MAIL OF ISLAM

Knowledge & Wisdom



​ஸுப்ஹான மவ்லிது பற்றிய குற்றச்சாட்டுக்களுக்கு மறுப்புகள் 

​ 

எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.

சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் 'ஸுப்ஹான மவ்லித்' பற்றிய வழிகெட்ட வஹ்ஹாபிகளின் குற்றச்சாட்டுக்களுக்கு குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் மறுப்புகள்.


​​

♣ இது பற்றி வழிகெட்ட வஹ்ஹாபிகளின் நிலைப்பாடு 

இன்று வழிகெட்ட வஹ்ஹாபிகள் மவ்லித் கிதாபுகளை குறிப்பாக ஸுப்ஹான மவ்லிது கிதாபை தப்புத் தப்பான அர்த்தம் வைத்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட ஸுப்ஹான மவ்லிது என்ற புத்தகத்தை சிலர் வைத்துக் கொண்டு, ஸுப்ஹான மவ்லிது தவறு என்று விமர்ச்சனம் செய்து கொண்டு வருகின்றனர்.


​​உண்மையில் எவர்கள் அவ்வாறு வெளியிடுகிறார்களோ குர் ஆன், ஹதிஸ்களில் ஞானம் இல்லாமல் வெளியிட்டு உள்ளார்கள், இதிலும் விமர்சிப்பவர்கள் உண்மையான விளக்கத்தை தவறாக புரிந்து கொண்டு மற்றும் தெரிந்து கொண்டு மக்கள் இடையே தவறாக விமர்சனம் செய்து உள்ளார்கள், இன்ஷா அல்லாஹ் ஸுப்ஹான மவ்லித்தில் இடம் பெற்றிருக்கும் வார்த்தைகள் அனைத்தும் குர் ஆன், ஹதிஸ் நூல்களில் இருந்து தான் தொகுக்கப்பட்டுள்ளது தான் என புரிந்து கொள்வீர்கள்.

இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள், நீங்கள் தர்க்கம் செய்து பிரிந்தும் விடாதீர்கள், அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள், நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள் இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள் அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.

(அல்குர்ஆன் : 3:103)

நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் புகழ்கள் நிறைந்த சுப்ஹான மெளலிது ஷரீபு ஓதத் தேவையில்லை என்பதற்கு குர்ஆன், ஹதீஸ்களில் இருந்து ஒரே ஒரு ஆதாரத்தைக் கூட காட்ட முடியாமல் வஹ்ஹாபி ஹவாரிஜீயாக்கள் நாங்கள் புத்திசாலி என்று நினைத்துக் கொண்டு மவ்லிதுகளை தடை செய்ய வேண்டும் என்பதற்க்காக மௌலித் கிதாபுகளில் வரம்பு மீரப்பட்ட ஷிர்க்கான கவி வரிகள் உள்ளன என்றெல்லாம் சில தந்திர வார்த்தைகளை உபயோகித்து மவ்லித் கூடாது (ஷிர்க் - பித்அத்) என்று கிருக்கு பிடித்தவர்களாக விமர்சிக்கும் சில வாதங்களுக்கான தெளிவாக விளக்கங்கள் பின்வருமாறு:


​​

♣  நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள்  ரபியுல் அவ்வல் மாதம் 12 ஆம் நாளில்தான் பிறந்தார்களா?

♦நபிகள் நாயகம் (ஸல்லலாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் ரபீ உல் அவ்வல் மாதம் 12 ம் பிறையில் பிறந்தார்கள்.


​​ஹழ்ரத் முஹம்மது இப்னு இஸ்ஹாக் (ரலியல்லாஹு அன்ஹு)

​நூல்: ஹாகிம் - 2-603, ஸீரத் இப்ன் ஹிஷாம் - 1-211

♦நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அன்னவர்கள் யானை ஆண்டில் பிறந்தார்கள்.


​​ஹழ்ரத் இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு)

​நூல் ஹாகிம் , இப்னி ஹிஷாம், இந்த ஹதீஸ் இமாம் புஹாரி, இமாம் முஸ்லிம் (ரலியல்லாஹு அன்ஹுமா) ஆகியோரின் நிபந்தனையின் படி ஸஹீஹான ஹதீஸாகும்.

♦ நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் யானை ஆண்டு ரபிஉல் அவ்வல் மாதம் 12, திங்கட்கிழமை அதிகாலை நேரம், மக்கா நகரில் ஷிஃபு பனீ ஹாஷிம் என்ற பகுதியில் உள்ள தாரு அபீதாலிப் என்ற (அதாவது தற்போது முஹம்மது இப்னு யூஸுப் அவர்களுக்குரிய வீடு என்று கூறப்படுகின்ற) இடத்தில் பிறந்தார்கள்.


​​நூல்கள்: முஹம்மதுர் ரசூலுல்லாஹ் பக்கம் 12, இப்திகாவுல் உஸூல் பக்கம் 16, அல்புன்யானுள் மர்ஸுஸ் 29, 40, 76

♦ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களிடம் திங்கட்கிழமை நாள் நோன்பு நோற்பதன் காரணம் பற்றி வினவப்பட்டபோது அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். அன்றைய தினத்தில்தான் நான் பிறந்தேன். மேலும் அன்றுதான் என் மீது வஹீ இறக்கப்பட்டது.


​​நூல்கள்: முஸ்லிம் 1162 - 198, முஸ்னத் அஹ்மத் 5- 299, மிஷ்காத் 2045


​​

♣ ஸூப்ஹான மௌலித் யார் எழுதியது என்றே முகவரி இல்லை அப்படி இருக்க அதனை ஓதலாமா?

ஸுப்ஹான மௌலித் முன் பக்கத்திலயே அதனுடைய ஆசிரியர் 'அஷ்ஷெய்க் அல்ஹதீப் முஹம்மத் அல் மதனி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களும், இன்னும் ஹுஜ்ஜதுல் இஸ்லாம் அபீ ஹாமித் முஹம்மத் அல் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களுக்கும் உறியது என்று தெளிவாக உள்ளது.


​​அந்த அடிப்படையில் வஹாபிகள் கூறுவது போன்று இன்ன ஆளுக்குறியது என்று முகவரி இல்லை என வைத்துக் கொண்டாலும் பெயர் குறிப்பிடப்படாததை ஓதக்கூடாது என்று சட்டம் உண்டா? மேலும் இன்ன ஆளுக்குறியது என்று ஆசிரியர் குறிப்பிடப்பட்ட ('புர்தா ஷரீப்') - எழுதிய ஆசிரியர் அஷ்ஷெய்க் ஷரபுfத்தீன் அபீ அப்தில்லாஹ் முஹம்மத் இப்னு ஸயீத் அல்பூஸரி ரஹ்மதுல்லாஹி அலைஹி, (முஹியத்தீன் மௌலித் - ஷாகுல் ஹமீத் மௌலித்) எழுதிய ஆசிரியர் அஷ்ஷெய்க் மஹ்மூத் அல்காஹிரீயீ அத்தீபியீ ரஹ்மதுல்லாஹி அலைஹி இது போன்று எழுதிய ஆசிரியர் யார் என்று முகவரி உள்ள மௌலித் ஓதுவதற்கு வஹ்ஹாபிகள் தயாரா? ஆகவே எது எப்படி இருந்தாலும் அந்த நூல்கள் யார் எழுதியது என்பது நோக்கமில்லை. மாறாக அதில் கூறப்பட்ட விடயங்கள் குர்ஆன், ஹதீஸ்களுக்கு முரணில்லாத வகையில் இருந்தால் எந்த ஒரு செயலையும் அமலையும் செய்வது (ஷிர்க் பித்அத்) என்று விமர்சிக்க கூடாது.

♦ வலது கையால் கொடுப்பதை இடது கைக்கு தெரியாமல் தானம் செய்பவரைத்தான் அல்லாஹ் விரும்புகிறான் என்றும் அப்படி மறைத்து செய்யும் தானம் தான் தரமானது என்றும் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.


​​நூல்கள்: திர்மிதி 3369, நஸாஈ 2570,மிஷ்காத் 1921,1922

♦ நிச்சயமாக இறைவன் உங்களின் வெளித் தோற்றத்தை பார்ப்பதில்லை மாறாக உங்களின் பரிசுத்தமான இதயத்தைதான் பார்க்கிறான் என்றும் வந்திருக்கும் ஹதீஸ் விளக்கம் பார்க்க (நூல்கள் திர்மிதி 2567, முஸ்லிம் 2564, இப்னு மாஜா 4143, மிஷ்காத் 5314)

எனவே ஒரு நற்காரியத்தை செய்யும் முன்பே தன் பெயரை எழுதி ஒட்டி விட வேண்டும் என்று எந்த ஒரு ஹதீஸில் வந்துள்ளதா? ஆம் என்றால் வஹ்ஹாபிகள் ஆதாரம் தருவார்களா?


​​

♣ ஸூப்ஹான மௌலித் என்ற பெயரே ஷிர்க்கான பெயரா?

