MAIL OF ISLAM

Knowledge & Wisdom



நபிகள் நாயகத்தை ﷺ எவ்வாறு நேசிக்க வேண்டும்?


எழுதியவர்: மௌலவி  S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.


உயிருக்கு உயிரான உயிரிலும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நாம் எவ்வாறு நேசிக்க வேண்டும்.

♦ உண்மையில் முஸ்லிம்கள் என்றால் யார்? வெறுமனே வாயால் அல்லாஹ்வையும், அவனது ரஸுலையும் ஈமான் கொள்பவர்களா? நிச்சயமாக இல்லை. அல்லாஹ்வையும், அவனது ரஸுலையும் உண்மையாக உள்ளத்தால் ஈமான் கொண்டு, அவர்களது ஸிபத்துகளை அதாவது அவர்களுடைய பண்புகளை உள்ளதை உள்ளபடி உளப்பூர்வமாக ஏற்று ஈமான் கொண்டு, இன்னும் அல்லாஹ்வையும், அவனது ரஸுலையும் தனது உயிரை விடவும் மேலாக நேசித்து, அவர்களுக்காக தன் உயிரையே தியாகம் செய்பவர்களே உண்மையான முஸ்லிம்களாவார்கள்.

சரி, நாங்கள் எவ்வாறு அல்லாஹ்வை ஈமான் கொள்ளவேண்டும்? அல்லாஹ்வை ஈமான் கொள்வது என்றால் “வணக்கத்துக்குரிய நாயன் அல்லாஹ்வை தவிர வேறு நாயன் யாரும் இல்லை என்று ஈமான் கொள்வதும் அவனுடைய ஸிபத்துகளை அதாவது அவனுடைய பண்புகளை வாஜிபான, முஸ்தஹீலான, ஜாயிஸான பண்புகளை உள்ளதை உள்ளபடி உளப்பூர்வமாக ஏற்றும் ஈமான் கொள்வதே அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்வதாகும்.


​​அதேபோல் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் என்றும், அன்னவர்களுக்கு அல்லாஹ்வினால் கொடுக்கப்பட்டுள்ள ஸிபத்துகளையும், திருநாமங்களையும் உளப்பூர்வமாக ஏற்றும் ஈமான் கொள்வதே கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மீது ஈமான் கொள்வதாகும். அதுமட்டுமின்றி அல்லாஹ்வை எந்தளவு நேசம் கொள்கின்றோமோ அதே அளவு கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மீதும் நேசம் கொண்டாலே ஈமான் நிறைவடையும், பரிபூரணமாகும்.

♣ இதைத்தான் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: “யாருக்கு என் மீது முஹப்பத் இல்லையோ, அவருக்கு ஈமான் இல்லை.” என்பதாக. மேலும் கூறினார்கள்: “நான் ஒருவனுக்கு அவனுடைய பெற்றோர்கள், பிள்ளைகள் மற்றுமுள்ள மனிதர்கள் அனைவரையும் விட மிகப் பிரியமானவனாக ஆகின்ற வரை அவன் முஃமீனாக முடியாது".


​நூல்கள்: புகாரி 14,15, முஸ்லிம் 44–69,70, இப்னு மாஜா 67, நஸஈ 50–43, முஸ்னத் அஹ்மத் 3-288, மிஷ்காத் 7

♣ அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் காலத்தில் அப்துல்லாஹ் என்றொருவர் இருந்தார். அவர் ஹிமார் (கழுதை) என்ற புனைப்பெயரில் அழைக்கப்பட்டு வந்தார். அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை சிரிக்க வைப்பார். மது அருந்தியதற்காக அவருக்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கசை அடி கொடுத்தும் உள்ளார்கள்.


​​(போதையிலிருந்த) அவர் ஒரு நாள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டார். கசை அடி கொடுக்கும்படி நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவர் அடிக்கப்பட்டார். அப்போது (அங்கிருந்த) மக்களில் ஒருவர், இறைவா! இவர் மீது உன் சாபம் ஏற்படட்டும்! இவர் (குடித்ததற்காக) எத்தனை முறை கொண்டு வரப்பட்டுள்ளார்! என்று கூறினார்.


​​அப்போது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், இவரை சபிக்காதீர்கள். ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக! இவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறார் என்பதை நான் அறிந்துள்ளேன் என்று கூறினார்கள்.


