்குரிய நற்கூலி இறைவனிடமுண்டு. நல்லவராகவும் நேரிய வழியில் உள்ளவராகவும் இருக்கிற இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை குறைவுபடுத்தி பேசுகிறீர்கள். வாக்குறுதியை நிறைவேற்றுவது அவர்களின் அழகிய குணமாகும். அவர்கள் விஷயத்தில் இறைவன் கூறினான்: சத்தியத்தைக் கூறுகிற ஒர் அடியாரை திருத்தூதராக அனுப்பியுள்ளேன் அதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா)

​நூல் முஸ்லிம் - 4545

♦ ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் பாடிய (மௌலித்) கவி வரிகள்.

எங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார்கள். வைகறைப்பொழுது புலரும் நேரத்தில் அவர்கள் இறைவேதத்தை ஓதுகிறார்கள்

குருட்டுத் தன்மையில் இருந்த எங்களுக்கு நேர்வழி காட்டினார்கள். அவர்கள் கூறியது நிச்சயம் நிகழும் என எங்கள் உள்ளங்கள் உறுதியாக நம்புகின்றன. இரவில் இணைவைப்பாளர்கள் படுக்கையில் ஆழ்ந்து கிடக்கும் போது நபியவர்கள் படுக்கையிலிருந்து எழுந்து தொழுவார்கள்.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு

​நூல்: புகாரி - 1087, 6151, 1155

♦ ஹழ்ரத் கஃப் இப்னு ஜுஹைர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் பாடிய (மௌலித்) கவி வரிகள்.

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்களென எனக்கு தெரிவிக்கப்பட்டது. மன்னிப்பு என்பது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே. மன்னிப்புத் தேடியவனாக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நான் வந்தேன். அம்மன்னிப்பு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒப்புக் கொள்ளப்பட்டது. திண்ணமாக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒளி கொடுக்கும் பேரொளியாகவும், இறைவனின் வாட்களில் உருவிய வாளாகவும் உள்ளார்கள்.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் ஆஸிம் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு

​நூல் ஹாகிம் - 6558


​​

நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களின் மறைவின் பின் ஸஹாபாக்கள் பெருமானார் ﷺ அவர்களைப் புகழ்து (மௌலித்) கவி பாடியதற்குறிய ஆதாரங்கள்:

♦ ஸயீத் இப்னு முஸய்யப் (ரஹ்மதுல்லஹி அலைஹி) அறிவித்தார்கள் மஸ்ஜிதுந் நபவீயில் (நபித் தோழரும் கவிஞருமான) ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரலியல்லாஹு அன்ஹு) கவிபாடிக் கொண்டிருக்க, உமர்(ரலியல்லாஹு அன்ஹு) அங்கு வந்தார்கள். (ஹஸ்ஸான் (ரலியல்லாஹு அன்ஹு) பள்ளிவாசலில் கவிபாடுவதை உமர் (ரலியல்லாஹு அன்ஹு) கண்டித்தார்கள்) ஹஸ்ஸான் (ரலியல்லாஹு அன்ஹு), “நான் இந்தப் பள்ளிவாசலில் உங்களை விடச் சிறந்தவர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்) இருக்கும் போதே கவிபாடிக் கொண்டிருந்தேன்” என்று கூறிவிட்டு, அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) பக்கம் திரும்பி, “அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் கேட்கிறேன். (என்னிடம்)இறைத்தூதர்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், “(ஹஸ்ஸானே!) என் சார்பாக (எதிரிகளின் வசைக் கவிகளுக்கு) நீங்கள் (கவிகளாலேயே) பதிலளியுங்கள். இறைவா! ஹஸ்ஸானுக்கு ரூஹுல் குதுஸ்(தூய ஆத்மா வானவர் ஜிப்ரீல் அவர்களின்) மூலம் துணை புரிவாயாக!” என்று கூறியதை நீங்கள் செவியுற்றிருக்கிறீர்களா? “ என்று கேட்டார்கள். அதற்கு அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு), “ஆம் (செவியுற்றிருக்கிறேன்)” என்று பதிலளித்தார்கள்.


