MAIL OF ISLAM

Knowledge & Wisdom



பெண்கள் முகம் மூடுவது கூடுமா?


​எழுதியவர்: மௌலவி  S.L. அப்துர்ரஹ்மான்  (கௌஸி)  கல்முனை.


பெண்கள் வெளியில் செல்லும் போது முகம் மூடுவது (ஹிஜாப்) பற்றி இஸ்லாம் மார்க்கம் கூறும் தீர்வு என்ன?


♣  வழிகெட்ட வஹ்ஹாபிகளின் நிலைப்பாடு :-

பெண்கள் முகத்தை மூடுவது கூடாத காரியம், ஹராமான செயல், பாவமான காரியம், திறந்து தான் வைக்க வேண்டும். அதனை மீறி யார் முகத்தை மூடுகிறாரோ, அவர் இஸ்லாத்தைக் கேவலப்படுத்துகிறார் என்று வழிகெட்ட வஹாபிகள் விமர்சனம் செய்வது அவர்களின் அறியாமையின் வெளிப்பாடு என்பதுதான் எதார்த்தமான உண்மையாகும்.


♦  இஸ்லாம் தூய்மையான மார்க்கம் - தூய்மையான சமூகத்தை உருவாக்க ஆடைகளில் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இரு பாலினங்களிடையே இயல்பாக ஆழப் புதைந்துள்ள ஆசைகளை செயற்கையான தூண்டுதலால் பாதிப்பு ஏற்பட்டு விடாமல் இருக்க மிகுந்த அக்கறையுடன் ஆண், பெண் இருபாலினர்களும் ஆடைகள் அணிய வேண்டும் என ஆடை நாகரீகத்தை ஆன்மீகமாக ஆக்கியுள்ளது இஸ்லாம்.

♦  இந்த சில நாட்களாக பெண்கள் முகம் மூடுதல் பற்றி சில தவறான கருத்துக்களை எமது முஸ்லீம் சகோதரர்கள் பேசி வருவதையும், இணையதளத்தில் வெளியிட்டு வருவதையும் அவதானிக்கலாம். இது எவ்வளவு பெரிய தவறு என்பதை முதலில் நாம் உணர வேண்டும்.

முகமூடிய பெண்கள் செய்யும் சில தவறுகளை வீடியோ மூலம் வெளியிட்டு பெண்கள் முகம் மூடுவதால்தான் அவர்கள் பாவம் செய்கின்றார்கள் என்ற கருத்தை சொல்கிறார்கள். முதலில் அது உண்மையான வீடியோவா என்று கூட தெறியாது. சிலவேளை முகம் மூடும் முஸ்லீம் பெண்களை தவறாக சித்தரிப்பதற்கு கூட அந்த வீடியோ அந்நியர்களால் உருவாக்கப்பட்டிருக்கலாம். ஒருவேளை அந்த வீடியோ உண்மையாக இருந்தால் கூட அதை வைத்துக்கொண்டு முகம் மூடுதல் தவறு என்று கூற முடியாது.

ஏனெனில் இஸ்லாத்தில் ஒரு சில முஸ்லீம்கள் தவறாக நடக்கின்றனர் அதற்காக இஸ்லாம் தவறான மார்க்கம் என்று கூற முடியுமா? முடியவே முடியாது. ஏனெனில் இஸ்லாம் மட்டுமே உண்மையான மார்க்கம் என நாம் அனைவரும் அறிந்த விடயம். அதேபோலதான் முகத்தை மூடிக்கொண்டு ஒரு சில பெண்கள் செய்யும் தவறை வைத்துக்கொண்டு பெண்கள் முகம் மூடுதல் தவறு என்று கூறவே முடியாது.

♦  இன்னும் சிலர் கூறுகிறார்கள் பெண்கள் முகத்தை மூடுவதால் தங்களை யாராலும் அடையாளம் காண முடியாது என்ற தைரியத்தினால் பாவங்கள் செய்கிறார்கள் ஆகவே முகத்தை மூடாமலிருந்தால் அவர்கள் பாவங்கள் செய்யமாட்டார்கள் என்று இதுவும் தவறான கருத்து ஏனெனில் முகத்தை மூடினால் தன்னை யாராலும் அடையாளம் காண முடியாது என்று ஒரு பெண் பாவம் செய்வாளெனில் அவளுக்கு ஈமான் இல்லை.

