MAIL OF ISLAM

Knowledge & Wisdom



​பெருமானாரின் பிறப்பின் தனி சிறப்புக்களும் அற்புதங்களும் 

​ 

​எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.

உயிருக்கு உயிரான உயிரிலும் மேலான கண்மணி நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பின் தனிச் சிறப்புக்களும், அற்புதங்களும்.


​​

நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பின் தனிச் சிறப்புகள்.

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பை அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலா சிறப்பாக்கினான், அவர்கள் பிறந்த பொழுது பல்வேறு அதிசயங்களும் அற்புதங்களும் வெளிப்பட்டன. அதன் மூலம் அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலா, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் உயர்ந்த அந்தஸ்தை வெளிப்படுத்தி சிறப்பித்தான்.

♦ அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த பொழுது பல்வேறு அற்புதங்களும், அதிசயங்களும் நிகழ்ந்தன! அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த பொழுது ஒரு நூர் ( ஒளி ) வெளிப்பட்டது! வீடு ஒளியால் நிரம்பியது! நட்சத்திரங்கள் இறங்கி அன்னாரின் பக்கம் நெருங்கின! அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் தாயார் ஆமினா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறியதாக உம்மு ஸலமா ரலியல்லாஹூதஆலா அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் அண்ணலாரைப் பெற்றெடுத்த இரவில் ஒரு மாபெரும் ஒளியைப் பார்த்தேன். அதன் ஒளியில் ஷாம் நாட்டின் கோட்டைகள் இலங்குவதை நான் பார்த்தேன்.


நூல்: அபூ நுஅய்ம் 

♦ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:'எனது தாயார் என்னை ஈன்றெடுக்கும் போது அவர்களிலிருந்து ஒரு பேரொளி புறப்பட்டு அதன் மூலம் சிரியா நகர கோட்டைகள் எல்லாம் பிரகாசித்தன.'


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் அபூ உமாமா (ரலியல்லாஹூ அன்ஹூ)

​நூல்கள்: முஸ்னத் அஹ்மத் 5-262, ஹாகிம் 2-600, மிஷ்காத் 5759

♦ உஸ்மான் பின் அபில் ஆஸ் தம்முடைய தாயாரும் ஸஹாபிப் பெண்மணியுமான உம்மு உஸ்மான் அஸ்ஸகபிய்யா அஸ்ஸஹாபிய்யா ரலியல்லாஹூதஆலா அன்ஹா அவர்களின் வாயிலாக அறிவிக்கிறார்கள்: நபியவர்களின் பிரசவத்தின் பொழுது நான் அவர்களின் இல்லத்தில் இருந்தேன். அவர்கள் பிறந்ததும் அவர்களின் வீடு ஒளியால் நிரம்பியது. நட்சத்திரங்கள் இறங்கி அவர்களின் பக்கம் நெருங்கி வந்துவிட்டன. எந்த அளவெனில் என் மீது அவை விழுந்து விடும் என நான் எண்ணுகிற அளவுக்கு நெருங்கின! அண்ணலாரை, ஆமினா பெற்றெடுத்ததும் அவர்களிடமிருந்து ஒரு ஒளி வெளிப்பட்டது. அவ்வொளியில் அந்த அறையும், அந்த வீடும் பிரகாசித்தது! அதனால் ஒளியைத் தவிர வேறு எதையும் பார்க்காதவளாக நான் ஆகிவிட்டேன்.


நூல்: பைஹகீ, திப்ரானி

♦ இமாம் இப்னு கஸீர் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் “அல்பிதாயா வந்நிஹாயா” என்னும் நூலில் பின்வரும் அற்புதங்களையும் குறிப்பிட்டுக் கூறியுள்ளார்கள்: அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த பொழுது ஒரு நூர் வெளிப்பட்டது. அது பூமியில் இறங்கி மண்டியிட்டு நின்றது! வானத்தின் பக்கம் தன் தலைப்பாகத்தை உயர்த்தியது. அண்ணலார் பிறந்த இல்லத்தில் ஒளி பரவியது. வானிலுள்ள நட்சத்திரங்கள் அவர்களை நெருங்கி வந்தன. கிஸ்ரா மன்னனின் மாடங்கள் அசைந்தாடி இடிந்து விழுந்தன. நெடுங்காலமாக பாதுகாக்கப்பட்டு வந்த நெருப்பு நூர்ந்துவிட்டது! இவை தவிர மற்றும் பல அற்புதங்களும் நிகழ்ந்தன. 


