MAIL OF ISLAM

Knowledge & Wisdom



வஹ்ததுல் வுஜூத் ஞானத்தை பகிரங்கமாக பேசலாமா?

​எழுதியவர்: மௌலவி  S.L. அப்துர்ரஹ்மான்  (கௌஸி)  கல்முனை.


வஹ்ததுல் வுஜூத் ஞானம் என்றால் என்ன? அதற்கு குர்ஆன், ஹதீஸ்களில் ஆதாரங்கள் உள்ளதா? அதை மக்கள் மத்தியில் பகிரங்கப்படுத்தி பேசலாமா?


♣ வஹ்ததுல் வுஜூத் என்றால் என்ன?

வஹ்ததுல் வுஜூத் என்பதற்கு மெய்ப்பொருள் ஒன்று  அல்லது  உள்ளமை ஒன்று என்று பொருள் கொள்ளலாம். ஆயினும் மெஞ்ஞானிகள் என்ற ஸுபியாக்கள் “வஹ்ததுல் வுஜூத்“ என்பதற்கு ஒரு உள்ளமையின் வெளிப்பாடு என்று கூறுவார்கள்.

“வஹ்தத்” என்றால் ஒன்று.  வுஜூத் என்றால் உள்ளமை அல்லது மெய்ப்பொருள் என்று பொருள் வரும்.

ஒரு உள்ளமையின் வெளிப்பாடு என்ற இந்த ஞானத்தை போதிக்கவே இஸ்லாமிய ஆன்மீக கல்லூரிகளான தரீக்காக்கள் உருவாகின. ஆயினும் இந்த ஞானம்  பேசுகின்றவர்கள் “வஹ்ததுல் வுஜூத்“ என்பதற்கு (அல்லாஹ் எல்லாமாயும் உள்ளான்) அல்லாஹ் எல்லா வஸ்த்துக்களாயும் “தஜல்லீ” வெளியாகியுள்ளான்” (‘உள்ளது ஒன்று மற்றது அன்று’) என்றும்  இக்கொள்கையை “தவ்ஹீத்” இஸ்லாமிய வடித்தெடுக்கப்பட்ட இறைஞானம் என்று கருத்துக் கொள்வார்கள்.

மேலும் “வஹ்தத்” என்றால் ஒன்று. வுஜூத் என்றால் உள்ளமை என்று பொருள். இவ்விரு சொற்களையும் சேர்த்துப் பொருள் கொண்டால் “உள்ளமை ஒன்று” அல்லது “மெய்ப்பொருள் ஒன்று” என்று பொருள் வரும்.

இதன் சுருக்கமான விளக்கம் என்னவெனில், அல்லாஹ் மட்டுமே உள்ளான் சிருஷ்டி இல்லாதது. அது ஒரு மாயை இல்லாதது இருப்பதுபோல் தோற்றும் மாயை அது கானல் நீர் போன்றது. கண்ணுக்குத் தெரியுமேயன்றி எதார்த்தத்தில் இருக்காது. அல்லாஹ்தான் “வஹ்மு” பேதமை என்ற திரையுள்ளவர்களுக்கு அவனல்லாதவையாக சிருஷ்டி என்ற உடையில் தோற்றுகின்றான். இதுவே “வஹ்ததுல் வுஜூத்” என்ற கொள்கையின் மிகச்சுருக்கமான விளக்கம்.


​​

♣ வஹ்ததுல் வுஜூத் ஞானம் பற்றிக் கருத்துக்கள் கூறும் மார்க்க அறிஞர்களில் மூன்று பிரிவினர்கள் காணப்படுகின்றனர்.


1)  ஒரு பிரிவினர் இப்படியொரு ஞானம் இஸ்லாத்தில் இல்லை என்றும், இது திருக்குர்ஆனுக்கு முரணானதென்றும், இந்துமத ஞானமென்றும், பாரசீக, கிரேக்கதத்துவம் என்றும் கூறுவர். (அதாவது Pantheism  எனும் “இயற்கையே இறைவன் – இறைவனே இயற்கை” எனும் அல்லாஹ்வை இயற்கைக்குள் கட்டுப்படுத்திய-தஷ்பீஹைக் கொண்டு மட்டும் அவனை மட்டுப்படுத்திய கொள்கையே வஹ்ததுல் வுஜூத் என தவறாக விளங்கிக் கொண்டுவிட்டனர்)

2)  இன்னொரு பிரிவினர் இந்த ஞானம்தான் இஸ்லாமிய ஞானமென்றும் இதற்குத் திருக்குர்ஆனிலும் “ஹதீஸ்” நபிமொழிகளிலும் ஆதாரம் உண்டு என்றும் இந்த ஞானம்தான் நபீமார்கள், வலீமார்கள் பேசிவந்த ஞானம் என்றும் இதை நம்பியவர்கள் மட்டுமே “முஃமினூன்” விசுவாசிகள் என்றும் கூறுவர். அத்தோடு இந்ஞானம் பகிரங்கமாகப் பேசப்பட வேண்டியதென்றும் கூறுவர்.

3) மற்றொரு பிரிவினர் இந்த ஞானத்தை சரிகண்டு ஏற்றுக்கொள்வதுடன் இது பகிரங்கப்படுத்தக்கூடாத ஞானமென்றும், வயது வந்த இறைஞானத்துறையில் அறிவுள்ளவர்களுக்கு மட்டுமே சொல்லிக்கொடுத்தல் அவசியமென்றும் சொல்வர்.

