MAIL OF ISLAM

Knowledge & Wisdomகராமத் என்றால் என்ன?

​எழுதியவர்: மௌலவி  S.L. அப்துர்ரஹ்மான்  (கௌஸி)  கல்முனை.


அல்லாஹ்வின் இறைநேசர்களாகிய வலிமார்கள் கறாமத் எனும் (அற்புதங்கள்) செய்வார்களா? நம்ப முடியுமா?


​​

♣ இது பற்றி வழிகெட்ட வஹ்ஹாபிகளின் நிலைப்பாடு 

இறை நேசர்களான வலிமார்களுக்கு அல்லாஹ் சில அற்புதங்களைக் கொடுக்கின்றான். அதற்கு கராமத் என்று சொல்லப்படும். இவ்வாறு அல்லாஹ்வினால் வழங்கப்படும் வலிமார்களின் கராமத்தை கொள்கை தவறிய வழிகெட்ட வஹ்ஹாபிகள் மறுக்கிறார்கள்.


​​இதற்குறிய அடிப்படை காரணம், அல்லாஹ்வின் இறைநேசர்களாகிய வலிமார்கள் என்றால் அந்த மகாபாவிகளுக்கு பிடிக்காது. இவர்களின் வழிதவறிய கொள்கைக்கு சில அப்பாவி மக்களும் வக்காலத்து வாங்குவதும் வழமையாகி விட்டது.


​​தேவ்பந்தியிஸம் எவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக நமது நாடுகளில் நுழைந்து கொண்டிருக்கிறது என்பது தெளிவாகிறது. அதற்கு நாம் என்ன முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை  செய்திருக்கிறோம் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது. ஆகவே இவற்றை ஒருவன் மறுத்தால் அவன் அல்லாஹ்வின் வேதத்தையும் நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களின் வார்த்தைகளை மறுக்கிறான் என்பதாகும். அப்படிப்பட்ட கேடுகெட்ட மனிதர்களை விட்டும் அல்லாஹ் நம் ஈமானை பாதுக்காக்க வேண்டும்.


​​

♣ கறாமத் என்றால் என்ன?

றஸூல்மார், நபீமார்களுக்கு வல்ல அல்லாஹ் “முஃஜிஸத்” என்ற அற்புதத்தைக் கொடுத்தான் அதைக் கொண்டு அவர்கள் “ரிஸாலத், நுபுவ்வத்” என்பவற்றை நிலைநிறுத்தினார்கள்.அதேபோல் வலீமார்களுக்கு இறைவன் “கறாமத்” என்ற அற்புதத்தைக் கொடுத்தான். அதைக் கொண்டு அவர்கள் “விலாயத்” என்பதை உலகில் நிறுவினார்கள். அந்த அடிப்படையில் நபீமார்கள், றஸூல்மாரிலிருந்து அற்புதம் வெளியாகும் போது அதை “முஃஜிஸத்” என்றும் வலீமார்களிலிருந்து வெளியாகும் போது அதை “கறாமத்” என்று அழைக்கப்படுகிறது.


​​இரண்டின் மூலமாக வெளியாகும் செயல்கள் ஒன்றுதான். ஆயினும் நபீமார், வலீமார் என்று பிரித்துக் காட்டுவதற்காக முஃஜிஸத், கறாமத் என்று சொல்லப்பட்டுள்ளது.

அந்த அடிப்படையில் அல்லாஹ் அவனை நேசம் கொள்கின்ற இறை நேசர்களுக்கு அற்புதங்களைக் கொடுக்கிறான். அதன் மூலம் பல அரிய நிகழ்வுகளும், அசாத்தியமான நிகழ்வுகளும் அவர்களிடமிருந்து வெளிப்படுகிறது. விஷத்தை உண்டும் சாகாத நிலை, மரணித்தவரை துஆச் செய்து எழுப்பும் நிலை, மயக்க மருந்தில்லா அறுவைச் சிகிச்சை போன்ற அசாத்தியாமான நிகழ்வுகள் ஏற்படுகின்றன. ஆகவே இப்படியான வழக்கத்திற்கு மாற்றமான நிகழ்வுகளே கறாமத் என்று செல்லப்படுகின்றன.


