MAIL OF ISLAM

Knowledge & Wisdom



முஹர்ரம் மாதத்தின் சிறப்புகள்


எழுதியவர்: மௌலவி  S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.


மலர இருக்கும் இஸ்லாமிய புது வருடமாகிய புனித முஹர்ரம் மாதத்தின் சிறப்புக்களும், இம்மாதத்தில் பேணவேண்டிய சில ஒழுங்கு முறைகளும்.

♣ இஸ்லாம் கூறும் புனிதமான முஹர்ரம் மாதம்

இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே! நல்லமல்கள் செய்து அதிகமான நன்மைகளை அடைந்து கொள்வதற்காக அல்லாஹ் பெறுமதி வாய்ந்த சில காலங்களை நமக்கு தந்திருக்கின்றான்.அக்காலங்களில் நாம் அதிக நல்லமல்களைச் செய்து அதிக நன்மைகளைத் தேடிக் கொள்கின்றோம்.

அந்த அடிப்படையில் கால நேரங்களையும் மனிதர்களையும் படைத்த அல்லாஹ், அவற்றில் தான் விரும்பியதை சிறப்பாக்கியும் வைத்திருக்கிறான். அந்த வகையில் மனித இனத்தில் நபிமார்களை அவர்களில் சிறப்பாக்கி வைத்திருப்பதுடன் 'உலுல் அஸ்ம்' என்று அந்த றசூல்மார்களில் குறிப்பிடத்தக்க ஒரு சிலரைத் தெரிவு செய்து அவர்களில் மிக மிகச் சிறப்பான நபியாக றசூலாக அடியானாக அண்ணலார் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அல்லாஹ் தேர்வு செய்தான்.

இவ்வாறே இடங்களைப் படைத்த அல்லாஹ் மக்கா முகர்ரமா. மதீனா முனவ்வரா, பைத்துல் முகத்திஸ் ஆகிய இடங்களை ஏனைய சகல இடங்களை விடவும் கண்ணியப்படுத்தி வைத்தான். இது போல இறைவன் உலகத்தை படைத்து மனிதர்களுக்கு காலங்களை கணித்துக் கொள்வதற்காக பன்னிரண்டு மாதங்களாக ஆக்கினான். அந்த வகையில் கால நேரங்களைப் படைத்த அல்லாஹ் வெள்ளிக்கிழமையை நாட்களின் தலைவனாகவும் மாதங்களில் முஹர்ரம், துல் கஃதா, துல் ஹிஜ்ஜா, ரஜப், ஆகிய நான்கு மாதங்களை அல்லாஹ் சிறப்பாக்கியும், சில நாட்களை சிலதை விட்டும், சில நேரங்களை சிலதை விட்டும் வணக்க வழிபாடுகள் மூலம் சிறப்பாக்கினான். இதன் மூலம் மனிதன் அதிகம் நற்செயல்கள் செய்ய வேண்டும் என்பதும் அவனது அந்தஸ்து நற்செயல்களால் உயர்த்தப்பட வேண்டும் என்பதும் ஒரே நோக்காகும்.

♦ நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும், அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை இது தான் நேரான மார்க்கமாகும், ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள், இணை வைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.(அல்குர்ஆன் : 9:36)

♦ காலம் அதன் சுழற்சிக்கேற்ப சுழன்றுகொண்டே இருக்கிறது. வானங்கள் பூமி படைக்கப்பட்ட நாள் முதலே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். அதில் நான்கு மாதங்கள் புனிதமானதாகும். மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக வருபவை: துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரமாகும். ரஜப் முழர் என்பது ஜுமாதா (ஜமாதுஸ்ஸானி), ஷஃபான் ஆகிய இரண்டுக்கும் மத்தியிலுள்ளதாகும்' என நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.


​​நூல்: புகாரி - 3197, 4406, 4662, 5550, முஸ்லிம்

♦ வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளிலிருந்து இந்த நான்கு மாதங்களும் கண்ணியமாக்கப்பட்டிருந்த காரணத்தினால்தான் நபிகள் நாயகம் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பிற்கு முன்பிருந்த காலத்து மக்களிடத்திலும் இந்த மாதங்கள் சிறப்பானதாகக் கருதப்பட்டு வந்திருக்கிறது.

இன்னும் இந்த மாதங்களில் உங்களுக்கு நீங்களே அநியாயம் செய்து கொள்ளாதீர்கள் என்றும் அல்லாஹ் உத்தரவிட்டிருக்கிறான். அதனால்தான் கண்ணியமிக்க இந்த மாதங்களில் புரியப்படும் நல்லமல்களுக்கு அதிகபட்ச நற்கூலியும், பாவச் செயல்களில் ஈடுபடுவோர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும். கடும் குற்றச் செயல்களாகக் கருதப்படும் என ஸெய்யிதுனா இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அறிவித்திருக்கிறார்கள்.

மேற்குறிப்பிடப்பட்ட ஆதாரங்கள் புனிதமான மாதங்கள் நான்கு என்பதனை தெளிவு படுத்துகின்றது. அவை: துல் கஃதா, துல் ஹிஜ்ஜா, முஹர்ரம், ரஜப் எனப்படும் மாதங்களாகும். இம்மாதங்களுக்கு இருக்கக்கூடிய புனிதத்துவத்தை நாம் பாதுகாக்க வேண்டும். இம்மாதங்களில் பேணவேண்டிய சில ஒழுங்கு முறைகளை இஸ்லாம் நமக்கு தெளிவுபடுத்தி தருகின்றது.

