MAIL OF ISLAM

Knowledge & Wisdom



பெரியோர்களுக்கு எழுந்து நின்று மரியாதை செய்யலாமா?

​எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.


யாநபி பைத்தின்போதும், ஏனைய நிகழ்ச்சிகளின் முடிவில் ஸலவாத் சொல்லும் போதும், பெரியோர்களுக்கு மரியாதை செய்வதற்காகவும் எழுந்து நிற்கலாமா?


​​

♣  இது பற்றி வழிகெட்ட வஹ்ஹாபிகளின் நிலைப்பாடு:-

மரியாதை செய்வதற்காக எழுந்து நிற்பது அந்திய மதத்தவர்களின் கலாசாரம், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறை கிடையாது என்று கூறுவது 'மரியாதை என்றால் என்ன' என்பது பற்றிய அடிப்படை அறிவே இல்லாத அறியாமைதான் காரணமாகும்.


​​ஆகவே சிறப்புடையோர்களையும், பெரியவர்களையும், ஷைகுமார்களையும், உஸ்தாத்மார்களையும், உலமாக்களையும் கண்ணியப்படுத்தும் பொருட்டு எழுந்து நிற்கலாம். இது பற்றி ஸஹீஹான நபிமொழிகள் உள்ளன.

​​​

♣  இஸ்லாத்தின் பார்வையில் எழுந்து மரியாதை செய்வது கூடுமா?

பெருமானாரின் மறைவுக்குப் பின்னால் அவர்களுக்கு மரியாதை கொடுப்பது பற்றி இமாம்களின் கருத்து: அல்லாமா கஸ்தலானி மற்றும் முஅத்தா இமாம், மாலிக்கின் விரிவுரையாளரான அல்லாமா துர்ஹானி ரஹ்மத்துல்லாஹி அலைஹிம் ஆகியோர் சொல்கின்றார்கள், அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஜீவிய காலமும், அவர்கள் இவ்வுலகை விட்டு மறைந்ததற்குப் பின் உள்ள காலமும் இவ்விரு வாழ்க்கைக்குமிடையே எத்தகைய வித்தியாசமும் இல்லை. அவர்கள் தங்கள் உம்மத்தினரைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இன்னும் அவர்கள் தமது உம்மத்துக்களின் நிலைகள், நடவடிக்கைகள், செயல்பாடுகள், மேலும் அவர்களின் எண்ணங்களைக் கூட அறிந்து கொள்கின்றனர்.

♦ ஷெய்கு அப்துல் ஹக் முஹத்திஸ் தெஹ்லவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றார்கள், இது விசயத்தில் உலமாக்களில் யாருக்குமே கருத்து வேறுபாடு கிடையாது. அதாவது அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மறைவுக்குப் பின்னரும் ஜீவியத்துடன் இருப்பதோடன்றி தமது உம்மத்துக்களின் அமல்களையும் அவர்களின் முன்னாலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் இன்னும் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை முன்னோக்குவோருக்கு தங்களின் அருள் புரிந்து அவர்களை வழிநடாத்தவும் செய்கின்றார்கள்.


​​நூல்: ஹாஷியா, அக்பாருல் அக்பார் பக்கம் 155

♦நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மரியாதை செய்யும் நோக்கில் எழுந்து நிற்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன. ஒரு முறை ஹழ்ரத் ஸஃத் இப்னு மஆத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மஸ்ஜிதுந் நபவியில் உட்கார்ந்திருந்தார்கள். அப்போது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள் உங்கள் தலைவரைக் கண்டால் எழுந்து நில்லுங்கள் என்று.


நூல் : மிஷ்காத், பாகம் 1, கிதாபுல் ஜிஹாத் பாபுல் கியாம்

♦  பாத்திமா ரலியல்லாஹூ அன்ஹா அவர்கள், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சந்திக்க வந்தால் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தனது மகளை எழுந்து நின்று வரவேற்று அவர்களை முத்தமிட்டு தனது இருக்கையில் அமரச் செய்வார்கள். நபியவர்கள் பாத்திமா ரலியல்லாஹூ அன்ஹா அவர்களைச் சந்திக்க வந்தால் பாத்திமா ரலியல்லாஹூ அன்ஹா அவர்கள் எழுந்து நின்று வரவேற்று அவர்களை முத்தமிட்டு தனது இருக்கையில் அமரச் செய்வார்கள்.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா)

நூல் அபூ தாவூத், திர்மிதீ -3872

♦ அபூ ஸயீத் அல்குத்ரீ ரலியல்லாஹூ அன்ஹூ அறிவித்தார்கள். (யூதர்களான) பனூ குறைழா குலத்தார் (கோட்டையிலிருந்து இறங்கி வந்து) ஸஅத் இப்னு முஆத்(ரலி) அவர்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளச் சம்மதித்தபோது, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஅத் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை அழைத்து வரும்படி ஆளனுப்பினார்கள். ஸஅத் (ரலியல்லாஹு அன்ஹு) அப்போது நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் ஒரு கழுதையின் மீதமர்ந்து வந்தார்கள் இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், “உங்கள் தலைவருக்காக எழுந்து நில்லுங்கள்” என்று (ஸஹாபா பெருமக்களிடம்) கூறினார்கள். ஸஅத் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் வந்து அல்லாஹ்வின் தூதருக்கு அருகே அமர்ந்தார்கள்.