​​

♣ வலிமார்கள் கராமத் எனும் அற்புதங்களை நிகழ்த்துவதற்கான காரணம் என்ன?

நபிமார்களுக்கு “முஃஜிஸத்” என்னும் தன்மை வழங்கப்பட்டிருப்பது போல் வலீமார்களுக்கு “கறாமத்” என்னும் தன்மை வழங்கப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு சொற்களும் “அற்புதம்” என்ற ஒரே கருத்தையே தருகின்றன. இந்த வகையில் அல்லாஹ்வின் அதிகாரிகளான அவ்லியாக்கள் தம் வாழ் நாள் முழுவதும் கோடிக்கணக்கான அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியுள்ளார்கள். அதே போன்று குத்பு நாயகம் அவர்களும் தமது வாழ்க்கையில் பல எண்ணற்ற அற்புதங்களை நிகழ்த்திக்காட்டினார்கள். தற்போதும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த அடிப்படையில் அல்லாஹுதஆலா வலிமார்களுக்கு பல அந்தஸ்துகளை வழங்கி சிறப்பாக்கி வைத்திருக்கிறான். உதாரணமாக, கராமத்துக்களை அதாவது பல அற்புத சக்திகளை வழங்கி அதன் மூலம் அல்லாஹ் அவர்களைக்கொண்டு பல மக்களை சீர்த்திருத்தியும், வழித்தவறியவர்களை நேரான வழியில் கொண்டுவரவும் செய்துள்ளான். இதை அல்லாஹுதஆலா சில சம்பவங்களின் மூலமாக எமக்கு சொல்லிக்காட்டுகிறான்.

பத்ர் யுத்தத்தில் எதிரிகளை ஸஹாபாக்கள் கொன்றபோது, அல்லாஹ் அஸ்ஸவஜல் அல்குர்ஆனில் கூறினான்: "நீங்கள் எதிரிகளை கொல்லவில்லை, அல்லாஹுத்தஆலாவே கொன்றான்" என்பதாக. இந்த வசனத்திற்கு பொருள் என்னவென்றால், அல்லாஹ் சொல்கிறானே நான் ஒருவரை நேசிக்கும்போது அவன் கேட்கும் காதாகவும், பார்க்கும் கண்ணாகவும், பிடிக்கும் கையாகவும், நடக்கும் காலாகவும் நான் ஆகிவிடுகிறேன் என்று. இதுதான் இதற்கு அர்த்தமாகும்.

எனவே அல்லாஹ் தனக்கு சொந்தமான சில பதவிகளை அவ்லியாக்களுக்கு வழங்கி, அவர்களை இந்த உலக மக்களுக்கு தன் பிரதிநிதியாக அதாவது கலீஃபாவாக ஆக்கி வைத்திருக்கிறான். எப்படி எங்கள் இனிய தூதர் கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் உலகத்துக்கே ரஹ்மத்துலில் ஆலமீனாக இருக்கிறார்களோ அப்படியே அவ்லியாக்களை அல்லாஹ் அஸ்ஸவஜல் இந்த உலக மக்களுக்கு கிருஃபையுள்ளவர்களாக ஆக்கிவைத்துள்ளான்.

இறைநேசர்களாகிய வலிமார்கள் என்பவர்கள் கறாமத் எனும் அற்புதங்களை செய்து காட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை.சிலவேளைகளில் எதார்த்தத்தில் இறைவனின் நேசத்தை பெற்றும் தன்னிடம் இருக்கிற அற்புத ஆற்றல் பற்றி மணப்பெண்

வெட்கப்படுவது போல தனது தனிச்சிற்ப்புக்களை (கறாமாத்துக்களை) வெளிப்படுத்த அவர்கள் வெட்கப்படுவார்கள். பெரும்பாலும் அற்புதங்கள் இறைநேசர்கிளிடமிருந்து அத்தியாவசிமான நேரங்களில் அல்லாஹ்வின் மூலமாக வெளிப்படுகின்றன. இத்தகைய  கராமத்

வெளிப்படுவது சத்தியமே என்று நம்ப வேண்டியது நமது கடைமையாகும்.