'ஹுரும்' என்ற அரபுச்சொல் தடுக்கப்பட்டவை, புனிதம் என்ற பொருள்களை உள்ளடக்கி இருக்கின்றன. அல்லாஹ் புனிதமாக்கிய மாதங்களில் ஒன்று முஹர்ரம் மாதமாகும். அதனை நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நமக்கு அறிவித்துள்ளார்கள். அல்லாஹ் புனிதப்படுத்தியதைப் பேணுவது நம் கடமையாகும். மேலும் அல்லாஹ் கூறுகின்றான் ''அதில் உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள் '' (அல்குர்ஆன் 9:36).

புனிதம் மிக்க மஸ்ஜிதுல் ஹராமில் குற்றமிழைப்பது எவ்வளவு குற்றமோ அது போன்றே புனிதம் மிக்க மாதங்களில் தவறிழைப்பதும் பெரும் குற்றமாகும். எனவே மற்ற மாதங்களைக் காட்டிலும் அதிகமாகப் புனிதம் மிக்க மாதங்களைப் பேணுதல் அவசியம் ஆகும்.


​​

♣ புனிதமான முஹர்ரம் மாதத்தின் சிறப்புகள்

இம்முஹர்ரம் மாதம் அல்லாஹ்வின் மாதம் என எம்பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களால் புகழ்ந்துரைக்கப்பட்ட சிறப்புமிகு மாதம் ஆகும். அந்த வகையில் முஹர்ரம் மாதத்திற்கென்று பல்வேறு தனிச்சிறப்புக்கள் உள்ளன. அவற்றில் தலையாயவை இரண்டாகும்.

01) முதலாவது :- இஸ்லாமிய புது வருடம்

இம்மாதம் இஸ்லாமிய வருடப்பிறப்பின் (புது வருடம்) ஆரம்ப மாதமாகும். இந்த மாதத்தில் தமது சண்டை சச்சரவுகளை விலக்கி வைத்திருப்பதால் தான் விலக்கப்பட்டது என்ற பொருள் கொண்ட “முஹர்ரம்” என்ற பெயர் இதற்கு ஏற்பட்டது. இவ்விதம் அக்கால அரபிகள் தமது உணர்ச்சிகளையும், வாளையும் உறையுள் போடத்தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் இந்த மாதத்தை ஒரு புனித மாதமாகக் கருதியது தான்,'முஹர்ரம் மாதத்தை 'அல்லாஹ்வின் மாதம்' என நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.


​​

♣ இஸ்லாமிய வருடக் கணிப்பீட்டின் 'முதல் மாதம்' முஹர்ரம் மாதமாகும்.

முஸ்லிம்களின் வருடக் கணிப்பீட்டில் முதல் மாதம் முஹர்ரம் மாதமாகும். உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் தனது ஆட்சிக் காலத்தில் நபித்தோழர்களை ஒன்று சேர்த்து எப்பொழுது முதல் இஸ்லாமிய வருடம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று ஆலோசனை கேட்டார்கள். இதனடிப்படையில் பலரும் பல மாதங்களை குறிப்பிட்டார்கள். இறுதியில் முஸ்லிம்களின் முதல் மாதமாக முஹர்ரம் மாதத்தையும் வருடம் ஆரம்பிப்பது நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுடைய மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்ற நாள் என்றும் முடிவெடுத்தார்கள்.


​​

♣ ஹிஜ்ரி ஆண்டு என்றால் என்ன?

இன்று வழக்கத்திலுள்ள கி.மு, கி.பி. மற்றும் ஹிஜ்ரி ஆண்டுகள் நபிமார்களை மையமாகக் கொண்டே நிர்ணயிக்கப்பட்டுள்ளன. கி.பி என்பது இயேசு கிறித்து (ஹழ்ரத் நபி ஈஸா அலைஹிஸ் ஸலாம்) அவர்களின் பிறப்பை நடுநாயகமாகக் கொண்டு கணிக்கப்பட்டுள்ளது. அதில் கி.மு. கிறித்துவுக்கு முன் உள்ள நிகழ்ச்சிகளையும், கி.பி. கிறித்துவுக்கு பின் உள்ள நிகழ்ச்சிகளையும் இன்றளவும் அறிவித்துக் கொண்டிருக்கிறது. 'ஹிஜ்ரி' ஆண்டு என்பது அண்ணல் பெருமானார் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவை விட்டு மதீனாவுக்குப் பயணித்த 'ஹிஜ்ரத்' பயணத்தை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்பட்டதாகும். ஹிஜ்ரத் என்பதன் கருத்து ஒரு இடத்திலிருந்து பிரிதோர் இடத்திற்குப் பிராணிப்பதாகும். என்றாலும் இஸ்லாமியப் பரிபாஷையின் வரைவிலக்கணப் படுத்துவதாயின் ஹிஜ்ரத் என்பதன் பொருள் இறை மார்க்கத்தைத் தன்னில் முழமையாக எடுத்து நடக்கவும் பிறரை அதன்பால் அழைக்கவும் பாரெங்கும் இறையாட்சியை நிலைநாட்டுவதற்காகவும் நாடு துறந்து செல்வதையே இப்பதம் குறிக்கின்றது.


