MAIL OF ISLAM

Knowledge & Wisdom



பெரியோர்களின் கை, கால்களை முத்தமிடலாமா? 


எழுதியவர்: மௌலவி  S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.


இஸ்லாத்தின் பார்வையில் பெரியோர்களின் கை, கால்களை முத்தமிடுவது நபிகள் நாயகம் ﷺ அவர்களின் வழிமுறை.

♣ புதுமை விரும்பிகளாகிய வஹ்ஹாபிகளின் நிலைப்பாடு:

வழிகெட்ட வஹ்ஹாபிகள் நல்லமல்களை நாசப்படுத்துவதில் முன்னிலை வகிக்கிறார்கள். இவர்களது நாச கருத்துகளை சில பொதுமக்களிடம் கூறி அவர்களை நம்பவைத்து வழிகேட்டுக்கு அடித்தளம் இட்டுக் கொள்கின்றார்கள்.


​​அந்த வரிசையில் பெரியார்கள், ஷைகுமார்களின் கை,கால்களை முத்தமிடுவது கூடாது, ஷிர்க் என்றும் அதனை செய்பவர்கள் முஷ்ரிகீன்கள் என்றும் ஹதீஸ்களை ஆய்வு செய்யாமலும் சில நபிமொழிகளை மறைத்து இருட்டடிப்பு செய்து கிருக்கு பிடித்தவர்களாக வழிகேட்டில் சென்று கொண்டு இருக்கிறார்கள். வஹ்ஹாபிகளே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்.

♦இன்னும் சில வஹ்ஹாபிகள் நல்லடியார்கள் ஷைகுமார்களின் கை,கால்களை முத்தமிட்டால் ஷைகுமார்களுக்கு சுஜூது செய்கிறார்கள் என்று சுன்னத் வல் ஜமாஅத்தினர்களைப் பார்த்து விமர்சனம் செய்வார்கள். எனவே சுன்னத் வல் ஜமாஆத் உலமாக்கள் அன்று தொட்டு இன்றுவரை கூறி வரும் விடயம்தான் 'இறைவனை தவிர வேறு எந்த ஒருவருக்கும் அல்லது எந்த ஒன்றுக்கும் அது நல்லடியார்களின் கப்றுகளாக இருக்கட்டும், பெரியோர்களாக இருக்கட்டும் இன்னும் சிறப்புக்குறிய வஸ்துக்களாக இருக்கட்டும் அவர்களுக்கு அல்லது அவைகளுக்கு இபாதத் என்ற அடிப்படையில் சுஜூது செய்வது ஷிர்க் என்றும் கண்ணியம் - மரியாதை இதுபோன்ற அடிப்படையில் சுஜூது செய்வதும் ஹராம்' என்று தான் சொல்லி வருகின்றார்கள்.

மேலும் ஷைகுமார்களுக்கு சுஜூது செய்யலாம் கூடும் என்று சுன்னத் வல் ஜமாஅத் மார்க்க அறிஞர்கள் எங்கேயாவது கூறியுள்ளார்களா? அப்படி எந்த இமாம்கள், அறிஞர்கள் எந்த கிதாபில் கூறியுள்ளார்கள் என்பதை வஹ்ஹாபிகளால் நிறுபிக்க முடியுமா? கியாமத் நாள் வரைக்கும் நிறுபிக்க முடியாது. ஏனெனில் சுன்னத் வல் ஜமாஅத் இமாம்கள் அறிஞர்கள் யாரும் ஷைகுமார்களுக்கு சுஜூது செய்யலாம்,ஷைகுமார்களுக்கு ஸுஜூது செய்யுங்கள் என்று கூறவே இல்லை மாறாக வஹ்ஹாபிகள் பாமர மக்களை வழிகெடுக்க இப்படி கூறிவருவது ஓர் ஆயுத வார்த்தைகள் என்பதுதான் உண்மை.

