MAIL OF ISLAM

Knowledge & Wisdom​தல்கீன் ஓதுவது ஸுன்னத்தா? 

​ 

எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.

இஸ்லாத்தின் பார்வையில் மய்யித்தை அடக்கிய பின் அவருக்காக தல்கீன் ஓத வேண்டுமா? அதனை அவரால் கேட்க முடியுமா?


♣ இது பற்றி வழிகெட்ட வஹ்ஹாபிகளின் நிலைப்பாடு 

மனத்தூன்மையும் ஆழமான மார்க்க ஞானமும் இல்லாத வழிகெட்ட வஹ்ஹாபிகள் “தல்கீன்” ஓதுதல் “பித்அத்” என்றும் இஸ்லாத்துக்கு முரணானதென்றும் கூறி பொது மக்களுக்கிடையில் குழப்பத்தையும் மனக் கசப்பையும் ஏற்படுத்தி வருகின்றார்கள்.


​​அந்த அடிப்படையில் விரல் விட்டெண்ணக்கூடிய ஒரு சிலர் அது பித்அத் என்று கூச்சிலிட்டாலும் அக்கூச்சல் பொதுமக்கள் செவியினுட் புகவில்லை. ஆயினும் இன்று அவ்வாறு கூச்சலிடுவோர் தமது வழிகேட்டை வேரூன்றச் செய்வதற்காக நாய்க்கு மலத்தைக் காட்டி அதை வசப்படுத்துவது போலும் பேய்க்கு சாம்பிராணி போட்டு அதை ஆட வைப்பது போலும் காடையர்களுக்கு ரூபாய்களைக் காட்டித் தமக்கு ஆதரவைத் தேடிவருகின்றார்கள்.


​​இவர்கள் காசால் காடயர்களை வசப்படுத்தி கைக்குள் வைத்துக்கொண்டிருப்பதால் அப்பாவி ஏழைகளும், நல்லவர்களும், இளைஞர்கள் சிலரும், வஹ்ஹாபி மத குருமார்களும் அவர்களின் வழிகேட்டுக்கு ஆமாசாமி போட வேண்டியதாயுள்ளது.

கண்டதெல்லாம் பித்அத் என்றும் அனாச்சாரமென்றும் கூச்சலிடுவோர் சத்தியத்தை நிலை நாட்ட வேண்டுமென்பதற்காகவோ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் “ஸுன்னத்” வழிமுறையை நிலை நாட்ட வேண்டுமென்பதற்காகவோ அவ்வாறு கூச்சலிவில்லை. மாறாக தாம் அவ்வாறு கூச்சலிடாவிட்டால். தமது தலைவர்களான ஷாத்தான்களிடமிருந்து தமக்கு மாதாந்தம் வந்து சேரும் வருமானம் தடைபட்டு விடுமென்பதற்காகவும் தாம் தொடர்ந்தும் சொகுசான வாழ்வை அனுபவித்து வரவேண்டுமென்பதற்காகவுமே அவ்வாறு கூச்சலிடுகின்றார்கள்.


​​இதுவே உன்மை. எனவே கண்டதை எல்லாம் பித்அத் என்றும், ஷிர்க் என்றும் கூறி கூலிக்கும் மாரடிக்கும் கூட்டத்தவர்கள் பற்றி எச்சரிக்கையாக இருந்து கொள்ளுமாறு பொது மக்களை கேட்டுக் கொள்கின்றோம். சத்தியத்தில் நிலைத்திருந்தால் ரியாலும், தீனாரும், திர்ஹமும் காலடிக்குத் தானாக வரும். அல்லாஹ் எல்லா வல்லமையும் உள்ளவனே.

