MAIL OF ISLAM

Knowledge & Wisdom



ஸலவாத்தின் போது பெரு விரலை முத்தமிடலாமா?

​எழுதியவர்: மௌலவி  S.L. அப்துர்ரஹ்மான்  (கௌஸி)  கல்முனை.


பெருமானார் முஸ்தபா ﷺ அவர்களின் பெயர் உச்சரிக்கப்பட்டு ஸலவாத் சொல்லும் பொழுது இரு பெரு விரலைகளை முத்தி கண்ணில் வைப்பது முஸ்தஹப்பா?

♦ நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பெயர் கேட்கும் போது இரு பெரும் விரலை முத்தி கண்ணில் ஒற்றிக் கொள்வதும், அதானின் போதும் பரிசுத்த மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருநாமம் கேட்டவுடன் தம் பெருவிரலை கண்களில் ஒற்றிக் கொள்வது ஹராம் என வஹாபிகள் கூறுவார்கள்.


​​ஆனால் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமா'அத்தினர் பரிசுத்த மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருப்பெயரை அதானின் போதும் ஏனைய இடங்களிலும் கேட்டவுடனேயே ஸலவாத்துக்கூறி பெருவிரல்களை முத்தமிட்டுக் கொள்வதற்கு அனுமதி உண்டு என்றுக் கூறுகிறது.


​​

♦ அல்லாஹ்வும், அவனின் மலக்குகளும் நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீது “ஸலவாத்” சொல்கிறார்கள். விசுவாசிகளே! நீங்களும் அந்த நபீ மீது ஸலவாத் சொல்லுங்கள். இன்னும் ஸலாமும் சொல்லுங்கள். (அல்-குர்ஆன் 33-56)

மேற்கொண்ட திருவசனத்தில் வந்துள்ள “ ஸல்லூ” என்ற சொல்லும், “ஸல்லிமூ” என்ற சொல்லும் “ அம்றுன் முத்லகுன்” பொதுவான ஏவல் வினைச் சொற்களாகும். இச்சொற்கள் நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவரகள் மீது எந்த நேரம் வேண்டுமாயினும் ஸலவாத், ஸலாம் சொல்லலாம் என்ற கருத்தைத் தரும் சொற்களேயன்றி ஒருநேரம் குறிப்பிட்டு இந்தநேரம் சொல்லுங்கள் இந்த நேரம் சொல்லாதீர்கள் என்ற கருத்தை ஒருபோதும் தரமாட்டாது.

நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீது ஸலவாத் ஸலாம் சொல்லுதல் தொடர்பாக திருக்குர்ஆன் வசனங்களும், நபீமொழிகளும் பொதுவாக வந்துள்ளனவேயன்றி ஒருநேரம் குறிப்பிட்டு இந்நேரம் சொல்லுங்கள் இந்நேரம் சொல்லாதீர்கள் என்று வரவில்லை. எனவே நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீது ஸலவாத், ஸலாம் சொல்லவிரும்பும் ஒரு முஸ்லிம் எந்நேரம் சொல்லவிரும்பினாலும் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் மலசலகூடம் போன்ற அசுத்தமான இடங்களில் மட்டும் சொல்வது தடுக்கப்பட்டுள்ளது.

♦ சுவரக்க லோகத்தில் ஆதி பிதா ஹஸ்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பரிசுத்த மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை காண்பதற்கு ஆவலுற்றப் போது அல்லாஹ் வஹி மூலம் அவர்களுக்கு அறிவித்தான், "பிற்காலங்களில் உங்களுடைய சந்ததியில் அன்னவர்கள் தெளிவாக வெளியாகுவார்கள்" பிறகு ஹஸ்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ்விடம் தான் பரிசுத்த மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லல்லத்தைக் காண ஆவலுற்றிப்பதாகக் கூறினார்கள்.

அல்லாஹுத'ஆலா ஹஸ்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வலது கரத்தின் ஷஹாதது விரலில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லத்தின் நூரொளியை வெளியாக்கிக் காட்டினான். அந்த நூரொளி அல்லாஹுதஆ'லாவை தஸ்பீஹ் செய்துக் கொண்டிருந்தது. இந்தக் காரணத்தால்தான் இந்த விரல் கலிமா விரல் என அறியப்படுகிறது.

அத்தோடு அல்லாஹுத'ஆலா ஹஸ்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் இரண்டு பெருவிரல் நகங்களிலும் பரிசுத்த மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லலம் அன்னவர்களின் அழகை ஒரு கண்ணாடியில் காண்பது போல் வெளியாக்கிக் காட்டினான்.

உடனே ஹஸ்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் தன் இரண்டு பெருவிரல் நகங்களையும் முத்தமிட்டு தனது முபாரக்கான கண்களில் தடாவிக் கொண்டார்கள். 

