MAIL OF ISLAM

Knowledge & Wisdomநற்குணம் VS துர்க்குணம் ஓர் ஆய்வு 


​எழுதியவர்: மௌலவி  S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.


"இஸ்லாத்தின் பார்வையில் தற்பெருமை, ஆணவம், கர்வம், அகங்காரம், அகம்பாவம், ஆடம்பரம், மமதை கொள்ளும் மனிதர்களின் நிலையும்,  பூமியில் பணிவுடன் நடப்பவர்களின் நிலையும் பற்றி ஓர் ஆய்வு"

♣ பெருமை ஆணவம் கருவம் கொள்வது மனிதர்களுக்கு பீடித்திருக்கும் ஒரு வியாதியாகும்

இன்றைய உலகில் தனது பணத்தாலும், பதவியாலும், பெற்ற படிப்பாலும், பிறந்த குடும்பத்தாலும் பெருமையடிக்கும் பலரை நாம் நமது அன்றாட வாழ்வில் பார்த்து வருகிறோம். இது பலரையும் பீடித்திருக்கும் ஒரு வியாதி என்றால் மிகையில்லை.


​​ஒரு ஏழை தனது மகனின் திருமணத்துக்கு வற்புறுத்தி கூப்பிட்டாலும் அதற்கு செல்லாத சிலர் ஒரு பணக்காரன் அளிக்கும் ஆடம்பர மார்க்கம் அனுமதிக்காத விருந்துகளுக்கு வலிந்து செல்வதை பார்க்கிறோம். அதேபோல் தனக்கு நண்பனாக வருபவன் பணக்காரனாக இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்கும் பலரையும் பார்க்கிறோம். இவை எல்லாம் உலக மக்களின் சாதாரண எதிர்பார்ப்புகளாக உள்ளது. இவை எல்லாம் தவறு என்பதை ஏனோ நன்கு விபரம் அறிந்த பலரும் உணருவதில்லை.

♦ உண்மை முஸ்லிம் பெருமையடித்து மக்களிடமிருந்து முகத்தைத் திருப்பிக் கொள்ள மாட்டார், ஆணவம் கொள்ளமாட்டார். ஏனெனில் அருள்மறையின் வழிகாட்டல் அவரது இதயத்திலும், உயிரிலும் கலந்துள்ளது. இந்த அழியும் உலகில் பெருமையும் ஆணவமும் அகம்பாவமும் கொண்டிருப்பவர் என்றென்றும் நிரந்தரமாக மறுமை நாளில் பெரும் நஷ்டத்தைச் சந்திப்பார். என அல் குர்ஆன்,  ஹதீஸ் எச்சரிக்கை விடுக்கிறது.


​​

♣ பெருமை என்பது இறைவனுக்குறிய தன்மையாகும்

♦ வானங்களிலும், பூமியிலும் உள்ள பெருமைகள் (அனைத்தும் அல்லாஹ்வாகிய) அவனுக்கே உரியது. அவன்தான் (யாவற்றையும்) மிகைத்தவன் நுண்ணறிவு மிக்கவன். (அல்குர்ஆன் 45:37, 59:23)

♦ கண்ணியம் எனது கீழாடையாகும். பெருமை எனது மேலாடையாகும். இவ்விரண்டில் ஏதேனுமொன்றோடு ஒருவன் என்னிடம் தர்க்கம் செய்தால் (போட்டியிட்டால்) அவனை நான் கடுமையாகத் தண்டிப்பேன் என்று அல்லாஹ் எச்சரிப்பதாக, நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் அபூஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு)

நூல்: முஸ்லிம் 2620


​​

♣ பெருமை என்றால் என்ன? என்பதற்கு இஸ்லாம் அழகான இலக்கணத்தை வரையறுத்துள்ளது.

நபி [ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ] அவர்களின் பரிசுத்த வாழ்க்கை வழிமுறைகளை ஆராய்ச்சி செய்யும் உண்மையான முஸ்லிம் பெருமையை மனதிலிருந்து வேரோடு துண்டித்தெறிந்து விடுவார். இது பற்றிய எச்சரிக்கைகளைப் பார்க்கும் போது நிச்சயமாக அவர்கள் திகைத்து விடுவார்கள். நபி [ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்] அவர்கள், பெருமையடிப்பவர்களை கண்டித்தது மட்டுமல்லாமல், அது அணுவளவு உள்ளத்தில் குடிகொண்டாலும் சுவன பாக்கியத்தை இழந்து மறுமையில் மிகப் பெரிய நஷ்டத்திற்குள்ளாகி விடுவார்கள் என எச்சரிக்கையும் செய்துள்ளார்கள்.