மௌலித் என்றால் பிறப்பு என்று பொருளாகும், ஸூப்ஹான் என்றால் அல்லாஹ்வை குறிக்கும் எனவே ஸூப்ஹான மௌலித் என்றால் அல்லாஹ்வின் பிறப்பு என இலக்கணம், இலக்கியம் தெரியாத முட்டாள் வஹ்ஹாபிகள் விமர்சனம் செய்வார்கள். அந்த அடிப்படையில் மௌலிது ஓதுபவர்கள் அல்லாஹ்வுக்கே மௌலிது ,ஓதுவதோடு இறைவனுக்கே பிறப்புண்டு என்று வாதிக்கின்றனர் போலும் என வழிகெட்ட வஹ்ஹாபி பிரசங்கி மேடைகளில் கூறுகிறார்கள். ஆகவே மனம்போன போக்கில் மார்க்கத்தை விமர்சிக்கின்றவர்களின் ஆணவத் தொனி அந்தப் பேச்சில் வெளிப்படுகிறது. அல்லாஹ் அவர்களுக்கு நேரிய பாதையைக் காட்டியருள முதலில் துஆச் செய்வோம்.


​​இனி அவர்களது பேச்சை அலசுவோம்.

ஸுப்ஹான என்பது நீந்தக் கூடிய கப்பல், முஃமின்களின் ஆன்மா ரூஹ் போன்றவற்றுக்கும், ஒன்றைத் தூய்மைப்படுத்துவதையும், வியப்பை வெளிப்படுத்துவதையும் குறிக்கும் சொல். ஸுப்ஹானல்லாஹ் என்றால் (அல்லாஹ்வுதாலா பிள்ளை, தோழர் போன்றவற்றை விட்டு தூய்மையானவன். பொய், பொய்யர்கள் கூறும் அபாண்டம் அதியவற்றை விட்டு பரிசுத்தமானவன். மேலும் ஸுப்ஹான என்றால் வழிபாட்டில் இலேசுபடுத்துதல் என்ற கருத்தையும் தரும். ஆனால் ‘ஸுப்பூஹ்‘ என்பது அல்லாஹ்வின் பண்பில் ஒன்று.


​​ஏனெனில் இறைவன் தன்னைப் பற்றி தஸ்பீஹ் செய்கின்றான். ஸுப்ஹாத் என்பது சுஜுதுச் செய்யும் இடத்தைக் குறிக்கும். முஸப்பிஹ் என்பது ஹதீஸ்கலை மேதை முஹத்திஸையும் குறிக்கும் சொல். (நூல் : காமூஸ் அரபி அகராதி, பாகம் 01, பக்கம் - 137)


​​எனவே ஸுப்ஹான மௌலிது என்றால் புனிதமான மௌலிது என்று பொருள்.ஸுப்ஹானல்லாஹ் என்றால் பொய்யர்களின் அபாண்டங்களை விட்டு அல்லாஹ் தூய்மையானவன் என்பதைக்கூட புரியாத முட்டாள்களின் அறியாமையின் வெளிப்பாடு என்பதுதான் எதார்த்தமான உண்மையாகும்.

மேலும் ஸூப்ஹான் என்பதற்கு அல்லாஹ் என்று பொருள் அல்ல ஒரு வாதத்திற்கு வைத்துக்கொண்டாலும் "ஸூப்ஹானமவ்லித்" என்று வராது மாறாக "மவ்லிதுஸ்ஸூப்ஹான்" என்று கூறினால்தான் சரி, எனவே அரபி இலக்கணம் இலக்கியம் தெரியாத அடிப்படை காரணமே இந்த வஹ்ஹாபிகளின் விமர்சனமும். எனவே "ஸூப்ஹானலல்லாஹு" என்றால் அல்லாஹ்வை தூய்மைப்படுத்துகிறேன் என்பது போல ஸூப்ஹான மௌலித் என்றால் பிறப்பை தூய்மைப்படுத்துகிறேன் என்று பொருளாகும் எனவே தான் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பரிசுத்தமான பிறப்பைப்பற்றி பேசுகின்ற மௌலிதிற்கு பரிசுத்தமான பிறப்பு அல்லது பிறப்புகளில் பரிசுத்தமானது என்ற அடிப்படையில் ஸூப்ஹான மௌலித் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.


​​

பாவங்களை நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களால் மன்னிக்க முடியும் என்ற கவி வரிகள் வரம்பு மீரப்பட்டுள்ளதா?

ஹகீகத் என்ற இலக்கியம் அதாவது அடிப்படையில் உண்மையில் நமது பாவங்களை மன்னிப்பது நமது குறைகளை மறைப்பதும் அல்லாஹூ தஆலா வாகத்தான் இருக்கிறான் என்றாலும் அன்னிஸா 64 ஆவது வசனம் குறிப்பிடுவது போல பாவிகளின் பாவங்களை பொருக்கப்படுவதற்கு நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் காரணமாக இருக்கிறார்கள் என்ற ரீதியில் பாவங்களை பொறுப்பதே கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்தான் என்று (மஜாஸ் என்ற இலக்கிய மரபின்படி குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி ஒரு செயலை அதைச்செய்தவரின் பால் சேர்க்காமல் அதற்கு காரணமாக இருந்தவரின் பால் சேர்ப்பது குர்ஆன், ஹதீஸ்களில், மேலும் நமது பேச்சு வழக்கிலும் எழுத்திலும் நிறைந்து காணப்படுகிறது.


​​உதாரணமாக பசியைப் போக்குபவனும் சுகத்தை தருபவனும் அல்லாஹ்தான் ஆனால் நமது பேச்சுவழக்கில் இன்ன உணவை சாப்பிட்டேன் பசி போய்விட்டது, டாக்டரிடம் சிகிச்சை எடுத்தேன் நோய் சுகமாகி விட்டது என்றுதான் கூறுகின்றோம் அல்லாஹ் என்று கூறுவதில்லை.

♦ அல்லாஹ்வின் கட்டளைக்கு கீழ்படிவதற்காகவேயன்றி (மனிதர்களிடம்) நாம் தூதர்களில் எவரையும் அனுப்பவில்லை. ஆகவே அவர்கள் எவரும் தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்து கொண்டு, உம்மிடம் வந்து அல்லாஹ்வின் மன்னிப்பைக்கோரி அவர்களுக்காக (அல்லாஹ்வின்) தூதராகிய (நீரும்) மன்னிப்புக் கேட்டிருந்தால் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் அவர்கள் கண்டிருப்பார்கள்.


​​அல்குர்ஆன் : 4:64, மேலும் பார்க்க அல்குர்ஆன் 3: 159

♦( நபியே!) நீர் கூறும்: “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.


​​திருக்குர்ஆன் 3:31

♦ ஹழ்ரத் கஃப் இப்னு ஜுஹைர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் பாடிய கவிதை 'இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்களென எனக்கு தெரிவிக்கப்பட்டது. மன்னிப்பு என்பது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே. மன்னிப்புத் தேடியவனாக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நான் வந்தேன். அம்மன்னிப்பு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒப்புக் கொள்ளப்பட்டது. திண்ணமாக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒளி கொடுக்கும் பேரொளியாகவும், இறைவனின் வாட்களில் உருவிய வாளாகவும் உள்ளார்கள்.


​​அறிவிப்பவர்: ஆஸிம் இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு)

​நூல்: ஹாகிம் - 6558


​​

பாவங்களை நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களால் அழிக்க முடியும் என்ற கவி வரிகள் வரம்பு மீரப்பட்டுள்ளதா?

எனக்கு ஐந்து பெயர்கள் உள்ளன. முஹம்மது - புகழப்பட்டவர், அஹ்மத் - இறைவனை அதிகம் புகழ்பவர், மாஹீ - பாவங்களை அழிப்பவர் ஆவேன் என் மூலமாக அல்லாஹ் இறை மறுப்பை அழிக்கிறான், ஹாஷிர் - ஒன்று திரட்டுபவர்.மக்கள் எனக்குப் பின்னால் ஒன்று திரட்டப்படுவார்கள், ஆகிப் -(நபிமார்களில்) இறுதியானவர்.என்று இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக. ஜுபைர் இப்னு முத்யிம் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்கள்.


​​நூல்: புகாரி-4896, 3532

♦ நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் சாச்சா ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்களை ஹின்தா என்ற பெண்மணி கொளை செய்து பெரும் பாவத்திற்க்கு காரணமாக இருந்த ஹிந்தாவை மன்னித்தார்கள்.


​​நூல்: புகாரி


​​

நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை முன்நிலைப்படுத்தி நீங்கதான் ஒளி, சூரியன் சந்திரன் என்றெல்லாம் பாடலாமா?