எனினும் அண்மைக் காலம் தொட்டு இவ்வழக்கம் குறைந்து வருவதைக் காணமுடிகின்றது. தெளிவாகச் சொன்னால் வஹ்ஹாபிஸ வழியிற் செல்வோர்களே இதற்குக் காரணர்களாக உள்ளனர். “தல்கீன்” ஓதுவதற்கு ஆதாரம் இல்லை என்றும், ஆதாரமில்லாதது “பித்அத்” என்றும் “பித்அத்”எல்லாம் வழிகேடு என்றும் கூறி இவ்வழக்கத்தைத் தடுத்து வருகின்றார்கள். ஆயினும் வஹ்ஹாபியக் கொள்கையை எதிர்த்துக் கொண்டிருக்கும் சத்திய கொள்கை “அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்” வழி செல்லும் நல்லடியார்களான இமாம்கள், மார்க்க அறிஞர்கள் இதற்கு ஆதாரமுண்டு என்று கூறியுள்ளார்கள்.


​​மரணித்தவர்கள் உயிருள்ளவர்களின் அழைப்பைக் கேட்கின்றார்கள் என்ற உண்மையை அன்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சத்தியம் செய்து சொல்லியிருந்தும் கூட வழிகேடர்கள் இன்று அதை எதிர்க்கின்றார்களென்றால் சத்தியம் செய்யாமல் சொல்லியிருந்தால் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களையே அவர்கள் குறை கூறியிருப்பார்கள் என்பதில் என்ன சந்தேகம்!? ஆகவே உயிருள்ளவர்களின் அழைப்பை மரணித்தவர்கள் செவியேற்பார்கள் என்பதற்காக ஆதாரங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.


​​

♣ தல்கீன் என்றால் என்ன?


“தல்கீன்” என்ற இச்சொல்லுக்கு சொல்லிக் கொடுத்தல் என்ற பொருள் வரும். “மையித்” தை நல்லடக்கம் செய்தபின் ஒருவன் அதன் தலைப் பக்கம் அமர்ந்து பின்வரும் விடயங்களை அதற்குச் சொல்லிக் கொடுப்பதற்கு “தல்கீன்” ஓதுதல் என்று சொல்லப்படும். அந்த விடயங்கள் அடங்கிய அறபுமொழியிலுள்ள ஓதலும், அதன் மொழி பெயர்ப்பும் பின்னால் வரும். இவ்வளகிய வழக்கத்தை அவ்வக்காலத்தில் வாழ்ந்த இமாம்கள், மார்க்க அறிஞர்கள் செய்து வந்துள்ளார்கள். அவர்களில் எந்த ஓர் இமாம்கள் கூட எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இவ் வழக்கம் இஸ்லாம் மார்க்கத்திற்கு முரணானதென்று சொன்னதுமில்லை, எழுதியதுமில்லை, இவ் வழக்கத்தைக் கைவிட்டதுமில்லை. சுருங்கச் சொன்னால் இது ஒரு சர்ச்சைக்குரிய விடயமாகக் கருதப்படவே இல்லை.


​​

♣ உயிருள்ளவர்களின் அழைப்பை மரணித்தவர்கள் கேட்பார்களா?

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள் : ஒரு மனிதனின் உடலை கப்ரில் அடக்கம் செய்து விட்டு, அவனுடைய தோழர்கள் திரும்பும் போது அவர்களின் செருப்பின் ஓசையை கூட மய்யித் கேட்கும்.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு

​நூல்: புகாரி 1338, முஸ்லிம் 5115

♦ “பத்று“ப் போரில் சுமார் 70 “காபிர்”கள் கொல்லப்பட்டனர். அவர்களில் 24 பேர்கள் குறைஷித் தலைவர்களாக இருந்தனர். நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம்  அவர்கள், அவர்களின் உடல்களை மட்டும் ஒரு பாழுங் கிணற்றில் அசுத்தமானதும், அசுத்தப்படுத்தக் கூடியதுமான (கற்களால் உட்சுவர் எடுக்கப்பட்ட) கிணறு ஒன்றில் தூக்கிப் போடுமாறு உத்தரவிட்டார்கள்.

பின்னர் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் (24 பிரேதங்களையும்) நோக்கி (அந்தக் கிணற்றில் கிடந்தவர்களைப் பார்த்து)  இன்னான் மகன் இன்னானே! இன்னான் மகன் இன்னானே! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நீங்கள் கீழ்ப்படிந்து நடந்திருந்தால் (இப்போது அது) உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் தானே! ஏனெனில், எங்களுடைய இரட்சகன் எங்களுக்கு வாக்களித்த (நன்மை)தனை உண்மையானதே என்று நாங்கள் கண்டு கொண்டோம்.


