MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
ஸில்ஸிலா (வம்சாவளி)
எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.
"ஸில்ஸிலா எனும் சங்கிலித் தொடர் மற்றும் நஸபு எனும் வமிசாவழி என்றால் என்ன? மேலும் ஸில்ஸிலாவை மக்கள் மத்தியில் வெளிப்படுத்தி காட்டலாமா?"
♣ ஸில்ஸிலா என்றால் என்ன?
ஸில்ஸிலா என்பது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொட்டு தற்போதுள்ள ஷெய்குமார்கள் வரையுள்ள ஞானவழித் தொடரைக் குறிக்கும். அதாவது தற்போதுள்ள ஷெய்கு தமக்கு முன்னாடியுள்ள ஷெய்குவிடம் கிலாபத் எனும் குருபீடம் பெற்று அந்த ஷெய்கு தமக்கு முன்னாடியுள்ள ஷெய்குவிடம் கிலாபத் பெற்று அப்படியே இறுதியாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரை சென்று அல்லாஹ் அளவில் கொண்டு முடிகிறது.
இவ்வாறே அவர்களிடமிருந்து கிடைக்கும் 'ஆன்மீக பயிற்ச்சி' ஆகும் ஷெய்குமார்கள் தாங்கள் பெற்ற கிலாபத்தை தகுதியுள்ளவர்களுக்கு கொடுத்து தங்கள் ஸில்ஸிலா தொடர வழி வகை செய்யவும் செய்யலாம், அல்லது தகுதியுள்ளவர்கள் கிடைக்காவிடின் அதை அப்படியே விட்டும் விடலாம். அது அந்த ஷெய்குமார்களின் விருப்பத்தைப் பொறுத்தது. கிலாபத் பெற்ற ஷெய்குமார்கள் மக்களை பரிபக்குவப்படுத்திட முரீது எனும் பைஅத் கொடுத்து அவர்களை விலாயத் பெற வைத்து அல்லாஹ் அளவில் பனாவாக்கி ஜெயம் பெற வைப்பது ஷெய்குமார்களின் சேவையாகயிருக்கிறது.
♣ ஸில்ஸிலாவின் அடிப்படையில் உலகில் தோன்றிய தரீக்காக்கள்.
உலகில் சுமார் 125 தரீக்காக்கள் தோன்றி வளர்ந்ததாக வரலாறு கூறுகின்றது. அந்த அடிப்படையில் பிரதான தரீக்காக்களாக
1) காதிரிய்யா :- ஹழ்ரத் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி - ஜீலானீ
2) ஷுஹரவர்திய்யா :- ஹழ்ரத் ஷிஹாபுத்தீன் ஷுஹரவர்தி ரஹ்மதுல்லாஹி அலைஹி
3) ரிபாஇய்யா : - ஹழ்ரத் அஹ்மத் அல் கபீர் அர் ரிபாஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி - பஸரா
4) ஷாதுலிய்யா : - ஹழ்ரத் நூருத்தீன் அஹ்மத் அஷ் ஷாதுலி ரஹ்மதுல்லாஹி அலைஹி – மொரோக்கோ
5) நக்ஷபந்திய்யா :- ஹழ்ரத் பஹாஉத்தீன் நக்ஷபந்தி ரஹ்மதுல்லாஹி அலைஹி – புகாரா
6) ஜிஸ்திய்யா :- ஹழ்ரத் குவாஜா அபூ இஸ்ஹாக் ஜிஸ்தி ரஹ்மதுல்லாஹி அலைஹி
அதில் நக்ஷபந்தியா தரீக்காவின் ஸில்ஸிலாவைத் தவிர உலகில் தோன்றிய அதிகளவிலான தரீக்காக்களின் ஸில்ஸிலா அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடன் முடிவடைகிறது. ஆனால் நக்ஷபந்தியா தரீக்காவின் ஸில்ஸிலா அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடன் முடிவடைகிறது.
21ம் நூற்றாண்டில் சில தரீக்காக்களின் தஃவா பணிகள் சுருங்கிவிட்டன. அல்லது முற்றுப்பெற்றுவிட்டன. ஆனால் ஐரோப்பா, அமெரிக்கா, ரஷ்யா போன்ற இஸ்லாமிய வாசனையை அறிந்திராத இடங்களுக்கு தஃவாவை எடுத்துச் சென்றவர் நக்ஷபந்தியா தரீக்காவின் ஆன்மீகத் தலைவர் மௌலானா ஷெய்க் நாஸிம் அல் ஹக்கானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள். இன்றும் அவர்களது முரீதீன்கள் அவர்களின் பணியை தொடர்ந்தும் முன்னெடுக்கிறார்கள்.
♣ ஸில்ஸிலாவை அடிப்படையாக கொண்டு தோன்றிய தரீக்காக்களின் ஷெய்குமார்களுடனுள்ள தொடர்பு
ஒருவன் ஜெயம் பெறுவதற்கு கண்டிப்பாக ஷெய்குமார்களின் தேவை அவசியமாகிறது. சிறு வயதிலேயே விலாயத்தை அடையப்பெற்றிருந்தும் செய்யதினா கௌதுல் அஃலம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் ஒரு ஷெய்கு தேவைப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த முரீதுகள் தங்கள் ஷெய்கு சொன்ன பிரகாரம் செயல்பட்டால் ஜெயம் பெறுவது நிச்சயம்.