♦ இப்னு மஸ்ஊத் (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்கள். எவனுடைய உள்ளத்தில் அணுவளவேனும் பெருமை இருக்கிறதோ, அவன் சுவர்க்கத்தில் நுழைய முடியாது என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் (மக்களை நோக்கி) கூறிய போது, ஒரு மனிதர் யாரசூலுல்லாஹ்! தனது ஆடை மற்றும் காலணிகள் போன்றவை அழகாக இருக்க வேண்டுமென ஒருவர் விரும்புகிறார். அது பெருமை ஆகுமா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், அல்லாஹ் மிகவும் அழகானவன். அழகாக இருப்பதை விரும்பக்கூடியவன். எனவே, இவை பெருமை ஆகாது என்று பதில் கூறிவிட்டு, பெருமை என்றால் என்னவென்று தெரியுமா?  “சத்தியத்தை மறுப்பதும் - மற்றவர்களை இழிவாக எண்ணுவதுமே (பெருமை ஆகும்) என்றும் கூறினார்கள்.

நூல்கள் : முஸ்லிம்-திர்மிதி-அபூதாவூத்


​​

♦ மொத்தத்தில் பெருமையின் இலக்கணம் இரண்டு தான்.

1. சத்தியத்தை ஏற்க மறுப்பது,

2. மற்ற மனிதர்களை இழிவாக எண்ணுவது.

இந்த இரண்டிலிருந்தும்  பெருமையினை சிலர் பலவாரு மக்கள் மத்தியில் வெளிப்படுத்தி அல்லாஹ்வையும் அவனது தூதர் ஹபீப் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் மறுமை நாளையும் மறந்து வாழ்கிறார்கள்


​​

♣ தற்பெருமை, கருவம், ஆணவம் பற்றிய அடையாளங்கள் என்ன?

கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.ஒரு அரபியை விடை அரபியில்லாதவருக்கு எவ்விதச் சிறப்பும் இல்லை; அரபியல்லாதவரை விட அரபியருக்கு எவ்விதச் சிறப்பும் இல்லை. கருப்பரை விட வெள்ளையருக்குச் சிறப்பு இல்லை. வெள்ளையரை விட கருப்பருக்கு எவ்விதச் சிறப்பு இல்லை. அறியாமைக்கால மூட பழக்க வழக்கங்களை என் காலடியில் போட்டு மிதித்து விட்டேன்.


​​நூல்: முஸ்லிம்

பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு கூடாது என்று மார்க்கம் கூறி இருக்கும்போது, குலம், கோத்திரம், சாதி அடிப்படையில் ஒருவர் மற்றவரை இழிவாகக் கருதுவது பெருமை ஆகும். நான் பணக்காரன், நீ ஏழை, நான் ஸையது வம்சம். நீ லெப்பை, நான் உருது, நீ தமிழ் நான் அறிவாளி நீ முட்டாள் என்றெல்லாம் பிறப்பின் அடிப்படையில் மொழியின் அடிப்படையில் இழிவாகக் கருதுவது பெருமை ஆகும்.

தனக்குக் கீழே இருப்பவர்களை ஏளனமாகப் பார்ப்பதும், பேசுவதும், ஆடைகள் விஷயத்தில் கரண்டைக் காலுக்கும் கீழே ஆடை அணிந்து மற்றவர்களைக் கேவலமாகப் பேசுவதும் பெருமையின் அடையாளமே ஆகும். இது போலவே கல்வி கற்றுள்ளோம் என்று எண்ணுபவர், படிப்பறிவு இல்லாதவரை இழிவாக எண்ணுவது, பதவி பொறுப்புக்களைக் கொண்டு பெருமை அடிப்பது மற்றும் தனக்குக் கீழ் நிலையில் உள்ளவர்களை இழிவாக எண்ணுவது அதிகமதிகம் உள்ளது. இவை எல்லாம் பெருமையின் அடையாளமே.

வசதிக் குறைவு உள்ளவன் வசதி உள்ளவன் போல பகட்டுக் காட்டி பெருமை அடிக்கிறான். படிப்பறிவு இல்லாதவன் படித்தவன் போல நடித்து பெருமைப்பட்டுக் கொள்கிறான்.

♦ நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறுகிறார்கள்.மறுமையில் மூவருடன் அல்லாஹ் பேசவும் மாட்டான். பாவங்களை மன்னித்து பரிசுத்தமாக்கவும் மாட்டான். கருணைக் கண்கொண்டு பார்க்கவும் மாட்டான். அவர்கள் யாரெனில்

1. முதுமையில் விபச்சாரம் செய்தவர்.