​​

♣ ஹிஜ்ரீ ஆண்டை தேர்வு செய்யத் தூண்டிய வசனம்.

நபித்தோழர்கள் வருடக் கணக்கை கணக்கிடுவதற்கு ஹிஜ்ரத்தைத் தேர்வு செய்ய திருக்குர்ஆனின் ஒரு வசனம் தூண்டுகோலாக இருந்ததாக சில அறிஞர்கள், இமாம்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்குவதற்குத் தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மை யானவர்களை விரும்புகிறான். (அல்குர்ஆன் 9:108)

இந்த வசனத்தில் ஆரம்ப நாள் என்பது ஹிஜ்ரத்திற்குப் பின்னுள்ள ஆரம்ப நாளையே குறிக்கிறது. இவ்வாறு அல்லாஹ் குறிப்பிட்டுள்ளதால் இதுவே இஸ்லாமிய ஆண்டின் முதல் நாள் என உணர்த்தப்படுகிறது என்று இமாம்கள், அறிஞர்கள் கருதுகின்றனர்.


​​நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஹிஜ்ரத் செய்தது ரபீவுல் அவ்வல் மாதத்தில் தான். ஆனால் வருடத்தை ஹிஜ்ரீ என்று தேர்வு செய்த நபித்தோழர்கள் ஏன் ரபீவுல் அவ்வல் மாதத்தை முதல் மாதமாகத் தேர்வு செய்யவில்லை? என்ற கேள்விக்கு இமாம்கள், அறிஞர்கள் பின்வருமாறு பதிலளிக்கிறார்கள்:

அதாவது புனித மக்காவிலிருந்து மதீனா நகரை நோக்கி இஸ்லாத்தை வேரூன்றச் செய்வதற்காக மேற்கொண்ட ஹிஜ்ரத் பயணத்தை மையமாகக் கொண்டே இஸ்லாமிய கலண்டர் உருவாக்கப்பட்டள்ளது. இஸ்லாமிய வருடக்கணக்கில் முதல் மாதம் முஹர்ரமாகும். எனினும், ஹிஜ்ரத் சம்பவம் “ரபீஉல் அவ்வல்” மாதமே நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆனாலும் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஹிஜ்ரத் செய்தது ரபீவுல் அவ்வல் மாதமாக இருந்தாலும், அவர்கள் மதீனாவுக்கு நாடு துறந்து போக வேண்டும் என்று உறுதி கொண்டது முஹர்ரம் மாதத்தில் தான். எனவே முஹர்ரத்தை முதல் மாதமாகத் தேர்வு செய்தார்கள்.


​​நூல்: பத்ஹுல் பாரீ, பாகம்:7, பக்கம்: 268


​​

♣ ஹிஜ்ரி ஆண்டின் துவக்கம்

ஹிஜ்ரி ஆண்டு என்பது நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மறைவிற்கு பின் இரண்டாவது ஜனாதிபதியாக பொறுப்பேற்ற உமர் (ரலியல்லாஹு அன்ஹு)அவர்களின் ஆட்சிகாலத்தில் தோற்றுவிக்கப்பட்டது. மக்காவை துறந்து மதீனாவிற்கு வந்த 16-வது ஆண்டு இந்த நிகழ்சி நடைபெற்றது. மைமூன் பின் மஹ்ரான் என்பவர் ஒரு முறை உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் ஒரு மனிதர் தனது தேவையை ஒரு காகிதத்தில் எழுதிக் கொடுக்கின்றார்.


​​அதில் ஷஃபான் என்று மட்டும் எழுதப்பட்டு இருந்தது. உமர் (ரலியல்லாஹு அன்ஹு)அவர்கள் அம்மனிதரிடம் எந்த வருடத்து ஷஃபான்? இந்த வருடமா? அடுத்த வருடமா? என்று வினவினார்கள். பிறகு உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் காலத்தின் கணக்கீட்டின் அவசியத்தை உணந்தவகளாக! மற்ற தோழகளோடு கலந்து ஆலோசிக்கிறாகள், ஸஹாபாக்களின் கருத்து பரிமாற்றத்திற்குப்பின் ஹிஜ்ரத்-ஐ அடிப்படையாக கொண்டு இஸ்லாமிய ஆண்டை அமலுக்கு கொண்டு வந்தார்கள் என அறிவிக்கிறார்கள்.


​​நூல்: அல்பிதாயா-வன்னிஹாயா-பாகம்3-பக்கம்-206,207


​​

♣ ஹிஜ்ரீ ஆண்டை எதனை மையமாக கொண்டு, எவ்வாறு முடிவு எடுக்கப்பட்டது?

ஜனாதிபதி உமர் (ரலியல்லாஹு அன்ஹு)அவர்கள் தோழர்களுடன் ஆலோசனை செய்த போது பல கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த மாதத்தைக்கொண்டு இஸ்லாமிய வருடத்தை புதிதாகக்கணக்கு வைத்துக் கொள்ளலாம் என்றுசிலர் கூறினர்.


