MAIL OF ISLAM

Knowledge & Wisdomஷுஹதாக்கள் என்பவர்கள் யார்?


எழுதியவர்: மௌலவி  S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.


ஷூஹதாக்கள் எனும் (உயிர் தியாகிகள்) என்பவர்கள் யார்? அவர்களின் சிறப்புகள், அந்தஸ்துகள், மாண்புகள் என்ன?

♣ ஷஹீத் (ஷூஹதாக்கள்) எனும் உயிர் தியாகி என்பவர் யார்?

ஸஹாபாக்கள், தாபிஈன்கள், தபஅத்தாபிஈன்கள், இமாம்கள், வலிமார்கள், மகான்கள் இவ்வுலகிலே வாழ்ந்த காலத்தில் இறைவனுக்காக அவனுடைய மார்கத்துக்காக தனது நப்ஸ் எனும் ஏழு வகையான ஆத்மாவுடன் மாபெரும் யுத்தம் செய்து வாழ்வின் ஒவ்வொரு நொடிகளையும் அர்ப்பணித்தார்கள்.


​​இப்படி அல்லாஹ்வின் பாதையில், இஸ்லாம் மார்க்கத்திற்காக தனது உயிரை புனித போர்களத்தில் அர்பணித்து கொள்ளப்பட்டவர்களே ஷூஹதாக்கள் (உயிர் தியாகிகள்) என்று சொல்லப்படும்.

மேலும் திடீர் மரணத்தின் எவ்வித அறிகுறியும் இல்லாமல் திடீரென்று மரணித்து விடுபவர்கள். வெள்ளம், மழை, சுனாமி, தீ விபத்து, வாகன விபத்து, இடிபாடுகள்,  நெருசல் என்று பல வகையிலும் மனிதர்கள் மரணிக்கிறார்கள். இவ்வாறு திடீர் என்று மரணம் அடைவதும் ஷஹீத் (உயிர் தியாகி) என்றுதான் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறிய சில ஹதீஸ்கள் உள்ளன.


​​ஏனெனில் திடீர் மரணம் என்பதும் நல்ல மரணமே என்பதற்கு ஏராளமான சான்றுகளும் உள்ளன. ஆகவே மேலே சொல்லப்பட்டவை அனைத்தும் திடீர் மரணங்கள் தான். ஈமானுடன் வாழும் ஒருவருக்கு இது போல் ஏற்படும் திடீர் மரணம் நன்மையைத் தான் தரும் என்பதை கீழே உள்ள சான்றுகளிலிருந்து அறியலாம்.


​​

♣ ஷுஹதாக்களைப் பற்றி அல்குர்ஆனில் பின்வருமாறு

♦ இன்னும், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை "(அவர்கள்) இறந்துவிட்டார்கள்" என்று கூறாதீர்கள், அப்படியல்ல! அவர்கள் உயிருள்ளவர்கள், எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ள மாட்டீர்கள். (அல்குர்ஆன் 2:154)

♦ அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரணித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள் - தம் றப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள் - (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள். (அல்குர்ஆன் 3:169)

அந்த அடிப்படையில் ஷூஹதாக்கள் மரணித்த பின்பும் அவர்களால் அற்புதம் நிகழ்த்தப்படுகிறது என்பதற்கு மேற்கூறப்பட்ட குர்ஆன் வசனம் ஹிதாயத் பெற்றவர்களுக்கு சான்றாகும்.சில குதர்க்க வாதிகள் ஷுஹதாக்கள் மரணித்த பின் மண்ணோடு மண்ணாகி விடுகிறார்கள் என்று வாதிட்டு திரிகிறார்கள். அவர்களது அறியாமைக்கு நாம் பொறுப்பாக முடியாது. மேலே சொன்ன வசனம் அவர்கள் அற்புதம் இன்றும் நிகழ்த்துகிறார்கள் என்பதற்கு எப்படி ஆதாரமாக அமையும் என்று நீங்கள் கேட்கலாம். ஆம் ஆழமாக சிந்தனை செய்தால் அது ஆதாரமாகவே அமையும்.

எனவே மேற்கூறிய வசனம் மூலம் அல்லாஹ்வுடைய பாதையிலே ஷஹீத் ஆனவர்கள் மரணிக்கவில்லை அவர்கள் உயிருடன்தான் இருக்கிறார்கள் உணவும் கொடுக்கப் படுகிறார்கள். மரணித்தவர்கள் என்று எண்ணிக் கொள்வது, நம்புவது, அதை பிரச்சாரம் செய்வது அல்லாஹ்வுடைய கட்டளைக்கு மாறு செய்வதாகும்.