ஏனெனில் ஈமான் உள்ள பெண் முகத்தை மூடினாலும் அல்லது மூடாவிட்டாலும் அப்பெண் பாவம் செய்யமாட்டாள். ஏனெனில் அவள் அல்லாஹ்வுக்குப் பயப்படுகிறாள். ஆகவே நாம் முகம் மூடுதல் தவறு என கூறுவதை விட்டுவிட்டு நம் பெண்களிடத்தில் ஒழுக்கத்தையும் ஈமானையும் கொண்டு வரவேண்டும்.

ஏனென்றால் இவை இரண்டும் பெண்களிடத்தில் இருந்தால் அவர்கள் முகம் மூடினாலும் அல்லது முகத்தை மூடாவிட்டாலும் அல்லாஹ்வின் அச்சத்தினால் பாவம் செய்யமாட்டார்கள். அந்த அடிப்படையில் பெண்கள் முகத்தை மூடுதல் சிறந்தது, தக்வா எனும் பேணுதல் என்று கூறப்படுவதற்கு காரணம் அவர்களை அந்நிய காம நோய்யுள்ள சில ஆண்களின் பார்வையிருந்து அல்லது சில ஆண்களின் தொல்லையிலிருந்து பாதுகாக்கவே. இது 100% சரி என்று நாம் அனைவரும் அறிந்த விடயம். ஆகவே இனிமேலும் இவ்வாறு பெண்கள் முகத்தை மூடுதல் தவறு, பாவம், ஹராம் என்று கூறவே வேண்டாம்.

♣  பெண்கள் அணியும் ஆடைகள் தொடர்பாக அதாவது முகம் மூடுவது பற்றி கருத்து வேறுபாடுகள் நமது சமூகத்தில் மூன்று விதமாக உள்ளது.

1) பெண்கள் முகத்தை மறைப்பது வாஜிப், சுன்னத், பேணுதல், சிறந்தது என்று மறைக்க வேண்டியதில்லை என ஒரு சாராரும்.

2) பெண்கள் கட்டாயம் (வாஜிப்) முகத்தை மறைக்க வேண்டும் என்று மற்றொரு சாராரும்.​

​3) பெண்கள் முகத்தை கட்டாயம் (வாஜிப்) மறைக்க வேண்டியதில்லை, ஆனாலும் சில சமயம் - சூழல், சூழ்நிலைகளை கவனித்து கெட்ட காம எண்ணம் - சிந்தனைகள் உள்ள அன்னிய ஆண்களிடமிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள தக்வா எனும் பேணுதல் அடிப்படையில் பெண்கள் முகத்தை மூடுவது - மறைத்துக் கொள்வது பாதுகாப்பு பேணுதலாகும் என இன்னும் ஒரு சாராரும் கூறுகிறார்கள். அந்த அடிப்படையில் மூன்றாவது கருத்தே மிகச் சரியானதாகும்.

♦  பெண்கள் முகத்தையும், இரண்டு மணிக்கட்டையும் தவிர உடம்பின் மற்ற எல்லாப் பகுதிகளையும் கட்டாயம் மறைக்க வேண்டும். அந்த அடிப்படையில் வெளியே செல்லும் அவசியமுள்ள பெண்கள் கெட்ட காமம் சிந்தனைகள் உள்ள அன்னிய ஆண்களிடமிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள முகம், இரண்டு மணிக்கட்டுகள் உட்பட உடம்பின் எல்லாப் பகுதியையும் மறைப்பதோடு குறிப்பாக முகத்தை மறைப்பதும் தக்வா எனும் சிறந்த பேணுதலாகும். இதுவே பெண்களுக்கான சிறந்த பர்தாவாகும்.

♦  இஸ்லாத்தில் 'ஹிஜாப்' அணிவது கூடாது என்பது அல்ல, சில பேர் பெண்கள் முகத்தை மூடக் கூடாது ஹராம் - பாவம் என்று விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த அடிப்படையில் ஹிஜாப் என்பது வேறு - முகத்தை மூடுவது என்பது வேறு.