​​“இல்லை … இல்லை…பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுக்கு திருமறை குர்ஆன் வேதம் அருளப்பட்ட மாதத்தை வைத்து அவர்கள் நபியாகப் பிரகடனம் செய்யப்பட்ட அந்த மாதத்தை வைத்து புது வருட முறையைக் கையாளலாம்” என்று சிலர் கூறினர், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வுலகத்தை விட்டு பிரிந்த நாள் என்று சிலர், மக்கா வெற்றியையூம் சிலர், “நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வில் ஏற்பட்ட ஒரு தியாக அடிப்படையில் நிகழ்ந்த –மக்காவைத் துறந்து மதினாவுக்குப் பயணமான – ஹிஜ்ரத்தை அடிப்படையாக வைத்து – அந்நாளைக் குறிப்பிட்டுக் கூறும் வகையில் இஸ்லாமியப் புத்தாண்டின் புது வருட பிறப்பை கணக்கில் வைக்கலாம்” என்று அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் தனது கருத்தைக் கூறினார்கள். இதுவே எல்லோராலும் ஏகோபித்து ஏற்றுஅங்கீகரிக்கப்பட்டது.


​​இத்தீர்மானமே அகில உலகம் முழுவதும் பிரகடனப்படுத்தப்பட்டது. ஹிஜ்ரத்துப் பயணத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த ஆண்டு முறைக்கு“ஹிஜ்ரா ஆண்டு” என்றும் பெயர் சூட்டப்பட்டது.

♦ மக்கள், ஸஹாபாக்கள் (ஆண்டுக் கணக்கை) நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட (அவர்களுடைய நபித்துவத்தினை நாற்பதாவது வயதில் பிரகடனப்படுத்தப்பட்டதில்) இருந்து அவர்களுடைய மறைவிலிருந்தோ கணக்கிடவில்லை, மதீனாவுக்கு நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் (ஹிஜ்ரத் செய்து) வந்ததிலிருந்தே கணக்கிட்டார்கள்.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் ஸஹ்ல் பின் ஸஅத் ரலியல்லாஹு அன்ஹு

​நூல்: புகாரி 3934

♦ உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஹிஜ்ரீ 16 அல்லது 17வது ஆண்டில் இந்த ஆண்டு முடிவு செய்யப்பட்டது.


​​நூல்: பத்ஹுல் பாரீ, பாகம்: 7, பக்கம்: 268


​​

♣ ஆங்கில வருட கணிப்பீட்டின் முதல் மாதமான ஜனவரி இஸ்லாமியர்களுடைய புது வருடம் கிடையாது

ஒவ்வொரு ஆண்டும் உலக மக்கள் பலராலும் விமர்சையாகக் கொண்டாடப்படக் கூடிய ஜனவரி ஆங்கிலப் புத்தாண்டு இஸ்லாமியர்களின் புது வருடம் கிடையாது. எனவே முஸ்லிம்களாகிய நாம் எந்த காலண்டரை பின்பற்ற வேண்டும்? என்பது பற்றியும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

உலகில் வாழும் பல்வேறு இன மக்களும் பலவகையான காலண்டர்களைப் பயன்படுத்தி வருகின்றனர். பொதுவாக ஆண்டுகளைக் கணக்கிடும் போது சூரியன் மற்றும் சந்திரன்களை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடுகின்றனர். ஆனாலும் இஸ்லாமியர்கள் சந்திரனின் தோற்றம் மற்றும் மறைவை (பிறை)யை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுவதை ‘ஹிஜ்ரி காலண்டர்’ என்றும் அழைக்கின்றனர்.


​​இந்தக் காலண்டர் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஹிஜ்ரத் செய்ததை ஆரம்பமாக வைத்து அந்த ஆண்டை முதலாவதாக வைத்து துவங்குவதால் ‘ஹிஜ்ரி காலண்டர்’ என்று அழைக்கப்படுகிறது.

தமிழுக்கென்றும், ஆங்கிலேயருக்கும் தனி ஆண்டுக் கணக்கீடு இருப்பதையூம் மாதங்களின் பெயர்கள் நாட்களின் எண்ணிக்கையையூம் நாம் அனைவரும் அறிவோம். அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட சத்திய மார்க்கமான இஸ்லாமிய சமூகமான முஸ்லிம் சமுதாயம் தங்களுக்கென்று ஆண்டுக் கணக்கீட்டை ‘ஹிஜ்ரா' விலிருந்து துவங்கியூள்ளது. ஹிஜ்ரா ஆண்டின் முதலாவது மாதம் முஹர்ரம்.

இதர சமுதாயங்கள் கணக்கிடும் ஆங்கில ஆண்டுகளுக்கு அவை தீர்மானிக்கப்பட்டதற்கு பல காரணங்கள் இருக்கலாம். முஸ்லிம்கள் ஹிஜ்ரா ஆண்டை தீர்மானித்ததற்கு காரணம் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்களின் தியாகத்தின் அடையாளமாகும். எனவே இங்கு புதிய ஆண்டை வரவேற்பதில் எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் தியாகங்களை, அஹ்லுல் பைத்துகளின் சிறப்புகள் நினைவூக் கூறப்படும்.

