MAIL OF ISLAM

Knowledge & Wisdom



நபிகள் ​நாயகத்தின் நற்குணங்கள் 

​ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்

எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.


ஹுஸ்னுல் குலுக்” எனும் அழகிய நற்குணத்தின் தாயகமே எம் உயிரிலும் மேலான உயிருக்கு உயிரான கண்மணி நாயகம் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள்தான்.


​​

♣ நற்குணம் என்றால் என்ன?

”ஹுஸ்னுல் குலுக்” எனும் நற்குணம் என்றால் என்ன? என்பதற்கு அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்மதுல்லஹி அலைஹி) அவர்கள் பின்வருமாறு விளக்கமளித்ததாக இமாம் திர்மிதி (ரஹ்மதுல்லஹி அலைஹி) அவர்கள் கூறுகிறார்கள்.


​​”நற்குணம் என்பது, முகமலர்ச்சி, நன்மைகளை பரவச் செய்தல், பிறரை நோவினை செய்வதை தவிர்த்துக் கொள்ளுதல் ஆகியவைகளாகும். நற்குணத்திற்கு இஸ்லாத்தில் முக்கிய இடம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. மனிதர்களை அதிகம் சுவர்க்கத்தில் நுழைவிக்கக்கூடியது நற்குணமாகும். (நூல் : ரியாளுஸ் ஸாலிஹீன்)


​​

♣ நற்குணத்தின் தாயகம் நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள்

மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர். (அல்குர்ஆன் : 68:4)

♦ நபித்துவத்தினை பிரகடனம் (பகிரங்கப்படுத்தும்) முன்பும் சரி, பின்பும் சரி நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அழகிய நற்குணங்கள் நிறைந்தவர்களாக இருந்ததோடு, நமக்கு இறைவன் கூறுவது போல் முன்மாதிரியாகவும் விளங்குகிறார்கள். நபிகள் பெருமானார் (ஸல்லல்லாஹீ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: “நல்ல ஒழுக்கங்களைப் பரிபூரணமாக்குவதற்காகவே நான் அனுப்பப்பட்டேன்.”


​​நூல்:- முஅத்தா

♦ ஒருவர் சிறந்தவர் என்று கூற வேண்டுமானால் அவரிடம் அழகான குணமிருக்க வேண்டும். குணங்களில் மிகவும் அவசியமானவை மென்மை (நிதானம்). அறிவோடு இணைந்த இந்தக் குணத்தை அல்லாஹ் நேசிக்கின்றான். மேலும் இதற்கு நன்மைகளையும் வழங்கின்றான். இதைப் பற்றி நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், அப்துல் கைஸ் குலத்தின் (தலைவர்) அஷஜ்ஜு அவர்களிடம் கூறினார்கள்: உம்மிடம் அல்லாஹ் நேசிக்கக்கூடிய இரு குணங்கள் உள்ளன. 1. அறிவாற்றல், 2. நிதானம்.


​​அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு)

​நூல்: முஸ்லிம் 24

♦ இறை நம்பிக்கையாளர்களின் அன்னையே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் குணத்தைப் பற்றிக் கூறுங்கள்!” எனக் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள், “நீர் குர்ஆனை ஓதவில்லையா?” என்று கேட்டார்கள். நான் "ஆம் (ஓதியிருக்கிறேன்)" என்றேன். ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள், “நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் குணம் குர்ஆனாகவே இருந்தது” என்று கூறினார்கள். இதைச் செவியேற்ற நான் எழுந்து விடலாம் எனவும், இனிமேல் நான் இறக்கும் வரை எவரிடமும் எது குறித்தும் கேட்க வேண்டியதில்லை என்றும் எண்ணினேன்.