​​நூல்: புகாரி 3212


​​

♣ பள்ளிவாசலில் கவி (மௌலித்) பாடுவதற்காக ஆதாரம்

கஃபு இப்னு ஜீஹைர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பள்ளிவாசலில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் புகழ்து கவி பாடினார்கள்.


​​அறிவிப்பாளர்:  இப்னு ஜத்ஆன் ரலியல்லாஹு அன்ஹு

​நூல்: ஹாகிம் 6555, மேலும் பார்க்க புகாரி 3212


​​

♣ வீடுகளில் கவி (மௌலித்) பாடுவதற்காக ஆதாரம்

மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது ஒரு முறை நான் ஆயிஷா நாயகியிடம் சென்றேன் அப்போது அவர்களுக்கு அருகில் ஹஸ்ஸான் பின் ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இருந்து கவி பாடிக்கொண்டும் தம் பாடல்களால் ஆயிஷா நாயகி அவர்களை பாராட்டிக் கொண்டுமிருந்தார்கள்.

​ 

நூல்: முஸ்லிம் 1901


​​

♣ திருமண வீட்டில் கவி (மௌலித் பாடுவதற்காக ஆதாரம்

ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அறிவித்தார் நான் ஒரு பெண்ணை அன்சாரிகளில் ஒருவ(ருக்கு மணமுடித்து வைத்து அவளை அவ)ரிடம் அனுப்பிவைத்தேன். அப்போது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், “ஆயிஷாவே! உங்களுடன் பாடல் (பாடும் சிறுமியர்) இல்லையா? ஏனெனில், அன்சாரிகளுக்குப் பாடலென்றால் மிகவும் பிடிக்குமே““ என்றார்கள்.


​​நூல்: புகாரி 5162


​​

♣ பல தடவைகள் கவி (மௌலித்) பாடுவதற்காக ஆதாரம்

ஷரீத் பின் சுவைத் அஸ்ஸகஃபீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது: ஒரு நாள் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களது வாகனத்தில்) அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள், ”உமய்யா பின் அபிஸ்ஸல்த்தின் கவிதைகளில் ஏதேனும் உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். நான் ”ஆம் (தெரியும்)” என்றேன். ”பாடு” என்றார்கள். உடனே நான் ஒரு பாடலைப் பாடினேன். ”இன்னும் பாடு” என்றார்கள். பிறகு இன்னொரு பாடலைப் பாடினேன். ”இன்னும் பாடு”என்றார்கள். இவ்வாறே அல்லாஹ்வின் தூதருக்காக நூறு பாடல்களைப் பாடிக்காட்டினேன்.

(மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன) மேலும் ”உமய்யா பின் அபிஸ்ஸல்த் இஸ்லாத்தைத் தழுவும் அளவுக்கு வந்துவிட்டார்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறியதாகக் கூடுதலாக இடம் பெற்றுள்ளது. அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ (ரஹ்மதுல்லஹி அலைஹி) அவர்களது அறிவிப்பில், ”அவர் தமது கவிதையி(ன் கருத்துகளா)ல் இஸ்லாத்தைத் தழுவும் அளவுக்கு வந்துவிட்டார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாகக் காணப்படுகிறது.


​​நூல்கள்: முஸ்லிம் 4540, 2255, இப்னு மாஜா 3758, மிஷ்காத் 4787


​​

♣ கண்மணி நாயகம் ﷺ அவர்களைப் புகழ்து கவி (மௌலித்) பாடினால் மலக்குமார்களின் பாதுகாப்பு கிடைக்கும் என்பதற்குறிய ஆதாரம்

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஸ்ஸான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு சொன்னார்கள் நீங்கள் அல்லாஹ்விற்றாகவும் அல்லாஹ்வின் தூதருக்காகவும் கவி மூலம் (புகழ்) பாடும் காலமெல்லாம் பரிசுத்த ஆன்மாவான ஜிப்யீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் உங்களைப் பலப்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.