மேற்கண்ட மூன்றுபிரிவினரில் இரண்டாம் பிரிவினர் பற்றி இங்கு ஒன்றும் எழுதத்தேவையில்லை. ஏனெனில் நானும் அவர்களில் ஒருவர். எனினும் முதலாம் பிரிவினர் பற்றி சுருக்கமாகவும் மூன்றாம் பிரிவினர் பற்றி எனக்கு தெரிந்த சில விடயங்களை விரிவாகவும் எழுதுகிறேன்.


​​

♣ முதலாம் பிரிவினர்

முதலாவது பிரிவினர் பற்றி சுருக்கமாகச் சொல்வதாயின் அவர்கள் அல் குர்ஆனையும் ஹதீஸ்களையும், இமாம்கள், இறைஞானிகள், வலீமார்கள் கூறியுள்ள தத்துவங்களை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்றே சொல்லவேண்டும். அவர்கள் உண்மையைக் கண்டறிந்து கொள்ளும் என்ற ஒரே நோக்கில் கெளரவம், வெட்கம், வீண் பிடிவாதம், வீண் குதர்க்கம் போன்றவற்றை துறந்து இந்த ஞானத்துறையில் நல்ல அறிவும் அனுபவமும் உள்ள அறிஞர்களை, ஞானிகளை அணுகினால் அவர்களுக்கு உண்மை தெளிவாகும். எண்ணத்திற்கேற்ற நற்பயன் கிடைக்கும்.

அவர்களுக்கு உண்மையைக் கண்டறியும் நோக்கம் இருந்தால் மட்டும் போதாது. இந்த ஞானத்துறையில் விளக்க உள்ளவர்களிடம் சென்று இந்த ஞானத்துறையில் கையாளப்படுகின்ற, தாத், ஸிபாத், அஸ்மாஉ, அப்ஆலு, தஜல்லீ, மஹ்வு, ஸஹ்வு, ளாஹிர், மழ்ஹர், பனாஉ, பகாஉ, கஷ்பு, இல்ஹாம், முறாக்கபஹ், முஷாஹதஹ், ஹுலூல், இத்திஹாத், தன்ஸீஹ், தஷ்பீஹ், நுசூல், ஸுஊத் போன்ற ஞானக்கலைச் சொற்களுக்கான பொருள் விளக்கத்தை அவர்களிடம் கற்றுக்கொள்ளுதல் பர்ளு ஐன் அவசியம் ஆகும்.

தவிர, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படித்து கலாநிதி பட்டம் பெற்றதினாலோ அறபுமொழியில் நிபுணத்துவம் பெற்றதினாலோ மேற்கண்ட ஞானக்கலைச் சொற்களின் விளக்கத்தை தெரிந்து கொள்ளவும் முடியாது இத்துறையில் எழுதப்பட்ட நூல்களைப் பார்த்து விளங்கி கொள்ளவும் முடியாது.

“வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை மறுப்பவர்கள் மேற்கண்டவாறு செயல்படாமல் (அல்லாஹ் எல்லாமாயும் உள்ளான்) அல்லாஹ் எல்லா வஸ்த்துக்களாயும் “தஜல்லீ” வெளியாகியுள்ளான்” (‘உள்ளது ஒன்று மற்றது அன்று’) என்றால் நாயும் பன்றியும் அல்லாஹ்தானா? மலமும் சலமும் அவன்தானா? நவூது பில்லாஹ்! இது என்ன விந்தையாக இருக்கிறது? என வியந்து வியர்த்து விடுகிறார்கள். அவர்கள் இவ்வாறே சொல்லிக் கொண்டிருந்தால் அவர்களின் கண் ஒருபோதும் திறக்காது. இந்நிலையிலேயே அவர்கள் மறணித்துவிட்டால்…..? (மஆதல்லாஹ்)

♦ நபிகள் நாயகம் (ﷺ) அவர்கள் நபீ பட்டம் வெளியாக்கப்பட்டு வஹ்ததுல் வுஜூத் ஞானம் தருகின்ற தத்துவத்தை முதன்முதலாக ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்ற திருவசனம் மூலம் மக்கத்து முஷ்ரிகீன் - இணைவைத்தோரிடம் சொன்னபோது அவர்களும் இவர்கள்போல் வியந்து வியர்த்து...

اَجَعَلَ الْاٰلِهَةَ اِلٰهًا وَّاحِدًا ۖ اِنَّ هٰذَا لَشَىْءٌ عُجَابٌ‏

“இவர் (எல்லாத்) தெய்வங்களையும் ஒரே நாயனாக ஆக்கிவிட்டாரா? நிச்சயமாக இது ஓர் ஆச்சரியமான விஷயமே! (என்றும் கூறினர்).