​​அதேநேரத்தில் இறை நேசர்களை அற்புதச் செயல்களை அல்லாஹ்வின் உதவியின்றி சுயமாகவே செய்கிறார்கள் என்பது ஷிர்க் ஆகும். மாறாக எல்லா செயல்களும் அல்லாஹ்வின் உதவியுடன் நடக்கிறது என்று நம்புவதே ஈமானாகும்.


​​

♣ வலிமார்கள்  கறாமத் எனும் (அற்புதங்கள்) செய்வார்கள் என்பதற்காக ஆதாரங்கள்

ஒவ்வொரு முஸ்லிமும் கண்டிப்பாக கறாமத் எனும் அற்புதங்களை நம்ப வேண்டும். ஏனெனில் அப்படி நம்பவில்லை என்றால் குர்ஆனையும் ஹதீஸையும் மறுத்த பாவத்திற்கு உள்ளாவார்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக. வலிமார்கள் என்போர் அல்லாஹ்வின் நேசர்கள். அல்லாஹுதஆலா நபிமார்களுக்கு தனது செய்தியை வஹீ மூலம் அறிவித்தான்.


​​அதுபோல் அவ்லியாக்களுக்கு "இல்ஹாம்" என்ற ஞான உதிப்பு மூலம் தெரியப்படுத்துகிறான் என பல ஆதாரங்கள் அல்குர்ஆன், அல்ஹதீஸ்களில் உள்ளன. இவை எல்லாம் அல்லாஹ் வலிமார்களுக்கு வழங்கிய அற்புதங்களை அதாவது கராமத்துகளை எடுத்து காட்டுகின்றன. இவற்றை எல்லாம் ஒருவன் மறுத்தால் அவன் அல்லாஹ்வின் வேதத்தையும் நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களின் வார்த்தைகளை மறுக்கிறான் என்பதாகும். அப்படிப்பட்ட கேடுகெட்ட மனிதர்களை விட்டும் அல்லாஹ் நம் ஈமானை பாதுக்காக்க வேண்டும்.

அந்த அடிப்படையில் உண்மையில் அல்லாஹ்தான் வலிமார்கள் மூலமாக அந்த அற்புதங்களை செய்கிறான். இவற்றை தாராளமாக நம்பலாம்.

அல்லாஹ் நேரடியாக ஒரு அற்புதத்தை நிகழ்த்தினால் அதற்கு பெயர் குத்ரத். அல்லாஹ் நபிமார்கள் மூலமாக ஒரு அற்புதத்தை நிகழ்த்தினால் அதற்கு பெயர் முஃஜிஸாத். அல்லாஹ் வலிமார்கள் மூலமாக ஒரு அற்புதத்தை நிகழ்த்தினால் அதற்கு பெயர் கராமத், இதில் ஏதாவது ஒரு அற்புதத்தை ஒருவன் நிராகரித்தால், அவன் இறைவனையும், இறை வேதத்தையும் நிராகரிப்பவனாவான். நிராகரிப்பவரின் கூட்டத்தை விட்டும் அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!

ஏனெனில், கராமத்துகளை பற்றி அல்குர்ஆனிலும் அல்ஹதீஸிலும் நிறையவே ஆதாரங்கள் உள்ளன.

♦ சுலைமான் நபி அலைஹிஸ்ஸலாம் அன்னவர்களின் சபையில் இருந்த ஞானம் பெற்ற ஒரு இறைநேசர் பன்னூறு கணக்கான மைல்களுக்கு அப்பாலிருந்த பல்கீஸ் ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் சிம்மாசனத்தை கண்ணிமைக்கும் நேரத்தில் கொண்டு வந்த அற்புதம் பற்றி அல்லாஹ் அல்குர்ஆனில் கூறி காட்டுகிறான். (பார்க்க – அல்குர்ஆன் – சூரா 27 : வசனம் 38-40)

(ஸுலைமான் நபி அலைஹிஸ்ஸலாம் தன் மந்திரிகளை நோக்கி) "சன்றோர்களே! அவர்கள் கட்டுப்பட்டவர்களாக என்னிடம் வந்து சேருவதற்கு முன்னதாகவே அவளுடைய சிம்மாசனத்தை என்னிடம் கொண்டு வருபவர் உங்களில் யார்?" என்று கேட்டார்.(எனினும், அவர்களில்) வேத ஞானம் பெற்ற ஒருவர் (இருந்தார். அவர் ஸுலைமான் நபியை நோக்கி) "நீங்கள் கண்மூடித் திறப்பதற்குள் அதனை நான் உங்களிடம் கொண்டு வந்துவிடுவேன்" என்று கூறினார். (அவ்வாறே கொண்டு வந்து சேர்த்தார்.)

