MAIL OF ISLAM

Knowledge & Wisdomஹழ்ரத் உமர் பாருக் ரலியல்லாஹு அன்ஹு


இவர்களுக்கு நபி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் வம்சமாகிய குரைஷி வம்சமே. கத்தாப் என்பது இவர்களது தகப்பனின் பெயர். அபூ ஹப்ஸ் என்பது காரணப் பெயர். பாருக் என்பது சிறப்புப்பெயர். இவர்கள் யானை வருடத்துக்கு 13 வருடங்களின் பின் பிறந்தார்கள்.பதவி யேற்றல்

முதலாம் கலீபா அவர்கள் நோயுற்றிருக்கும் பொழுதே மற்றவர்களுடன் ஆலோசித்து உமர் இப்னு கத்தாப் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை கலீபாவாகத் தேர்ந்தெடுத்தார்கள். ஓர் உறுதி மொழிப் பத்திரம் எழுதுவித்தார்கள். முன்பாடத்திற் கூறியதுபோல் புத்திமதிகளும் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) க்குக் கூறினார்கள். ஆனால் அவர்களுக்குப் பின்னரே இவர்கள் ஹிஜ்ரி 13-ம் ஆண்டு ஜமாதுல் ஆகிர் 23-ந் தேதி (கி. பி: 633 ஆகஸ்ட் 23ந் தேதி) பதவியேற்றார்கள்.


பதவியேற்ற பின் மிம்பரில் (பிரசங்கமேடை) ஏறி “அரபிகள், தன்னை மேய்ப்பவுனுக்கு வழிபடும் ஒட்டகம் போல்வர். அதை எங்கு கொண்டு செல்கின்றான் என்பதைக் கவனித்தல் அவனது கடமையே. அதை அவன் சரியாகச் செய்ய வேண்டும். கஃபாவின் நாயன்மீது ஆணையாக, நான் உங்களை நல்வழியில் கொண்டு செல்வேன் என உறுதி கூறுகிறேன்” என்று கூறினார்கள்.இஸ்லாமைத் தழுவியது

உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் வீரம், தீரம், வன்மை ஆகியவற்றில் பிரசித்தி பெற்றவர். முதலில் நபித்துவத்தை இவர்கள் அங்கீகரிக்கவில்லை. முஸ்லிம்களின் பெரும் விரோதியாயிருந்தார்கள். எங்கு கண்டாலும் அவர்களை இம்சித்து வந்தார்கள். ஒருநாள் பெருமானார் அவர்களையே கொன்று விடுவதென உருவியவாளுடன் வெளிச் சென்றார்கள். இடைவழியில் தனது சகோதரியிடமிருந்த குர்ஆன் எழுதியிருந்தவோர் கடிதத்தை வாசித்ததும் உண்மை பதிந்தது. கொன்று வெகுமதி பெறத் துணிந்து சென்றவர் அதை மறந்து நபி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைத் கண்டவுடன் இஸ்லாமைத் தழுவினர். இவர் இஸ்லாமைத் தழுவிய பின்னர் இஸ்லாமியருக்குப் பலம் அதிகரித்தது.திமிஷ்கின் வெற்றி