அந்த அடிப்படையில் புனிதமான முஹர்ரம் மாதத்தில் தமது வாழ்வையை ஒழுங்குபடுத்துவோம், ஒரு புது வருடத்தில் நாம் நுழைய இருக்கின்றோம். எமது வாழ்வை திட்டமிடுவதற்கும் ஒழுங்குபடுத்துவதற்குமான ஒரு சந்தர்ப்பம் எமக்கு கிடைத்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தினை நாம் சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வாழ்வின் அனைத்து பகுதிகளையும் தழுவியதாக எமது திட்டமிடல் அமைந்திருக்க வேண்டும்.

♦ ஈமான் சார்ந்த விடயங்கள்:

அல்லாஹ்வுடனான எனது தொடர்பு எப்படியிருந்தது? எதிர்வரும் வருடம் எப்படியிருக்க வேண்டும்? நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை, அஹ்லுல் பைத்துகள் எந்தளவுக்கு நேசிக்க வேண்டும்? அல்குர்ஆன ஓதல் விளங்குதல் மனனமிடல், திக்ர், கடமையான சுன்னத்தான தொழுகைகள் நிறைவேற்றுதல், இஸ்திக்பார் போன்றவற்றையும் எமது திட்டங்களில் உட்படுத்த வேண்டும்.

♦ அறிவு சார்ந்த விடயங்கள்:

நாம் எமது கல்விக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும். பொதுவான அறிவை நாம் பெற்றுக் கொள்வதுடன் துறைசார் நிபுணத்துவத்தையும் தத்தம் துறைகளில் பெற்றுக்கொள்ள முனைய வேண்டும் குறிப்பாக ஷரீஅத், தஸவ்வுப் சார்ந்த அழிவுகளை கற்றுக் கொள்ள வேண்டும். 'நிபுணர்களிடம் (அறிந்தவர்கள்) கேளுங்கள்' (சூரா புர்கான் 59) என்ற அல்குர்ஆன் வசனம் எமக்கு உணர்த்தும் விடயம் மிகத் தெளிவானது.

அத்தோடு குர்ஆன் ஓதுதல், வாசிப்புப் பழக்கத்தையும் நாம் கடைப்பிடிக்க வேண்டும், “நீ உம் புத்தகத்தைப் படித்துப் பார்! இன்று உனக்கு எதிராக உன்னுடைய ஆத்மாவே கணக்கதிகாரியாக இருக்கப் போதும்” (என்று அப்போது நாம் கூறுவோம்), (அல்குர்ஆன் : 17:14), (யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக.(அல்குர்ஆன் : 96:1) நாம் முஸ்லிம்கள் என்றவகையில் இஸ்லாமிய அல்குர்ஆனை அதிகம் ஓதுதல், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இஸ்லாமிய புத்தகங்களை வாசிக்க வேண்டும். மார்க்க விளக்கங்களை பெற்று அறிவு பூர்வமாக வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும்.

♦ உடலாரோக்கியம் சார்ந்த விடயங்கள்

ஆரோக்கியமான உடம்பில்தான் சிறந்த அறிவு காணப்படும் என்று கூறுவார்கள். மேலும் உடல் ஆரோக்கியமாக இருந்தால் மாத்திரமே எம்மால் இஸ்லாத்துக்காக உழைக்க முடியும். இவ்வகையில்தான் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் ஹாரிஸ் இப்னு கல்தா என்ற வைத்தியரிடம் போய் வைத்திய ஆலோசனை பெற்றுக்கொண்டதோடு ஸஃத் இப்னு அபீ வக்காஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களையும் தூண்டினார்கள். வாய்க்கு ருசியான உணவைவிட ஆரோக்கியமான உணவை முற்படுத்துவதுடன் உடம்புக்கு போதுமான அளவு தேக அப்பியாசங்களையும் கொடுக்க வேண்டியுள்ளோம். சுத்தம், சுகாதாரத்தை பேணுவதுடன் போதுமான அளவு ஓய்வையும் உடலுக்கு வழங்க வேண்டியுள்ளோம். உடம்புக்கு நிறைவேற்றவேண்டிய கடமைகளை செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியுள்ளமையை சிந்தித்துணர்வோம்.

♦ பொருளாதாரம் சார்ந்த விடயங்கள்

பொருளாதார வளர்ச்சியை மையமாகக் கொண்டும் எமது எதிர்காலத் திட்டமிடலை அமைத்துக் கொள்ள வேண்டும். 'நல்ல ஹலாலான பணம் நல்ல ஒருவனிடம் இருப்பது எத்துனை சிறந்தது'(நூல் அஹ்மத்) என்று பொருளாதார மேம்பாட்டை நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தூண்டினார்கள். அத்தோடு செல்வம் முஸ்லிமின் கரங்களில் இருக்க வேண்டும். நாம் செல்வத்தை வெற்றிகொள்ள வேண்டும். செல்வம் எங்களை வெற்றிகொண்டு ஆட்டிப்படைக்கும் விதமாக உள்ளத்தில் முதன்மை இடத்தை அதற்கு வழங்க கூடாது. சிறுவர்களுக்கு சேமிப்பையும் வளர்ந்தோருக்கு முதலீட்டையும் பழக்க வேண்டும்.