​​அறிவிப்பாளர்: ஹழ்ரத் ஆயிஷா ரலியல்லாஹுஅன்ஹா

நூல்: முஸ்லிம் 4545


​​

♣ கூட்டமாக சேர்ந்து கவி (மௌலித்) பாடுவதற்கான ஆதாரம்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மதீனாவிற்கு வந்த போது பெண்களும் சிறுவர்களும் குழந்தைகளுக்கு (கூட்டம் கூட்டமாக நின்று) பின்வரும் பாடலைப் பாடினார்கள். ” ”தலஅல் பத்ரு அலைனா மின் தனிய்யாதில் வதாயீ வஜபஷ்ஷுக்ரு அலினா மாதஆ லில்லாஹி தாயீ”


​​நூல்கள்: தலாயிலுன் நுபுவ்வா:2015, புகாரி 5147, இப்னு மாஜா 1897, அபூதாவுத் 4922, மிஷ்காத் 3140


​​

♣ மேடை போட்டு கவி (மௌலித்) பாடுவதற்கான ஆதாரமும், பள்ளியில் பாடுவதற்காக ஆதாரமும்

♦தாஹா நபியின் திருப் புகழ் பாடுவதற்காக ஹஸ்ஸான் இப்னு ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு என்ற கவிஞருக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மஸ்ஜிதுன்னபவியில் மேடை அமைத்துக் கொடுப்பவர்களாக இருந்தார்கள். இறைவா! ஹஸ்ஸான், நபியைப் புகழும் காலமெல்லாம் அவரை பரிசுத்த ஆவியான ஜிப்ரஈல் அலைஹிஸ் ஸலாம் மூலம் வலுப்படுத்துவாயாக என்று பிரார்த்திப்பவர்களாகவும் இருந்தார்கள் என்று உம்முல் முஃமினீன் ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்.


​​நூல்கள்: புகாரி, மிஷ்காத் பக்கம் 410 பாபுல் பயான் வஷ்ஷிஃர்

♦ ஹஸ்ஸான் இப்னு தாபித் (ரலியல்லாஹு அன்ஹு) ‘நபியே நாயகமே! உங்களைப் போன்ற அழகான எந்த ஒரு மனிதரையும் எனது இந்த இரு கண்களும் கண்டதேயில்லை. உங்களைப் போன்ற ஒரு அழகான ஒருவரை எந்தப் பெண்ணும் பெறவுமில்லை எனப் பாடியுள்ளார்கள்.’ கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஹஸ்ஸான் இப்னு தாபித் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு பள்ளியில் மேடை போட்டுக் கொடுத்தார்கள். அம்மேடையில் ஸஹாபி அவர்கள் ஏறிநின்ற வண்ணம் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை புகழ்ந்து பாடுவார்கள்.

இன்னும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை முஷ்ரிகீன்கள் இகழ்வதை தனது பாடல்களினால் முறியடிப்பார்கள். கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஹஸ்ஸான் இப்னு தாபித் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுக்குப் புகழும் காலமெல்லாம் (முஷ்ரிகீன்களின் வசை மொழிகளை தனது பாடலைக்கொண்டு முறியடிக்கும் காலமெல்லாம் ஜிப்ரீல் (அலைஹி ஸ்ஸலாம்) மூலம் ஹஸ்ஸான் இப்னு தாபிதிற்கு உதவி செய்வாயாக! எனப் பிரார்த்தித்தார்கள்.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா)

​நூல்கள் - புகாரி 453, முஸ்லிம் 4545, மிஷ்காத் 


​​

♣ கவி (மௌலித்) பாடினால் நன்மை, கூலி, பயன் கிடைக்கும் என்பதற்குறிய ஆதாரம்

♦ இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள் 'நிச்சயமாகக் கவிதையிலும் ஞானம் (ஹிக்மத்) உண்டு.


