MAIL OF ISLAM

Knowledge & Wisdom



தன்னை தானே அறிவது உண்மையான அறிதல்

​​

எழுதியவர்: மௌலவி  S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.


"தன்னைத்தானே அறிவது உண்மையான அறிதல் அதன் மூலம் இறைவனை அடைந்து கொள்வான்"

♦ வாழ்க்கையின் நெடுகே நாம் அறிந்து கொள்வது எல்லாமே அறிதல் என்னும் வரையறைக்குள் வந்தாலும், அறிவறிதலில் தலையாயதும், நிலையாயதும், உண்மையானதும் தன்னை அறிதலே ஆகும்.

♦  மனிதன் தன்னை அறியும் படி வைப்பதும் தன்னை அறிய விடாமல் வைப்பதும் மனது தான். எனக்கு எல்லாம் தெரியும், என்னைவிட அறிவாளிகள் யாருமில்லை என்ற ஆணவத்தை உண்டாக்குவதும், கற்றது கை மண்ணளவு, கல்லாதது உலகளவு என்ற அறிவை உணர்த்துவதும் அந்த மனது தான்.

♦ தன்னை அறிய வேண்டிய மனிதன் முதன் முதலில் வெல்ல வேண்டிய மிகப் பெரிய எதிரி தன் மனது.

♦இரண்டாவது ஒரு காமிலான ஷெய்கிடம் நாடி பையத் என்னும் முரீத் அந்தஸ்தை அடையவேண்டும்.


​​

♦  மூன்றாவது ஏழு நப்ஸிகளுடன் போராடி யுத்தம் செய்து வெற்றிகொள்ள வேண்டும்.

♦  மனதை நன்றாக அறிந்து கொண்டவன் தான் உலகை வெல்ல முடியும், எதையும் வெல்ல முடியும் என்பது நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் அமுத வாக்காகும்.

♦  தன்னை அறிந்து கொண்டால் நிச்சயம் அல்லாஹ்வை அறிந்து கொள்வான்.

நான், நீ, அவன் என்ற அகங்காரம், மமதை முதலில் நம்மில் இருந்து நீங்க வேண்டும் எல்லாம் இறைவனுக்கு மட்டும்தான் சொந்தம் என்ற நினைவு உள்ளத்தில் பிரகாசிக்க வேண்டும்.

♦ மனதில் குற்றம் இல்லாதவனாக இருத்தலே எல்லா அறங்களிலும் அடிப்படையாகும். மனக்குற்றத்தோடு செய்பவை உலகை ஏமாற்றும் ஆரவாரத்தனமே ஆகும். ஆனால் மனது கலங்கப்படாதிருக்குமானால் அந்த உணர்வு கூடப் பரிசுத்தமாக ஆகிவிடுகிறது.

♦  ஷெய்க்மார்களின் அருளிய திருமந்திரத்திலே ‘தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை, தன்னை அறியாமல் தானே கெடுகிறான், தன்னை அறியும் அறிவை அறிந்த பின் தன்னையே, அர்ச்சிக்கத் தானிருந்தானே!’ ‘தானே தனக்குப் பகைவனும் நண்பனும், தானே தனக்கு மறுமையும், இம்மையும், தானே தனக்கு வினைப்பயன் துய்ப்பானும், தானே தனக்குத் தலைவனும் ஆமே!

♦ "என் வயிற்றை கவனித்து பார்த்தேன்

அது கேட்கும் "பசியை " உணவை கொண்டு சமாதானப்படுத்தி விட்டேன்"

"என் வாலிபத்தை கவனித்து பார்த்தேன்

அதே கேட்கும் "காமத்தை " மனைவி கொண்டு சமாதானப்படுத்திவிட்டேன்"

"என் கண்களை கவனித்து பார்த்தேன்

அது கேட்கும் "காட்சியை" பார்வையை கொண்டு சமாதானப்படுத்திவிட்டேன்"

"என் கல்பை கவனித்து பார்த்தேன்

அது கேட்கும் "அல்லாஹ்வை " ஷெய்கை கொண்டு சரண்டராக்க பார்த்தேன்.. முடியவில்லை. ஏன் !!


​பின்தான் உணர்ந்தேன் வயிற்றோடு உணவை கலந்த நீ பசியில் மீண்டாய், வாலிபத்தோடு மனைவியை கலந்த நீ காமத்தை உண்ர்ந்தாய், கண்களோடு பார்வையை கலந்த நீ காட்சியை அடைந்தாய், அதேபோல் உன் கல்போடு ஷெய்கை நீ கலந்திருந்தால் நீ அல்லாஹ்வை அடைந்திருப்பாய்.

♦ ஹக்கன் காட்சி தினம் கண்டு ஹக்கில் லயித்த யாஷெய்குனா ஹக்கும் கல்கும் எதுவென்று காட்டித் தந்த யாஷெய்குனா!

ஹுஜ்ஜத்துல் இஸ்லாம் இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்: ​

மனிதன் உயர்வதற்கும் அவன் தாழ்வதற்கும் தன்னைத் தானே அறியாமல் இருப்பதே அடிப்படை காரணமாகும். தன்னை அறிந்து அல்லாஹ்வில் அழிந்தவன் நேர்மையான உள்ளம் கொண்டு நேரிய வழியில் செல்கின்றான். நற்பண்புகளையும் உயர்ந்த குணங்களையும் தன்னுல் உண்டாக்கி கொள்கின்றான். நல்ல காரியங்களை விரும்பிச் செய்கின்றான். தன்னை அறியாதவன் தீய உள்ளம் கொண்டவன் நேர் எதிரானவன்.அவனிடம் உயர் குணங்களையும் நற்பண்புளையும் எதிர்பார்க்க முடியாது. நேரிய வழியும் அதன் உயர்வும் அவனுக்கு தெரியாது.

அறிஞர்கள் நற்குணம் பெற்றிருந்தார்கள். திருத்தூதர்கள் அனைவரும் உயர்ந்த பண்புடையவர்களே. அவர்களின் உள்ளங்கள் நீரேடையை விடத் தெளிவானவை. அவற்றில் அழுக்குக்கு இடமில்லை. கறைபடிய மார்க்கமில்லை.

இத்தகைய குணங்களுக்கெள்ளலாம் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நிலைக்களனாக விளங்கினார்கள். அவர்கள் மட்டுமல்ல, அவர்களை பின்பற்றி நடந்த மேதைகள், சட்ட நிபுணர்கள், உத்தமர்கள் அனைவருமே குணத்தின் குன்றுகளாகத் திகழ்ந்தனர். பன்பின் சிகரங்களாக விளங்கினார்கள்.

ஒரு மனிதனை நற்குணங்கள் மூலம் உயர்த்துவதற்கு முதலில் தன்னைத் தானே அறிந்து இறைவனை அடைந்து கொள்ள முயற்சி செய்து கொள்வோமாக! ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.