இதனால்தான் ஹஸ்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் இந்த ஸுன்னாவை அவர்களின் பரம்பரையினர் பற்றிப்பிடித்துக் கொண்டனர். இப்படி ஜிப்ரீல் அமீன் அலைஹிஸ்ஸலாம் பரிசுத்த மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களிடம் அறிவித்தப்போது, அன்னவர்கள் கூறினார்கள், "ஒருவர் அதானின்போது என் பெயர் சொல்லக் கேட்டு தன் பெருவிரல்நகங்களை முத்தமிட்டு கண்களிலும் தடாவிக் கொள்வாரேயானால் அவர் ஒருபோதும் குருடாகமாட்டார். (நூல் : தfப்ஸீர் ரூஹுல் பயான்)

♦ அந்த அடிப்படையில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெயர் உச்சரிக்கப்பட்டு ஸலவாத் சொல்லும் போது குறிப்பாக "அஷ்ஹது-அன்ன-முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்" என்று பாங்கில் கேட்டதும் இரு பெரு விரலைகளை முத்தி கண்ணில் வைப்பது முஸ்தஹப்பு – விரும்பத்தக்கதாகும்.


​​இம்மை, மறுமை பயன்களை அளிக்க வல்லததாகும். 'முதல் அஷ்ஹது-அன்ன-முஹம்மதர் ரஸூலுல்லாஹ் என்று கேட்கும் போது 'ஸல்லல்லாஹு அலைக்க யாரஸூலல்லாஹ்' என்றும், இரண்டாவது 'அஷ்ஹது-அன்ன-முஹம்மதர் ரஸூலுல்லாஹ்' என்று கேட்கும் போது , 'குற்றத்து ஐனிபிக யாரஸூலல்லாஹ்' – உங்களைக் கொண்டே என் கண் குளிர்ச்சி என்று சொல்லி இருப் பெரும் விரல்களை முத்தி இரு கண்களில் வைப்பது முஸ்தஹப்பாகும்.


​​பின் 'அல்லாஹும்ம-மத்தியினி-பிஸ்ஸம்யி-வல் பஸரி - கேள்வி, பார்வையைக் கொண்டு எனக்கு சுகிக்கச் செய்வாயாக! என்று சொல்ல வேண்டும். ஏனெனில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அ(ப்படி செய்த)வனை சுவர்க்கத்திற்கு இழுத்துச் செல்வார்கள்.  


நூல்கள் : துர்ருல் முக்தார், கன்ஜுல் இபாத், பதாவா ஸூபிய்யா, கஹ்ஸதானி, பஹ்ருற்றாயிக், ஷரஹு விகாயா

♦ கண்ணிய மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அறிவிக்கப்படுகிறது, "கியாமத் நீதி தீர்ப்பு நாளிலே, அதானின் போது என்பெயர் கேட்டவுடன் தன் பெருவிரல்களை தன் கண்களில் ஒற்றிக் கொள்வதை வழமையாக்கிக் கொண்டவரை நான் தேடுவேன். அவரை நான் சுவனத்திற்கு இட்டுச் செல்வேன்."


​​நூல் : ஸலாத் அல் மஸ்'ஊதி, பாகம் - 2, அத்தியாயம் - 20


​​

♦ அதானில் (பாங்கில்) நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெயர் கேட்கும் போது இருபெரும் விரலை முத்துவதும், இரு கண்களில் வைப்பதும் ஆகுமாகும். இமாம்கள் நமது ஷெய்குமார்கள் முஸ்தஹப்பு என்று தெளிவாக கூறியுள்ளார்கள்.


​​நூல் : பதாவா ஜமால் இப்னு அப்துல்லாஹ் இப்னு உமர் மக்கி


​​

♦ 'முஅத்தின் (பாங்கு சொல்பவர்) அஷ்ஹது அன்னமுஹம்மதர் ரஸூலுல்லாஹ் என்று சொல்வதை கேட்கும் போது மர்ஹபன் – பிஹபீபி-வ-குற்றத்துஐனி – சோபனம் எனது நேசரைக் கொண்டு கண்குளிர்ச்சி – முஹம்மதிப்னி அப்தில்லாஹ் – ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று சொல்லி இரு பெரும் விரலை முத்தி கண்ணில் வைப்பானாகில் குருடாக மாட்டான், கண் வலி எக்காலமும் வராது.'


​​நூல்: ஆனா பாகம் 1, பக்கம் 243


​​

♦ பரிசுத் மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள், "யாராயினும் ஒருவர் முஹம்மத் எனும் என் நாமத்தை தன் கரங்களால் தொட்டு அக்கரங்களை தன் உதடுகளால் முத்தமிட்டு கண்களிலும் தடாவிக் கொள்வாரேயானால், அவர் அல்லாஹ்வை( நாளை மறுமை நாளில்) அவனுடைய நேர்வழிப்பெற்ற நல்லடியார்கள் காண்பது போல் காண்பார். அவர் பாவியாக இருந்தாலுங்கூட அவருக்காகப் பரிந்துரைப்பது எனக்கு நெருக்கமாகிவிடும்."


​​நூல் : அந் நவாfபி'உல் அத்ரிய்யா


​​

♦ மேலும் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பெயர் கேட்கும் போது இரு பெரும் விரலை முத்தி கண்ணில் வைத்தால் குருடாக மாட்டான். ஒருக்காலமும் கண்வலி வராது.


​​நூல் : இமாம் மாலிக் மத்ஹப் கிதாப் : கிபாயத்துத் தாலிப்