​(அல் குர்ஆன் 38:5)

ஆகவே வஹ்ததுல் வுஜூத் ஞானத்தை மறுப்பவர்கள் அந்த ஞானம் தெரிந்தவர்களுடன் நேரில் தொடர்பு கொண்டு அவர்கள் மூலம் இந்த ஞானத்தின் அடிப்படை அம்சங்களை அறிந்தபின் ஞான நூற்களைப் பார்த்து தெளிவு பெற்றுக் கொள்ளுதலும் அந்த ஞானத்தின் வாடையை கூட நுகராமல் இருந்து கொண்டு அதை எதிர்ப்பதை நிறுத்திக் கொள்ளுதலும் அவசியமாகும்.


​​

♣ மூன்றாவது பிரிவினர்

“வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை ஏற்றுக்கொண்டு அதை வெளிப்படுத்துவது கூடாது என்று கூறும் மூன்றாம் பிரிவினர் பற்றி ஆராய்ந்து பார்ப்போம். இவர்கள் தமது வாதத்துக்கு முன் வைக்கும் ஆதாரங்களில் மிக பிரதானமானவை இரண்டு

1) كَلِّمِ النَّاسَ عَلَ قَدْرِ عُقُّوْلِهِم

நபிகள் நாயகம் (ﷺ) அவர்கள் கூறினார்கள்: மனிதர்களுடன் அவர்களின் புத்திக்கு ஏற்றவாறு பேசவும்.

நூல்: தைலமீ 592

“வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தைப் பகிரங்கமாகப் பேசக்கூடாது என்பதற்கு மேற்கண்ட ஹதீஸை ஆதாரமாகக் கூறுவது பொருத்தமற்றதாகும் ஏனெனில் மேற்கண்ட ஹதீஸ் வஹ்ததுல் வுஜூத் என்ற ஞானம் மட்டுமன்றி மனிதர்களுடன் எதை பேசுவதாயிருந்தாலும் அவர்களின் புத்திக்கேற்றவாறு பேசவேண்டும் என்ற கருத்தை தருகிறதேயன்றி “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தைப் பேசுவதை மட்டும் அது குறிக்கவில்லை.

மேற்கண்ட இந்த ஞானமாயினும், மார்க்கத்தோடு சம்பந்தப்பட்ட வேறெந்த விடயமாயினும் அல்லது உலக விவகாரத்தோடு சம்பந்தப்பட்ட விடயமாயினும் பேசுகின்றவன் கேட்போரின் புத்திக்கேற்றவாறு பேச வேண்டும் என்ற கருத்தை மேற்கண்ட ஹதீஸ் தருகிறதேயன்றி பொதுவாக பேசக்கூடாது என்ற கருத்தை அது தரவில்லை. மனிதர்களின் புத்திக்கேற்றவாறு பேசவும் என்ற ஹதீஸ், கேட்போருக்கு விளங்கும் வகையில் பேசவும் என்ற கருத்தை மட்டும் தருகிறதேயன்றி மறுப்பவர்கள் சொல்வதுபோல் பேசவே கூடாது என்ற கருத்தை தரவில்லை.

“வஹ்ததுல் வுஜூத்” ஞானமாயினும் அல்லது வேறெந்த விடயமாயினும் படித்தவனிடம் அதைச் சொல்லும் போது அவன் விளங்கிக் கொள்ளும் பாணியிலும் படிப்பறிவில்லாத ஓர் “அவாம்” சாமானியனிடம் அதைச்சொல்லும் போது அவன் விளங்கிக் கொள்ளும் பாணியிலும், ஒரு சிறுவனிடம் சொல்லும் போது அவன் விளங்கிக் கொள்ளும் பாணியிலும் சொல்லுதல் வேண்டும். தவிர பொதுவாகச் சொல்லவே கூடாது என்பது கருத்தல்ல. இந்த விபரத்தை தெரிந்து கொள்ளாதவர்களே வஹ்த்துல் வுஜூத் ஞானத்தை பகிரங்கமாகப் பேசுதல் கூடாது என்கின்றனர்.

ஒரு சபையில் படித்தவர்களும் படிப்பறிவில்லாத சாமனிய மக்களும் சிறுவர்களும் இருந்தால் அவர்கள் மத்தியில் இந்த ஞானத்தை பகிரங்கமாகவும் பொதுவாகவும் சொல்வது பிழையாகி விடாது. படித்தவர்கள் புரிந்து கொள்வார்கள், படிக்காதவர்களும், சிறுவர்களும் தமக்கு புரியாத விடயத்தை அறிவுள்ளவர்களிடம் கேட்டு அறிந்துகொள்வார்கள். அவ்வாறு அறிந்து கொள்ளுதல் அவர்களின் கடமையுமாகும்.

♦ فَسْـــَٔلُوْۤا اَهْلَ الذِّكْرِ اِنْ كُنْتُمْ لَا تَعْلَمُوْنَۙ‏

நீங்கள் அறியாதவர்களாயிருந்தால் அறிவுள்ளவர்களிடம் கேளுங்கள். (அல்குர்ஆன் 16: 43)

♦ ومن منع الجهال علما أظاعه

ومن صنح المستم جبين مقد ظلم

மடையர்களுக்கு அறிவைக் கொடுத்தவன் அதை வீணாக்கி விட்டான். உரியவர்களுக்கு அதைக் கொடுக்காதவன் அநீதி செய்துவிட்டான். ஒரு கவிஞர் இவ்வாறு பாடியுள்ளார்.