♦  நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து பேரொளியும், (இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும்) தெளிவுமுள்ள (திருக் குர்ஆன் என்னும்) வேதமும் உங்களிடம் வந்திருக்கின்றது. (அல்குர்ஆன் : 5:15, மேலும் பார்க்க அல்குர்ஆன் : 33:46)

♦நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் முகம் மகிழ்ச்சியால் மின்னிக் கொண்டிருந்தது. இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மகிழ்ச்சியடைந்தால் அவர்களின் முகம் சந்திரனிலிருந்து (வெட்டி எடுக்கப்பட்டுள்ள) ஒரு துண்டைப் போல்(பேரொளியால்) பிரகாசமாகிவிடும். நாங்கள் அதை வைத்து அவர்கள் மகிழ்ச்சியடைந்திருப்பதைத் தெரிந்து கொள்வோம்”


ஹழ்ரத்  கஃபு பின் மாலிக் ரழியல்லாஹு அன்ஹு

​​நூல்: புகாரி 3556,முஸ்லிம் 2769, மிஷ்காத் 5798

♦அபூ இஸ்ஹாக் ஸபீஈ (ரலியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமுகம் (பிரகாசத்தில்) வாளைப் போன்று இருந்ததா என்று? பர்ராஉ ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கேட்கப்பட்டது அதற்கு அவர்கள் “இல்லை, மாறாக சந்திரனைப் போல இருந்தது“ என்றார்கள்.


​​நூல்: புகாரி 3552, ஷரஹூஸ் ஸூன்னா 3647

♦  நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் சூரியனைப் போன்றும் சந்திரனைப் போன்றும் இருந்தார்கள்.


ஹழ்ரத் ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு 

நூல்கள்: முஸ்லிம் 2344,திர்மிதீ 3636,மிஷ்காத் 5779

♦மேலும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சூரியன், சந்திரன்-நிலா, மின்னல் போன்றெல்லாம் மின்னுபவர்கள் என்பதற்கான ஆதாரங்களை பார்க்க (நூல்கள் தாரமி 57,58,60 மிஷ்காத் 5793,5795,5797 திர்மிதி 3648,2811 புகாரி 3555,6770,6771 ஷரஹூஸ் ஸூன்னா 3649 பத்ஹுல் பாரி புகாரி 3225 விளக்கவுரை)


​​

நோய்களுக்கு நிவாரணம் தருவதற்க்கு நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி அவர்களால் முடியும் என்ற கவி வரிகள் வரம்பு மீரப்பட்டுள்ளதா?

ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் நோய்களை குணப்படுத்துவார்கள்.  (அல்குர்ஆன் : 3. 49)

♦ ஜுஅய்த் இப்னு அப்திர் ரஹ்மான் ரலியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள் சாயிப் இப்னு யஸீத் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களைத் தொண்ணூற்று நான்கு வயது உடையவர்களாக, (அந்த வயதிலும்) திடகாத்திரமானவர்களாக (கூன் விழாமல்) முதுகு நிமிர்ந்தவர்களாக கண்டேன். அவர்கள், 'எனக்குக் கேள்விப்புலன் மற்றும் பார்வைப் புலனின் நலம் அல்லாஹ்வின் தூதரின் பிரார்த்தனையால் தான் வழங்கப்பட்டுள்ளன என்பதை நான் அறிந்திருக்கிறேன். என் தாயின் சகோதரி என்னை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் அழைத்துச் சென்று, 'இறைத்தூதர் அவர்களே! என் சகோதரியின் மகன் நோயுற்றிருக்கிறார். இவருக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார்கள். எனவே, நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எனக்காக பிரார்த்திதார்கள்" என்று கூறினார்கள்.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு

​ஷஹீஹ் புகாரி

♦ அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் (யாரேனும் ஒரு) மனிதருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டால், அல்லது கொப்புளேமா காயேமா ஏற்பட்டால், தமது ஆட்காட்டி விரலைப்பூமியில் வைத்து (மண்ணைத் தொட்டு) விட்டு அதை உயர்த்தி, "அல்லாஹ்வின் பெயரால்! எங்களில் சிலரது உமிழ்நீரோடு எமது இந்தப் பூமியின் மண் (இணைந்தால் அது) எங்கள் இறைவனின் ஆணையின் பேரில் எங்களில் நோயுற்றிருப்பவரைக் குணப்படுத்தும்'' என்று கூறுவார்கள்.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் உஸ்மான் இப்னு ஹுனைப் (ரலியல்லாஹு அன்ஹு

​நூல்: முஸ்லிம்

♦ ஒரு தடவை, கண்பார்வையற்ற ஒரு மனிதர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் வந்து, யாரசூலல்லாஹ்! என்னைக் குணப்படுத்தும்படியாக அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள் என வேண்டிக் கொண்டார். அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், நீ விரும்பினால் உனக்காக பின்னர் துஆச் செய்கின்றேன். அது உனக்கு சிறந்ததாக அமையும். அல்லது இப்போதே விரும்பினால் அதை செய்கிறேன் என்று கூறினார்கள்.


​​இப்போதே துஆச் செய்யுங்கள் என அவர் வேண்டிக் கொண்டார். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எழுந்து, அம்மனிதரை உழுச் செய்யுமாறு ஏவினார்கள். பூரணமாக உழு செய்தபின், இரண்டு ரஅகத்துகள் தொழச் சொன்னார்கள். அதன்பின் இவ்வாறு பிரார்த்தியுங்கள் என்று கீழ்க்காணும் துஆவை கற்றுக் கொடுத்தார்கள்:


​​யாஅல்லாஹ்! நிச்சயமாக நான் நபிமார்களுக்கெல்லாம் அருளான முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பொருட்டினால் உன்னை முன்னோக்கிக் கேட்கிறேன். முஹம்மதே! நிச்சயமாக நான் எனது குறித்த தேவை நிறைவேற்றப்படுவதற்காக தங்களைக் கொண்டு எனது இரட்சகனிடம் முன்னோக்கியுள்ளேன். யாஅல்லாஹ்! எனது விடயத்தில் அவரை பரிந்துரைக்கச் செய்வாயாக!


​​இமாம் நஸாயி, இமாம் பைஹகீ, இமாம் தபரானீ, இமாம் திர்மித, இமாம் ஹாகிம் இன்னும் பல ஹதிஸ்கள் உள்ளன.

♦ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கண்பார்வையிழந்த ஸஹாபி ஒருவருக்கு பின்வரும் துஆவைக் கற்றுக் கொடுத்தார்கள். (அதனை ஓதிய அவர் பார்வை பெற்று நலமடைந்தார். தேவைகள் ஏற்படும் போதெல்லாம் ஸஹாபாக்கள் இந்த துஆவை ஓதும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள்) இச்சிறப்பு மிக்க துஆ இதோ!


​​யா அல்லாஹ்! உன்னிடம் கேட்கிறேன். ரஹ்மத்துடைய நபியாகிய முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் பொருட்டைக் கொண்டு உன்பால் முகம் நோக்குகின்றேன். யா ரசூலல்லாஹ்! உங்கள் பொருட்டைக் கொண்டு நாயன்பால் எனது இத்தேவைக்காக முகம் நோக்குகின்றேன். என் தேவை நிறைவேறுவதற்காக நாயனே! எனது விடயத்தில் அன்னாரின் ஷபாஅத்தை ஏற்றுக்கொள்வாயாக!

நூல்கள்: "திர்மிதி 2 -197, இப்னுமாஜா 1 - 441, நஸாயி 658, 659, முஸ்தத்றக் 1 - 519, இப்னுஹுசைமா2 - 226

♦ நான் ஸலாமா (ரலியல்லாஹூ அன்ஹு) அவர்களின் கெண்டைக்காலில் அடிபட்ட ஒரு காயத்தின் அடையாளத்தைப் பார்த்தேன். உடனே நான் அவரிடம் 'இது என்ன?' என்று கேட்டேன். அதற்கவர், 'கைபர் போரன்று எதிரிகளின் தாக்குதலால் எனக்கு காலில் அடிபட்டுவிட்டது. 'ஸலாமா காயம் பட்டுவிட்டார்' என்று மக்கள் கூறினார்கள். பின்னர், அண்ணல் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்களிடம் என்னை கொண்டு சென்றார்கள். அண்ணல் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் என் மீது மூன்று முறை ஊதினார்கள். அதன் பிறகு இந்த நேரம் வரை அந்தக் காயத்தின் காரணமாக எந்த வலியும் எனக்கு ஏற்படவில்லை.' என்று கூறினார்கள்.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் யஜீது பின் அப்திர் ரஹ்மான் (ரலியல்லாஹு அன்ஹூ)

​நூல்: அபூதாவூத்

♦ ஹழ்ரத் கதாதா பின் நுஃமான் (ரலியல்லாஹு அன்ஹூ) அவர்கள் வாயிலாக அறிவிக்கப்படுகிறது: அவர்களின் கண் உஹதுப் போரில் போய்விட்டது. (எதிரிகள் ஈட்டியில் குத்தியதால் அவரின் கண் துண்டித்து கீழே விழுந்து விட்டது. அவர் அண்ணல் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்களிடம் வந்தார். அண்ணல் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் அவரின் கண்ணை அதன் இடத்தில் மீண்டும் பொருத்தினார்கள். அது சரியாக பொருந்திவிட்டது!