யார்மூக்கின் வெற்றிக்குப் பின் பசீர்பின் கஃபு என்பாரை அங்கு நியமித்துவிட்டு, கலீபா அவர்களின் உத்தரவுப்படி, ஸிரியாவின் இராஜதானியும் பாதுகாப்பிடமுமான திமிஷ்கை நோக்கிச் சென்று எழுபது இரவுகளாக அம்புமாரிகள் பொலிந்து கொண்டு முஸ்லிம்கள் அதை முற்றுகையிட்டுக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு தலைவரும் அவரவருக்கு நியமிக்கப்பட்ட வாயிலில் சேனைகளுடன் காத்திருந்தார். காலித் இப்னு வலீத் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கீழ்ப்பூர வாயிலில் 5,000 வீரருடன் காத்திருந்தார். இவர் இராக் காலங்களில் உறங்குவதைக் குறைத்துக்கொண்டு ஒவ்வொரு நிமிஷத்திலும் நகரத்தின் செய்திகளை உளவு விசாரித்துக் கொண்டிருந்தார். ஓரிரவு நகரவாசிகள் தங்கள் தலைவனுக்கு ஆண்மகவு கிடைத்திருப்பதைக் கொண்டாடிக் கொண்டிருப்பதை அறிந்து, காலித் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் நகரைச் சுற்றியிருக்கும் அகழியில் துருத்திகளின் உதவியால் நீந்திக் கடந்து சென்று, கயிற்றின் உதவியால் மதிலின் மீதேறிக்கொண்டு இன்னுஞ் சிலரை ஏற்றிக்கொண்டு, பின்னர் உள்ளே இறங்கிக் காவலாளிகளைக் கொன்றுவிட்டு, வாயிலை உடைத்து விட்டுத் தக்பீர் சொல்லச் சகல முஸ்லிம்களும் உள்ளே புகுந்து விட்டனர். இதைக்கண்ட உரோமர் மதில் சுவற்றின் வாயிலைத் திறந்து சென்று அபூ உபைதாவுடன் திரை செலுத்த உடன்படிக்கை செய்து கொண்டனர். காலித் (ரலியல்லாஹு அன்ஹு) உட்புகுந்த செய்தியை அறியாமலே அபூ உபைதா (ரலியல்லாஹு அன்ஹு) சமரசம் செய்து கொண்டதால் வெற்றி கொள்ளப்பட்ட பகுதியையும் சமரசம் செய்து கொண்ட பகுதியுடனையே சேர்த்துக்கொண்டு, கொள்ளைப் பொருட்களைத் திருப்பிக் கொடுத்தும் கைதிகளை விடுவித்தும் விட்டனர். இவ்யுத்தம் ஹிஜ்ரி 14ம் ஆண்டு நிகழ்ந்தது. இதன் பின்னர் அரேபியர் சேனை, ஸிரியாவின் கரையோரப் பகுதிகளிலுள்ள பேரூத், பீசான், தப்ரிய்யா, கைஸரிய்யா, கஸா, அம்வாஸ், யாபா, தர்ஸூஸ் முதலிய அனேக ஊர்களைக் கைப்பற்றினது. இவை முஆவியாவின் காலத்தில் பிடிக்கப்பட்டவை. காலக்கிரமத்தில் இங்கெல்லாம் உரோமர் குறைந்து அரபிகள் அதிகமாயினர்.வெற்றிகள்

பத்தரை வருடமாகிய இக்குறைந்த காலத்தில் இஸ்லாம் கைப்பற்றிய நாடுகள் 22,51,030 சதுரமைல் விஸ்தீரண மானவையாயிருந்தன. இஸ்லாமிய அரசாங்கமே அக்காலத்தில் மிகப் பெரிய அரசாங்கமாக இருந்தது. எத்தகைய சண்டையிலும் அராபிய முஸ்லிம்கள் 50,000 பேர்களுக்குமேல் ஒருங்கு சேர முடியவில்லை. ஆனால் விரோதிகளின் படையில் 2 லட்ச்சத்துக்குமேல் குழுமியிருந்த யுத்தங்களிலும் சொற்பகாலத்தில் பெரும் வெற்றி பெற்றது ஒரு அற்புதச் செயலாகும். இது, இவர்களின் ஈமானேனும் நம்பிக்கையின் பயனும், திருக்குர்ஆனைக் கைகொண்டு ஒழுகிய தன் பயனுமாகும். இவர்களின் நீதி, நேர்மை, வாக்குறுதி, அன்பு முதலிய நற்குணங்களின் காரணமாய் அநேகர் இஸ்லாமை அங்கீகரித்தனர். தவிரவும், உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அரபிகளை நன்றாய்ப் பயிற்சியும் செய்தார்கள். சிறு சிறு விஷயங்களையும் அவர்கள் கவனித்து வந்தார்கள்.குணாதிசயங்களும் சேவைகளும்