எனவே, வஹ்ததுல் வுஜூத் ஞானத்தை பகிரங்கமாகப் பேசக்கூடாது என்று சொல்வோர் தமது வாதத்துக்கு மேற்கண்ட ஹதீஸை ஆதாரமாகக் கூறுவது பொருத்தமற்றது என்பது தெளிவாகி விட்டது.


​​

2) اِفْشَاءُ سِرِّالرُّبُوْبِيَّةِ كُفْرٌ


இறை இரகசியத்தை பகிரங்கப்படுத்துவது குப்ர் ஆகும். இவ்வாறு ஞான மகான்களில் பலர் சொல்லியுள்ளார்கள். 

ஞான மகான்கள் இவ்வாறு சொல்லியிருப்பது உண்மைதான். ஆயினும் அவர்களின் இக்கூற்றை ஆதாரமாகக் கொண்டு வஹ்ததுல் வுஜூத் ஞானத்தைப் பகிரங்கப்படுத்துவது கூடாது என்று வாதிடுவது அறியாமையாகும். இவ்வாறு வாதிடுவோர் “வஹ்ததுல் வுஜூத்” இறை இரகசியமா? அல்லது இறை இரகசியம் என்பது வேறு விஷயமா? என்பதை அறிந்து கொள்ளுதல் வேண்டும்.

அவர்கள் இந்ஞானத்தை இறை இரகசியம் என்று கருதியதினால் தான் அவர்களுக்கு இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது இறை இரகசியம் என்று அவர்கள் தாமாகவே கற்பனை செய்து கொண்டார்களேயன்றி ஞான மகான்களில் எவரும் இது இறை ரகசியமென்று சொன்னதாக எந்த ஓர் ஆதாரமுமில்லை. இருந்தால் அவர்கள் எமக்கு அறிவிக்கட்டும்.

இறை இரகசியம் என்பது வேறு, வஹ்ததுல் வுஜூத் என்பது வேறு. இந்த ஞானம் பகிரங்கப் படுத்தக்கூடாத இறை ரகசியமாயிருந்தால் ஷரீஅத், தரீக்கத், ஹகீகத், மஃரிபத் என்று சொல்லப்படுகின்ற நாற்பெரும் கடல்களிலும் மூழ்கிய அஷ்ஷெய்ஹுல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு, அப்துல் கரீம் ஜீலி றழியல்லாஹு அன்ஹு போன்ற ஞானமேதைகள் இந்த ஞானத்தைப் பகிரங்கப்படுத்திருக்க மாட்டார்கள்.

இந்த ஞானத்துக்கென்றே தனியானதும் விரிவானதுமான நூற்களை எழுதித்தந்திருக்க மாட்டார்கள். அஷ்ஷெய்ஹுல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் திரு மக்காஹ் நகரில் இருந்து கொண்டு அல் புதுஹாத்துல் மக்கிய்யஹ் என்ற அதியுயர் ஞானக்களஞ்சியத்தை எழுதினார்கள்.

அது இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டால் மட்டுமே அதை வெளியிடுவதென முடிவுசெய்து கொண்டு கோர்த்துக்கட்டப்படாமல் தனித்தனித் தாள்களாயிருந்த கையெழுத்துப் பிரதியை கஃபாஹ்வின் முகட்டில் வைத்து விட்டு “இறைவா! மூன்று மாதங்கள் வரை இதை இங்கு விட்டு வைப்பேன். மழையினால் ஒரு தாளாவது நனைந்து விடுமாயின் அல்லது காற்றினால் ஒரு தாளாவது பறந்து விடுமாயின் இந்நூலை நீ ஏற்றுக்கொள்ளவில்லை என்று முடிவுசெய்து இதை நான் எரித்துவிடுவேன்.

மழை, காற்றினால் ஒரு பாதிப்பும் ஏற்படவில்லையாயின் இதை நீ ஏற்றுக்கொண்டாய் என்று நான் முடிவுசெய்து இதை நான் வெளியிடுவேன்” என்று பிரார்த்தனை செய்தார்கள். தொடராக மூன்று மாதங்கள் அந்நூல் அங்கேயே இருந்த்து. அந்த மூன்று மாதங்களும் தொடராக கடும் மழைபெய்தும் கடும் காற்று வீசியும் கூட அந்நூலுக்கு ஒரு பாதிப்பும் ஏற்படாத்தை கண்ட இப்னு அறபீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அதை மக்கள் மத்தியில் வெளியிட்டார்கள்.

வஹ்ததுல் வுஜூத் ஞானம் பகிரங்கமாகச் சொல்லக்கூடாத ஞானமாயும், இறை ரகசியமாகாவும் இருந்தால் இப்படியொரு அற்புதம் அந்நூலுக்கு நடந்திருக்க முடியாதல்லவா? அந்த நூல் வஹ்ததுல் வுஜூத் ஞானத்தை பகிரங்கமாகவும் மிகத்தெளிவாகவும் கூறும் நூல் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஞானம் பகிரங்கமாகவும் மலையுச்சியில் நின்றும் பல்லாயிரம் ஒலிபெருக்கிகள் மூலமும் இன்டர்னெட் மூலமும் சொல்லப்படவேண்டிய ஞானமேயன்றி இது இறை இரகசியமல்ல.