♦ நபிகள் நாதர் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் பிறப்பு வியக்கத்தக்க விதத்திலிருந்தது என்றும், அன்றைய தினம் அகிலம் கண்டிராத அற்புதம் நிகழ்ந்தது என்றும் அனைத்து வரலாற்றாசிரியர்களும் வரைந்துள்ளார்கள். அவற்றில்,நபியவர்கள் பிறக்கும் போது விண்மீன்கள் தரைக்கு நெருங்கி கீழே இறங்கின.அவர்கள் பிறக்கும் போது பேரொளி ஒன்று பிறந்தது. அதன் வெளிச்சத்தில் கிழக்கும்,மேற்கும் துலங்கின. ரோமாபுரியிலுள்ள கோட்டைகள் தெரிந்தன என்று அன்ற பிரசவத்திலீடுபட்ட அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் ரழியல்லாஹு அன்ஹுவின் தாய் ஷிபா என்பவர்கள் கூறுகின்றார்கள்.மேலும், கிஸ்றாவின் கோட்டைகள் தரை மட்டமாகியது. பஹீறா நீரூற்று வற்றியது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பூஜித்துவந்த நெருப்பு அணைந்தது. (நூல் : ஷறஹுஷ் ஷிபா, பாகம் - 1, பக்கம் - 750 – 751)

♦ பூமான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பிறந்த அன்று சர்வாதிகார ஆட்சியாளர்கள் பித்துப்பிடித்தவர்கள் போன்று நிலைகுலைந்து போயினர். ஷிர்க்கின் தளங்கள் தரைமட்டமாயின. விக்ரகங்கள் வீழ்ந்தன, ஷைத்தான் பைத்தியம் பிடித்தவன் போல் அங்குமிங்கும் ஒப்பாரி வைத்துக்கொண்டு ஓடித்திரிந்தான். (நூல்கள் : ஸீறத்துல் ஹலபிய்யா,பாகம் - 1, பக்கம் - 78, றவ்ளுல் உன்பு,பாகம் - 1, பக்கம் - 181, அஸ்ஸீறத்துன் நபவிய்யா (இப்னு கதீர்) பாகம் - 1, பக்கம் - 212)​​​​

♦மக்ஜூம் பின் ஹானி ரலியல்லாஹு அன்ஹு என்பவர் தம் தந்தை வாயிலாக அறிவிக்கிறார்கள்: அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த இரவில் கிஸ்ரா மன்னனின் மாடங்கள் உடைந்தன. அவற்றில் பதினான்கு மாடங்கள் இடிந்து கீழே விழுந்தன. ஆயிரம் ஆண்டுகளாக நூர்ந்து விடாது எரிந்துக் கொண்டிருந்த பாரசீக நாட்டின் நெருப்புக் குண்டம் நூர்ந்தது. “ஸாவா” நகரத்தில் இருந்த சிறிய கடல் போன்ற ஏரி வற்றிப்போனது.

( பத்ஹூல் பாரி ). இந்த அற்புதங்களை ஹதீஸ் அறிவிப்பாளர்களான இமாம்கள் பைஹகீ, அபூ நுஅய்ம், கராஇதி, இப்னு அஸாகிர், இப்னு ஜரீர் போன்ற மார்க்க மாமேதைகளும் கூறியுள்ளனர்.

♦அவர்கள் தன் நாயனை ஸுஜூத் செய்தவர்களாகவும், (ஹத்னா - ஸுன்னத்) செய்யப்பட்டவர்களாகவும் கண்ணில் ஸுருமா போடப்பட்டவர்களாகவும், தலையில் எண்ணைப் போடப்பட்டவர்களாகவும், தொப்புள் அறுக்கப்பட்டு, எவ்விதமான அசுத்தமொன்றும் இல்லாதவருமாகவும், இன்னும் தன் இடது கையால் தன் இரகசிய பகுதியை மறைத்தவர்களாகவும், தன் வலது கையை தன் வலது துடையில் வைத்து தன் கலிமா விரலை உயர்ர்த்தி தன் நாயனின் ஏகத்துவத்தைச் சைக்கினை செய்தவர்களாகவும், அந்த நாயனை துதித்தவர்களாகவும் (தஸ்பீஹ்) அவனைப் புகழ்ந்தவர்களாகவுமே (தஹ்மீத்) உதித்தார்கள்.


​​அனைவரையும் இன்பக் கடலில் முங்கச் செய்யுமளவு அவர்களின் திரு மேனியிலிருந்து கஸ்தூரி வாசம் கமலியது. அவர்களின் உடலின் பிரகாசம் உலகெங்கும் மின்னச் செய்தது. எந்தொரு குறையுமின்றி நிறப்பமான அழகான ஜடலத்துடன் அவர்கள் பிறந்தார்கள்.