ஏனெனில் காமிலான ஷெய்குமார்களின் ஒவ்வொரு சொல்லும் அல்லாஹ், ரஸூலுடைய சொல்லை ஒத்ததாக இருக்கிறது இந்த ஷெய்குமார்கள்தான் தம் சீடர்களை அல்லாஹ் அளவில் சேர்த்து வைக்கக்கூடியவர்களா இருக்கிறார்கள். ஒரு முரீதிற்கு எந்தவகை ஞானம், பதவியுயர்வு, கிடைக்கும் படித்தரம் ஆகியவை தமது ஷெய்குமார்கள் மூலமாகவே கிடைக்கிறது. அந்த ஷெய்குமார்களுக்கு அவர்களின் ஷெய்கு மூலமாகவும் அப்படியே இறுதியில் அல்லாஹ் மூலமாகவும் கிடைக்கிறது.
ஆகவே ஒரு ஷெய்கை கைப்பிடித்தவன் தன் ஷெய்கிடம் மிகவும் மரியாதையோடும், கண்ணியத்தோடும் நடந்து கொள்ள வேண்டும். ஷெய்கிடம் மரியாதைக் குறைவாகவோ, கண்ணியக் குறைவாகவோ நடப்பது அவனின் ஈமானை பாதித்து விடும். ஒருவன் ஷெய்கை எதிர்ப்பதால் அவனுடைய பைஅத் முறிந்து விடுகிறது. அவனுக்கும் அவன் ஷெய்குக்கும் உள்ள தொடர்பு அறுந்துவிடும். அதாவது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் கொண்ட நேரடித் தொடர்பு அறுந்து விடும். ஒரு ஷெய்கால் வெறுத்து ஒதுக்கப்பட்டவனை வேறு எந்த ஷெய்காலும் முன்னேற்றப்பாதைக்கு கொண்டு செல்ல முடியாது.
♣ ஸில்ஸிலா தொடர்பற்ற போலித் தரீக்காக்கள் பற்றிய விழிப்புணர்வு
இந்நிலையில், தரீகாவின் பெயரைச் சொல்லி வஹ்ஹாபியக் கருத்துக்களை பரப்புவதற்கும், புகழுக்காகவும், பிறரால் போற்றப்பட வேண்டும் என்பதற்காகவும் போலி தரீக்காக்களின் பெயரில் பொய்யான ஷைய்குமார்கள் தற்போது உலா வரத் துவங்கியுள்ளனர். இதைப் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, மக்கள் தவறான பாதையில் செல்வதை தடுத்திட வேண்டியது நம் சுன்னத்-வல்-ஜமாஅத்தினர்களின் கடமையாகயிருக்கிறது.
மக்கா, மதீனா உலமாக்களாலும், ஏனைய உலமாக்களாலும் காபிர் என்று தீர்ப்பளிக்கப்பட்ட வஹ்ஹாபிகளான ரஷித் அஹ்மது கங்கோஹி, அஷ்ரப் அலி தானவி போன்றவரை ஷெய்குகளாகவும் மற்றும் இப்னு தைமிய்யா, அப்துல் வஹ்ஹாப் நஜ்தி போன்றவர்களை மகான் என்றும், தங்கள் வழிகாட்டிகளாகவும் ஏற்றுக் கொண்ட சிலரை ஷெய்குகளாகவும் கொண்ட போலி தரீகாக்கள் மற்றும் சில்சிலா தொடர்பற்ற தரீகாக்கள் பக்கம் மக்கள் சென்று வழிதவறிடாமல் தடுத்திட வேண்டியதிருக்கிறது. இக்காலகட்டத்தில் காமிலான ஷெய்குமார்கள் கிடைப்பது அரிதாகயிருக்கிறது.
♣ ஸில்ஸிலாவை மக்கள் மத்தியில் பகிரங்கப்படுத்தலாமா?
ஷெய்குமார்கள் தங்களுக்கு தந்திட்ட ஸில்ஸிலாக்களை வெளியில் காட்டுவதும் - உண்மை தரீகாக்களை இனம் காட்டுவதும் தடுக்கப்பட்டதல்ல, மாறாக ஆகுமானதாகயிருக்கிறது. இது மார்க்க அறிஞர்களின் கூற்றாகும்.
♣ நஸபு எனும் வமிசாவழி என்றால் என்ன?
ஸில்ஸிலா போன்று 'நஸபு' என்கின்ற வமிசாவழி தொடர்பு பட்டியலும் உள்ளது. இது ஒருவரின் குடும்ப வமிசாவழித் தொடரைக் குறிப்பதாகும். ஒருவரின் தந்தை வழியே இத்தொடர் செல்கின்றது. இதில் தொடர் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரை செல்கின்ற தொடரைப் பெற்றிருப்பவர்கள் அஹ்லுல் பைத்துக்கள் என்ற ஸெய்யதுமார்கள் (தங்கள், மௌலானா, ஸாதாத்துக்கள்) என்றும்,
♦ ஸெய்யிதினா அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வரை தொடரைப் பெற்றிருக்கின்றவர்கள் 'பக்ரி' வமிசத்தினர் என்றும்,
♦ஸெய்யிதினா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்வரை தொடரை பெற்றிருப்பவர்கள் 'பாரூகி' வமிசத்தினர் என்றும் அழைக்கப்படுகின்றனர், இதேபோன்று பல வமிசத் தொடர்களைப் பெற்றிருப்பவர்கள் உள்ளனர். இதில் மிகச் சிறப்புமிக்கவர்கள் அஹ்லுல் பைத்துக்கள் 'ஸெய்யிதுமார்கள்' ஆவார்கள்.