♦ தொழில் சார்ந்த விடயங்கள்

எமது தொழிலை நாம் மேம்படுத்திக்கொள்ள வேண்டும். தாவூத் (அலைஹி வஸல்லம்) அவர்கள் தமது கரங்களால் உழைத்து சாப்பிட்டார்கள் (நூல் புகாரி). அவர்கள் ஒரு மன்னராக இருந்தும் உழைத்துண்டார்கள் சுரண்டவில்லை என்பது சிந்திக்கவேண்டிய விடயமாகும். அனைத்து நபிமார்களும் தொழில் செய்து தமது வாழ்வை முன்னெடுத்துள்ளனர். ஒரு வாட்டசாட்டமான மனிதனை கண்ணுற்ற போது இவர் ஜிஹாதில் இருந்தால் எத்துனை சிறப்பாயிருக்கும் என்று சஹாபாக்கள் கூறியபோது 'அவர் தனது பிள்ளைகளுக்காக, பெற்றோருக்;காக, தனக்காக உழைத்தால் அவர் இறை பாதையில் இருக்கிறார். ஆனால் அவர் பெருமைக்காக உழைத்தால் ஷைத்தானுடைய பாதையில் இருக்கிறார்.'என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.(நூல் தபரானி)

♦ குடும்ப வாழ்வு சார்ந்த விடயங்கள்

அறிவு, ஆன்மீக ரீதியாக தனது மனைவி, பிள்ளைகளையும் முன்னேற்றும் விதமாக சிந்திக்க வேண்டும். இப்பொறுப்பு தொடர்பில் அல்லாஹ் எம்மை விசாரிப்பான் என்பதனை நினைவிலெடுக்க வேண்டும். எம்மையும் எமது குடும்பத்தையும் நரகநெருப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும். பிள்ளைகளைகளின் இயல்பறிந்து சிறப்பாக வளர்த்தெடுக்க வேண்டும். அன்பும் அரவனைப்புமுள்ள இடமாக அவ்விடத்தை மாற்ற வேண்டும். உறவுகளை பேணிக்கொள்ள வேண்டும். இது எம்மை சுவனத்துக்கு இட்டுச்செல்லக் கூடிய விடயமாகும்.

♦ சமூகம் சார்ந்த விடயங்கள்

அயலவர்கள், நண்பர்கள், ஊர் விவகாரங்கள், அநாதைகள், ஏழைகள், கூட்டாக ஸகாத்தை நிறைவேற்றல், சமூக ஒற்றுமை பேணல்...போன்ற விடயங்களில் ஈடுபாடு காட்ட வேண்டும். ஒரு முஸ்லிம் அடுத்த முஸ்லிமை பலப்படுத்துகின்றவனாக இருப்பான். கஷ்ட துன்பங்களில் உதவுவான். சமூகத்தை சின்னாபின்னமாக்கி பலவீனப்படுத்த மாட்டான். தனக்கு விரும்புவதை பிறருக்கும் விரும்புவான்.எனவே மலர்ந்துள்ள புத்தாண்டை திட்டமிட்டு பயன்படுத்தி சாதனை படைப்போம். உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு முஹர்ரம் வாழ்த்துக்கள். என்றும் நலமுடன் நன்றாக இருக்கட்டும்.

2) இரண்டாவது :- முஹர்ரம் மாதத்தின் நோன்பும் ஆஷூறா நாளின் நோன்பும்

கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:"நோன்புகளில் ரமலானுக்குப் பின் மிகவும் சிறப்பான நோன்பு அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பின் மிகச் சிறப்பான தொழுகை இரவுத் தொழுகையாகும்"(நூல் முஸ்லிம் 2157, 2158 அஹ்மத்)

♦ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் கூறினார்கள்:"முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை அதற்கு முந்தைய ஓராண்டின் பாவத்திற்குப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன்." அறிவிப்பவர் அபூகதாதா ரலியல்லாஹு அன்ஹு (நூல்முஸ்லிம் 1976)

மேலே உள்ள ஹதீஸில் முஹர்ரம் மாதத்தில் நோற்கின்ற சுன்னத்தான உபரியான நோன்புகளுக்கு பல நன்மைகள் உள்ளன என்பதனை “ரமழானுக்கு பின்னர் சிறந்த நோன்பு முஹர்ரம் மாதத்தில் நோற்கும் நோன்பு” என்ற வரிகளின் மூலம் விளங்கக் கிடைக்கின்றது, இதனால் வாராந்திர நோற்கக்கூடிய திங்கள், வியாழன் நோன்புகள், அதே போன்று மாதாந்திரம் நோற்கக்கூடிய 13,14,15 அய்யாமுல் பீழ் (வெள்ளை தினங்கள்), அதேபோன்று அய்யாமுஸ்ஸூத் (கருப்புத்தினங்கள்) 27, 28, 29 நோற்கக்கூடிய நோன்புகளை நோற்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ரமழானுக்குப் பின்னர் சிறந்த நோன்பு என்று சொல்லப்பட்ட சிறப்பைபெற முயலவேண்டும்.

மேலும் ஹதீஸில் இம்மாதத்தை அல்லாஹ்வின் மாதமாக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சிலாகித்துக் குறிப்பிடுகின்றார்கள். மட்டுமல்ல, முஹர்ரம் மாதம் பிறை 9,10 (தாசுஆ) மற்றும் (ஆஷுரா) ஆகிய இரு தினங்களில் அனுசரிக்கப்படும் நோன்புகள் ரமலான் மாத நோன்புகளுக்கு அடுத்தபடியான சிறந்த நோன்புகளாக நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களால் இங்கு அடையாளப் படுத்தப்படுகிறது. எனவே தாசூஆ, ஆஷூரா நோன்பின் சிறப்புகள் மாத்திரம் உள்ளடக்கிய குறிப்புக்கள் தனித் தலைப்பில் கட்டுரை பதிவு செய்யப்பட்டுள்ளது.