​​அப்படி என்றால் நீங்கள், அவ்லியாக்கள் அனைவரும் அல்லாஹ்வுடைய பாதையிலே ஷஹீத் ஆனவர்களா?  என்ற ஒரு கேள்வியை முன் வைக்கலாம். ஆம் அது கூட சாதாரமாக தெளிவான விடயமே தவிர மறைவானதோ அல்லது ஆழமாக ஆராயப்பட வேண்டிய விடயமோ அல்ல. அல்லாஹ்வால் ஹிதாயத் என்ற அருள் கொடுக்கப்பட்ட சிந்தனை உள்ளவர்களுக்கு பசுமரத்து ஆணியாக நாம் சொல்லும் விடயங்கள் அமையும்.


​​

♣ ஷுஹதாக்களைப் பற்றிய ஹதீஸ்கள் பின்வருமாறு

♦ பத்ர் யுத்தம் இஸ்லாமிய வரலாற்றிலே மிக பிரபலமானதும் பெரிய யுத்தமும்  ஆகும். இப்படியான பெரியதோர் யுத்தத்தை வெற்றிகரமாக முடித்து திரும்பும் போது நபிகள் கோமான் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள். நாம் சிறிய யுத்தத்தில் இருந்து பெரிய யுத்தம் அளவில் மீண்டிருக்கிறோம் என்று சொன்னார்கள். ஸஹாபாக்கள் அதிர்ச்சியுடன் நாயகமே எத்தனை உயிர் தியாகம். எவ்வளவு பெரிய யுத்தம் இதை முடித்து நாம் திரும்பிக் கொண்டிருக்கிறோம் ஏன் நாயகமே இப்படி சொல்கிறீர்கள் என்று கேட்க பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள் வாளேந்தி போராடுவது பெரிய யுத்தமல்ல தனது நப்ஸ் என்ற மனோ இச்சையுடன் போராடுவதே பெரிய யுத்தம் என்று சொன்னார்கள். (நூல் பைஹகி)

இதிலிருந்து மனோ இச்சையை கொள்வதே பெரிய யுத்தம், அதை செய்பவரே உயர்வான ஷஹீத் என்பது எமக்கு தெளிவாகிவிட்டது. அவ்லியாக்கள் என்பவர்கள் இறை நேசத்தை பெற்ற நன்மக்கள். அவர்கள் தமது மனோ இச்சையை அழிக்காமல் அவனை நெருங்கி இருக்க முடியாது. அப்படி மனதோடு போராடி அதை வெல்லாதவர் ஒரு இறை நேசராக இருக்க முடியாது.

♦ அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: யார் உண்மையான மனதுடன் இறை வழியில் வீரமரணம் அடைவதை வேண்டுகிறாரோ, அவர் அ(தற்குரிய அந்தஸ்)தை அடைந்து கொள்வார், அவரை வீரமரணம் தழுவாவிட்டாலும் சரியே!


ஹழ்ரத் அனஸ் பின் மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு)

​நூல்: முஸ்லிம் 3869

♦  நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:

யார் உண்மையான மனதுடன் இறைவனிடம் வீரமரணத்தை வேண்டுவாரோ, அவரை உயிர்த் தியாகிகளின் தகுதிகளுக்கு அல்லாஹ் உயர்த்துவான், அவர் தமது படுக்கையில் (இயற்கை) மரணமடைந்தாலும் சரியே!


ஹழ்ரத் சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலியல்லாஹு அன்ஹு)  

​முஸ்லிம் 3870

♦அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் வந்து, ”அல்லாஹ்வின் தூதரே! ஒருவன் எனது செல்வத்தைப் பறிக்கும் நோக்கத்தில் வந்தால் (நான் என்ன செய்ய வேண்டும்) கூறுங்கள்?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், ”அவனுக்கு உமது செல்வத்தை (விட்டு)க் கொடுக்க வேண்டியதில்லை” என்று கூறினார்கள்.


​​அந்த மனிதர், ”அவன் என்னுடன் சண்டையிட்டால்?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், ”நீரும் அவனுடன் சண்டையிட வேண்டியது தான்!” என்று கூறினார்கள். ”(அந்தச் சண்டையில்) அவன் என்னைக் கொன்றுவிட்டால்...?” என்று அந்த மனிதர் கேட்டார். அவர்கள், ”அப்போது நீர் உயிர்த்தியாகி (ஷஹீத்) ஆவீர்” என்றார்கள். ”நான் அவனைக் கொன்றுவிட்டால்...?” என்று அவர் கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், ”அவன் நரகத்திற்குச் செல்வான்” என்று பதிலளித்தார்கள்.


