MAIL OF ISLAM

Knowledge & Wisdom



ஸஹாபாக்கள் ஓதிய மௌலிதை வஹாபிகள் ஓத தயாரா?


எழுதியவர்: மௌலவி  S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.


ஸுப்ஹான மவ்லிது ஓதுவது (ஷிர்க் பித்அத்) என்றால், உத்தம ஸஹாபாக்கள் ஓதிய (மவ்லித்) கவி வரிகளை மாத்திரம் ஓதுவதற்க்கு வஹ்ஹாபிகள் தயாரா?

♦ மௌலித் ஓதுவது ஷிர்க் - பித்அத், மௌலித் கிதாபுகளில் வரம்பு மீரப்பட்ட ஷிர்க்கான கவி வரிகள் உள்ளன என்றெல்லாம் சில தந்திர வார்த்தைகளை உபயோகித்து மவ்லித் ஓதுவது கூடாது (ஷிர்க் பித்அத்) என்று கிருக்கு பிடித்தவர்களாக விமர்சிக்கும் வஹ்ஹாபிகளே! நீங்கள் குர்ஆன் ஹதீஸ்களை சரியாக விளங்காத மடயர்கள்.


​​அது ஒரு பக்கம் இருக்க ஒரு வாதத்திற்கு உங்கள் கருத்தின் பிரகாரம் ஸுப்ஹான மவ்லிது ஓதுவதை விட்டுவிட்டாலும் ஸஹீஹான ஹதீஸ் கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள ஸஹாபாக்கள் பாடிய கவி வரிகளை (மௌலித்) மாத்திரம் ஓத தயாரா? மேலே குறிப்பிட்டது போன்று ஸஹீஹான ஹதீஸ் கிரந்தங்களில் உள்ள மௌலித் கவி வரிகளை ஒரு கிதாபாக கோர்வை செய்து உங்கள் பள்ளிவாசல்களில் ஓத தயாரா?

♦ ஆகவே அல்குர்ஆனில் ' எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமின்கள் (ஸஹாபாக்கள், இமாம்கள்) செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும் (தவறான) வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம் அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும். (அல்குர்ஆன் : 4:115)

♦ இன்னும் முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக்கொண்டவர்களும், அவர்களை(எல்லா) நற்கருமங்களிலும் பின் தொடர்ந்தவர்களும் இருக்கின்றார்களே அவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறான்; அவர்களும் அவனிடம் திருப்தியடைகின்றார்கள்; அன்றியும் அவர்களுக்காக, சுவனபதிகளைச் சித்தப்படுத்தியிருக்கின்றான், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும். (அல்குர்ஆன் : 9:100)

இறைவன் இந்த நீண்ட இரு வசனத்திலும் ஸஹாபாக்களை பின்பற்ற வேண்டும். அவ்வாறு பின்பற்றினால்தான் அல்லாஹ்வின் திருப்பொருத்தம் கிடைக்கும், சுவர்க்கம் கிடைக்கும், ஆகவே முழுமையாக மார்க்கம் குர்ஆன் ஆகும். அந்த குர்ஆனில் ஸஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. முழுமை பெற்ற மார்க்கத்தில்தான் ஸஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என்ற அடிப்படையில் ஸஹாபாக்கள் பாடிய கவி வரிகளை (மௌலித்) மாத்திரம் ஓதுவதற்க்கு தயங்குவது ஏனோ.. !

♦ மேலும் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் 'உத்தம உயிர் தோழர்களை முழுமையாக பின்பற்றி நடப்பது நம் அனைவர்கள் மீது அவசியமாகும். ஏனெனில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'உங்களில் ஒருவர் நேர்வழியில் செல்ல நாடினால், உங்கள் முன் மரணமானவர்களின் பாதையில் செல்லுங்கள். உயிரோடுள்ளோர்கள் குழப்பத்தில் உள்ளாக்கப்படலாம். ​​இறையடி சேர்ந்தவர்கள் எம் கோமான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் புனிதத் தோழர்களாகும். அவர்கள் இந்தச் சமுதாயத்தின் சிரேஷ்ட மாணவர்களும் ஆழமான அறிவுகளையும் நல்ல மனப்பக்குவம் உள்ளவர்களாகவும் முற்றிலும் இக்லாஸ் உடையவர்களாகவும் காணப்பட்டனர்.


​​அல்லாஹ் அவர்களை அவனது ஹபீபின் தோழமைக்காகவும், அவனது மார்க்கத்தை நிலை நிறுத்தவும் தேர்ந்தெடுத்தான். அவர்களை உயர்ந்த நன்மக்களாக நம்புங்கள். அவர்கள் சென்ற வழியைப் பின் தொடருங்கள். முடியுமானவரை அவர்களது குணங்களையும் வாழ்க்கை நெறியையும் பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக அவர்கள் நேர்வழியிலேயே இருந்தார்கள்'.