இறை இரகசியமென்று ஒன்றிருப்பது உண்மைதான். அது இல்ஹாம், கஷ்பு என்ற அறிவு வழங்கப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும். அவர்கள் அதை பேச்சின் மூலமோ எழுத்தின் மூலமோ வெளிப்படுத்த மாட்டார்கள். அது அவர்களோடு மட்டும் இருந்து விடும்.

அவர்கள் அந்த ரகசியத்தை தம்முள் அடக்கி வைத்திருக்க முடியாத நிலை ஏற்பட்டால், தமது தாகத்தைத் தீர்த்துக்கொள்வதற்காக அதை தமக்கே சொல்லிக் கொள்வார்கள்.

♦ ஹழ்ரத் அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபிகள் நாயகம் (ﷺ) அவர்களிடமிருந்து பெற்ற இறை ரகசியத்தை தம்முள் அடக்கி வைத்திருக்க முடியாத நிலை ஏற்பட்ட போது ஒரு கிணற்றடிக்குச் சென்று அதனுள் எட்டிப்பார்த்து அங்கே நீரில் தெரிந்த தன் நிழலுக்கு அதைச்சொல்லி நிம்மதி பெற்றதாக அவர்களின் வரலாறு ஒன்று கூறுகிறது. இது இரகசியம். அது அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களோடு நின்று விட்டது.

♦ ஒரு நாள் நபீ ﷺ அவர்கள் தம் தோழர்களுடன் மதீனா நகர் வழியாக நடந்துசென்று கொண்டிருந்தார்கள். வழியில் ஒரு குடிசை இருந்தது. அதன் வசலில் நின்றுகொண்டிருந்த ஒரு மாது, அல்லாஹ்வின் திருத்தூதரே! என்குடிசைக்குள் வந்து தங்களின் திருப்பாதம் பதித்து செல்லுங்கள் என்று வேண்டினாள். நபி ﷺ அவர்கள் தோழர்களுடன் குடிசையுள் நுழைந்தார்கள். அங்கு அவளின் குழந்தைகள் உறங்கிக் கொண்டிருந்தன. அடுப்பில் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது.

அத பெண்மணி, நபிகள் நாயகம் (ﷺ) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! நான் எனது குழந்தைகள் மேல் வைத்துள்ள அன்பிலும், அல்லாஹ் தனது அடியார்மேல் வைத்துள்ள அன்பிலும் எதுமேலானது? என்று கேட்டாள்.

அதற்கு நபிகள் நாயகம் (ﷺ) அவர்கள் இறைவன் தனது அடியார் மேல் வைத்துள்ள அன்புதான் மேலானது என்றார்கள். அப்போது அந்த மாது அல்லாஹ்வின் தூதரே! நான் எனது குழந்தைகளை இதோ எரிந்துகொண்டிருக்கும் நெருப்பில் போட்டு வேதனை செய்வேனா? என்று கேட்டாள்.

அதற்கு நபிகள் நாயகம் (ﷺ) அவர்கள் “இல்லை” என்றார்கள். அவ்வாறாயின் அல்லாஹ் தனது அடியாரை நெருப்பில் போட்டு வேதனை செய்வானா? என்று கேட்டாள். நபிகள் நாயகம் (ﷺ) அவர்கள் அழுதார்களேயன்றி பதில் ஒன்றும் சொல்லவில்லை.


நபிகள் நாயகம் (ﷺ) அவர்கள் விடைசொல்லாமல் அழுததிலிருந்து அந்தக் கேள்விக்கான விடை இரகசியமென்பது தெளிவாகிறது. எனவே, இறை இரகசியம் என்று ஒன்றிருப்பது உண்மை என்றும் அது இல்ஹாம், கஷ்பு போன்ற இறைஞானம் வழங்கப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரிந்த விடயம் என்றும், “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் எந்த வகையிலும் இறை ரகசியத்தை சேராது என்றும் நம்புதல் அவசியமாகும்.

ஆகவே இந்த ஞானத்தை சரிகண்டு ஏற்றுக்கொண்டு அதைப் பகிரங்கப்படுத்துவது பிழை என்போர் தமது வாதத்துக்கு ஆதாரமாகக் கூறிவரும் மேற்கண்ட இரண்டு ஆதாரங்களும் பொருத்தமற்றவை என்பது தெளிவாகிவிட்டது.


​​

♣ வஹ்ததுல் வுஜூத் ஞானம் பகிரங்கமாகப் பேசப்பட வேண்டும் என்பதற்கான ஆதாரங்கள்

هُوَ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَىٰ وَدِينِ الْحَقِّ لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُونَ

அவனே தன் தூதரை நேர் வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான் - முஷ்ரிக்குகள் (இணை வைப்பவர்கள், இம்மார்க்கத்தை) வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே (அவ்வாறு தன் தூதரை அனுப்பினான்)

​(அல் குர்ஆன் 9:33)

மேற்கண்ட திருவசனத்தில் வந்துள்ள “தீனுல் ஹக்”, “லியுழ்ஹிரஹூ” என்பன கருத்திற்கொண்டு ஆராய்ந்து பார்த்தால். சத்திய மார்க்கத்தை வெளிப்படுத்துவதுவதற்காக.