​​நூல்: தப்ரானி, பைஹகி

♦ அஸ்மா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் சொல்கிறார்கள்,' அண்ணலாரின் ஜுப்பா ஒன்று ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடம் இருந்தது. ஆயிஷாவின் வபாத்துக்குப் பின்னர் அதனை நான் பெற்றேன். தற்போது அந்த ஜுப்பாவைக் கழுகி நோயுற்றவர்களுக்குக் குடிக்க கொடுக்கிறோம். அவர்கள் அதன் மூலம் சுகமும் பெறுகின்றனர்.


​​நூல்: முஸ்லிம், மிஷ்காத் பக்கம் 374

♦ உம்முஸல்மா ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடம் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமுடியொன்று இருந்தது. மக்கள் அதன் மூலம் நோயிலிருந்து சுகம் பெறுகின்றனர். சில நேரங்களில் தண்ணீர் பாத்திரத்தில் அத்திருமுடியை முக்கி எடுத்து அந்நீரைப் பருகுவர்.


​​நூல்: புகாரி ஓரக் குறிப்பு பக்கம் 875, மேலும் பார்க்க அல்குர்ஆன் 12:93, 96


​​

மறைவானவற்றை நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அறிந்து கொள்வார்கள் என்ற கவி வரிகள் வரம்பு மீரப்பட்டுள்ளதா?

♦ மேலும் அல்லாஹ் இவ்வேதத்தையும் ஞானத்தையும் உம்மீது இறக்கி வைத்தான் இன்னும் நீ அறியாதிருந்தவற்றையும் உமக்கு கற்றுக் கொடுத்தான். மேலும் உன்மீது அல்லாஹ்வின் பேரருள் மகத்தானதாகவே இருக்கின்ரன.

அல்குர்ஆன் 4/ 113

♦ மறைவானவற்றை அல்லாஹ் உங்களுக்கு அறிவித்துக் கொடுப்பவனாகவுமில்லை ஏனினும் தன் தூதர்களில் தான் நாடியவர்களை ( இதனை அறிவிக்க தேர்ந்தெடுக்கிறான்.

அல்குர்ஆன் 3/179

♦ இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு ) அறிவித்தார்கள். வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் இருவருடைய கப்ருகளைத் கடந்து நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சென்றபோது, “இவ்விருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள் ஆனால் மிகப் பெரும் பாவத்திற்காக வேதனை செய்யப்படவில்லை. ஒருவர் சிறுநீர் கழிக்கும்போது மறைக்காதவர், இன்னொருவர் கோள் சொல்லித் திரிந்தவர்“ எனக் கூறிவிட்டு, ஈரமான ஒரு பேரீச்ச மட்டையை இரண்டாகப் பிளந்து இரண்டு கப்ருகளிலும் ஒவ்வொன்றை நட்டார்கள். தோழர்கள், “இறைத்தூதர் அவர்களே! ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்?“ என்று கேட்டதும், “இவ்விரண்டின் ஈரம் காயாதவரை இவர்களின் வேதனை குறைக்கப்படக்கூடும்“ என்று இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.


​​நூல்: புகாரி 1378, மேலும் பார்க்க : புகாரி 3192

♦ நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் கூறினார்கள் நான் மிஃராஜ் சென்ற இரவில் கதீபுல் அஹ்மத் என்ற இடத்தில் நல்லடக்கமாகி இருக்கின்ற மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் கப்ருக்கருகே சென்றேன் அப்போது அவர்கள் தமது கப்ருக்குள்ளே தொழுது கொண்டிருப்பதைப் பார்த்தேன்.


​​நூல்: முஸ்லிம் : பாகம் 2 பக்கம் 268

♦ அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்கள் (ஒரு முறை) நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் அபூ பக்ர், உமர், உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹும்) ஆகீயோரும் உஹுது மலை மீது ஏறினார்கள். அது அவர்களுடன் நடுங்கியது. அப்போது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், “உஹுதே! அசையாமல் இரு! ஏனெனில், உன் மீது ஓர் இறைத்தூதரும், (நானும்) ஒரு சித்தீக்கும், இரண்டு உயிர்த் தியாகிகளும் உள்ளனர்” என்று கூறினார்கள்.


​​நூல்: புகாரி :3675

குறிப்பு : நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பின்னால் (எதிர்காலத்தில்) நடக்க இருக்கும் செய்தியினை அதாவது மேலே கூறப்பட்ட இரண்டு ஸஹாபா தோழர்களும் ஸஹீதாக்கப்படுவாருகள் என்பதை முன்கூட்டியே அறிவித்து விட்டார்கள்.


​​

கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நாளை நடக்க இருப்பதை முன்கூட்டியே அறிவார்கள் என்ற கவி வரிகள் வரம்பு மீரப்பட்டுள்ளதா?

♦மறைவானவற்றை அல்லாஹ் உங்களுக்கு அறிவித்துக் கொடுப்பவனாகவுமில்லை ஏனினும் தன் தூதர்களில் தான் நாடியவர்களை ( இதனை அறிவிக்க தேர்ந்தெடுக்கிறான்.


​​அல்குர்ஆன் 3/179, மேலும் பார்க்க அல்குர்ஆன் 4/ 113)

♦அனஸ் பின் மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது: உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் பத்ருப் போரில் கலந்துகொண்டவர்களைப் பற்றி எங்களிடம் கூறலானார்கள்.அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பத்ருப் போர் நடக்கக்கூடிய மைதானத்தில் நடந்து சென்று எங்களிடம் பத்ருப் போரில் எதிரிகள் மாண்டு கிடக்கவிருக்கும் இடங்களைக் இன்ஷா அல்லாஹ்! நாளைய தினம் இன்னார் கொல்லப்படும் இடம் இது... இன்ஷா அல்லாஹ்! நாளைய தினம் இன்னார் கொல்லப்படும் இடம் இது... என்று தாங்கள் விரரால் சுட்டிக் காட்டினார்கள். சத்திய (மார்க்க)த்துடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை அனுப்பியவன் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் குறிப்பிட்ட இடங்களில் பிசகாமல் சரியாக அவர்கள் மாண்டு கிடந்தனர்.


​​நூல் : முஸ்லிம் 5511, திர்மிதீ


​​

♣ நாயகே யாரஸூலல்லாஹ் நிச்சயமாக நான் உங்களின் இளிவான சிரிய அடிமையாவேன் என்ற கவி வரிகள் வரம்பு மீரப்பட்டுள்ளதா?

அடிமை என்பது அதாவது நாம் இறைவனுக்கு மட்டும்தானே அடிமை அப்படி இருக்க கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நாம் அடிமை என்று சொல்வது ஷிர்க் என்ற கேள்விக்குறிய பதில். அதாவது (ஹகீகத்) என்ற இலக்கியம் அடிப்படையில் உண்மையில் நாம் அல்லாஹூ தஆலாவுக்குதான் அடிமையாக இருக்கின்றோம்.


​​ஆனால் (மஜாஸ் என்ற இலக்கிய மரபின்படி நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் அடிமை என்று சொல்லப்பட்டுள்ளது. காரணம் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் சொல், செயல், அங்கீகாரங்களை வழிகாட்டலை எடுத்து நடப்பதால் எனவே இப்படி ஒரு செயலை அதற்குறியவரின் பால் சேர்க்காமல் அதற்கு காரணமாக இருந்தவரின் பால் சேர்ப்பது குர்ஆன், ஹதீஸ்களில், மேலும் நமது பேச்சு வழக்கிலும் எழுத்திலும் நிறைந்து காணப்படுகிறது.


​​உதாரணமாக: பசியைப் போக்குபவனும் சுகத்தை தருபவனும் அல்லாஹ்தான் ஆனால் நமது பேச்சு வழக்கில் இன்ன உணவை சாப்பிட்டேன் பசி போய்விட்டது, டாக்டரிடம் சிகிச்சை எடுத்தேன் நோய் சுகமாகி விட்டது என்றுதான் கூறுகின்றோம். அல்லாஹ் என்று கூறுவதில்லை.


​​அதே போன்று நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திலும் அடிமைகள் இருந்தார்கள், ஏன் நமது முதலாலியையும் கூட பொஸ் அதாவது எஜமான் என்றுதான் சொல்கிறோம், திருமணத்தின் போது வலியாக மனமகளின் தந்தை வலியாக வருவார் வலி என்றால் பொருப்பு தாரி நமது பொருப்பு தாரி இறைவன்தான் எனவே இதுவெல்லாம் மஜாஸ் என்ற இலக்கிய மரபின்படி குறிப்பிடப்பட்டுள்ளது உண்மையில் எதார்த்தத்தில் இறைவன்தான் எஜமான், என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

♦ “என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான், நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன் மிக்கக் கருணையுடையவன்” (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.