பொதுவாக ஒரு பெண்மணி ஹிஜாப் போடுவது அதாவது வீட்டிலிருந்தாலும் ஹிஜாபாக இருப்பதுதான் அர்த்தமாகும். உதாரணமாக நமது வீட்டிற்கு ஆண்கள் வந்தால் வெளியிலிருந்து ஆண்களும் - உள்ளே இருந்து பெண்களும் பேசுவார்கள் இதுவும் ஹிஜாப்தான். அதனால் பெண்கள் வெளியே வந்தால்தான் ஹிஜாப் என்பது அர்த்தமல்ல.

​ஹிஜாப் என்றால் மறைத்திருத்தல் என்று அர்த்தமாகும். அந்த அடிப்படையில் ஒரு ஆண் அன்னிய பெண்ணையும் ஒரு பெண் அன்னிய ஆணையும் பார்க்க கூடாது என்ற பொதுவான சட்டத்தை கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். இது வீட்டிலே இருந்தாலும் இந்த ஹிஜாபை பேணவேண்டும்.

♣  பெண்கள் வெளியில் செல்லும் போது தக்வா எனும் பேணுதல் அடிப்படையில் முகம் மூடுவது பற்றிய ஆதாரங்கள் :

♦  பொதுவாக ஒரு பெண்மணி எதை மறைக்க வேண்டும் என்பதை அல்லாஹ் குர்ஆனில் 'இறை நம்பிக்கையுள்ள பெண்களுக்கு நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ள வேண்டும் தங்கள் வெட்கத்தளங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் தங்கள் ஜீனத்தை அதிலிருந்து தெரியக்கூடியதைத் தவிர வெளிகாட்டக்கூடாது. மேலும் தங்கள் முந்தானைகளால் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும். தம் கணவர்கள், தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள், அல்லது தம் புதல்வர்கள், அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள், அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தங்கள் வலக்கரங்கள் சொந்த மாக்கிக்கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்பமுடியாத அளவு) வயதானவர்கள், பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய ஜீனத்தை வெளிப்படுத்தக் கூடாது மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் ஜீனத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்'.என கூறியுள்ளான். (அல் குர்ஆன் 24:31)

பெண்களின் அவ்ரத் என்று வரும்போது முகம், இரண்டு மணிக்கட்டுகள் இவை இரண்டையும் தவிர மற்ற அனைத்தையும் மறைக்கப்பட வேண்டும். தலையையும் கூட முழுமையாக மறைக்க வேண்டும். காரணம் வெளியில் செல்லும் போது இவர்கள் யார் என்பதை அவர்களின் உறவினர்கள் அடையாளம் கண்டுகொள்ள, சாட்சி சொல்வதற்க்காக, கடன், கொடுக்கள் - வாங்கள், வியாபாரம் செய்யும் போது இன்னார் என்று தெரிய வேண்டும் என்பதற்காகதான் முகத்தை மறைக்க வேண்டிய அவசியம் கிடையாது.

அதேபோன்று தமது வேளைகளை செய்வதற்கு, எழுவதற்கு பாத்திரங்களை கழுவதற்கு இரண்டு கைகளும் திறந்து இருந்தால்தான் செய்ய முடியும். மாறாக கைகளையும் மறைத்து உரைபோட்டிருந்தால் அத்தியாவசியமான வேளைகளை செய்ய முடியாது. அந்த அடிப்படையில் பொதுவாக முகம், இரண்டு மணிக்கட்டுகள் திறந்து இருந்தால் தான் இந்த பணிகளை வேளைகளை செய்ய முடியும்.

ஆகையினால் பெண்கள் இந்த இரண்டையும் மறைக்க வேண்டியதில்லை என்பதனால் ஆண்கள் பெண்களுடைய முகத்தை, கைகளை பார்க்கலாம் என நாம் புரிந்து கொள்ளக்கூடாது. ஒரு ஆண் அன்னிய பெண்ணையும், ஒரு பெண் அன்னிய ஆணையும் பார்க்கக் கூடாது என்பதுதான் சட்டம். எனவே மறைக்க வேண்டியவை என்பது வேற - பார்த்தல் சட்டம் என்பது வேற.