♦ பருவமில்லாத காலத்திலும் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு கிடைத்த கனிவர்க்கங்கள் பற்றி அல்லாஹ் அல்குர்ஆனில் கூறி காட்டுகிறான். “ஜகரிய்யா அப்பிள்ளை இருந்த மாடத்திற்குள் நுழையும்போதெல்லாம், அவளிடத்தில் (ஏதேனும்) உணவுப் பொருள் இருப்பதைக் கண்டு "மர்யமே! இது உனக்கு ஏது? (எங்கிருந்து வந்தது?)" என்று கேட்பார். அதற்கவள் "இது அல்லாஹ்விடமிருந்துதான் (வருகின்றது.) ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் தான் விரும்பியவர்களுக்கு அளவின்றியே உணவளிக்கின்றான்" என்று கூறுவாள்” (அல்குர்ஆன் 3 : 37)

♦ குபைப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களை கொன்று விட வேண்டுமென முடிவெடுத்த நேரமது. திராட்சை கொத்தில் இருந்து குபைப் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் பழங்களை சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். அந்நாளில் மக்காவில் எந்த பழமுமில்லை. ஆகவே, அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய உணவுதான் அது. நேரில் பார்த்த ஹாரிஃதின் மகள் இதை கூறினார்.


​​அறிவிப்பவர் : ஹழ்ரத் அபூஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு)

​நூல் – ஸஹிஹுல் புஹாரி –3045, 2818

♦ இறைதூதர் ﷺ அன்னவர்களிடம் ஒரு தோழர் வந்து சொன்னார்: “யா ரஸூலல்லாஹ்! ஒரு கப்ருக்கு மேலே அது கப்ர் என தெரியாமல் கூடாரம் அமைத்து தங்கினேன். அப்போது, கப்ருக்குள்ளேயிருந்தவர் சூரா முல்க்கை முழுமையாக ஓதினார். இறைதூதர் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்: அந்த (முல்க்) அத்தியாயம் (நரக வேதனையை) தடுக்கும். ஈடேற்றத்தை கொடுக்கும்.”  


​​அறிவிப்பவர் – இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு)

நூல் – திர்மிதி – 2815

♦ திண்ணமாக உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஒரு படையை அனுப்பி வைத்தார்கள். சாரியா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களை அப்படைக்கு தளபதியாக நியமித்தார்கள். (மதீனாவில்) சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் ‘யா சாரியா! அல் ஜபல்!’ (சாரியாவே! மலையை கவனித்து சண்டையிடுங்கள்) என சப்தமிட்டார்கள்.பிறகு படையிலிருந்து ஒரு தூதர் வந்து சொன்னார். அமீருல் முஃமினீன் அவர்களே! எங்கள் எதிரிகளோடு நாங்கள் போர் புரிந்தபோது அவர்கள் எங்களை விரட்டியடித்தார்கள். அப்போது ‘யா சாரியா அல் ஜபல்’ என்று சத்தம் கேட்டது. பின்னர் மலையை எங்களுக்கு பின்புறமாக ஆக்கி கொண்டு போர் செய்தோம். அல்லாஹ் அவர்களை விரட்டி விட்டான்.


​​அறிவிப்பவர் – இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹு)

நூல் – பைஹகீ (தலாயிலுந் நுபுவ்வா) – 2655

யுத்தம் நடைப்பெற்றது பாரசீகத்தில். உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் இருந்தது மதீனா மாநகரத்தில். பன்னூறு கணக்கான மைல்களுக்கு அப்பால் நடப்பதை இங்கிருந்து உமர் (ரழியல்லாஹு அன்ஹு) பார்த்ததும், அவர்களுக்கு எச்சரிக்கை செய்து இங்கிருந்து குரல் கொடுத்ததும், இவர்களின் சத்தத்தை பாரசீகத்தில் உள்ளவர்கள் கேட்டதும் அல்லாஹ் உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு வழங்கிய கராமத் ஆகும்.