♦ அல்லாஹ்வின் மாபெரும் அருள்களைச் சுமந்த அவர்கள் குப்ர் என்னும் இருளை நீக்கி ஒளி தந்த சூரியனாகவே பிறந்தார்கள் அவர்கள் பிறந்த அந்த நேரத்தில் அவர்களின் தாயார் ஆமினா நாயகி ரலியல்லாஹு அன்ஹாவுடன் மூன்று பெண் மணிகள் இருந்தார்கள். அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியல்லாஹு அன்ஹு வின் தாயார் சப்பா ரலியல்லாஹு அன்ஹா, அபில் ஆஸ் எனும் உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு வின் தாயார் (ரலியல்லாஹு அன்ஹா), மற்றும் உம்மு அய்மன் (ரலியல்லாஹு அன்ஹா) ஆகியோர் அம்மூவர் ஆகுவார்கள்.


​​இந்துலகத்தில் எந்தொரு தாயோ எங்கள் நபி நாதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் போல் அழகான ஒளி நிறைந்த குழந்தையொன்றை பிறக்கவுமில்லை. மேலைக்கு பிறக்கவுமாட்டார்கள் என்பது நிரூபிக்கப்பட்ட உன்மையாகும். சூரியன், சந்திரன் தாரகை இன்னும் மற்றொளி எல்லாவற்றையும் இந்த நபி நாதரின் ஒளியால் தான் படைக்கப்பட்டதென்றால், இவர் ஒளிக்கு நாம் என்ன சொல்வோம்?

♦ நபிகள் நாயகம் (ஸல்லலாஹு அலைஹி வசல்லம் ) அன்னவர்கள் கூறினார்கள்:"எனது தாய் - தந்தை இருவரும் அறியாமை கால திருமண முறையை சந்தித்ததில்லை. தூய்மையான முதுகந்தண்டிலிருந்து பரிசுத்தமான கருவறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் என்னை இறைவன் கொண்டு வந்து கொண்டேயிருந்தான். இரு பிரிவினர் தோன்றினால் அவ்விரண்டில் சிறந்த பிரிவினரில் நானிருந்தேன்.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு)

​நூல்கள்: தலாயில் நுபுவ்வா - 15, இப்னு அஸாகிர் - 1217, துர்ருல் மன்தூர் - 3/294

♦நபிகள் நாயகம் (ஸல்லலாஹு அலைஹி வசல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்: "ஆதமுடைய பிள்ளைகளில் தலை முறை தலைமுறையாக இப்போது நானிருக்கும் தலைமுறை வரை சிறந்தோர் வழியாக நான் அனுப்பப்பட்டேன்.


​​ஸஹிஹுல் புகாரி - 3293

♦ கண்மணி நாயகம் (ஸல்லலாஹு அலைஹி வசல்லம் ) அன்னவர்கள் கூறினார்கள்:"ஒவ்வொரு நபியும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு (நபியாக) அனுப்பப்பட்டார்கள். ஆனால் நான் மக்கள் யாவருக்கும் ரசூலாக அனுப்பப்பட்டிருக்கிறேன்."


ஸஹிஹுல் புகாரி 335 , ஸஹிஹ் முஸ்லிம், மிஷ்காத் 5747) ஆகவே இறைவன் இப்படியாக அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பையும் சிறப்பாக்கி, அன்னாரின் சிறப்பையும், அன்னாரின் தூதுவத்தையும் வெளிப்படுத்தியுள்ளான்.


​​

♣ நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள்  ரபியுல் அவ்வல் மாதம் 12 ஆம் நாளில்தான் பிறந்தார்களா?

♦யமன் நாட்டு மன்னனான அப்ரஹா புனித கஃபாவை இடிக்கும் நோக்கத்துடன் படையெடுத்து வந்தான். அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலா அவனையும், அவனுடைய யானைப் படையையும் பொடிக்கற்களைக் கொண்டு அழித்தான். புனித கஃபாவையும் காத்தருளினான். இந்த நிகழ்ச்சிக்கு ஐம்பது நாட்கள் கழித்து அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்தார்கள்.


​​அதன்படி அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ரபீவுல் அவ்வல் மாதம், பன்னிரண்டாம் திகதி, திங்கட்கிழமை வைகறைப் பொழுதில் பிறந்தார்கள். அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த திகதி குறித்து அறிஞர்களிடையே சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்,அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ரபீவுல் அவ்வல் மாதம் பன்னிரண்டாம் திகதி பிறந்தார்கள் என்பதே பெரும்பான்மையான அறிஞர்களின் கருத்தாக உள்ளது.