மேலும் பெண்கள் முகத்தை மறைக்க வேண்டிய அவசியமில்லை. அதே நேரத்தில் சில சூழ்நிலைகளில் அதாவது அன்னிய ஆண்கள் உள்ள இடங்களில் அதில் மோசமான எண்ணங்கள், காம நோய்யுள்ள உள்ளங்கள் இப்படிப்படட சில ஆண்கள் இருப்பார்கள். பெண்கள் முகத்தை மறைப்பது அவசியமில்லையென்றாலும் அப்படியான ஆண்கள் உள்ள இடத்தை கடந்து செல்வதற்க்காக முகத்தை மறைப்பது தக்வா எனும் பேணுதல் அடிப்படையில் கூடுமான சிறந்த செயலாகும்.

இந்த செயல் பெண்கள், ஆண்கள் இரு சாராருக்கும் நல்லதாகும். எனவே பெண்கள் முகம் மூடுவது கடைமையில்லை என்பது எதார்த்தமான சட்டமாகும். சூழ்நிலைகள் என்று வரும்போது அதாவது பெண்கள் முகத்தை மூடுவது கடமையில்லை என்று ஆண்கள் மத்தியில் முகத்தை திறந்து காட்டிக்கொண்டு செல்லாமல் வெட்க உணர்வை காட்ட வேண்டும் என்ற அடிப்படையில் யாருடைய உள்ளங்களும் என்னத்தால் பாவங்கள் செய்துவிட நாம் வழிவகுத்துவிடக் கூடாது. சூழ்நிலைக்கும் தேவைகளுக்கு ஏற்றவாரும் பெண்கள் முகங்களை மறைத்துக் கொள்வது பாதுகாப்பான பேணுதலான சிறந்த காரியமாகும்.

♦  (நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக:அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்.(அல்குர்ஆன் 24:30) இன்னும், முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்.(அல்குர்ஆன் 24:31)

♦  விசுவாசியான பெண்களுக்கு அவர்கள் தங்கள் தலை முந்தானைகளை தாழ்த்திக் கொள்ளுமாறு நீர் கூறுவீராக! இதனால் அவர்கள் (கண்ணியமானவர்கள் என்று) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். (அல் குர்ஆன் 33:59)

♦  நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பட்டாலான மேலாடையும் கீழாடையும் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது. அதை அவர்கள் எனக்கு அன்பளிப்பாக அனுப்பி வைத்து. பெண்களுக்கு தலைக்கு போடும் முக்காடாக கத்தரித்துக் கொள்ளவே அனுப்பினேன் - என்று கூறினார்கள்.


​அறிவிப்பாளர்: ஹழ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு

நூல்: முஸ்லிம்


முக்காடாக பெண்கள் தலையை மறைத்துள்ளார்கள் என்பதும் இந்த செய்தியிலிருந்து விளங்கலாம்.

♦  இஸ்லாத்தில் ஆரம்ப கட்டத்தில் ஜில்பாப் (தலை துணி) அணிய அனைவருக்கும் ஒரே கட்டளை இருந்தது. (அல்குர்ஆன் 33:59) (ஜில்பாப் என்றால் அர்த்தம் தலை துணி என்று ஹதீஸில் இல் காணலாம் (புஹாரி 351) கிமார் என்றால் தலையில் இருந்து மார்பின் மீது போடுவது என்று குர்ஆன் வசனத்திலே விளங்கலாம் (அல்குர்ஆன் 24:31)

♦  நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம், ஏதேச்சையாக (அன்னியப் பெண் மீது) பார்வை விழுவதைப் பற்றிக் கேட்டேன். அப்போது எனது பார்வையை (உடனடியாகத்) திருப்பிக்கொள்ள வேண்டுமென அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர் ஹழ்ரத் ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலியல்லாஹு அன்ஹு)

​நூல்கள் - முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத்

♦   அலியே! (ரலியல்லாஹு அன்ஹு) எதிர்பாராது அன்னியப் பெண்ணைப் பார்க்க நேரிட்டால் மீண்டும் பார்க்காதே!. ஏனெனில் முதல் பார்வை உனக்கு (அனுமதிக்கப்பட்டு) உள்ளது. இரண்டாம் பார்வை (அனுமதிக்கப்பட்டது) இல்லை. என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹழ்ரத் புரைதா (ரலியல்லாஹு அன்ஹு)