“இழ்ஹார்” என்ற சொல்லுக்கு வெளிப்படுத்துதல், பகிரங்கப்படுத்துதல் என்று பொருள் வரும். இச்சொல்லின் எதிர்ச்சொல் “இஸ்றார்” இரகசியமாக்குதல் என்று வரும்.

மேற்கண்ட வசனத்திற்கு மார்க்கத்தை “இழ்ஹார்” வெளிப்படையாக - பகிரங்கமாகச் சொல்வதற்காகவே அல்லாஹ் நபிகள் நாயகம் (ﷺ) அவர்களை அனுப்பி வைத்தான் என்று கூறப்பட்டிருப்பதால் தீன்-மார்க்கம் பகிரங்கமாக சொல்லப்பட வேண்டும் என்பது தெளிவாகிவிட்டது.


​​

♦ وَأَنزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ

மனிதர்களுக்கு இறக்கி வைக்கப்பட்டதை அவர்களுக்கு விபரிப்பதற்காக உங்களுக்கு திருக்குர்ஆனை இறக்கினோம். (ஸூறத்துன் நஹ்ல் : 44)


​இத்திருவசனத்திலுள்ள “லிதபய்யின” – நீங்கள் விபரிப்பதற்காக என்பது கவனத்திற்கொண்டு ஆராய்ந்து பார்த்தால். “தப்யீன்” என்ற சொல்லுக்கு விபரித்தல், விபரமாக கூறுதல் என்று பொருள் வரும். மேற்கண்ட திருவசனத்தின் படி திருக்குர் ஆனில் கூறப்பட்ட விடயங்கள் மக்களுக்கு ஜாடையாகவே அன்றி விபரமாக சொல்லப்பட வேண்டுமென்பது தெளிவாகி விட்டது.

♦ நபிகள் நாயகம் (ﷺ) அவர்கள் “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற திருக்கலிமாவை - திருவசனத்தை படித்தவர்கள், பாமரர்கள், ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவர் மத்தியிலும் பகிரங்கமாகச் சொன்னதேயாகும். ஒருநாள் நபிகள் நாயகம் (ﷺ) அவர்கள் அபூகுபைஸ் மலைமேல் ஏறி நின்று மக்காஹ்வில் வாழ்ந்த மக்களின் குடும்ப பெயர்களைக் கொண்டு அவர்களை அழைத்தார்கள்.

அவர்களின் அழைப்பைச் செவியேற்ற கற்றவர்கள், பாமரர்கள், ஆண்கள்,பெண்கள் அனைவரும் மலையடிக்குச் சென்றார்கள். நபிகள் நாயகம் (ﷺ) அவர்கள் அந்த அனைவரிடமும் “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற திருக்கலிமாவை பகிரங்கமாகமாக பறை சாற்றினார்கள். அங்கு சென்றவர்களில் ஹழ்ரத் அபூபக்கர் சித்தீக் றழியல்லாஹுஅன்ஹு போன்றவர்கள் நபிகள் (ﷺ) அவர்களை உண்மைப்படுத்தி “லா இலாஹ இல்லல்லாஹ்” என்று சொல்லி ஈமான் - விசுவாசம் கொண்டார்கள். அபூஜஹ்ல், அபூலஹ்ப் போன்ற இன்னும் சிலர், “உமக்கு நாசமுண்டாகட்டும்! இதற்காகவா எங்களை அழைத்தீர்!” என்று கேட்டார்கள்.

அவர்களில் வேறு சிலர், “முஹம்மத் எல்லா தெய்வங்களையும் ஒரு தெய்வமாக ஆக்கிவிட்டாரா! இது விந்தையான விஷயம்” என்று சொன்னார்கள். (அல்குர்ஆன் 38 :05) நபிகள் நாயகம் (ﷺ) அவர்கள் “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற வசனம் மூலம் அந்த மக்கள் மத்தியில் முன்வைத்த கருத்து என்ன?

வணக்கத்துக்குரிய நாயன் (தெய்வம்) அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை என்ற கருத்தா? அல்லாஹ் அல்லாத எந்த நாயனும் (தெய்வமும்) இல்லை என்ற கருத்தா? இவ்விரு கருத்துக்களிலும் எந்தக் கருத்துச் சரியானது என்று பதில் தரவேண்டும்.

ஆகவே திர்குர்ஆன் ஆதாரங்கள் மூலமும் நபிகள் நாயகம் (ﷺ) அவர்களின் “ஹதீஸ்கள்” மூலமும் நபிகள் நாயகம் (ﷺ) அவர்கள் மேற்கண்ட திருவசனத்தை (கலிமாவை) சொன்ன போது மக்காஹ்வில் வாழ்ந்துகொண்டிருந்த மக்கள் கொண்டிருந்த இறை நம்பிக்கையின் மூலமும் “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற திருவசனத்துக்கான “தர்கீப்” அல்ல்லது “இஃறாப்” மூலமும் மேற்கண்ட திருவசனத்தின் கருத்து “அல்லாஹ் அல்லாத எந்த தெய்வமும் இல்லை” அல்லது (அல்லாஹ் எல்லாமாயும் உள்ளான்)“ அல்லாஹ் எல்லா வஸ்த்துக்களாயும் “தஜல்லீ” வெளியாகியுள்ளான்” (‘உள்ளது ஒன்று மற்றது அன்று’) என்பதே இறுதியானதும், தீர்க்கமானதுமான முடிவாகும்.