2. பொய்யுரைக்கும் அரசன்,

3.பெருமை அடிக்கும் ஏழை ஆகியவர்கள் ஆவார்.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் அபூஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு)

​நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸாயீ


​​

♣ பெருமை, ஆணவம், கருவம் என்பது ஒரு அழிவுப் பாதை, நரகத்திற்கு அழைத்துச் சென்று கடும் வேதனையை தரும் நோய் ஆகும்.

அல்லாஹ் கூறுகிறான் :ஆதமுக்குப் பணிந்து சுஜூது செய்யுங்கள் என்று வானவர்களுக்கு நாம் கூறியபோது, அனைவரும் பணிந்து சுஜூது செய்தனர். இப்லீஸைத் தவிர. அவன் விலகிக் கொண்டான்.பெருமை அடித்தான். இன்னும் காஃபிர்களில் ஒருவனாகவும் ஆகிவிட்டான். (அல்குர்ஆன்: 2:34)

இதே கருத்தில் இன்னும் பல வசனங்கள் உள்ளன. அல்குர்ஆனை முழுமையாக உற்று நோக்கினால் இறைக் கட்டளைக்கு எதிராக முதல் புரட்சி ஏற்பட்டதற்கு அடிப்படைக் காரணம் “பெருமை”தான் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.இப்லீஸ் காஃபிராக-ஷைத்தானாக-தீயசக்திகளின் தலைவனாக ஆனதற்குக் காரணம் “பெருமை’ தான். ஷைத்தானுடைய குணமாகிய “பெருமை’ பற்றி ஒவ்வொரு முஸ்லிமும் தெளிவான முறையில் விளங்கி வைத்திருக்க வேண்டும். ஆனால்….பெருமை என்றால் என்ன? என்னென்ன செயல்கள் பெருமையில் கொண்டுபோய்ச் சேர்க்கும்? பெருமையின் விளைவுகள் என்ன? என்பது பற்றி எல்லாம் தெளிவான கண்ணோட்டம் நம்மிடத்தில் இல்லை. எனவே பெருமை பற்றி மார்க்கம் இடும் கட்டளைகளைப் பார்ப்போம்.

♦ கர்வம் கொண்டு தற்பெருமை அடிப்பவர்களையும் மக்களிடம் தங்கள் முகத்தை சுருக்கிக் கொள்பவர்களையும் பூமியில் அகந்தையுடன் நடந்து செல்பவர்களையும் அல்லாஹ் விரும்ப மாட்டான். என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.[பெருமை கொண்டு] உன் முகத்தை மனிதர்களை விட்டுத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையடித்துக்கொண்டு நடக்காதே! நிச்சயமாக கர்வம் கொண்டு பெருமையடிக்கும் யாவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. [அல் குர்ஆன் ..31-18]

♦ அல்லாஹ் கூறுகிறான்.உபகாரம் செய்யுங்கள். கர்வம் உடையவர்களாக, பெருமை அடிப்பவர்களாக இருப்பவர்களை அல்லாஹ் நேசிப்பது இல்லை. (அல்குர்ஆன் 4:36, 57:23, 16:23)

♦ அல்லாஹ் கூறுகின்றான் பெருமை அடிப்பவர்களைத் தன்னுடைய கட்டளையை விட்டுத் திருப்பி விடுவான். நேர்வழியைத் தவறான வழியாகவும், தவறான வழியை நேர்வழியாகவும் நம்பவைத்து முடிவில் நரகத்தில் தள்ளிவிடுவான். பெருமை அடிக்காதவர்களுக்குத்தான் சொர்க்கம் என்பதையும் அல்லாஹ் வரையறுத்துக் கூறி உள்ளான்.