தன்னை அங்கீகரிக்கும் மக்கள் யாவருக்கும் இஸ்லாம் சமத்துவம் அளிக்கிறது. ஆதலால் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) வின் காலத்தில் அதிபதிகளும் கலீபா அவர்களும் சாதாரண பிரஜைக்குச் சமமாகவே பாவிக்கப்பட்டு வந்தார்கள். ஒவ்வொருவருக்கும் கலீபா அவர்கள் மீது குற்றங்காணும் உரிமையும் இருந்தது. இது ஜனநாயகத்தின் மூலகாரணமாகும். தேவையான விஷயங்களில் மற்றவர்களையும் கலந்து ஆலோசிப்பார்கள். சாதாரண மனிதனும் தன் அபிப்பிராயத்தை வெளியிட அனுமதிக்கப்பட்டான். “நான் பிழை செய்தால் எனக்கு நல்வழியைக் காண்பியுங்கள்” எனச் சதா கூறுபவராயிருந்தார்கள். நீதம் செலுத்துவதில் அதிகாரி, பிரஜை என்று பார்க்கமாட்டார்கள். அத்துடன் பிரஜைகள் மீது அளவு கடந்த அன்பும், கருணையுமுடையவராயிருந்தார்கள். பொது நிதியை அதற்குத் தகுந்தோருக்கல்லாது அனுமதியார்கள். சொந்தச் செலவுக்காக மிகக் கஷ்டத்துடன் ஜீவனம் நடத்தி வந்தார்கள். தோற்கொதுமை ரொட்டியும், ஸைத்துன் என்னையுமே (ஒலிவ்) அதிகமாக இவரின் உணவு. உதுமான் (ரலியல்லாஹு அன்ஹு), ஸுபைர் (ரலியல்லாஹு அன்ஹு) போன்றவர்கள் இவர்களது கஷ்ட நிலையைக் கண்டு மனமுருகி, அவர்களின் திருப் புதல்வியாகிய ஹப்ஸா நாயகியிடம் சென்று “நீங்கள் எங்கள் பெயர்களை வெளியிடாமல் உங்கள் பிதாவிடம் சென்று அவர்கள் பொதுநிதியிலிருந்து எடுத்துக்கொள்ளும் தொகை அவர்களுக்குப் போதியதாயில்லாத்தால் இன்னுமதிகமாய் எடுக்குமாறு கூறுங்கள்” என்று வேண்டிக்கொண்டனர். அன்னார் இதைத் தகப்பனிடம் சொன்னபோது, “இவ்வாறு கூறியவர்களை நான் அறிந்திருக்க வேண்டும்” எனக் கூற, ஹப்ஸா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் “நாமங்களை வெளியிட முடியாதிருக்கிறேன்” எனக் கூறவே “நல்லது, நீர் எனக்கும் அவர்களுக்குமிடையில் நிற்கிறீர். நபி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பசியுடன் இருக்கவில்லையா? ஒட்டுப்போடப் பெற்ற ஆடையை அணியவில்லையா? அவர்கள் இகலோக வாழ்க்கையைக் கருதாதிருக்க, என்னையும் இருக்கவிடுங்கள்” எனக் கூறி அனுப்பிவிட்டார்கள். தங்கள் குடும்பத்தவரும் இங்ஙனம் வாழ்வைதையே அவர்கள் விரும்பினார்கள். இவர்களின் சிறந்த குணத்திற்காக இவர்கள் மீது ஜனங்களுக்கு நல்ல பயபக்தியிருந்தது. சேனையினதும், மற்றும் வர்க்கத்தினர்களதும் பதவிகள் இவர்கள் காலத்திலேயே ஒழுங்குபடுத்தப்பெற்றன. ஹிஜ்ரி சகாப்தம் இவர்களாலேயே ஏற்படுத்தப்பட்டது. கூபா, பஸறா, புஸ்த்தாத், மூஸில், ஜீஸா இவைகளெல்லாம் இவர்களால் நிர்மாணிக்கப்பட்ட நகரங்களேயாகும். இஸ்லாத்தில் கடிதங்களுக்கு முதன்முதல் தேதியிட்டவர்களும், அவற்றிற்கு முத்திரையிட்டவர்களும், அமீருல் முஃமினீன் (நம்பிக்கை கொண்டவர்களின் எஜமான்) என முதலில் அழைக்கப்பட்டவர்களும், இரவில் மற்றவர்கள் அறியாவண்ணம் சுற்றித்திரிந்து மனிதர் குறைகளைக் கவனிக்கும் வழக்கத்தைத் தொடங்கியவர்களும், பட்டணங்களில் முதன் முதல் நியாயாதிபதிகளை (காஸிகள்) நியமித்தவர்களும், இஸ்லாத்தில் முதன் முதல் கடிதங்கள் எடுத்துச் செல்ல உதவியாகத் தபால் ஆபீஸ்களை ஏற்படுத்தியவர்களும், முதன் முதலில் இஸ்லாத்தில் வரவு செலவுகள் பதியப் புத்தகங்கள் உபயோகித்து ஒழுங்காய் நடாத்தத் துவங்கியவர்களும், மக்கவிலே ஹிஜ்ரி 17ம் ஆண்டு மஸ்ஜிதுல் ஹராம் எனும் வணக்கஸ்தலம் காட்டியவர்களும், ஹிஜ்ரி 18ல் முதன் முதலில் பாரசீகர்களின் நாணயங்களின் வடிவத்தில் நாணயங்கள் அடித்துச் சிலதில் அரபியில் ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்றும், சிலதில் ‘முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்’ என்றும் எழுதியவர்களும், வருடா வருடம் நைல் நதிக்குப் பலியாக ஒவ்வொரு குமரிப் பெண்ணைக் கொடுத்து வந்த வழமையைத் தடை செய்தவர்களும் இவர்களேயாவர்.குடும்ப வாழ்க்கை