​​ஹழ்ரத்: ஹழ்ரத் உமர் பின் அல் கத்தாப் (ரலியல்லாஹு அன்ஹு)

நூல்: ஸஹிஹுல் புகாரி - 6780

♣அல்லாஹ் அல்குர்ஆனில் கூறும் போது: “இந்நபியாகிறவர் முஃமின்களுக்கு அவர்களின் உயிர்களை விட மேலானவராக இருக்கின்றார்கள்.” (சூரா 33:6) அன்பியாக்களுக்கு அடுத்தபடியாக எல்லா உம்மத்துகளிலும் உயர்ந்த அந்தஸ்தையுடையவர்கள் ஸெய்யதுனா அபூபக்கர் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்தான். ஸுன்னத் வல் ஜமாஅத்தினரான எமது அகீதா இதுதான். இந்தளவு கௌரவத்தை, உயர்வை ஸெய்யதுனா அபூபக்கர் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எது பெற்றுக்கொடுத்ததென்றால் அது அவர்களின் பூரணமான ஈமானே காரணமாகும்.

♣  நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் கூறினார்கள்: "ஸெய்யதுனா அபூபக்கர் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஈமான் எந்தளவு கனமானது என்றால் உலகிலே தோன்றிய, இனிமேல் தோன்ற போகின்ற அனைத்து மனிதர்களுடைய ஈமானை ஒருதட்டிலும் ஸெய்யதுனா அபூபக்கர் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஈமானை இன்னுமொரு தட்டிலும் வைத்தால் ஸெய்யதுனா அபூபக்கர் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு ஈமாந்தான் கனமானதாக, பாரமாக இருக்கும்" என்று  கூறுகிறார்கள்.


​​ஸெய்யதுனா அபூபக்கர் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எந்தளவு உயர்வான ஈமான் எவ்வாறு கிடைத்ததென்றால் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மீது அவர்கள் கொண்டிருந்த அளவுக்கடந்த நேசமும், அன்பும்தான் இந்த உயர்வான ஈமானை பெறுவதற்கு காரணமாக இருந்தது. கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: “அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு இந்த மேலான நிலையை அடைந்தது தமது உள்ளத்தில் ஒரு மேலான பொருளை கொண்டிருப்பதால் ஆகும்.” ஆம், அந்த மேலான பொருள்தான் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மீது அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு கொண்டிருந்த அளவுக்கடந்த நேசமும், அன்பும் ஆகும்.

எம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மீது அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கொண்டிருந்த அன்பு இவ்வளவுதான் என்று அளவிடமுடியாது.

ஒரு முறை கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தனது ஹபீபான ஸெய்யதுனா அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஒருநாள் இரவில் நாம் பிரயாணம் செய்யவேண்டி வரும். அப்போது நான் உங்களை இன்ஷா அல்லாஹ் அழைத்துப்போக வருகிறேன் என்று கூறிவைத்திருந்தார்கள். சில நாட்களுக்குப்பின் அல்லாஹ்விடமிருந்து ஹிஜ்ரத்தை மேற்கொள்ளும்படி கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டது.

ஒரு நடுநிசி வேளையிலே ஸெய்யதுனா அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வீட்டுக்குச் சென்று கதவை தட்டுவதற்காக தனது முபாரக்கான கையை கதவின் மீது வைக்கும் முன்பே கதவு திறந்துக்கொண்டது.

கூடவே ஸெய்யதுனா அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பிரயாணத்துக்கு தேவையான ஆயத்தங்களுடன் தயாராக வாசலிலே நின்றார்கள். இதனைக்கண்ணுற்ற கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஆச்சிரியப்பட்டு, “அபூபக்கரே, நான் இப்போது வருவது உங்களுக்கு எப்படி தெரியும்? வீட்டு வாசலிலே தயாராக காத்திருக்கிறீர்களே? என்று  கேட்டபோது ஸெய்யதுனா அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: “யா ரசூலுல்லாஹ் நீங்கள் எப்போது ஒரு இரவில் என்னை அழைத்துப் போக வருகிறேன் என்று கூறினீர்களோ அன்று முதல் இன்று வரை நான் இவ்விடத்தில் இவ்வாறுதான் காத்திருக்கிறேன்.

ஏன் என்றால் அல்லாஹ்வின் ஹபீபான தங்களின் வருகைக்காக நாங்கள் தான் காத்திருக்க வேண்டும். மாறாக அல்லாஹ்வின் ரஸுலே உங்களை எனது வீட்டு வாசலில் காத்திருக்க வைப்பதா? அந்த பெரிய குற்றத்துக்கு நான் ஆளாகாமல் இருக்கவே இவ்வாறு செய்தேன் என்றார்கள். இவ்வாறு அளவுக்கடந்த நேசத்தையும், கண்ணியத்தையும் இனிய மதீனத்து வேந்தர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மீது வைத்திருந்ததால் தான் ஈமானிலே உயர்ந்த அந்தஸ்தை பெற்றார்கள்.