'நரகவாசிகளைப் பற்றி உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?' என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டு விட்டு 'பெருமையும் ஆணவமும் கொண்ட ஒவ்வொருவனும் நரகவாசியே' என்று விளக்கமளித்தார்கள்.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் ஹாரிஸா பின் வஹ்பு ரலியல்லாஹு அன்ஹு

​நூல்: புகாரி 4918, 6072,6657

♦ ஆணவம் கொண்டோரை அல்லாஹ் மறுமைநாளில் பார்க்க மாட்டான் என்பதே அவர்களை இழிவுபடுத்தப் போதுமானதாகும். பூமியில் அவர்கள் பெருமையடித்துத் திரிந்து மக்களிடம் ஆணவமாக நடந்து கொண்டதன் காரணமாக அவர்களோடு பேசவும் மாட்டான். அவர்களைப் பரிசுத்தப்படுத்தவும் மாட்டான். இது மறுமையில் அவர்களுக்குக் கிடைக்கும் உணர்வுப் பூர்வமான இழிவாகும். இது நரகில் வீசி எறியப்பட்டு வேதனை செய்யப்படும் உடல் ரீதியான துன்பத்தைவிட சற்றும் குறைந்ததல்ல.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். 'எவன் தனது ஆடையைப் பூமியில் பெருமையுடன் இழுத்துச் செல்கிறானோ அவனை அல்லாஹ் மறுமை நாளில் பார்க்க மாட்டான். ''மேலும் கூறினார்கள்..  ''மூன்று நபர்கள், மறுமை நாளில் அல்லாஹ் அவர்களுடன் பேசவும் மாட்டான், அவர்களைப் பரிசுத்தப்படுத்தவும் மாட்டான், அவர்களுக்கு நோவினை தரும் வேதனையுமுண்டு. அவர்கள் விபச்சாரம் புரியும் வயோதிகன், பொய்யானான  அரசன் , பெருமையடிக்கும் ஏழை.''

நூல்:  புகாரீ, முஸ்லிம்

ஏனெனில் பெருமை என்பது அல்லாஹ்வின் பண்புகளில் ஒன்றாகும். அது பலவீனமான மனிதனுக்குத் தகுதியானதல்ல. பெருமையடித்துத் திரிபவர்கள் அல்லாஹ்வின் இறைமைத் தன்மையினுள் வரம்பு மீறுபவர்கள் ஆவர். மகத்தான படைப்பாளனின் மேன்மைமிகு பண்புடன் மோதக் கூடியவர்களாவர். இதனால்தான் நோவினை தரும் வேதனைக்கு உரியவர்களாகிறார்கள்.

இதனால்தான் நபி [ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்] அவர்களின் பரிசுத்த வழிமுறையில் இதுகுறித்து எச்சரிக்கைகள் தொடர்ச்சியாக வந்துள்ளன.  பலவீனமான மனித இயல்புக்கு ஏற்ப ஏதேனும் ஒரு வினாடியில் கூட அகந்தை எனும் நோய் உள்ளத்திற்குள் புகுந்துவிடாமல் முஃமின்கள் காத்துக் கொள்ள வேண்டும். நபி [ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்] அவர்கள் கூறினார்கள் .'எவர் தன்னைப் பற்றி பெரிதாக எண்ணுகிறாரோ அல்லது தனது நடையில் ஆணவம் கொள்கிறாரோ அவர் அல்லாஹ்வை சந்திக்கும் நாளில் அல்லாஹ் அவர் மீது கோபம் கொண்ட நிலையில் சந்திப்பார்.


​​நூல்: அல்  அதபுல் முஃப்ரத் 

♦ நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:சொர்க்கமும் நரகமும் வாக்குவாதம் செய்து கொண்டன. அப்போது நரகம், பெருமை அடிப்பவர்களுக்காகவும் அக்கிரமக்காரர்களுக்காகவும் நான் சொந்தமாக்கப்பட்டுள்ளேன் என்று கூறியது. எனக்கு என்ன நேர்ந்ததோ, மக்களில் பலவீனர்களும், அவர்களில் கீழ் நிலையினருமே என்னுள் நுழைவார்கள் என்று சொர்க்கம் கூறியது.

நூல்: புகாரி : 4850


​​

♣ பணிவாக நடந்து கொள்ளும் மனிதர்களுக்கு அல்லாஹ் வழங்கும் பரிசுகள்

(மிக்க பாக்கியம் பெற்ற) மறுமையின் வீட்டையோ பூமியில் பெருமையையும் விஷமத்தையும் விரும்பாதவர்களுக்கே நாம் சொந்தமாக்கி விடுவோம். ஏனென்றால் முடிவான நற்பாக்கியம் பயபக்தி உடையவர்களுக்குதான். [அல் குர்ஆன்.. 28-83]

♦ ஹாரிஸா இப்னு வஹப்(ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், சொர்க்கவாசிகள் யார் என உங்களுக்குத் தெரிவிக்கவா? என்று எங்களை நோக்கிக் கேட்டுவிட்டு, அவர்கள் (மக்களின் பார்வையில்) பலவீனமானவர்கள், பணிவானவர்கள். (ஆனால்) அவர்கள் அல்லாஹ்மீது ஆணையிட்டு (எதையேனும்) கூறிவிடுவார்களேயானால், அல்லாஹ் அதனை நிறைவேற்றி வைப்பான் என்று கூறினார்கள். பிறகு. நரகவாசிகள் யாரென உங்களுக்குத் தெரிவிக்கவா? என்று கேட்டு விட்டு, அவர்கள் இரக்கமற்றவர்கள் அகம்பாவம் பிடித்தவர்கள் பெருமை அடிப்பவர்கள் என்று கூறினார்கள்.