♦ அந்த அடிப்படையில் சுன்னத் வல் ஜமாஆத் ஈமானிய சொந்தங்கள் ஷைகுமார்களுக்கு சுஜூது செய்யவில்லை மாறாக நபிகளாரின் வழியில் அவர்களின் கை, கால்களை குனிந்து முத்தமிடுகிறார்கள் இதுதான் உண்மை. எனவே வஹ்ஹாபிகளுக்கு சுஜூதுக்கும், குனிந்து முத்தமிடுவதற்க்கும் வித்தியாசம் தெரியாமல் ஷைகுமார்களுக்கு சுஜூது செய்கிறார்கள் என்று ஈமானிய சொந்தங்களாகிய சுன்னத் வல் ஜமாஆத்தினர்களைப் பார்த்து விமர்சனம் செய்து மக்களை குழப்பிக்கொண்டு இருக்கிறார்கள்.


​​சுஜூது என்றால் என்ன? சுஜூதுடைய நிபந்தனைகள் என்ன? சுஜூதுடைய உருப்புக்கள் என்ன? என்பதற்குறிய விளக்கங்களை வஹ்ஹாபிகள் தெரிந்திருப்பார்கள் என்றால்! நிச்சயமாக ஷைகுமார்கள், பெரியார்களின் கை, கால்களை முத்தமிடுபவர்களைப் பார்த்து சுஜூது செய்கிறார்கள் என்று ஒரு போதும் கூறமாட்டார்கள். அந்த அடிப்படையில் “செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதுதான் கிடைக்கிறது" என்று இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள் என உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள். ஷஹீஹ் புகாரி 54.

ஒருவர் தரையில் தூங்கிக்கொண்டு இருக்கும் சிறு குழந்தையை முத்தமிடுவதாக இருந்தால் குனிந்து தான் முத்தமிட வேண்டும் அப்படி குனிந்து முத்தமிடுபவரைப் பார்த்து அவர் குழந்தைக்கு சுஜூது செய்கிறார் என்று சொல்ல முடியுமா? இந்த வழிகெட்ட வஹ்ஹாபிகள் சொன்னாலும் சொல்வார்கள் ஆகவே குனிந்து முத்தமிடுவது சுஜூது அல்ல. மேலும் குனிந்து முத்தமிடுவது கூடாது என்றால் அதற்கு ஆதாரங்களை முன்வையுங்கள் எப்படி எந்த முறையில் முத்தமிட வேண்டும் என்று.

♣  பெரியார்கள், ஷைகுமார்களின் கை, கால்களை முத்தமிடுவதற்கான ஆதாரங்கள் 

ஸாலிஹான அமல் செய்வோர், பெற்றோர்,மற்றும் வயதில் மூத்த கண்ணியமிக்கோரை மரியாதை செய்ய நம் இஸ்லாம் நமக்கு பல வழிமுறைகளையும் சான்றுகளையும் வழங்கியுள்ளது.அப்படியான வழிமுறையில் ஒன்றே மேற்கூறப்பட்டோரின் கை, கால்களை முத்தமிடல்.

♦ அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தன்னைவிட வயதில் முதிர்ந்தவர் என்ற ஒரு நோக்கத்துக்காக அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கையையும் இரு காலையும் முத்தமிட்டார்கள்.

நூல்: இமாம் புஹாரியின் அதபுல் முப்ரத் பக்கம் 976

♦ இரு யஹூதிகள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சில கேள்விகள் கேட்டு பதில் கிடைத்தவுடன் திடுக்கிட்டு நாயகத்தை நபியாக ஏற்று நபிகளாரின் கையையும் கால்களையும் முத்தமிட்டனர்.

நூல் : திர்மிதீ, பாடம்: சூரத் இஸ்ரா விளக்கவுரை

♦ முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன் மகளாகிய அன்னை பாதிமா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் வீட்டுக்கு சென்றால் அவர்கள் தன் தந்தை முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கையை முத்தமிடுபவளாக இருந்தார்கள்.

