MAIL OF ISLAM

Knowledge & Wisdomபிரசவ வேதனையை இலகுவாக்கும் தலை பாத்திஹா


எழுதியவர்: மௌலவி  S.L. அப்துர்ரஹ்மான்  (கௌஸி)  கல்முனை.


பெண்களுக்கு ஏற்படும் பிரசவ வருத்தத்தை இலகுவாக்குவதற்கு 'தலைப்பாத்திஹா' ஓதுவோம்.

♣ உண்மை முஃமின்களால், முத்தகீன்களால், இறைநேசச் செல்வர்களால் இறையருள் ஞானமேதைகளால் செயல்படுத்தப்பட்டு வந்ததும் நமது சுன்னத் வல் ஜமாஅத் இமாம்களாலும் உலமாக்களாலும் அங்கீகரிக்கப்பட்ட ‘வசீலாவின்’ பாற்பட்டதுமான ‘தலைப்பாத்திஹா குறித்து சமீபகாலமாக வஹ்ஹாபிகள் தீவிர எதிர்ப்பு பிரச்சாரம் மேற்கொண்டு வருவதையும் ஷிர்க் என்றும் கூட கூறி வருவதையும் நாம் அறிவோம்.

♦ வஹ்ஹாபிகளுடைய அடிப்படைக் கோட்பாடுகளை தெரிந்து கொள்ளாத சுன்னத் வல் ஜமாஅத்தின் அகீதாக்களில் தெளிவு இல்லாத பொது மக்களில் சிலர் இவ்வஹ்ஹாபிகளின் பிரச்சாரங்களினால் ‘மயக்கம்’ கொள்ளும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.


​​இந் நிலையில் தலைப்பாத்திஹா பற்றி பொதுமக்கள் உண்மை நிலையைத் தெரிந்து, காமிலான முஃமின்களான நமது முன்னோர்கள் நடைமுறைப்படுத்திய ‘தலைப்பாத்திஹா ’ஸுன்னத் வல் ஜமாஅத்தின் அடிப்படைகளுக்கு முற்றிலும் உடன்பாடானதும் அங்கீகரிக்கப்பட்டதுமாகும் என்பதைத் தெரிந்து செயல்பட வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறோம்.

♦ தலைப்பாத்திஹாவை தமிழ்நாட்டில் கீழக்கரையில் அடங்கியுள்ள இறைநேசர் அல் ஆலிமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களால் இயற்றப்பட்டது.

அவர்கள் இலங்கை நாட்டுக்கு சென்ற சமயம் கொழும்பிலும் தென்னிலங்கையிலும் பலமாதங்கள் தங்கியிருந்தார்கள்.அந்நேரம் அவர்களிடம் ஞானதீட்சை-பைஅத் பெற்றிருந்த அவர்களின் சீடர்களில் சிலர் அவர்களிடம் பெண்களுக்கு ஏற்படும் பிரசவ வருத்தம் இலகுவாவதற்கு என்ன செய்யலாம் என்று கேட்டபோது “தலைப்பாத்திஹா” என்ற பெயரில் நபிமார்கள் ,வலிமார்கள் அன்னை பாத்திமா நாயகியார் அவர்களின் புகழ், வாழ்க்கை சரிதைகள் நல்லடியார்கள், கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவிமார்களைக்கொண்டு “வஸீலாஹ்” உதவிதேடும் பாடல்களை எழுதிக்கொடுத்து ஒரு பெண் கர்ப்பமாகி ஒன்பதாம் மாதம் ஓதிவந்தால் பிரசவ வருத்தம் இலகுவாகும் என்றும் சொன்னார்கள்.

♦  அன்றுமுதல் இலங்கை நாட்டின் எல்லாப்பகுதிகளிலும் இது மிக பக்தியுடன் ஓதப்பட்டு வந்தது. குறிப்பாக கொழும்பு, காலி, வெலிகாமம் போன்ற பிரதேசங்களில் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் வஹ்ஹாபிஸ நோய் இலங்கையில் பரவத்தொடங்கிய பின் இது குறைந்து போய்விட்டது.

♦   இதில் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் “வஹ்த்துல் வுஜூத்” ஞானக்கருத்தையும் கூறியுள்ளார்கள்.

ونفيتم سواه ظهرا وبطنا

وبحقّ اليقين ذقتم شهودا

பொருள் :அல்லாஹ் தவிர மற்றெல்லா வஸ்த்துக்களும் உள்ளிலும் இல்லாதவை, வெளியிலும் இல்லாதவை என்று சொல்லி விட்டீர்கள். இன்னும் “ஹக்குல் யகீன்” கொண்டு காட்சியை அனுபவித்து விட்டீர்கள்.

அவர்கள் இந்தப்பாடலில் வஹ்ததுல் வுஜூத் - அவனை தவிர எதுவும் இல்லை என்ற ஞானத்தை சாறாய்ப்பிழிந்து ஒரு பாடலில் தந்துள்ளார்கள். அல்லாஹ் மட்டுமே உள்ளான் அவனைத் தவிர வேறெந்த வஸ்த்துவும் இல்லை. மனிதன், மரம், கடல், மலை, வானம் எதார்த்தத்தில் இல்லாதவை என்று கூறியுள்ளார்கள். “ஹக்குல் யகீன்” கொண்டு காட்சியை அனுபவித்து விட்டீர்கள் என்று கூறியுள்ளார்கள்.

♦ அல்லாஹ் தன் நபிமார்கள், இனிய நேசர்களுக்கு வழங்கிய சிறப்புகள் இவை! அந்த அடிப்படையில்தான் தலைப்பாத்திஹா வார்த்தைகள் அமைந்துள்ளன எனவே பாதிஹா என்ற "தலைப்பாத்திஹா" ஒரு இஸ்திகாதா,வஸீலாஹ் என்ற அடிப்படையில் அதாவது தலைப்பாத்திஹா பொருட்டினால் இறைவனிடம் உதவி தேடி ஓதலாம் என்பது தெளிவாகின்றது. மேற்கண்ட விபரங்களை உள்ளடக்கிப்பாடிய பாடலே கீழக்கரை மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (ரஹ்மதுல்லஹி அலைஹி) அவர்கள் எழுதிக்காட்டிய பாடல் வரிகள் ஆகுமான ஒரு வஸீலா என்பதை தெளிவுபடுத்துகின்றது.