​​நூல்: முஸ்லிம் 225

♦ ஷஹீத்கள் என்று நீங்கள் யாரை நினைக்கிறீர்கள்? என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கேட்டனர். அதற்கு நபித் தோழர்கள் யார் போருக்குச் சென்று கொல்லப்படுகிறாரோ அவர் தான் என்று கூறினார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அப்படியானால் என் சமுதாயத்தில் உயிர் தியாகிகள் மிகவும் குறைவாகவே இருப்பார்கள். அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர் ஷஹீத் ஆவார். வயிற்றுப் போக்கால் இறந்தவர் ஷஹீத் ஆவார். பிரசவத்தின் போது மரணிக்கும் பெண்ணும் ஷஹீத் ஆவார் என்று கூறினார்கள்.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் உபாதா பின் ஸாமித் (ரலியல்லாஹு அன்ஹு)

நூல்: அஹ்மத் 17129, 21627, 21628, 21644, 21694

♦ இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:  பிளேக் (போன்ற கொள்ளை) நோயால் இறக்கிற ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உயிர்த்தியாகியின் அந்தஸ்து கிடைக்கும்.


ஹழ்ரத் ​​அனஸ் இப்னு மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு)  

​புகாரி 2830, 5733, 5734

♦  இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: உயிர்த் தியாகிகள் ஐந்து பேர்கள் ஆவர்:

1. பிளேக் நோயால் இறந்தவர்

2. வயிற்று(ப் போக்கு போன்ற) வியாதிகளால் இறந்தவர்

3. தண்ணீரில் மூழ்கி இறந்தவர்.

4. வீடு, கட்டிடம் ஆகியவை இடிந்து விழும் போது) இடிபாட்டில் சிக்கி இறந்தவர்

5. இறைவழியில் (அறப்போரில் ஈடுபட்டு) இறந்தவர்.


ஹழ்ரத் அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)

​நூல்: புகாரி 2829, 2830, 5732

♦”பருவ வயதை அடையாத மூன்று குழந்தைகளை (ஒரு பெண் பறிகொடுத்தால் அவளை நரகத்திலிருந்து காக்கும் திரையாக அக்குழந்தைகள் இருப்பார்கள்)” என்று இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.


ஹழ்ரத் அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)

​நூல்: புகாரி 102,1250,7310

♦ இஸ்லாத்தில் முதல் ஷஹீத் (உயிர் தியாகி) அம்மார் இப்னு யாசிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தாயார் சுமைய்யா (ரலியல்லாஹு அன்ஹா) ஆவார். அவரின் மர்ம உறுப்பில் ஈட்டியை குத்தி கொன்றான் அபூஜஹ்ல்.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் முஜாஹித் ரலியல்லாஹு அன்ஹு

​நூல்: தலாயின் நுபுவா-பைஹகீ, பாகம்:2,பக்கம் : 282, முஸன்னப் இப்னு அபீ ஷைபா, பாகம் :13, பக்கம் :48


​​

♣ புனிதப் போரில் வீரமரணம் அடைந்த ஷுஹதாக்களைக்  அவர்களின் ஆடையில் கஃபனிடுதல்

இஸ்லாத்திற்காக அல்லாஹ்வின் பாதையில் நடக்கும் போரில் எதிரிப் படையினரால் கொல்லப்பட்டவர்களை அவர்கள் அணிந்திருந்த ஆடையிலேயே கஃபனிடுதல் வேண்டும். முஸ்அப் பின் உமைர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு அணிந்திருந்த ஆடையே கஃபன் ஆணையாக இருந்தது. "அவர்களை (ஷஹீத்களை) அவர்களின் ஆடைகளிலேயே கஃபனிடுங்கள்"  என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.


​அறிவிப்பவர்: ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் ஸஃலபா (ரலியல்லாஹு அன்ஹு)

​நூல்: அஹ்மத் 22547


​​

♣ புனிதப் போரில் வீரமரணம் அடைந்த ஷுஹதாக்களைக் குளிப்பாட்டக் கூடாது

அல்லாஹ்வின் பாதையில் இஸ்லாம் மார்க்கத்திற்காக போரிடும் போது எதிரி படையினரால் கொல்லப்படுபவரைக் குளிப்பாட்டாமல் இரத்தச் சுவடுடன் அடக்கம் செய்ய வேண்டும். ஜாபிர் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள். உஹதுப் போரில் மரணித்தவர்களை இரத்தத்துடனேயே அடக்குங்கள்” என்று ” என்று இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: மேலும் நபிகள் நாயகம் (ஸல்லலாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் அவர்களைக் குளிப்பாட்டவில்லை.


​​நூல்: புகாரி 1346, 1343, 1348, 1353, 4080