♣ இதேபோன்று கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களால், “எனக்கு பின்பு ஒரு நபி வருவதாக இருந்தால் அது ஸெய்யதுனா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களாக தான் இருப்பார்கள் என்று போற்றப்பட்ட ஸெய்யதுனா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஒரு முறை அவர்களின் மகனாரும், இமாம் ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் உரையாடிக்கொண்டிருந்தார்கள். பேச்சினூடே ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை பார்த்து உங்கள் தந்தை என் பாட்டனார் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் அடிமைத்தானே என்று கூற இப்னு உமர் அவர்கள் வேதனையோடு தன் தந்தையிடம் இதை கூறிவிட்டார்கள்.

இதனைக்கேட்டதும் தன் மகனையும் இமாம் ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களையும் கையைப்பிடித்து கூட்டிக்கொண்டு கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் ரவ்லாவின் முன் நின்று யா ரஸுலல்லாஹ்! என்னை தங்களுடைய அடிமை என்று தங்களின் அருமை பேரர் கூறிவிட்டார்கள். இது அவரும் சாட்சியாக இங்கு இருக்கிறார். தாங்கள் அதை ஏற்றுக்கொள்ளுங்கள் யா ரஸுலல்லாஹ்! தாங்கள் என்னை அடிமையாக ஏற்றுக்கொண்டு விட்டால் நான் ஈருலகிலும் மேன்மை அடைந்து விடுவேனே யா ரஸுலல்லாஹ்! என்று கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக கொட்ட தேம்பித் தேம்பி அழுந்துக்கொண்டிருந்தார்கள்.


​​சுவர்க்கத்தைக்கொண்டு நன்மாராயம் பெற்ற இந்த அருமை ஸஹாபாவின் செய்கை கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மீதும் அவர்களின் சந்ததிகள் மீதும் காட்டப்படவேண்டிய அன்புக்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

♣ ஹஜ்ரத் அலீ (றழியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் அண்ணல் நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் தங்களுக்கு எந்த அளவு அன்பு இருந்தது? என்று ஒருவர் கேட்டார், “அல்லாஹ்வின் மீது சத்தியமாகச் சொல்கின்றேன். எங்களுடைய சொத்துக்கள், பெற்றெடுத்த மக்கள், அன்பு அன்னைமார்கள், ஆகியவர்களை விடவும், கடுமையான தாகத்தின் போது கிடைக்கும் குளிர்ந்த நீரை விடவும் நாங்கள், அண்ணலாரை நேசித்தோம்”  என்று கூறினார்கள். ஹஜ்ரத் அலீ (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியது முற்றிலும் உண்மையே! அண்ணலாரின் தோழர்கள் அனைவருமே அப்படித்தான் அண்ணலார் மீது அன்பு கொண்டிருந்தார்கள். அதற்கு முக்கிய காரணம், அவர்கள் கொண்டிருந்த பரிபூரணமான அன்பும் இறை உறுதியுமே!

♣(நபியே!) நீர் கூறும்; உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டு வருவதை எதிர்பார்த்து இருங்கள் - அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை.(அல்குர்ஆன் 9:24)


​​அல்லாஹ்வின் இந்த அறிவிப்பிலே, மேற்காணும் எல்லோரையும் விட, அல்லாஹ்வின் மீதும் அவனது தூதர் மீதும் அன்பு குறைந்து விடுபவர்களுக்குக் கடுமையான எச்சரிக்கை தரப்பட்டுள்ளதை காண்கிறோம்.

♣   நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ்வின் அன்பை பெற விரும்பினால் என்னை அன்பு வையுங்கள் எனது அன்பை பெற விரும்பினால் என் குடும்பத்தார்களை அன்பு வையுங்கள்.


​​அறிவிப்பாளர்: ஹழ்ரத் அபூ ஸயீத் அல்குத்ரீ ரலியல்லாஹு அன்ஹு

​நூல்: திர்மிதி 3814,மிஷ்காத் 573

♣   அனஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கும் செய்தி புகாரியில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

​ஒரு முறை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)  அவர்களிடம் ஒரு ஸஹாபி, இறுதிநாள் எப்போது வரும் எனக் கேட்ட போது அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அவரிடம்  பின்வருமாறு வினவினார்கள்:

​ 

'அதற்காக நீ எதனை ஆயத்தப்படுத்தி வைத்திருக்கிறாய்? என்றார்கள்' அதற்கு அந்த சஹாபி சொன்னார் 'எதுவும் இல்லை அல்லாஹ்விலும் அவனது தூதரிலும் வைத்துள்ள அன்பினைத் தவிர என்றார்கள். அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள் ' நீர் யார்மீது அன்பு வைத்துள்ளீர்கலோ அவருடன் இருப்பாய் 'அதனால் நான் அல்லாஹ்வின் தூதரை (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அபூபக்கர் (ரழியல்லாஹு அன்ஹு) மற்றும் உமர் (ரழியல்லாஹு அன்ஹு) ஆகியோரை நேசிக்கிறேன். எனது செயல் அவர்களுடன் ஒப்பிடும் அளவுக்கு இல்லாவிடினும் அதன்மூலம் நான் அவர்களுடன் நாளை மறுமையில் இருப்பேன் என நம்புகிறேன் என்றார்கள்.