​​நூல்: புகாரீ 4918, 6071, 6657

♦ 'நீங்கள் அனைவரும் பணிவாக நடங்கள். சிலர் சிலர் மீது வரம்பு மீறக் கூடாது. சிலர் சிலரை விட பெருமையடிக்கக் கூடாது.' என்று இறைவன் கூறுவதாக நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டனர்.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் ஹாரிஸா பின் வஹ்பு ரலியல்லாஹு அன்ஹு

​நூல்: முஸ்லிம் 5109


​​

♣ மேலும் பெருமை, கருவம், ஆணவம் பற்றி பார்க்க.

(அல்குர்ஆன் : 16:22)

(அல்குர்ஆன் : 7:146)

(அல்குர்ஆன் : 21:19, 7:206)

(அல்குர்ஆன் : 16:49)

(அல்குர்ஆன் : 32:15)

(அல்குர்ஆன் 2:245)

(அல்குர்ஆன் : 11:10)

(அல்குர்ஆன் : 7:36-40)

(அல்குர்ஆன்: 49:13)

(அல்குர்ஆன் : 31:7)

(அல்குர்ஆன் : 39:49)

(அல்குர்ஆன் : 40:60)

(அல்குர்ஆன் : 74:1,2,3)

(அல்குர்ஆன்: 40:35,56)

♦ எனவே முடிவாக: அல்லாஹ் கூறுகிறான்: நீர் பூமியில் பெருமையாக நடக்க வேண்டாம். (ஏனென்றால்) நிச்சயமாக நீர் பூமியைப் பிளந்து விடவும் முடியாது. மலையின் உச்சிக்கு உயர்ந்து விடவும் முடியாது. (அல்குர்ஆன் 17:37)

♦ அல்லாஹ் கூறுகிறான். அளவற்ற அருளாளனுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள் தாம், பூமியில் பணிவுடன் நடப்பார்கள்; மூடர்கள், அவர்களுடன் வாதாட முற்பட்டால் “”சாந்தி உண்டாகட்டும்” என்று கூறி (விலகி) சென்றுவிடுவார்கள். (அல்குர்ஆன் : 25:63)

♦ ஆகவே 'எல்லா புகழும் இறைவனுக்கே' என்று திருப்தியுறும் மனப்பாங்கை வளர்த்துக் கொள்ள வேண்டும் இறைவனை அதிகம் புகழ்வது, திக்ர், வணக்க வழிபாடுகள் மூலம், கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், வலிமார்கள் மீது அதிகம் அன்பு வைப்பதன் மூலம் மேலும் இது போன்ற விஷயங்களில் மூலம் நாம் இறைவனை நினைவு கூறுவதால் நமக்குள் மறைந்திருக்கும் ஆணவமும் அகங்காரமும் பெருமை சிறிது சிறிதாக விலகும்.

இறைவனைப் புகழ்வதால் இறைவனுடைய தகுதி நம்மால் உயர்ந்து விடப் போவதில்லை. இதன் மூலம் நமது தகுதியை இவ்வுலகிலும் மறு உலகிலும் நாமே உயர்த்திக் கொள்கிறோம். எந்த ஒரு முன்னேற்றமும் நம்மால் ஆனது அல்ல. இறைவன் நம் மீது கொண்ட கருணையினாலேயே என்ற பரந்த மனப்பான்மைக்கு வந்து விட்டால் ஆணவம், அகங்காரம், பெருமை என்று அனைத்துமே நம்மை விட்டு அகன்று விடும்.


​​அத்தகைய நன் மக்களாக நம் அனைவரையும் இறைவன் ஆக்கி அருள் புரிவானாக! மேலும் அல்லாஹ் நம் அனைவரையும் இந்த நோயை விட்டு காப்பாற்றுவானாக!நம் அனைவரையும் பணிவுடன் நடப்பதற்கு அருள் செய்வானாக!நம் அனைவரையும் நல்ல சாலிஹான கூட்டத்தில் சேர்த்து அருள் புரிவானாக!