​​ஹழ்ரத் உபை இப்னு கஅப் (ரலியல்லாஹு அன்ஹு)

​நூல்: புகாரி 6145

♦ ஒரு சமயம் ஹஸ்ஸான் இப்னு ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இறைமறுப்பாளர்களே! முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களைக் குறைவுப்படுத்தி கவி பாடுகிறீர்கள். அதற்கு பதிலாக அன்னவர்களை நான் புகழ்ந்து பாடுவேன். அதற்குரிய நற்கூலி இறைவனிடம் உண்டு. ஹதீஸ் தொடர் நீண்டுசெல்வதால் சுருக்கிக்கொள்கிறேன். தேவையெனில் பார்க்கவும்.


​​அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா)

​நூல்: முஸ்லிம் 4545

♦ கவி பாடுவதால் கூலி பயன் இல்லையன்றால் ஹஸ்ஸான் இப்னு ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு மஸ்ஜிதில் மேடை அடித்து கொடுத்து பாடச் சொல்லி நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களும் ஸஹாபாக்களும் அமர்ந்து அதைக் கேட்டுக் கொண்டிருந்திருப்பார்களா?

பார்க்க: நூல்கள் அபூதாவூத் 5015, திர்மிதி 2846, மிஷ்காத் 4805

♦ நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் புகழ்களை கவி(மௌலித்) ஓதுவதால் மலக்குமார்களின் பாதுகாப்பு உதவி கிடைக்கும்.


​​நூல்: முஸ்லிம் 4545

♦ நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் "மஹப்பத்" அன்பு கிடைக்கும். இதைத்தான் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: “யாருக்கு என் மீது முஹப்பத் இல்லையோ, அவருக்கு ஈமான் இல்லை.” என்பதாக.மேலும் கூறினார்கள்: “நான் ஒருவனுக்கு அவனுடைய பெற்றோர்கள், பிள்ளைகள் மற்றுமுள்ள மனிதர்கள் அனைவரையும் விட மிகப் பிரியமானவனாக ஆகின்ற வரை அவன் முஃமீனாக முடியாது".


​​நூல்கள்: புகாரி 14,15, முஸ்லிம் 44–69,70, இப்னு மாஜா 67, நஸஈ 50–43, முஸ்னத் அஹ்மத் 3-288, மிஷ்காத் 7

♦ மௌலித் கிதாபுகளில் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் ஸலவாத் நிறைந்து காணப்படுகிறது. எனவே மௌலித் ஓதும் போது கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது அதிகம் ஸலவாத் கூறும் பாக்கியம் கிடைக்கின்றன. கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: என் உம்மத்துகளில் ஒருவர் தூய்மையான உள்ளத்துடன் என்மீது ஒரு ஸலவாத் ஓதினால் அவர் மீது அல்லாஹ் பத்து ஸலவாத் ஓதுகிறான், பத்து அந்தஸ்துகளை உயர்த்துகிறான், பத்து நன்மைகளை எழுதுகிறான், பத்து தீமைகளை அழிக்கிறான்.

நூல்கள்: நசாயி - 65 , பைஹகி - 156 , தப்ரானி - 195 ,196 , பஸ்ஸார்


​​

♣ நபிகள் நாயகம் ﷺ அவர்களைப் புகழ்ந்து கவி (மௌலித்) பாடுபவர்களுக்கு அன்பளிப்புப் வழங்குவதற்குறிய ஆதாரம்

மஸ்ஜிதுன் நபவியில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களும் ஸஹாபா பெருமக்களும் குழுமியிருந்த திருச்சபையில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களை ஸுஆத் என்ற அழகிய மங்கைக்கு ஒப்பிட்டு கஹ்ப் பின் சுஹைர் ரலியல்லாஹு அன்ஹு என்ற ஸஹாபி கவிஞர் பாடிய போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் மகிழ்ச்சியால் தனது மேனியில் இருந்த போர்வையை எடுத்து அந்த ஸஹாபியின் மேல் போர்த்தி அத்துடன் 100 ஓட்டகைகளையும் அன்பளிப்பாக வழங்கி கௌரவித்தார்கள்.