♦ மரணத்தருவாயிலிருந்த அபூபக்கர் ஸித்தீக் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் என்னிடம் கூறினார்கள்: “ஆயிஷாவே! நான் விட்டு செல்கின்ற வராஃதத் சொத்துகளை நீயும் உனது இரு சகோதரர்களும் மற்றும் இரு சகோதரிகளும் இறைவன் குர்ஆனில் கூறியபடி பங்கு பிரித்துக் கொள்ளுங்கள். நான் கேட்டேன்: “எனது அருமை தந்தையார் அவர்களே! இரு சகோதரிகள் என்றீர்களே! அஸ்மா என்ற ஒரு சகோதரி தானே எனக்கு உள்ளார். இன்னொரு சகோதரி யார்? (ஆயிஷாவே!) எனது மனைவியார் பின்து காரிஜா கர்ப்பமாக உள்ளார். அவர் பெண் குழந்தையை ஈன்றெடுப்பார். (எனவே தான் உனக்கு இரு சகோதரிகள் என்றேன்). அவர்கள் கூறியது போன்று பின்து காரிஜா அவர்கள் உம்மு குல்தூம் என்ற பெண் குழந்தையை ஈன்றெடுத்தார்கள்.


​​அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) 

​நூல் : முஅத்தா 1242, பைஹகீ  12267

எந்த நவீன விஞ்ஞான கருவிகளும் இல்லாத அந்த காலத்தில், குழந்தை பிறப்பதற்கு முன்னரே பிறக்க போகும் குழந்தை ஒரு பெண் குழந்தை என்று நிச்சயமாக கூறியது அல்லாஹ் அபூபக்கர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு வழங்கிய கராமத் ஆகும்.

♦ ஒருசமயம் அபூ ஹப்ஸ் உமரி ஹத்தாதி என்பவர் ஷெய்குனா அப்துல் காதிர் ஜீலானி {ரஹ்மதுல்லாஹி அலைஹி} அன்னவர்களிடம் சென்று '' நான் ஹஜ் செல்கிறேன் காலம் குறைவாக உள்ளது என்னிடம் ஒட்டகமோ மெலிந்து கிழடாக உள்ளது வேகமாகவும் செல்லமுடியவில்லை. தாங்கள் துஆ செய்து தரும்படி வேண்டுகிறேன்'' என தனது ஒட்டகையை ஷெய்குனா அன்னவர்களின் அருகிலே நிறுத்தினார் .ஷெய்குனா அப்துல் காதிர் ஜீலானி அன்னவர்கள் துஆ செய்து அவ் ஒட்டகத்தை தம் பொற்கரத்தால் தடவி விட்டார்கள். நான் ஹஜ்ஜுக்கு செல்லும்போது அந்த ஒட்டகம் மற்ற ஒட்டகங்களைவிட வேகமாகவும் வலிமைமிக்கதாகவும் ஆகிவிட்டதை நான் அறிந்தேன் என அன்னவரே குறிப்பிட்டுள்ளார்.


​​நூல்:கலாயிதுல் ஜவாஹிர், தாரிக் அல்பக்தாத்


​​

♣ வலிமார்கள் இறந்த பின்னும் கறாமத் நிகழ்த்த முடியுமா?

ஆம் மரணித்த பின்பும் அல்லாஹ்வின் இறைநேசர்களாகிய வலிமார்கள் கறாமத் எனும் அற்புதங்களை நிகழ்த்துவார்கள். ஏனெனில் வலிமார்கள் மரணத்திற்குப் பின்னும் உயிருடன் இருக்கின்றனர்.  அந்த அடிப்படையில் ஷுஹதாக்கள், வலிமார்கள் மரணித்தாலும்  ஹயாத்துடன் இருக்கிறார்கள். அன்பியாக்கள் கப்ரில் ஹயாத்துடன் இருப்பது போன்றே இஸ்லாத்தின் எதிரிகளான காபிர்களுடன் போராடி அவர்களின் வாளால் வெட்டுண்டு ஷஹீதாகிய வீர தியாகிகளான ஷுஹதாக்கள், வலிமார்களும் தங்களுடைய கப்ருகளில் ஹயாத்துடன் இருக்கிறார்கள் என்று திரு மறையாம் குர்ஆன் ஷரீபில் தெள்ளத் தெளிவாக வருகிறது.