​நூல்கள் - திர்மதீ, அபூதாவூத்

♦  நானும் மைமூனா (ரலியல்லாஹு அன்ஹா)வும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் இருந்த போது இப்னு உம்மி மக்தூம் (ரலியல்லாஹு அன்ஹு) வந்தார்கள். (ஹிஜாப் சம்பந்தமான கட்டளை வந்த பிறகு இது நடந்ததாகும்). அப்போது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், ''இவரை விட்டும் நீங்கள் இருவரும் மறைந்து கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். அதற்கு நான் "அவர் குருடாயிற்றே! அவர் எங்களைப் பார்க்கவோ அறியவோ முடியாதே?'' என்று கேட்டேன். அப்போது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ''நீங்கள் இருவரும் குருடிகளா? நீங்கள் அவரைப் பார்க்க மாட்டீர்களா?'' என்று கேட்டார்கள்.

அறிவிப்பவர்: ஹழ்ரத் உம்மு ஸலாமா (ரலியல்லாஹு அன்ஹா)

​நூல் – திர்மிதீ

♦  அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் கூறுகிறார்கள்: (பெண்களாகிய) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடன் இஹ்ராம் அணிந்த நிலையில் இருந்த போது ஒட்டகத்தில் பயணிப்பவர்கள் எங்களை கடந்து சென்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் எங்களுக்கு அருகில் வரும் போது தலையில் உள்ள முக்காட்டை முகத்தின் மீது போட்டுக் கொள்வோம். அவர்கள் எங்களை கடந்து சென்றுவிட்டால் முக்காட்டை அகற்றிக் கொள்வோம்.  நூல்: அபூதாவுத் 1562

இந்த ஹதீஸினை நோக்கும் போது பெண்கள் முகத்தை மூடுவது தக்வா எனும் பேணுதல் அடிப்படையில் முகத்தை மறைப்பது சிறந்ததாகும். ஏனென்றால் இந்தச் செய்தியில் ஆண்கள் பெண்களைக் கடந்து செல்லும் போது பெண்கள் முகத்தை மூட வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மனைவி ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் பெண்களுக்கு முன்மாதிரியாக நடந்துள்ளார்கள்.

ஹழ்ரத் அனஸ் இப்னு மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்கள், பர்தா (சட்டம்) தொடர்பான இந்த இறைவசனத்தை மக்களிலேயே அதிகமாக அறிந்தவன் நான்தான். நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் துணைவியாரான) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலியல்லாஹு அன்ஹா) இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களிடம் மணப்பெண்ணாக அனுப்பி வைக்கப்பட்டு அவர்களுடன் வீட்டில் இருந்தார்கள். அப்போது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ('வலீமா' விருந்துக்கான) உணவைத் தயாரித்து மக்களை அழைத்தார்கள். மக்கள் (சாப்பிட்டுவிட்டு) பேசிக்கொண்டே அமர்ந்தார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வெளியே வரவும் திரும்பச் செல்லவுமாக இருந்தார்கள். மக்களோ பேசிக் கொண்டே அமர்ந்திருந்தனர்.

அப்போதுதான் அல்லாஹ்' இறைநம்பிக்கையாளர்களே! நபியின் இல்லங்களில் (அழைப்பின்றி) நுழையாதீர்கள். அவ்வாறு (நபியின் இல்லத்தில் நடக்கும்) விருந்துக்காக உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டாலும், அப்போதும் கூட உணவு தயாராவதை எதிர்பார்த்து (அங்கே காத்து) இராதீர்கள். மாறாக, (உணவு தயார்; வாருங்கள் என) நீங்கள் அழைக்கப்படும்போது நுழையுங்கள். சாப்பிட்டு முடிந்ததும் கலைந்து சென்றுவிடுங்கள். பேசிக்கொண்டிருப்பதில் ஆர்வமாய் இருந்துவிடாதீர்கள். நிச்சயமாக உங்களின் இச்செயல் நபிக்கு வேதனை அளிக்கிறது. ஆயினும், இதனை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுகிறார். ஆனால், அல்லாஹ்வோ சத்தியத்தைக் கூற வெட்கப்படுவதில்லை. நபியின் துணைவியரிடம் நீங்கள் ஏதேனும் ஒரு பொருளை (அவசியப்பட்டு) கேட்கவேண்டுமென்றால், திரைக்குப் பின்னாலிருந்து கேளுங்கள்' எனும் (திருக்குர்ஆன் 33:53 வது) வசனத்தை அருளினான். இதையடுத்துத் திரை போடப்பட்டது. மக்களும் எழுந்து விட்டார்கள்.