கலீஃபா அவர்கள் பல முறை மண முடித்திருந்தார்கள். நிறைய மக்களைப் பெற்றெடுக்க வேண்டுமென்பதற்காகவே நான் பல திருமணங்கள் செய்கிறேன் என்றார்கள் கலீஃபா. ஆரம்பத் திருமணம் ஹஸ்ரத் உஸ்மான் இப்னு மள்ஊன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் உடன் பிறந்த ஜைனப் என்ற பெண்மணியோடு நடைப்பெற்றது. சோதனை மிகுந்த ஆரம்பக் காலத்திலேயே தம் கணவரும் அறியா வண்ணம் இஸ்லாத்தை ஏற்றுவாழ்ந்த இவ்வம்மையார் மக்காவிலேயே மரணித்து விட்டனர். இவர்களின் மணிவயிறு பெற்ற மக்களே நபி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கரம் பற்றி வாழ்ந்த அன்னை ஹஃப்ஸா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களும், ஹஸ்ரத் அப்துல்லாஹ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுமாவர். இரண்டாம் மனைவியார், அன்னை உம்மு ஸலமா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் சகோதரி கரீபா என்பவர். இவர் இஸ்லாத்தை ஏற்காததால் ஹிஜ்ரி 6-ம் ஆண்டில் விவாக பந்தத்திலிருந்து விலக்கப்பட்டார். மூன்றாம் மனைவியார் ஆத்திக்கா. இவரும் இஸ்லாத்தை ஏற்காது விவாக விடுதலை பெற்றாரியினும் இவரின் திருமகனார் ஹஸ்ரத் உபைதுல்லாஹ் (ரலியல்லாஹு அன்ஹு) முஸ்லிமாகி வாழ்ந்தனர். மதீனா வாழ்வில் ஹிஜ்ரி 7-ம் ஆண்டில் ஆஸிம் இப்னு ஃஹாபித் (ரலியல்லாஹு அன்ஹு) என்ற அன்ஸாரியின் மகளார் ஜமீலா என்பவரை மனமுடித்தார்கள். ஆயினும் ஏதோ காரணத்தினால் இவரும் மனவிடுதலை செய்யப்பட்டனர். கலீஃபா அவர்கள் தங்கள் பிந்திய காலத்தில் நபி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் உறவுத் தொடர்பை வலுப்படுத்திக்கொள்ள வேண்டுமென்ற ஆவல் கொண்டு ஹஸ்ரத் அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் திருமகளார் உம்மு குல்ஃஸும் பின்த் ஃபாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களை மணந்தார்கள். இன்னும் பல பெண்களோடு அவர்கள் மன வாழ்வு கொண்டிருந்தார்கள். இம் மனைவியர் மூலமாக கலீஃபா அவர்களுக்கு அனேக மக்களும் பிறந்தார்களாயினும் அவர்களில் வரலாற்றில் புகழேற்றுச் சிறந்தவர்கள் பெண்களில் நபி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களோடு திருவாழ்வு கொண்ட அன்னை ஹஃப்ஸா நாயகியார் மட்டுமே. ஆண்களில் ஹஸ்ரத் அப்துல்லாஹ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் மாபெரும் ஹதீஸ் அறிவிப்பாளராக விளங்குகின்றனர். ஹஸ்ரத் அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களையடுத்து, நபி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் அருள் மொழிகளை அதிகமாக அறிவித்தவர்கள் இவர்களே. ஹஸ்ரத் உபைதுல்லாஹ் (ரலியல்லாஹு அன்ஹு) மிகச் சிறந்த வீரராகத் திகழ்ந்தனர். மூன்றாவதாக ஹஸ்ரத் ஆஸிம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஆழ்ந்த ஞானியாகத் திகழ்ந்தார்கள்.         சிறப்புகள்