அல்குர்ஆன் : 39:53

♦ உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஒரு முறை அவர்களின் மகனாரும், இமாம் ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் உரையாடிக்கொண்டிருந்தார்கள். பேச்சினூடே ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை பார்த்து உங்கள் தந்தை என் பாட்டனார் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் அடிமைத்தானே என்று கூற இப்னு உமர் அவர்கள் வேதனையோடு தன் தந்தையிடம் இதை கூறிவிட்டார்கள்.


​​இதனைக்கேட்டதும் தன் மகனையும் இமாம் ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களையும் கையைப்பிடித்து கூட்டிக்கொண்டு கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் ரவ்லாவின் முன் நின்று யா ரஸுலல்லாஹ்! என்னை தங்களுடைய அடிமை என்று தங்களின் அருமை பேரர் கூறிவிட்டார்கள். இது அவரும் சாட்சியாக இங்கு இருக்கிறார். தாங்கள் அதை ஏற்றுக்கொள்ளுங்கள் யா ரஸுலல்லாஹ்! தாங்கள் என்னை அடிமையாக ஏற்றுக்கொண்டு விட்டால் நான் ஈருலகிலும் மேன்மை அடைந்து விடுவேனே யா ரஸுலல்லாஹ்! என்று கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக கொட்ட தேம்பித் தேம்பி அழுந்துக்கொண்டிருந்தார்கள்.


​சுவர்க்கத்தைக்கொண்டு நன்மாராயம் பெற்ற இந்த அருமை ஸஹாபாவின் செய்கை கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மீதும் அவர்களின் சந்ததிகள் மீதும் காட்டப்படவேண்டிய அன்புக்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும்.


​​

♣ யாநபி பைத்தின்போது ஏன் எழுந்து நிற்க வேண்டும்?

பெருமானாரின் மறைவுக்குப் பின்னால் அவர்களுக்கு மரியாதை கொடுப்பது பற்றி இமாம்களின் கருத்து: அல்லாமா கஸ்தலானி மற்றும் முஅத்தா இமாம், மாலிக்கின் விரிவுரையாளரான அல்லாமா துர்ஹானி ரஹ்மத்துல்லாஹி அலைஹிம் ஆகியோர் சொல்கின்றார்கள், அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஜீவிய காலமும், அவர்கள் இவ்வுலகை விட்டு மறைந்ததற்குப் பின் உள்ள காலமும் இவ்விரு வாழ்க்கைக்குமிடையே எத்தகைய வித்தியாசமும் இல்லை. அவர்கள் தங்கள் உம்மத்தினரைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இன்னும் அவர்கள் தமது உம்மத்துக்களின் நிலைகள், நடவடிக்கைகள், செயல்பாடுகள், மேலும் அவர்களின் எண்ணங்களைக் கூட அறிந்து கொள்கின்றனர்.

♦ ஷெய்கு அப்துல் ஹக் முஹத்திஸ் தெஹ்லவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றார்கள், இது விசயத்தில் உலமாக்களில் யாருக்குமே கருத்து வேறுபாடு கிடையாது. அதாவது அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மறைவுக்குப் பின்னரும் ஜீவியத்துடன் இருப்பதோடன்றி தமது உம்மத்துக்களின் அமல்களையும் அவர்களின் முன்னாலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் இன்னும் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை முன்னோக்குவோருக்கு தங்களின் அருள் புரிந்து அவர்களை வழிநடாத்தவும் செய்கின்றார்கள்.

நூல்: ஹாஷியா, அக்பாருல் அக்பார் பக்கம் 155

♦அல்லாஹ் தனது திருமறையில் நபிகளாரின் உயர்வைப் பற்றியும், அவர்களின் கீர்த்தியைப் பற்றியும் கூறும்போது 'வலல் ஆகிரது கைருல்லக மினல் ஊலா'-நபியே! நாயகமே! உங்களுக்கு சென்ற நிமிடத்தைக் காட்டிலும் இனி வரக்கூடிய நிமிடமே உங்களுக்கு உயர்வானது' என்று. அல்குர்ஆன் 93:04

♦ ஆனால் கண்ணியம் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், முஃமின்களுக்குமே உரியது, எனினும், இந்நயவஞ்சகர்கள் (அதை) அறிந்து கொள்ளமாட்டார்கள். அல்குர்ஆன் : 63:8

♦ ஆகவே நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எம்மைவிட்டும் மறைந்தாலும் எங்களிலேதான் இருக்கிறார்கள்.

'நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் உங்களிலேயே இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள்'. அல்குர்ஆன் 49:17

♦ யாநபி பைத்தின்போதும் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் மீது ஸலவாத் சொல்லும் போது எழுந்து நிற்க்க வேண்டும்.


​​நூல்: அகாயிதுஸ் ஸூன்னஹ் பக்கம் 169

♦ சிறப்புடையோரை கண்ணியப்படுத்தும் நோக்குடன் எழுந்து நிற்பது சுன்னத்.

நூல் : பத்ஹுல் பாரி பாகம் 13 பக்கம் 288,293 ,தன்வீருல் குலூப் பக்கம் 200

♦ பெரியவர்களையும் கண்ணியப்படுத்தும் பொருட்டு எழுந்து நிற்கலாம். இது பற்றி ஸஹீஹான நபிமொழிகள் உள்ளன.


​​ஆதாரம்: பதாவா நவவி பக்கம் 48,49

♦ ஞானம் உள்ளோர், நற்குணமுடையோர், நீதமாக நடக்கும் அதிகாரி, பெற்றோர் ஆகியோருக்கு மரியாதைக்காக எழுந்து நிற்பது சுன்னத்


​​ஆதாரம்: பத்ஹுல் முயீனு; பாகம் 4, பக்கம் 192

♦ எழுந்து நின்று மரியாதை செய்வது பற்றி மேலும் பார்க்க (நூல் திர்மிதி -3872, புகாரி 3043)

எனவே, நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மறைவுக்குப் பின்னரும் நம் மத்தியில் ஹயாத்தோடுதான் இருக்கின்றார்கள் என்பதை குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் இமாம்களின் கருத்து நிரூபிக்கின்றது. மேலும் நாம் அவர்களுக்கு செய்யக் கூடிய கண்ணியத்தையும் ஏற்றுக் கொள்கின்றார்களே என்பது நிரூபணம். எனவே ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நம் மத்தியில் ஹாழிர், நாளிராகவே இருக்கின்றார்கள் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை ஆகவே மரியாதைக்காக எழுந்து நிற்பது கூடாது என்று எந்தவொரு ஹதீதும் வரவில்லை.


​​

♣ உணவளிக்கும் அதிகாரமும் எல்லாத் துன்பங்களையும் நீக்கிட அவரிடம் நாம் அடைக்கலம் தேடுகிறோம். இதுபோன்ற கவி வரியில் வரம்பு மீரப்பட்டுள்ளதா?

எனதடியார்களே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள். மேலும் அல்லாஹ்வளவில் ஓர் வஸீலாவை (உதவியாளரைத்) தேடிக் கொள்ளுங்கள். (ஸுரா மாயிதா 5:35)

♦ நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் காலத்தில் ஒரு முறை மக்களைப் பஞ்சம் வாட்டியது. ஜும்ஆ நாளில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒரு கிராமவாசி எழுந்து, 'இறைத்தூதர் அவர்களே! செல்வங்கள் அழிந்துவிட்டன. குழந்தை குட்டிகள் பசியால் வாடுகின்றனர். எனவே எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார்.


​​நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தங்களின் இரண்டு கைகளையும் உயர்த்தி தம் இரண்டு கைகளையும் உயர்த்தினார்கள். அந்த நேரத்தில் வானத்தில் எந்த மழை மேகத்இயும் நாங்கள் பார்க்கவில்லை. என் உயிர் எவனுடைய கைவசனம் உள்ளதோ அவன் மேல் ஆணையாக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தம் கைகளைக் கீழே இறக்கும் முன்பாக மலைகளைப் போல் மேகங்கள் திரண்டு வந்தன.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மிம்பரிலிருந்து இறங்குவதற்குள்ளாக மழை கொட்டி அவர்களின் தாடியிலிருந்து வழிந்ததை நான் பாத்தேன். அன்றைய தினமும் அதற்கடுத்த நாளும் அதற்குமடுத்த நாளும் அதற்கு மறு ஜும்ஆ வரையிலும் எங்களுக்கு மழை பொழிந்தது. (மறு ஜும்ஆவில்) அதே கிராமவாசி அல்லது வேறொருவர் எழுந்து 'இறைத்தூதர் அவர்களே! கட்டிடங்கள் இழுந்து விழுகின்றன. செல்வங்கள் மூழ்குகின்றன. எனவே எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்" என்றார். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தங்களின் கைகளை உயர்த்தி 'இறைவா! எங்கள் சுற்றுப் புறங்களை நோக்கி (இதை அனுப்புவாயாக!) எங்களுக்குக் கேடு தருவதாக (இம்மழையை) ஆக்கி விடாதே!" என்று கூறினார்கள்.