நூல்: அபூ தாவூத், திர்மிதீ, நஸாயீ

♦ கஃப் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு என்ற ஸஹாபி அல்லாஹ் மன்னித்து விட்டதாக நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்த போது அந்த ஸஹாபியவர்கள் உடனே வந்து நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் கையை முத்தமிட்டார்கள்.

நூல்: துர்ருல் மன்தூர் பாகம் 4, பக்கம் 314

♦ அப்துல் கைஸ் தூது குழுவினர் கூறினார்கள் : நாம் மதீனாவுக்கு வந்த போது நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்களின் கை மற்றும் கால் பாதத்தை எங்களில் யார் முதலில் முத்தமிடுவது என்பதற்காக ஓடுவோம்.


​​நூல்கள்: அபூதாவூத் 5206, ஸூனன் பைஹகீ, முஸ்னத் பஸ்ஸார்

♦ சில யூதர்கள் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்களின் கைகள், கால் பாதத்தை முத்தமிட்டார்கள்.


​​நூல் : இப்னு மாஜா 3705

♦ ஒருவர் நன்மக்களின் காலை முத்தமிடுவது அனுமதிக்கப்பட்டதாகும்.


​​இமாம் இப்னு ஹஜருல் அஸ்கலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்.

​நூல் பத்ஹுல் பாரி

♦கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரை அபூ அய்யூப் அல் அன்ஸாரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் முத்தமிட்டார்கள்.


​​நூல் முஸ்னத் அஹ்மத் பாகம் 48 பக்கம் 77

♦ பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரை முத்தமிட்டார்கள்.


​நூல் : இப்னு அஸாகிர் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் தாரீகு திமிஸ்க் பாகம் 7 பக்கம் 147

♦மேலும் மய்யதையும் கூட கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஸஹாபாக்களும் முத்தமிட்டிருக்கிறார்கள். உஸ்மான் இப்னு மல்ஊன் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் இறந்த போது அவர்களின் (மய்யித்தை) முகத்தை கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முத்தமிட்டார்கள்.


​​நூல் திர்மிதி


​​♦  கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வுலகைவிட்டும் மறைந்த போது அவர்களின் புனித உடலை அபூ பக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் முத்தமிட்டார்கள்.


​​நூல் புகாரி


​​எனவே பெரியார்கள், ஷைகுமார்களின் (கை, கால்கள், மைய்யத், கப்ர்) போன்றவற்றை அவர்கள் மீது நாம் கொண்டுள்ள அன்பின் வெளிப்பாட்டின் காரணத்தினால் முத்தமிடல் என்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட விடயமாகும்.

உத்தமர்கள் காட்டித்தந்த இந்த நற்பண்பு முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாபை பின்பற்றும் வஹ்ஹாபிகளுக்கு பித்அத்தாக தெரியலாம். ஆனால் முஸ்லிம்களுக்கு அது ஆகுமான இஸ்லாம் மார்க்கம் அனுமதித்த காரியமே. போலிகளை கண்டு உண்மை விசுவாசிகள் ஏமாற மாட்டார்கள். பெரியோரையும் பெற்றோரையும் கண்ணியம் செய்யுங்கள்.

பெரியார்கள், ஷைகுமார்களின் கால்களை, கப்ருகளை குனிந்து முத்தமிடும் போது ஸஜதாவின் அமைப்பு (தோற்றம்) வெளிப்பட்டால் அது கூடுமா?

(இபாதத்) என்ற நோக்கத்துடன் ஷைகுமார்கள், பெரியார்களின் கப்ருகளுக்கு ஸுஜூது செய்வது ஷிர்க், மேலும் (கண்ணியம் - மரியாதை) என்ற நோக்கத்துடன் அவர்களுக்கு ஸுஜூது செய்வது ஹராம், மேலும் யதார்தத்தில் பரக்கத் அன்பின் வெளிப்பாட்டின் காரணத்தினால் வலிமார்களின் ஷைகுமார்களின் கால்களை, கப்ருகளை குனிந்து முத்தமிடும் போது ஸஜதாவின் (அமைப்பு - தோற்றம்) வெளிப்பட்டால்-வந்தால் அது கூடும்.