ஹிஜ்ரத்துக்குப் பின்னர் துவங்கிய ஹஸ்ரத் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் மதீனா வாழ்வு மூன்று கால கட்டங்களைக் கண்டது. அவர்களுக்குள் அமைந்திருந்த அறிவு, ஆற்றல்கள் அனைத்தயும் வரலாற்றில் பொலிவுடன் நின்றிலங்கிடச் செய்யும் தளமாக மதீனாவே விளங்கியது. நபி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மறைவோடு நிறைவு கண்ட பதினோராண்டு கால முதலாம் கட்டத்தில் ஹஸ்ரத் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் முழு வாழ்வும் நபி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் திரு வாழ்வோடு பின்னிப் பிணைந்ததாகவே இருந்தது. நபி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் அரசியல் நிர்ணயங்கள், அறிவியல் ஆய்வுகள், சமுதாய அமைவு முறைகள், போர்ப் பணிகள் முதலிய அனைத்துமே ஹஸ்ரத் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களைக் கொண்டு களை கட்டின. பெருமைக்குரிய அத்திருச் சந்நிதானத்தில் ஹஸ்ரத் அபூபக்கர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் தகுதியே எஞ்ஞான்றும் முன்னின்றதாயினும், நபி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஹஸ்ரத் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் எண்ணங்கள் பாலும் ஆழ்ந்த கண்ணோட்டம் கொள்பவர்களாகவே இருந்தார்கள். ஏனெனில் அவ்வெண்ணங்களுக்கேற்ப இறை வசனங்களே இறங்கிய எத்தனையோ சந்தர்ப்பங்களை நபி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கண்டார்கள். மதுபானங்கள் அருந்தத் தடை, உம்முல் முஉமினீன்களின் நடமாட்டங்களுக்குத் திரை – போன்ற வேத சட்டங்கள் ஹஸ்ரத் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் எண்ணங்களுக்கேற்பவே இறங்கின. இத்தகைய ஆழ்ந்த ஞானங்கள் அவர்களிடமிருந்து வெளிப்படக் கண்டே நபி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், “நபித்துவம் என்னுடன் முற்றுப் பெறாதிருக்குமானால் உமர் நபியாகத் தகுந்தவரே” என்று புகழ்ந்தார்கள். “விண்ணுலகில் ஜிப்ரஈலும் மீக்காஈலும் எனக்கமைச்சர்களாக இருப்பார். இம்மண்ணுலகிலோ அபூபக்கரும் உமரும் என்னுடைய அமைச்சர்கள்” என நபி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அறிவித்தார்கள். நபி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தங்களின் அவ்விரு தோழர்களையும் தாங்கள் பார்க்கும் கண்களாகவும் கேட்கும் செவிகலாகவும் வர்ணித்தார்கள். இஸ்லாம் ஹஸ்ரத் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் ஊணும் உடையுமாகவே இருந்தது. அவர்களின் எண்ணங்களெல்லாம் அதனை ஏற்றம் பெறச் செய்யும் ஆய்வுகளிலேயே மூழ்கியிருந்தன. அந்த மழலைச் சமுதாயம் தவழத் துவங்கியபோது எதிர்ப்பட்ட தடங்கல்களைத் தட்டி விலக்கி அதற்கு வலிவையும் பொலிவையும் ஓட்டத் தேவையான தங்கள் திறனையும், தெம்பையும் அந்த ஆரம்ப நாளிலிருந்தே அவர்கள் முழுமையாக அர்ப்பணித்தார்கள். ஒரு சமயம் நபி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஹஸ்ரத் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களோடு கரம் கோர்த்து நடந்து சென்று கொண்டிருந்தார்கள். உரையாடலினூடே ஹஸ்ரத் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள், “பெருமானே! என ஆன்மாவைத் தவிர்த்து மற்ற உலகப் பொருள்கள் அனைத்தையும் விட தாங்கள் எனக்கு மேலாகத் தெரிகிறீர்கள்” என்றார்கள். “அபல் ஹஃப்ஸ்!” என்றழைத்து நபி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள், “அது போதாது! உம் ஆன்மாவை விடவும் மேலாக என்னை நீர் நேசிக்காத வரையிலும் பூரண விசுவாசியாக மாட்டீர்” என்று. ஒரு கணமும் தயங்காது அந்நல்லறத் தோழர் தம் நாயகரின் கரம் பற்றி தம் நெஞ்சோடு அணைத்துக் கூறினர், “பெருமானே! என் ஆன்மாவை விடவும் அதிகமாகவே தங்களை நான் நேசிப்பேன்” என்று.மறைவு