​​

♣ முஹர்ரம் மாதத்தில் நடைபெற்ற முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு நிகழ்ச்சிகள்

முஹர்றம் மாதமான இம்மாதம் ஒன்பதாம், பத்தாம் நாட்கள் விஷேடமான நாட்களாயிருப்பதுபோல் இம்மாதத்தில் வேறு சில விஷேட நாட்களும் இருக்கின்றன.

1) இம்மாதத்தின் நான்காம் நாள் நஜ்றான் வாசிகளான நஸாறாக்களுடன் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

2) இம்மாதத்தின் ஏழாம் நாள் நபீ யூனுஸ் பின் மத்தா (அலைஹி வஸல்லம்) அவர்கள் மீனின் வயிற்றிலிருந்து வெளியேறிய நாளாகும்.

3) இம்மாதத்தின் பதினேழாம் நாள் உஹது யுத்தம் நடந்த நாளாகும்.

4) இம்மாதத்தின் பதினேழாம் நாள்தான் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பெரிய தந்தை ஹம்ஸா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஷஹீதாக்கப்பட்டார்கள்.

5) இம்மாதத்தில் ஷஹீதே கர்பலா ‘ஸிப்துர் றசூல்’ இமாம் ஹுஸைன் (ரலியல்லாஹு அன்ஹு) மௌலித் ஓதுதல்.

இஸ்லாமிய வரலாற்றில் ஹிஜ்ரி 61ல் ஈராக்கிலுள்ள “கர்பலா” எனும் இடத்தில் ஹழ்ரத் ஹுஸைன் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அங்கு நடந்த யுத்தத்தில் கொலை செய்யப்பட்டார்கள். இச்சம்பவம் முஹர்ரம் 10ம் நாள் ஆஷூரா தினத்தில் நடைபெற்றதாகும்.

♦ ஆஷுறா தினமும், ஹுசைன் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் ஷஹாததும் ஹிஜ்ரி 61ம் ஆண்டு ஹுசைன் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் (ஷஹாதத்) வீர மரணமடைந்ததாக இஸ்லாமிய வரலாற்று நூல்களில் இமாம்கள் பதிவு செய்துள்ளார்கள். (நூல் : தாரீக் தபரீ-5/400, அல் பிதாயா வந் நிஹாயா-8/215)

அந்த அடிப்படையில் முஹர்ரம் மாதம் நினைவு கூறப்படவேண்டிய ‘ஸிப்துர் றசூல்’ இமாம் ஹூசைன் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பேரர்களில் ஒருவரும் இஸ்லாத்தின் நான்காவது கலீபா அலி இப்னு அபித்தாலிப் கர்றமல்லாஹூ வஜ்ஹஹூ அன்னை பாத்திமா (றழியல்லாஹு அன்ஹா) அவர்களின் அன்புப் புதல்வரும், இமாம் ஹஸன் (றழியல்லாஹு அன்ஹு) அவர்களின் அருமைச் சகோதரருமாகிய இமாம் ஹூசைன் இப்னு அலி இப்னு அபீத்தாலிப் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் புனித முஹர்ரம் மாதத்தில் நினைவு கூறப்படவேண்டியவர்களில் அதிவிசேடமானவர்கள். இவர்கள் ஹிஜ்ரி நாலாம் ஆண்டு ஷஃபான் மாதம் பிறை ஐந்தில் மதீனா முனவ்வராவில் பிறந்தார்கள்.

ஆயினும் இவ்விருவரில் இமாம் ஹுசைன் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் முஹர்ரம் மாதத்தில் நினைவு கூறப்படுவது விசேட அம்சமாகும். இம்மாதத்தில் உலகெங்கிலும் உள்ள சுன்னத் வல் ஜமாஅத் அடிப்படையில் வாழும் மக்கள் அவர்கள் மீது விழா எடுப்பார்கள். அவர்கள் பேரில் மௌலித் ஓதுவார்கள், அவர்கள் பேரில் அன்னதானம் வழங்குவார்கள், அவர்களைக் கொண்டு தங்களின் தேவைகள் நிறைவேற இறைவனிடம் வஸீலஹ் தேடுவார்கள். இவ்வாறு இவர்கள் முஹர்ரம் மாதத்தில் நிறைவு கூறப்படுவதற்கு காரணம், இம்மாதம் 10ம் நாள் அன்றுதான் ஹுசைன் (றழி) அவர்கள் எதிரிகளால் கொலைசெய்யப்பட்டு ஷஹிதானார்கள். எனவேதான் இந்த நாளை மக்கள் நினைவு கூறுகின்றார்கள்.