​​மேகம் உள்ள பகுதியை நோக்கி நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சைகை செய்த போதெல்லாம் அம்மேகம் விலகிச் சென்றது.மதீனா நகர் பெரும் பள்ளமாக மாறியது. (இம்மழையால்) 'கனாத்' எனும் ஓடை ஒரு மாதம் ஓடியது. பல்வேறு பகுதிகளிலிருந்து வருபவர்களும் இம்மழையைப் பற்றிப் பேசாமலிருந்ததில்லை.


ஹழ்ரத் அனஸ் இப்னு மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு)

​நூல்: புகாரி

♦ பஞ்சம் ஏற்பட்டுவிட்டால் நிச்சயமாக உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களைக் கொண்டு மழை தேடுபவர்களாக இருந்தார்கள். அதாவது இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்களின் நபியை உன்னளவில் (வஸீலாவாக) உதவிச் சாதனமாக ஆக்கிப் பிரார்த்திப்பவர்களாக ஆகியிருந்தோம். நீ எங்களுக்கு மழை பொழியச் செய்திருக்கிறாய். மேலும் நிச்சயமாக நாங்கள் எங்கள் நபியின் சிறிய தகப்பனாரைக் கொண்டு (முன்னிலையாக்கி) வஸீலாவாக்கி கேட்கிறோம். மழை பொழியச் செய்வாயாக என்று கூறுவார்கள். உடனே மழை பெய்து விடும்.


​​நூல்: புகாரி 1 - 137, மிஷ்காத் – 132

♦ஒரு தடவை மதீனாவில் கடும் பஞ்சம் நிலவியது அப்பொழுது அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களிடத்தில் மக்களெல்லாம் முறையிட்டார்கள். அதற்கு அன்னையவர்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் கப்ரின் பக்கம் முன்னோக்குங்கள் அவர்களின் கப்ரி(ருக்கும் அறையி)லிருந்து துவாரத்தை வானத்திற்கும் நாயகம் அவர்களின் கப்ருக்கும் மத்தியில் உண்டாக்குங்கள். அதேபோல் செய்யப்பட்டது மழை கொட்டோ கொட்டென்று கொட்டி விட்டது தாவரங்கள் முழைக்க ஆரம்பித்தன கால்நடைகள் அனைத்தும் பெருத்துவிட்டன தேவைக்கு அதிகமாகவே பொழிந்தது அந்த ஆண்டுக்கு عام الفتن என்று பெயர் வைக்கப்பட்டது


​​நூல்: தாரமி 5950 இதுவே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் மூலம் தவஸ்ஸுல் தேடுவது ஆகும் என்பதற்கு ஆணித்தரமான ஆதாரமாகும்.


​​

♣ நாயகமே! யாரஸூலல்லாஹ்! நீங்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று உங்கள் மீதே நான் சத்தியம் செய்கிறேன்’ என்ற கவி வரிகள் வரம்பு மீரப்பட்டுள்ளதா?

நபி மீது சத்தியம் செய்கிறேன், சத்தியம் செய்ய தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று நபியே கூறி இருக்கும் பொழுது அவர் மீது சத்தியம் செய்து இணைவைப்பின் பக்கம் மக்களை அலைகிறார்கள் என்று வழிகெட்ட வஹாபிகள் விமர்சனம் செய்வார்கள். அந்த அடிப்படையில். ஒரு விடையத்துக்காக நாம் சத்தியம் செய்வதாக இருந்தால் அது நமது நிலையை உறுதிப்படுத்துவதற்காகவும் நம் கருத்துக்களின் அல்லது செயலின் உண்மை நிலையினை ஊண்றி நிலைநிறுத்துவதற்காகவும் சத்தியம் செய்கிறோம்! உதாரணமாக அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் விபச்சாரத்தினை நெருங்கமாட்டேன் மேற்படிபோன்ற சத்தியம் அல்லாஹ்வின் மீதுதான் செய்யப்பட வேண்டும். இதில் மாற்றுக்கருத்து இல்லை.

ஆனால் மௌலிதில் இப்படி தன்னிலையை உறுதிப்படுத்த சத்தியம் செய்யப்பட்டிருக்கிறதா? இல்லவே இல்லை. மாறாக நாயகமே யா றஸூலல்லாஹ்! நீங்கள் எனக்கு உதவே வேண்டும் என்று உங்கள் மீது சத்தியம் செய்கின்றேன் என்பதாக பாடப்பட்டிருக்கிறது. அதாவது எனக்கு நீங்கள் கண்டிப்பாக உதவிட வேண்டும் நாயகமே என்று பெருமனார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களிடம் உரிமையுடன் கேட்பதாக அற்புதமாக அமைந்திருக்கிறது! அதற்காகவே நாயகத்தின் மீது சத்தியம் செய்யும் வார்த்தைப் பிரயோகம் இங்கு பிரயோகிக்கப்பட்டிருக்கிறது! இதனை புரிந்துகொள்ள பெரியளவிலான அறிவு தேவையில்லை.


சாதாரணமாக எல்லோரும் புரிந்துகொள்ளலாம் நாயகத்தின் உதவி வேண்டும் என்பதற்காக இங்கு நாயகத்தின் மீது சத்தியம் செய்யப்பட்டிருக்கிறதே தவிர நான் இதை செய்வேன் செய்யமாட்டேன் என்று தன்னிலையை உறுதிப்படுத்த சத்தியம் செய்யப்படவில்லை என்பதை புரிந்துகொண்டால் இதில் எந்த ஷிர்க்கோ தவறோ வரமுடியாது.

எனவே இவ்வரிகள் பிறவற்றின் மீது சத்தியம் செய்யத் தடை என்ற வகைக்குள் கட்டுப்பட்டதல்ல அந்த ஹதீதுகளுக்கும் இந்த மௌலிது வரிகள் ஒருபோதும் முரண்படாது! றஸூல் நாயகத்தின் மஹப்பத்தையும் உதவியையும் வேண்டி எனது நாயகம் என்ற உரிமையில் கவி வடிவில் தன் ஏக்கம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்காகவே சத்தியம் என்ற சொல் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

கவிநடையில் மஹப்பத்தையும் நெருக்கத்தையும் காட்ட சொல்லப்பட்ட ஒன்றை இலக்கிய அறிவும் இலக்கண அறிவும் இல்லாது நேரடியாக விளங்கி குதர்க்கம் விளைவிப்பது வஹ்ஹாபிகளின் முட்டால்தனத்தையே காட்டுகின்றது எனவே நல்ல முறையில் தெளிவாக சிந்தனயோடு நோக்கினால் இதன் தாற்பரியம் புரிய வாய்ப்புண்டு! அப்போதும் கூட புரியவில்லை என்றால் அது அல்லாஹ்வின் நாட்டம்! நாம் ஒன்றும் செய்யமுடியாது!

(நபியே!) உம் உயிர் மீது சத்தியமாக, நிச்சயமாக அவர்கள் தம் மதிமயக்கத்தில் தட்டழிந்து கொண்டிருந்தார்கள். ( திருக்குர்ஆன் 15:72) இதில் அல்லாஹ் தெளிவாக நமக்கு விளக்கி கொடுக்கின்றான், குர் ஆனிலிருந்து பெறப்பட்ட வார்த்தைத்தான் ஸுப்ஹான் மவ்லிதில் இடம் பெற்றுள்ளது தவிர. சுயமாக யாரும் கூறவில்லை, திரு குர் ஆன் வசனம் கூட தெரியாமல் ஸுப்ஹான மவ்லித்தில் தவறு இருக்கிறது என்று கூறுவது உங்கள் தவறு. குர் ஆனுக்கும், ஹதிஸிற்கும் மாற்றமாக யாரும் கூறவில்லை.


​​

♣ உண்மையாகவே நீங்கள் அனைத்துப் படைப்பினங்களுக்கும் இரட்சகராக இருக்கிறீர்கள் இதுபோன்ற கவி வரிகள் வரம்பு மீரப்பட்டுள்ளதா?

(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை.

( திருக்குர்ஆன் 21:107) இந்த குர் ஆன் வசனம் தெரியாமல் இருந்து கொண்டு ஸுப்ஹான மவ்லித்தில் தவறு என்று கூறுவது மிகப் பெரும் உங்கள் தவறாகும்.

♣ சிரமங்களை (கவலைகள்,துன்பங்கள்) நீக்குவதன் மூலம் என் உயிருக்கு நீங்கள் சுகமளியுங்கள் என்ற கவி வரிகள் வரம்பு மீரப்பட்டுள்ளதா?