ஹஜ்ஜின் கடைமைகளை முடித்து மதீனா திரும்பிய கலீஃபா அவர்கள் பள்ளியில் ஒருநாள் உரையாற்றிய சமயம், “ஒரு செந்நிறச் சேவல் என்னை இரண்டு அல்லது மூன்று முறை கொத்திடக் கனவில் கண்டேன். என் மரணம் அண்மிவிட்டதற்குரிய முன்னறிவிப்பு இது” என்று குறிப்பிட்டார்கள். பள்ளியில் அவர்கள் ஆற்றிய கடைசி உரையாகவும் அதுவே இருந்தது. கலீஃபா அவர்களின் கனவைப் பற்றிச் செவியுற்ற அஸ்மா பின்த் உமைஸ் (ரலியல்லாஹு அன்ஹா) அம்மையார் “அமீரல் முஉமினீன்! தங்களை அரபியல்லாத ஒருவன் கொல்வான்” என்று அறிவித்தனர். அவ்வாறே நிகழ்ந்தது. துல்ஹஜ் மாதத்தின் 26ம் பிறை மறைந்து பொழுது புலர்ந்துகொண்டிருந்தது என்றும் போல் அன்றும் காலைத் தொழுகையை கலீஃபா உமர் (ரலியல்லாஹு அன்ஹு) நடத்திகொண்டிருந்த போது அபூ லூலு என்றழைக்கப்பற்ற பைரோஸ் என்னும் நிஹாவந்தை சேர்ந்த ஒரு மஜூசி முஸ்லிம்களைப் போல் வேடம் தரித்து தொழுகை அணியில் இருந்தான். திடீரென பாய்ந்து கலீஃபா அவர்களின் உடலில் தனது குறு வாளால் குத்தினான். அடுத்தடுத்து ஆறு முறைகள் குத்தினான். அடிவயிற்றில் பட்ட ஆழமான தாக்குதல் கலீஃபா அவர்களை அயரச்செய்தது. சற்று பின் நகர்ந்து தன் பின்னே நின்ற ஹஸ்ரத் அப்துல் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் கரம் பற்றி தொழுகை நடத்துமாறு முன் நகர்த்தி விட்டு கீழே சாய்ந்தார்கள். அணியில் தொழுதுகொண்டிருந்த ஸஹாபாக்கள் திடுக்கிட்டு அந்த வெறியன் பைரோஸை பிடிக்க பாய்ந்தார்கள். அந்த வெறியன் பைரோஸ் தப்பிக்க தன் குறுவாளை சுழற்றிய படியே ஓடினான். அதன் தாக்குதல் 13 ஸஹாபாக்களின் மேல் பட்டு அதில் அறுவர் இறந்தனர். இறுதியாக ஓர் ஈராக்கிய வீரர் முரட்டுத் துணியை அவன் முகத்தின் மேலாக வீசி அவனை பிடித்து விட்டார். இனி தான் தப்பிக்க முடியாதென உணர்ந்த அவன் அந்த குறுவாளாலேயே தன்னையும் குத்தி தற்கொலை புரிந்துகொண்டான். பின்னர் மயக்க நிலையில் இருந்த கலீஃபா அவர்கள் வீடு சேர்க்க பட்டார்கள். மரணத்தின் மடியில் மூன்று நாட்கள் வரை எல்லா அறபோதங்களையும் செய்துகொண்டிருந்த கலீஃபா அவர்கள் தொழுகைக்கான அழைப்பொலி கேட்கும்போதெல்லாம் இரத்தம் வடிந்துகொண்டிருந்த நிலையிலேயே தொழுதுக்கொண்டார்கள். “தொழுகையை விட்டவனுக்கு இஸ்லாத்தில் இடம் இல்லை” என்றார்கள் கலீஃபா.