இமாம் இப்னு ஹஜருல் ஹைதமி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது 'ஜவ்ஹர் அல்முனல்லம்' என்ற கிதாபில் கூறுகிறார்கள். ருகூவைக் கொண்டே, ஸூஜூதைக் கொண்டே கப்ரையோ, அல்லது தரையோ முத்தமிடுவது ஹராம் என்று இதை அடிப்படையாக வைத்து சிலர் ஷைகுமார்களின் கால்களை, கப்ருகளை குனிந்து முத்தமிடும் போது ஸஜதாவின் (அமைப்பு - தோற்றம்) வந்தால் கூடாது ஹராம் என்று கூறுவார்கள் இது தவரான கருத்தாகும்.

ஆகவே இமாம் இப்னு ஹஜருல் ஹைதமி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதன் விளக்கம் என்ன? இவர்கள் கூறும் விளக்கம் என்ன? என்பதை நாம் அனைவரும் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும். குனிந்து முத்தமிடும் போது ஸஜதாவின் (அமைப்பு - தோற்றம்) வந்தால்- வெளிப்பட்டால் அது கூடாது ஹராம் என்று கூறுபவர்கள் இமாம் இப்னு ஹஜருல் ஹைதமி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறிய கருத்தினை (சரியாக - தெளிவாக) புரிந்து கொள்ளாததே இதன் விபரீதமாகும்.


​​ருகூவைக் கொண்டே ஸூஜூதைக் கொண்டே முத்தமிடுவதான் கூடாது, ஆனால் முத்தமிடும் போது ஸஜதாவின் ( அமைப்பு- தோற்றம்) வெளிப்பட்டால் அது கூடும். எனவே ருகூவைக் கொண்டே, ஸூஜூதைக் கொண்டே முத்தமிடுபதற்கும், முத்தமிடும் போது ஸஜதாவின் அமைப்பு வெளிப்படுவதும் இந்த இரண்டு அமைப்பும் வேறு இதில் முதலாவது அமைப்பைத்தான் இமாம் இப்னு ஹஜருல் ஹைதமி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹராம் என கூறியுள்ளார்கள்.

உதாரணமாக ஸஹாபாக்கள் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரை எந்த விதத்தில் முத்தமிட்டார்கள். ஸஹாபாக்கள், யூதர்கள் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் கால் பாதத்தை எந்த அமைப்பில் முத்தமிட்டார்கள் எனவே இவ்விரு அமைப்பிலும் நாம் சிந்திக்கும் போது குனிந்து தான் முத்தமிட வேண்டும் குனியாமல் முத்தமிட முடியாது. அந்த அடிப்படையில் குனிந்து முத்தமிடும் போது ஸஜதாவின் அமைப்பு - தோற்றம் வந்தால் கூடும். பெரும்பாலும் அந்த அமைப்பு வராது. ஆனால் ருகூஃவைக் கொண்டே, ஸஜதாவைக் கொண்டே முத்தமிடுவது தான் கூடாது.

பெரியார்களின் பாதங்களை, கப்ருகளை குனிந்து உதட்டினால் முத்துவதை ஸுஜூதே தஃழீமாகக் கருதுவது மிகப் பெரும் பிழையாகும். காரணம் ஸஹாபாப் பெருமக்கள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பாதங்களை முத்தியதாக பதிவாகியுள்ள நபிமொழிகளுக்கு விளக்கம் தரும் சிலர் கரத்தினால் தொட்டு முத்துதல் என்பதாகக் கருத்துக் கொள்கின்றனர். இது தவறானதாகும்.