​​ஹழ்ரத் ஸஅத் (ரலியல்லாஹு அன்ஹு)

​ஸஹிஹ் முஸ்லிம் 1357

♦ கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு ஆடு ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அப்பொழுது உணவுகள் குறைவாக இருந்த காலம். தமது குடும்பத்தாரிடம் 'இந்த ஆட்டை சமையுங்கள்' என்று கூறினார்கள். பெரிய பாத்திரம் ஒன்று இருந்தது. அதில் அந்த உணவு வைக்கப்பட்டு கொண்டு வரப்பட்டது. உணவு கிடைக்காத தோழர்கள் எல்லாம் அழைக்கப்பட்டனர். நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களும் அவர்களுடன் அமர்ந்து கொண்டனர். உணவுத் தட்டைச் சுற்றி அனைவரும் அமர்ந்து சாப்பிடலானார்கள். கூட்டம் அதிகமாக இருந்தால் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மண்டியிட்டு அமர்ந்து மற்றவர்களுக்கு இடம் கொடுத்தார்கள். அப்போது ஒரு கிராமவாசி 'என்ன இப்படி உட்கார்ந்திருக்கிறீர்கள்?' என்று கேட்டார். அதற்கு நாயகம் அவர்கள் 'இறைவன் என்னை அடக்கு முறை செய்பவனாகவும் மமதை பிடித்தவனாகவும் ஆக்கவில்லை. பெருந்தன்மை மிக்க அடியானாகவே ஆக்கியுள்ளான்.என்று விடையளித்தார்கள்.

நூல்: அபுதாவுத் 3773, பைஹகீ 14430

♦ அனஸ் இப்னு மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் (குணத்தாலும் தோற்றத்தாலும்) மக்களிலேயே மிகவும் அழகானவர்களாகவும் மக்களிலேயே அதிகக் கொடை குணம் கொண்டவர்களாகவும் மக்களிலேயே அதிக வீரமுடையவர்களாகவும் இருந்தார்கள்.


​​நூல்: புகாரி - 3117

♦ கண்மணி நாயகம் (ஸல்லலாஹு அலைஹிவசல்லம் ) அன்னவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக நானே உங்கள் யாவரிலும் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடப்பவனாகவும், மிக வாய்மைக்குரியவனாகவும், மிக நல்லவனாகவும் இருக்கிறேன்.


​​நூல்: மிஷ்காத் 226

♦ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களிடம் எது கேட்கப்பட்டாலும் ஒருபோதும் அவர்கள் இல்லை என்று சொன்னதில்லை என ஜாபிர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறக் கேட்டேன்.


​​ஹழ்ரத் முஹம்மத் பின் முன் கதிர் (ரலியல்லாஹு அன்ஹு)

​ஸஹிஹுல் புகாரி 6034

♦ நான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் பத்து ஆண்டுகள் சேவகம் புரிந்தேன். (மனம் வேதனைப்படும்படி) என்னை ச்சீ என்றோ (இதை ஏன் செய்தாய் என்றோ. நீ (இப்படிச்) செய்திருக்கக்கூடாதா? என்றோ அவர்கள் சொன்னதில்லை.


​​ஹழ்ரத் அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு)

​ஸஹிஹுல் புகாரி 6038

♦ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணை விடவும் அதிகக் கூச்ச சுபாவம் உள்ளவர்களாய் இருந்தார்கள்.


​​ஹழ்ரத் அபூசயீத் அல்குத்ரி (ரலியல்லாஹு அன்ஹு)

​ஸஹிஹுல் புகாரி 6119

♦ நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் கிராமத்தில் வாழ்ந்தவர்கள் நாகரீகம் என்றால் என்னவென்று அறியாதவர்கள். தர்மம் கேட்கும் போது கூடக் கடுமையாக நடந்து கொள்வார்கள். ஆனால் அவர்களின் இந்நிலைக் கண்டு நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சிரித்தார்களே தவிர கண்டிக்கவில்லை.அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தடித்த விளிம்புகளைக் கொண்ட நஜ்ரான் நாட்டு சால்வையொன்றை போர்த்தியிருக்க நான் அவர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தேன்.