மூன்று நாட்களுக்கு பின் கலீஃபா அவர்களின் புனித ஆன்மா தன் உடற்கூட்டை விட்டு விடைபெற்று கொண்டது. அப்பொழுது அவர்களுக்கு வயது 63. ஹிஜ்ரி 23ம் ஆண்டு துல்ஹஜ் மாதத்தின் கடைசி நாளோடு உலகம் அதற்குப்பின் இனி கனவிலும் காணமுடியாத ஒரு பொற்கால வரலாறு மூடப்பட்டு விட்டது. ஹிஜ்ரி 24ம் ஆண்டு பிறந்த அன்று புத்தாண்டின் பிறப்பை எண்ணி மகிழவேண்டிய உள்ளங்கலெல்லாம் சோகத்தால் சோர்ந்து நின்றன. மதீனா திருநகரமே அழுதுக்கொண்டிருந்தது. எந்த எல்லை வரை செய்தி பரவிச்சென்றதோ அந்த இஸ்லாமிய உலகமே அழுதது.


நீதி வழுவா நெறி முறையின் இறைவனின் நல்லாட்சியை நடத்தாட்டிய நாயகர், ஜோதி எம்பெருமானின் வழிமுறையை விட்டும் வழுவாது மக்களை நிலைப்படுத்திய காவலர், பகைத்தவரை பணியவைத்து, திகைத்தவரை தெளியவைத்து, பசித்தவரை புசிக்கவைத்து அழுதவரை சிரிக்கவைத்து, அந்த சிரிப்பிலே தன் இறைவனின் பொருத்தத்தைக்கண்ட வித்தகர், பெருமான் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் திரு உடல் அன்று மதீனாவின் மண்ணில் குடிபுகுந்தது. இவர்கள் ஆயிஷா நாயகியின் அறையில் அபூபக்கர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் கப்ருக்கு பக்கத்தில் நல்லடக்கம் செய்யபட்டார்கள். இவர்களின் ஆட்சிக்காலம் 10 வருடங்களும் 6 மாதங்களும் ஆகும்.