புனித முஹர்ரம் மாதத்தில் அவர்கள் கொலை செய்யப்பட்ட காரணத்தினால்தான் சுன்னத் வல் ஜமாஅத் அடிப்படையில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் அவர்களை நினைவு கூறுகிறார்கள் அவர்கள் பேரில் முஹர்ரம் பிறை 1- 10 வரைக்கும் மௌலித் ஒதுகின்றார்கள், அவர்கள் பேரில் அன்னதானம் வழங்குகின்றார்கள். இமாம் ஹுசைன் (றழியல்லாஹு அன்ஹு) அவர்களே முன்வைத்து செய்யப்படுகின்ற ஒவ்வொறு காரியமும் சிறப்பாக முடியும் அவர்களை ஒவ்வொறுவரும் நேசிக்கவேண்டும் காரணம் அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

கர்பலா இற்றைக்கு1400 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சோக நிகழ்வு அது. நீதியும் அநீதியும் சத்தியமும் அசத்தியமும் மோதிக் கொண்ட நாள் அது. மனச்சாட்சிகளை உருகவைக்கும் அந்த நிகழ்வுதான் கர்பலா நிகழ்வு. ஹிஜ்ரி 61ம் ஆண்டு அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பேரர் இமாம் ஹுஸைன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சிலரும் பனீ உமையா கூட்டத்தினரால் கர்பலா எனும் பாலைவனத்தில் இதே ஆஷூறா நாளில் ஹிஜ்ரி 60 இல் மிகபரிதாபகரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு ஷஹீதாக்கப்பட்டார்கள்.


​​

♣ வருட துல்ஹஜ் கடைசி நாளில் ஓதும் துஆ

இதை யார் மூன்று முறை ஓதினாரோ அவரைப் பார்த்து ஷைத்தான் சொல்வான், நான் அவனை கெடுக்க ஆண்டு முழுவதும் சிறமப்பட்டேன் அவனோ ஒரு நிமிடத்தில் என் செயலை நாசமாக்கிவிட்டான். என்பதாக

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْم ِوَصَلَّى اللهُ عَلٰي سَيِّدِنَا مُحَمَّدٍ وَ عَلٰي آلِهِ وَاَصْحَابِهِ وَسَلَّمْ. اَللّٰهُمَّ مَا عَمِلْتُ فيِ هذِهِ السَّنَةِ مِمَّا نَهَيْتَنِيْ عَنْهُ فَلَمْ أَتُبْ مِنْهُ؛ وَلَمْ تَرْضَهُ وَلَمْ تَنْسَهُ؛ وَحَلِمْتَ عَليَّ بَعْدَ قُدْرَتِكَ عَلى عُقُوْبَتِيْ؛ وَدَعَوْتَنِيْ إِلَى التَّوْبَةِ بَعْدَ جَزَائيِْ عَلٰي مَعْصِيَتِكَ؛ فَإِنِّيْ أَسْتَغْفِرُكَ فَاغْفِرْ لِيْ؛ وَمَا عَمِلْتُ فِيْهَا مِمَّا تَرْضَاهُ وَوَعَدْتَّنِيْ عَلَيْهِ الثَّوَابَ؛ فَأَسْأَلُكَ اللّٰهُمَّ يَا كَرِيْمُ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ وَأَنْ تَتَقَبَّلَهُ مِنِّيْ؛ وَلَا تَقْطَعْ رَجَائِيْ مِنْكَ يَا كَرِيْمُ؛ وَصَلَّى اللهُ عَلٰي سَيِّدِنَا مُحَمَّدٍ وَ عَلٰي آلِهِ وَاَصْحَابِهِ وَسَلَّمْ.


​​♣ வருட துவக்கம் முஹர்ரம் மாதத்தின் ஆரம்பத்தில் ஓதும் துஆ

யார் இந்த துஆவை மூன்று தடவை ஓதுகிறாரோ அவர் தன் எஞ்சியுள்ள நாளில் என்னை விட்டும் பாதுகாப்பு பெற்று விட்டார் என்று ஷைத்தான் சொல்வான்.

​ 

ஷைத்தானை விட்டும் அவனது கூட்டதாரை விட்டும் இரண்டு வானவர்கள் அவரை பாதுகாப்பார்கள்.

​ 

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ وَصَلَّى اللهُ عَلٰي سَيِّدِنَا مُحَمَّدٍ وَ عَلٰي آلِهِ وَاَصْحَابِهِ وَسَلَّمْ اَللّٰهُمَّ أَنْتَ الْاَبَدِيُّ اْلقَدِيْم ُالْاَ وَّلُ وَعَلىٰ فَضْلِكَ الْعَظِيْمُ؛ وَكَرِيْمُ جُوْدِكَ الْمُعَوِّلُ وَهٰذَا عَامٌ جَدِيْدٌ قَدْ أَقْبَلَ نَسْأَلُكَ الْعِصْمَةَ فِيْهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ وَأَوْلِيَائِهِ وَجُنُوْدِهِ وَأَعْوَانُهُ وَالْعَوْنَ عَلٰي هٰذِهِ النَّفْسِ الْاَمَّارَةِ بِالسُّوْ ءِ وَالْاِشْتِغَالَ بِمَا يُقَرِّبُنِيْ اِلَيْكَ زُلْفٰي يَا ذَا الْجَلَالِ وَالْاِكْرَامِ وَصَلَّى اللهُ عَلٰي سَيِّدِنَا مُحَمَّدٍ وَ عَلٰي آلِهِ وَاَصْحَابِهِ وَسَلَّمْ.