♦ (முஃமின்களே!) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார் நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தத்தைக் கொடுக்கின்றது அன்றி, உங்(கள் நன்மை)களையே அவர் பெரிதும் விரும்புகிறார் இன்னும் முஃமின்கள் மீது மிக்க கருணையும் கிருபையும் உடையவராக இருக்கின்றார். (அல்குர்ஆன் 9:128)

♦ நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம் அவருக்கு ஏற்பட்டிருந்த துன்பத்தையும் நீக்கி விட்டோம் அவருடைய குடும்பத்தையும், பின்னும் அதைப் போன்ற ஒரு தொகையினரையும் (அவருக்குக் குடும்பமாகக்) கொடுத்தோம் -இது நம்மிடத்திலிருந்துள்ள கிருபையாகவும் ஆபிதீன்களுக்கு (வணங்குபவர்களுக்கு) நினைவூட்டுதலாகவும் இருக்கிறது. (திருகுர்ஆன் 21:84)

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நமக்காக பிரார்த்தனையும் செய்கின்றார்கள், நமது கவலைகள், துன்பங்கள், கஷ்டங்கள் சிரமங்கள் அனைத்தையும் போக்குகின்றார்கள், அதற்காக அல்லாஹ்விடம் துஆ செய்கின்றார்கள், அல்லாஹ் உடைய இந்த வசனத்தை எல்லாம் வழிகெட்ட வஹ்ஹாபிகள் ஓதி உள்ளார்களா? இல்லை தெரிந்து கொண்டே உண்மையை பொய்யுடன் கலக்குகிறார்களா?

♦ மேலும் மறுமை நாளில் இறை நம்பிக்கையாளர்கள் ஒன்றுகூடி, 'நமக்கு ஏற்பட்டுள்ள கவலையிலிருந்து (துன்பங்களிலிருந்து) நம்மைக் காக்கும்படி யார் மூலமாவது நம் இறைவனிடம் நாம் மன்றாடினால் (எவ்வளவு நன்றாயிருக்கும்!)' என்று (தங்களிடையே) பேசிக் கொள்வார்கள். பிறகு, அவர்கள் ஆதம்(அலை) அவர்களிடம் வந்து, 'நீங்கள் மனிதர்களின் தந்தையாவீர்கள். அல்லாஹ், தன் கையால் உங்களைப் படைத்தான். தன்னுடைய வானவர்களை உங்களுக்குச் சிரம் பணியச் செய்தான். மேலும், உங்களுக்கு எல்லாப் பொருள்களின் பெயர்களையும் கற்றுத் தந்தான். எனவே, இந்த(ச் சோதனையான) கட்டத்திலிருந்து எங்களை விடுவிப்பதற்காக உங்களுடைய இறைவனிடத்தில் எங்களுக்காகப் பரிந்துரை செய்யுங்கள்' என்று சொல்வார்கள். அதற்கு ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள், '(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை' என்று கூறிவிட்டு, தாம் புரிந்த பாவத்தை நினைத்துப் பார்த்து வெட்கப்படுவார்கள். 'நீங்கள் (நபி) நூஹ் அலைஹி வஸல்லம் அவர்களிடம் செல்லுங்கள். ஏனென்றால், அவர் (எனக்குப் பின்) பூமியிலுள்ளவர்களுக்கு அல்லாஹ் அனுப்பி வைத்த (முக்கிய) தூதர்களில் முதலாமவராவார்' என்று சொல்வார்கள்.உடனே, இறைநம்பிக்கையாளர்கள் நூஹ் (அலைஹி வஸல்லம்) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவரும், '(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை' என்று கூறிவிட்டு, தாம் அறியாத ஒன்றைக் குறித்துத் தம் இறைவனிடத்தில் கேட்டதை நினைத்து வெட்கப்படுவார்கள். பிறகு, நீங்கள் கருணையாளனின் உற்ற நண்பரிடம் (இப்ராஹீம்(அலை) அவர்களிடம்) செல்லுங்கள்' என்று சொல்வார்கள்.

உடனே, இறைநம்பிக்கையாளர்கள் (இப்ராஹீம் - அலைஹி வஸல்லம்) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவர்களும், '(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை. அல்லாஹ் உரையாடிய, தவ்ராத்(வேதத்)தையும் அளித்த அடியாரான (நபி) மூஸா அலைஹி வஸல்லம் அவர்களிடம் நீங்கள் செல்லுங்கள்' என்று சொல்வார்கள். உடனே, அவர்கள் மூஸா(அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவர்கள், '(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை' என்று கூறிவிட்டு, (தம் வாழ்நாளில் ஒருமுறை) எந்த உயிருக்கும் ஈடாக இல்லாமல் ஒரு (மனித) உயிரைக் கொன்றதை நினைவு கூர்ந்து தம் இறைவனுக்கு முன் வெட்கப்படுவார்கள். பிறகு, 'நீங்கள் அல்லாஹ்வின் அடியாரும், அவனுடைய தூதரும், அவனுடைய வார்த்தையும், அவனுடைய ஆவியுமான (நபி) ஈசா அலைஹி வஸல்லம் அவர்களிடம் செல்லுங்கள்' என்று சொல்வார்கள். (அவ்வாறே அவர்கள் செல்ல,) அப்போது அவர்களும், '(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை. நீங்கள் முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட அடியாரான முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் செல்லுங்கள்' என்று சொல்வார்கள்.

உடனே, அவர்கள் என்னிடம் வருவார்கள். அப்போது நான், 'என்னுடைய இறைவனிடத்தில் அனுமதி கேட்பதற்காகச் செல்வேன். அப்போது (எனக்கு) அனுமதி வழங்கப்படும். என் இறைவனை நான் காணும்போது சஜ்தாவில் விழுவேன். தான் விரும்பியவரையில் (அப்படியே) என்னை அவன்விட்டு விடுவான். பிறகு, (இறைவனின் தரப்பிலிருந்து) 'உங்கள் தலையை உயர்த்துங்கள்! கேளுங்கள்! உங்களுக்குத் தரப்படும் சொல்லுங்கள்; செவியேற்கப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்' என்று சொல்லப்படும்.


​​அப்போது நான் என்னுடைய தலையை உயர்த்தி, இறைவன் எனக்குக் கற்றுத் தரும் புகழ் மொழிகளைக் கூறி அவனைப் புகழ்வேன். பிறகு நான் பரிந்துரை செய்வேன். அப்போது இறைவன், (நான் யார் வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான். பிறகு அவர்களை நான் சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன். பிறகு மீண்டும் நான் இறைவனிடம் செல்வேன். என் இறைவனைக் காணும்போது நான் முன்பு போன்றே செய்வேன். பிறகு நான் பரிந்துரைப்பேன். அப்போதும் இறைவன், (நான் யார் யாருக்குப் பரிந்துரை செய்யலாம் என்பதை வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான். பிறகு, நான் அவர்களைச் சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன்.


​​பிறகு மூன்றாம் முறையாக (இறைவனிடம்) நான் செல்வேன். பிறகு நான்காம் முறையும் செல்வேன். (இறுதியாக) நான், 'குர்ஆன் தடுத்துவிட்ட, நிரந்தர நரகம் கட்டாயமாகிவிட்டவர்(களான இறைமறுப்பாளர்கள், நயவஞ்சகர்)களைத் தவிர வேறு யாரும் நரகத்தில் மிஞ்சவில்லை' என்று சொல்வேன்.என இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் அறிவித்தார்கள்.


ஹழ்ரத் அனஸ் (ரலியல்லாஹூ அன்ஹூ)

​நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவுத், இப்னு மாஜா, நஸாயீ


​​

உங்கள் நேசத்தைத் தவிர என்னிடம் எந்தச் சமாதானமும் இல்லை. எனவே உங்கள் அதிகப்படியான வள்ளல் தன்மையில் எனக்கு வழங்குங்கள் என்னைப் பாக்கியவானாக ஆக்குங்கள் என்ற கவி வரிகள் வரம்பு மீரப்பட்டுள்ளதா?

♦(நபியே!) நீர் கூறும்: “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால்,என்னைப் பின்பற்றுங்கள் அல்லாஹ் உங்களை நேசிப்பான், உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான், மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.


​​(திருக்குர்ஆன் 3:31)

♦ 'எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்தவராவார் (அவை) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும் விட அதிக நேசத்திற்குரிய வராவது, ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது, நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போல் இறை நிராகரிப்புக்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பது' என்று இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.


ஹழ்ரத் அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு)

​நூல்: புகாரி, முஸ்லிம்

♦மனைவி மக்களையும் பெற்றோரையும், மக்கள் அனைவரையும் விட அதிகமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களை நேசிப்பது கடமை ,அவ்வாறு அல்லாஹ்வின் தூதரை இந்த அளவு நேசிக்காதவரிடம் இறைநம்பிக்கை இல்லை என்று கூறலாம்..ஒருவருக்கு தம் குடும்பத்தார்,தமது செல்வம்,ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் நேசத்திற்குரியவனாக ஆகாதவரை எந்த அடியாரும் அல்லது எந்த மனிதரும், இறை நம்பிக்கையுள்ளவராக ஆகமாட்டார்கள்


ஹழ்ரத் அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு)

​நூல்: முஸ்லிம்


​​

♣ சினிமா பாட்டின் ராகத்தில் மௌலித் படிக்கலாமா?