​​ஹழ்ரத் இப்னு மஸ்ஊத் (ரலியல்லாஹு அன்ஹு)

நூல்: மிஷ்காத்

♦ கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்: மேலும் எனக்குப் பின்னால் உங்களில் ஜீவித்து இருப்பவர்கள் அதிகப்படியான குழப்பங்களை காண்பீர்கள். அந்நேரத்தில் என் ஸுன்னத்தையும் நேர்வழி பெற்ற வழிக்காட்டிகளான என் கலீபாக்களின் ஸுன்னத்தையும் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். மேலும் அவற்றின் மீது உங்களின் கடைவாய் பற்களை வைத்து கடித்து பிடித்துக் கொள்ளுங்கள்.


​​நூல்கள்: திர்மிதி: 2676, இப்னு மாஜா: 42, அபூதாவுத்: 4607

♦கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்: எனது தோழர்கள் நட்சத்திரங்களை போன்றவர்களாவார்கள். எனவே அவர்களில் நீங்கள் யாரை பின்பற்றினாலும் நேர்வழி அடைவீர்கள்.

நூல்: மிஷ்காத்: 6018

♦ கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்: எனது ஸஹாபாக்களை சங்கை செய்யுங்கள். ஏனெனில் நிச்சயமாக அவர்கள் தான் உங்களில் மிக சங்கையானவர்கள் ஆவார்கள்.

நூல்: மிஷ்காத்: 6012


​​

♣ ஸஹாபாக்கள் பாடிய கவி வரிகள் (மௌலித்)

ஹழ்ரத் ஹஸ்ஸான் இப்னு ஃதாபித் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஒதிய மவ்லித்:

1) இறைமறுப்பாளர்களே!) முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை குறைவுபடுத்தி நீங்கள் கவிபாடுகிறீர்கள். அதற்கு பதிலாக அவர்களை நான் புகழ்ந்து பாடுவேன். அதற்குரிய நற்கூலி இறைவனிடமுண்டு.

2) நல்லவராகவும் நேரிய வழியில் உள்ளவராகவும் இருக்கிற இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை குறைவுபடுத்தி பேசுகிறீர்கள். வாக்குறுதியை நிறைவேற்றுவது அவர்களின் அழகிய குணமாகும்.

3) அவர்கள் விஷயத்தில் இறைவன் கூறினான்: சத்தியத்தைக் கூறுகிற ஒர் அடியாரை திருத்தூதராக அனுப்பியுள்ளேன் அதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை.


​​ஹழ்ரத் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா

ஆதாரம்: முஸ்லிம் - 4545


​​

ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஒதிய மவ்லித்:

1) எங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார்கள். வைகறைப்பொழுது புலரும் நேரத்தில் அவர்கள் இறைவேதத்தை ஒதுகிறார்கள்.

2) குருட்டுத் தன்மையில் இருந்த எங்களுக்கு நேர்வழி காட்டினார்கள். அவர்கள் கூறியது நிச்சயம் நிகழும் என எங்கள் உள்ளங்கள் உறுதியாக நம்புகின்றன.

3) இரவில் இணைவைப்பாளர்கள் படுக்கையில் ஆழ்ந்து கிடக்கும் போது நபியவர்கள் படுக்கையிலிருந்து எழுந்து தொழுவார்கள்.


​​ஹழ்ரத் அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)

நூல்: புகாரி - 1087


​​

ஹழ்ரத் கஃப் இப்னு ஜுஹைர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஒதிய மவ்லித்:

1) இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்களென எனக்கு தெரிவிக்கப்பட்டது. மன்னிப்பு என்பது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே.

2) மன்னிப்புத் தேடியவனாக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நான் வந்தேன். அம்மன்னிப்பு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒப்புகொள்ளப்பட்டது.

3) திண்ணமாக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒளி கொடுக்கும் பேரொளியாகவும்,இறைவனின் வாட்களில் உருவிய வாளாகவும் உள்ளார்கள்.


​​ஹழ்ரத் ஆஸிம் இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு)

நூல்: ஹாகிம் - 6558

♦ கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மகிழ்ச்சி அடைந்தால் அவர்களின் முகம் சந்திரனில் இருந்து (வெட்டி எடுக்கப்பட்டு) ள்ள ஒரு துண்டை போன்று (பேரொளியால்) பிரகாசிக்க துவங்கி விடும்.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் கஹ்பு பின் மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு)

​நூல்கள்: புகாரி 3556 , முஸ்லிம் 2769 , முஸ்னத் அஹமத் 3 - 459 , மிஷ்காத் 5798

♦ நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் முகம் சூரியனை போன்றும் சந்திரனை போன்றும் வட்ட வடிவமாக இருந்தது.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் ஜாபிர் (ரலியல்லாஹு அன்ஹு)

நூல்கள்: முஸ்லிம் 2344, திர்மிதி 3636, மிஷ்காத் 515

♦ பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுகம் வாளைபோன்று (மின்னக்கூடியதாக) இருந்ததா என்று பர்ராஉ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் இல்லை, சந்திரனை போன்று இருந்தது என்று கூறினார்கள்.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் அபூ இஸ்ஹாக் (ரலியல்லாஹு அன்ஹு

​நூல்: புகாரி 3552


​​

♦  ஹழ்ரத் அபூஹூரைரா (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

​நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்களை விட மிக அழகான எந்த வஸ்துவையும் நான் கண்டதில்லை. அவர்களின் முகத்தில் சூரியன் ஓடிக்கொண்டிருப்பது போன்று இருப்பார்கள்.