​​உங்களுக்கு உங்களுடைய இரட்சகன் வாக்களித்த (தண்டனை)தனை உண்மையானது தான் என்று நீங்கள் கண்டு கொண்டீர்களா?” என்று கூறினார்கள். உடனே (அருகிலிருந்த) உமர் (ரலியல்லாஹு அன்ஹு), ”இறைத்தூதர் அவர்களே! உயிரற்ற சடலங்களிடமா பேசுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், ”என்னுடைய உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! அவர்களை விட நீங்கள் அதிகம் செவியேற்பவர்களல்லர், ஆயினும் அவர்கள் பதிலளிக்க மாட்டார்கள்’ எனக் கூறினார்கள்.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு

​நூல்: புகாரி 1370, 3976

மேற்கண்ட நபி மொழி வேறு பல ஹதீதுக் கிரந்தங்களிலும் வந்துள்ளது. அவற்றில் சில அறிவிப்புகளில் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், அவர்கள் மரணித்து மூன்று நாட்களின் பின் அவர்களை அழைக்கின்றீர்களே! அவர்களுக்கு கேட்குமா? (மரணித்தவர்களுக்குக் கேட்கச் செய்ய முடியாதென்று அல்லாஹ் சொல்லியிருக்கின்றானே? என்று சொன்னார்கள்.) அதற்கு நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் முஹம்மதுடைய உயிர் எவன் கையில் இருக்கின்றதோ அவன் மீது ஆணையாக நான் சொல்வதை நீங்கள் கேட்பதை விட அவர்களே நன்றாகக் கேட்கின்றனர். ஆயினும் அவர்கள் பதில் கூற மாட்டார்கள்.


​​நூல் – பத்ஹுல்பாரீ,பக்கம் – 346 மேற்கண்ட பலம் வாய்ந்த ஹதீஸ் மூலம் உயிரோடிருப்பவர்களின் அழைப்பை மரணித்தவர்கள் கேட்கின்றார்கள். விளங்கியும் கொள்கிறார்கள் என்ற உண்மை தெளிவாகின்றது.


​​

♣ தல்கீன் ஓதுவது பற்றிய ஆதாரங்கள்

மேலும், நீங்கள் நினைவுபடுத்துங்கள். ஏனெனில், நிச்சயமாக நினைவுபடுத்துதல முஃமின்களுக்கு (விசுவாசிகளுக்கு) நற்பயனளிக்கும்.(அல்குர்ஆன் : 51:55)

♦ எவர் ஒருவர் (ஒரு) நன்மையைச் செய்கிறாரோ அவருக்கு அதுபோல் பத்துப் பங்கு (நன்மை) உண்டு, எவர் ஒருவர் (ஒரு) தீமையைச் செய்கிறாரோ அதைப்போன்ற அளவுடைய கூலியே கொடுக்கப்படுவார் - அவர்கள் அநியாயம் செய்யப்படவும் மாட்டார்கள்.

(அல்குர்ஆன் : 6:160)

♦ ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவித்தார்கள்: யார் இஸ்லாத்தில் (அதன் அடிப்படைக்கு முரண்படாத வகையில்) ஓர் அழகிய நடைமுறையை உருவாக்கி, அவருக்குப்பின் அந்த நடைமுறை செயல்படுத்தப்படுகிறதோ அதன்படி செயல்படுபவர்களின் நன்மை போன்றது அ(ந்த நடைமுறையை உருவாக்கிய) வருக்கு உண்டு. அதற்காக அவர்களது நன்மையில் எதுவும் குறைந்துவிடாது. யார் இஸ்லாத்தில் (அதன் அடிப்படைக்கு எதிரான) ஒரு தீயநடைமுறையை உருவாக்கி விட, அவருக்குப் பிறகும் அந்த நடைமுறை செயல்படுத்தப்படுகிறதோ அவருக்குப்பின் அதன்படி செயல்படுகிறவர்களின் பாவம் போன்றது அவருக்கு உண்டு. அ(தன்படி செயல்பட்ட) வர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறையாது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:


​​நூல்கள்: முஸ்லிம் 5193, திர்மிதி, நஸாயி, இப்னு மாஜா, தாரமீ, மிஷ்காத்

♦ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் தோழர்களுள் ஒருவரான அம்ருப்னுல் ஆஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு வஸிய்யத் செய்துள்ளார்கள்: அதாவது ஒரு ஒட்டகத்தை அறுத்து அதன் மாமிசத்தை பங்குவைக்க எந்தளவு நேரம் தேவைப்படுமோ அந்தளவு எனது கப்றுக்குப் பக்கத்தில் தங்கியிருங்கள். ஏனெனில், எனது இரட்சகனின் தூதர்கள், அதாவது மலக்குகளிடம் நான் எதனை உரையாட வேண்டும் என்பதை உங்களிடம் கேட்டு அறிந்து கொள்ளவும். உங்களின் மூலம் நான் மறுகுதல் பெறவும் என்றார்கள்.


​​நூல்: முஸ்லிம், மிஷ்காத் - 149

♦ ஸஹதுப்னு முஆத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அடக்கம் செய்யப்பட்ட பின் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள், தஸ்பீஹும், தக்பீரும் ஓதினார்கள். உடனே ஸஹாபாக்கள் அவைகளை அதிகமாக ஓதினார்கள். பின்பு ஸஹாபாக்கள் காரணத்தை வினவிய போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பின்வருமாறு பதிலளித்தார்கள்."ஸாலிஹான இந்த நல்லடியாரை கப்ரு நெருக்கிக்கொண்டே இருந்தது. அல்லாஹுதஆலா கப்ருடைய நெருக்கத்தை அகற்றும் வரைக்கும் நான் தஸ்பீஹும், தக்பீரும் ஓதிக்கொண்டே இருந்தேன்" என்றார்கள்.


​​நூல்: அஹ்மத், மிஷ்காத் - 26

♦ இறந்தவரின் உடலை கப்றில் வைத்து நல்லடக்கம் செய்த பின் ஒருவர் அடக்கப்பட்டவரின் தலைமாட்டில் அமர்ந்து, இன்னார் மகனே! அல்லது இன்னார் மகளே! இறைவன் ஒருவன் என்றும் முஹம்மதுர் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் ஈமான் கொண்டு இவ்வுலகில் வாழ்ந்து மறுஉலகாகிய மறுமைக்கு சென்றுள்ளாய்.இப்போது உன்னிடம் இரு மலக்குகள் வந்து உனது நாயன் யார்? உனது நபி யார்? உனது சகோதரர்கள் யார்? உனது கிப்லா எது? உனது இமாம் யார்? என்று கேட்பர். அதற்கு நீர் கொஞ்சமும் தயங்காது தைரியமாக எனது றப்பு அல்லாஹ், எனது நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , எனது சகோதரர்கள் முஸ்லிம்கள், எனது கிப்லா கஃபா, எனது இமாம் குர்ஆன் என்று சொல்வீராக! என்று சொல்லியபின் அவரை விட்டும் விடைபெறுவது என்பதாகும். அதனை அவர் கேட்பார்.

நூல்: தப்றானி


​​

♣ தல்கீன் ஓதுவது பற்றிய இமாம்களின் கருத்துகள்

தல்கீன் ஓதுகின்றவன் மரணித்தவனின் தலைப்பக்கமாக அமர்ந்து, மூன்று முறை ஓதுவதும் ஸுன்னத் ஆகும். வயது வராத சிறுவனுக்கு தல்கீன் ஓதுவதில் மாத்திரம் இமாம்களுக்கிடையில் கருத்து வேறுபாடு இருந்து வருகின்றது. சிறுவர்களுக்கு கப்று – மண்ணறையில் கேள்வி உண்டு என்று கூறுவோர் அவர்களுக்காக தல்கீன் ஓதுவது சுன்னத் என்றும், அவர்களுக்கு கேள்வி இல்லை என்போர் அது ஸுன்னத் இல்லை என்றும் கூறுகின்றார்கள்.