மௌலித் கவி வரிகள் என்பது இனிமையான சில ராகங்களுடன் பாடப்படுகின்றது. அந்த அடிப்படையில் (இசை - ராகம்) என்பது இஸ்லாமிய மார்க்கத்தில் முழுமையாக ஹராம் என்பதெல்ல அதன் தன்மைகளைப் பொருத்து சட்டம் மாறுகின்றன. என்றாலும் இறை சிந்தனையை சிதைக்கக்கூடிய சினிமா, நாடகப் பாடல்கள் மற்றும் ஏனைய இவ்வாறான பாடல்களை இஸ்லாம் மார்க்கம் வன்மையாக கண்டிக்கிறது.


​​எனவே இஸ்லாத்தில் நாகரீகமான குர்ஆன், ஹதீஸ் அங்கீகாரம் வழங்கிய மெட்டில் மௌலித் பாடலாம், அந்த அடிப்படையில்தான் கவிதைகள் ஒரு ராகத்திலும் , குர்ஆனை அழகிய குரலில் கிராஅத் ஓதும் ராகமும் நாகரீகமான இஸ்லாம் மார்க்கம் அனுமதித்த நல்ல

வகையினை சேரும்.

ஆகவே மௌலித் கவி வரிகளை சினிமா மெட்டில் பாடலாமா? என்ற கேள்விக்குறிய பதிலை இரண்டு கண்ணோட்டத்தில் அவதானிக்க வேண்டும். முதலாவதாக சினிமா மெட்டில் நாகரீகமான ராகங்களுடம் உள்ளன, அதேபோன்று அநாகரீகமான மோசமான ராகங்களும் உள்ளன. ஆகவே அநாகரீகமான மோசமான இறை சிந்தனையை சிதைக்கக்கூடிய மெட்டில் மௌலித் கவி வரிகளை பாடுவது கூடாது.


​​ஏனெனில் அந்த மெட்டில் பாடும் போது சினிமா பாடல் தான் ஞாபகம் வரும் என்ற காரணத்தினால் கூடாது. இரண்டாவதாக சினிமா மெட்டில் மௌலித் கவி வரிகளை பாடும் போது சினிமா பாடல் அது போன்ற சிந்தனைகல் வராத மெட்டில் மௌலித் கவி வரிகளை பாடலாம். எது எப்படி இருந்தாலும் மௌலித் கவி வரிகளை சினிமா மெட்டில் பாடுவதை தவிர்ந்து கொள்வதே மிகச் சிறந்ததாகும். எந்த ஒரு விடத்திலும் நடுநிலையான இருக்க வேண்டும்.


​​

♣ நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் புகழ் (மௌலித்) ஓதுவதால் பயன், கூலி, நன்மை உண்டா?

♦ இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்'நிச்சயமாகக் கவிதையிலும் ஞானம் (ஹிக்மத்) உண்டு.


ஹழ்ரத் உபை இப்னு கஅப்(ரலியல்லாஹு அன்ஹு)

​ஷஹீஹ் புஹாரி 6145

♦ ஒரு சமயம் ஹஸ்ஸான் இப்னு ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இறைமறுப்பாளர்களே! முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களைக் குறைவுப்படுத்தி கவி பாடுகிறீர்கள். அதற்கு பதிலாக அன்னவர்களை நான் புகழ்ந்து பாடுவேன். அதற்குரிய நற்கூலி இறைவனிடம் உண்டு. (ஹதீஸ் தொடர் நீண்டு செல்வதால் சுருக்கிக்கொள்கிறேன். தேவையெனில் பார்க்கவும்)


​​அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா)

​நூல்: முஸ்லிம் எண்: 4545

♦ கவி பாடுவதால் கூலி பயன் இல்லையென்றால் ஹஸ்ஸான் இப்னு ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு மஸ்ஜிதில் மேடை அடித்து கொடுத்து பாடச் சொல்லி நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களும் ஸஹாபாக்களும் அமர்ந்து அதைக் கேட்டுக் கொண்டிருந்திருப்பார்களா?

நூல்கள்: அபூதாவூத் 5015,திர்மிதி 2846,மிஷ்காத் 4805

♦ நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் புகழ்களை (மௌலித்) ஓதுவதால் மலக்குமார்களின் பாதுகாப்பு உதவி கிடைக்கும்.


​​நூல்: முஸ்லிம் 4545

♦ நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் "மஹப்பத்" அன்பு கிடைக்கும். இதைத்தான் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: “யாருக்கு என் மீது முஹப்பத் இல்லையோ, அவருக்கு ஈமான் இல்லை.” என்பதாக.மேலும் கூறினார்கள்: “நான் ஒருவனுக்கு அவனுடைய பெற்றோர்கள், பிள்ளைகள் மற்றுமுள்ள மனிதர்கள் அனைவரையும் விட மிகப் பிரியமானவனாக ஆகின்ற வரை அவன் முஃமீனாக முடியாது".


​​நூல்கள்: புகாரி 14,15, முஸ்லிம் 44–69,70, இப்னு மாஜா 67, நஸஈ 50–43, முஸ்னத் அஹ்மத் 3-288, மிஷ்காத் 7

♦ மௌலித் கிதாபுகளில் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் ஸலவாத் நிறைந்து காணப்படுகிறது எனவே மௌலித் ஓதும் போது கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது அதிகம் ஸலவாத் கூறும் பாக்கியம் கிடைக்கின்றன. கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: என் உம்மத்துகளில் ஒருவர் தூய்மையான உள்ளத்துடன் என்மீது ஒரு ஸலவாத் ஓதினால் அவர் மீது அல்லாஹ் பத்து ஸலவாத் ஓதுகிறான், பத்து அந்தஸ்துகளை உயர்த்துகிறான், பத்து நன்மைகளை எழுதுகிறான், பத்து தீமைகளை அழிக்கிறான்.

நூல்கள்: நசாயி - 65 , பைஹகி - 156 , தப்ரானி - 195 ,196 , பஸ்ஸார்


​​

♣ சுப்ஹான மௌலித் ஓதுவதற்க்கு பதிலாக குர்ஆன் ஷரீப் ஓதினால் மிக ஏற்றமாகவும் நன்மையும் கிடைக்குமே?

எல்லா நேரங்களிலும் எல்லா வகையிலும் குர்ஆன் ஷரீப் ஓதுவது தான் ஏற்றம் என்று நினைத்துக் கொண்டு குர்ஆனையே எப்போதும் ஓதிக் கொண்டு இருந்து விட்டால் விசுவாசிகளே! நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் மீது ஸலவாத்தும், ஸலாமும் சொல்லுங்கள் (அல் அஹ்ஸாப் 56)என்றும், நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை நினைத்து மகிழுங்கள் (யூனூஸ் 58 வசனத்தின் விளக்கம்) என்றும், இறைவன் வழங்கியிருக்கின்ற அருள்களை அடுத்தவருக்கு சொல்லிக்காட்டுங்கள் (அல் லுஹா 11, அந் நஹ்லு 114) இவ்வாறு குர்ஆனில் பல இடங்களில் இறைவன் கூறியுள்ளான்.


​​அந்த அடிப்படையில் இந்த வசனங்கள் பிரகாரம் ரபீவுல்அவ்வல் மாதத்தில் ஸுப்ஹான மவ்லிது ஓதப்பட்டு கவி மூலம் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் புகழ்களை மக்கள் மத்தியில் எடுத்து சொல்கின்றோம்.

♦ நபிமார்களை நினைவு கூர்வது வணக்கமாகும், ஸாலிஹீன்களை நினைவு கூர்தல் பாவப்பரிகாரமாகும். என்று கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.


​​நூல்: அல்ஜாமிவுஸ்ஸகீர் 4331

​​

♦  உங்களில் இறந்தவர்களின் நல்ல அம்சங்களை எடுத்துக் கூறுங்கள்.

​ 

நூல்கள்: அபூதாவூத் 4900,திர்மிதீ 1019,மிஷ்காத் 1678

ஆகவே மேலே கூறப்பட்ட குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்களின் உள்ள விஷயங்களை செயல்படுத்துவது எப்போது? அந்த அடிப்படையில் எல்லா நேரங்களிலும் எல்லா வகையிலும் குர்ஆன் ஷரீப் ஓதுவது தான் ஏற்றம் என்றால்? கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் ஓதுவது , அன்றாட துஆக்கள் ஓதுவது, ஏன் தினசரி வாசிக்கும் பேப்பர், புத்தம் இவ்வாறு எந்த ஒரு செயகளும் அமல்களும் செய்ய முடியாமல் போய்விடும்.


​​இதுவெல்லாம் செய்யும் நேரங்களில் வஹ்ஹாபிகள் சதா நேரமும் குர்ஆனை ஓதிக்கொண்டே இருப்பார்களா? எனவே நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் புனித மீலாது தினத்தில் ஸலவாத்துக்களையும், புகழ்களையும் உள்ளடக்கியிருக்கும் சுப்ஹான மௌலிதை அன்றைய தினத்தில் விஷேசமாக ஓதப்படுவதுதான் ஏற்றம் என்பதை நன்றாக விளங்கி நடப்போமாக! ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்