இவ்வதாாதாரங்களை அடிப்படையாக்க் கொண்டே வஹ்ததுல் வுஜூத் பேசுகின்றவர்கள் (அல்லாஹ் எல்லாமாயும் உள்ளான்) அல்லாஹ் எல்லா வஸ்த்துக்களாயும் “தஜல்லீ” வெளியாகியுள்ளான்” (‘உள்ளது ஒன்று மற்றது அன்று’) என்ற வஹ்ததுல் வுஜூத் ஞானக் கருத்தைத் தருகின்றனர். “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற திருவசனத்தை நபிகள் நாயகம் (ﷺ) அவர்கள் பகிரங்கமாக மலையுச்சியில் நின்று கூறியது இந்த ஞானம் பகிரங்கமாகப் பகிரங்கமாகப் பேசப்படவேண்டிய ஞானம் என்பதற்கு வலுவான ஆதாரமாகும்.


​​எனவே, வஹ்ததுல் வுஜூத் ஞானத்தை சரியென்று ஏற்றுக்கொண்டு அதை வெளிப்படையாக்கப் பேசுவதுதான் கூடாதென்பவர்கள் மேலே நாம் எழுதிய ஆதாரங்களைச் சிந்தனைகெடுத்து செயல்படுவது அவசியமாகும்.


​​

♣ வஹ்ததுல் வுஜூத் ஞானம் உண்டு என்பதற்கு குர்ஆனிலிருந்து ஆதாரங்கள்

வஹ்ததுல் வுஜூத் ஞானம் திருக்குர் ஆனில் அதிக இடங்களில் கூறப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.


வஹ்ததுல் வுஜூத் வேறு, தவ்ஹீத் வேறு என்று நினைப்பவர்கள்தாம் திருக்குர்ஆனில் தவ்ஹீத் கூறப்பட்டிருக்கிறது என ஏற்றுக்கொண்டு வஹ்ததுல் வுஜூத் கூறப்படவில்லை என்று வாதிடுகிறார்கள். அது அவர்களின் அறியாமையேய தவிர வேறில்லை. இவ்விரண்டும் சொல்லளவில் வேறுபட்டதேயன்றி இரண்டும் தருகின்ற சாரம் – கருத்து ஒன்றுதான் என்பதை அவர்கள் தெரிந்து கொண்டார்களாயின் குழப்பத்துக்கு வழியே இருக்காது.

அதோடு தவ்ஹீத் எவ்வாறு பகிரங்கமாகச் சொல்லப்படுவது அவசியமோ அவ்வாறே வஹ்ததுல் வுஜூத் பகிரங்கமாகச் சொல்லப்பட வேண்டும் என்பதையும் ஏற்றுக்கொள்வார்கள். வஹ்த்துல் வுஜூத் ஞானத்தை சரிகண்டு ஏற்றுக் கொண்டதுடன் அதை பகிரங்கமாகப் பேசுவது கூடாது என்று சொல்வோர் தமது வாதத்துக்கு ஆதாரமாகக் கூறியுள்ள இரண்டு ஆதாரங்களையும் அவற்றுக்கான விளக்கங்களையும், வஹ்ததுல் வுஜூத் ஞானம் பகிரங்கமாகப் பேசப்படவேண்டிய ஞானம் என்பதற்கு திருக்குர் ஆனிலிருந்து ஆதாரங்களை தருகின்றேன்.

♦ இன்னும் வானங்களிலும் பூமியிலும் அவனே (ஏக நாயகனாகிய) அல்லாஹ் இருக்கிறான். (அல் குர்ஆன் 6:3)

♦ (யாவற்றுக்கும்) முந்தியவனும் அவனே, பிந்தியவனும் அவனே, பகிரங்கமானவனும் அவனே, அந்தரங்கமானவனும் அவனே, மேலும், அவன் அனைத்துப் பொருள்களையும் நன்கறிந்தவன். (அல் குர்ஆன் 57:3)

♦ குகையில் இருவரில் ஒருவராக இருந்தபோது, (நம் தூதர்) தம் தோழரிடம், “கவலைப்படாதீர்கள், நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்” என்று கூறினார். (அல் குர்ஆன் 9:40)

♦ (நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால், “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன் என்று கூறுவீராக.

​(அல் குர்ஆன் : 2:186)

♦ நீங்கள் எங்கிருந்து போதிலும் அவன் உங்களுடனே இருக்கிறான் - அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்வதை உற்று நோக்கியவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் : 57:4)

♦ (முஃமின்களே! போரில்) நீங்கள் தளர்ச்சியடைந்து, தைரியமிழந்து சமாதானத்தைக் கோராதீர்கள், (ஏனென்றால்) நீங்கள் தாம் மேலோங்குபவர்கள், அல்லாஹ் உங்களுடனேயே இருக்கின்றான் - மேலும், அவன் உங்கள் (நற்) செய்கைகளை உங்களுக்கு (ஒரு போதும்) குறைத்து விடமாட்டான். (அல்குர்ஆன் : 47:35)

♦ கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே (சொந்தம்). நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன், எல்லாம் அறிந்தவன்.  (அல்குர்ஆன் : 2:115)

♦ மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம், அன்றியும், (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம். (அல் குர்ஆன் 50:16)

♦ (பத்ரு போரில்) எதிரிகளை வெட்டியவர்கள் நீங்கள் அல்ல - அல்லாஹ் தான் அவர்களை வெட்டினான், (பகைவர்கள் மீது மண்ணை) நீர் எறிந்தபோது அதனை நீர் எறியவில்லை, அல்லாஹ்தான் எறிந்தான், முஃமின்களை அழகான முறையில் சோதிப்பதற்காகவே அல்லாஹ் இவ்வாறு செய்தான், நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவி ஏற்பவனாகவும், (எல்லாம்) அறிபவனாகவும் இருக்கின்றான்.