♦ தல்கீன் ஓதுவது சுன்னத் என்று உம்தத்துஸ் ஸாலிக், பத்ஹுல் முஈன், மஹல்லி போன்ற நூற்களில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

♦ இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களிடம் தல்கீன் ஓதுவது பற்றி கேட்டதற்கு, 'ஆம்! அது சுன்னத்தான காரியம்' என்று சொன்னார்கள். எல்லாக் காலங்களிலும் அனைத்து நகரங்களிலும் எவ்வித மறுப்பும் இன்றி தல்கீன் ஓதிவரும் நடைமுறை ஒன்றே தல்கீன் ஓதுவதற்கு போதுமான சான்றாகும். (நூல் : றூஹ் பக்கம் 20)

♦ இமாம் இப்னு ஹஜர் மக்கி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள்  கூறுகின்றார்கள்: புத்தியுள்ள பருவமடைந்த மைய்யித்திற்கு தல்கீன் ஓதுவது சுன்னத்தாகும். (நூல் : துஹ்பா, பாகம் 3, பக்கம் 207)

♦ இமாம் ஷிஹாபுத்தீன் ரமலி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களிடம் தல்கீன் ஓதுவது ஸுன்னத்தா, அல்லது மக்ரூஹா?

தல்கீன் சொல்லிக் கொடுப்பது அடக்கம் செய்வதற்கு முன்பா? அல்லது அடக்கம் செய்யப்பட்ட பின்பா? என்று கேட்டதற்கு

சிறு குழந்தை தவிர்ந்தவர்களுக்கு மைய்யித் அடக்கம் செய்யப்பட்ட பின் தல்கீன் சொல்லிக் கொடுப்பது சுன்னத் என்று பதிலளித்தார்கள்.(நூல் : பதாவா றமலி பாகம் 2, பக்கம் 38)

♦ ஹாபிழ் இமாம் ஜலாலுத்தீன் சுயூத்தி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றார்கள்: நபிமார்களுக்கும் சிறுவர்களுக்கும் கப்று விசாரணையோ கப்றின் வேதனையோ முன்கர் நகீரின் கேள்வி கணக்கோ கிடையாது. அதனால், ஷாபிஈ மத்ஹபின் அஸ்ஹாபுகள் சிறுவர்கள் (பருவம் எய்த முன்) அடக்கம் செய்யப்பட்ட பின் அவர்களுக்கு தல்கீன் கூறப்பட மாட்டாது என்றும் தல்கீன் சொல்லிக் கொடுப்பது பருவம் அடைந்தவர்களுக்கு மட்டும் சொந்தமானதாகும், இமாம் நவவி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் "ரௌலா" என்ற நூலிலும் ஏனைய அவர்களின் நூற்களிலும் இவ்வாறுதான் கூறியுள்ளார்கள்.(நூல் : ஷரஹுஸ்ஸுதூர் பக்கம் 152)

♦ அஷ்ஷெய்ஹ் இப்னு ஹஜர் ஹைதமீ றஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தல்கீன் மூன்று முறை ஓதுவது ஸுன்னத் என்று கூறியுள்ளார்கள். தல்கீன் ஓதும் போது ஓதுபவர் அமர்ந்திருப்பதும்,கேட்போர் நின்று கொண்டிருப்பதும் மிகச் சிறந்தது. தல்கீன் ஓதுவதுபவருக்கு மரணித்தவரின் தாயின் பெயர் தெரியுமாயின் அவரின் பெயருடன் தாயின் பெயரையும், தெரியாவிட்டால் தாயின் பெயருக்கு பதிலாக ஹவ்வாஉ என்ற பெயரையும் சேர்த்து ஓதுதல் வேண்டும். (நூல் : பத்ஹுல் முயீன்)