​​நூல்கள்: திர்மிதி 3648, மிஷ்காத் 5795, முஸ்னத் அஹ்மத் 2-350

♦  ஸய்யிதத்துனா ஆயிஷா (ரலியல்லாஹூ அன்ஹா) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

​கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் மிக்க மகிழ்ச்சியுடன் என்னிடத்தில் நுழைந்தார்கள். அப்போது அவர்களுடைய நெற்றிக் கோடுகள் (மின்னலைப் போன்று) பளிச்சிடக் கூடியவைகளாக இருந்தன.


​​நூல்: புகாரி 3555, 6770, 6771

♦ பறா இப்னு ஆஸிகப் (ரலியல்லாஹூ அன்ஹூ) அன்னவர்கள் நபிகளாரைப்பற்றி வர்ணிக்கையில், அண்ணலார் அன்னவர்களை விட அழகான ஒருவரை என் வாழ்க்கையில் நான் பார்த்ததே இல்லை' என்றும் அவர்களின் முகம் சந்திரன் போல் இருந்தது என்றும் கூறுகிறார்கள்.

நூல்: புகாரி 4ம் பாகம், 165ம் பக்கம்

♦ ஹழ்ரத் அபூ ஜூஹைஃபா (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்:

​கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் திருக்கரத்தை எடுத்து என் முகத்தின் மீது வைத்துக்கொண்டேன். அது பனிக்கட்டியை விட குளிர்ச்சியானதாகவும், கஸ்தூரியை விட நறுமணமிக்கதாகவும் இருந்தது.


​நூல்: புகாரி 3553

♦ ஹழ்ரத் ஜாபிர் இப்னு ஸமுரா (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ரஸூலே கரீம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் திருவதனம் சூரிய, சந்திரனைப்போல் வட்ட வடிவமாய் ஜொலித்துக் கொண்டிருக்கும்.


​நூல்கள்: முஸ்லிம் 2344, திர்மிதி 3636, மிஷ்காத் - 5779

♦  ஹழ்ரத் ஜாபிர் இப்னு ஸமூரா (ரலியல்லாஹூ அன்ஹூ) அன்னவர்கள் அறிவிக்கிறார்கள்:

​சந்திரன் சூழ்ந்த இரவில் நான் கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்களை பார்த்தேன். பின்னர் சந்திரனையும் பார்த்தேன். (அச்சமயம்) கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் மீது சிவப்பு நிறப்போர்வையொன்று இருந்தது. அப்போது அன்னவர்கள் சந்திரனை விட அழகாக இருந்தார்கள்.


​​நூல்கள்: திர்மிதி 2811, தாரமி 57, மிஷ்காத் 5794

♦  ஹழ்ரத் அபூஉபைதா இப்னு முஹம்மத் (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

​நான் ருபய்யிஃ (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்களிடத்தில், கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்களை பற்றி எனக்கு கூறுங்கள் என்று கேட்டேன். அதற்கவர்கள் 'அருமை மகனே! அருமை நபி; (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்களை நீ பார்த்தாயானால், சூரியன் உதிப்பதாகவே காண்பாய் என்று கூறினார்கள்.


​நூல்: தாரமி 60, மிஷ்காத் 5793

♦  ஹழ்ரத் ஆஸிம் இப்னு உமர் (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

​நிச்சயமாக இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் ஒளி கொடுக்கும் பேரொளியாகவும், இறைவனின் வாள்களில் உருவிய வாளாகவும் உள்ளார்கள்.


​நூல்: ஹாகிம் 6558

♦  அன்னை ஆயிஷா (ரலியல்லாஹூ அன்ஹா) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

​இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் ஹஸ்ஸான் (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்களுக்கு, பள்ளிவாசலில் ஒரு மிம்பரை அமைத்துக் கொடுத்தார்கள். அதிலே அவர்கள் ஏறி நின்று இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்களையே புகழ்வார்கள்.

நூல்: திர்மிதி 2773

♦ ஹழ்ரத் இப்னு ஜத்ஆன் (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்கள் அறிவிக்கிறார்கள்:'கஃபு இப்னு ஸூஹைர் (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்கள் பள்ளிவாசலில் இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்களை புகழ்ந்து படித்தார்கள்.


​நூல்: ஹாகிம் 6555

♦  ஹழ்ரத் ஹஸ்ஸான் (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்கள் கூறினார்கள்:

​(இறைமறுப்பாளர்களே!) இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்களை குறைவுப்படுத்தி கவி பாடுகிறீர்கள். அதற்கு பதிலளிக்கும் வகையில் அன்னவர்களை நான் புகழந்து படிப்பேன். அல்லாஹ்விடம் அதற்குரிய நற்கூலி உண்டு.


​​நூல் முஸ்லிம் 4545