​​நூல் புகாரி 3043

♦ அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னார்கள், ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மஜ்லிஸை விட்டு எழுந்தார்களேயானால், நாங்கள் எழுந்து நின்று கொண்டிருப்போம். எதுவரையென்றால் அவர்களின் மனைவியின் வீட்டை சேரும்வரை.(இமாம் பைஹகீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ஷூஃபுல் ஈமான் என்ற ஹதீஸ் கிரந்தத்தில் பதிவு செய்துள்ளார்கள்)

♦ அல்லாஹ் தனது திருமறையில் நபிகளாரின் உயர்வைப் பற்றியும், அவர்களின் கீர்த்தியைப் பற்றியும் கூறும்போது 'வலல் ஆகிரது கைருல்லக மினல் ஊலா'-நபியே! நாயகமே! உங்களுக்கு சென்ற நிமிடத்தைக் காட்டிலும் இனி வரக்கூடிய நிமிடமே உங்களுக்கு உயர்வானது' என்று.

அல்குர்ஆன் 93:04

♦ஆனால் கண்ணியம் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், முஃமின்களுக்குமே உரியது; எனினும், இந்நயவஞ்சகர்கள் (அதை) அறிந்து கொள்ளமாட்டார்கள்.


​அல்குர்ஆன் : 63:8



ஆகவே நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எம்மைவிட்டும் மறைந்தாலும் எங்களிலேதான் இருக்கிறார்கள்.


♦ 'நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் உங்களிலேயே இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள்'.

(அல்குர்ஆன் 49:17)​​

​​

♣  எழுந்து நின்று மரியாதை செய்வது உயிருடன் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல இறந்து போனவர்களுக்கும் எழுந்து நின்று மரியாதை செய்வதற்காக ஆதாரம்.

♦  இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: ஜனாஸாவைக் கண்டால் அது உங்களைக் கடந்து செல்லும் வரை எழுந்து நில்லுங்கள். அறிவிப்பில் “உங்களைக் கடக்கும்வரை” அல்லது (பூமியில்) வைக்கப்படும வரை (நில்லுங்கள்)” என்பது அதிகமாக உள்ளது.


​​ஷஹீஹ் புகாரி 1307

♦ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலியல்லாஹுஅன்ஹு) அறிவித்தார்கள். ஒரு ஜனாஸா எங்களைக் கடந்து சென்றது. உடனே நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எழுந்து நின்றார்கள். நாங்களும் எழுந்து நின்றோம். பின்பு நாங்கள் “இறைத்தூதர் அவர்களே! இது ஒரு யூதனின் ஜனாஸா” என்றோம். அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், “ஜனாஸாவைக் கண்டால் எழுந்து நில்லுங்கள்” எனக் கூறினார்கள்.

ஷஹீஹ் புகாரி 1311


​​

♣  எழுந்து மரியாதை செய்வது பற்றி இமாம்களின் கருத்துக்கள்.

சிறப்புடையோர்களையும் பெரியவர்களையும் கண்ணியப்படுத்தும் பொருட்டு எழுந்து நிற்கலாம். இது பற்றி ஸஹீஹான நபிமொழிகள் உள்ளன.


​​ஆதாரம்: பதாவா நவவி பக்கம் 48,49

♦ ஞானம் உள்ளோர், நற்குணமுடையோர், நீதமாக நடக்கும் அதிகாரி, பெற்றோர் ஆகியோருக்கு மரியாதைக்காக எழுந்து நிற்பது சுன்னத்


​​ஆதாரம் பத்ஹுல் முயீனு; பாகம் 4, பக்கம் 192

♦ சிறப்புடையோரை கண்ணியப்படுத்தும் நோக்குடன் எழுந்து நிற்பது சுன்னத்.


​​நூல்கள் : பத்ஹுல் பாரி பாகம் 13 பக்கம் 288,293 தன்வீருல் குலூப் பக்கம் 200

♦ யாநபி பைத்தின்போதும் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் மீது ஸலவாத் சொல்லும் போது எழுந்து நிற்க்க வேண்டும்.


​​நூல்: அகாயிதுஸ் ஸூன்னஹ் பக்கம் 169

♦  பெரியவர்களையும் கண்ணியப்படுத்தும் பொருட்டு எழுந்து நிற்கலாம். இது பற்றி ஸஹீஹான நபிமொழிகள் உள்ளன.


​​நூல்: பதாவா நவவி பக்கம் 48,49

♦  எழுந்து நின்று மரியாதை செய்வது பற்றி மேலும் பார்க்க (நூல் திர்மிதி -3872, புகாரி 3043)

எனவே, நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மறைவுக்குப் பின்னரும் நம் மத்தியில் ஹயாத்தோடுதான் இருக்கின்றார்கள் என்பதை குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் இமாம்களின் கருத்து நிரூபிக்கின்றது. மேலும் நாம் அவர்களுக்கு செய்யக் கூடிய கண்ணியத்தையும் ஏற்றுக் கொள்கின்றார்களே என்பது நிரூபணம்.


​​எனவே ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நம் மத்தியில் ஹாழிர், நாளிராகவே இருக்கின்றார்கள் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை ஆகவே மரியாதைக்காக எழுந்து நிற்பது கூடாது என்று எந்தவொரு ஹதீதும் வரவில்லை