அப்போது அவர்களை கிராமவாசியொருவர் கண்டு அவர்களுடைய சால்வையால் அவர்களைக் கடுமையாக இழுத்தார். எந்த அளவிற்கென்றால், அவர் கடுமையாக இழுத்த காரணத்தால் சால்வை விம்பின் அடையாளம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடைய தோன் ஒரு பக்கத்தில் பதிந்திருப்பதைக் கண்டேன். பிறகு அந்தக் கிராமவாசி, முஹம்மதே! உங்கடமிருக்கும் இறைவனின் செல்வத்திருந்து எனக்கும் கொடுக்கும்படி கட்டளையிடுங்கள் என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அவர் பக்கம் திரும்பிச் சிரித்தார்கள். அவருக்குக் கொடுக்கும்படி உத்தரவிட்டார்கள்.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு)

​நூல்: புகாரி 5809

♦ கெட்ட வார்த்தைகள் பேசுபவராகவோ, சாபமிடுபவராகவோ, ஏசுபவராகவோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இருக்கவில்லை. (ஒருவரைக்) கண்டிக்கும் போது கூட "அவருக்கென்ன நேர்ந்தது? அவருடைய நெற்றி மண்ணில் படட்டும்'' என்றே கூறுவார்கள்.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு)

​நூல்: புகாரி 6046

♦ நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் வாழ்ந்தவர்கள் பெரும்பாலும் நாகரீகம் இல்லாதவர்களாக இருந்தார்கள். அனஸ் இப்னு மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள் ஒரு கிராமவாசி பள்ளிவாசலினுள் சிறுநீர் கழித்தார். அவரை நோக்கி நபித் தோழர்கள் (வேகத்துடன்) எழுந்தனர். அப்போது இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் ”(அவர் சிறுநீர் கழிப்பதை) இடை மறிக்காதீர்” என்று கூறிவிட்டுப் பிறகு ஒரு வாளியில் தண்ணீர் கொண்டு வரக் கூறினார்கள். பிறகு (தண்ணீர் கொண்டு வரப்பட்டு) அது சிறுநீர் மீது ஊற்றப்பட்டது.


​​நூல் : புகாரி 6025, முஸ்லிம் 480

♦ நான் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களைச் சந்தித்து, தவ்ராத்தில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைப் பற்றிக் கூறப்பட்டிருக்கும் வர்ணனையை எனக்குச் சொல்லுங்கள்! என்றேன்.


​​அவர்கள், இதோ சொல்கிறேன்! அல்லாஹ்வின் மீதாணையாக! குர்ஆனில் கூறப்படும் அவர்களுடைய சில பண்புகள் தவ்ராத்திலும் கூறப்பட்டுள்ளன. நபியே! நிச்சயமாக உம்மை சாட்சியம் அளிப்பவராகவும், நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிப்பவராகவும், எழுதப் படிக்கத் தெரியா பாமரர்களின் பாதுகாவலராகவும் நாம் அனுப்பியிருக்கிறோம்! நீர் எனது அடிமையும் எனது தூதருமாவீர்! தம் எல்லாக் காரியங்களிலும் இறைவனையே நம்பியிருப்பவரென்று உமக்கு நான் பெயரிட்டுள்ளேன்! இவ்வாறெல்லாம் கூறிவிட்டு, நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் அடையாளங்களைக் கூறும் விதத்தில் அவர் கடின சித்தம் கொண்டவராகவோ, முரட்டுத்தனமுடையவராகவோ, கடைவீதிகளில் கத்திப் பேசி சச்சரவு செய்பவராகவோ இருக்கமாட்டார்! தீமைக்கு பதிலாகத் தீமையைச் செய்யமாட்டார்; மாறாக, மன்னித்து, கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்! வளைந்த மார்க்கத்தை அவர் மூலம் நிமிர்த்தாதவரை அல்லாஹ் அவ(ரது உயி)ரைக் கைப்பற்ற மாட்டான்! மக்கள் லாயிலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று கூறுவார்கள்; அதன் மூலம் குருட்டுக் கண்களும், செவிட்டுக் காதுகளும், மூடப்பட்ட உள்ளங்களும் திறக்கப்படும் என்று அதில் அவர்களைக் குறித்து வர்ணிக்கப்பட்டுள்ளது! என பதிலளித்தார்கள் என அதா பின் யஸார் அவர்கள் கூறினார்கள்.


​​நூல்: புகாரி 2125,மேலும் பார்க்க புகாரி 6024, 3560, 6033, முஸ்லிம் 4585, 4848, 4849