♦ கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பு, மானிடர்களுக்கு தந்தையாகிய ஆதம் அலைஹிஸ் ஸலாம் அவர்களை இவ்வுலகத்திற்கு அனுப்பப்பட்டு 6043 வருடங்கள் கடந்த பின்பாகும் அவ்வாறே, அது எங்கள் நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை வானலோகத்துக்கு உயர்த்தப்பட்ட பின்பு 569 ம் வருடமாகும் அந்த வருடத்தை ஆமுல் பீல் (யானை வருடம்) என அழைக்கப்படுகிறது.


​​காரணம், ஸன்ஆவின் அரசன் ஆப்ரஹா, பெரும் யானைப் படையுடன் புனித கஃபாவை உடைக்க வந்து அபாபில் எனும் சிரு பச்சிகளால் படு தோல்வி அடைந்த வருடம் அது அதாவது, எங்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமின் பாட்டனார் அப்துல் முத்தலிபு ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய ஒட்டகம் காணாமல் போனதால், அவர்கள் அதைத் தேடிப் போனார்கள்.

அதை அவர்கள் மக்காவுக்கு அருகாமையில், புனித கஃபாவை உடைக்க வருகிற வேளையில் ஒய்வுப பெற்றுக்கொண்டு இருந்த ஆப்ரஹாவும் அவனின் யானைப் படையும் இருந்த கூடாரத்தில் கட்டப் பட்டிருந்ததைக் கண்டு அதை கேட்டார்கள். அப்போது ஆப்ரஹா, நாங்கள் உங்கள் கஃபாவை உடைக்க வந்திருக்கும் போது, நீ உன் ஒட்டகத்தைப் பற்றி கவலை படுகிறீயே என கூற, ஒட்டகம் என்னுடையது, அதை எனக்கு கொடு.. கஃபா அல்லாஹ்வுடையது. அதை அவனே பாதுகாப்பான் என அப்துல் முத்தலிப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறி தன் ஒட்டகத்தை எடுத்துக் கொண்டு வந்தார்கள். அவர்கள் கூறிய வாரே, அல்லாஹ் புனித கஃபாவை காத்தருளினான் அது ரபீஉல் அவ்வல் 12ம் திகதி திங்கள்கிழமை அதிகாலை ஒன்றுக்கு இலட்சம் நன்மை வழங்கப்படும் புனித மக்கா நகரில் எங்கள் கண்மணி நாயகம் அஹ்மதுல் முஜ்தபா முஹம்மதுல் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்தார்கள்.

♦நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:"நபி ஆதம் அலைஹி ஸலாம் அவர்கள் களிமண்ணுக்கும், தண்ணீருக்கும் இடையிலிருந்த போது நான் நபியாக இருந்தேன்."

நூல்: மிஷ்காத் - 513

♦  நபிகள் நாயகம் (ஸல்லலாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் ரபீ உல் அவ்வல் மாதம் 12 ம் பிறையில் பிறந்தார்கள்.


​​ஹழ்ரத் முஹம்மது இப்னு இஸ்ஹாக் (ரலியல்லாஹு அன்ஹு)

​நூல் ஹாகிம் - 2-603, ஸீரத் இப்ன் ஹிஷாம் - 1-211

♦நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அன்னவர்கள் யானை ஆண்டில் பிறந்தார்கள்.ஹழ்ரத் இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) (நூல் ஹாகிம் , இப்னி ஹிஷாம், இந்த ஹதீஸ் இமாம் புஹாரி, இமாம் முஸ்லிம் (ரலியல்லாஹு அன்ஹுமா) ஆகியோரின் நிபந்தனையின் படி ஸஹீஹான ஹதீஸாகும்.

♦ நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் யானை ஆண்டு ரபிஉல் அவ்வல் மாதம் 12, திங்கட்கிழமை அதிகாலை நேரம், மக்கா நகரில் ஷிஃபு பனீ ஹாஷிம் என்ற பகுதியில் உள்ள தாரு அபீதாலிப் என்ற (அதாவது தற்போது முஹம்மது இப்னு யூஸுப் அவர்களுக்குரிய வீடு என்று கூறப்படுகின்ற) இடத்தில் பிறந்தார்கள்.


​​நூல்கள்: முஹம்மதுர் ரசூலுல்லாஹ் பக்கம் 12, இப்திகாவுல் உஸூல் பக்கம் 16, அல்புன்யானுள் மர்ஸுஸ் 29, 40, 76

♦ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களிடம் திங்கட்கிழமை நாள் நோன்பு நோற்பதன் காரணம் பற்றி வினவப்பட்டபோது அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். அன்றைய தினத்தில்தான் நான் பிறந்தேன். மேலும் அன்றுதான் என் மீது வஹீ இறக்கப்பட்டது.


​​நூல்கள்: முஸ்லிம் 1162 - 198, முஸ்னத் அஹ்மத் 5- 299, மிஷ்காத் 2045