​​நூல்கள்: ஹாகிம் - 3-578, ரத்துள் முஹ்தார் - 1-47, அகீததுஸ் சுன்னா 318


​​

♣ நபிகள் நாயகம் ﷺ அவர்களை ஏன் புகழ்ந்து கவி (மௌலித்) ஏன் ஓதவேண்டும்?

மேலும், உம்முடைய இறைவனின் அருட்கொடையைப் பற்றி (பிறருக்கு) அறிவித்துக் கொண்டிருப்பீராக.(அல்குர்ஆன் : 93:11)

எனவே இறைவன் நமக்கு தந்த மாபெரும் அருட்கொடை ரஹ்மத் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் என்பதை அல்லாஹ் குர்ஆனில் தெளிவாக கூறியுள்ளான் அந்த அடிப்படையில் அந்த அருட்கொடை இவ்வுலகிற்க்கு ரபிஉல் அவ்வல் மாதம் கிடைத்த காரணத்தினால்தான் இறைவன் வழங்கிய அருட்கொடை, ரஹ்மத்தான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புகழ்களை கவி மூலம் ஸஹாபாக்கள் காட்டிய அழகிய முன்மாதிரிகளை மனதில் கொண்டு மேலே கூறப்பட்ட குர்ஆன் வசனத்தின் பிரகாரம் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் சிறப்புகளை மக்களிடம். கவி எனும் (மௌலித்) மூலம் புகழ்து பாடி சொல்லி காட்டுகிறோம்.

4)நான்காவது அம்சம்

மனிதர்களுக்கு சாப்பாடு, இனிப்பு பண்டங்கள் வழங்குதல்.

♦ மனிதர்களுக்கு சாப்பாடு வழங்குவது ஷரீஅத்தில் ஆகுமாக்கப்பட்டதா? இல்லையா? என்று ஆராய்ந்தறியத் தேவையில்லை. ஏனெனில் இறைவன் சொல்கிறான் ஏழைகளுக்கு உணவு வழங்குங்கள் என்று ஆகையால் உணவு வழங்குவது நல்ல அமல் என்றே இஸ்லாம் சொல்கிறது.

♦ தர்மம் கழாவில் (விதியில்) உள்ள தீயதைத் தட்டும்.


​​அறிவிப்பவர் : ஹழ்ரத் ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு

​நூல்கள்: இப்னு அஸாகிர், தஹ்தீப் தாரீக் திமஷ்க், பாகம் - 05, பக்கம் 16809

♦உணவளித்தல், ஸலாம் கூறல், மக்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போது இரவில் தொழுதல், இவை பாவத்தை அழிக்கக்கூடிய கப்பாறாவாகும்.


​​அறிவிப்பவர் : அபூஹுறைறா ரழியல்லாஹு அன்ஹு.

​நூல் : ஹாகீம், முஸ்தத்றக், பாகம் - 04, பக்கம் - 12920

5) ஜந்தாவது அம்சம்

மௌலித் மஜ்லிஸில் கலந்து கொள்ளும் சிறுவர்களுக்கு மார்க்க அறிஞர்களுக்கு அன்பளிப்புகள் வழங்குதல். 

இந்த அம்சமும் நாலாவது அம்சம் போல் இஸ்லாம் மார்க்கம் வரவேற்கும் நல்ல காரியமாகும் இது ஷரீஅத்துக்கு முரணானதென்று யாரும் சொல்லமாட்டார்கள். எனவே மௌலித் ஓதும் போது செய்யப்படும் ஐந்து அம்சங்களும் இஸ்லாம் அனுமதித்த நன்மை தரக்கூடிய விடங்கள் என்று தெளிவாக விளங்குகின்றது.

ஆகையால் மௌலித் ஓதுதல் என்பது எந்தவகையிலும் இஸ்லாமிய ஷரீஅத்துக்கு முரணானதல்ல என்பதை நாம் தெளிவான புரிந்து கொள்ளவேண்டும்.