♦ இஆனதுத்தாலிபீன் இந்நூலை ஆசிரியர் அல்லாமதுல் பாழில் அஸ்ஸாலிஹுல் காமில் அஸ்ஸெய்யித் அபூபக்கர் (றஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களால் எழுதப்பட்டதாகும். இது பாடத்திட்டத்திலுள்ள பத்ஹுல்முயீன் என்ற சட்ட நூலின் விரிவுரை நூலாகும். இந்நூலை வாசிக்காத எந்த ஒரு மார்க்க அறிஞரும் இருக்கமாட்டார். மரணித்தவன் வயது வந்தவராயின் அவருக்காக தல்கீன் ஓதுவது “ஸுன்னத்” ஆகும். இதற்கு ஆதாரமாக "நபியே! நீங்கள் நினைவூட்டுங்கள். ஏனெனில் நினைவூட்டுதல் விசுவாசிகளுக்கு பயன்தரும். என்ற திருக்குர்ஆன் வசனமாகும்.(அத்தியாயம் 51 – வசனம் 55)

♦ வழிகெட்ட முஃதஸிலா இயக்கத்தினரே மரணித்தவர்களுக்கு தல்கீன் ஓதக் கூடாது என்று முதன் முதலில் வாதித்தனர். மரணித்தவர் கப்ரில் மீண்டும் உயிர் பெற்று எழுப்பப்படுவதையும், கப்ரில் விசாரணை செய்யப்படுவதனையும் நிராகரித்தனர். ஆனால் அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தினர் மத்தியில் மரணித்தவர்களுக்கு தல்கீன் சொல்லிக் கொடுப்பது சுன்னத்தாகும். (நூல் : ரத்துல் முக்தார் பாகம் 1, பக்கம் 571)

எனவே தல்கீன் ஓதாதவரும் ஓதமறுப்பவரும் முஃதஸிலா இயக்கத்தைச் சார்ந்தவராகும். இவர்கள் மய்யித்தை உணர்வற்ற சடமாகவும் மரணத்தின் பின் கப்ரில் உயிர் கொடுத்து எழுப்பப்படுவதையும் நிராகரிக்கின்ற வழிகெட்ட அமைப்பை சார்ந்தவர்கள். எனவே தல்கீன் ஓதுதல் நல்ல காரியம் என்பதற்கு அது தொடர்பான நபி மொழிகளும், இமாம்களின் கூற்றுக்களும் அதிகம் உள்ளன. இங்கு கூறப்பட்ட ஆதாரங்கள் மனக்கண் தெளிவான ஒருவனுக்கு போதுமானவையாகும். எனவே தல்கீன் ஓதுதல், சத்திய கொள்கை (அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத்)தினர்களிடமும், திட்டமான அறிவு ஞானமுள்ளவர்களிடமும் “ஸுன்னத்” ஆன விடயமாகும். அவர்களில் ஒருவர் கூட அது கூடாத விடயமென்று சொன்னது கிடையாது.

♦ முடிவுரை நீங்கள் நினைவூட்டுங்கள். ஏனெனில் நினைவூட்டுதல் விசுவாசிகளுக்குப் பயன் தரும் என்ற திருக் குர்ஆன் வசனத்தையும் இந்த கட்டுரையில் எழுதப்பட்டுள்ள குர்ஆன் வசனங்கள், நபீ மொழிகளையும், புகஹாஉ எனும் சட்ட மேதைகள் தமது சட்ட நூல்களில் எழுதியுள்ளவற்றையும் ஆதாரங்களாகக் கொண்டு தல்கீன் ஓதுவது நல்ல காரியமேயன்றி அது எந்த வகையிலும் வழிகேடாகவோ, பாவச் செயலாகவோ மாட்டாது என்பதை புரிந்து கொள்ளுதல் வேண்டும்.


​​யா அல்லாஹ்! தல்கீன் ஓதுகின்ற அனைவர் மீதும் உன்னுடைய அருள் மழையைச் சொரிவாயாக! அறியாமையினால் அதை மறுப்போரின் மனக் கதவைத் திறந்து விடுவாயாக! அவர்களின் உள்ளங்களை அறிவொளி கொண்டு பிரகாசிக்கச் செய்வாயாக.! மனமுரண்டினாலும் பணவாசை, பதவி மோகங்களினாலும் அதை மறுப்போரின் உள்ளங்களில் ஹிதாயத் – நேர்வழி என்றவிதையை விதைத்து விடுவாயாக.! ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.