​​நபிமொழிக் கிரந்தங்களில் 'பாபு தக்பீலில் யதி வர்ரிஜ்லி' கரம் பாதங்களை முத்தமிடுதல் என்ற தலைப்பு இடம் பெற்றுள்ளதாய் கரத்தினை முத்தும் விதமே பாதத்தை முத்தும் விதமாகும். பாதத்தை உதட்டால் முத்தமிடுவது ஸுஜூதே தஃழீம் என்றால் 'தக்பீல்' என்ற சொல் உதட்டால் முத்தமிடுவதற்கே அன்றி கையால் தொட்டு முத்துவதற்கு அல்ல. அதற்கெனும் 'இஸ்திலாம்' (கையால் தொட்டு முத்துதல்) என்ற பதம் உண்டு.பாதங்களை முத்துவதற்கும் ஸஜ்தாவிற்கும் என்ன தொடர்பு? பாதத்தை முத்தமிடல் என்பது தலையை அல்லது உதட்டை பாதத்தில் வைப்பதும், ஸஜ்தா என்பது நெற்றியை தரையில் வைப்பதும் ஆகும். இதில் சந்தேகம் கொள்வோர் அல்லாஹ்வின் நேசர்களுக்குப் புரியும் கண்ணியத்தினை மறுப்போராகும். ஆகையால் பெரியோர்களின் பாதங்களை குனிந்து முத்துவோரை ஸஜ்தா செய்வதாக தவறாக எண்ணம் கொள்ளாதீர்கள் என்று அஹ்மது ரிழா கான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்கள் 'பதாவா ரிழ்விய்யா' (10:267) வில் கூறியுள்ளார்கள்.

மிஷ்காத் நபிமொழிக் கிரந்தத்திற்கு விரிவுரை வழங்கிய அல்லாமா அஹ்மது ரிழா கான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பெரியார்களின் கரங்களையும், பாதங்களையும் முத்துவது நபிமொழியாகும். பாதத்தினை கரத்தால் தொட்டு முத்தமிடலாம், உதட்டினாலும் முத்தமிடலாம். உதட்டால் முத்துவதே சிறந்ததாகும் என்று கூறியுள்ளார்கள்.


​​மிர்காதுல் மனாஜீஹ் 03:364

ஸுஜூது என்பது அல்லாஹ்வுக்கான வணக்கம் என்றால் நபி யூசுப் அலைஹிஸ் ஸலாம் அவர்களின் தகப்பனாரும், சகோதரர்களும் நபி யூசுஃப் அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மரியாதை நோக்கில் புரிந்த ஸுஜூதும், மலக்குமார்கள் (அமரர்கள்) ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு செய்த ஸுஜூதும் தரையில் நெற்றியை வைத்ததாகும்.


​​ஆகவே மேற்கண்ட செய்தியிலிருந்து (கண்ணியம் - மரியாதை) நிமித்தம் இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் ஸஜதா தஃழீம் கூடுமானதாக இருந்தது பிறகு அந்த செயல் தடுக்கப்பட்டன, பாதங்களை முத்துவது என்பது உதட்டை பாதத்தில் வைப்பதாகும். இதனை ஸுஜூதாகக் கருதுவது மேற்கூறிய பெரியார்களின் தீர்ப்பின் பிரகாரம் அறியாமையாகும். உதாரணமாக தரையில் தூங்கும் குழந்தையை ஒருவர் முத்தமிடுவதாக இருந்தால் குனிந்து தான் முத்தமிட வேண்டும் அந்த அடிப்படையில் குனிந்து முத்தமிடும் போது முத்தமிடுபவரை பார்த்து குழந்தைக்கு ஸ‌ஜதா செய்கிறார் என்று சொல்ல முடியுமா? ஆகவே ஸஜதாவின் அமைக்கு வரத்தேவையில்லை தாராளமாக குனிந்து முத்தமிடலாம்.