♦ இன்னும், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை "(அவர்கள்) இறந்துவிட்டார்கள்" என்று கூறாதீர்கள்; அப்படியல்ல! அவர்கள் உயிருள்ளவர்கள்; எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ள மாட்டீர்கள். (அல்குர்ஆன் 2:154)

♦ அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள் - தம் றப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள் - (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள். (அல்குர்ஆன் 3:169)

♦ கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ்வுடைய அடியார்கள் சிலர் இருக்கின்றார்கள். ஜனங்களுடைய தேவைகளை நிறைவேற்றுவதற்கென்றே அவன் அவர்களை சொந்தப்படுத்தி வைத்திருக்கின்றான். தங்களுடைய தேவைகளைப் பூர்த்தியாக்கிக் கொள்வதற்காக ஜனங்கள் அவர்களை நாடுவார்கள். அவர்கள் அல்லாஹ்வின் வேதனையை விட்டும் அச்சம் தீர்ந்தவர்கள்.


​நூல்: அல் ஜாமி உஸ்ஸகீர் - 1 - 78

♦ பஞ்சம் ஏற்பட்டுவிட்டால் நிச்சயமாக உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களைக் கொண்டு மழை தேடுபவர்களாக இருந்தார்கள். அதாவது இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்களின் நபியை உன்னளவில் (வஸீலாவாக) உதவிச் சாதனமாக ஆக்கிப் பிரார்த்திப்பவர்களாக ஆகியிருந்தோம். நீ எங்களுக்கு மழை பொழியச் செய்திருக்கிறாய். மேலும் நிச்சயமாக நாங்கள் எங்கள் நபியின் சிறிய தகப்பனாரைக் கொண்டு (முன்னிலையாக்கி) வஸீலாவாக்கி கேட்கிறோம். மழை பொழியச் செய்வாயாக என்று கூறுவார்கள். உடனே மழை பெய்து விடும்.


​​நூல்: புகாரி 1 - 137, மிஷ்காத்

♦ ஒரு தடவை மதீனாவில் கடும் பஞ்சம் நிலவியது அப்பொழுது அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களிடத்தில் மக்களெல்லாம் முறையிட்டார்கள். அதற்கு அன்னையவர்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் கப்ரின் பக்கம் முன்னோக்குங்கள் அவர்களின் கப்ரி(ருக்கும் அறையி)லிருந்து துவாரத்தை வானத்திற்கும் நபியவர்களின் கப்ருக்கும் மத்தியில் உண்டாக்குங்கள். அதேபோல் செய்யப்பட்டது மழை கொட்டோ கொட்டென்று கொட்டி விட்டது தாவரங்கள் முழைக்க ஆரம்பித்தன கால்நடைகள் அனைத்தும் பெருத்துவிட்டன தேவைக்கு அதிகமாகவே பொழிந்தது அந்த ஆண்டிற்குعام الفتن  என்று பெயர் வைக்கப்பட்டது.


​​நூல்: தாரமியூ 5950

♦ இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்“  அல்லாஹ் கூறினான்:  எவன் என் நேசரை பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நேசித்துவிடும்போது அவன் கேட்கிற செவியாக, அவன் பார்க்கிற கண்ணாக, அவன் பற்றுகிற கையாக, அவன் நடக்கிற காலாக நான் ஆம்விடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறைநம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எச்செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன்.


ஹழ்ரத் ​​அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) 

​நூல்: புகாரி 6502

எனவே இது போன்ற இறைநேசர்களாகிய வலிமார்களுக்கு வழங்கப்படும் அற்புதங்களை (கறாமாத்துக்களைக்) நம்பிக்கை கொள்ளும் நல்லவர்களாக நம்மையும், நம் சந்ததியினரையும் அல்லாஹ் ஆக்கி அருள்புரிவானாக! ஆமீன் ஆமீன் யாரப்பல்  ஆலமீன்.