♣  உமர் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள், அண்ணலாரின் சமூகத்தில் ஒரு தடவை கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! எனது உயிரை தவிர மற்ற எல்லாவற்றையும் விட தாங்களே எனக்கு அதிகம் பிரியமுள்ளவர்களாயிருக்கின்றீர்கள்”!

தனது உயிரை விட என்னை அதிகமாக நேசிக்காத வரை ஒருவர், பூரணமான விசுவாசியாக மாட்டார்” என்று அண்ணலார் அதற்கு பதிலாகக் கூறினார்கள். உடனே, உமர் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே, தாங்கள் என்னுயிரை விட இப்பொழுது அதிகப்பிரியமுள்ளவராக இருக்கிறீர்கள்! என்றார்கள். “ஓ உமரே! இப்பொழுது தான்!” என்று அண்ணலார் கூறினார்கள்.


​​இக்கூற்றுக்கு மார்க்க மேதைகள், இருவிதமான பொருள்களைக் கூறுகிறார்கள். முதலாவது! ஓ உமரே! இப்பெழுதான் உமது விசுவாசம் பரிபூரணமாயிற்று. இரண்டாவது! ஓ உமரே! இப்பொழுதான் நான் எச்சரித்த பிறகுதான், உமதுயிரைவிட என்னை அதிகமாக நேசிப்பதாக கூறுகிறீர்கள்! இவ்வாறு முன்பே ஏற்பட்டிருக்க கூடாதோ?

♣ எனவே அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீது நாம் உண்மையான அன்பு கொள்வதாயின், அவர்களை ஒவ்வொரு விஷயத்திலும் நாம் முழுக்க முழுக்கப் பின்பற்றுபவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் சொற்படி நடக்க வேண்டும்; செய்த முன்மாதிரிகளையே பின்பற்றிச் செய்ய வேண்டும். எதனை விட்டு தடுத்தார்களோ அதனை அறவே விட்டுவிட வேண்டும். சுகத்திலும், துக்கத்திலும், வறுமையிலும், செல்வத்திலும், எந்த நிலையிலும் அண்ணலாரையே பின்பற்றி நடந்துகொள்ள வேண்டும். இதனைக் குறித்து அல்லாஹுத்தஆலா திருக்குர் ஆனில் பின்வறுமாறு கூறியுள்ளான்.

நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றி நடப்பீர்களாக, அப்பொழுதுதான், அல்லாஹ் உங்களை நேசித்து, உங்கள் குற்றங்களை மன்னிப்பான் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன் கிருபை உள்ளவன் என்று (நபியே! முஸ்லிம்களுக்கு) கூறுவீராக’’(அல்குர்ஆன் 3;31)

♦ இதேபோன்று ஸஹாபாக்கள் மட்டுமல்ல பின்னால் வந்த அனைத்து இஸ்லாமிய பெரியார்களும் வலிமார்களும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மீது அளவு கடந்த அன்பும், கண்ணியத்தையும் கொண்டிருந்தார்கள். அதனாலேயே அவர்களின் ஈமான் பரிபூரணமடைந்தது. அவர்களுக்கு உயர்ந்த அந்தஸ்தையும், பெற்றுக்கொண்டுத்தது.


​​இதையே கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: “நீங்கள் யாரை முஹப்பத் வைக்கிறீர்களோ, அவர்களுடன் நாளை கியாமத்தில் இருப்பீர்கள்.” ஆகவே நாம் அல்லாஹ்வின் நேசத்தை திருப்தியை பெற்ற நல்லடியார்களாக வாழ்ந்திட வேண்டுமாயின் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை நமது உயிருக்கும் மேலாக நேசிக்க வேண்டும்.


​​அதிகம் அதிகம் ஸலவாத்தை ஓதி அன்னவர்களின் அன்பை பெற்றுக்கொள்ளவேண்டும்.எனவே நம்மையும் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை நம் உயிரை விட நேசித்த கூட்டத்தில் சேர்த்து அருள் புரிவானாக!!! மேலும் இதன் மூலம் நம் அனைவரையும் அல்லாஹ் பரிபூரணமடைந்த முஃமீன்களாக ஆக்கியருள்வானாக! ஆமீன்.