(அல் குர்ஆன் 8:17)

♦ அன்றியும், எவர்கள் காஃபிராக இருக்கிறார்களோ, அவர்களுடைய செயல்கள் பாலைவனத்தில் (தோற்றமளிக்கும்) கானல் நீரைப் போலாகும், தாகித்தவன் அதைத் தண்ணீரென்றே எண்ணுகிறான் - (எது வரையெனில்) அதற்கு (அருகில்) அவன் வரும் பொழுது ஒரு பொருளையும் (அங்கே) காணமாட்டானே (அது வரை), ஆனால், அங்கு அவன் அல்லாஹ் (அவனுக்கு விதித்திருக்கும் முடி)வை(யே) காண்கின்றான், (அதன் படி அல்லாஹ்) அவன் கணக்கைத் தீர்க்கிறான், மேலும், அல்லாஹ் கணக்குத் தீர்ப்பதில் துரிதமானவன். (அல் குர்ஆன் 24:39)

எனவே (அல்லாஹ் எல்லாமாயும் உள்ளான்) “அல்லாஹ் எல்லா வஸ்த்துக்களாயும் “தஜல்லீ” வெளியாகியுள்ளான்” என்ற கொள்கை “தவ்ஹீத்” ஏகத்துவம் என்றும், “வஹ்ததுல் வுஜூத்” மெய்ப் பொருள் ஒன்று என்றும் சொல்லப்படுகின்றது.

இக்கொள்கை எந்த வகையிலும் திருக்குர்ஆனுக்கோ, திரு நபியின் நிறைமொழிகளுக்கோ ஒரு மண்ணளவும் முரணானதல்ல. அதேபோல் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையை பின்பற்றுகின்ற அல் இமாம் அபுல் ஹஸன் அல் அஷ்அரீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் “அகீதா” கொள்கைக்கும் முரணானதல்ல.

இக்கொள்கையே (روح الإسلام) இஸ்லாமின் உயிர் என்று அறிஞர்களால் சொல்லப்படுகிறது. இக்கொள்கையே றஸூல்மார்கள், நபீமார்கள், வலீமார்கள், மஷாயிகுமார்கள் சொன்ன கொள்கை. இக்கொள்கையே சரியான கொள்கை என்பதற்கு திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் இறை ஞானிகளான ஆரிபீன்களின் நூல்களிலும் பரந்து விரிந்த ஆதாரங்கள் உள்ளன.

அல்லாஹ் எங்கே உள்ளான் என்று சரியான கொள்கை என்று நான் இப்பிரசுரத்தில் குறிப்பிடும் “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் (அல்லாஹ் எல்லாமாயும் உள்ளான்) அல்லாஹ் எல்லா வஸ்த்துக்களாயும் “தஜல்லீ” வெளியாகியுள்ளான்” என்ற கொள்கை “தவ்ஹீத்” இஸ்லாமிய, வடித்தெடுக்கப்பட்ட இறைஞானம்தான் என்பதை புரிந்து கொள்ள எல்லாம் வல்ல கிருபையாளன் நல்லுதவி புரிவானாக! ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

சூபிசம் என்றால் என்ன (SUFISM)


சூபிசம் என்றால் என்ன? சூபிசம் போதிப்பது என்ன? சூபிகள் என்றால் யார்? சூபித்துவத் தரீக்காக்கள் பற்றிய அறிமுகம் ஆகியவற்றை அறிந்து கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

குர்ஆன் ஹதீஸ் போதிக்கும் வஹ்ததுல் வுஜூத்

​​

அல் குர்ஆன் அல் ஹதீஸ் போதிக்கும் வஹ்ததுல் வுஜூத் பற்றி அறிந்துக்கொள்ள இந்த உரையை கேளுங்கள்.

​​​​​

வஹ்ததுல் வுஜூத் என்றால் என்ன?


வஹ்ததுல் வுஜூத் என்பதற்கு மெய்ப்பொருள் ஒன்று,  உள்ளமை ஒன்று ஆயினும் ஸுபியாக்கள் “வஹ்ததுல் வுஜூத் “என்பதற்கு ஒரு உள்ளமையின் வெளிப்பாடு என்று கூறுவார்கள். இதைப்பற்றிய தெளிவை பெற்றுக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.​​​​​

ஸஹாபாக்கள் வலிமார்கள் போதித்த வஹ்ததுல் வுஜூத்

​​

ஸஹாபாக்கள் அவ்லியாக்கள் போதித்த வஹ்ததுல் வுஜூதை அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள். தமிழில் இதுவரை வெளிவராத ஆக்கம்.

​​​​​