​​ஸஹீஹூல் புஹாரி- 4792 

இங்கே அல்குர்ஆனிய வசனம் அருளப்பட்டதன் பின் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மனைவிக்கும் மக்களுக்கும் திரைபோடப்பட்டது என்பது தெளிவாகிறது. இதன் அர்த்தம் முஃமீன்களின் அன்னையர் அறைகுறை ஆடைகளுடன் இருப்பார்கள் என்பதல்ல மாறாக அவர்களை பார்க்க முடியாது என்பது தெட்டத் தெளிவாகிறது.

♦  ஹழ்ரத் அபூ ஷுஐப் (ரலியல்லாஹு அன்ஹு) கூறுகின்றார்கள்: உமைமா பின்து ரகீகா (ரலியல்லாஹு அன்ஹா) இஸ்லாத்தை ஏற்று பைஅத் செய்வதற்காக ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தார்கள். அப்போது ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் 'அல்லாஹ்வுக்கு இணைவைக்கக் கூடாது எனவும், திருடக்கூடாது எனவும், விபச்சாரம் செய்யக் கூடாது எனவும், உமது குழந்தையைக் கொலை செய்யக் கூடாது எனவும், அபாண்டத்தை நீராகவே உருவாக்கி (எங்களிடம்) கொண்டுவரக் கூடாது எனவும், மையித்திற்காக ஓலமிட்டு அழக்கூடாது எனவும், ஆரம்பகால ஜாஹிலிய்யத்தில் அழகு அலங்காரத்தை வெளிப்படுத்தியது போன்று வெளிப்படுத்த வேண்டாம் எனவும் உம்மிடம் பைஅத் எடுக்கின்றேன்.' எனக் கூறினார்கள். (நூல் : அஹ்மத்) இங்கும் தங்களது அழகுகளை வெளிக்காட்டக் கூடாது என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அப்பெண்ணிடம் பைஅத் எடுக்கின்றார்கள். அழகு முகம் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

♦  ஹழ்ரத் இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்கள், 'இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே! இஹ்ராம் அணிந்திருக்கும் போது எந்த ஆடைகளை நாங்கள் அணிய வேண்டுமென்று நீங்கள் கட்டளையிடுகிறீர்கள்?' என்று ஒருவர் எழுந்து கேட்டதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் 'நீங்கள் சட்டைகளையும், கால் சட்டைகளையும், தலைப் பாகைகளையும், தொப்பிகளையும் அணியாதீர்கள்! ஒருவரிடம் செருப்புகள் இல்லையென்றால், அவர் காலுறைகளை (அவற்றின் மேலிருந்து) கரண்டைக்குக் கீழுள்ள பகுதிவரை கத்தரித்துக் கொள்ளட்டும்! குங்குமப் பூச்சாயம், வர்ஸ் எனும் செடியின் சாயம் தோய்ந்த எதனையும் அணியாதீர்கள்! இஹ்ராம் அணிந்த பெண் முகத்திரை அணியக் கூடாது; அவள் கையுறைகளையும் அணியக் கூடாது!' என்று பதிலளித்தார்கள். ஸஹூஹூல் புஹாரி 1838


​இவ் விதிவிலக்கானது இஹ்ராம் அல்லாத நிலையில் பெண்கள் முகத்தை மூடுவது தக்வா எனும் பேணுதல் என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

எனவே மேலே குறிப்பிடப்பட்ட குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்கள் அடிப்படையில் கெட்ட - காம நோயுள்ள அன்னிய ஆண்கள் உள்ள இடங்களில் அவர்கள் மோசமான எண்ணங்கள் கொண்டு பார்ப்பார்கள் என்றால் அந்த இடத்திலிருந்து கடந்து செல்வதற்காக பெண்கள் முகத்தை மூட வேண்டும் அது தக்வா எனும் பேணுதல் அடிப்படையில் கூடுமான சிறந்த செயலாகும்.